• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தொடர்கதைகள் அத்தியாயம் - 3

ரோசி கஜன்

Administrator
Staff member
“மாப்பிள்ள யாரம்மா, எங்களுக்கெல்லாம் தெரியாம ரகசியமாப் பாத்தீங்களோ?”

கவியின் கேள்வியில் ஏகப்பட்ட வியப்பு! என்னுள்ளும் தானே!

அவள் கேட்டதற்கு, சித்தி பட்டென்று பதில் சொல்லவில்லை. தன்னைக் கட்டிப்பிடித்திருந்த மகள்களை விலக்கிவிட்டு, முதல் இருந்த கதிரையில் சென்றமர்ந்து கொண்டவர், சில கணங்கள் என்னையே ஊன்றிப் பார்த்தார்.

ஏன் இப்படிப் பார்க்கின்றார் என்ற குழப்பம் என்னுள்!

“இங்க பார் உதயா, ஒன்பது வயசில இருந்து உன்ன வளர்த்தவள் நான்; இப்ப உன்ர அப்பாவும் உயிரோட இல்ல; என்னதான் நீ உழைச்சுத் தந்தாலும் இந்த வீட்டுக்குப் பெரியவள் நான் தானே?” நிதானமாகக் கேட்டு நிறுத்தினார்.

என்னிடம் பதிலை எதிர்பார்க்கிறாரோ! குழப்பமாக இருந்தது. இதற்கு என்ன பதில் சொல்வேன்? கேள்வியிலேயே பதில் இருக்கே! யார் சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் அவர்தான் இந்த வீட்டுக்குப் பெரியவர்.

நான் தங்கைகளைப் பார்க்க, சித்தியோ, என் பதிலை எதிர்பார்க்கவில்லை என்ற கணக்கில் தொடர்ந்தார்.

“காலா காலத்தில உனக்கு ஒரு கலியாணத்தச் செய்து வைக்கிறது என்ர கடமை தானே?”

ஓ! இதைச் சொல்லத்தான் அந்த ஆரம்பமா?

“இப்பவே நிறையப் பேர், ‘உதயாக்கு மாப்பிள்ள பார்க்கிறியா? பார்க்கேல்லையா?’ அப்பிடி இப்பிடிக் கேட்கீனம். எத்தின நாட்களுக்கெண்டு அதையும் இதையும் சாட்டாச் சொல்லுறது?”

“அது எண்டால் சரிதானம்மா, மாப்பிள்ள யாரெண்டு கெதியாச் சொல்லுங்கோவன்!” இடையிட்டாள் கவி.

அதைக் காதில் வாங்காது தொடர்ந்தார் சித்தி.

“உன்ர உழைப்பை வாங்கித் தின்றுகொண்டு சொகுசா இருக்கிறாள் எண்ட பேச்சு இப்பவே அரசல் புரசலாக இருக்கு - நீயும் இப்பிடியே இருந்த எண்டு வை...கேட்கவே வேணாம்.” என்னில் படிந்த பார்வையை விலக்காது சொல்லிக்கொண்டே போனார்.

‘உனக்குக் கலியாணம்’ என்று அவர் சொன்னதும் நிச்சயம் அதிர்ந்தேன் தான். கூடவே நிறையவுமே ஆச்சரியப்பட்டேன். காரணம், சித்தி எனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் எல்லாம் செய்து வைப்பார் என்றளவில் என்னுள் எந்த எண்ணமோ, துளி எதிர்பார்ப்போ இருக்கவில்லை.

‘ஓ! அப்ப நீயாகவே உனக்கான வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்வாயோ?’ என்றேதும் இடக்காக நினைக்காதீர்கள்.

“போயிட்டு வாறன் மா!” என்றுவிட்டு, வேலைக்குச் சென்ற அப்பா திரும்பிவரவே இல்லை. மலிந்து கிடக்கும் பாதை விபத்துகள் அவரையும் விட்டு வைக்கவில்லை. மின்னாமல் முழங்காமல் நிகழ்ந்த அந்நிகழ்வுக்குப் பின்னரான இந்த மூன்று வருடங்களில் என்னுள் வேறெந்த நினைவுகளுமே இல்லை.

‘என்ர தங்கச்சிகள நல்லாப் படிப்பிக்க வேணும்; வீட்டப் பார்த்துக்கொள்ள வேணும்’ என்ற சிந்தனையிலேயே இருந்து விட்டேன். அப்படியிருக்க, திடீரென்று என்ன இதெல்லாம்?

என்னைச் சூழ்ந்திருந்த ஆச்சரியம் மெல்ல மெல்ல வடிந்தே போயிற்று!

மாப்பிள்ளை யாரென்று அறியும் அவா எல்லாம் எழவில்லை. மாறாக, “நான் கலியாணம் செய்து போய்ட்டால் இவேண்ட நிலை? தங்கச்சிகளிட படிப்பு?” சித்தியிடமே கேட்டேன்.

அவர் சட்டென்று பதில் சொல்லவில்லை. நெற்றி சுருங்க என்னையே பார்த்திருந்தார்.

இதை நான் கேட்பேன் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் போலிருந்தது. அதில் பிழையும் இல்லை தானே?

“அப்ப...வீட்டு நிலை என்ன எண்டு உனக்கே விளங்குது தானே உதயா?”

அவர் குரலில் என்றுமில்லாத கனிவு. உற்றுப் பார்த்தால் அவரின் விழிகள் கலங்கியிருப்பது தெரிந்தது.

“இதென்ன கேள்வி சித்தி? நம்மட வீட்டு நிலை எனக்குத் தெரியாதா என்ன? இந்த நிலையில என்ர கலியாணம் எல்லாம் அநாவசியம்.” என்றுவிட்டேன். உண்மையும் தானே?

“அக்கா! நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்கோ பாப்பம்!” குட்டித் தங்கை சீறினாள்.

இலேசாகச் சிரித்தேன். அந்தச் சிரிப்பைப் பார்த்து முறைத்தாள் பெரியவள்.

“இங்க பாருங்கோம்மா, இந்த விசயத்தில நாங்க ரெண்டு பேருமே உங்கட பக்கம் தான்; அக்கா சொல்லுறத எல்லாம் கேட்கவே வேணாம் சொல்லிப் போட்டன்; மாப்பிள்ளை யார், எந்த இடம் எண்ட விபரம் சொல்லுங்கோ!”

என்னை ஒரு வெட்டும் பார்வை பார்த்தபடி பெரிய மனிசி போன்ற தோரணையில் கேட்டாள் கவி.

“இங்க பாருங்க, நீங்க ரெண்டு பேரும் சின்னப்பிள்ளைகள். ‘அக்காக்குக் கலியாணமா?’ எண்டு கேட்டுச் சந்தோசப்பட்டதோட அமைதியா இருக்க வேணும்.” அதட்டினார் சித்தி.

இருவருக்கும் முகம் சுண்டிப்போயிற்று. “நாங்க ஒண்டும் சின்னப்பிள்ளைகள் இல்ல!” கவிதான் சொன்னாள்.

