• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆழியே மெளனம் ஏனோ - 5

Vishakini

Moderator
Staff member
மௌனம் -5

சிந்துஜாவிற்கு சற்று நேரம் ஒன்றுமே புரியவில்லை.

மயங்கிக் கிடந்த தன் அத்தையை பார்ப்பதா, ஃபோனில் உமா, உமா என்று கத்தும் மாமனாரிடம் பேசுவதா, இல்லை தன் தம்பிக்கு இந்த விஷயத்தை சொல்வதா என்று பதறி தவித்தவள்,

முதலில் தன் மாமாவிடம்,”மாமா… அத்தை மயக்கம் போட்டுட்டாங்க. நான் இங்க அத்தையைப் பார்த்துக்கிறேன் மாமா. நீங்க தனு எங்கனு பாருங்க மாமா. விகாஷையும் கூப்பிட்டுக்கோங்க.” என்றவள், உமாவிற்கு மயக்கத்தை தெளிவிக்க முயன்றாள்.

‘நல்லவேளை யுகாவை தோட்டத்தில வச்சுக்க சொல்லி சரசக்காவை அனுப்பினோம். இல்லைன்னா யுகா குட்டி பயந்திருப்பான். வீட்டு விஷயம் சரசக்காவுக்கும் தெரிய வந்திருக்கும்.’ என்று எண்ணியவாறே கண்களைத் தண்ணீரால் துடைத்தாள்.

சற்று நேரத்திலே உமா கண் விழித்தவர், “சிந்து! நம்ம தனுவுக்கு எதுவும் ஆகிருக்காதுல்ல. ஏதாவது ஆக்ஸிடென்ட் ஆகிருக்குமோ. இல்லை யாராவது கடத்திருப்பாங்களோ! எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” என்று கண் கலங்கினார்.

“அத்தை! எதுவும் ஆகிருக்காது. மாமாவும், விக்கியும் தனுவை தேட போயிருக்காங்க. இங்க எங்காவது இருக்காளன்னு நாமளும் தேடலாம் அத்தை.பயப்படாதீங்க.”என்று சிந்துஜா கூற.

வேகமாக எழுந்த உமாவோ, பூஜையறைக்குச் சென்று கடவுளை சரணடைந்தார்.

சிந்துஜாவிற்கோ,’ தன் வீட்டிற்கு இந்த விஷயத்தை தெரிவிப்பதா? இல்லை வேண்டாமா?.’ என்று குழப்பிப் போய் உட்கார்ந்து இருந்தாள்.

வேந்தனும், விகாஷும் பைத்தியக்காரர்கள் போல தெரு, தெருவாக தன்ஷிகாவை தேடிக் கொண்டிருந்தனர்.

நேரமாக ஆகப் பதட்டமானது.

வேந்தன், “விக்கி! எனக்கென்னவோ ரொம்ப பயமா இருக்கு. நேரம் வேற ஆகிட்டே இருக்கு. மண்டபத்துக்கு வேற கிளம்பணும். இப்பவே உங்க மாமா கிட்ட சொல்லுவோம்.” என்றவர், தன்னுடைய போனிலிருந்து அகிலனுக்குத் தான் அழைத்தார்.

“மச்சான்!” என்று அவர் குரல் கம்ம அழைக்க.

“என்ன மாமா? எங்க இருக்கீங்க? என்னாச்சு?” என்று அகிலன் வினவ.

“அது வந்து ‌…” என்று தடுமாறினார் வேந்தன்.

“என்ன மாமா? எதுவும் பிரச்சனையா? எங்க இருக்கீங்க? வீட்ல தானே. நான் உடனே வர்றேன்.” என்று அகிலன் கூற.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன்ஷிகா காணாமல் போன விஷயத்தைக் கூறினார்.

“என்ன மாமா சொல்றீங்க? தனுவை எப்போதிலிருந்து காணோம்.” என்று வினவ.

“காலையில காலேஜ் மேமுக்கு பத்திரிகை வைக்கிறேனு போனா. ஆனால் இன்னும் வரல.”

“இவ்வளவு நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க.”

“நானும், விக்கியும் தேடிட்டோம். எங்கேயும் காணும்.” என்றவரது குரல் நடுங்க.

“நீங்க பயப்படாதீங்க மாமா. முதல்ல நம்ம ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க. கம்ப்ளைன் கொடுப்போம்.” என்று அகிலன் கூற.

“போலிஸூக்கு போகணுமா?” என்று தயக்கத்துடன் வேந்தன் வினவ.

