• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது காதல் காவியம் - 26

நிதனிபிரபு

Administrator
Staff member
“பேபி மெதுவா போங்க….. “

கந்தளாய் குளக்கட்டின் சரிவுகளில் வேகமாய் இறங்கிக் கொண்டிருந்தாள் மீரா.
அவளுக்கு அந்த இடம் அவ்வளவு பிடித்திருந்தது.கூடவே,வைரமுத்து ஒரு கவிதையில் சொல்லும் “தென்றல் நெசவு நடத்துமிடம்” என்ற கவிதை வரிகள் நினைவு வந்தது.

“ப்பா…..என்ன காத்து.சூப்பரா இரிக்கிது.” துப்பட்டாவை இரு கைகளாலும் பிடித்தபடி காற்றில் பறக்கவிட்டாள்.

“வாங்க போக. டைம் போயிட்டு” என சத்தமாக சொன்னவனை கண்டுக்காமல் அவள் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருக்க,

“மீரா…. மெதுவா வாங்க..மீரா…பேபி,
என அவள் அசைவுகளுக்கேற்ப எச்சரிக்கை செய்துகொண்ருந்தான் ரொஷான்.அவன் கைகளோ அவள் இடையை பிடிக்க போராடிக்கொண்டிருந்தாலும் அந்தத் தவறை அவன் செய்யவில்லை.

“நான் சின்னப் பிள்ளையா?? நானொரு டிக்கிரி ஹோல்டர்.எனக்குத் தெரியும்” என்று முகத்தைத் திருப்பிக்கொள்ளும் மீராவை மலையிறக்குவது அதைவிடப் பெரும் போராட்டமாகிடுமே. அளவுக்கதிகமாக பத்திரம் சொன்னால் யாருக்குத் தான் பிடிக்கும்.

ஒருவழியாக மூச்சிரைக்க அவன்பக்கத்தில் வந்ததும் தான் அவன் மூச்சுவிட்டான்.

“நான் எங்க ஊர்ல வரப்புல வேகமா ஓடுவன்.மரமேறி, கல்லெறிஞ்சி மாங்கா பறிக்கிறத்துல நான் எக்ஸ்பர்ட்.உங்களுக்குத் தெரியுமா எங்கப்பாக்கு பெரிய்ய்ய தோப்பே இருக்கு.ஆனா எனக்கு எங்க பக்கத்துவீட்டுல நிக்கிற மாங்காவ தெரியாம பறிச்சி சாப்பிடத்தான் புடிக்கிம்.ஆங்ங்ங்…..எங்க மாந்தோப்புல குட்டியா ஒரு பரன் இருக்கு.என் ஃப்ரீ டைம் அங்கதான் கழியும்.நான் அங்க இருந்துதான் நிறைய படிப்பன்.அமைதிய உற்பத்தி செய்யுற பெஸ்ட் ப்ளேஸ் எங்க மாந்தோப்பு.”

ரொஷானோ,அவள் பேசுவது பாதி புரிந்து மீதி விளங்காமல் முழித்து பின் அதை கைவிட்டு அவள் பேசும் அழகை ரசித்துக்கொண்டிருப்பான்.
அவனுக்குப் புரியுமா புரியாதா என்பதைக்கூட அவள் யோசிப்பதில்லை.மனதில் தோன்றும் அத்தனையையும் ஒப்பித்துவிடுவாள்.மீராவின் பேச்சில் அவ்வளவு வேகமிருக்கும்.
கொட்டும் அருவியைப்போல பார்க்கவும் அழகாக இருக்கும்.கன்னக்குழி, வளைந்தாடும் புருவங்கள் நளினமாக இசைக்கும் இதழ்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

எதிலோ ஆரம்பித்து எதிலோ முடித்தவள் கடைசியாக “எனக்குப் பசிக்கிது” என சிணுங்க,அவனோ புன்னகையுடன்

“என்ன வேணும் பேபி??” எனக்கேட்டான்.

“சோளன் வேணும். டீ வேணும்.அவிச்ச கிழங்கு வடை அதுவும் நல்லா உறைப்பா வேணும்.கடைசியா ஒரு ஐஸ்க்றீம்” இந்த மூடி க்ளைமட்டுக்கு இதான் பொருத்தம் என்றாள். “வாங்கித்தருவீங்க தானே??”

போதுமா??

“ம்ம்ம்….இப்போதைக்கு போதுமே..வீட்ட போய்ட்டு ராவு சாப்பாடு சாப்பிடலாம்.காமு பாட்டி ஏதும் வச்சிருப்பாங்க” என்றவளின் முகபாவனையை பார்த்தவன் சத்தமாக சிரித்தான்.

