• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் அன்புக்கு நன்றி! - கதைத்திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
பேராதனை மாணவர்கள் இளைப்பாற, சில நேரங்களில் சேர்ந்திருந்து கற்க, பேசிச் சிரிக்க என்று எல்லாவற்றுக்கும் பயன்பட்டுக்கொண்டு இருந்தார்கள்.

அன்றும் அக்பர் பாலத்தின் மேலே, அதன் தொடக்கத்தில் நின்றிருந்தனர் சிசிர, மகிந்த நண்பர் கூட்டம். அவர்கள் சென்றுவந்த திரைப்படத்தைப் பற்றிப் பேசிச் சிரித்துக்கொண்டு இருந்தவர்களின் பார்வையில் பட்டாள் நிரல்யா. பாலத்தின் கீழே, பல்கலைக்குச் செல்லும் வீதியில், புத்தகங்களை மார்பில் அணைத்தபடி நடந்துகொண்டிருந்தாள்.

இனிமையாய் அதிர்ந்த சிசிர, “நிரா!” என்று மேலிருந்து கத்தினான். திடுக்கிட்டு நிமிர்ந்து மேலே அவள் பார்க்க, அங்கிருந்து கீழே பாய்வது போன்று அவன் செய்யவும் உண்மையாகவே பாய்ந்துவிடுவானோ என்று பயந்து, “ஏய், என்ன செய்றீங்க?” என்று தன்னை மறந்து கத்தியிருந்தாள் நிரல்யா.

அவனோ அவளுக்குப் பயம் காட்டிவிட்டு,
கைகள் இரண்டையும் பாலத்தின் சுவரில் ஊன்றியபடி அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான்.

என்ன விளையாட்டு இது? ஒருகணம் அவளுக்கு உயிரே போயிற்றே! நன்றாக முறைத்துவிட்டு விறுவிறு என்று நடக்கத் தொடங்கினாள். மனம் அவனைத் திட்டித் தீர்த்தது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவளின் முன்னே நின்றான் சிசிர.

இடுப்பில் கைகள் இரண்டையும் வைத்து, ஓடி வந்ததில் மூச்சு வாங்கியபடி, “எங்க போயிற்று வாறாய்?” என்று பேச்சுக் கொடுத்தான்.

அவனை ஒரு முறை முறைத்துவிட்டு அவள் தொடர்ந்து நடக்க, அவள் கைபற்றி நிறுத்தினான்.

‘இந்தச் சிங்களவனுக்குக் கையப் பிடிக்கிறதே வேலையாப் போச்சு!’ உள்ளம் பதற, “விடுங்க பிளீஸ்!” என்றாள் அழுத்தமாக.

அதிலேயே அவள் மிகுந்த கோபத்தில் இருக்கிறாள் என்று விளங்கிவிட, “ஓகே ஓகே விடுறன். ஆனா கோவிக்காத. அது சும்மா உன்னோட விளையாடினான்.” என்றான் சமாதானமாக.

அவளோடு கூட நடந்தபடி கெஞ்சியும் அவள் கேட்கவில்லை. கடைசியில் அவளைப் பெண்கள் விடுதி வரைக்கும் கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பி வந்தான் அவன்.

“என்னடா?” வேர்த்து விறுவிறுத்து வந்தவனிடம் வினவினான் மகிந்த.

“அவளுக்குக் கோவம் போல.”

“ஓ!” கும்பலே சேர்ந்து கோரஸ் வாசித்தது.

“என்னடா? நானே அவளை எப்பிடிச் சமாதானம் செய்றது எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்கிறன்.” சுருண்ட குழல்களுக்குள் இரண்டு கைகளையும் நுழைத்துக் கோதியபடி சொன்னான்.

“உனக்கு விளங்க இல்லையாடா? யாரா இருந்தாலும் நீ செய்த வேலைக்கு அந்த நிமிசம் பயந்துதான் இருப்பினம். ஆனா, இந்தக் கோவம் ஏன் எண்டு யோசி மச்சான்.”

கேள்வியோடு நண்பனை நோக்கியவனின் விழிகள் சந்தோசத்தில் விரிந்தன. “உண்மையாவாடா?” என்றான் ஆர்வமாக.

“போடா…” என்றவன் அடுத்து என்ன சொல்ல வந்திருப்பானோ, வேகமாக அவன் வாயைப் பொத்தியிருந்தான் சிசிர. “சுந்தரச் சிங்களம் கதைக்காமப் பேசாம இரு. நான் கொஞ்சம் யோசிக்க வேணும்!” என்று மகிந்தவைச் சமாதானம் செய்தான்.

நண்பர்களும் அவர்களின் கேலிகளும் அவனைச் சுற்றிச் சூழ்ந்திருந்தாலும் அதில் அவன் கவனம் செல்லவேயில்லை. உதட்டோரம் பூத்திருந்த மென் முறுவலோடு நண்பர்கள் சொன்ன அந்த அழகான உணர்வில் தன்னை மறந்து திளைத்திருந்தான்.

அவள் அவர்களின் பல்கலைக்குத் தெரிவான நேரத்திலேயே அவள் பற்றிய அத்தனை தரவுகளும் அவர்களிடம் வந்திருந்தன. ராக்கிங்காக அதைப் பெற்றிருந்தாலும் தனியாகச் சேகரித்ததெல்லாம் அவன் வைத்துக்கொள்ளவில்லை.

எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பென்பதே இயற்கையானது. இதில் இன்னோர் இனத்தைச் சேர்ந்தவள், உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகோடு, அவர்களின் மொழி தெரியாமல் மலங்க மலங்க விழிக்கையில் அவன் நெஞ்சத்தைக் கவர்ந்தது என்னவோ உண்மைதான்.

அதுவரையில் அவளைத் தூரத்திலிருந்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்வான். அதைப் பெரிதாகக் கொண்டுபோக எண்ணியதே இல்லை. ஏதோ ஒரு ஈர்ப்பு. அவனுடைய ரசனைக்குரியவளாக அவள் இருந்தாள். அவ்வளவுதான்.

அன்று மகிந்தனைப் பிடிக்க ஓடி வருகையில் சடசட என்று மழை கொட்ட ஆரம்பித்திருந்தது. அதிலிருந்து தப்பிக்கவும் இத்தனை நாள்களும் தூர இருந்து தன்னை ஈர்த்தவளை பக்கத்திலிருந்து பார்க்கும் ஆசையிலும்தான் அவள் குடைக்குள் புகுந்திருந்தான்.

ஆனால், அவள் மிரண்ட குழந்தையாகப் பயந்து நின்றது நெஞ்சை அள்ளியிருந்தது.

பக்கத்தில் பார்த்த பிறகு விலகி நிற்க முடியவில்லை. அவ்வளவு காலமும் சினமூட்டிய மழையை அதன் பிறகெல்லாம் எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தான். அவனிடமிருந்த குடைகளெல்லாம் திடீரென்று தொலைந்து போயின.

இதில் அன்று குடையை விரிக்காமல் அவனுக்கு அவள் சவால் விட்ட அழகில் மயங்கியே போனான். பயந்தவள் என்றாலும் சேட்டைக்காரி என்று அன்றுதான் கண்டுகொண்டான். கூடவே, குடைக்குள் புகுவதை வேண்டுமென்றே செய்கிறான் என்று அவளும் கண்டுகொண்டிருக்கிறாள் என்று அறிந்துகொண்டான்.

அவள் கரம் பற்றிய கணத்தில் அதன் மென்மையில் அவன் தொலைந்து போனதும் உண்மைதான். லைப்ரரிக்குச் செல்லும் வழியில் அவள் சொன்ன ‘ம்ம்’ அடுத்த ஹைலைட். அப்படியே அள்ளியணைத்துக் கொஞ்சும் ஆசையைத் தூண்டி விட்டிருந்தாள்.

இனி? அவனுக்குத் தெரியவில்லை! அவனுக்கும் அவளுக்குமிடையில் என்ன நடக்கப் போகிறதென்றும் தெரியவில்லை.

