• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அன்பில் வந்த ராகமே - FINAL (நிறைவு பெற்றது)

STN 23

New member
ராகவி வயத்திற்கு வந்த போது அத்தை சீர் செய்ய முடியவில்லை என்று மிகுந்த வேதனையில் இருந்தார் தேவமங்கை.

அப்போது தான் முரளிக்கு தாய் மாமன் மட்டுமல்ல தங்கள் பக்கம் இருந்தும் சீர் செய்ய வேண்டும் என்பதே தெரிய வந்தது.

“கவலைப்படாதீங்க மா நான் எப்படியாவது அவளை இங்க கூட்டிட்டு வரேன் நீங்க என்ன செய்யணுமோ செய்ங்க” என்றவன் சொன்னது போலவே அவளுடைய பூப்புனித நீராட்டு விழா முடியவும் ஒரு நாள் பண்ணைக்கு அழைத்து வந்தான்.

அப்போது அவளுக்கு நலங்கிட்டு வாழ்த்தியவர் புடவை மற்றும் அவளுக்காக வாங்கி இருந்த தங்க நகைகளை கொடுத்தார்.

அதுமட்டுமின்றி முரளி தன் பங்கிற்கு அவளுக்கு கொடுக்க வேண்டும் என்று இதய வடிவத்தில் டாலர் வைத்த செயின் ஒன்று வாங்கி இருந்தான்.

அதை அவளிடம் கொடுக்க “நீயே போட்டு விடு மாமூ” என்றிட மகிழ்ச்சியோடு அவளுக்கு அணிவித்தான்.

பார்த்தசாரதி கேட்டதற்கு பரிமளாவின் சொந்தத்தில் யாரோ செய்து போட்டது என்று சமாளித்து விட்டார்கள் பாட்டியும் பேத்தியும்.

கல்லூரிக்கு சென்ற நாளிலிருந்து இன்று வரையிலும் அவன் அணிவித்த சங்கிலியை கழற்றாமல் இருக்கிறாள்.

“மாமூ” என்று மறுபுறம் கேட்ட ராகவியின் கூச்சலில் தன்னை மீட்டவன், “அப்போலாம் உன்னை அப்படியே அள்ளிக்க தோணும் ஆனாலும் கட்டுப்படுத்திட்டு இருப்பேன்..”

“ஒரே ஒரு முத்தத்தோடு உன்னை விட்டு விலகுறது எல்லாம் ரொம்ப கொடுமைடி. அதெல்லாம் உனக்கு புரியாது…” என்றவனுமே மனைவியை வெகுவாக தேடினான்.

“ஏதே! எங்களுக்கு புரியலை, அதை நீங்க பார்த்தீங்க?” என்றவள், “யோவ் மாமூ எங்களுக்கு புரிந்ததால தான் கேட்டோம். நான் என்ன எனக்காக கேட்டேன்னா நினைச்சீங்க?” என்றாள் வெட்க புன்னகையோடு.

அவள் அப்படி சொல்லவுமே, “அடியே ராங்கி, அடங்கவே மாட்டியாடி நீ?” என்றான் பின்னந்தலையை கோதியபடி.

“நான் ஒன்னும் அடங்க மாட்டேன்னு சொல்லலையே?! உன்னையும் அடக்க வான்னு தான் சொல்றேன் நீ தான் வர மாட்டேங்குற..” என்று சடைத்துக் கொண்டாள்.

“ஹே கிணத்து தண்ணியை ஆத்து வெள்ளமா அடிச்சுட்டு போகப்போகுதுன்னு இத்தனை நாள் காத்திருந்தவன் இன்னும் ஒரு வாரம் இருக்க மாட்டேனா?”

“ஆனா எனக்கு தூக்கம் வரலையே மாமூ..”

“உன் வீட்ல உன் ரூம்ல தூக்கம் வரலையா?”

“ஆமா இத்தனை நாளா ஆர்.பியா இருந்தேன் இப்போ மிசஸ் முரளியா மாறின பிறகு தூக்கம் வரல”

“அப்போ நான் வரட்டுமா?”

“நீ வர போறியா? நிஜமாவா மாமூ?”

“ஆமா மிசஸ் முரளிக்கு தூக்கம் வரலைன்னா தூங்க வைக்க வேண்டியது என் பொறுப்பு தானே?! அதான் வரேன்..” என்றான் உதடுகளுக்குள் புன்னகைத்தபடி.

