• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 35

ரோசி கஜன்

Administrator
Staff member
இரவு எட்டுமணியைக் கடந்திருந்தாலும் இருள் முழுமையாய் ஆட்சிக்கு வந்திருக்கவில்லை. ‘பேக்கர்ஸ்ஃபீல்ட்’ நோக்கி I-5N நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தது வாகனம்.
வேந்தன், வாகனமோட்டுவதில் கவனமாகத்தான் இருந்தான். இருந்தாலும் ஏதோவொரு வேண்டாத சிக்கலை அண்மித்துவிட்டதாய் ஓருணர்வு அலைக்கழித்துக் கொண்டிருந்தது. கவியில் கோபம் கூட வந்திட்டு. பயணம் தொடங்கிய நாளிலிருந்து அழகியதொரு நட்புறவைக் காட்டியவளில் கொஞ்சம் பாவமுமாய். தன்னில் கூட கோபம் அவனுக்கு.
‘நானும் இலக்கியாவும் விரும்பிறம் எண்டு சொல்லியிருந்தா இக்கணம் வந்திராதும் இருக்கலாம்’ மனம் இடித்துரைத்தது. அதே மனம் தான், ‘சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகளை வச்சு எடுக்கிற ஊகங்கள் எப்பவுமே சரியா இருக்க வேணும் எண்டும் இல்லையே. கவி பற்றி நான் நினைக்கிறது பிழையாவும் இருக்கலாம்' என்றதொரு கோணத்தையும் எடுத்துரைத்தது. இக்கணம், இப்படி எண்ணித் தன்னைத் தானே தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியும் இல்லையே!
அருகிலமர்ந்திருந்த நாதன் மௌனமாக இருந்தாரென்றால் பின்னாலும் ஒரே மௌனம்தான். இத்தனை நாளும் இல்லாத அமைதியாய்த் தோன்றி மிகுந்த அசௌகரியத்தைக் கொடுத்திட்டு!
மனம் விரும்பியவளை, அவளைச் சார்ந்தோரை அருகிலிருந்து பார்த்துப் பழகித் தெரிந்து கொள்ளக்கிடைத்த அருமையான சந்தர்ப்பமாக இப்பயணத்தையெண்ணி வந்தவனுக்கு, இப்போதோ, 'ஏண்டா வந்தம்?' என்றிருந்தது.
இப்பயணத் தொடக்கத்திலிருந்து சென்ற கணம் வரை அறிமுகம் செய்து வைத்திருந்த பல்வேறு இனிய தருணங்களை மழுங்கலடிக்கும் வகையில் அல்லவா இருக்கின்றது, கவியின் பார்வை!
பயணம் முடியப்போகுதே என, நாலைந்து நாட்கள் முன்னிருந்தே வருத்தப்பட்டான். இப்பயணம் இப்பிடியே நீண்டிடாதா என்றேங்கிய கணங்கள் கூட உண்டே! இக்கணமோ, எப்போதடா இதிலிருந்து விடுபட்டோடுவோம் என்றளவுக்கு மனம் நொந்து போனான்.
'பேசாமல் நாளைக்கு ஒரு டிரைவர் அரேஞ் பண்ணிட்டு நாம வீட்ட போய்ட்டா என்ன?' கேள்வி கேட்ட இதயம், தன்னை வியாபித்திருந்த இலக்கியாவின் ஆளுமையால் துவண்டிட்டு! அப்படிச் செய்து, நாளை பற்றிய அவள் சின்ன சின்ன எதிர்பார்ப்பில் மண்ணள்ளிப் போடத் துணியேன் என்றதுள்ளம்.
வெளிப்புறத்தில் இலக்கின்றித் தத்தளித்த பார்வையோடு அமர்ந்திருந்தாள், இலக்கியா. அவளுள்ளும் தமக்கை பற்றிய எண்ணமே! அவளறிந்த கவியில் இச்சில நாட்களாக மாற்றம் உணர்கிறாளே!
'வேந்தனில் அக்காவுக்கு விருப்பமோ' மிகச் சிறிதாக எழுந்த சந்தேகம் இப்போது சற்றே வளர்ந்த நிலையில் அவளைப் பாடாய்ப்படுத்தியது.
