• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது காதல் காவியம் - 27

நிதனிபிரபு

Administrator
Staff member
பேராதெனிய கேம்பஸ் கிடைப்பதற்காகவே அவள் படித்த நாட்கள்,முதன் முதலாக தன் அப்பாவுடன் இங்கு வந்த நாள்,க்ளாஸ் அடித்து எப்படியாவது லெக்ஷராகிவிடத் துடித்த நாட்கள்,கடைசியாக கேம்பஸை விட்டு வந்த நாள் என அத்தனையும் அவள் மனக்கண் முன் தோன்றியது.பழய நினைவுகளை அசைபோடுவது தனிசுகம் தான்.அப்போதெல்லாம் அவள் கண்களில் கனவு மட்டும் தான் இருக்கும்.ஆனால் இப்போது, எல்லாமே தலைகீழ் மாற்றம்.

ரொஷானைவிட்டுப் பிரிவதை அவளால் அவ்வளவு சாதாரணமாக ஏற்கமுடியவில்லை..பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தையை எப்படி சமாளித்து ஒரு தாய் அனுப்புவாளோ ,அதே போலத்தான் மீராவை கேம்பஸ் கூட்டிவருவது பெரும்பாடாயிற்று.

அவள் பாடத்துக்கான வெற்றிடம் இன்னமும் இருந்ததாலும்,கூடவே ரொஷானின் மனைவியென்ற சலுகையும் பரிந்துரையும் இருந்ததாலும் மீராவுக்கு டெமோ கிடைப்பதில் பெரிய சிக்கல் வரவில்லை.அவள் பெயரில் வங்கிக்கணக்கை ஆரம்பித்து பணத்தையும் போட்டவன் மாதாமாதம் அவள் பெயருக்கு பணம் வருவதற்கான ஏற்பாட்டையும் செய்திருந்தான்.

“மீரா,நீங்க இங்க இருக்கும் போதே எம்.எ செய்றது நல்லம்.” என அவளின் எதிர்காலத்திற்காய் வழிப்படுத்தவும் தவறவில்லை. அத்தனையையும் யாருக்கோ என்பதைப் போல கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு ஆரம்பத்திலிருந்தே எதுவும் பிடிக்கவில்லை.இதோ,பெட்டி படுக்கைகள் சகிதம் பேராதெனிய ஹாஸ்டலுக்கு வந்துமாயிற்று.
கொஞ்ச நேரத்துல போயிடுவார்.
என்ற எண்ணமே அவளை ஒருவழியாக்கிக் கொண்டிந்தது.
மனது முழுக்க வெறுமையாகிவிட அவளை மீறி கண்ணீரை சிந்தவிட்டாள் மீரா.

முதன் முதலாக அவனைப் பார்த்தது தொடக்கம் இன்று வரைக்கும் விரும்பியோ விரும்பாமலோ அவள் நிழலாய் தொடர்பவனை எப்படிப் பிரிவாள்.

மீரா பேபி….என்ன?? நான் நிறைய அட்வைஸ் பண்ணித்தானே கூட்டிவந்த.அவளது கண்ணீரால் அவனுக்குள் இருக்கும் வலியை இன்னமும் பெருக்கிக்கொண்டிருந்தாள் மீரா.

அவளை இங்க விட்டதும் அப்படியே வடக்கு போகும் ஏற்பாட்டில் தான் அவனும் தயாராகி வந்தான்.அவன் அவளைவிட்டு கடமைக்காக மாற்றலாகிப்போகும் கடைசிப் பயணம் இதுதான் என்று தீர்மானித்திருந்தான்.திரும்பி வந்த பிறகு இந்த வேலையை ரிசைன் பண்ணிவிட்டு அவனது சொந்த ஊரான நுவரேலியா சென்று மீராவுடன் அவன் இழந்த அத்தனையையும் பெறும் ஒரு வாழ்க்கையை வாழவேண்டும்.