“சரி, நீ பெரியவளாவே இரு! ஆனால், இப்ப வாயை மூடிக்கொண்டிரு! இல்லையோ எழும்பி அங்கால போ!”

சற்றுமுன் மிகவும் அதிசயமாகக் கனிவைக் காட்ட முயன்றவர், பழையபடி முகத்தில் கடுமையை அப்பிக்கொண்டு சீறினார்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
“அய்யோ சித்தி! இப்ப ஏன்...” நான் ஆரம்பிக்க, நொடி தாமதமின்றிக் கையமர்த்திவிட்டார்.

“உனக்கு இந்த வீட்டு நிலை நல்லாவே தெரியும்; இப்ப நாம இருக்கிறது உன்ர வீடு!”

“சித்தி! இதென்ன நீங்க உன்ர என்ர எண்டு...” மீண்டும் ஆரம்பிக்க, சற்றே கடுமையோடு இடையிட்டார்.

“பொறு உதயா, முதலில நான் கதைச்சு முடிக்கிறன் - அதுக்குப் பிறகு உன்ர முடிவச் சொல்லு!” என்ற சித்தியின் தோரணை முற்றிலும் வித்தியாசமாகப்பட்டது.

‘என்ன? நான் முடிவச் சொல்லுறதா?’ ஏனோ, மனத்தில் கலவரம் குமிழியிடத் தொடங்கீற்று!

“இந்த வீடும் நம்மட்ட இருக்கிற நகைகளில பலதும் உன்ர தானே? என்ன அப்படிப் பார்க்கிற? நான் கண்டிப்பும் கறாராவும் இருந்தோன்ன பொல்லாதவள் எண்டு முடிவே செய்திட்டியா? உன்ர அம்மாட வீட்டையும் நகைகளையும் எடுத்து எனக்கு என்னத்துக்குச் சொல்லு பார்ப்பம்?”

அவர் சொல்லச் சொல்ல எனக்கோ, உள்ளே ஏகத்துக்கும் குழப்பம். சித்தி எதையோ சொல்லப் பலமாகப் பீடிகை போடுவது நன்றாகவே புரிந்து போயிற்று. ஊகம் என்று எதுவும் எழவில்லை. அவரே சொல்லட்டும் என்று அமைதியாக நின்றேன்.

“உனக்கானத எடுத்து உன்ர தங்கச்சிகளுக்குக் குடுக்கவா? அதை நான் ஏன் குடுப்பான்? நீயே அவேக்குக் குடுப்ப, இதைவிட அதிகமாகக் குடுக்க முடிஞ்சாலும் குடுப்ப எண்டு எனக்கு நல்லாவே தெரியும்.” என்றவர், உண்மையாகவே அழுதுகொண்டுதான் கதைத்தார்.

‘அவர் என்ன நோக்கில் கதைக்கிறாரோ தெரியாது; ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயம், என்ர தங்கச்சிகளுக்குப் பிறகுதான் எனக்கு எல்லாமே!’ இந்த எண்ணத்தில் மீண்டும் வாய் திறந்தேன்.

“குறுக்கக் குறுக்கக்(அடிக்கடி இடையிட்டு) கதைக்கிறன் எண்டு குறை நினைக்க வேணாம் சித்தி; இதெல்லாம் தேவையில்லாத கதை; இந்த வீடு, நம்மட்ட இருக்கிற நகை எல்லாம் நம்மட, அதில எல்லாருக்கும் உரிமை இருக்கு.” சொன்ன என் குரலிலும் நடுக்கம்!

“நீ இப்பிடிச் சொன்னாலும் கலியாணம் எண்டு பேசேக்க ‘பொம்பளைக்கு என்ன செய்வீங்க?’ எண்டுதான் முதல் கேட்பீனம் உதயா." பட்டென்று சொன்னார்.

"இதெல்லாம் நான் சொல்லியா உனக்குத் தெரிய வேணும்? பாக்கிறதுக்குக் கண்ணுக்கு நிறைவாக இருக்கிற; படிச்சிருக்கிற; நல்ல வேலை இருக்கு எண்டதுக்காக யாரும் சும்மா வந்து கட்டச் சம்மதமே என்ன? அப்ப, உன்ர வீட்டையும் நகையையும் காட்டிச் சரி கலியாணம்...” அவர் தொடர, அமைதியாக இருக்க முடியாது இடையிட்டேன்.

“வேணாம் சித்தி; எனக்கு அப்படிப்பட்ட ஒரு கலியாணம் வேணாம் எண்டு சொல்லுறன் விடுங்கோவன்.” வெடுக்கென்று சொல்லிவிட்டேன்.

எழுந்து என்னருகில் வந்து நின்றார் சித்தி. சட்டென்று தங்கச்சிகள் என் இருபுறமும் வந்து நின்று கொண்டார்கள். அவர்களின் முகத்திலும் சற்று முன்னிருந்த மகிழ்வு இல்லை.

எதுவோ நடக்கப் போகுது என்ற ஒரு தாக்கம் எங்களையும் அறியாது எங்களுள் வந்திருந்தது.

“சரியான சுயநலவாதி எண்டு என்னை நீங்க சொன்னாலும் பிழையில்ல உதயா, உனக்குக் கலியாணமும் நடக்க வேணும்; நம்மட வீடு பழைய மாதிரி...இந்தப் பிள்ளைகளில ஒருத்தி சரி தலையெடுக்கிற வரைக்கும் உன்ர உதவியும் தேவை. இதுக்கு ஏற்றபடி அருமையான இடம் ஒண்டு அமைஞ்சுது. அதனால ...”

“அதனால?” கணம் தாமதிக்காது கேட்டாள் கவி.

“நான் சந்தோசமாச் சம்மதம் சொல்லீட்டன். வாற பத்தாம் திகதி முறைப்படி நிச்சயம் செய்வம் எண்டு முடிவு செய்திருக்கிறம்.” இலகுவாகச் சொல்லிவிட்டு, மீண்டும் சென்றமர்ந்து கொண்டார் சித்தி.

நான் அப்படியே அதிர்வோடு அசையாது நின்றேன்.

‘கலியாணம் செய்து வாழப்போறவள் நான் தானே? என்னட்ட ஒரு வார்த்த கேட்கேல்ல. உன்ர சம்மதமோ, விருப்பமோ தேவையில்லாத விசயம் எண்ட மாதிரி என்ன தெளிவாத் தகவல் சொல்லீட்டுப் போயிருக்கிறார்!’ ஆத்திரத்தில் கத்தியதுள்ளம். ஆமாம்! உண்மையில் சரியான கோபம் கொண்டேன்.

அதே கோபம் தான் என் தங்கைகளுள்ளும். என்னுள் குமிழியிட்ட கோபத்தை வெளிப்படுத்த ஆயிரம் தடவை யோசிக்க வேண்டியிருந்தது.

‘முதல் வெளிப்படுத்தியும் பயனேதும் இருக்குமோ!’ என்ற எண்ணமும் வந்தது போனது.

