• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இமைக்க மறந்தேன் உயிரே 8

Stn49

New member
வித்யாசாகரனுக்கு மதியம் இரண்டு மணிக்கு சென்னைக்கான விமானம். எப்பொழுதும் சென்னை வருவதாக இருந்தால் ட்ரைவரை கூட்டிக்கொண்டு சாலை வழியே அவனது காரில் வருவதுதான் வழக்கம். இன்று என்னவோ விமானத்தில் சென்று விடலாம் என்று தோன்றியதால் இந்த ஏற்பாடு. விமான நிலையத்திலிருந்து

அழைத்து செல்லவென்று அவன் தங்குவதற்கு தெரிவு செய்திருக்கும் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்தே கார் வந்து விடும்.

அது மட்டும் இல்லை. அவர்களுக்கு சொந்தமான பங்களா ஒன்று அடையாறில் இருக்கிறது. இவர்கள் குடும்பத்துடன் வந்தால் மட்டும் அங்கே தங்குவது.பெரும்பாலும் இவனது சென்னை பயணங்கள் காரில் காலையில் கிளம்பி வந்துவிட்டு இரவு திரும்பிவிடும் பயணங்களாகத்தான் இருக்கும். அப்படியே தங்குவதாக இருந்தாலும் ஹோட்டல்தான் வசதி என்பான் வித்யாசாகர்.

அவனை இப்போது ஆக்கிரமிப்பு செய்திருக்கும் தனிமை உணர்வின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அவனது புகலிடமாக இருப்பது மனிதர்கள் அதிகமாக இருக்கும் இடம்தான். அடையாறில் தங்காமல் தவிர்ப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.

சென்னைக்கு அவன் வந்து இறங்கவும் அவனது அந்தரங்க காரியதரிசியின் கண்ணசைவில் வித்யாசாகருக்காக காத்திருக்கும் ஹோட்டலின் பெரிய காரில் அவனது சூட்கேஸ்ட்டுகள் இரண்டு அடுக்கப்பட்டது. காரின் பின் சீட்டில் இவனும் ,இவனது காரிய தரிசியும் அமர்ந்து கொள்ள வண்டி ஹோட்டலை நோக்கி கிளம்பியது. அவன் அன்று மாலை சந்திக்க வேண்டிய கம்பெனிகளின் கூட்டம் குறித்தான விஷயங்கள் பற்றிபேசிக்கொண்டே வர , கவனிக்க வேண்டியவனோ ஆழ்நிலை தியானத்துக்கு சென்று விட்டான்.

அவன் தான் சொல்லுவதை கவனிக்காமல் தியான நிலையில் இருப்பதை பார்த்தவருக்கு இதற்க்கு எப்படி எதிர்வினை ஆற்றவேண்டும் என்று புரியவில்லை. எதிரில் இருப்பவன் சம்பளம் கொடுக்கும் முதலாளி. மனதுக்குள் வறுத்து எடுத்தாலும் மொழி வழியில் வெளியே சொல்ல முடியாது. உதட்டை சிரித்தபடிக்கே வைத்தாக வேண்டும்.கடுப்பை காண்பிக்க வழி இல்லை.

அந்த அரைமணி நேர தூக்கம் அவனுக்குள் ஒரு புத்துணர்ச்சியை கொடுப்பதை உணர்ந்தவன் தனக்குள்ளே அவளை சிலாகித்து கொண்டான்.இதை முயற்சி செய்து பார்க்க தூண்டியதே அவள் தான்.

" விது, வேலை அதிகமா இல்லாத சமயத்துல ஒரு குட்டி தூக்கம் போட்டுருங்க. மூளை கொஞ்சம் அமைதியாகும்." இப்போது வித்யாசாகரின் காதுகளுக்குள் சாகம்பரியின் குரல் ஒலித்தது. அவனது முகத்தில் ஒரு சிறு புன்னகை கீற்று அரும்பியது.அவனது பெட்டிகள் ஆறாவது தளத்தில் இருக்கும் அவனதறைக்கு கொண்டுபோய் வைக்கப்பட்ட்டது.