அவனைக்கேட்டால் மரணம் வரைக்கும் மீரா போதுமென்பான்.
ஆனால்,அவனது ஆசை, கனவு பற்றி கொஞ்சமாவது மீராவுக்கு சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அது,எதிர்காலத்தில் அவள் அனுபவிக்கக் காத்திருக்கும் துயர்களை கொஞ்சமாவது குறைத்திருக்கும்.

“ஓகே.இன்டைக்கி ஃபுல்லா நான் மீரா பேபியோட கண்டி சுத்திட்டு நாளைக்கி காலையில கொண்டுவந்து விடுறன் சரியா?”விடைபெறும் போது அவளை இந்த மனநிலையோடு விட்டுச்செல்ல அவன் விரும்பவில்லை.

“ம்ம்ம்….” என்றவளுக்கு துளியும் சந்தோசமில்லை.அவளது பைகளை கொடுக்கப்பட்ட அறையில் வைத்துவிட்டு அவனது பேக்கை எடுத்துக்கொண்டான்.சொன்னதைப் போல பேராதெனிய பார்க்,தெப்பக்குளம்,கூடவே சொப்பிங்க் என அத்தனை இடங்களுக்கும் கூட்டிச் சென்றான்.ஆனால் அவள் முகத்தில் அவனுக்குப் பிடித்த கன்னக்குழியைக் காணவில்லை.அவள் சிரித்தால் தானே?

பகல் சாப்பாட்டைக் கூட அவள் ஒழுங்காக சாப்பிடவுமில்லை.மழை வேறு பெய்துகொண்டிருக்க நாளைவரை தங்குவதற்கு ஹோட்டல் ஒன்றை புக் செய்தான்.அறைக்கு வந்த உடனே மீரா கட்டிலில் விழுந்தாள்.

“பேபி நீங்க சாப்பிடல்லியே.
உடம்புக்கு என்ன செய்து?என்ன வேணும்? உடம்பைத் தொட்டுப் பார்க்க அவளோ தட்டிவிட்டு மறுபக்கம் திரும்பினாள்.பிறகு,அதே வேகத்தில் எழுந்தவள்

“ நீங்க போனா எப்ப திரும்ப வருவீங்க? எனக்கு போன் பண்ணுவீங்களா? பயமா இருக்குது?” அழுகையின் உதடு பிதுங்கினாள் மீரா.

அவன் எதுவும் பேசாமல் டவளை சுற்றிக்கொண்டு குளிக்கச் சென்றான்.மீராவிற்கு அவன் சென்றதும் ஒரு மாதிரியாகிவிட்டது. அணைப்பான் கொஞ்சி சமாதானப்படுத்துவான் என்று எதிர்பார்த்தவளுக்கு அவ்வளவு ஏமாற்றம்.வெற்றி மேனியுடன் தலையை துவட்டிக் கொண்டு வெளியே வந்தவனை முறைத்துப்பார்த்தவள் குளியலறைக்குச் சென்று கதவை படார் என்று அடைத்தாள்.

போட்டிருந்த அதே உடையுடன் தலையில் குளித்தவளுக்கு ரொஷானை நினைக்க நினைக்க அவ்வளவு கோபம் வந்தது. “நான் படிக்கப் போறேன்டு இவர்ட்ட கேட்டேனா.வந்துட்டார். பெரிய இவர் மாதிரி” ஒரு காலத்தில் படிப்புதான் வாழ்க்கை என்றிந்த மீராவா இது?என அவள் மனசாட்சியே நக்கலடிக்க,எப்படி அதை விரட்டுவதென்று தெரியாத அவள் மூளை சம்பந்தமில்லாததை எல்லாம் யோசித்தது.அங்கிருந்த கண்ணாடியில் தெரிந்த தன் முகம்பார்த்தவள் “நான் வடிவா இல்லைண்டு விதுவ பார்க்க போறார் போல.நான்தான் கொஞ்ச நாளா அத மறந்துட்டன்.அவர் அவள மறக்கல்ல.என்னை பிடிக்காம போயிட்டு.அதான் இப்படி ஒரு ப்ளேன்.”