தங்கச்சிகளுக்கு அப்படியெதுவும் தயக்கமில்லை. சித்தியிடம் எத்தனை அடியும் குத்தும் வாங்கினாலும் மனத்தில் படுவதைப் பட்டென்று கேட்டுப் பழகியவர்களாச்சே! சொந்த அன்னை என்ற உரியாமையாயிருக்கும்! வேறென்ன?

மனம் பயங்கரமாகக் கசந்து வழிய நின்றேன் நான்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
நாட்டுப்பிரச்சினை என்ற சொல்லில், என் தாயை என்னிடமிருந்து பிரிக்கக் காரணமாக இருந்த ஒவ்வொருவரையும் வெகுவாகவே சபிக்கத் தொடங்கியது எனதுள்ளம். என்னைப் போல் எத்தனை உள்ளங்கள் கணத்துக்குக் கணம் சாபமிடும்! என்றாவது பலிக்காது போகுமா? சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அரக்க உயிரும் ஏதோ ஒருவழியில் அனுபவிக்கும்.

என் தந்தையின் மரணத்துக்கு ஏதுவான பொறுப்பில்லாத மனிதர்களையும் என் உள்ளம் விட்டு வைக்கவில்லை; மனம் கசியச் சபித்துத் தள்ளியது.

கையாலாகாதவள் நான் மட்டுமே. என் மனம் அப்படியல்ல. ஒன்றை நினைத்தால் அதை முடித்துவிட இயன்றமட்டும் முயலும் குணம் கொண்டது. அந்தவகையில், இப்போது என் அநாதரவான நிலைக்குக் காரணமானவர்களை முடிந்தளவுக்குச் சபித்துத் தள்ளியது.

“அம்மோய்! என்ன சொல்லுறீங்க? பத்தாம் திகதி நிச்சயமா? அப்ப இன்னும் நாலு நாட்களில நிச்சயம். அப்படி எண்டா ரெஜிஸ்டர் செய்யப் போறீங்களோ! முதல், மாப்பிள்ள யாரெண்டே எங்களுக்குத் தெரியாம எப்பிடிம்மா? எங்கள விடுங்கோ, கலியாணம் அக்காக்கு எல்லோ? அக்காட்ட ஒரு வார்த்தை கேட்காம நீங்களே முடிவு செய்தது சரியான பிழ சொல்லிப் போட்டன்.”

எரிச்சலும் கோபமுமாகச் சொல்லிக்கொண்டே மீண்டும் வாயிலால் வெளியே இறங்கி நின்றுகொண்டாள் கவி.

“ஏய்! என்ன நீ பெரிய இவளாட்டம் என்னட்டயே கேள்வி கேட்கிற?” விசுக்கென்று இருந்த இடம் விட்டெழுந்தார் சித்தி.

“அங்க பார் உதயாவ, நான் சொன்னதுக்கு எதிரா ஒரு சொல்லுச் சொல்லாமல் நிக்கிறாள்; அவள் பிள்ள! நீயும் இருக்கிறியே! ச்சே! எனக்கெண்டு வந்து வாச்சிருக்கிற.” தலையில் அடித்துக் கொண்டார்.

நான் எதிர்வார்த்தையோ கேள்வியோ இல்லாமல் அமைதியாக நிற்கிறேன் என்று சொல்கையில், ‘இவள் வாய் திறந்திட்டால்? கடவுளே! திறவாமல் இருக்க வேணும்.’ என்ற பயத்தையும் பதற்றத்தையும் அவர் விழிகளில் அப்பட்டமாகப் படிக்க முடிந்தது.

“ஆங்! அக்கா அதிர்ந்து போய் நிக்கிறது உங்களுக்கு விளங்கேல்லையா என்ன? வாய் பேசாமல் நின்றுட்டா நீங்க செய்யிற வேலைக்குச் சம்மதமெண்டு அர்த்தமில்ல.”

என்னருகில் நெருங்கி நின்றபடி குரல் உயரச் சொன்னாள் சின்னவள். அவள் குரலில் அழுகை ஒட்டியிருந்தது. அவளுள் கனன்ற கோபத்தை என் கரத்தை இறுகப் பற்றியிருந்த அவள் கரம் நடுங்குவதிலிருந்து உணர முடிந்தது.

தாய் அடித்துவிட்டாலும் எனும் பயம் அவளில் எப்போதும் இருப்பதில்லை. சித்தியும் கடைசி மகளில் கைவைக்க ஒருதரம் யோசிப்பார். செல்லம்! அதேநேரம், உருவத்தில் தாயைப் போலிருந்தாலும் அவள் குணத்தில் என் அப்பாவைக் கண்டேன். என்ன இருந்தாலும் அவள் சின்னவள் தானே? பெரிதாக என்ன செய்ய முடியும்?

நான் வாய் திறக்கா விட்டாலும் எனக்காகக் கதைக்கும் என் செல்லத் தங்கைகளை ஒருமுறை பார்த்துவிட்டுச் சித்தியை நேராகப் பார்த்தேன்.

“சித்தி, எனக்கு இப்போதைக்குக் கலியாணம் வேணாம்; இன்னும் சில வருசங்கள் போகட்டும், பாப்பம்.”

என்னையுமறியாது சொல்லிவிட்டேன். குரல் தணிந்திருந்தாலும் அதில் தீர்மானம் வலுவாகவே ஒட்டியிருந்தது. அதை, மிகப்பெரிய அவமானமாக எடுத்துக் கொண்டார் சித்தி. அவர் முகம் சட்டென்று கன்றிவிட்டது.

கோபமாக ஒரு பார்வை பார்த்தார். அதற்கு நேர்மாறாக தங்கைகள் முகங்களோ மலர்ந்து போயின!

“அப்படிச் சொல்லுங்கோ எங்கட செல்ல அக்கா!” சின்னத்தங்கை என்னை இறுகக் கட்டிப்பிடித்தாள்.

“நீ இப்ப என்னதான் சொல்லுற? பத்தாம் திகதி நிச்சயம் எண்டு சொல்லுறன்; நீ வேணாமெண்டு சொல்லுற! உன்னட்ட நான் ஏதாவது இப்பக் கேட்டனா? ஒரு மாப்பிள்ளயப் பிடிச்சுக் கலியாணம் வரைக்கும் வாறது என்ன சமய பாடம் படிப்பிக்கிறது போல வேலையெண்டு நினைச்சிட்டப் போல!” கோபமும் இகழ்சியுமாகப் படபடத்தார்.

அதுமட்டுமில்லாது, என்ன சொல்கிறார் என்பதைக் கிரகிக்கவே விடாது உச்சகுரலில் தொடர்ந்தார்.

“இத்தனைக்கும் பொறுப்பா எடுத்துச் செய்ய உனக்கெண்டு யாரு இருக்கீனம் சொல்லு? பாவம் பாத்துச் செய்ய வெளிக்கிட்டால் எதிர்த்துக் கதைக்கிற அளவுக்கு வந்திட்டியா?