அவனுடைய சொந்த இடம் காலி. மிகுந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். தந்தை தேநீர்க் கடை ஒன்றை அவர்களின் கிராமத்துச் சந்தியில் வைத்திருக்கிறார். அம்மா அவருக்கு உதவியாக இருப்பார். அவ்வப்போது வீட்டு வேலைகளுக்கும் போவார். ஒரு தங்கை. உண்மையைச் சொல்லப்போனால் மொத்தக் குடும்பமும் அவர்களின் சுக துக்கங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அவனைப் படிப்பிக்கிறார்கள். மொத்த வீட்டினதும் பொறுப்பு அவன் தலையில் இருக்கிறது. இதில், ஒரு நேசம் துளிவிடும் சத்தம் அவன் இதயத்தினுள்.

அவள் வீட்டினரைப் பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது. ஆனால், வசதியான வீட்டுப் பிள்ளை என்று நன்றாகத் தெரிந்தது. அவளும் இவனிடமிருந்து எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என்றுதான் பார்ப்பாள். அப்படியிருக்க இன்று நண்பர்கள் சொன்ன ஒற்றை வார்த்தை அவன் இதயத்தையே பிரட்டிப் போட்டது.

அப்படியும் இருக்குமோ என்று அதிலேயே நின்று சுழன்றான். அவள்பால் பொங்கும் இந்த உள்ளக் கிளர்ச்சியை வளர்க்கவும் பயந்தான். ஒட்ட நறுக்கவும் முடியாத இயலாமையில் கிடந்து பொசுங்கினான்.

அடுத்த இரண்டு நாள்களும் மழை தூறினாலும் கூட அவள் குடை கொண்டு வரவில்லை. முதுகில் தொங்கும் பாக்கிலும் குடை இல்லை. சரண்யா இருந்தால் அவள் குடைக்குள் வந்தாள். இல்லையோ நனைந்தாள்.

அவளின் அந்தப் பாரா முகத்தில் திணறித்தான் போனான் சிசிர பண்டார. சின்னதாய் ஒரு விளையாட்டு. அவளைப் பார்த்த கணத்தில் தன்னை மீறிப் பொங்கிய உற்சாகத்தில் செய்திருந்தான். இப்போது எப்படி அவளைச் சமாதானம் செய்வது என்று தெரியாது நின்றான்.



கருத்திட

மக்களே,

பேராதனைக்கு நான் இதுவரையில் போனது இல்லை. எல்லாமே இணையத்தில் பெற்ற தரவுகளை வைத்துத்தான் எழுதுறேன். ஆனால், அடுத்தமுறை இலங்கை நான் போகும்போது என் சுற்றுலா திட்டத்தில் பேராதனை நிச்சயம் இருக்கும். ஓ ராதாவுக்கு அவர்கள் போன பொற்கோயில் போட்டோ போட்ட மாதிரி பேராதனைக்கும் நான் எடுத்த போட்டோஸ் போடுறேன். இப்ப இணையத்தில் எடுத்த போட்டோஸ் போடுறேன் பாருங்க.

கதை நல்லா போகுதா? ஓகேயா உங்க எல்லோருக்கும்? அனந்தன், நிரல், சிசிர இவர்கள் மூவரையும் சுற்றியதுதான் கதை. யார் ஹீரோ என்றால் இருவருமே என்றுதான் சொல்வேன். அப்படி இரண்டு நாயகர்கள் போல் வருவது மனத்துக்குப் பிடிக்காமல் இருக்கா? அப்படி எதுவும் இல்லைதானே? நிரலின் வாழ்க்கை இவர்கள் இருவரில் யாரோ ஒருவரோடுதான் இருக்கப் போகிறது. அவன் யார், ஏன் அப்படியானது என்பதுதான் கதை.

வேற என்ன சொல்ல? மிக்க மிக்க நன்றி, கருத்திடுவதற்கும், சிங்களம் தெரிந்தவர்கள் நீங்களாகவே முன் வந்து சிங்களச் சொற்கள், வசனங்கள் சொல்வதற்கும்.

அம்மா பிறந்தது, படித்தது எல்லாம் காலி. அவாவிடம் கேட்டால் எல்லாம் கிடைக்கும். என்ன, ஒரு சொல்லுக்காக அவாக்கு கோலை(call) போட்டால் எழுதிக்கொண்டு இருக்கும் கதை மறந்து சொந்த கதைக்குள் நான் போய், கடைசியில் எழுதும் கதை என் கறிச் சட்டிக்குள்தான் வேகும்.

அதனால்தான் உங்களிடமே உதவிக்கு வந்துவிட்டேன். நன்றி நன்றி.

அடுத்த அத்தியாயம் பெரும்பாலும் அடுத்த திங்கள்தான் வரும். அனைவருக்கும் ஹாப்பி வீக்கெண்ட்!
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
1708124754803.png


1708124808182.png

1708124849665.png



1708124951976.png



1708125058349.png
அக்பர் பாலம் (படம் 1)

1708125186649.png

இந்த இடத்தைக் கற்பனையில் நினைத்துத்தான் சிசிர பாய்வதாகப் பயம் காட்டும் சீன் எழுதினேன். இதற்குக் கீழே வீதி போகிறது. இது பல்கலையிலிருந்து செல்கையில் பாலம் ஆரம்பிக்கும் இடம். அப்படியே நடந்துவந்தால் மகாவலி கங்கையின் மேலே நிற்பதாக இருக்கும்(படம் 1).


1708125336166.png

யகா பாலம் (பேய்ப் பாலம்)


Gajasinghe-Bridge.jpg

கஜசிங்க பாலம்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 6


சிசிர மீது மிகுந்த கோபத்தில் இருந்தாள் நிரல்யா. அந்தளவில் அவன் பார்த்த வேலையில் அவள் இதயம் நின்று துடித்திருந்தது. எதில் விளையாடுவது என்று இல்லையா? அவன் விளையாட்டுக்குச் செய்யப்போய் அது விபரீதமாக முடிந்திருந்தால்?

அதைவிட, இப்போதெல்லாம் அவனிடமிருந்து விலகியிரு என்று எச்சரிக்கும் அறிவுக்கு இசைகிறவளாக, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஒதுங்கிக்கொண்டாள். அவனுடைய எந்தச் சமாதான முயற்சிக்கும் இசைந்து கொடுக்கவேயில்லை.

முதல் செமஸ்ட்டர் பரீட்சைகள் வரவிருப்பதில் அன்று அறிவுறுத்தல் கூட்டம் ஒன்றினை சீனியர் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அதற்காக மரங்களின் கூடல்களுக்குள் மாணவர்கள் குழுமியிருந்தனர். ஐவர் நடுவில் நின்று சொல்லவேண்டியவற்றைச் சொல்லிக்கொண்டிருக்க, மாணவ மாணவியர் அவர்களைச் சுற்றி நின்று கேட்டுக்கொண்டிருந்தனர். நிரல்யாவுக்கு எப்போதுமே கூட்டத்துக்குள் முண்டியடித்துக்கொண்டு நிற்பது பிடிக்காது. அதில் பின் வரிசையில் நின்று, அவர்கள் சொல்வதற்குக் காதைக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

அவர்கள் எல்லோருக்கும் பின்னிருந்த ஒரு மரத்தின் வளைந்து போகும் பெரிய கிளை ஒன்றில் ஏறி அமர்ந்திருந்த சிசிர, அருகில் இருந்த மகிந்தவின் தோளைச் சுற்றிக் கையைப் போட்டபடி வேண்டுமென்று இவளையேதான் பார்த்திருந்தான். சிறிது நேரத்திலேயே அதைக் கண்டுகொண்டிருந்தாள் நிரல்யா. அதன்பிறகு அவளால் அங்கே சொல்கிறவற்றில் கவனம் செலுத்த முடியவில்லை. மெல்லிய கோபம் மூண்டது. திரும்பி அவனைப் பார்த்தாள். அப்போது அவன் எங்கோ பார்த்தான். அவள் பாராதபோது அவளையே பார்ப்பதும், அவள் அவன் புறமாகத் திரும்புகிற பொழுதுகளில் எல்லாம் வேறு எங்கோ பார்ப்பது என்று நடித்துக்கொண்டே இருந்தான். பொறுத்து பொறுத்துப் பார்த்தவளுக்கு சினம் பற்றிக்கொண்டு வந்தது.