வேந்தன், ‘ஒண்ணுமில்ல’ என்று சமாளித்தாலும் ‘மதி எடுக்கிறான்’ என்று வெளியே போனதன்பின் அவன் முகமே சரியில்லையென்பதை தெள்ளத் தெளிவாய் உணர்ந்ததாலும் மறுநாளோடு பயணம் முடிகின்றதேயென்ற ஆதங்கத்தாலும் தான், 'முன்னுக்கு வந்து இருப்பீரா?' என, அவன் போட்ட குறுஞ்செய்திக்கு, 'நான் வீடியோ எடுக்கிறன், முன்னுக்கு இருக்கிறன் சித்தப்பா' சொல்லிவிட்டு, பதில் சொல்ல முதல் ஏறியமர்ந்து பெல்ட்டையும் போட்டு விட்டாள்.
விசுக்கென்று வந்த கவி, "இல்ல இறங்கு இலக்கி...நான் தான் இண்டைக்கு முழுதும் எடுத்து வச்சிருக்கிறன். நீ பின்னால ஏறு, நானே எடுக்கிறன்." அதட்டியிருந்தாள்.
"சின்னப்பிள்ளைகள் போல இவையளுக்கு முன்னுக்கு ஆர் இருக்கிறது எண்ட பிரச்சன!" சிரித்தபடி ஏறியமர்ந்தாள், அஜி.
"இதில இருக்கிற டவுன் டவுன்(Down town), இருபது நிமிசமும் வராது கவிக்கா. அதைவிட இலக்கி அக்கா உங்கள விட நல்லாவே வீடியோ எடுப்பா!" சீண்டியபடி ஏறியமர்ந்தான், ஆரூரன்.
கவியின் முகம் இறுகிற்று. “இறங்கடி இலக்கி!" எரிச்சலோடு அதட்டி, அந்தக் கோபத்தை தங்கையில் காட்ட முனைந்தாள்.
“கவி...இதென்ன சின்னப்பிள்ள விளையாட்டு? கெதியா ஏறு, இப்பவே நல்லா நேரம் போயிட்டு." நாதனின் அதட்டலில் அப்போதைக்குப் பின்னாலேறியமர்ந்தாலும், “பேக்கர்ஸ்ஃபீல்ட் போகேக்க நான் முன்னுக்கு இருப்பன் சொல்லீட்டன்." என்று சொல்லி, மாறன் நாதன் சுகுணா மூவரினதும் முறைப்பையும் வாங்கிக்கொண்டாள்.
வேந்தனோ, "மழைக் குணமா இருக்கோ!" உதடுகளுள் சிரிப்பை அடக்கிக்கொண்டு முணுமுணுத்து இலக்கியாவை வம்பிழுத்தான். தமக்கை ஒரு வார்த்தை சொன்னாலே விட்டுக் கொடுத்துவிட்டு போவதைக் கண்டிருந்தவனுக்கு இன்று அவள் ஏறியமர்ந்த விதமும் அசையாது அமர்ந்திருந்த விதமும் அவ்வளவு சந்தோசம் கொடுத்தது.
அவள், அவன் முகம் பார்க்கவில்லை. கவியின் பார்வை தன்னிலிருக்கும் என்று உள்ளுர்ணர்வு சொன்னதில் கைபேசியை இயக்கி வீடியோ எடுக்கத் தயார் செய்தாள்.
அடுத்த அரைமணிதியாலத்தில் ‘மெக்சிகன் சீ பூட்’ ரெஸ்டாரண்டில் இருந்தார்கள். கவி உம்மென்று தான் இருந்தாள். இருந்தாலும் மற்றவர்கள் கலகலப்பாகவே உணவை முடித்தார்கள். அருகிலேயே மோல் ஒன்று இருக்கவும் இளையவர்களும் அஜி, ரதியும் “கெதியா வந்திருவம்.” என்றுவிட்டு நுழைந்துவிட்டார்கள்.
வெளியே இருந்த இருக்கையொன்றில் அமர்ந்துவிட்ட சுகுணாவும் நாதன் மாறனும் மாறி மாறி தொலைபேசி விவாதத்திலிருந்தார்கள்.
கடைத்தொகுதிக்குள் சென்றவர்கள் சொன்னது போலவே வந்ததும், நகரைச் சுற்றிவிட்டு வெளிக்கிடுவம் என்று கதைத்து வாகனம் நிறுத்திய இடத்துக்கு வர, வேகமாக முன்னால் விரைந்து சென்று முன் கதவைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டாள், கவி.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
“வேந்தன் கெதியாத் திறந்து விடுங்கோ!" சிறுபிள்ளையின் பிடிவாதத்தோடு அவசரப்பட்டாள்.