“பேபி குளிக்காதீங்க.முடி காயாது.” கதவைத் தட்டினான் ரொஷான்.

சிந்தனை கலைய “நான் நல்லா குளிப்பன்” என பதிலுக்குக் கத்தினாள் மீரா.

“வெளிய மழை.இங்க ஹேர் ட்ரையர் இல்ல.முடி ட்ரையாகுற கஷ்டம்.வாங்க பேபி.”

“ம்கூம்….உங்கட வேலையப் பாருங்க.என்ட முடி காயாட்டி உங்களுக்கென்ன?.வந்துட்டாரு.”
பதிலுக்குக் கடிந்தவளுக்கு அப்போதுதான் ஒன்று உறைத்தது.

“மாற்றுத்துணி கூட இல்லாம போட்டிருந்த உடுப்போட குளிச்சிட்டனே”என்று.ஹய்யோ,இப்ப என்ன செய்றது.குளிப்பதை நிறுத்தியவளுக்கு உடல் முழுக்க குளிராக இருந்தது.கதவை திறந்து வெளியே எட்டிப்பார்த்தாள்.

ரொஷான் கட்டிலில் அமர்ந்து பையில் எதையோ தேடிக்கொண்டிருந்தான்.அவள் “டவல் வேணும்”என்று குரல் கொடுக்க சத்தம் கேட்டுத் திரும்பியவன் வேகமாக அவள் பக்கத்தில் வந்து தலையைத் தொட்டுப்பார்த்தான்.

“ஏன் பேபி குளிச்சீங்க?அவன் குரலில் லேசாகக் கோபம் இருந்தது.அவள் தலையை அவனே துடைத்து விட்டான்.நீளமான முடியை அவள் கூட இப்படி மெனக்கட்டுத் துடைக்கமாட்டாள்.தலைக்கு மட்டும் துவட்டிவிட்டு விரித்துப்போட்டால் அது தானாகவே காய்ந்துவிடும் என்பாள் மீரா.ஆனால் பாட்டி திட்டித்தள்ளுவார்.

“ஏய், மீரா வடிவா உலர்த்துடி.இங்க வா,” என்று இழுத்துவைத்து துடைத்துவிடுவார்.அவன் செய்கையில் தன் பாட்டியின் நினைவு வர கண் கலங்கியது மீராவுக்கு.அவனை அண்ணாந்து பார்த்தாள்.

என்ன? என்றான்.

ம்ம்…நான் போட உடுப்பு கொண்டு வரல.அப்டியே குளிச்சதால ஈரமாகிட்டு.என்ன செய்ற? அவனிடமே முறைத்துக்கொண்டு யோசனை கேட்டவளின் கன்னத்தில் விளையட்டாகக் கிள்ளியவன்

“நான் சொல்லி நீங்க கேக்குறதே இல்லியே.என்ட டீசர்ட் போடுங்க” என ஏற்கனவே தயாராக்கி வைத்த டீசர்ட்டை எடுத்துக் கொடுத்தான்.
அந்தக் குரலில் ஒரு கடினத்தை உணர்ந்தாள் மீரா.


தயங்கினாலும் குளிரால் பற்கள் தந்தியடிக்க வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொண்டாள் மீரா.
இரவு எட்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.பகலும் சரியாக சாப்பிடாததால் பசி அதிகமாயிருக்க, அவன் ஊட்ட ஊட்ட சாப்பிட்டுக்கொண்டே இருந்தாள்.
சூடான பரோட்டாவும் பருப்பு சொதியும் மழைக்கு அமிர்தமாக இருந்தது.ஒரு வழியாக வயிறும் நிறைய “நீங்க சாப்பிடுங்க” என்றவள் பால்கனிக்கு வெளியே சென்று வேடிக்கை பார்த்தாள்.
முழங்காலுக்கும் இரண்டு இன்ச் கீழிறங்கிய அந்த டீசர்ட்டை அவன் முன்னால் போட்டுக்கொண்டு நிற்க அவளுக்கே வெட்கமாக இருந்தது.