அவளும் எவ்வளவு நேரம்தான் உன் பார்வை என்னை எதுவும் செய்யவில்லை என்பதுபோல் நடிப்பது? ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் முறைப்புடன் அவனையே பார்த்தாள்.

இதற்காகத்தானே அவனும் காத்திருந்தான். உதட்டோரம் நெளிந்த விசமச் சிரிப்புடன் மகிந்தவை இறுக்கி அணைத்து, அவன் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டு, “உம்பகே கேந்தித் லஸ்ஸனை மச்சங்.(உன் கோபம் கூட அழகு மச்சான்!)” என்று கொஞ்சினான்.

கூட்டத்தில் கவனமாக இருந்த மகிந்தவுக்கு திடீர் என்று நடந்த அசம்பாவிதத்தில் பகீர் என்றது. அதிர்ந்து திரும்பி, “ஒயாட்ட பிஸ்ஸுத?(பைத்தியமாடா உனக்கு?)” என்று கேட்டுவிட்டுத் துள்ளிக் குதித்து ஓடியிருந்தான்.

அவன் செய்கையில் அதிர்ந்து, விழிகள் விரிய நின்றிருந்த நிரல்யா மகிந்தவின் ஓட்டத்தில் பக்கென்று சிரித்திருந்தாள். நல்ல காலம் அவசரமாக இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக்கொண்டதில் சத்தம் வெளியே வராமல் போயிற்று.

சிசிரவின் உதட்டிலும் சிரிப்பு. அவளைச் சீண்ட எண்ணியது உண்மைதான். ஆனால் இந்த முத்தம்? நண்பனுக்குக் கொடுத்தாலும் அதில் இருந்த உணர்வுகள்… முகத்தில் ஏறிவிட்ட மெல்லிய சிவப்புடன் தலையைக் கோதியபடி அவளையே பார்த்தான்.

இவ்வளவு நேரம் அவன் செய்த சேட்டையில் கோபம் எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டிருந்தவள் அந்தப் பார்வை தந்த இனம்புரியா உணர்வில் தடுமாறிப் போனாள். வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் மனம் குழம்பிப் போயிற்று.

என்னாயிற்று அவளுக்கு? அவன் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லையே. ஏன்? மனத்தின் போக்குப் புரியாமல் அவளை ஒரு விதப் பதற்றம் தொற்றிக்கொண்டிருந்தது. இனி அவன் புறம் திரும்பவே கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டாள்.

*****

அன்று வெள்ளிக்கிழமை. அவளோடு தங்கியிருப்பவள் வார இறுதிக்கு வீட்டுக்குச் சென்றிருந்தாள். சரண்யா கண்டியைச் சேர்ந்தவள் என்பதால் விடுதியில் தங்குவதில்லை. சத்தமே இல்லாத அறையில் மனத்தை ஒருமுகப்படுத்திப் படித்தாள். ஒரு கட்டத்தில் மண்டை முழுவதும் சூடானது போன்ற ஒரு உணர்வு. இதற்குமேல் படித்தாலும் எதுவும் மண்டையில் பதியாது என்று தெரிய, யன்னல் வழியாக வெளியில் பார்த்தாள்.

அன்று மழையும் இல்லாமல் ஈரலிப்பும் இல்லாமல் மெல்லிய வெயில் எரித்துக்கொண்டிருந்தது. இந்தக் காலநிலையை அனுபவிக்காமல் விடுவதா? சட்டென்று தொற்றிக்கொண்ட உற்சாகத்துடன் கால்களில் பாட்டாவை மாட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டாள்.

அவளின் அறை இருப்பது இரண்டாம் மாடியில். அந்த நீண்ட கொரிடோரின் இரு புறமும் இருந்த சில அறைகள் நிசப்தமாய் இருக்க, மற்றைய அறைகள் அதற்கும் சேர்த்துச் சிரிப்பும் பேச்சுமாய்ச் சத்தமாய் இருந்தன. உதட்டோரம் தானாக மலர்ந்த குட்டிச் சிரிப்போடு விறுவிறு என்று நடந்து, கிடுகிடு என்று படிகளில் இறங்கி, விடுதியை விட்டு வெளியே வந்தவளின் உள்ளம், அந்தக் காலநிலையைப் போலவே நல்ல மனநிலையில் இருந்தது.

நடையில் தானாகவே ஒரு துள்ளல் வந்து ஒட்டிக்கொள்ள, காதுகளில் ஹெட்போன்களை மாட்டி, மனத்தை நிறைக்கும் மெல்லிசையை வழிய விட்டுவிட்டு, ஜீன்ஸ் பின் பொக்கெட்டினுள் கைப்பேசியைத் திணித்துவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.

அவளைப் போன்று அந்தக் காலநிலையை அனுபவிக்க வந்த வேறுசில மாணவர்களும் ஆங்காங்கே தென்பட்டனர்.

தெரிந்தவர்களுக்கு ஒரு சின்ன புன்னகையைக் கொடுத்தவாறே நடந்தவளை ஓங்கி வளர்ந்து, கடும் பச்சை இலைகளோடு கிளை பரப்பி நின்ற மரத்தின் மொத்த உடலையும், இளம் பச்சை நிறத்தில் சின்ன சின்ன இலைகள் கொண்ட கொடிகள் படர்ந்து, மறைத்து நின்ற அழகு ஈர்த்தது. கூடவே சிசிரவின் நினைவும் தன்னாலே வந்தது.

ஒரு வாரமாக அவனிடமிருந்து ஒதுங்கி இருந்தாள். ஆனால், கடந்த மூன்று நாள்களாக அவனைக் காணவே கிடைக்கவில்லை. இப்படிக் கண்ணில் படாமல் இருக்கமாட்டானே என்கிற யோசனையுடன் மற்றவர் கவனத்தைக் கவராத வகையில் விசாரித்ததில் ப்ராஜெக்ட் விசயமாக அவன் குழுவினர் எல்லோரும் கண்டிக்குப் போயிருக்கிறார்களாம் என்று அறிந்துகொண்டிருந்தாள்.

அவன் திரும்பி வந்தபிறகும் இப்போது போலவே ஒதுங்கி இருந்துகொள்ள வேண்டும், அவன் விளையாட்டுத்தனத்துக்கு இசைந்து கொடுத்ததெல்லாம் போதும் என்று எண்ணிக்கொண்டாள். அன்றைய அவன் பார்வையும் சிரிப்பும் அந்தளவில் அவளுக்குள் ஒரு பூகம்பத்தையே கிளப்பிவிட்டிருந்தன. அவனுக்கும் இது மூன்றாவது வருடம். படிப்பில் மும்முரமாகிவிடுவான் என்று யோசித்துக்கொண்டு அந்த மரத்தின் அருகே சென்றாள்.

அன்று அவன் அமர்ந்திருந்தது போலவே அவளுக்கும் இந்த மரத்தின் கிளையில் ஏறி இருக்கும் ஆசை உண்டாயிற்று. இது அவளின் நிறைய நாள் ஆசை. வெட்கம், கூச்சம், யாரும் சிரித்துவிடுவார்களோ என்று நிறைவேற்றாமல் இருந்தாள். இன்றைக்கு அந்த ஆசையைத் தவறவிட மனமேயில்லை. அதுவும் கால்களை ஆட்டிக்கொண்டு, நண்பனின் தோளைச் சுற்றிக் கையைப் போட்டுக்கொண்டு, அவளை வெறுப்பேற்றியவனைப் பார்த்த பிறகு, அவளுக்கும் அப்படி இருந்து பார்க்கும் ஆசை அந்த மரத்தளவு வளர்ந்திருந்தது. ஆனால், அந்தக் கிளை அவள் இடுப்பையும் தாண்டி உயர்ந்து நிற்கிறதே!