“யோவ்! அதுக்கு நீ வரவே வேண்டாம் போய்யா..” என்று ராகவி முறுக்கி கொள்ள சத்தமாக சிரித்த முரளி, “பின் பக்கம் வாடி. சொல்றேன்..” என்றான்.

தன் அறையில் இருந்து மெல்ல வெளியில் வந்த ராகவி கூடத்தில் உறங்கிக் கொண்டிருந்த சொந்தங்களை பார்த்தாள்.

அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

சத்தமின்றி சென்றவள் பின் பக்க கதவை திறந்து கொண்டு செல்ல முரளி அங்கிருந்த கல்மேடையில் அவளுக்காக காத்திருந்தான்.

கதவை சத்தமின்றி தாளிட்டு விட்டு தன் எதிரே வந்து நின்றவளை இழுத்து மடியில் அமர்த்தி இறுக்கமாக கட்டிக்கொண்டவன் முகத்தில் தவழ்ந்தது அவள் சூடியிருந்த மலர்கள்.

மலர்களில் முகம் புதைத்தவன் அணைப்பு கூடுதல் இறுக்கம் பெற, “மயக்குறடி!!” என்றான் கிறக்கத்தோடு.

“அப்போ நீ மயங்கிட்டியா மாமூ?” என்றவள் அவன் புறமாக திரும்பி, “அச்சோ இப்போ தெய்வ குத்தம் ஆகிடாதா?” என்றாள் சிரிப்போடு.

“ஏத்தம் தான்டி உனக்கு! சும்மா இருந்தவனை சீண்டி உசுப்பேத்தி விட்டுட்டு பேச்சா பேசுற?” என்று இருவிரலால் அவள் இதழ்களை பிடித்தவன் ஆக்கிரமிப்பில் பேச்சை மறந்திருந்தாள் ராகவி.

முதல் இதழ் பரிமாற்றம்!!

இருவரையும் வேறு உலகிற்கு அழைத்து செல்ல முதல் நெருக்கம் இருவரின் இதயத்தையும் ஒரே தாளத்தில் துடிக்க வைத்து முத்த சஞ்சாரத்தில் மூழ்கி திளைக்க செய்திருந்தது.

என்றும் இல்லாத அந்த நெருக்கத்தில் இருவரின் மனமும் தத்தளித்தது. காலமும் சூழலும் மறந்து, ஒருவரின் இருப்பை மற்றொருவர் மட்டுமே உணர்ந்தபடி அந்த நொடியில் கரைந்து போயிருந்தனர்.

ராகவியின் பேச்சுக்கு தற்காலிகமாக விடுமுறை அளித்தவன் உதடுகள் அவள் பின்னுங்கழுத்தில் குறுகுறுப்பு மூட்ட “மீசை குத்துது மாமூ..” என்றாள் சிணுங்களாக.

“இங்க மட்டுமில்ல இனிமேல் எல்லா இடத்துலயும் குத்தும், பழகிக்கோ..” என்றவன் அவள் முகத்தை அள்ளிக்கொண்டு முத்தத்தால் அவளை நனைத்து மீண்டும் அவளிதழ்களை சேர்ந்து தன் முத்தப்படலத்தை அரங்கேற்றினான்.

கணவனின் இதழ் முற்றுகையில் மயங்கிய ராகவி தெளிந்தது என்னவோ சட்டென பின்புறத்தில் பரவிய வெளிச்சத்தில் தான்.

யாரோ பின்புறம் வருவதற்காக விளக்கு போட்டு இருந்தார்கள் அதை கண்ட முரளி “யாருடி?” என்றான் கிசுகிசுப்பாக.

“தெரியலையே மாமூ”

“சரி நான் மாடிக்கு போறேன். நீ போய் கதவ திற..”

“ஏன் நான் உன் பொண்டாட்டி தானே?! பக்கம் இருந்தா என்னவாம்?” என்றவளின் தலையை சீர் செய்தவன்,

“மாமி இல்ல ஆயாவா இருக்க போறாங்க ராகா.. நம்மளை சேர்த்து பார்த்தா அவங்க மனசு சங்கடப்படும்..”

“ஏன்?”

“வேண்டுதல்னு சின்ன சிறுசுகளை பிரிச்சு வச்சுட்டோம் என்று தான்!!”