அவனது காரியதரிசிக்கு இவனது ஹோட்டல் அருகிலேயே இன்னொரு ஹோட்டலில் அறை போட பட்டிருக்க அவரும் கிளம்பி சென்றார். "ஈவினிங் ஆறு மணிக்கு இங்கே கிளம்பி வந்திருங்க ராம். நானும் ரெடி ஆகிடுறேன்'என்று சொல்லி அவரை அனுப்பிவைத்தவன், மணியைப் பார்த்தான்.மணி நான்கு என்றது. காரில் வரும்பொழுது உறங்கியது போதவில்லை என்றது உடம்பு.ஏனோ சோர்வாகவே இருந்தது.

சரியாக தூங்கியே வருஷங்கள் ஆனது. எப்போதும் ஏதோ ஒரு சிந்தனை.அதிலிருந்து விடுபெற வேலைக்கான ஓட்டம்.இப்படித்தான் அவனது நாட்கள் சென்று கொண்டிருக்கிறது.

இப்போது வரும் உறக்கம் அவனே எதிர்பாராதது.அதை விடுவதற்கு மனம் அற்றவனாக வாயிற்கதவில் "டூ நோட் டிஸ்டர்ப் " போர்டை மாட்டியவன், தள மேற்பார்வையாளருக்கு அழைத்து ஐந்தரை மணிக்கு எழுப்பிவிடுமாறும்,கூடவே காப்பி சான்விச் அனுப்புமாறும் பணித்துவிட்டு உறங்கிப்போனான்.

உண்மையில் அவனது குரலை கேட்டவளுக்கு பூமி தரையிலிருந்து நழுவுவது போலத்தான் இருந்தது. சத்தியமாக அவள் சாகம்பரி இதை எதிர்பார்க்கவில்லை. குளோபல் வில்லேஜ் என்று சொல்லுவார்களே. அதை பெண்மனம் இன்று உணர்ந்தது.இது எப்படி சாத்தியம் என்று மனம் பொங்கியது.அவரை மீண்டும் சந்திக்கப் போகிறேனா? என்ற கேள்வி அவளுக்குள் விஸ்வரூபம் எடுத்தது.

அவரை மீண்டும் சந்தித்தால்... என்று மனதின் ஒருபுறமும்,சந்தித்தால் என்னவாகிவிடும் என்றும் மனதின் மற்றொரு புறமும் அவளை கேள்விகள் கேட்டு சவால் விடுக்க அதை ஏற்க திராணி அற்றவளாக அருகே இருக்கும் கதிரையில் நெற்றியை பிடித்துக்கொண்டு அமர்ந்து கொண்டாள்.

கை ,கால்கள் மீண்டு வர அவள் பெரும் பிரயத்தனம் செய்தாள். இப்படியே வெகு நேரம் இருக்க முடியாது என்பதை உணர்ந்தவளாக மீண்டும் வேலைகளை முடிக்கவென்று எழுந்து கொண்டாள். ஒரு கப் காபி அருந்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே தளத்தில் இருக்கும் காபிடீரியாவுக்கு சென்று காபியை குடித்தவள் 'இன்னிக்கு மட்டும் இது நாலாவது காபி.இந்த மாதிரி போச்சுன்னா ஹெல்த் கண்டிஷன் கவலை படும்படி ஆகிடும் என்று தனக்குத் தானே சொல்லியொண்டு அவ்விடம் விட்டு கிளம்பினாள்.அவளது வேலை நேரம் முடிய இன்னமும் அரை மணி நேரம் இருந்தது. அடுத்து வரும் பிளோர் இன்ச்சார்ஜ்ஜூக்கு தெரியப்படுத்தவென எந்த அறையில் யாருக்கு என்ன தேவை என்பவற்றை அங்கே இருக்கும் கணினியில் பதிவு செய்தாள்.