“என்ன? இதெல்லாம் நான் மட்டுமா சாப்பிடப்போறன்.நீங்களும் தானே” என உதட்டை சுழித்தவளின் கன்னத்தை மெதுவாய்க் கிள்ளியவன்,அவள் தோள்களில் கைபோட்டு தலையில் உச்சிமுகர்ந்தான்.
***************
“எனக்கும்” என வாயைத்திறந்தாள் மீரா.

சாப்பிடல்லியா பேபி?

“கொஞ்சம்தான்.நீங்க வரும் வரைக்கும் நான் வெய்ட் பண்ணத்தான் நினைச்சன்.ஆனா பசி கூடவா இருந்திச்சி.அதான் கொஞ்சமா சாப்பிட்ட” என்றாள்.பிறகு அவன் அவளுக்கும் ஊட்டி,தானும் சாப்பிட்டுக் கொண்டே அவள் பேசும்அழகை ரசித்துக்கொள்வான்..
**************
ரொஷான் சிங்களத்தில் மும்முரமாக பேசிக்கொண்டிருந்ததால் அவளுக்கு எரிச்சலாக இருந்தது.நான் எவ்வளவு நேரமா தனியா தலைவலியில இருக்கன்.இவரு வந்ததும் வராததுமா உடுப்புக்கூட மாத்தாம பேசிட்டிருக்கார்.அதுவும் எனக்கு விளங்காத மொழியில.

“ம்ம்கும்” என சத்தமாக சிணுங்கவும் தான் ரொஷான் திரும்பினான்.
அவள் முகத்தில் அழுகைக்குரிய அத்தனை அடையாளமும் இருக்க ஏதோ சொல்லி சமாளித்து ஃபோனை கட் செய்து,

“என்ன பேபி? எனப்பதறி அவளிடம் வந்தான்.

”எனக்கு தலையிடி.நோகுது” என அவனைக்கட்டிக் கொண்டாள் மீரா.

“குளிச்சிட்டு வாரன்” என அவளை விலக்க, மீரா இன்னமும் அவனிடம் புகுந்துகொண்டாள்.வெளியே இருந்து வந்தால் எப்போதுமே சுத்தமாகிவிட்டுத்தான் அவளிடம் வருவான்.இன்று மீரா அவனை அசையவே விடவில்லை என்பதால்,அப்படியே அவளைக் கைகளால் அள்ளிக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டவன்,
கதிரையில் உட்கார வைத்தான்.
பிறகு தலைக்கு எண்ணெய் போட்டு மென்மையாக மசாஜ் செய்ய மீரா அப்படியே தூங்கியும் போனாள்.
*************
இப்போதெல்லாம் ஒவ்வொரு நாள் இரவும் அவன் மடியில் அமர்ந்து கொண்டு கதைபேசி,பின்னரே தூங்கும் வழக்கம் அவளுக்கு.
இருபத்திநான்கு வருட வாழ்க்கையில் கடந்து வந்த அத்தனையையும் அவனிடம் சொல்லவேண்டும் அவளுக்கு.
அப்பா அம்மா பாட்டி சகோதரன் தோழன் காதலன் எல்லாமே ரொஷான் தான் என்பதை ஆழமாக தனக்குள் பதிவேற்றிக்கொண்டாள்.

ஆனால் கணவனாக இன்னமும் ரொஷான் தன்னை ஏன் நெருங்கவில்லை என்ற கேள்வி இல்லாமலில்லை.நிறையக் கொஞ்சுவான்.அணைப்பிலேயே அவளைக்கட்டிப் போடுவான்.
அதற்கு மேல் அணுவும் அசையமாட்டான்.என்னதான் இருந்தாலும் இந்த விஷயத்தில் ஏனென்று அவனிடம் கேள்வி கேட்கவோ உரிமை கொண்டாடவோ அவளுக்கு தைரியமில்லை.

“இன்டைக்கி ஏன் உங்கட முகம் சரியில்ல.வந்ததுல இருந்து ஒரு மாதிரியா இருக்கீங்க.? வழமையா ஆறுமணிக்குள்ள வார நீங்க எட்டு மணிதாண்டியும் வராம இருக்கயும் நான் பயந்துட்டன்.இனி லேட்டாகும்டா எனக்கி ஃபோன் போட்டு சொல்லனும்.அவன் மடியிலிருந்து கொண்டு கவலையாக அவனைப்பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தாள் மீரா.