அப்ப, இவ்வளவு நாளும் ஊமக்கொட்டான் வேசம் போட்டிருந்திருக்கிற என்ன?

எல்லாம் உழைக்கிறன் எண்ட திமிர் செய்யிற வேல! நான் சொன்னா மறுவார்த்த பேசாள் எண்டு நம்பினன் பார், எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

அக்கா கொக்கா எண்டு நீங்க ரெண்டுபேரும் அவளத் தலையில வச்சுக் கொண்டாடுங்க. நாளைக்கு நடுத்தெருவில நிண்டு பிச்சை எடுக்கேக்க எல்லாம் தெரியும்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
இங்கபார் தாயே! நீ உன்ர விருப்பப்படி செய்! யாரையாவது பாத்து வச்சிருக்கிறியோ என்னவோ, உனக்குப் பிடிச்ச மாதிரி அவனையே கட்டிச் சந்தோசமா இரு! உனக்கு என்ன? வீடும் நகையும் கிடக்கல்லோ!

நாங்க மூண்டு பேரும் நஞ்சைக் குடிச்சிட்டுச் செத்துப் போறம்.”

கழுத்து நரம்புகள் புடைக்க உச்சகுரலில் கத்தியவர், இறுதியில், அழுகையோடு தன் தலையில் படீர் படீரென்று அடித்துக்கொண்டார்.

அவர் ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்ல நான் எப்படி அதிர்ந்தேனோ அப்படித்தான் தங்கச்சிகளும் அதிர்ந்து நின்றார்கள்.

இறுதியில், அவரின் செய்கையில் தடுக்கக் கூட முடியாது நாங்கள் உறைந்து நிற்க, விசுக்கென்று சமையலறைக்குள் புகுந்து, அந்தக் கதவைப் படீரென்று அடித்துச் சாத்தினார் சித்தி.

அந்த அடியிலும், அவர் சொன்ன விதத்திலும், வார்த்தைகளிலும் என் இதயம் நடுநடுங்கிப் போயிற்று! 

அடுத்து நகர்ந்த சில நிமிடங்கள் எப்படிக் கடந்தன என்று கேட்டால் என்னால் சொல்லவே முடியாது. உணர்வுகள் உறைய, நின்ற இடத்தில் அப்படியே வேரோடிப்போய் நின்றிருந்தேன். எனக்கு விழ வேண்டிய அடியை வாங்கிய சமையலறைக் கதவுவோ, கண்ணீரோடு என்னைப் பரிதாபமாகப் பார்த்தது.

தொடர்ந்து அவ்விடத்தில் நிற்கவும் முடியவில்லை. சட்டென்று திரும்பி எங்கள் அறைக்குள் வந்து விட்டேன்.

உள்ளே வந்த நான் யன்னலோரமாக இருந்த மர வாங்கிலில் அமர்ந்து, இலேசாகத் திரும்பி இடக்கையால் யன்னல் கம்பியை இறுகப்பற்றி என் முகத்தை அதில் பதித்தபடி வெளிப்புறத்தை வெறித்தேன்.

நானும் தங்கச்சிகளும் பாவிக்கும் அறையிது. அப்பாவின் இழப்புக்குப் பின்னர் தீபி அநேகம் சித்தியோடுதான் தூங்குவாள். மற்றும்படி எங்கள் மூவரதும் அழகிய உலகமே இந்த அறைதான். எனக்குத் தெரிந்து தங்கச்சிகள் என்றைக்குக் கதைக்க ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து தங்கள் மனத்தில் தோன்றும் எல்லாவற்றையும் என்னிடம் கொட்டி விடுவார்கள். அத்தனையும் இந்த அறைக்குள் தான்.

நிறையவே உவகைச் சிரிப்பு, அழுகை, சிணுக்கங்கள், ஆறுதல் வார்த்தைகள் என்று எல்லாமே இதற்குள் தான்.

இதன் நான்கு சுவர்களுக்கும் வாயிருந்தால் பல பல அழகிய கதைகளைக் கிசுகிசுக்கும். அத்தனையும் சகோதரிகள் எங்களுள் நடப்பவை. எங்களைப் போலவே, தாங்களும் சகோதரப் பாசத்தால் பிணைந்திருக்க வேண்டும் என்ற பேராவலும் அச்சுவர்களுக்கு இருக்கலாம். பார்ப்போர் எல்லோருக்குமே அது உண்டு.

‘அப்படிப்பட்ட நான் என்ர தங்கச்சிகளக் கைவிடுவனா? சித்திக்கு ஏனிந்த சந்தேகம்? அதுவும், இத்தினை நாளும் இல்லாமல்! உன்ர வீடு, நகை எண்டு பிரிச்சு...இதெல்லாம் என்ன கதை?’

உண்மையாகவே விளங்கவில்லை. இது பேருக்குத்தான் அம்மாவின் சீதனவீடு. ஒருகணமேனும் ‘இது என்னுடையது’ என்று, தனிப்பட நான் உணர்ந்ததே இல்லை. என்றைக்குச் சித்தி இங்கு வந்தாரோ அதன் பிறகு இந்த வீட்டின் முழு அதிகாரமும் அவருக்குண்டே! பிறகென்ன?

நகைகள்! இதோ காதுகளில் கிடக்கும் குட்டி முத்துத்தோடு. நான் முதலாம் வகுப்பிலிருக்கையில், பிறந்தநாளுக்கென்று அம்மா ஆசையாசையாக வாங்கித் தந்தது. அதற்கு முதல் ஒரு வெள்ளை அமெரிக்கன் டைமண்ட் கல்லுத்தோடு, அதே வெள்ளைக்கல்லுத் தொங்கட்டானோடு போட்டிருந்தேன். ஒருநாள் பள்ளியிலிருந்து திரும்பிவரும் போது ஒரு காதிலிருந்த தோடும் தொங்கட்டானும் எங்கோ விழுந்திட்டு. அதற்கு, அம்மா கோபித்துக்கொண்டது இன்னும் நினைவிலிருக்கு. தொடையில் நுள்ளினார். சத்தியமாய் நோகவில்லை.

‘அம்மா’ என்றெண்ணியதும் என் உதடுகளில் முறுவல் தன் அலங்காரத்தைப் பூசிச்செல்லும். இன்றும், இந்த மனநிலையிலும் உதடுகள் மெல்ல விரிந்தன. வலக்கை நகர்ந்து தொடையில் அன்று அம்மா நுள்ளிய இடத்தைத் தடவி அவரை உணர முயன்றது.

ம்ம்... வருத்த மூச்சு அடித்துப் பிடித்துக்கொண்டு வெளியேறியது!

‘அம்மா! நான் குடுத்து வைக்கேல்லம்மா!’ மனம் முனகுகையில், ‘அம்மாவோடு சேர்ந்து வாழ மட்டுமா?’ என்ற கேள்வி குறுக்கிட்டதைத் தவிர்க்க முடியவில்லை.