கழுத்திலிருந்து வழிந்த டீசர்ட்டை அடிக்கடி இழுத்து விட்டுக் கொண்டாள்.விரித்துக்கிடந்த அவள் கூந்தல் பின்புறத்தை மறைத்து நின்றாலும் சங்கோஜமாகவே இருந்தது.அவன் பார்வை நிச்சயம் தன்மேல்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டாள்.

“பேபி” என்ற அழைப்பில்,தலை குனிந்தவாறே திரும்பிப் பார்க்க அவனோ

“வந்து தூங்குங்க.நாளைக்கி நான் நேரத்தோட போகனும்” என்றான்.

மீராவுக்கு அவ்வளவு ஏமாற்றமாக இருந்தது. “நான் பாக்குற மாதிரி நல்லா இல்லியா?” எரிச்சலாக இருக்க,எதுவும் பேசாமல் போய் படுத்துக்கொண்டாள்.

இவருக்கு என்னத்துக்கு கல்யாணமோ? மனதால் அவனைத் திட்டிக்கொண்டிருந்தவளுக்கு தூக்கமே வரவில்லை.இருள் பரவியிருந்த அந்த அறையில் பால்கனியில் நின்றிருந்த ரொஷானின் உருவம் தான் தெரிந்தது.பொதுவாக எதையுமே நின்று பார்த்து,யோசித்துக் கொண்டிருக்கும் ரகம் அவனில்லை.எப்போதும்
இயங்கிக்கொண்டே இருப்பான்.
இன்று வித்தியாசமாக இருக்க அவன் மேலிருந்த கோபம் மறந்தவள் எழுந்து அவனிடம் சென்றாள்.

அவளை தூங்க அனுப்பிவிட்டு தனியாக நிற்பவனிடம் என்னவென்று கேட்பது?.திரும்பிச் செல்லவும் பிடிக்கவில்லை.முடிவுக்கு வந்தவளாய், பின்னோடு அவனை அணைத்துக்கொண்டாள்.ஒரு நிமிடம் அமைதியாக நிதானித்தவன் வேகமாய்த்திரும்பி அவளை அணைத்துக்கொள்ள மீரா வலியில் நெளிந்தாள்.அப்படியே அவளை அள்ளிக்கொண்டு கட்டில் நோக்கிச்சென்றான் ரொஷான்.

அதன் பிறகு அவனைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.ஒரு பூவை விட மென்மையாகவே மீராவை தொடும் ரொஷான் காணாமல் போயிருந்தான்.
இதுவரைக்கும் யாரிடமும் வெளிப்படுத்தாத அவனது உணர்வுகள் காட்டாற்று வெள்ளம் போல பெருக்கெடுத்தது.கணவனாக தன்னை எப்போது நெருங்குவான் என்று காதல் மனைவிவாய் மீரா எதிர்பார்த்தாலும் இப்படி எதிர்பார்க்கவில்லை.அவளது முனகல்கள்,சிணுங்கல்கள் என எதையும்அவன் பொருட்படுத்தவில்லை.
ஒரு கட்டத்தில் மீரா முடியாமல் அவன் தோள்களை நன்றாகக் கடித்து வைத்தாள்.காதல் ராட்சசனாய் மாறி இருப்பவனுக்கு கொஞ்சம் கூட அது வலிக்கவில்லை போலும்.இத்தனை ஆண்டுகளாக அவன் அனுபவித்த விரதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தான்.தன் கடமையை நிறைவாக செய்து முடித்த திருப்தியுடன் அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டான் ரொஷான்.சில நிமிடங்களிலேயே மீரா அவளையறியாமல் உறங்கியே விட்டாள்.தூக்கத்தில் கூட மூச்சுவாங்கியவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.ஏன் பிறந்தோம் யாருக்காக வாழ்கிறோம் என்று தெரியாத காட்டு மரம் போல் வளர்ந்தவனுக்கு இன்றுதான் முழுமையான பதில் கிடைத்தது.வெண்ணிறப் போர்வைக்குள் பூனைக்குட்டியாய் சுருண்டு கிடந்தவளை தன்மேல் போட்டுக்கொண்டவனுக்கு இன்னும் இன்னும் வாழ ஆண்டுகள் கோடி வேண்டும் என்றிருந்தது.