ஏறுவதானால் துள்ளி ஏற வேண்டும். முடியாமல் போய், அதை யாராவது பார்த்துவிட்டால் மானம் போய்விடும். அந்தளவில் அவளைக் கவனிப்பார்களா என்ன? என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கையில் பின்னிருந்து அவளின் தோளைத் தொட்டது ஒரு கை. திடுக்கிட்டு, யார் என்று வேகமாகத் துள்ளித் திரும்பிப் பார்த்தாள். அதற்காகவே காத்திருந்த சிசிர, அவள் இடையைப் பற்றித் தூக்கி, அந்த மரத்தின் கிளையில் அமர்த்தி இருந்தான்.

நடந்ததை உணரவே அவளுக்குச் சில கணங்கள் பிடித்திருந்தன. உணர்ந்ததும் திகைத்து, அவன் தோள்களையே ஆதாரத்துக்குப் பற்றிக்கொண்டு நடுங்கிக்கொண்டிருந்தாள். அதைவிட ஒரு ஆணின் கை இடையில் பட்டதினால் உண்டான விதிர்விதிர்ப்பு, அதனால் உண்டான பதற்றம் என்று அவள் முகம் சிவந்து, விழிகளும் இலேசாகக் கலங்கிப் போயின.

அவனுக்கே ஒருமாதிரி ஆகிவிட, “ஈஸி ஈஸி!” என்றான் அவள் கைகளைப் பற்றிக்கொண்டு.

பட்டென்று அவன் கைகளைத் தட்டி விட்டுவிட்டு, “என்ன வேலை பாக்கிறீங்க?” என்று தன்னை மறந்து தமிழில் சினந்தாள்.

“மொகத?(என்ன?)”

அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை. இதில் எங்கே ஆங்கிலம் வருவது?
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
ஆனால், கன்றிக் கலங்கிச் சிவந்திருந்த முகம் அவள் மனத்தை உரைக்க, “சும்மா ஒரு உதவி.” என்றான் அவன் ஆங்கிலத்தில்.

“நான் கேட்டனானா?” அவளும் ஆங்கிலத்தில் சீறினாள்.

அவனுக்கு அவளின் கோபம் சிரிப்பைத் தோற்றுவிக்க, “கேட்டாத்தான் செய்யோணுமா?” என்றான் இலகு குரலில்.

“கேட்டாக்கூட செய்யாதீங்க. போங்க!” என்றாள் மிரட்டலாக. அந்தளவில் அவளின் இருபுறமும் மரத்தின் கிளையில் கைகளை ஊன்றி நின்ற அவன், விட்டால் அவளின் கால்கள் இரண்டுக்குள்ளும் வந்துவிடுவான் போலிருந்தது. அந்த நெருக்கம் அவளை என்னவோ செய்தது.

அதுவும் அவனுடையவை கடும் நீல நிற விழிகள். சும்மாவே அப்படித்தானா இல்லை அவளிடம் மட்டும் பிரத்தியேகமாகச் சேட்டை விடுகிறதா என்று தெரியவில்லை. அடர்ந்த புருவங்களுக்குக் கீழே இருந்துகொண்டு அவளைப் பார்த்தாலே சிரிக்க ஆரம்பித்துவிடுகின்றன. இன்றும் அப்படித்தான் அவளைச் சீண்டிக்கொண்டிருந்தன. அந்த விழிகளை எதிர்கொள்ள இயலாமல், வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு தன் படபடப்பைக் குறைக்க முயல, அவனோ ஒரே தாவலில் தாவி ஏறி, அவள் அருகில் தானும் அமர்ந்துகொண்டான்.

‘கடவுளே! இண்டைக்கு இவன் என்னை என்னவோ செய்யப் போறான்!’ உள்ளுக்குள் அலறியபடி அவனையே அதிர்ந்து பார்த்தாள். ஒரே ஓட்டமாக இறங்கி ஓடடி என்று அறிவு அறிவுறுத்தினாலும் உடல் இயங்கமாட்டேன் என்றது.

அந்த விழிகளில் என்ன படித்தானோ, “அனே மகே நிரா! எய் ஒயா மெச்சர கலபல (kalabala) வென்னே? (ஓ என் நிரா! உனக்கு ஏன் இவ்வளவு பதற்றம்?)” என்றுவிட்டு, ஜீன்ஸ் பின் பொக்கெட்டிலிருந்து ஒரு கச்சான் சரையை(வேர்க்கடலைப் பொட்டலம்) எடுத்துப் பிரித்து, அவள் புறமாக நீட்டினான்.

அவள் எடுக்கவில்லை. மனத்தைச் சூழ்ந்த கலக்கமும் தயக்கமும் அவள் இயல்பைப் பறித்துக்கொண்டன. அவனிடமிருந்து ஒதுங்க அவள் நினைக்க, குரங்குக் குட்டி மாதிரி அவளைத் தூக்கிப் பக்கத்திலேயே இருத்தி வைத்துக்கொண்டு கச்சான்(வேர்க்கடலை) தருகிறவனை என்ன செய்வது?

“பிறகு?” மொழி பெயர்க்க சரண்யா இல்லாததால் ஆங்கிலத்திலேயே பேச்சை ஆரம்பித்தான்.

ஒரு முறை கேள்வியாகப் புருவம் சுருக்கியவள், அவன் விழிகள் மீண்டும் அவளுக்குள் ஊடுருவுவது போலிருக்க, பதறிப்போய்ப் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.

“எப்பிடிப் போச்சு இந்த மூண்டு நாளும்?”

“நல்லாப் போச்சு.”

“படிக்கிறியா?”

“ம்!”

“ஈஸியா இருக்கா?”

“பரவாயில்ல.”

“ஊருக்குப் போகேல்லையா?”

“லீவுக்கே போவம் எண்டு இருக்கிறன்.”

“நல்ல முடிவு!” என்றான் அவன் அவளிடம் உடைத்த கச்சான்களை நீட்டியபடி.

ஏன் நல்ல முடிவு என்று சொன்னான் என்கிற கேள்வியோடு அவனைத் திரும்பிப் பார்த்தபோதுதான், அவன் கச்சான்களை உடைத்துத் தர தரத் தான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம் என்று அவளே உணர்ந்தாள்,

‘அடியேய் மானங்கெட்ட மங்காத்தா, வெக்கமே இல்லையாடி உனக்கு?’ என்று உள்ளே அலறியவளால் அப்போதும் அவன் உடைத்துத் தந்த கச்சானைகளை வாங்காமல் இருக்க முடியவில்லை. வாங்கிச் சாப்பிட்டபடி அவனை அவனறியாமல் அளவிட்டாள்.

அவளைப் போல் அல்லாமல் வெகு இலகுவாக அந்தக் கிளையில் அமர்ந்திருந்து, கால்களை மெல்ல ஆட்டியபடி, மடியில் கச்சான் சரை இருக்க, அதிலிருந்து கச்சான்களை உடைத்து, அவற்றின் தோல்களைக் கசக்கி, வாயால் ஊதிப் பறக்க வைத்துவிட்டு அவளிடம் நீட்டிக்கொண்டிருந்தான். அவள் எப்படி அவன் உடைத்துத் தருகிறான் என்பதை உணராமல் வாங்கிச் சாப்பிட்டாளோ, அதே போலவே அவளுக்கும் உடைத்துக் கொடுக்கிறோம் என்பதை அவன் உணர்த்தாற்போல் தெரியவில்லை. இயல்பு போன்ற அவனின் அந்தச் செய்கை அவள் இதயத்தை மிகவும் கவர்ந்தது. அவனிடமிருந்து விழிகளை அகற்ற முடியாமல் நின்றாள்.

“என்னைத் தேடினியா?” இப்போதும் உடைத்த கச்சான்களின் தோள்களை உள்ளங்கையில் வைத்து ஊதிவிட்டு வினவினான்.

முகம் சூடாக, “நான் ஏன் உங்களத் தேட?” என்று புருவங்களை உச்சிமேட்டுக்கே உயர்த்தி வினவினாள் அவள்.

“ம்ஹூம்! நீ என்னைத் தேடேல்ல, என்னைப் பற்றி யோசிக்கேல்ல?” அவள் முகம் பார்த்துக் கேள்வி கேட்டுக்கொண்டே அவற்றை நீட்டினான்.