“அக்கா நான் எண்டுதானே சொன்னன்." பதில் சொல்லாது தங்கையை முறைத்தாள் கவி. மறுநொடியே பின்னால் சென்றமர்ந்துவிட்டாள், இலக்கியா. முன்னால் ஏற முயன்றாள் கவி. அவளைத்தடுக்க வழி தெரியவில்லை, வேந்தனுக்கு. அவள் அருகில் இருக்க வாகனம் செலுத்தவும் பிடிக்கவில்லை.

"நீ பின்னால ஏறு கவி!" நாதன் குரலில் எப்போதுமே இல்லாத அதட்டல்.

“இல்ல சித்தப்பா, நான் முன்னால.” என்றவள் கரம் பற்றி, “உன்னப் பின்னுக்கு போயிருக்கச் சொன்னன்.” என்று அவர் சொன்னது வேந்தனுக்கே ஒரு மாதிரியாய் போயிற்று.

“விடுங்கோப்பா, இப்ப என்ன வந்தது.” ரதி சொல்ல, மனைவியையும் முறைத்தார் நாதன்.

“என்ன விளங்கேல்லையா? போய் ஏறு!” அவளை நகர்த்திவிட்டுத் தான் ஏறியமர்ந்து கொண்டவர் பார்வை ஒரு கணம் வேந்தனைப் பார்த்துவிட்டு நகர்ந்தது. கணம் தான். அவன் நெஞ்சாழத்தை ஊடுருவிய அந்தப் பார்வையும் வேந்தனை மிகையாகக் குழப்பிட்டு! வெளியில் தெரியாவிட்டாலும் நிறையவே தடுமாறவும் வைத்திட்டு!

‘ஏதோ முன்னால வந்திரு எண்டு நான் தான் சொன்னன் எண்டது போலப் பார்க்கிறார்!’ மனதுள் முனகியவன் பார்வை உள்க்கண்ணாடியின் ஊடாக இலக்கியாவை நோக்கி நகர, விருட்டென்று பின்னால் ஏறியமர்ந்த கவியின் பார்வை தான் அவன் பார்வையோடு மோதியது. அக்கணத்தில், மீண்டுமொருமுறை அவள் விழிகள் சொன்ன செய்தியில் அவனுள்ளம் நன்றாகவே கலங்கிற்று! அவனையறியாது முகத்தில் கடுமை வந்திருக்க பட்டென்று திரும்பியிருந்தான். பார்வையிலேனும் கண்டிப்பைக் காட்டிவிடும் வேகத்தில் திரும்பியவன் சுகுணாவினதும் மாறனினதும் பார்வையில் பட்டென்று முன்னால் திரும்பிவிட்டான்.

மறுநொடியே வாகனத்தை உயிர்ப்பித்து ‘லொஸ் ஏஞ்சஸ்’ நகரைச் சுற்றி வந்தவன் ஒரு வார்த்தை கதைக்க முனையவில்லை. அருகிலமர்ந்திருந்த நாதன் ஏதேனும் கதைக்க மாட்டாரோ என்றளவில் அசௌகரியமாக வேறு இருந்தது. பின்னால் பார்க்கவே அச்சமாகவும். எல்லாம் சிறு பொழுது தான். ஆரூரன் அவனையும் பேச்சில் இழுத்துக் கலகலக்கத் தொடங்கிவிட்டாலும் வேந்தனால் பழைய கலகலப்புக்குத் திரும்பவே முடியவில்லை.

இன்று அவர்களோடுதான் தங்கவிருந்தான். இப்போதோ, தனியாக அறையொன்று எடுத்திருக்கலாம் போலிருந்தது. இந்த இரு கிழமைகளும் அவர்களில் ஒருவனாக உணர்ந்தவனை இப்படி ஒதுங்கி நின்று தத்தளிக்க வைத்து விட்டன, நாதன், சுகுணா, மாறன் மூவரதும் பார்வைகள்.

அடிக்கடி “இடையில இறங்க வேணும் எண்டா சொல்லுங்கோ.” என்று கேட்டு, காஸ் ஸ்டேசன் பார்த்து நிறுத்துபவன் இன்று ஒரே இழுவையாக இழுத்துக் கொண்டிருந்தான்.

“இன்னும் ஒரு மணித்தியால ஓட்டம் இருக்கு என்ன வேந்தன்?” அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த நாதன் கேட்க, அவனுக்கு ஏனோ அவர் முகம் பார்க்க முடியவில்லை.

“ஓம் அங்கிள்.” என்றவன் பார்வை முன்னே பாதையில்.

“அப்ப ஒருக்கா இறங்கி ஏறுவமே?”

“ஓமோம் அங்கிள். சொறி சொறி நான் ...” தடுமாறிப் போனான்.

“இதில என்ன இருக்கு தம்பி!” என்று சொல்லி அவன் தோளில் மெல்லத் தட்டினார் நாதன். அவர் செய்கையும் பார்வையும் தெரியாமல் பிழை செய்த சிறுவனை மன்னித்துத் தட்டிக் கொடுப்பது போலவே இருந்தது, அவனுக்கு.

‘கவி முன்னால் ஏற வந்ததுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? பிறகேன் அப்படிப் பார்க்க வேணும். இப்ப...’ மனதில் சுணக்கத்தோடே அடுத்து வந்த காஸ் ஸ்டேசனில் வாகனத்தை நிறுத்தியவன், எப்போதும் போல் தானும் சேர்ந்து இறங்கவில்லை. கைபேசியை எடுத்துக் காதில் பொருத்திக்கொண்டான்.