‘வரிசையாகப் பலதுகளுக்குக் ‘குடுத்து வைக்கேல்லயே’ எண்டு பெருமூச்சு விடுற சந்தர்ப்பங்கள் வரும் போல இருக்கே!’ முணுமுணுப்பைத் தொடர்ந்தது உள்ளம்.

‘சரி, என்ன எண்டாலும் வரும் போது பார்த்துக்கொள்வமே!’ உள்ளத்தைத் திசை திருப்பினேன்.

நகைகள் விசயத்துக்கு வருவோமே! தோடு, அதோடு, தலைமயிரைப் போன்ற மெல்லிய தங்கச்சங்கலி. அது சுத்தத்தங்கம் இல்ல. நமக்கு இருபத்தியிரண்டில் செய்தால் தானே சுத்தத் தங்கம்? இது பதினெட்டுக் காரட். இந்தச் சங்கிலியை எனக்கு நர்மதா பரிசாகத் தந்தாள்.

“கழுத்தைவிட்டுக் கழட்டவே கூடாது!” தரும்போதே அன்புக் கட்டளையும் சேர்ந்தே வந்தது.

“இதென்னடி அறுந்திரும் போல இருக்கு! நீ இப்பிடிச் சொல்லுற?” என்று நான் சொல்லும் பொழுதுதான் இந்தக் ‘காரட்’ கதை சொன்னவள். மூன்று வருடங்களாக இதுமட்டும் தான்.

அதைவிட்டால் மணிக்கூடு மட்டும் தான். ஏதாவது விழாக்கள் விசேசங்களுக்கென்றால் சேலைக்குப் பொருத்தமாக மெல்லிய ஃபான்சி நகைகள் பாவிப்பதால் தங்கத்தின் பக்கமே திரும்பியதில்லை.

தங்கச்சிகள் அப்படியில்லை. விசேச நாட்கள், கோவில் குளங்கள் என்றால் தங்கம் தான் போடுவார்கள். சித்தியும் தான். அப்போதெல்லாம் அது யார் நகை என்ற கேள்வியை நான் கேட்டதுமில்லை; இது உன் அம்மாவின் நகைகளென்று அவர்கள் சொன்னதுமில்லை.

“அப்படியிருக்க, இப்ப மட்டும் என்ன?” என்னையும் மீறி வாய்விட்டே கேட்டுவிட்டேன்.

நான் சொன்னதைக் கேட்டபடி வந்த தங்கச்சிகள், அருகில் நெருங்கியமர்ந்து கொண்டார்கள்.

“அக்கா...” தீபிதான் அழைத்தாள்.

கவியின் முகம் கலங்கிக் கிடந்தது.

இருவரையும் பார்த்துவிட்டு, “என்னடி?” என்றேன்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
க்கணம் இயல்பாக இருப்பது போல வெகுவாய் நடிக்க வேண்டியிருந்தது. உண்மையில் அது அவ்வளவு சுலபமில்லை. தொட்டதெல்லாம் மனதுக்குள் எடுத்துப் பிரச்சனையாக எண்ணாத என் குணத்துக்கு, அதிகம் நடிக்கும் சந்தர்ப்பங்கள் வருவதில்லை. வந்தால் இப்படித்தான் திண்டாட வேண்டும்.

“உண்மையாவே நீங்க யாரையாவது விரும்புறீங்களாக்கா?”

தீபி தான் கேட்டாள். இப்படியொரு கேள்வியைத் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லையே! யாரிடமிருந்தும் தான். முற்றிலும் அதிர்வோடு அவளைப் பார்த்தேன்.

“இது என்னடி புதுக் கத?” என்றபடி, விசுக்கென்று திரும்பி நேராக அமர்ந்து கொண்டேன்.

“உனக்கு என்ன விசராடி? அப்பிடி யாரு சொன்னது?” திகைப்பு மாறாது படபடத்தேன்.

“இல்லக்கா...இப்ப அம்மா சொன்னாவே, நீங்களே உங்களுக்கு...” தடுமாறினாள் குட்டித் தங்கை.

“விசரி!” அவளை அணைத்துக் கொண்டேன்.

“அது சித்தி ஏதோ கோபத்தில சொன்னது. அதைப் போய்ப் பெரிசா எடுத்துக்கொண்டு வந்து கேட்கிறியே!” மெல்லச் சிரித்தேன்.

சலுகையாக என் தோளில் சாய்ந்து கொண்டாள் சின்னவள்.

‘அம்மா கலியாணம் பேசி வச்சிருக்க, அக்கா யாரையோ காதலிக்க, ஒரே பிரச்சனையாகப் போகுதே!’ என்று பயந்திருக்கிறாள். அதை, அவள் வந்தமர்ந்த விதமும் கேள்வி கேட்டவிதமும் எனக்கு நன்குணர்த்தியது.

‘அப்பிடியெல்லாம் இல்லை’ என்றதும் வெளியேற்றிய நிம்மதி மூச்சு, நான் நினைப்பது சரியே என்றது.

“அக்கா...” இப்போ கவி.

‘சொல்லு.”

“அப்படியேதும் எண்டா சொல்லுங்கோக்கா!” என்றவள் குரலில் கெஞ்சல். மீண்டும் அவள் இப்படிக் கேட்க உண்மையில் கோபம் தான் வந்தது.

“இதென்னடி விசர்க் கதையாக் கிடக்கு? இல்லாத ஒன்றைச் சொல்லு சொல்லு எண்டால் நான் என்னடி செய்யிறது?” என நான் கதைத்துக்கொண்டிருக்க, இடையிட்டாள் கவி.

“அப்பிடி யாரையும் விரும்பேல்ல எண்டா அம்மா பார்த்த மாப்பிள்ள யாரு எண்டு சரி கேட்பமேக்கா. அம்மா உங்களிட்டக் கேட்காமல் கலியாணம் எண்டு முடிவு செய்தது எங்களுக்கும் கோபம் தான். சரியான பிழையும் தான். ஆனால், மாப்பிள்ள யாரு எண்டு பார்த்து, உங்களுக்குப் பிடிச்சாச் செய்யலாம் தானே? இல்லையோ மாட்டன் எண்டு ஒரேயடியாச் சொல்லலாம் தானேக்கா?” என்றாள், கூர்ப்பார்வையோடு.

‘இதற்குச் சம்மதம் சொல்லேல்லையோ நீ யாரையோ காதலிக்கிற எண்டுதான் அர்த்தம்’ சொல்லாமல் சொன்னாள்.

என் முகம் கன்றிற்று! என் தங்கைகள் கேள்வி கேட்கும் நிலையை உருவாக்கியாச்சே!

‘யார் உருவாக்கினார்கள்?’ என்ற கேள்வி அநாவசியம். அப்படியொரு சந்தர்ப்பம் வந்தாயிற்று. அதை நான் துளியும் இரசிக்கவில்லை.