“சரி மாமூ, குட் நைட்” என்று அவன் கன்னத்தில் முத்தமிட போகவும் அதை இதழ்களுக்கு மாற்றியவன்,

“இன்னுமாடி புருஷனுக்கு முத்தம் எப்படி கொடுக்கணும்னு கத்துக்காம இருக்க?” என்று ஆழ்ந்து முத்தமிட்டு சிரிப்போடு விடுவித்தவன், “குட் நைட்!! நல்லா தூங்கி எழு, நாளைக்கு கோவிலுக்கு கிளம்பனும்..” என்றான்.

ராகவியும் அவனுக்கு விடை கொடுத்து கதவை திறக்க நல்லவேளை அங்கே அவளுடைய பெரிய பாட்டி தான் இருந்தார்.

“என்ன த்தா, இந்நேரத்துக்கு கதவை சாத்திட்டு என்ன பண்ற?”

“என் துணி எடுக்க வந்தேன் ஆயா. இந்த கதவு காத்துக்கு பலமா சாத்திக்கும், சத்தம் வரும்.. உங்க தூக்கம் கெட கூடாதுன்னு தான் தாழ்ப்பாள் போட்டேன்..”

“நீ எதுக்கு இங்க வந்த?”

“பாத்ரூம் போகணும்..” என்றவரை கைப்பிடித்து அழைத்து சென்றாள்.


அடுத்த நாள் காலை இருவரையும் அழைத்துக் கொண்டு குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கலிட்டு வந்தவர்கள் அன்று மாலையே திருப்பதிக்கு கிளம்பி விட்டனர்.

பாரிநேயனும் தேவமங்கையும் மகன் மருமகளோடு சேர்ந்து கொண்டனர்.

அடுத்த நான்கு நாட்கள் சொல்லி வைத்தது போல திருத்தணி வரையிலும் இருந்த அனைத்து வேண்டுதல்களையும் நல்ல முறையில் முடித்திருந்தனர்.

அதன் பின்னரே மறு வீட்டு அழைப்பு வைத்ததால் இத்தனை நாளும் முரளி இங்கேயே இருக்க வேண்டியதாகி போனது.

இத்தனைக்கும் சைவ விருந்தாக இருந்தாலும் பரவாயில்லை அடுத்த நாள் வைத்துக் கொள்ளலாம் என்று பார்த்தசாரதி சொல்ல முரளி தான் மறுத்து விட்டான்

“இதுவும் நம்ம வீடு தானே மாமா. ஒரு வாரம் இங்க இருக்குறதால என்ன ஆகிட போகுது?”

“இல்லை மாப்பிள்ளை உங்களோட வேலை..”

“அது எங்கிருந்தாலும் பார்க்க முடியும் மாமா. ஏற்பாடு பண்ணிட்டேன்.. ஆனா அப்பாவுக்கு எங்க ரெண்டு பேரோட ஒவ்வொரு விசேஷத்தையும் கோலாகலமா செய்யணும்னு ஆசை அதனால மெதுவாவே பார்த்துக்கலாம்..” என்று சொல்லி விட்டான்.

ஒரு வாரம் மாமியார் வீட்டில் என்று சொல்லிக் கொண்டாலும் அவன் அங்கு தங்கியது என்னவோ இரண்டு நாட்கள் தான். மற்ற நாட்களில் எல்லாம் கோவிலுக்கு பயணம் செய்து கொண்டு இருந்தனர்.

அன்று மறுவீட்டு அழைப்பிற்காக ஊரே பார்த்தசாரதியின் வீட்டில் குழுமி இருக்க பாரிநேயன் தன் மனைவி மற்றும் சொந்தங்கள் சூழ அங்கு வந்து சேர்ந்தார்.

சாரதியும், பரிமளாவும் அவர்களை வாசலில் நின்று வரவேற்று உபசரித்தனர்.

கிட்டத்தட்ட ஏழு கிடா வெட்டி ஊருக்கே பிரியாணி, கோழி வறுவல், மீன், முட்டை என்று அசைவத்தின் அத்தனை வகைகளையும் பரிமாறி இருந்தார்.

வயிறார உண்டவர்கள் மணமக்களை மனதார வாழ்த்தி விட்டு செல்ல இருவரும் முரளியின் வீட்டிற்கு பயணப்பட்டனர்.