“தம்பி கஃபே ஏதாவது …” நாதன் தான்.

“இல்ல, எனக்கும் ஒண்ணும் வேணாம் அங்கிள்.” என்றுவிட்டு மும்முரமாகக் கதைப்பது போல் பாவனை செய்தான்.

ராஜியின் பிள்ளைகள், கவின் அப்படியே உறங்கியிருக்க, ரதியும் சுகுணாவும் “இன்னும் கொஞ்ச நேரம் தானே நாங்க இறங்கேல்ல.” என்றுவிட, இலக்கியாவும் இருந்துவிட்டாள்.

கைபேசியில் பார்வையிருக்க இருந்தவளால், முன்னே இருப்பவனிடம் நிறையச் சொல்ல மனதுள் துடித்தாலும் ஓர் எழுத்துத் தட்ட வரவில்லை.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
‘வேந்தன்’ இறுதியில் இதை மட்டுமே தட்டின, விரல்கள். அனுப்பியும் விட்டாள். கைபேசியில் கதைப்பது போல் பாவனை தானே செய்துகொண்டிருந்தான். மறுநொடியே குறுஞ்செய்தியைப் பார்த்தான். பின்னால் திரும்பத் துடித்த உள்ளம் அங்கே சுகுணா இருக்கிறார் என்றதில் திரும்பிடத் தயங்கியது. அந்தளவுக்கு அவர் பார்வை அவனைத் தாக்கியிருந்தது.

‘சொறி டி’ தட்டி அனுப்பினான். அதேநொடி ரியர் வியூ மிரரால் உள்ளே பார்த்தவன் அங்கிருந்த தெருவிளக்கு உபயத்தில் அவள் வதனம் கண்டான். காலையிலிருந்த மலர்வு துளியில்லை. களைப்பு வேறு கலக்கம் வேறுதானே? அவள் விழிகள் பளிச்சிட்டதில் கண்கலங்குகின்றாள் என்றுணர முடிந்தது.

‘அதேன் சொறி? விடுங்க’ தட்டியவள், வரிசையாக இதயங்களைச் சேர்த்தனுப்பினாள். பார்த்தவன் உதடுகளில் முறுவல்.

‘முன்னுக்கு வாறியோ?’

‘உங்கள...’ பல்லிளித்த கோப முகமும் சேர்ந்து போனது.

‘இப்பவே உன்ர அம்மாட்டச் சொல்லவா?’

‘டோய் வேந்தன் அடிவாங்குவீங்க. இன்னும் ஒருநாள் அதுக்குப் பிறகு என்னவும் செய்யுங்க.’

‘என்னவும் எண்டா’ கண்ணடிக்கும் ஸ்மைலி.

‘என்னவும் தான்’

‘அப்பப் பேசாமல் உமக்கு பை பை சொல்லிப்போட்டுப் போகட்டா?’

‘டோய் கொலை...கொலை விழும்’

“ஹா...ஹா…” அவன் சத்தமாகச் சிரித்துவிட்டான்.

‘அய்யோ’ மனதில் அலறியவாறே கைபேசியை வைத்துவிட்டாள், இலக்கியா.

அவன் சிரித்த விதத்தில் சுகுணாவும் ரதியும் திடுக்கிட்டு ஒருவர் ஒருவரைப் பார்துக்கொள்ள, “சொறி ஆன்ட்டி... ஃபிரெண்ட்.” சட்டென்று திரும்பிச் சொன்னவன் அதே சாட்டில் இலக்கியாவைப் பார்த்துவிட்டுத் திரும்பினான்.

அவளுடனான சிறு செய்திப் பரிமாற்றமும் பார்வைப் பரிமாற்றமும் அவனுக்குள் இருந்த எல்லாவிதமான சுணக்கத்தையும் விரட்டி உற்சாகத்தை நிரப்பி விட, மிகுதித் தூரத்தை அப்பப்போ நாதனுக்குக் கதை கொடுத்தபடியே கடந்திட முடிந்தது.

இலக்கியாவுக்குமே, அநியாயமாகத் தமக்கையில் பழிபோடுவதாக எண்ணம் வந்திருந்தது. அவள் மனதையும் இலேசாக்கியிருந்தான், வேந்தன். இடையில் ஒருநாள் தானே? அதன் பிறகு நிச்சயம் தம் விடயத்தைப் பெரியவர்கள் பார்வைக்கு கொண்டுவந்துவிடுவான் என்றதே அவளுக்குப் பெரும் மகிழ்வைத் தந்தது. வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் வீட்டினருக்கு மறைக்கிறோம் என்றதே பெரும் பாரமாக இருக்கின்றதே! அதிலிருந்து விடுதலை கிடைக்கும் நேரம் அருகில் என்றதே அவளுக்கு மலர்வைக் கொடுத்திட்டு!