“ம்ஹூம்!” கச்சானை வாயில் போட்டபடி அவள் மறுக்க, சிரிப்பில் பளபளக்கும் அந்தக் கண்களையும், அசையும் இதழ்களையும் பார்வை ஒருமுறை தொட்டுவர, “பொரு கியன்னெபா நிரா!(பொய் சொல்லாத நிரா!)” என்றான் பொய் மிரட்டலாக.

அவன் சிங்களத்தில் சொன்னாலும் அவளுக்கு விளங்கிற்று. கூடவே அவன் பேச்சும் பார்வையும் சேர்ந்து மண்டைக்குள் அபாயச் சங்கை ஊத, “நான் போகோணும்.” என்று முணுமுணுத்துவிட்டுக் கிளையிலிருந்து கீழே பாய்ந்தாள்.

அவனும் தடுக்கவில்லை. தானும் பாய்ந்து, கீழே கழட்டி விட்ட செருப்பை மாட்டிக்கொண்டு கூடவே வந்தான்.

“எக்ஸாம்ஸ் வருது. கவனமாப் படி. நானும் அடிக்கடி வரமாட்டன். தேடாத!” என்றவனை நின்று திரும்பி, கைகளைக் கட்டிக்கொண்டு நன்றாக முறைத்தாள் நிரல்யா.

ஒருகணம் அவள் பார்வையை எதிர்கொண்டவன், உதட்டோரம் சிரிப்பு நெளிய உடைத்த கச்சான் ஒன்றை அவள் வாயை நோக்கி எறிந்தான். தன்னிச்சையாய் வாயைத் திறந்து வாங்கிக்கொண்டவள் அதன் பிறகே நடந்ததை உணர்ந்தாள். சட்டென்று முகம் செவ்வரத்தம் பூவாகச் சிவந்துவிட, சிரிக்கும் அவன் பார்வையையும் எதிர்கொள்ள இயலாமல் கிட்டத்தட்ட அங்கிருந்து ஓடினாள்.

அதன் பின்னான நாள்களில் இருவருமே படிப்பில் கவனத்தைச் செலுத்தினர். ஆனாலும் பார்வைப் பரிமாறல்கள், கண்ணால் சீண்டிச் சிரிப்பது, முறைப்பது என்று அனைத்தும் நன்றாகவே நடந்தன. அவளின் கட்டுப்பாடுகளை எல்லாம் மெல்ல மெல்லத் தகர்த்துக்கொண்டு அவள் மனத்தை நெருங்கிக்கொண்டிருந்தான் சிசிர பண்டார. அது விளங்கியும் விளங்காத ஒரு அழகான கனவுலகில் இருந்தாள் நிரல்யா.

ஒரு வழியாக முதல் செமஸ்டர் நல்லபடியாகவே முடிந்திருந்தது.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேல் வவுனியா செல்லாததும், வீட்டினரைப் பாராததும் சேர்ந்து அங்குப் போகப் போகிறோம் என்றதும் தனியானதொரு சந்தோசத்தைத் தந்திருந்தது.

இட மாற்றம், சூழ்நிலை மாற்றம், மனத்தின் மாற்றம் எல்லாம் சேர்ந்து ஆண்கள் இருவர் மீதிருந்த கோபமும் சற்றே தளர்ந்திருந்தது. ஆர்வமாக வவுனியா இரயில் நிலையத்தில் வந்திறங்கியவள், அங்கே அவளுக்காகக் காத்திருந்த அனந்தனைக் கண்டு அதிர்ந்தாள்.

அவனிடம் அப்படி ஒரு மாற்றம். உடற்பயிற்சியில் உடம்பை நன்றாக வளர்த்திருந்தான். முகத்தில் இறுக்கம், விழிகளில் மிகுந்த கடினம். தாடி மீசை எல்லாம் இன்னுமே வளர்ந்து என்னவோ நெஞ்சினைச் சில்லிட வைத்தான்.

ஏன் இப்படி? காரணமறியாது அவள் மனம் அவனுக்காய்ப் பரிதவித்துப் போயிற்று.

பஜிரோ சற்றுத் தூரம் பயணித்ததும், “எப்பிடி இருக்கிறீங்க?” என்றாள் மெல்லிய குரலில்.

சற்று நேரம் அவனிடம் பதிலே இல்லை. திரும்பிப் பார்த்தாள். சுளித்திருந்த புருவங்களோடு பாதையில் கவனம் வைத்திருந்தான் அவன்.

“எப்பிடி இருக்கிறீங்க எண்டு கேட்டனான்.” என்றதும், “என்ன புதுசா?” என்றான் அவன் பட்டென்று.

அவளுக்கு முகம் சுண்டிப்போனது. இப்போது என்ன கோவம் இவனுக்கு? அதற்குமேல் அவளுக்கும் அவனிடம் பேச்சுக் கொடுக்கத் தைரியம் வரவில்லை. முகத்தைத் திரும்பியபடி அமர்ந்திருந்தாள்.

எப்போதுமே அவளின் வார்த்தைகளுக்கு அவனிடம் மதிப்பில்லை என்கிற எண்ணம் அவளிடம் உண்டு. அன்றும் அதேதான் நடந்தது. எனக்கு வேண்டாம் என்று சொன்னதை, அவளின் கோபத்தை அவன் மதிக்கவில்லை. தன் பிடிவாதத்தால் தான் நினைத்ததை அவளைச் செய்ய வைத்தான். அது கொடுத்த சினத்தில்தான் அவனிடம் அன்று சீறியிருந்தாள்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அதன் பிறகான இத்தனை மாத இடைவெளியில் அதையெல்லாம் கடந்து வந்திருந்தவளுக்கு அவன் கோபத்துக்கான பொருள் விளங்கவில்லை. இவன் என்றுதான் நன்றாக இருந்தான் என்கிற சலிப்புத்தான் உண்டாயிற்று.

அப்போது அவன் பஜிரோவை ஒரு பைக் முந்திற்று. முந்தியதுமல்லாமல் சிக்சக்காக(zigzag) வளைத்து வளைத்து ஓட, பார்த்திருந்த நிரல்யாவுக்கே பதறியது. இவனை விலகிப்போக விடுவதாகவும் இல்லை. பயத்துடன் அனந்தனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவன் கண்களில் சினம். தாடையின் இறுக்கத்திலேயே பல்லைக் கடிக்கிறான் என்று விளங்கிற்று. மனம் திகிலுற, ‘அடேய் உயிரோட ஓடித் தப்படா! அநியாயமா அடி வாங்கி, உடம்பப் புண்ணாக்காத!’ என்று இவள் நினைத்து முடிக்க முதலே, பஜிரோவை மிக வேகமாக வெட்டி அவனை முந்திச் சென்று, குறுக்காகக் கொண்டுபோய்ச் சரக்கென்று பிரேக்கிட்டு நிறுத்தினான்.

இதை எதிர்பாராத பைக்காரன் படுவேகமாக பிரேக்கை அழுத்த, தார் வீதியோடு டயர் உராய்ந்து வந்து, கிறீச்சிட்டு நின்ற சத்தத்தில் இவளுக்கு நெஞ்சு ஒருகணம் தன் துடிப்பை நிறுத்தியிருந்தது. பஜிரோவிலிருந்து பாய்ந்து இறங்கியன் அவன் தலையிலிருந்த ஹெல்மெட்டை இழுத்து எடுத்துவிட்டு, பளார் பளார் என்று விட்ட அறைகளில் தரையில் சுருண்டு கிடந்தான் அவன். அப்போதும் சினம் தணியாமல் பைக்கை எட்டி உதைத்துவிட்டு, வந்து இறங்கியது போலவே பாய்ந்து ஏறியவன் அதே ஆவேசத்தோடு பஜிரோவையும் சீறவிட்டான்.

விழிகள் இரண்டும் வெளியே வந்துவிடும்போல் விரிந்திருக்க, அவனிடமிருந்து பார்வையை அகற்ற வேண்டும் என்கிற நினைப்பே இல்லாமல் அவனையே பார்த்திருந்தாள்.

அந்த பைக்காரன் செய்தது மிகவும் ஆபத்தான வேலைதான். அதற்கென்று இந்தளவில் கடுமை காட்டுவதா? என்னவோ வரவர அவன் முரட்டுத்தனம் கூடிக்கொண்டே போவது போலிருந்தது அவளுக்கு.