ஒற்றை மகளான ராகவி அங்கிருந்து கிளம்பும் போது சாரதிக்கு தன்னை அறியாமல் கண்கள் கலங்கி குரல் உடைந்து விட்டது.

“என்னப்பா இது? நான் என்ன ஊரு விட்டு ஊரா போக போறேன்?! சென்னையில இருந்த மாதிரி இல்லை பக்கத்துல தான் அத்தை வீடு. நீங்க எப்போ கூப்பிட்டாலும் நான் வந்துடுவேன், உங்களுக்கு என்னை எப்போ பார்க்க தோனினாலும் நீங்க வந்துடலாம்..” என்று ராகவி தான் அவரை தேற்றினாள்.

அவரை தேற்றியது மட்டுமல்ல, “இனிமேலாவது அம்மாவா நல்லா பாத்துக்கோங்க ப்பா. என் அப்பா எனக்கு நல்ல அப்பாவா இருந்தா மட்டும் போதாது என் அம்மாவுக்கு நல்ல கணவனாகவும் இருக்கணும்னு ஆசைப்படுறேன்…” என்று அறிவுறுத்தவும் செய்தாள்.

“நிச்சயமா இன்னொரு முறை அந்த தப்பு செய்ய மாட்டேன் தங்கம்மா.. அப்பா நீ எதிர்பார்க்கிற மாதிரி இருப்பேன்..”

“என்னோட எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இருக்கிறதை விட அம்மாவோட எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி நீங்க இருக்கிறது தான் எனக்கு பிடிக்கும் ப்பா..” என்றிட புன்னகையோடு மகளுக்கு விடை கொடுத்தார்.

பண்ணையில் வேலை செய்பவர்கள் அனைவருமே மணமக்களை தடபுடலாக வரவேற்க, அனைவருக்கும் பதில் சொல்லியே சோர்ந்து போனாள் ராகவி.

ஒருவழியாக அனைவரும் அவரவர் பணிக்கு திரும்ப ராகவி புடவையை மாற்ற சென்றாள்.

“எங்கடி போற?”

“புடவை மாத்தறதுக்கு அத்தை..”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம், ராத்திரி வரைக்கும் இப்படியே இருடி” என்றார் மங்கை

“இப்படியே என்றால் எப்படி?! அம்மன் சிலை மாதிரி இவ்வளவு நகையும் போட்டுட்டு இருக்க சொல்றியா த்தை?”

“இருக்கலாம், தப்பில்ல..” என்றவர் அவளுக்காக தான் வாங்கி வந்திருந்த நகைகளையும் அணிவிக்க, “இதெல்லாம் டூ மச் அத்தை..” என்றாள்.

பாரி இருவரையும் புன்னகையோடு பார்த்திருப்பதை கண்டவள், “வந்த அன்னைக்கே மாமியார் கொடுமை படுத்த ஆரம்பிச்சுட்டாங்க இதையெல்லாம் தட்டி கேட்க மாட்டீங்களா மாமா?” என்று அவரிடம் புகார் அளித்தாள்.

“அபிக்கு வாங்கும் போது உனக்கும் சேர்த்து வாங்கினது ராகவி. எங்களுக்கு அபி வேற நீ வேற இல்லை.. இன்னைக்கு ஒரு நாள் தானே! எனக்காக போட்டுக்கு மாட்டியா?”

“சரி, உங்களுக்காக போட்டுக்கறேன் ஆனா அதுக்காக நீங்க இருபது வருஷம் எங்க அத்தையை பிரிஞ்சு இருந்ததை மன்னிப்பேன்னு மட்டும் நினைக்காதீங்க..”

“அப்போ நீ மன்னிக்கணும்னா நான் என்ன பண்ணனும் சொல்லுமா? செய்யறேன்..”

“இருபது வருஷம் எங்க அத்தை மிஸ் பண்ணின எல்லாத்தையும் இன்னும் ரெண்டு வருஷத்திலேயே ஈடு கட்டணும்..”

“எப்படி?”

“அத்தை ஆசைப்படற இடத்துக்கெல்லாம் அவங்களை கூட்டிட்டு போறீங்க, அவங்க என்ன எல்லாம் விருப்பப்படுகிறார்களோ எல்லாத்தையும் வாங்கி கொடுக்கறீங்க அத்தையை விட்டு இங்க அங்கன்னு எங்கேயுமே நகரக் கூடாது..”