கள்ளம்கபடமே இல்லாத அவள் முகத்தில் தெரியும் அந்தக்கன்னக்குழி ஜீவனே இல்லாமல் இருக்க,எப்போதுமே புன்னகையுடன் சுற்றிக்கொண்டிருக்கும் மீரா சோகமே உருவாகத்தெரிந்தாள்.
ரொஷானின் ஒவ்வொரு விஷயமும் அவளை அவ்வளவு பாதித்தது.
இருகைகளாலும் அவள் முகத்தை ஏந்தியவன் தன் நெற்றியோடு அவள் நெற்றிமுட்டினான்.

நீங்க ஊர்ல இருந்து இன்டர்வியூக்கா வந்தீங்க??

சம்பந்தமில்லாத அவன்கேள்வியில் ஆங்…?? என கண்களை சுருக்கி யோசித்தவளின் அழகில் தடுமாறினான் ரொஷான்.

“பேபி…சீரியசா கேக்குறன்.நீங்க ஃபெர்ஸ்ட் டைம் ஊர்ல இருந்து என்னத்து வந்த?.அதக்கேட்டன்” என்றான்.

“ம்ம்ம்…எனக்கு டெமோ தாரதுக்காக இன்டர்வியூ கூப்பிட்டாங்க.
அதுக்குத்தான் வந்தன்.அந்த டைம் நான் போயிருந்தா கட்டாயம் செலக்ட் ஆகியிருப்பன்.இன்னேரம் நான் ஒரு லெக்சர்.” சொல்லும் போதே அவள் முகம் பூவாக மலர்ந்து அவள் கன்னக்குழிக்கு உயிர் வந்தது.

“ஏன் சம்பந்தமேயில்லாம பேசுறீங்க.இனி லேட்டா வர அவள் முடிக்கும் முதலே ஒற்றைவிரலால் அவள் இதழில் கைவைத்தான்.

அவளோ ஏமாற்றமாக அவனைப் பார்த்தாள்.என்ன??? நான் பேசுவன் என்று தொடர,

“பேபி,.நீங்க திருப்ப இன்டர்வியூ போக முடியாதா?? “

“அது எப்டி சாத்தியம்? இன்னேத்துக்கு யாரையும் எடுத்திருப்பாங்க.அப்படி போனாலும் எனக்கிட்ட எந்த சர்ட்ஃபிகட்டும் இல்லையே.எல்லாம் எரிஞ்சிட்டு” என்றாள்.

“அது திரும்ப புதுசா எடுக்கலாம்.உங்கட ஐடி நம்பர் போதும்.நாம நாளைக்கி போய்ட்டு பார்ப்பம் சரியா?” என்றான்.

“என்னத்துக்கு.?இனி நான் எங்கயும் போக மாட்டன்.அது கிடைச்சா அங்க தான் தங்கனும்.உங்கள விட்டு நான் எப்டி போற.இப்போ எனக்கு லெக்சர் கனவெல்லாம் இல்ல.” என்று அவன் தோள்களில் சாய்ந்தவள், “தூக்கம் வருது” என கொட்டாவியும் விட்டாள்.

ரொஷான் அப்போதைக்கு எதுவும் பேசவில்லை.ஆனால் தொடர்ச்சியாக வந்த நாட்களில் அவளிடம் அதைப்பற்றி அதிகம் பேசினான்.அப்பா சென்டிமன்ட்டை சொல்லி “உங்கள கஷ்டப்பட்டு படிக்க வச்ச தானே உங்கட அப்பா.அதுக்காக போகலாமே பேபி.ப்ளீஸ்.படிச்சா அது வேஸ்ட் ஆகக்கூடாதே.” குழந்தைக்கு சொல்வதைப்போல சொல்லிக்கொண்டே இருக்க மீராவும் ஒருவழியாக எப்படியும் இது நடக்காது என்ற நம்பிக்கையில் ஒத்துக்கொண்டாள்.

“கண்டி போறமா?? வாவ்…” என கண்களை விரித்தவளை சலனமே இல்லாமல் பார்த்தான் ரொஷான்.