“நம்ம தனுவுக்கு என்னாச்சுனே தெரியல. நம்ம லேட் பண்ற ஒவ்வொரு நொடியும் அவளுக்கு ஆபத்து. புரிஞ்சுக்கோங்க மாமா.” என்றவர், இனியனிடமும் நடந்ததைக் கூறியவர், “நான் போலிஸ் ஸ்டேஷனுக்கு போயிட்டு வர்றேன். நீ வீட்டுக்கு போ. செழியனைப் பார்த்துக்கோ.” என்றுக் கூற.


“இல்லண்ணா. நானும் உங்களோட வர்றேன்.”என்றார் இனியன்.

“நான் பார்த்துக்கிறேன் இனியா. நீ வீட்டுக்கு போ. அங்கே விவரம் இன்னும் யாருக்கும் தெரியாதுன்னு நினைக்கிறேன். யாராவது ஒருத்தங்க அங்க இருந்தா தான் சரியா இருக்கும்.”என்று காவல் நிலையத்திற்கு தம்பி வருவதை தவிர்க்க நினைத்தார் அகிலன்.

‘அங்கு கேட்கப்படும் தவிர்க்க முடியாத கேள்விகள் தம்பியின் மனதை வருத்தச் செய்யும்.’ என்று எண்ணிய அகிலன் காவல் நிலையத்திற்கு செல்ல.

அங்கே முகம் கறுக்க, வேந்தனும், விகாஷும் நின்றிருந்தனர்.

பிறகு மூவரும் உள்ளே சென்றனர்.

அவருடன் போலிஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார்.

அங்கு அவர்களுக்குத் தெரிந்த காவல் அதிகாரியே இருக்க. தன்ஷிகா காணாமல் போன விவரத்தை தெரிவித்தனர்.

அவரோ, “ உங்கப் பொண்ணு காதல்,
கீதல்னு ஏதாவது இருக்குமோ.” என்று வினவ.

“சார்! என் பொண்ணு அப்படி எல்லாம் கிடையாது. காதலிச்சா என் கிட்ட வந்து சொல்லிருப்பா. அவளுக்கு இன்னும் அஞ்சு நாள்ல கல்யாணம். அவ எவ்வளவு சந்தோஷமா இருந்தத் தெரியுமா?” என்று வேந்தன் உணர்ச்சி வசப்பட.

“டென்ஷனாகதீங்க சார். இந்தக் காலத்து பொண்ணுங்க கல்யாணம் வரைக்கும் கமுக்கமா இருந்துட்டு, கல்யாணத்துக்கு முன்னாடி பணம், நகையை எடுத்துட்டு கம்பி நீட்டிடுறாங்க . எதுக்கும் நீங்க வீட்ல போய் நல்லா செக் பண்ணிப் பாருங்க.” என்றதைக் கேட்டு கோபமடைந்த விகாஷ், ஏதோ கூற வர.

அகிலன் அவனைத் தடுத்தார்.

“அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். இப்போ என்ன செய்றது. நாங்க கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுக்கட்டுமா.” என்று அகிலன் வினவ.

அப்பொழுது தான் அவரது முகத்தைப் பார்த்த காவல் அதிகாரியோ, “சாரி சார். உங்களை கஷ்டப்படுத்தணும்னு சொல்லல. யதார்த்ததைத் தான் சொன்னேன். இன்னைக்கு ஒரு நாள் வெயிட் பண்ணுங்க. நானும் அன்அஃபியலா தேடுறேன்.” என்று அவர்களை அனுப்பி வைத்தார்.


சோர்வுடன் வீட்டிற்கு வர. கேட் கதவைத் திறந்து விட்ட வாட்ச்மேன், “சார்! பெரிய வீட்டிற்கு எல்லோரையும் வரச் சொன்னாங்க.” என்றார்.

அங்கோ கம்பீரமாக இருக்கும் லட்சுமியோ அழுதவாறு உமாவையும், சிந்துவையும் திட்டிக் கொண்டிருந்தார்.

“எங்கேயாச்சும் கல்யாணம் முடிவான பொண்ண தனியாக வெளியே விடுவாங்களா? இங்க எத்தனை பேரு ஆம்பளைங்க இருக்காங்க. உன் புருஷனுக்கு வேலை இருந்தா இங்க உள்ளவங்கக் கிட்ட சொல்றது. சிந்து நீயாவது பொறுப்பா இருந்து இருக்க கூடாதா? உன் புருஷனை அனுப்பி இருக்கலாம். இல்லையா நம்ம செழியனை அனுப்பிருக்கலாம்‌‌ ஊருல உள்ளவங்க எல்லாம் ஏற்கனவே நம்ம வீட்டை பார்த்து கண்ணு வச்சுக்கிட்டே இருக்காங்க‌. என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.”என்று புலம்ப.