“ஏன்டி, கிழவியை தூக்கி மனையில வை என்கிற கணக்கா என்னடி பேசிட்டு இருக்க?”

“என்ன பேசிட்டேனாம்?”

“நீ சொல்ற மாதிரி நாங்க ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருந்தா நம்ம பண்ணையும், கம்பெனியும் என்ன ஆகிறது?” என்றார் மங்கையும் சிரிப்போடு.

“அதை பத்தி நீ ஏன் கவலைப்படுற? நாங்க தான் இருக்கோமே! அபி இல்லையேன்னு யோசிக்காத அத்தை, அவளோட வீட்டுக்காரர் வழக்கம் போல அபி இங்க வந்து தன்னோட வேலையை பார்க்கிறதுக்கு ஒத்துக்கிட்டார்..”

“அப்படியா? இது எப்போ?” என்றவர்கள் மகளைப் பார்த்தனர்.

“ஆமா ம்மா, நான் அவர் கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே இதை பத்தி பேசிட்டேன். அவரும் காலையில 10 மணிக்கு போயிட்டு சாயந்திரம் அவர் வீடு வருவதற்கு முன்னாடி வந்துட சொல்லிட்டாரு..”

“அதனால தினமும் 10 மணியிலிருந்து நாலு மணி வரைக்கும் நான் இங்க தான் இருப்பேன். அத்தை மாமாவும் சம்மதம் சொல்லிட்டாங்க..” என்றதில் அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி.


“கேட்டீங்க தானே! நாங்க மூணு பேரும் இருக்கோம். போதாததுக்கு சங்கீதா, நளினி இருக்காங்க.. நாங்க பார்த்துக்க மாட்டோமா?!” என்றாள் ராகவி.

“நீங்க பண்ணையை பாத்துக்கிட்டா நான் எப்படிடி என் பேர புள்ளைங்களை கொஞ்சறது?” என்றபடி அவளுக்கு பாலை ஆற்றி கொடுத்தார்.

“அதெல்லாம் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு பார்த்துக்கலாம். பேர புள்ளையை வளர்க்கிறேன்னு ஏதாவது டேக்கா கொடுக்க நினைச்ச அவ்வளவுதான் பார்த்துக்கோ..” என்று மிரட்டவுமே, “ராகவி” என்றார் மங்கை குரல் தழுதுழுக்க.

“அத்தை, என்னதிது?” என்று அவர் கண்ணீரை துடைத்தவள், “நிஜமா தான் சொல்றேன். அபி கர்ப்பமானால் அவளை யாரு பார்ப்பான்னு நீ யோசிக்க வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்..”

“இந்த வயசுல உங்க சந்தோஷம் தான்டி எங்க சந்தோஷம்..”

“ஆனா என் சந்தோஷம் உங்க இரண்டு பேரோட சந்தோஷத்துல தான் இருக்கு அத்தை.. எனக்காக கொஞ்ச நாள் நீங்களும் மாமாவும் எந்த பொறுப்பும் எடுக்காம உங்களுக்கான வாழ்க்கையை வாழனும்.. ப்ளீஸ்” என்றிட கண்ணீரோடு தலை அசைத்தார்.

“முதல் முறையா மருமக வீட்டுக்கு வந்து இருக்கேன் ஆனா இப்படி அழுது வடியுறீங்க.. ஏன் நான் வந்தது பிடிக்கலையா?” என்றவள் தலையிலேயே ஒன்று வைத்தவர்,

“எப்படித்தான் உன்னை என் மகன் சமாளிக்க போறானோ?!” என்றார் மங்கை சிரிப்போடு.

“நல்ல வேலை நீயே ஞாபகப்படுத்தின, எங்க அத்தை என் புருஷன்?”

“ஏன்டி அவனுக்கு வேலை கழுதை இல்லையா? இங்கேயே உட்கார்ந்திருக்க முடியுமா?”

“அப்ப சரி..” என்றாவள் முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு கிளம்பினாள்.

“எங்கடி போற?”