அவள் அசைவற்றிருப்பதை அவனும் கவனித்துவிட்டான் போலும். “ஏய் என்னடி பார்வை இது? உனக்கு முதலே சொல்லியிருக்கிறன், இப்பிடி என்னைப் பாக்காத எண்டு! நான் இப்பிடித்தான் விளங்கினதா? உனக்கு ஏற்ற மாதிரியெல்லாம் மாறேலாது. இன்னொருக்கா இப்பிடிப் பாத்தாய் எண்டு வை!” என்றுவிட்டு அவன் பார்த்த பார்வையில் அவளுக்குச் சர்வமும் அடங்கிய நிலை. வேகமாக முகத்தை வெளிப்புறம் திருப்பிக்கொண்டாள். அவன் அருகில் இருக்கவே பயமாயிற்று.

ஏன் இந்தக் கோவம், எதற்கு இப்படி அவளிடம் சீறிப் பாய்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை. அவள் ஒடுங்கி அமர்ந்திருப்பதையும் தாங்க முடியாமல் ஜீப்பை ஓரம் கட்டினான். தன் மீதே எழும் சினத்தையும் சீற்றத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் ஸ்டேரிங்கில் ஓங்கிக் குத்தினான்.

அதற்கும் அவளுக்குத் தேகம் தூக்கிப்போட்டது.

அவள் தோற்றம், அதில் தெரிந்த செழிப்பு, முகத்தின் பளபளப்பு, அவனை யாரோ ஒரு தெரிந்த மனிதனாய்ப் பாவித்து இயல்பாய் நலன் விசாரித்தது என்று அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. அவன் அவனாக இல்லை. ஏதோ ஒன்று போட்டு அழுத்தியது. உன் வார்த்தைகளால் என் நெஞ்சைக் கீறி, என்னை இங்கே புளுங்க வைத்துவிட்டு அங்கே நீ சந்தோசமாக இருந்துவிட்டு வருகிறாயா என்கிற கோபமா, ஆழ்மனது எதற்கோ பயந்து நடுங்கியதால் உண்டான இயலாமையா அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை.

ஒரு நெடிய மூச்சை இழுத்து விட்டுவிட்டு, “சொறி!” என்றான் கனத்த உரலில்.

அவள் இவன் புறம் திரும்பவே இல்லை. உதட்டைக் கடித்தபடி சற்று நேரம் அவளையே பார்த்தவன், மடியில் கிடந்த அவளின் ஒற்றைக் கரத்தைப் பற்றி, “நிரல்!” என்றான் இறங்கிய குரலில்.

நிறைய நாள்களுக்குப் பிறகு கேட்ட அந்த அழைப்பில், தானாகத் திரும்பிப் பார்த்தவள் விழிகள் கலங்கிச் சிவந்திருந்தன.

அவனுக்குப் பேச்சற்றுப் போனது. இமைக்காது அவளையே பார்த்தான். அவனிடம் சிக்கியிருந்த தன் கையை விடுவிக்க முயன்றாள் அவள். பார்வை ஒருமுறை அவர்களின் கைகளுக்குச் சென்று வர, இன்னும் கொஞ்சம் அழுத்தமாய்ப் பற்றினான். அவளோ இன்னும் முழுமூச்சாக அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக்கொள்ள முயன்றாள்.

இப்போதும் அவள் விழிகளுக்குள் ஆழ்ந்து பார்த்தவன் தானே கையை விட்டான். முகத்தை வெளிப்புறம் நோக்கித் திருப்பிக் கொண்டவனை முகத்தை மோதிய இதமான காற்றுக் கூடத் தேற்றமாட்டேன் என்றது. நெஞ்சு புழுங்கியது. என்னவோ அவள் இன்னுமின்னும் தன்னை விட்டுத் தூரமாய்ப் போய்க்கொண்டே இருப்பது போலிருந்தது. போகாதே என்று அவன் உள்ளம் கதறுகிறது. நீ எனக்கே எனக்கென்று வேண்டும் என்று துடிக்கிறது. என்னைக் கொஞ்சம் அரவணைத்து, என் காயங்களை ஆற்றிவிடேன் என்று அழுகிறது. இத்தனையும் ஆழ்கடலுக்குள் நடக்கும் பூகம்பமாக அவன் நெஞ்சுக்குள் நடந்துகொண்டிருந்தாலும் வெளியே இரும்பாய் அமர்ந்திருந்தான்.

தொண்டைக் குழிக்குள் வந்து நின்ற அந்தப் பாரத்தை தனக்குள்ளேயே விழுங்கிவிட்டு, பேசாமல் பஜிரோவை எடுத்தான்.

அமிர்தவல்லிக்கு மகளைக் கண்டதில் அத்தனை சந்தோசம். அவளுக்குப் பிடித்ததாகச் சமைத்து வைத்ததையெல்லாம் ஆசையாசையாகப் பரிமாறினார். அவளிடம் கேட்க, விசாரிக்க, அறிந்துகொள்ள அவருக்கு நிறைய இருந்தது. வாய் மூடாமல் கேட்டுக்கொண்டே இருந்தார். அவளுக்குத் தன் முன்னால் அமர்ந்திருந்து, அவளை நிமிர்ந்தும் பாராமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தவனில்தான் முழுக் கவனமும்.

அளவுக்கதிகமான அவனின் சீற்றம் எதற்காக, அதன் பின்னான இறைஞ்சலுடன் கூடிய அந்த மன்னிப்பு எதற்காக? ஒரு காலத்தில் அவள் மனத்துக்கு மிக நெருக்கமாய் இருந்த ஒருவன், இன்று புரிந்துகொள்ளவியலாப் புதிராய்த் தெரிந்தான்.

சுந்தரலிங்கத்துக்கும் மகளைக் கண்டதில் சந்தோசமே! அவளருகில் அமர்ந்து, அவளிடம் பேச்சுக் கொடுத்தபடி அவரும் தன் உணவை முடித்துக்கொண்டார். இரவானது. தன் கைப்பேசியில் பாடலை ஒலிக்க விட்டுவிட்டு, திரும்பவும் போகும்போது எவற்றையெல்லாம் கொண்டுபோகலாம் என்று அலமாரியைக் கிண்டிக்கொண்டிருந்தாள் நிரல்யா.

அங்கே மேலே எப்போதும்போல மொட்டை மாடிச் சுவரைப் பற்றியபடி நின்றிருந்தவனின் காதுக்கும் அவள் அறையிலிருந்து கசிந்து வந்த பாடல் வந்து சேர்ந்தது.

நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று
நீ இன்றி வந்திட இங்கு எனக்கேது மூச்சு!
ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி
அலை பாய்ந்து நான் இங்கு வாட அவைதான் சாட்சி.
நீ இல்லாத நானே
குளிர் நீர் இல்லாத மீனே
நீா் ஓடை போல கூட வேண்டுமே

என்று போய்க்கொண்டிருந்தது பாடல். அதைக் கேட்க முடியாமல் அறைக்குள் புகுந்து, கதவை அடைத்துக்கொண்டவனின் உள்ளத்தில் பெரும் துடிப்பு.

உள்ளத்தின் ஆசை ஒன்றாகவும் அறிவின் அறிவுறுத்தல்கள் இன்னொன்றாகவும் மாறிப்போனதில் அவனுக்குள் நடக்கும் போராட்டம் இன்று உக்கிரம் கொண்டு நின்றது. உரிமையாய் அவனால் எதையும் சுந்தரலிங்கத்திடமும் கேட்க முடியாது, அவளிடமும் சொல்ல முடியாது. அவள் வேறு அவன் என்றாலே அடுத்த முனைக்கு ஓடுகிறேன் என்று நிற்கிறாள்.

பிறகெப்படி மனத்தின் ஆசைகளுக்கு மருந்திடப் போகிறான்?