“நீங்களும் என்னை நம்பேல்லையாடி? யாரோ ஒரு ஆளை நானாப் பாத்துக் கலியாணம் கட்டிப்போட்டு, உங்களை எல்லாம் ஓடுங்க எண்டு கலைச்சு விட்டுட்டு, இந்த வீட்டில சந்தோசமாக இருக்கப் போறன் எண்டு நினைக்கிறீங்க அப்படித்தானே?”

இப்படிக் கேட்ட போது என் குரலில் கோபம் தெறித்தது.

“ஐயோக்கா! அப்பிடியெல்லாம் சொல்லேல்லக்கா!” அவசரமாக இடையிட்டாள் கவி.

மேலும் தொடர்ந்தவளை கையமர்த்திவிட்டேன்.

“உங்களை எல்லாம் விட்டுட்டு இப்ப எனக்குக் கலியாணத்துக்கு என்ன அவசரம் எண்டு நினைச்சுத்தான் வேணாம் என்றன். அதுக்குப்போய் சித்தி என்னவெல்லாம் சொல்லீட்டா!

உண்மையாவே சரியான கவலையா இருக்கடி. சித்திக்கு என்னைப் பிடிக்காது எண்டு எனக்கு நல்லாவே தெரியும். அதில எனக்குக் கோபம் ஒண்டும் இல்ல. பிடிக்கவேணும் எண்டு எந்தக் கட்டாயமும் இல்லத்தானே? ஆனால், இப்பிடி நம்பிக்கை இல்லாமல் கதைக்கலாமா? சாகிறன் அது இது எண்டு.” படபடவென்று பொரிந்துவிட்டேன்.

தங்கைகள், அதுவும் கவிதான் இப்படிப் பொரிவாள். இன்று நான்.

அது மட்டுமில்லை, ஒருநாளும் இல்லாது என் விழிகளால் நீர் மணிகள் உருண்டு தெறித்தன. அதைப்பார்த்த தங்கைகள் பதைபதைத்துப் போனார்கள்.

“அக்கா!” இருபுறமிருந்தும் என்னை இறுகக் கட்டியணைத்துக் கொண்டார்கள்.

சமையலறைக்குள் சென்ற சித்தியும் சும்மா இருக்கவில்லை. பாத்திரங்களில் தன் கோபத்தைக் காட்டியபடி அழுதார்.

“செத்துப் போறன் எண்டதப் பகிடியா நினச்சுக் கொண்டிருப்ப; உனக்குச் செய்து காட்டினால் தான் தெரியும்.” பெரிதாகவே கத்தினார்.

விசுக்கென்று எழுந்துவிட்டோம். 'அசட்டுத்தனமாக எதையாவது செய்துவிட்டால்?' என்னுள் பயம் பிடித்துக்கொண்டது. எங்களுக்கென்றுள்ள ஒரே ஒரு பெரியவர் துணை அவர்தானே?

“ரெண்டாம் தாரமாக வந்து, ஊரிட்ட வாங்காத திட்டெல்லாம் வாங்கி உன்ன வளர்த்துவிட்டதுக்கு இந்த நிலைதான் வரவேணும்; எரிஞ்சு சாகறன்.” அவர் சொல்லி முடிக்க முதலே நாங்கள் மூவரும் கதவை இடிக்கத் தொடங்கிவிட்டோம்.

“அம்மோய்...கதவத் திறவுங்க!” கவி.

“சித்தி...எது எண்டாலும் முதல் கதவத் திறவுங்கோ!”

“ஐயோ! அம்மா...அம்மா ஒண்டும் செய்யாதீங்கம்மா!”

குரலை உயர்த்தி அழுதாள் தீபி. அவளுடல் கிடுகிடுவென நடுங்கிக் கொண்டிருந்தது. சின்னவள் தானே? பயந்து போனாள்.

“தீபி ஒன்றுமில்லடி - கொஞ்சம் பேசாமல் நில்லு!”

அவளை ஒரு கரத்தில் பிடித்துக்கொண்டு, “ஏய் கவி, பின்பக்கமாப் போய்ப்பார், கதவு திறந்திருக்கும்.” அவளைப் பிடித்துத் தள்ளிவிட்டு, “சித்தி கதவைத் திறவுங்க!” ஓங்கித் தட்டினேன்.

அவரோ, நாங்கள் சொன்ன எதற்கும் காது கொடுக்கவில்லை. தொடர்ந்து புலம்பியபடி பாத்திரங்களை உருட்டித் தள்ளினார்.

“அக்கா! பின்னுக்கும் கதவு மூடிக்கிடக்கு! ஐயோ! எனக்குப் பயமா இருக்கக்கா!”

என்னைக் கட்டிக்கொண்ட தங்கைகளைப் பார்த்ததும், என்னையும் அறியாது வார்த்தைகள் வழுவி விழுந்துவிட்டன.

சொன்னபிறகே நான் என்ன சொன்னேன் என்றதை உணர்ந்து கொண்டேன். அந்த நேரத்தில் அழிச்சாட்டியம் பண்ணும் சித்தியை வெளியில் வரவைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லையே!

“நீங்க யாரைக் காட்டினாலும் கலியாணம் செய்யிறன் சித்தி; முதல் கதவைத் திறவுங்கோ!” என்றுமில்லாத குரலில் கத்திவிட்டேன்.

அதற்கு நல்ல பயன் இருந்தது. மறுகணம், சடாரென்று திறந்தது, கதவு.

சித்தியைப் பார்க்க உண்மையாகவே பயமாக இருந்தது. தலைவிரி கோலமும் சிவந்த கண்களும் அழுகையுமாக நின்றவர், பாய்ந்து வந்து என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டார். வாய் விட்டே அழுதார்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
நானும் அழுதுவிட்டேன். முதல் முதல் என் சித்தி என்னை இப்படி கட்டிப் பிடித்திருக்கிறார். என்னிடம் சம்மதம் வாங்கவில்லை என்றாலும் எனக்கு ஒரு கல்யாணம் பார்த்திருக்கிறார். அந்தந்த நேரம் அதது நடக்க வேண்டுமென்ற எண்ணம், என் வரையிலும் அவர் மனத்தில் வந்திருக்கு என்றால் பாசமில்லாமலா?

அவரின் வெடுசுடு போக்கில் அவர் மனத்தை முழுதாக அறியத் தவறிவிட்டேனா? அது என் பிழைதானே?

“மன்னிச்சுக்கொள்ளுங்க சித்தி!” அழுகையோடு சொன்னேன்.

எங்களைக் கட்டிக்கொண்டு அழுதார்கள், கவியும் தீபியும்.

“உன்ன நான் பெறேல்ல எண்டாலும் நீயும் எனக்கு மகள் போலத்தானே? பாழும் கிணத்தில பிடிச்சுத் தள்ளுவனா உதயா?”

அழுகையோடு அவர் கேட்ட கேள்விக்கு நான் என்ன பதில் சொல்லவியலும்.