நன்றாக விடிந்த போதும் சோம்பலாக கதிர்களை பரப்பிக்கொண்டிருந்த சூரியனை எதிரே பார்த்துக்கொண்டு, போர்வைக்குள் இருந்தபடியே டீ குடித்துக் கொண்டிருந்தாள் மீரா.அவளை என்னசெய்வதென்றே தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரொஷான்.
எட்டு மணிக்குக் கண்விழித்தவள்,சோம்பல் முறித்து,அவனைப் பார்த்ததும் நேற்றய நினைவில் வெட்கப்பட்டாள்.
ஆனால்,அவன் யூனிஃபோர்மில் நிற்பதை கவனித்தவள் முறைத்து மீண்டும் தூங்க முயல அவளைக் கெஞ்சிக் கொஞ்சி எழுப்பினான் ரொஷான். அவளோ,

“இல்ல…எனக்கு டயர்டா இருக்கு.உடம்பு நோகுது.நான் எங்கயும் வரமாட்டன்” என சாக்கு சொல்லி மறுபடியும் தூங்கப்போக அவளை எப்படியோ சமாளித்து டீயை குடிக்கவைத்தான்.எழும்பி விடுவாள் என்ற நம்பிக்கையில்.

“பேபி….எனக்கு பஸ் லேட்டாகும்.நான் போகனுமே.எழும்புங்க.உங்கள விட்டுட்டு வேற வரனும்.”என கடிகாரம் பார்த்தான்.

இரவு என்னவெல்லாம் நடத்திவிட்டு இப்போ பழசு மறந்த சூர்யா மாதிரி சீரியசா மாறி பேச எப்படி இவரால முடியிது.என்ன பத்தி ஒரு சிந்தனையே இல்ல.அப்படி அவசரமா எங்க போறார்.மனதில் எழுந்த கேள்வியோ கோபமான வார்த்தையாக வெளிவர,

“விதுவத்தானே பார்க்க போறீங்க?.எனக்குத் தெரியும்.நீங்க போங்க.நான் எப்படியும் கேம்பஸ் போயிக்குவன்” என கோபமாகப் பேசி அழுகையில் முடித்தவளை போர்வையோடு சேர்த்து தூக்கிக் கொண்டான்.

அவன் கைகளுக்குள் வந்ததும் கோபம் தணிய “விது உங்கட லவ்வரா ? “என மெல்லமாகக் அழுகுரலில் கேட்டாள்.அன்று ஒருமுறை அவன் சொன்ன பதிலுக்கு ,இன்று பிரதிபலித்தாள் மீரா.

அவனோ யோசிக்காமல் “ம்ம்ம் லவ்வர்” என்றதும் மீராவுக்கு கோபம் கண்ணை மறைக்க, அவன் மீசையை பிடித்து இழுத்தாள்.

ஸ்ஸ்ஸ்..ஆஆ நோவுது பேபி என்றான்.அவள் விடவே இல்லை.

“அப்ப நான் யாரு?.நான் உங்களுக்கு தேவல்ல?.போ…என்ன கீழ விடு.” என்று கண்களை மூடிக் கத்தினாள்.

“பேபி…மெதுவா பேசுங்க.என்னப் பாருங்க” என்றதும் கண்ணைத்திறந்து அவனை முறைத்துப் பார்த்தாள்.