சரியாக ஐந்து மணிக்கு அடுத்த ஷிஃப்ட் பார்க்க என்று ஆட்கள் வந்து விடுவார்கள். இவள் பார்க்கும் இரண்டு தளங்களுக்குமான குறிப்புகளை கணினியில் அவள் ஏற்றி முடிக்கவும் அடுத்த ஷிப்ட் சாரா வருவதற்கும் சரியாகவே இருந்தது.

சாராவை பார்த்ததும் ஒரு நட்பு புன்னகையை கொடுத்தவள்,"நா சிஸ்டம்ல டீடெயில்ஸ் பீட் பண்ணிட்டேன் சாரா. ஐஞ்சரை மணிக்கு ஒரு அலாரம் இருக்கு.மிஸ்டர் வித்யாசாகர் ஸ்டே பண்ணியிருக்காரு.ரூம் நம்பேர் 601. காபி ,சான்விச் கொடுக்கணும். மறக்காம செஞ்சுடுங்கம்மா. லாஸ்ட் டைம் மிஸ் பண்ண மாதிரி இப்பவும் செஞ்சுடாதீங்க "

சாராவுக்கு அவளது தவறை சாகம்பரி சுட்டிக்காட்டவும் கோவம் தலைக்கு ஏறியது. சாகம்பரி சீனியர்.அதோடு வேளையில் எப்போதும் பக்காதான்.யாரும் ஒரு வார்த்தை சொல்லிவிட இயலாது. அவ்வளவு நேர்த்தியாக செய்பவள். அவளிடம் ஏதாவது வார்த்தையை விட்டால் நிர்வாகம் இவளை கூப்பிட்டு கண்டிக்கும் அளவுக்கு நன்றாகவே வேலை செய்வாள். அதனால் இல்லாத பொறுமையை இழுத்துப் பிடித்து "டோன்ட் ஒரி. ஐ வில் டேக் கேர் ஒப் திஸ்.உங்களுக்கு ட்யூட்டி டைம் முடிஞ்சிருச்சுன்னா யூ கேரி ஒன்."என்றுவிட்டாள். சாகம்பரிக்கு நன்றாகவே புரிந்தது . தலையசைப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள்.இன்று தி.நகரில் வேலை இருக்கிறது. தயாவுக்கு கொஞ்சம் உடைகள் வாங்க வேண்டும்.இவளுக்கும் ரங்கநாதன் தெருவுக்கு சென்று தைப்பதற்கு துணி வாங்கி கொஞ்சம் சுரிதார்கள் தைக்கவேண்டும். வெளியே கொடுக்கும் தையல் கூலியில் இரண்டு செட் தைத்து விடலாம் என்பது அவளுக்கு.

இப்போதே கிளம்பினால்தான் சரியாக இருக்கும் என்று யோசித்து கிளம்பியவள் மறக்காமல் வீட்டில் அம்மாவுக்கு அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டாள். தயாவும் புது உடைகள் வருகிறது என்றவுடன் சமத்தாக சரி என்றுவிட்டாள்.

இவள் ரங்கநாதன் தெருவுக்குள் நுழையும் பொழுதே மணி ஐந்தரை ஆகிவிட்டது. வேகமாக உள்ளே நுழைந்தவளுக்கு அவளையும் அறியாமல் வித்யாசாகரின் நினைவு வந்தது.'இப்போது அவர் அலாரம் வைத்திருந்தாரே. சாரா அவரை எழுப்பி விட்டிருப்பாளா ,இல்லை மறந்திருப்பாளா?'என்று அதிமுக்கிய சந்தேகம் எழ,தலையில் தட்டிக்கொண்டாள்.