“நாம பேராதனை பார்க் போவமா?அங்க என்ட ஃபேவரிட் மரமொன்டு நிக்கிது.கேம்பஸ் இரிக்கிறப்போ நான் அடிக்கடி அத சந்திக்கப் போயிடுவன்.பிறகு,எங்கட லைப்ரரி அவ்வளவு அழகாருக்கும்.
அங்கயும் காட்டுறன் பாருங்க.
எனக்கு கண்டி நல்லா பிடிக்கும்.பின்னேரத்துல தெப்பக்குளம் சுத்த எப்டியிருக்கும் தெரியுமா? நீங்க பாத்துரிக்கீங்க??” கேள்வியாய் ஒற்றைப் புருவத்தை தூக்கிக் கேட்டாள்.அவனோ அமைதியாய் அவளைப் பார்த்துக்கொண்டிருக்க,

என்ன?? ஹலோ…அவனை உலுக்கி நடப்புக்குக் கொண்டு வந்தாள் மீரா,

ரொஷானின் மெளனத்திற்குப் பின்னால் இருக்கும் வலி மீராவுக்குத் தெரியாது.அதைத் தெரியப்படுத்த ரொஷானும் விரும்பவில்லை.தொப்பிக்கலயில் இருந்து கந்தளாய் வரும் போது அவனுக்குள் இருந்த சந்தோசம் சில நாட்களில் காணாமல் போனதற்கு காரணம் அவனுக்கு வந்த மொட்டைக்கடிதம்.

தொப்பிக்கலை கேம்ப்பில் அவனுடன் வேலைசெய்த ஒருவன் அழைத்திருந்தான்.“சார்…உங்கட பேருக்கு ஒரு கடிதம் வந்திருக்கு” என.உடனே அந்தக்கடிதத்தை கந்தளாய்க்கு அனுப்பச்சொன்னான் ரொஷான்.

முதலில் சாதாரணமாகப் பிரித்தவனுக்கு அவ்வளவு அதிர்ச்சி.சிங்களத்தில் அச்சடிக்கப்பட்டிந்த அக்கடிதத்தில் உன் மனைவியின் இறப்பு தொலைவில் இல்லை.என்று மட்டுமே எழுதப்பட்டிருந்தது.
இதுவரைக்கும் எத்தனையோ மிரட்டல்களை சந்தித்திருக்கிறான்.
ஒரு நாள்கூட அவன் பயப்பட்டதேயில்லை.ஆனால் மீராவைப் பற்றி வந்ததும் அவன் உடம்பே ஆடிவிட்டது.அதனால்தான் அவளை எங்கேயும் போகாமல் தன்னுடனே வைத்துக்கொண்டான்.

அவன் இருக்கும் வரை அணுவும் அவளை நெருங்கமுடியாது.ஆனால் வடக்கிற்கு சென்று மீண்டும் கடமையை பாரமேற்குமாறு பாதுகாப்பு அமைச்சிலிருந்து நேரடியாக அவனுக்கு அழைப்பு வந்துவிட்டது.ஓரளவு இது எதிர்பார்த்தது தான் என்றாலும் மீராவுக்கு அவனைவிட்டால் யாருமே இல்லாத நிலையில் தனியாக எப்படி அவளை விட்டுச்செல்வது என்ற யோசனை.

அவன் வடக்கிற்குப் போவது உறுதி.மிக முக்கியமானவர்களை மட்டுமே அங்கே அனுப்பத் தீர்மானித்திருந்தார்கள்.அங்கே இருக்கும் வரைக்கும் எந்தத்தொடர்பும் யாருடனும் வைத்துக்கொள்ளக்கூடாது.யுத்தம் முடிந்தால் மட்டும்தான் திரும்பலாம்.மற்றப்படி வாழ்வோ சாவோ அங்குதான்.

மீராவை அவன் வாழ்க்கையில் சந்திப்பதற்கு முன்னரே இந்த விதிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டு அதற்கான விருப்பத்தை உத்தியோகபூர்வமாகக் கொடுத்துவிட்டதால் பின்வாங்கவே முடியாது.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் யுத்தத்தை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத்துணிந்தது அதிகாரம்,இறப்பைப் பற்றியோ உணர்ச்சிகளைப் பற்றியோ இம்மியளவும் சிந்திக்காது.இதில் ராணுவமும், பொதுமகனும் விதிவிலக்கா என்ன?

தனியாளாக இருக்கும் போது அவன் உயிரைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாத ரொஷான் தன் வாழ்க்கையில் முதன் முதலாக மரணத்தை நினைத்தான்.அதுவும் மீராவுக்காகத்தான்.கண்களை மூடினால் பூவாக சிரித்துநிற்கும் அவள் முகம் மட்டும்தான் தோன்றியது.அவனது உயிர் நாடி வரைக்கும் மீராதான் பரவியிருந்தாள்.