“மீரா பேபிக்கு சிலத நான் சொல்லாதது என்ட பிழைதான்”.என்னபத்தி உங்களுக்கு ஒன்டும் தெரியாதே என்றவன் அப்படியே கட்டிலில் அமர்ந்தான்.

“என்ட சொந்த ஊரு நுவரேலியா என ஆரம்பித்து அவன் இழந்த அன்பு,தனிமையான வாழ்க்கை என அத்தனையும் சொன்னான். “நான் டிக்ரி முடிச்சிட்டு உடனே,ராணுவத்துல சேந்து அதுக்காக ரெண்டு வருஷம் அப்டியே ட்ரெய்னிங்க எடுத்தன்.அங்க லெப்டினன் சில்வா அறிமுகமானார்.”

“அவருக்கு என் மேல நல்ல மரியாதை.அவர் வீட்டுக்கு கூட்டிப்போய் எல்லார்கிட்டயும் அறிமுகம் செய்தாரு.அப்பதான் விதுர்ஷிகா பழக்கம்.ட்ரெய்னிங்க் சென்டருக்கே வந்து பேசுவா.சில இடத்துக்கு சேர்ந்தும் போயிருக்கம்.”

“அப்போ விதுதான் நாம லவ்வர்ஸ்னு சொல்லிப்பா.எனக்கு மனசால விது மேல அப்டியொரு பீலிங்க்ஸ் ஒரு நாளும் வரல்ல.ஆனா விது உட்பட லெப்டினன்,அவர்ட குடும்பம் எல்லாரும் என்னோட பழகின விதம் பார்த்து மற்ற எல்லாருக்கும் நானும் விதுர்ஷியும் லவ்வர்ஸா தெரிஞ்சிருக்கம்.அதனாலதான் விதுவ எனக்கு கல்யாணம் செய்து வைக்கிறதா பேசிருக்காரு.”

“வேற ஒன்றுமேயில்ல பேபி.உங்கள மீட் பண்ணினதுக்குப் பிறகு என்ட மைன்ட் ஃபுல்லா நீங்கதான்.
உங்களப்பத்தி தெரிய வந்ததும் விதுவால ஏற்க ஏலாமத்தான் வீட்டுக்கே வந்து பிரச்சினை பண்ணினா.ஆனா நான் தனியா கூட்டிடு போய் பேசின பிறகு விளங்கிக்கிட்டா.இதாலதான் சில்வா சார்க்கும் உங்க மேல கடும் கோபம்.அவர் உங்கள கைது பண்ண ஏற்பாடு செய்யவும் தான் அவசரமா கல்யாண ரெஜிட்ரேஷன் செய்தன்.”

“இல்லாட்டி?” பட்டென்று கேட்டாள் மீரா.
“விதுவ கல்யாணம் செய்திருப்பிங்களா?”

“இல்ல.உங்கட சம்மதம் கிடைக்கிற வரைக்கும் வெயிட் பண்ணிருப்பன்.”

“அப்பவும் நான் சரின்டு சொல்லாட்டி?”

அமைதியாக அவளைப் பார்த்தவன், “விடை தெரியா..ஆனா எப்டியும் இந்த பேபி எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று அவளை அணைத்தவன் “பேபி, விது நல்ல நண்பி அவ்வளவு தான்.” என்றான்.அப்போதும் மீராவின் முகம் தெளியாததைக் கண்டு யோசனையோடு அவளைப் பார்த்தான்.

அவ ஏன் உங்கள கட்டிப்பிடிக்கனும்?நீங்க ஏன் அவள கட்டிப்புடிக்கனும்.எனக்கு அது புடிக்காது என மூக்கால் அழுதவளின் கன்னத்தில் அழுத்தமான முத்தமொன்றைக் கொடுத்தான்.

“இனி அந்தமாதிரி ஏதாவது பார்த்தன்.” என்றபடி முட்டைக் கண்ணை உருட்டி முறைத்துப் பார்த்தாள்.