ஜன சமுத்திரத்தில் நீந்தி உள்ளே சென்றவள் தனக்காக நான்கு செட் துணிகளை எடுத்துக்கொண்டு உள்ளே இருக்கும் ஒரு தையலகத்தில் துணியையும்,தைப்பதற்க்கு அளவையும் கொடுத்துவிட்டு வெளியே வந்தவள் அங்கே இருக்கும் ஒரு பிரபல துணி கடைக்குள் சென்று மகளுக்கு என்று கொஞ்சம் உடைகள் வாங்கினாள். தயா ஐந்து வயதுக்கு உயரம் அதிகம்தான்.அவளது அப்பா போல உயரமாக வளருவாளாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே மனக்கண்ணில் மகளது உயரத்தை கணக்கிட்டு கொஞ்சம் ஆடைகளை வாங்கிக்கொண்டாள்.

முன்பெல்லாம் வீட்டில் அம்மா ,அப்பா ,தம்பி என்று அனைவருக்குமான உடைகளை வாங்குவாள்தான். இப்போது செலவுகளை சுருக்கியாக வேண்டிய நிலையில் இருக்கிறாள். அவளது சம்பளத்தை வைத்துதான் தயாவுக்கு கல்விக்கட்டணம்,மருத்துவ செலவுகள், ஊட்ட சத்தான உணவு எல்லாவற்றையும் கவனிக்க முடிகிறது. தேவைக்கு மட்டும் செலவு செய்துகொள்ள முடியும். இவளது அப்பா குழந்தைக்கான செலவுகளை கவனிக்க தயாராக இருக்கிறார்.இவளால்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் செய்துவைத்ததன் விளைவுகளை தான் மட்டும் ஏற்கவேண்டும் என்ற எண்ணம்.பெற்றவர்கள் இவளை ஒன்றும் சொல்வது இல்லை.

இவளுக்கான செலவுகளை செய்ய பெற்றவர்கள் தயார். இவளுக்கோ ,"நான் வித்யாசாகருக்கு சொந்தமானவள். எனது செலவுகளை என் பெற்றவர்கள் செய்தால் அவருக்கு இழுக்கு என்று மனதுள் நினைக்கிறாள். வாய்விட்டு சொன்னால் உதை விழும். இதெல்லாம் பெற்றவர்களுக்கு தெரியாது என்பது இவளது எண்ணம். அவர்கள் அறியாததா?

இதோ இப்போது இவளது காதல் யார் என்பது வரை அவர்களுக்கு தெரியும். ஆனாலும் மகளை எப்படி வழிக்கு கொண்டுவருவது என்பது தெரியவில்லை. நல்ல வரனாக வரும் பட்சத்தில் ஸ்ரீ தயாவை வளர்க்கும் பொறுப்பை இவர்கள் ஏற்பதற்கு தயாராக இருக்கிறார்கள்.இன்னமும் சாகம்பரியின் அப்பாவுக்கு வேலை சர்வீஸ் பத்து வருஷங்களுக்கு இருக்கிறது. பணத்திற்கு ஒன்றும் பற்றாக்குறை கிடையாது. அடுத்த வருஷம் கல்லூரி முடித்துவிட்டால் மகனும் வேலைக்கு சென்று விடுவான்.

இப்போது சாகம்பரி சரி என்று சொல்லி, வரனும் அமைந்தால் திருமணம் செய்து வைக்க சீர்,பணம்,நகை என்று எல்லாமே தயார் தான்.சிறுக சிறுக மகள் குழந்தையாக இருக்கும் பொழுதே சேர்க்கத் தொடங்கியது. சரியான திட்டமிடல் கொண்ட நடுத்தர வர்க்கம்.


தைக்கக் கொடுத்த துணிகளை வாங்கிக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு வரும் வழியில் மீண்டும் ஒரு ஜன சமுத்திரம்.கையில் நிறைய பைகளுடன் இருந்தாலும் வழியில் அங்கங்கே நின்று பாசி மணி ,ஊசி மணி வாங்கவும் தவறவில்லை.(அதாங்க காதுக்கு,கழுத்துக்கு ) கூடவே வீட்டுக்கு விலை குறைவாக இருக்கிறது என்று கட்டிய மல்லி மூன்று முழம் ஐம்பது ரூபாய்க்கும், கொஞ்சம் பழங்களும் வாங்கிக்கொண்டு பேருந்து நிலையத்தை ஒருவழியாக சென்று அடைந்தாள்.