அங்கிருந்த மற்ற யாரும் வாயைத் திறக்கவே இல்லை. செழியன் முகம் இறுக அமர்ந்திருக்க.

கவிதாவோ திக்பிரமை பிடித்தாற் போல் இருந்தார். அவரது கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டு நின்றார் சுமதி.

அங்கு நடப்பதையெல்லாம் பார்த்து அழுதுக் கொண்டிருந்த நித்யமயூரியுக்கு ஆதரவாக ஆழினியும், மதுவும் நின்றுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது தான் கார் வர, வேகமாக எழுந்து தன் கணவரிடம் வந்தார் உமா.

“என்னங்க! நம்ம பொண்ணு கிடைச்சுட்டாளா?”என்று பரிதவித்தவாறு உமா வினவ.

பதில் சொல்ல முடியாமல் மௌனமாக நின்றார் வேந்தன்.

“போலிஸ் ஸ்டேஷன்ல பர்ஸ்னலா தேட சொல்லிட்டு வந்திருக்கோம்.”

“என்ன சொன்னாங்க? என் பொண்ண கண்டு பிடிச்சுடுவாங்களாம்.”என்று வினவ.

“நகை, பணம் எல்லாம் இருக்கான்னு செக் பண்ணுங்கனு சொல்றாங்க.” என்று அமகிலன் கூற.

“அண்ணா பார்த்து பேசுங்க! என் பொண்ணுப் பத்தி எப்படி இப்படி எல்லாம் பேச மனசு வருது. அவ குழந்தை. என் பொறந்த வீட்ல கட்டிக் கொடுக்கணும்னு தவமா, தவமிருந்து பெத்தேன். ஐயோ! நீ இன்னும் என்னவெல்லாம் கேட்க வேண்டிருக்கு.” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் உமா.

“உமா! போலீஸ் அப்படிதான் கேள்வி கேட்பாங்க. நாலு விதமா தான் யோசிப்பாங்க. எதுக்கும் ஒரு தடவைப் பாருடா.” என்று அகிலன் கூற.

“அந்த போலீஸுக்கு என் பொண்ணைப் பத்தி என்னத் தெரியும். இந்த வீட்டில தானே அவ வளர்ந்தா.அவ எப்பவுமே இருக்கிற இடம் தெரியாம அமைதியா இருப்பாளே. அவளை பத்தி இப்படி பேச உங்களுக்கு எப்படித் தான் மனசு வருதோ.”என்று புலம்பியவாறு அழுதுக் கொண்டிருந்தார்.

அகிலன் மறுபடியும் ஏதோ கூற முயல.

சுமதி பார்வையாலே,”வேண்டாம்!” என்பது போல் தலையசைத்தார்.

ஆளாளுக்கு ஒரு மூலையில் சுருண்டு கொண்டிருக்க. இங்கு நடப்பதற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் மாலையும் கழுத்துமாக ஒருவனது தோளில் சாய்ந்தவாறு போட்டோ அனுப்பிருந்தாள் தன்ஷிகா.

இவர்கள் குடும்பத்திற்கான வாட்ஸப் குரூப்பிற்கு தான் அனுப்பியிருந்தாள்.

முதலில் அதை செழியன் தான் பார்த்தான். பார்த்ததும் அவன் முகம் முழுவதும் கோபம் தாண்டவமாட, தன் கையில் இருந்த ஃபோனை தூக்கிப் போட்டான்.

அவனது கோபத்தைப் பார்த்து எல்லாரும் பதற.

“என்னடா செழியா? என்னாச்சு? ஏன் இவ்வளவு கோபம்.”என்று வினவியவாறு சிந்துஜா வர.

“ம்! உன் ஃபோன்ல பாருக்கா. நம்ம ஃபேமிலி க்ரூப்ல உன் நாத்தனார் ஃபோட்டோ அனுப்பி இருக்கா.” என்று கத்தி விட்டு, நகர்ந்தவன், மயூரிக்கு அருகே இருந்த ஆழினியின் மேல் மோதச் சென்றான்.

அவளோ பயந்து நகர.
அவளது விலகலின் இன்னும் எரிச்சலானவன் அவளை முறைத்துவிட்டு விறு, விறுவென மாடிப்படி ஏறினான்.

அவன் கூறியதைக் கேட்டதும் எல்லோரும் அவர்களுடைய போனை எடுத்துப் பார்த்தனர்.

மயூரியும் அவளது ஃபோனை பார்க்க.

அருகில் இருந்த மதுராவும், ஆழினியும் அந்தப் ஃபோட்டோவைப் பார்த்து நெஞ்சில் கை வைத்துக் கொண்டனர்.

அங்கு ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு நிசப்தமாக இருந்தது. அதெல்லாம் ஒரு சில நொடி தான்.