சிரித்து விட்டான் ரொஷான். “பேபி, நைட் நடந்தது உங்களுக்கும் விருப்பம்தானே? என்ட மூளை எதையும் யோசிக்காமப் போயிட்டு.எங்கயும் நோகுதா?”என குற்ற உணர்வில் கேட்டவனுக்கு எதிரே இருப்பவளின் நாணம் விளங்கவே இல்லை.அவளின் மெளனத்தை தவறாக புரிந்து கொண்டவன்,

“பேபி, சாரி.ப்ளீஸ் என்று கவிழ்ந்திருந்த அவள் தலையை உயர்த்தியவன் சிவந்த முகத்துடன் பனிமலரைப்போலிருந்த அவள் முகத்தை இமைகொட்டாது பார்த்தான்.

“பேபி,.என இறுக அணைத்தவனின் உயிர் உருகிக் கொண்டிருந்ததை அவள் அறியவில்லை.

“நானும் உங்களோட…..” என முதலிருந்து ஆரம்பித்தவளின் இதழை ஒற்றை விரலால் மூடியவனின் விழிகளில் கெஞ்சுதல் இருந்தது.

அதற்கு மேல் அவனைக் கஷ்டப்படுத்த அவள் விரும்பவில்லை.அவன் தனக்காக ஒன்று செய்கிறான் என்றால் நிச்சயம் அதில் நலவிருக்கும் என நம்பினாள்.அவன் தோளில் சாய்ந்தபடி “கேம்பஸ் போலாம்” என்றாள்.

பிடித்தவர்களை வலுக்கட்டாயமாகப் பிரிந்து போதல் எத்தனை கொடிது.
அவனுக்கு அழத்தெரியாது.இதுதான் அழுகை என்றும் தெரியாது.அவன் விழிகள் சூடாகி இரத்தமென சிவந்து போனது.அதன் பிறகு, நொடிகூடத் தாமதிக்காது அவளை அழைத்துச் சென்றான்.

“பேபி, நான் வார வரைக்கும் இங்கயே இருங்க.உங்களுக்குத் தெரியாத யார்கூடவும் தனியா போகக்கூடா.என்னப் பத்தி சொல்றதா யாரு வந்தாலும் போகாதீங்க.”என்று குழந்தைக்குச் சொல்வதைப்போல ஆயிரம் புத்திமதிகளை சொன்னான்.

அவள் எதையோ பேச ஆரம்பிக்கும் முன்னமே “ஓகே..நான் வாறன் பேபி” என வேக நடையுடன் மறைந்தவனை பார்த்துக்கொண்டிருந்தாள் மீரா.வாழ்க்கையில் எதற்குமே அஞ்சாத ஆண் மகன் முதன்முதலாக மீராவின் காதலுக்குப் பயந்து புறமுதுகுககாட்டி ஓடினான்.அத்துடன் அவளது உலகமே இருண்டுவிட்டதாய் உணர்ந்தாள்.செத்துவிடலாம் போலிருந்தது.ஆனாலும், அவளுக்காய் பார்த்துப்பார்த்து எல்லாம் செய்தவனின் முயற்சிகளை நினைத்துப் பார்த்தாள்.அவன் வரும்வரைக்கும் தான் பாதுகாப்பாக இருக்கவேண்டுமென்றுதானே இத்தனை ஏற்பாடுகள்.அவனது நம்பிக்கைக்காக அவன் விருப்பப்படி வாழ முயற்சித்தாள்.

கொஞ்சம் கொஞ்சமாய் மனதைத் தேற்றி அவனுக்காக தன்னை இயல்பாக்கினாள். சொல்லப்போனால் அவள் இயங்கவில்லை.அவளுக்குள் இருக்கும் ரொஷான் இயங்கவைத்தான் என்றுதான் கூறவேண்டும்.
 
Top Bottom