கருத்திட

கருத்திடும் அனைவருக்கும் மிக்க நன்றி!
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 7


விடுமுறையில் வீட்டில் இருந்த இரண்டு வரங்களும் முனைப்பாகச் சிங்களம் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தாள் நிரல்யா. அந்த மொழி, அது பேசும் பாங்கு, அந்தச் சொற்களின் வழியே தெரியும் மெல்லிய குழந்தைத்தனம் எல்லாமே சிசிரவை நினைவூட்டின. அதுவும் அன்று அவன் சிரித்துக்கொண்டு ‘பொரு கியன்னெபா நிரா!(பொய் சொல்லாத நிரா!)’ என்று செல்லமாய் மிரட்டியது தேன் மிட்டாயாக நெஞ்சில் நின்று தித்தித்தது.

“அம்மே, சிங்கள தன்னவத?(அம்மா, சிங்களம் தெரியுமா?)” என்று தான் பாடமாக்கி வைத்துக்கொண்ட நான்கைந்து வசனங்களை வைத்து, அமிர்தவல்லியை அலறவைத்தாள்.

“மட வத்துற டிகக் தென்ன அம்மே!(எனக்குக் கொஞ்சம் தண்ணி தாங்கம்மா.)” என்று கேட்டு, என்ன கேட்கிறாள் என்று சொல்லாமலேயே அவரை அன்று முழுக்க ஓட்டிக்கொண்டு திரிந்தாள். அதைத் தாங்க முடியாமல், “அடி வாங்காம ஒழுங்காத் தமிழில கதை பிள்ளை!” என்று சினமும் சிரிப்புமாய் அதட்டினார் அமிர்தவல்லி.

“போங்கம்மா! இத்தனை வருசமா இந்த இலங்கைத் திருநாட்டில இருக்கிறீங்க. ஆனா, சகோதர மொழி தெரியாது. எவ்வளவு அவமானம்!” என்று வேறு அடித்துவிட்டாள்.

“சரி, இப்ப தமிழிழ சொன்ன அவ்வளவையும் சிங்களத்தில சொல்லு பாப்பம்!” என்று அவர் சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டுவிட, அவள் முழித்த முழியில் அடக்கமாட்டாமல் சிரித்திருந்தார் அமிர்தவல்லி.

அலுவல்களைக் கவனிப்பதுபோல் விறாந்தையில் அமர்ந்திருந்த சுந்தரலிங்கமும் மகளின் சேட்டைகளை உள்ளூர ரசித்துச் சிரித்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு மனைவியைப் போன்று அவளுக்கு இணையாகக் கொஞ்சி விளையாட எல்லாம் தெரியாது. ஆனால், மகளோடு நேரம் செலவழிக்க, அவள் குறும்புகளைப் பார்த்து ரசிக எல்லாம் மிகவும் பிடிக்கும். அதனாலேயே அவள் இங்கே
வந்ததிலிருந்து முடிந்தவரையில் வீட்டில் இருப்பதுபோல் பார்த்துக்கொண்டார்.

“என்னம்மா சுந்தரலிங்கத்தார் குட்டி போட்ட பூனை மாதிரி இங்கயே சுத்துறார், நான் இல்லை எண்டதும் ஓவர் ரொமான்ஸ் நடக்குதோ?” என்று கேட்டு, அமிர்தவல்லியின் கையால் அவள் முதுகில் இரண்டு வாங்கிக்கொண்டது வரை அவருக்குத் தெரியும்.

அவருக்குத் தேநீர் கொண்டுவந்து கொடுத்த மனைவியிடம், “சிங்களம் படிக்கிறது நல்லதுதான். அதுக்கெண்டு சிங்களப் பெடியள்(பையன்) ஆரையும் கூட்டிக்கொண்டு வாறேல்லையாம் எண்டு சொல்லி வை.” என்றார் மெல்லிய குரலில்.

ஒருகணம் கலங்கிப் போனார் அமிர்தவல்லி. கணவர் சொன்னதை மகளிடம் நேரடியாகச் சொல்லாதபோதும் சும்மா பல்கலையைப் பற்றி, மற்ற மாணவர்களைப் பற்றி, அவர்கள் பழகும் முறை பற்றி என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

‘ஆம்பிளப் பிள்ளைகள் நல்ல மாதிரிப் பழகுவீனமோம்மா?’

‘ஏதும் பிரச்சினை எண்டாலோ, ஒரு ஆம்பிளை உதவி வேணும் எண்டாலோ என்னம்மா செய்வீங்க?’

‘சிங்களம், தமிழ் எண்டு துவேசம்(பிரிவினை) காட்டுவினமோ?’

‘சிங்களப் பெடியள் சரியில்ல எண்டு சொல்லுவினம். உண்மையா பிள்ளை?’

‘கம்பஸ்ல எடுத்த ஃபோட்டோக்கள் இருந்தா காட்டன்(காட்டேன்) பிள்ளை, நான் எல்லாம் போனதும் இல்ல, பாத்ததும் இல்ல’ என்று சுற்றி வளைத்துப் பலவிதமாகக் கேட்டுப் பார்த்து, ஃபோட்டோக்களை பார்த்து என்று அவர் விசாரித்தவரையில் அப்படி எதுவும் இல்லை என்று கண்டு தெளிந்தார்.

சரண்யாவைப் பற்றி அறிந்து, அவளுக்கு வீடியோ கோல் போடவைத்துத் தானும் பேசி, அவளோடு அறிமுகமாகி, “அம்மாச்சி உங்கட நம்பரை நானும் வாங்கி வைக்கிறன். தப்பித்தவறி ஒரு அந்தரம் ஆபத்து எண்டால் கதைக்க உதவும் எல்லோ. உங்களுக்குப் பரவாயில்லையோ?” என்று அவளிடமே கேட்டு,

“அச்சோ அன்ட்ரி(ஆண்ட்டி), இதில என்ன இருக்கு? உங்களுக்கு எப்ப என்னோட கதைக்கோணும் எண்டாலும் கதைக்கலாம்.” என்று அவளையே சொல்ல வைத்தும் இருந்தார்.

ஆனாலும் அவள் புறப்படுவதற்கு முதல், “அம்மாச்சி, ஆரம்பம் அப்பாக்கு உங்கள அங்க அனுப்ப விருப்பமே இல்ல. இப்பவும் பிள்ளை இல்லாம வீடே வெறிச்சோடிப்போய்க் கிடக்கு எண்டு நெடுகச்(எப்போதும்) சொல்லுவார். அம்மாதான் உனக்காக அவரோட கதைச்சு அனுப்பி வச்சனான். ஒரு குழப்படியும் செய்யாம, நல்லபடியாப் படிப்பை முடிச்சுப்போட்டுத் திரும்பி வந்திட வேணும் என்ன? அப்பாக்குக் கோவத்தை வரவைக்கிற மாதிரி நடக்கிறேல்ல.” என்று அவள் தலையை வருடி, இதமாய்ச் சொல்லியே அனுப்பி வைத்தார்.

முதன் முதலாக அவளைக் கொண்டுவந்து விடுதியில் விடும்போதும் அதையே சொன்னதாலோ, அல்லது அவள் மனது அவளுக்கே இன்னும் வெட்ட வெளிச்சமாய்த் தெரிய வராததாலோ, “பயப்பிடாதீங்க அமிர்தவல்லி. சொக்கத் தங்கமாவே திரும்பி வருவன், சரியா?” என்று அவரை இறுக்கி அணைத்து முத்தமிட்டுவிட்டு விடைபெற்றுக்கொண்டாள்.

கலக்கம் முற்றிலும் அகல, நிம்மதியாக அவரும் அவளை அனுப்பிவைத்தார்.

ஒரு வழியாக இரண்டாவது செமஸ்ட்டரில் காலடி எடுத்து வைத்திருந்தாள் நிரல்யா. இடையில் கழிந்தவை என்னவோ இரண்டு வாரங்கள்தான். ஆனால், நிறைய நாள்களுக்குப் பிறகு சிசிர பண்டாரவைப் பார்க்கப்போகிறோம் என்று, அன்று காலையில் எழுந்து பல்கலைக்குப் புறப்படுகையிலேயே அவளுக்குக் குறுகுறுக்க ஆரம்பித்திருந்தது.