சற்றுமுன், அவர் எதையாவது செய்துவிட்டால் என்று துடித்த துடிப்பு எனக்குத் தானே தெரியும். தன்னை மறந்த கோபத்தில் அப்படியெதுவும் நடந்தால் தங்கச்சிகள் நிலை? குற்றவுணர்வில் நான் அழிந்தே போயிருப்பேன். நினைத்துப் பார்க்கவே அத்தனை பயங்கரமாகவிருந்தது.

இந்தக் கணத்தில், பாழும் கிணறே என்றாலும் என் தங்கச்சிகளுக்காக, அவர்களின் நல்ல வாழ்வுக்காக நான் குதிக்கத் தயார். பிறகென்ன?

“விடுங்க சித்தி, என்னதான் எண்டாலும் நாலு பேச்சு(திட்டு), அடி போட்டாலும் பரவாயில்ல, என்ன கதையெல்லாம் கதைச்சிட்டீங்க?” அழுகையோடு கேட்ட என்னையே பார்த்தார் சித்தி.

“நீ சம்மதிப்ப எண்டு எனக்குத் தெரியும் உதயா. அந்த நம்பிக்கை இருக்கப் போய்த்தானே நானே பார்த்து முடிவு செய்தன். அப்படியிருக்க, ஆசையா விசயத்தச் சொல்ல, கலியாணம் வேணாம் எண்டதும் என்ன செய்யிறது எண்டு தெரியாமல்...ம்ம்... விடு விடு!”

என் கண்களைத் துடைத்து விட்டது சித்தியேதான்.

உண்மையில் நான் தலைசுத்திப் போனேன். தங்கச்சிகள் கூட சித்தியை விசித்திரமாகப் பார்த்தார்கள். என்னதான் என்றாலும் அவர்களின் அம்மா அல்லவா? சற்றுமுன் அவர் கதைத்த விதத்துக்கு எதையாவது செய்து தொலைத்திருந்தால்?

தாயை இறுகக் கட்டியழுதார்கள். “என்ன பிரச்சினை எண்டாலும் பரவாயில்ல அம்மா, இனிமேல்பட்டு இப்படி விசர்க்கதை மட்டும் கதையாதீங்க!” அழுகையோடு சொன்னாள் தீபி.

“சரி சரி அழாதீங்க!” தங்கச்சிகளைச் சமாதானம் செய்வித்தேன்.

“என்ன அங்க ஒரே சத்தமாக் கிடக்கு?” என்று, தங்கள் வீட்டு வேலியடியில் நின்று குரல் கொடுத்தார், புனிதம் ஆன்ட்டி.

“இந்த மனிசிக்கு எந்த நேரமும் காது இங்க தான்; அவான்ட வீட்டில எப்ப என்னென்ன நடக்குதெண்டு பாக்கிறமா கேட்கிறமா என்ன? வந்திட்டா முதலாளியம்மா!” முணுமுணுத்துக்கொண்டே வெளியே சென்றார் சித்தி.

“அதெல்லாம் ஒண்டும் இல்லையக்கா. சும்மா தெரியாதா? இவள் தீபியும் கவியும் ஒரே அடிபாடு; அதுதான் நாலு போட்டன்.”

அழகாகச் சமாளித்து அவரை அனுப்பிவிட்டு, அப்படியே போய் முகத்தை நன்றாகக் கழுவிக்கொண்டு வந்தமர்ந்தார்.

புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது எனக்கு. தங்கைகளும் அதையேதான் சொன்னார்கள்.

“போங்க...முகம் கழுவிப்போட்டு வாங்கோ!” அதட்டினார் சித்தி.

சென்று கழுவிக்கொண்டு வந்தோம். குளிர் நீர் பட்டது மனதுக்கும் இதம் தந்தது தான். ஆனாலும், மாப்பிள்ளை யாராக இருக்கும்? என்ற கேள்வியின் வெம்மை மனத்தைத் தகித்துத் தொலைத்தது.

என் மனத்தைப் படித்தது போல, “அம்மா மாப்பிள்ள யாரு?” என்று கேட்டுக்கொண்டே தாயினருகில் சென்றமர்ந்தாள் தீபி.

பதில் சொல்லாது என்னைப் பார்த்தார் சித்தி. அவரின் பதிலுக்காகக் காத்திருக்கிறேனே.

“அக்காதான் கலியாணத்துக்குச் சம்மதமெண்டு சொல்லீட்டாவே! பிறகென்ன யோசனை? யாரெண்டு சொல்லுங்க. உள்நாடா? வெளிநாடா?” பரபரத்தாள் கவி.

சற்றுநேரம் யோசித்த சித்தியின் வாயிலிருந்து தயக்கத்தோடு வார்த்தைகள் வழுக்கி விழுந்தன.

என் இதயத்தை வாள் கொண்டு அறுத்தும் எறிந்தன.

“வேற யாரும் இல்லடி... நம்மட... சூர்யாதான்.”

மூவருமே விசுக்கென்று எழுந்துவிட்டோம்.

“உங்களுகென்ன பைத்தியமேம்மா? அந்தாளப் போய் எங்கட அக்காவுக்காக? முடியாது. முடியவே முடியாது!”

அருவருப்பாக முகம் கோணியபடி உறுதியாக மறுத்தாள் என்குட்டித் தங்கை.

மறுகணம், அவள் கன்னத்தில் இடியாக இறங்கியது சித்தியின் கை. அடித்த வேகத்தில் அவள் சுதாகரிக்க முன்னர், மீண்டும் அதே கன்னத்தில் பளார் பளாரென்று இன்னும் இரண்டு இழுத்தார். அதுமட்டுமின்றி அவர் முகத்தில் கனன்ற நெருப்பு...கோபமா? வெறியா?

விதிர்விதிர்த்துப் போனோம்.

“என்னடி மரியாதை இல்லாம அந்தாள் எண்டு சொல்லுற? அவன் உன்ர மாமா நினைவிருக்கட்டும். உங்கள எல்லாம் தூக்கி வளர்த்தவன். சின்னப்பிள்ளையில நீங்க ஒண்டைப் பார்த்து ஆசைப்பட்டுட்டா என்ன பாடு பட்டாவது வாங்கித் தந்து சந்தோசப்படுறவன்.

என்ர ஒரே தம்பிக்கு என்ன குறைச்சல் சொல்லு பார்ப்பம்? உன்ர அக்காவ விட எந்த விதத்தில குறைஞ்சு போனான்? அழகில்லயா? ஆம்பளைச் சிங்கன் அவன். சொந்தத் தொழில் இல்லயா? அவனும் டெக்னிகல் கொலேஜில படிச்சிட்டுத்தான் அந்த கராஜை போட்டவன், நினைவில வச்சிரு!" என, மகளுக்குச் சொல்வது போலிருந்தாலும் சித்தியின் விழிகள் என் மீதுதான்.

"அவனுக்கு வெளியில பொம்பள எடுக்கிறது எண்டால் இவளவிடத் திறமான பெண்கள் கிடைப்பீனம் தெரியுமா? நான் கெஞ்சிக் கூத்தாடினதால இவளுக்குச் செய்ய ஓமெண்டு சொல்லி இருக்கிறா அம்மா." மூச்சிரைக்க இரைக்க இரைந்தவர் குரல் சட்டென்று தணிந்தது.