பேக்கர்ஸ்ஃபீல்ட் இல் இவர்கள் தங்கவிருந்த ஹொட்டல் வந்து சேர்கையில் பதினொன்று நெருங்கிக் கொண்டிருந்தது.

‘தங்களுக்கான அறைக்குள் சென்ற வேகத்தில் விசுக்கென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் கவி. அதுவரை அவள் யாரோடும் பெரிதாகக் கதைக்கவில்லை. அவள் முகம் போலவே மனமும் இறுகியிருந்தது. அன்றைய பொழுது அவள் மனதில் தவித்த தவிப்புகளுக்கும் தவறிழைத்துவிட்ட சிறுபிள்ளைபோல் மற்றவர்களால் கடிந்து கொள்ளப்பட்டதுக்கும் மொத்தக் காரணமுமாக இலக்கியாவையே குற்றம் சாட்டியது, அவளுள்ளம். அதுவும், ஆய்வு கூடத்தில் வேந்தனோடு நக்கல் நையாண்டி என்று கதைத்துவிட்டுத் தன்னை ஒவ்வொரு முறையும் எட்டிப் பார்த்ததில் உள்ளம் கொதித்துப் போனாளே!

‘ச்செக்!’ பொங்கும் எரிச்சலிருந்து விடுபடும் நோக்கில் உள்ளே புகுந்த வேகத்தில் நீரைத் திறந்துவிட்டு அதனடியில் நின்று விட்டாள். வெதுவெதுவென்று பூவாய் இறங்கிய நீரால் அவளுள் இருந்த கோபச்சூட்டைத் துளியும் தணிக்க முடியவில்லை. செய்வதறியாது, அவள் விழிகள் தட்டிய உப்பு நீரையும் காவிக்கொண்டு வழிந்தோடியது.

அவள் மனதில், எண்ணிச் சிலநாட்களுக்கு முன்னாரான வேந்தனின் அறிமுக நினைவு இதமாய் ஓடியது! இரு கிழமைகளுக்குச் சாரதியாக வந்தவன் பார்த்ததும் முதற்பார்வையில் தம்மில் ஒருவனென்ற உணர்வைத் தோற்றுவித்தானா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேணும்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
நெடுநாள் திட்டமிட்டு பேராவலோடு புறப்பட்ட பயணமும் அது விரித்த பசுமைக் காட்சிகளுக்கும் தான் அவளுள் முன்னுரிமை பெற்றிருந்தது. எப்போதென்று சரியாகச் சொல்லத் தெரியா வகையில் வேந்தனோடு கலகலப்பாகப் பழக ஆரம்பித்திருந்தாள்.

ஆரூரன், எதற்கெடுத்தாலும் அண்ணா அண்ணாவென்று அவனைக் கேட்டு ஒன்றொன்றும் செய்ய செய்யவும், நாதனே அவன் யோசனையின் பெயரில் ஒவ்வொன்றையும் செய்யவும் தன்னையுமறியாதே இவள் பார்வையும் அவன் புறம் சென்றிருந்தது.

அவன் வாய் உதிர்க்கும் வார்த்தைகளை நட்போடு கூடிய பார்வைகளை இரசித்துப் பார்க்கத் துணிந்துவிட்டது. குறுகிய நாட்களுள் பெரியவர்களின் ஒட்டுமொத்த மரியாதையைப் பெற்ற அவன் குணம் அவளையும் கவர்ந்திழுத்திருந்ததில் ஆச்சரியமேயில்லை.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக வேந்தனின் அன்னையோடு உரையாடக் கிடைத்த சந்தர்ப்பங்களில் அவனுக்கு மிகவும் வேண்டியவளாக, தனக்கு மிக வேண்டியவர்களாக அவர்களை உணர்ந்தவள், இடையிடை தங்கை அவனோடு சீண்டுவதில் ஒரு நெருக்கம் இருக்கிறதோ என்றும் கூட சந்தேகம் கொண்டுவிட்டாள். அதுவே, தங்கையில் கோபம் கொள்ளவும் ஆரம்பப் புள்ளியாக அமைந்துவிட்டது.

‘ச்சே ச்சே அதுக்கெல்லாம் ஏது சந்தர்ப்பம்’ என்று, அதைத் தட்டிக் கழித்து அவன் மீது அசுர வேகத்தில் விருப்பை வளர்த்தவளுக்கு, அவன் பின்னணி தெரிந்த போது அத்துணை மகிழ்வு. தன் விருப்பை வெளிப்படுத்தினால் வீட்டினர் மறுப்பின்றி ஏற்பார்களே! அப்போதும், நட்போடு ஆருரனோடு எப்படிக் கதைத்துப் பேசுகிறானோ அப்படியே அவளோடும் கதைத்துப் பேசிய வேந்தன் அவள் மனதில் சுணக்கம் ஏற்படுத்தினான் தான்.