“எங்களுக்கு மட்டும் வேலை கழுதை இல்லையா? அதை பார்க்கிறதுக்கு தான் போறேன்..” என்று கம்பெனிக்கு கிளம்ப அவளை இழுத்து பிடித்த மங்கை,

“ஏன்டி வந்த முதல் நாளே மருமகளை வேலை செய்ய வைக்கிறேன்னு ஊரே என்னை பேசறதுக்கா? கொஞ்சமாவது கல்யாண பொண்ணா லட்சணமா இருடி!!”

“அப்படின்னா இப்போ நான் லட்சணமா இல்லைன்னு சொல்றியா?” என்று மங்கையிடம் வாயடித்தபடி இரவு உணவு செய்ய அவருக்கு உதவினாள்.

*************

மகனையும் மருமகளையும் பூஜையறைக்குள் அழைத்து சென்ற மங்கை “கும்பிட்டுக்கோங்க..” என்று சொல்ல வணங்கியவர்கள் பாரி மங்கையிடமும் ஆசி பெற்றனர்.

“அண்ணி பால்..” என்று அபிராமி கொண்டு வந்து கொடுக்க இனிய படபடப்புடன் பாலை வாங்கியவள் முரளியோடு அவன் அறைக்கு சென்றாள்.

கதவை தாழிட்டு திரும்பிய முரளி, அறையில் ராகவியை பார்க்க அவளோ சிறு பதட்டத்தோடு, கைகளில் இருந்த பால்கோப்பையை மேசையில் வைத்து கொண்டிருந்தாள்.

ராகவி தலையை குனிந்து நின்றிருந்த விதம் அவன் முகத்தில் புன்னகையை தோற்றுவிக்க, நடுங்கும் அவள் விரல்கள் மீது ரசனையாய் அவன் பார்வை படிந்தது.

முரளியின் ஒவ்வொரு அடிக்கும் ராகவியின் இதயத் துடிப்பு கூடிக் கொண்டே போனது.

“அங்கேயே நில்லு மாமூ” என்றவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.

“என்னடி, என்னைக்கும் இல்லாத திருநாளா உன் கண்ணுல இவ்ளோ பயம்?” என்றவன் குரலில் குறும்பு கூத்தாடியது.

ஆனால் பார்வையோ பட்டுப்புடவை சரசரக்க, தலை கொள்ளா மல்லிகை பூக்களோடு, கைநிறைய சிவப்பும் தங்க நிறமும் கலந்திருந்த கண்ணாடி வளையல்களை மேலும் கீழுமாக ஏற்றி இறக்கி கொண்டிருந்தவளின் வெட்கத்தில் லயித்தது.

முரளியை தவிர்த்து அறையினுள்ளும் வெளியிலும் சதிராடிய ராகவியின் பார்வை ஒருகட்டத்தில் அவனோடு கலந்தது.

முரளியின் பார்வை அவளை பந்தாட, “எதுக்கு மாமூ இப்படி பார்க்கிற?” என்றாள் வெட்க புன்னகையோடு.

“எப்படி பார்க்கிறேன்?” என்றவனின் குரல் அவள் செவியோடு உரச திடுக்கிட்டு அவன் புறம் திரும்பியவள், “முழுங்குற மாதிரி பார்க்கிற”

“முழுங்கினாலும் தப்பில்லை” என்று சிரிப்போடு சொன்னவன், “பார்க்காம இருக்க முடியல...” என்றான் ரசனையோடு.

“ஏன்? இவ்வளவு நாளா தினமும் பார்த்துட்டு தானே இருந்த?”

“அது வேற... இது வேற...” என்றவன் கரங்கள் அவள் இடையோடு உறவாட கணவனின் ஸ்பரிசத்தில் நெகிழ்ந்திருந்த ராகவியை மெல்ல தன் நெஞ்சோடு சாய்த்து கொண்டான் முரளி.

“என்ன வேற?”

“அப்போ என் ராகா!! இப்போ என் பொண்டாட்டி!! ஆனா வார்த்தைக்கு வார்த்தை என் கூட வாயாடுற ராங்கியை தான் காணோம்.. நீ பார்த்தியாடி?” என்று மனைவியை தன் புறமாக திருப்பி அவள் நெற்றி முட்டி கேட்டான்.

“எனக்கும் தெரியலை மாமூ” என்றவள் கண்களில் இருந்த வெட்கம், தயக்கம், மெல்லிய அச்சம் மட்டுமின்றி இனம் புரியா உணர்வுகள் அவனை பித்தனாக்கியது.