"அதோட யாரை எண்டாலும் செய்யுறன் எண்டு உதயாவே சொன்னப்பிறகு நீ என்ன முந்திரிக்கொட்டை மாதிரி? வயசுக்கு ஏற்றபடி கதைச்சுப் பழகு! பல்லைக் கழட்டிக் கையில தந்திருவன்!”

சொல்லிக்கொண்டே மீண்டும் கையோங்க, அவளை என்புறமாக இழுத்துக் கொண்டேன். அப்போதுதான் சற்றே சற்று சுதாகரித்திருந்தேன்.

சூர்யா... சத்தியமாக வாய் பேச வார்த்தைகள் மட்டும் பிடிபடவில்லை.

மனதுள் கொந்தளித்து எழுந்த உணர்வுகள் விழிகளால் உருண்டு தெறித்து விழுந்தன. அதை அசைட்டையாகப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார் சித்தி.

என் மௌனம் அவருக்கு நிறையவே தெம்பைத் தந்துவிட்டது என்றது அவரின் தோரணை.

என்ன செய்யலாம்? மீண்டும் முடியாதென்றால் சற்று முன்னர் நடந்த நாடகம் அரங்கேறலாம். அதைத் தாக்குப் பிடிக்கும் உரம் என்னுள் உண்டா? இல்லவே இல்லை.

“இங்க பார் உதயா ...” என் கவனத்தைத் தன் புறம் திருப்பினார்.

“சூர்யா உனக்கு நல்லாவே தெரிஞ்சவன்; நீ நல்ல கெட்டிக்காரி; எல்லாமே நம்மட கையில தான், கொஞ்சம் யோசி!"

கண்டிப்போடு புத்தி சொல்லும் தோரணையுடன் ஆரம்பித்தார்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
உணர்வு சுத்தமாக வழித்தெறியப்பட்ட கோலத்தில் நின்றேன் நான். அதை அவர் ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை என்றது, தொடர்ந்த அவரின் குரல்.

"முதல் பெஞ்சாதி செத்தப் பிறகும் அவளையே நினைச்சுக்கொண்டு, அவள் பெத்த உன்னக் கொஞ்சிக்கொண்டு இருந்த மனிசனக் கட்டி இந்த ரெண்டுகளையும் பெத்துப்போட்டு நான் குடும்பம் நடத்தேல்லையா? அதோட பாக்கேக்க என்ர தம்பிக்கு என்ன குறை சொல்லு?

ஐஞ்சு பொம்பளைப்பிள்ளைகளோட பிறந்தவன், இப்ப, பிக்கல் பிடுங்கல் இல்ல; அம்மா மட்டும் தான்.

சின்னவள் குட்டி அவையோட இருந்தாலும் அவள்ட புருசன் வெளிநாட்டுக்குக் கூப்பிடும் வரைக்கும் தான்; மிஞ்சி மிஞ்சிப்போனா ஆறு மாசங்களோ ஒரு வருசமோ வெளிநாடு போயிருவாள்.

மிச்சம் எல்லாம் உன்ர கெட்டித்தனத்தில் இருக்கு!” என்று, கறாராகவே சொன்னவர், அப்போதும், இரும்பென இறுகி நின்ற என்னை அசட்டையாகவே ஒரு பார்வை பார்த்தார்.

என் மௌனம் கொடுத்த தைரியம் உருவாக்கிய அசட்டை அது.

' இல்ல, இதெல்லாம் சரிவராது; உங்கட தம்பியை எனக்குக் கலியாணம் செய்ய விருப்பம் இல்ல.' என்று, பெருங்குரலில் கத்தவேண்டும் போலிருந்தது.

நெஞ்சம் பெரும் ஓலமாக அலறித் தொலைத்தது. நாவோ தளர்ந்து துவண்டு கிடந்தது.

“இன்னும் நாலு நாளில சின்னதா எழுத்தைச் செய்வம் என்றிருக்கிறம். கலியாணம் அடுத்தமாசம் பத்தொன்பது வச்சிருக்கிறம். எல்லாம் நமக்குள்ள தானே? பெரிசா எடுத்துப் பிடிக்க இங்க கொட்டியும் இல்ல, தேவையும் இல்ல. கொஞ்சம் உடுபிடவை வாங்க வேணும். நாளைக்குப் பின்னேரமாப் பெரிய கடைக்குப் போயிட்டு வருவம்.”

படபடவென்று சொல்லிவிட்டு எதிர்க்கதையோ கேள்வியோ எழச் சந்தர்ப்பம் தராது நகர்ந்தவர், சட்டென்று நின்று, “உதயா...” மீண்டும் அழைத்து, என் பார்வையைத் தன்புறமாகத் திருப்ப வைத்தார்.

“எழுத்து முடியும் மட்டும் யாருக்கும் சொல்லிக்கொண்டு இராதேங்க; புனிதமக்காவையளுக்கும் சொல்ல வேணாம்; கலியாணத்துக்குச் சொல்லலாம்.” முடிவாகச் சொன்னார். இல்லை, கட்டளையிட்டார்.

“இது கொஞ்சமும் நல்லா இல்லயம்மா! உதயாக்காட ஒன்றுவிட்ட மாமா ஆட்கள், வெளிநாட்டில இருக்கிற ஆன்ட்டி ஆட்கள் எல்லாருக்கும் சொல்லாம இப்ப ஏன் இப்பிடி அவசரப்பட்டு ரகசியமா...அதுவும் மாமாவ...” மீண்டும் தீபிதான்.

“உன்ன வாய மூடச் சொன்னன். உன்ர அக்காட சொந்தபந்தம் தானே நம்மட இல்லாத நேரங்களிலும் துன்பங்களிலும் வந்து உதவுறவை?

இதுவரைக்கும் உன்ர அக்காக்கு என்னத்தச் செய்து கிழிச்சவே?

எங்கயாவது சந்திக்க வேண்டி வந்திட்டா மட்டும் என்னை என்னை முறைச்சுக்கொண்டு பெரிசா குசலம் விசாரிப்பீனம், அதோட சரி.

உன்ர அப்பாவும் செத்துப் போனதும் மூன்று பொம்பளப் பிள்ளைகள்ட பொறுப்பும் தங்கட தலையில விழுந்திட்டாலும் எண்டு மெல்ல மெல்ல நழுவிப் போய்ட்டீனம் தானே? பிறகென்ன பெரிய சொந்தக்காரர்?

அவயளுக்கு ஆறுதலாத் தெரியட்டும். இங்க அயலுக்க ஒண்டையும் கிள்ளிப் போடமாட்டினம். ஆனால், வம்பு தும்பு சொல்ல வந்திருவீனம். அதனால தான் பிறகே தெரியட்டும் என்றன்.” சொன்ன வேகத்தில் நகர்ந்துவிட்டார்.

நாங்கள் மூவருமே சிலையென நின்றோம்.
 
Top Bottom