பஸ்ஸில் இருக்கும் கூட்டத்துக்கு நிச்சயம் அதில் ஏற முடியாது.அப்படியே ஏறினாலும், வீடு போய் சேருவதற்கு இரவு தாமதம் ஆகிவிடும் என்று புரிந்தவளாக உபேர் புக் செய்து வீட்டுக்கு சென்று விடலாம் என்று முடிவெடுத்து அவள் தனது அலை பேசியில் உபேர் ஆப்பை திறப்பதற்கும் அவள் நின்று கொண்டிருந்த இடத்தில் அவள் வேலை செய்யும் ஹோட்டலின் அந்த பெரிய கார் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.

உள்ளிருந்து அவசரமாக வெளியே வந்த வித்யாசாகரின் காரியதரிசியை கண்டவளுக்கு விஷயம் தெளிவாக புரிந்தது.உள்ளே இருப்பவர் அவர் தாம்,வித்யாசாகர். வந்தவரோ, "மேம்,உங்கள சார் வண்டில ஏற சொல்றாரு. நீங்க பின்பக்கம் ஏறிக்கோங்க."என்று அவசரகதியில் காரின் பின்பக்க கதவை திரண்டு விட்டார்.

இங்கே இருக்கும் இடத்தில ஏதாவது பேசினால் நன்றாக இருக்காது என்று நினைத்தவள் ஒன்றும் பேசாமல் காருக்குள் ஏறினாள்.அங்கே ஏற்கனவே மறுபக்கம் அமர்ந்திருந்த வித்யாசாகர் இவளது கையில் இருக்கும் பைகளை வாங்கி உள்ளே சரியாக வைத்தார்.

வித்யாசாகரின் காரியதரிசி ராமுக்கு முகத்தில் லேசாக புன்னகை படர்ந்தது.அவருக்கு பெங்களூருவில் இருக்கும் பொழுதே சாகம்பரிக்கும் வித்யாசாகருக்குமான நெருக்கம் தெரியும்.ஆரம்பத்தில் சாகம்பரி மீது அலட்சியம் இருந்தது நிஜம் தான். அதற்கு பல காரணங்கள்.

இவ்வளவு வயது வித்தியாசத்தில் இருப்பவருடன் காதல் என்றது, வித்யாசாகருடன் திருமணம் இல்லாத உறவுக்கு சரி என்றது என அவளை பற்றிய அபிப்பிராயம் சரியாக இல்லை.அவரது பணத்துக்காகதான் வித்யாசாகரிடம் இவள் நெருங்கி இருப்பதாக நினைத்துக்கொண்டார்.


நாட்கள் செல்லும்போது ராமுக்கு இந்த பெண்ணின் மீது பிரமிப்புதான். ஒரு ரூபாய் அவரிடமிருந்து சாகம்பரி வாங்கியது இல்லை. இருவரும் ஒன்றாக இருந்தாலும் வித்யாசாகரிடமிருந்து இவள் எதையும் பெற்றுக்கொண்டதில்லை என்பது ராமுக்கு நன்றாகவே தெரியும். பின்னே எதற்கு இவள் இவரை தெரிவு செய்தாள் என்று பலநாட்கள் யோசனை. பிறகு இருவருக்குள்ளும் பிரிவு. இதோ இப்போதுதான் பார்க்கிறார். பெண்ணிடம் நிறைய வித்யாசங்கள்.இவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலின் சீருடையில் இருந்தாள். ராமுக்கு ஏதோ புரிவது போல இருந்தது. உங்களுக்கும் ஏதாவது புரியும். என்னவென்று யோசித்துக்கொண்டிருங்கள்.
 
Last edited:
Top Bottom