‘அதெப்படி என்ர விருப்பம் விளங்காமல் இருக்க ஏலும்?’ என்ற கவலையே கலகலவென்று அவனைச் சீண்டும் தங்கையில் நல்ல கோபமாகத் திரும்பியிருந்தது. அதுவும் இலக்கியாவின் சீண்டல்களை அவன் இரசிக்கிறான் என்பதையுணர்ந்து கொண்டபின் தவிப்பும் எரிச்சலும் அதிகமாகிற்று! அதற்கு அப்பப்போ வடிகாலாகிப்போனாள், இலக்கியா.

தன்னுள்ளத்தை அவன் உணர்ந்துவிட்ட பிறகு யாரோடு எப்படிக் கலகலத்தாலும் அவளுக்குப் பிரச்சனையேது!

அவனுக்குத் தன்னில் விருப்பம் இல்லாவிட்டாலும் என்ன? தன் விருப்புத் தெரிந்தால் விரும்பிவிட்டுப் போகிறான். தன்னைப் பிடிக்காதிருக்க எந்தக் காரணமுமே இல்லையே! ‘என்ர சொந்தக் குடும்பத்தோட இருக்கிறது போலவே இருக்கு’ என்று, இந்த இரு கிழமைகளும் எத்தனையோ தடவைகள் சொன்னவனுக்குத் தம் சொந்தமாக வரக் கசக்கவா போகின்றது! இந்த எண்ணத்தில்தான், ஆய்வகத்தில் வைத்துச் சாடை மாடையாகத் தன்னை அவனுக்கு உணர்த்தவும் முற்பட்டாள். அது புரியாதளவுக்கு சிறுவனா என்ன?

தன் மனதின் வெளிப்பாட்டுக்கு, தன்னுள் முதல் முதல் உருவாகிய அந்த அன்புணர்வுக்கு அவனிடமிருந்து சிறு துளி இசைவை எதிர்பார்த்து ஏமாந்தவளின் மொத்தக் கோபமும், அவனோடு தன்னை நெருக்கமாக உணர்த்திக்கொண்டிருக்கும் தங்கையில்தான்.

இறுக விழிகளைத் துடைத்துக் கொண்டாள், கவி. இனியும் இந்த நிலையில் அவளால் தந்தளித்துக்கொண்டிருக்க முடியாது. அதுவும் நாளையோடு பயணம் முடிகின்றதே! இப்படியெல்லாம் மனதுள் வைத்திருந்து குழம்பித் தவிப்பதோ கலங்கித் துடிப்பதோ அவள் சுபாவமுமில்லை. அதற்கான தேவை இந்த இருபத்தியைந்து வருடங்களில் வந்ததில்லை.

குளித்து முடித்த போது மனது ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தது. இரவுடையுடுதிக்கொண்டு, “குளிக்க வேண்டியவே போகலாம்.” என்றபடி வெளியில் வந்தவள் பார்வை, உள்ளே போகத் தயாராக நின்ற தங்கையில் ஒருதரம் உரசியது. சற்றும் குறையாத உக்கிரத்தோடுதான்.

நேருக்கு நேராகப் பார்த்துவிட்டு எப்போதும் போலவே மலர்ந்த முறுவலோடு தன்னைக் கடந்தவளை முறைத்துக்கொண்டு நின்றுவிட்டே திரும்பினாள், கவி.

அறையிலோ தாய் தவிர வேறு ஒருவரும் இருக்கவில்லை. குளியலறைளைப் பயன்படுத்த மற்றைய அறைகளுக்குச் சென்றிருப்பார்கள். அதன்பின் சற்றுக் கூடத் தாமதிக்கவில்லை, கவி.

கைபேசியில் பார்வையிருக்க கட்டிலிலமர்ந்திருந்த சுகுணாவை நோக்கிச் சென்றவள், “அம்மா நான் ஒண்டு சொல்ல வேணும்.” அவருக்கருகில் அமர்ந்த வேகத்தில் மடியில் படுத்துக்கொண்டாள்.

அவள் இப்படித்தான் தாயோடு செல்லம் கொஞ்சுவாள். ‘என்ர அம்மாக்குட்டி’ உரிமை கொண்டாடுவாள்.

“என்ன ஆச்சி?” சுகுணாவின் கரம் மகள் தலையைத் தடவியது.