“அழகி!!” என்றவன் வார்த்தையில் ராகவியின் கன்னங்கள் இன்னும் சிவந்து போயின.

“நீ வெட்கப்படுறதை பார்க்க எப்படி இருக்கு தெரியுமா?” என்று அவள் முகத்தை மென்மையாய் பற்றி நிமிர்த்தினான்.

“நான் எதையும் தெரிஞ்சுக்க விரும்பலை போ மாமூ..” என்றாள் சிணுங்கலாக.

“ஹே, என்னடி அநியாயத்துக்கு வெட்கப்படற? நீ இப்படியே வெட்கபட்டுட்டு இருந்தா என் நிலைமை என்னாகுறது...” என்று சிரிப்போடு கேட்க, ஏனோ ராகவியால் என்ன முயன்றும் இன்றைய பதற்றத்தை தவிர்க்க முடியவில்லை.

“நிஜமாவே நீ என் ராகா தானா? இல்லை க்ளோனிங்ல என் மாமனார் இன்னொருத்தியை அனுப்பிடாரா?” என்றவனின் விளையாட்டில் இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

“இதோ இதுதான் என் ராங்கி” என்று முரளி சிரிக்கவும், “மாமூ...” என்று அவன் தோளில் மெதுவாக அடித்தாள்.

அவள் கையை பிடித்து தன் கரங்களுக்குள் அடக்கியவன், “நீ கோபப்பட்டாலும் பரவல்ல ஆனா தேங்க்ஸ் ராகா...” என்றான்.

“எதுக்கு?”

“ஊரே முரடன்னு சொன்ன போதும் என்னை நம்பினதுக்கு, என்னை இந்தளவு காதலிச்சதுக்கு, எவ்வளவு பிரச்சனை வந்தாலும் என்னை விட்டுப் போகாம இருந்ததுக்கு, இப்போ என் வாழ்க்கைக்குள்ள வந்ததுக்கு…” என்றவன் குரலில் இருந்த நெகிழ்ச்சி ராகவியை தொற்றிக்கொள்ள,

“லவ் யூ மாமூ!! ஆனா இனி உனக்கு தேங்க்ஸ் சொல்ல தோணினா லவ் யூ சொல்லு” என்ற மறுகணமே அவள் இதழ்களை வேகமாக சிறை பிடித்தான்.

உயிரை ஊடுருவி வேர் தீண்டும் ஆழ் முத்தம்!

நீண்ட நேரம் கழித்து அவள் மூச்சு காற்றுக்கு ஏங்கியதில் அவளை விட்டு முரளி பிரியவும், “என்ன மாமூ பண்ணி வச்சிருக்க?” என்றாள் வேக மூச்சுக்களை எடுத்தவாறு தன் இதழ்களை ஆராய்ந்து...

“நீ தானேடி லவ் யூ சொல்ல சொன்ன, அதுதான் என் ஸ்டைல்ல சொன்னேன்..” என்றதில் அவள் வாயடைத்து போய் பார்க்க விளக்கை அணைத்தவன் கரங்களுக்குள் அடங்கியவளிடம் முரளி தன் பேரன்பை வார்த்தைகளால் அல்லாமல் உணர்வுகளால் புரிய வைக்கத் தொடங்க அவன் காதலில் முழுதாய் கரைந்து திளைத்து கொண்டிருந்தாள் ராகவி.

அந்த நொடியிலிருந்து அவர்களின் வாழ்க்கை ஒரு புதிய அத்தியாயத்திற்குள் அடியெடுத்து வைத்தது.

இருவரின் காதலும் இனி வார்த்தைகளில் சொல்லி அறியப்பட வேண்டியதாய் இல்லை.

சின்ன சின்ன அனுசரணையில், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பார்வையில், சிறு அணுகலில், உரிமையான சிணுங்களில், காரணமில்லாத புன்னகைகளில், தோள் சாயும் நிம்மதியில் என வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் அவர்களின் காதல் உயிர்பெற்று வாழத் தொடங்கியது.

வார்த்தைகளால் வரையறுக்க முடியாத நேசத்தில் இருவரின் இதயமும் ஒன்றோடு ஒன்று கலந்திட, அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அன்பெனும் இனிய ராகத்தை இசைக்க தொடங்கியது.


சுபம்

கதை நிறைவடைந்தது. வாசித்தவர்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
Top Bottom