வளர்த்த பூனைக்குட்டியைப் போல் அவனையே சுற்றிவரும் மீரா, அவன் உயிரைவிட பத்திரமானவள்.
அவளுக்கு சின்ன முள் குத்துவதைக்கூட அவனால் தாங்க முடியாதளவு கொள்ளை அன்பை வைத்திருந்தான்.

தேவையில்லாமல் தன் வாழ்கையில் அவளையும் இழுத்துவிட்டோமே.
வேறு யாருடன் வாழ்ந்திருந்தால் இந்த நிலமை வந்திருக்காதே.
என்றெல்லாம் குமுறிக்கொண்டிருந்தான் அந்த ஆறடி ஆண்மகன்.

கடைசியாகத்தான் அவள் சொன்ன லெக்சர் கதைகள் நினைவுவர அவன் திரும்பி வரும்வரைக்கும் அங்கேயே இருக்கவைப்பதென்ற முடிவுக்கு வந்தான்.அவன் இந்த உலகில் இல்லாமல் போனாலும் சுயமாக அவள் வாழ வேண்டும்.அது கல்வியால்தான் முடியும் என்று நினைத்தான்.ஆனால் கடவுளின் விருப்பம் வேறாக இருந்ததென்று அவனுக்குத் தெரியாதே.

எரிந்துவிட்ட ஆவாணங்களை மீள எடுப்பதென்பது அவ்வளவு இலகுவான காரியமில்லை என்றாலும் ரொஷானின் தலையீட்டால் வி.சியே மீரா சம்பந்தப்பட்ட சான்றிதள்கள்,மார்க்ஸ் சீட் என அத்தனையையும் ஒரு வாரத்திற்குள் பெற்றுத்தருவதாக சொல்லி அனுப்பினார்.இதற்கிடையில் கண்டி சுத்தனும், கேம்பஸ் சுத்தனும் என குழந்தையாக அடம்பிடித்த மீராவை மறுத்து சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டி வர ரொஷான் ஒருவழியாகிவிட்டான்.

உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு டீவி சனலை மாற்றிக்கொண்டிருந்தவளை அப்படியே தூக்கிக்கொண்டான் ரொஷான்.

பேபி…பசிக்கல்ல?? வாங்க சாப்பிட என்க,அவளோ திமிறி இறங்க முயற்சித்தாள்.

“ம்கும்…எனக்கு வேணா.நான் சொல்லி நீங்க கேட்கல்லியே.நீங்க சொல்றத மட்டும் நான் செய்யனுமா? நான் சாப்பிடமாட்டன்” என கத்தியவளை கவலையாகப் பார்த்தான்.

“பேபி…எல்லாத்தையும் என்னால சொல்ல முடியாத சூழ்நிலை.ஒரு நாள் கட்டாயம் நீங்க சொல்ற இடம் எல்லாத்துக்கும் கூட்டிப்போறன்.
நம்புங்க.இப்போது என்னால முடியாது பேபி.ப்ளீஸ்”

அவனது மென்மையான பேச்சில் மீராவின் மனது இளக ஆரம்பித்தாலும் அதை வெளிக்காட்டாமல் அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.
சட்டென்று அவளது கன்னத்தில் முத்தமிட்டான் ரொஷான்.உடனே தன் கைகளால் கன்னத்தை தேய்த்தவளின் அடுத்த கன்னத்திலும் முத்தமிட்டான்.

“ம்ம்ம்ம்….கீழ இறக்குங்க” என்றவளது குரலில் துளியும் கோபமில்லை.

எனக்கு ஒரு டவுட் என ஒற்றைக்கண்ணை மூடித்திறந்தாள் மீரா.

என்ன??

“கேம்பஸ்ல இருந்து எல்லாம் சரியாகி வந்தா நான் அங்க போயிருவன்.என் வேலை அங்கதானே.ஆனா
நீங்க எங்க போவீங்க?
இங்கயேதனியா இருக்கப் போறீங்களா?”

“முள்ளிவாய்க்கால்” என்றான்.

“அது எங்கருக்கு?”

“வடக்குல”

“ஆங்….அவ்வளவு தூரம் போறீங்களா.நீங்க வேலை செய்யாத இடமே இல்லியா?
நீங்க போகாதீங்க.இல்லாட்டி நானும் வாரன்.எனக்கு படிப்பு,வேலை ஒன்டும் தேவல்ல என அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டு நெஞ்சில் சாய்ந்தாள்.
 
Top Bottom