லொஸ் ஏஞ்சல்சிலிருந்து வெளிகிட்ட நேரம் தொட்டு முகம் இறுக அவள் இருந்ததைக் கவனித்தவர் தானே. அதுமட்டுமன்றி, அவள் மனவோட்டத்தைப் புரிந்துகொள்ளவும் முடிந்தது, அவரால். தனக்கும் அவளுக்குமான இந்தக் கணத்துக்காகக் காத்திருந்தாரே!

“இவ்வளவு நேரமாவா முழுகினனி? தலையெல்லாம் ஈரமாக் கிடக்கே...வடிவாத் துடைக்கேல்லையா?” தலைகோதி முடியை விரித்துப் பரப்பி விட்டபடி கேட்டவர், மகள் அடுத்துச் சொன்னதில் சட்டென்று விழிகள் கலங்கிப் போனார்.

தாயின் விழிகளையே பார்த்துக்கொண்டு வார்த்தைகளை உதிர்த்த கவி மறுநொடியே எழுந்து அவரைக் கட்டிக்கொண்டாள், இறுக.

“ஓம் மா, எனக்கு... வேந்தன சரியா பிடிச்சிருக்கு. அவரையே கலியாணம் செய்து வைக்கிறீங்களா?” தவிப்போடு கேட்டவள் விழிகளும் நீர் முத்துகளைத் தவற விட்டன. இந்த நினைப்பால் தானே இன்று அவள் சித்தப்பா கடிந்து கொள்ள வேண்டி வந்தது, அதுவும் எல்லோர் முன்னாலும். தாயிடம் மனதைச் சொல்லிவிட்ட இக்கணத்தில், அப்போது அனுபவித்த அவமானவுணர்வு மெல்ல மறைந்திட்டு!

சுகுணாவின் கரம் மகள் முதுகைப் பரிவாகத் தடவியது. “எங்களிட்ட இருந்து மறைச்சிட்ட எல்லா நீ?” என்று சொல்லவும் செய்தார்.

“எனக்கே...” என்று ஆரம்பித்தவள், உள்ளே வந்த அஜியைப் பார்த்துவிட்டுப் பேச்சை நிறுத்தினாள். மறுபடியும் தாய் மடியில் படுத்தும் விட்டாள்.

“என்ன அம்மாவும் பிள்ளையும் செல்லம் கொஞ்சலா?” என்றபடி வந்த அஜி, “இலக்கி எங்க அக்கா, குளிக்கிறாளா?”

“ஓம், இப்பத்தான் உள்ள போனவள்.”

“அப்ப உங்களுக்கு வேணும் எண்டா எங்கட ரூமில குளிக்கலாம். ரதி அக்கா குளிச்சு முடியுது எண்டு சொல்லச் சொன்னா. அதைச் சொல்லத்தான் வந்தன்.” என்று விட்டு அவள் செல்ல, மீண்டும் யார் வருவார்களோ என்ற யோசனையில் மகளைப் பார்த்த சுகுணா, “இங்க பாரம்மா, உன்ர மனசில உள்ளத அம்மாட்ட சொல்லிட்ட எல்லா? அதை இதை யோசியாமல் எப்பவும் போல கலகலப்பா சந்தோசமா இருக்க வேணும். மூஞ்சிய தூக்கி வச்சிக்கொண்டு இருக்கக்கூடாது சொல்லிபோட்டன்.” கண்களைத் துடைத்துவிட்டார்.

"நீங்க...உங்களுக்கும் வேந்தனைப் பிடிச்சிருக்குத்தானே?" கேட்டவளுக்கு வார்த்தைகளில் எதையுமே சொல்லவில்லை, சுகுணா.

“ம்மா...உங்களுக்கு ஓகே எல்லா?" மீண்டும் கேட்டாள், கவி.

"நாளைக்குப் பின்னேரம் அப்பா ஆக்கள் வந்திருவினம் கவி. அதுக்குப் பிறகு இதைப்பற்றிக் கதைப்பம் என்ன? அதுவரை என்னட்டச் சொன்னது போல ஆரோடும் கதைக்காத சரியோ?"

"அது சரியம்மா ...உங்களுக்கு...” என்றவளை இடைமறித்தார்.

“உனக்கு எப்ப இருந்து வேந்தனத் தெரியும்?”

“ஏனம்மா இப்பிடிக் கேக்கிறீங்க? உண்மையாவே இந்த இரண்டு கிழமையா உங்களுக்கு எப்பத் தெரியுமோ அப்ப தான் எனக்கும் தெரியும். இரண்டு கிழமையா நம்மளோடவே வாறார். அவரைப் பிடிக்கிறதுக்கு அதைவிடக் காலம் தேவையில எண்டு நினைக்கிறன்.” படபடவென்று சொன்னாள். அதோடு, “உங்களுக்கு வேந்தனப் பிடிச்சிருக்காச் சொல்லுங்கோவன்." மீண்டும் கண்கலங்கியபடி கேட்க, மெல்லச் சிரித்தார் சுகுணா.