கவிதாவிற்கு எப்படித்தான் அப்படி ஒரு கோபம் வந்ததோ தெரியவில்லை. முதல் முறையாக ஆத்திரத்துடன் தனது நாத்தனாரிடம் பேசினார்.

“பெரிய மாமா சொன்னதுக்கு அப்படி சண்டைக்கு வந்தீங்களே அண்ணி. இப்ப என்ன சொல்றீங்க? உங்க பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டா. இப்ப என் பையன் தானே மனச உடைஞ்சு நிக்கிறான். அஞ்சு நாள்ல கல்யாணம்னு ஊரெல்லாம் பத்திரிகை கொடுத்து வச்சிருக்கோம். எல்லாருக்கும் என்ன பதில் சொல்றது? என் புள்ளையோட மனச நான் எப்படி தேத்துவேன். சின்ன வயசுல இருந்து தனு உனக்கு தான் சொல்லி, சொல்லி ஆசையை அவன் மனசுல வளர்த்திட்டு இன்னைக்கு எல்லாம் முடிஞ்சிருச்சுனு நான் எப்படி சொல்லுவேன். ஐயோ! எவ்வளவு ஆசையா இருந்தான். ஏதாவது என் பையன் பண்ணிக்கிட்டா என்ன பண்றது .” என்று புலம்பியவர் மகனைத் தேடி சென்றார்.

உமாவோ அகிலனை பார்த்து,”பாருடா! உன் பொண்டாட்டி என்ன சொல்லிட்டு போறா. என் பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு நான் நிம்மதியா இருக்க முடியுமா? அந்தப் பையன் யாரோ? எவரோ? நல்லவனா? கெட்டவனா? எதுவும் தெரியலை. என் பொண்ணை மிரட்டி கல்யாணம் பண்ணான்னுக் கூட தெரியாம ஒரு தாயாக நா தவிக்கிறது எனக்கு தான் தெரியும்‌.” என்று அழ.

“அழாத அக்கா! அவ ஏதோ வருத்தத்துல சொல்லிட்டு போறா. தனுவை தேடி கண்டுபிடிச்சு உங்கிட்ட ஒப்படைக்கிறது என்னோட பொறுப்பு. இப்ப நீ வீட்டுக்கு போ.” என்றவர்,

சிந்துஜாவிடம்,” அம்மாடி சிந்து! நீ உங்க அத்தையைக் பார்த்துக்கோ.” என்று அவர்களை அங்கிருந்து அனுப்பியவர், ஒரு முக்கியமான முடிவை எடுத்தார்.

அதை மற்றவர்களிடம் கூறுவதற்கு முன்பு மகன், மனைவியிடம் பேச வேண்டும் என்று மாடிக்குச் சென்றார்.

சுமதி, லட்சுமியை சமாதானம் செய்து ஓய்வெடுக்க அவரது அறைக்குச் அழைத்துச் சென்றார்.


இவ்வளவு கலவரம் நடந்து கொண்டிருக்கும் போது ஆழினி மட்டும் செழியனின் கோபத்தில் அரண்டு போயிருந்தாள்.

மெல்ல தனக்கு அருகே இருந்த மதுராவை சுரண்டினாள்.

“என்ன ஆழி!”

“ மது! நம்ம கிளம்புவோமா?” என்றாள்.

“ஆழி என்ன பேசுற? இப்படிப்பட்ட சூழ்நிலையில மய்யூவை தனியா விட்டுட்டு எப்படி போறது. இங்க இருக்குறவங்களை பார்த்தாலே கஷ்டமா இருக்கு.”

“ பார்க்க முடியாமல் தானே போகணும்னு சொல்றேன்.”என்று முணுமுணுத்தாள்.

“ என்ன சொல்ற ஆழி!”

“ஒன்னும் இல்ல. இதெல்லாம் பார்த்தா எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. அதான் போலாமான்னு கேட்டேன்.”

“ அதெல்லாம் இப்ப போனா நம்மள தப்பா நினைப்பாங்க. இப்போ மயூரிக்கு நம்ம கூட இருந்தா ஆறுதலா இருக்கும்.” என்று மதுரா கூற.

ஆழினி வாயை மூடிக் கொண்டாள்.

ஆனால் அடுத்து நடந்ததைப் பார்த்த மதுராவிற்கு பேசாமல் ஆழினி சொன்ன போதே இங்கிருந்து கிளம்பி இருக்கலாம். தேவையில்லாமல் இந்த பிரச்சனையில் ஆழினியை இழுத்து விட்டோமோ என்று எண்ணிக் குற்ற உணர்ச்சியில் தவித்தாள்.
 
Top Bottom