"விசர்ப்பிள்ள!" மகள் கண்களை பரிவோடு துடைத்துவிட்டவர், "வேந்தன நம்மில ஆருக்குப் பிடிக்காது சொல்லு? வேந்தன்..." என்று சொல்லிக் கொண்டுவந்தவர் குளியலறைக் கதவு திறபட அப்படியே நிறுத்திவிட்டார்.

தன்னைக் கண்டதும் தாய் அமைதியானது இலக்கியாவின் முகத்தை மாறச் செய்தது. அதுவும் ‘வேந்தன்’ என்ற வார்த்தை அவள் காதுகளில் தெளிவாகவே விழுந்ததே! அப்படி என்ன வேந்தனைப் பற்றி? அதுவும் எனக்குத் தெரியக் கூடாதது! அவளுக்கு எதுவென்று யோசிப்பதென்று இருந்தது. இன்னுமொரு விசயம் நெற்றி சுருங்க வைத்தது. அவளைக் கண்டதும் மறுநொடியே தாயின் மடியில் தலைபுதைத்திருந்தாள் கவி.

வருவித்த முறுவலோடு வெளியில் வந்து, "நீங்க போகலாம் மா!" என்றுவிட்டு, "கவிக்கா நீங்க எடுத்த வீடியோஸ் அனுப்பிறீங்களா?" கதை கொடுத்தாள். கவி மூச்சும் விடவில்லை. அவளைப் பார்க்கவும் இல்லை.

"அதெல்லாம் பிறகு பார்க்கலாம், பார் எத்தின மணியாச்சு...தூங்குங்க!" என்றுவிட்டு, “எழும்பம்மா...குளிச்சிட்டு வாறன்.” எழுந்த சுகுணா, “தலையை வடிவாக் காய வச்சிட்டுப் படு குஞ்சு!" என்றபடி குளியலறைக்குள் நுழைந்தார்.

தாய் மடியிலிருந்து எழுந்து ஹேர் ட்ரையரை எடுத்த கவி, "அம்மா நான் இண்டைக்கு உங்களோட தூங்குறன்." என்றாள்.

“சரி ...சரி”

“ஏனக்கா?" இலக்கியா. அவளும் கவியும் ஒரு கட்டிலிலும் சுகுணா ராஜியின் பிள்ளைகளில் ஒருவரோடும் தான் தூங்குவார்கள்.

அப்போதும் தங்கை முகம் பார்த்து எதுவும் சொல்லாது தன் தலையைக் காய வைப்பதில் முனைந்திருந்தாள், கவி. வாயைத் திறந்தால் எதையாவது சொல்லிவிடுவாளென்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அதனால் கட்டுப்படுத்திக் கொண்டாள். தாயிடம் தன் மனதைச் சொன்னபிறகு பதை பதைப்பெல்லாம் இல்லை. மனம் வெகுவாகவே இலகுவாகியிருந்தது. இனி அவர் பார்த்துக்கொள்வார் என்று தெரியும். என்றாலும், உடனேயே தங்கையோடு சுமூகமாகக் கதைக்க வரவில்லை.

“அக்கா...” விடாது மீண்டும் அழைத்தபடி அருகில் வர, “இப்ப நான் ஆரோடும் கதைக்க விரும்பேல்ல!" மறுபுறம் திரும்பிவிட்டாள், கவி.

இலக்கியாவின் விழிகள் கலங்கிப் போயின. அமைதியாகப் படுத்துவிட்டாள். நெடுநேரம் உறக்கமின்றிக் கிடந்தவளுக்குக் கைப்பேசியைத் தொடவும் மனம் வரவில்லை. எல்லோரையும் விட்டு அந்நியமாய்த் தனித்துவிட்ட உணர்வு பிடிங்கித் தின்றது.

ராஜியின் மகள் வந்து அருகில் படுத்துக்கொண்டபோது நித்திரை போலவே கிடந்துவிட்டாள்.

தாய், தமக்கையின் தலை காய்ந்துவிட்டதா என்று பார்த்து அவளைத் தலைகோதிக்கொண்டே அருகில் படுத்துக்கொண்ட போது தனிமையுணர்வு பேரலையாய் வந்து மோதியது. சூடாக வழிந்த கண்ணீர் தலையணையை நனைத்துச் சென்றது. நினைவுகள் சில, காலப்போக்கில் மறந்துவிட்டிருந்தாலும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அதன் வடுக்கள் தம்மை இனம் காட்டத் தவறுவதில்லையோ என்ற எண்ணம் அவளுள்ளத்தில் உலா வந்தது.
 
Top Bottom