அவனுக்கும் அப்படித்தான் இருந்தது போலும். அவளைக் கண்டுவிட்டு ஓடி வந்து, அவள் குடைக்குள் புகுந்துகொண்டான். எப்போதும் கூட நடப்பவன் இன்று அவள் முன்னால் நின்று அவளையே பார்த்தான்.

ஒற்றை குடைக்குள் அவர்கள் இருவரும் எதிரெதிரில். பார்வைகள் வெகு நெருக்கத்தில் கலந்து கவ்வி நின்றன. அவன் பார்வை, அதிலிருந்த தேடல், அவன் அருகண்மை எல்லாமாய்ச் சேர்ந்து அவள் மனத்தைப் பிரட்டிப்போட ஆரம்பித்தன.

நடந்து வந்து கொண்டிருந்தவர்கள், “விலகி நில்லுங்க!” என்றபடி இவர்களைச் சுற்றிக்கொண்டு நடக்க, அவள் கையைப் பற்றிக் கரையாக இழுத்துவந்து நிறுத்தினான்.

எப்போதும் அவன் கையைப் பிடித்தால் நொடி கூடத் தாமதியாமல் விடுவித்துக்கொள்கிறவள் இன்று அவன் பற்றியதையே உணராமல் நின்றாள்.

“ஒயாட்ட கொஹோமத நிரா?(சுகமா இருக்கிறியா நிரா?)” அவள் முகத்தையே பார்த்து வினவினான்.

அந்தக் குரல், அவன் வினவிய விதம், அதிலிருந்த வாஞ்சை எல்லாம் சேர, விழியோரம் மெலிதாகப் பூப்பூக்க, “ம்!” என்று மென் முறுவலுடன் தலையசைத்தாள் அவள்.

ஒருகணம் அவளையே பார்த்தவன் வேகமாகப் பார்வையைத் திருப்பித் தன்னைச் சமாளிக்க முயன்றான்.

“ஒயா?(நீங்க?)” மெலிதாய் அவள் சிங்களத்திலேயே கேட்டது தேனாய் இனிக்க, “ம்ம்!” என்றான் மீண்டும் பார்வையை அவளிடம் திருப்பி. வெளியே மழை. உள்ளேயும் இளம் மனங்களின் உணர்வுகளின் வெள்ளம்!

அந்தக் கடும் நீல நிற விழிகள் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்ததும் அவளுக்கு முகம் சூடாகும் நிலை.

அவள் நிலையை உணர்ந்தவன் போன்று சின்னதாய்ச் சிரிப்பைச் சிந்திவிட்டு, ஜீன்ஸ் பொக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர் சரையை(சரை- பொட்டலம்) எடுத்தான். அதைப் பிரித்தால் அதற்குள் ஒரு கோயில் கயிறு.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member

“எங்கட ஊர்ல பெரிய சிவன்கோயில் ஒண்டு இருக்கு. அம்மா ஒவ்வொரு வெள்ளியும் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போவா. இவ்வளவு காலமும் சும்மா பிராக்குத்தான்(பராக்கு) பாப்பன். ஆனா இந்த முறை என்ர நிரா நல்லாருக்கோணும், அவள் ஆசைப்படுறது எல்லாம் கிடைக்கோணும் எண்டு அவரை வேண்டி, ஐயாட்ட இந்தக் கயிறு வாங்கிக்கொண்டு வந்தனான்.” என்று சிங்களம், ஆங்கிலம் என்று இரண்டிலும் கலந்து கட்டிச் சொன்னவாறே அவள் கையைப் பற்றி, மணிக்கட்டில் அந்தக் கயிறைக் கட்டி முடிச்சிட்டுவிட்டான். அதுவும் அவன் பெரும்பான்மைப் பொழுதுகளில் அணியும் செக் செக் சேர்ட்டுகள் போலவே கருப்பும் சிவப்பும் கலந்த செக் செக் கயிறாக இருந்தது.

என்னவோ உள்ளமெல்லாம் நெகிழ்ந்து போயிற்று அவளுக்கு. “நான் உங்களுக்கு ஒண்டும் வாங்கிக்கொண்டு வர இல்ல.” என்று மெல்ல முணுமுணுத்தாள்.

“எனக்கு உன்னப் பாத்ததே போதும்.” என்றான் அவன் மலர்ந்த முறுவலோடு. அவள் அவன் கட்டிவிட்ட கயிற்றைப் பார்ப்பதுபோல் குனிய, சின்ன சிரிப்புடன் அவள் தலையைப் பற்றி ஆட்டிவிட்டு, “சரி வா, நேரமாகுது போவம்!” என்றவன் குடையை இப்போது தான் வாங்கிக் கொண்டான்.

அடுத்து வந்த நாள்களில் அதுவே அவர்களுக்குள் வழமையாகிப் போயிற்று. அவன் குடைக்குள் வந்ததும், குடை, அவள் முதுகில் காவிக்கொண்டு வரும் பாக், கையில் கொப்பிகள்(நோட்டுகள்) ஏதாவது கொண்டுவந்தால் அவையெல்லாம் அவன் வசமாகிவிடும். அவள் கைகளை வீசி நடந்துவர, அவன்தான் எல்லாவற்றையும் காவிக்கொண்டு வருவான். இது எப்படி நடந்தது என்று அவளுக்கும் தெரியாது, அவனுக்கும் தெரியாது.

“என்னடா மகனே, குழந்தையைக் கொண்டுபோய் வகுப்பில விட்டுவிட்டு வந்திட்டியாடா?” என்று மகிந்த அண்ட் கோ கேலி செய்து சிரித்தாலும் சேர்ந்து சிரிப்பானே தவிர்த்து, அவன் அதை மாற்றிக்கொண்டதில்லை.

என்னவோ அவளைக் கண்களுக்குள்ளேயே பொத்திக்கொள்ள வேண்டும் போலொரு ஆசை.

அவளுக்குள்ளும் மாற்றங்கள் மின்னல் விரையில் நடக்க ஆரம்பித்தன. இப்போதெல்லாம் அவளே அவனை விழிகளால் தேட ஆரம்பித்திருந்தாள். பல்கலையில் அவளை எதிர்கொள்கையில், கடக்கையில் ஒற்றைக் கண்ணைச் சிமிட்டிவிட்டுக் கடப்பதை அவனும் வழக்கமாக்கியிருந்தான். அப்படி அவன் செய்கிற ஒவ்வொரு பொழுதுகளிலும் விழிகளை விரித்து, பொய்யாக முறைத்துவிட்டுப் போனாலும் அவள் இதயம் நழுவும் ஓசை அவளுக்கே கேட்கும்.

அன்று கண்டீனில் சரண்யாவுடன் அமர்ந்திருந்தாள் நிரல்யா. திடீரென்று வந்த சிசிர சரண்யாவின் அருகில் அமர்ந்தான். அவள் நடுங்கிப் போனாள். சீனியர் அவளை விட்டுவிட்டுத் தன்னைப் பிடித்துவிட்டானோ என்று ஒருகணம் தோன்றிவிட, அவள் முழித்த பேய் முழியில் அடக்கமாட்டாமல் சிரித்தாள் நிரல்யா.

“மொகத?” என்றான் அந்தச் சிரிப்பை ரசித்தபடி.

“மொக்குத் நெஹே அய்யே! (ஒன்றுமில்லை அண்ணா!)” கண்கள் சிரிப்பில் பளபளக்கச் சொன்னாள் நிரல்யா.

இப்போதெல்லாம் சின்ன சின்ன சிங்கள வசனங்களை அவள் பேச ஆரம்பித்துவிட்டதை உள்ளூர சந்தோசமாய் உணர்ந்தபடி ஒன்றுமே சொல்லாமல், சின்ன சிரிப்புடன் அவளையே பார்த்தான் அவன். அவளுக்குக் கன்னக் கதுப்புகள் சூடாகும் உணர்வு. மேசையில் ஊன்றி இருந்த ஒற்றைக் கையால் பாதி முகத்தை மறைத்துக்கொண்டவளால் சிரிப்பை அடக்கவே முடியாமல் போயிற்று.

இதற்குள் மகிந்த அவனைத் தேடிக்கொண்டு வந்திருந்தான். “உன்ர குழந்தையைப் பாத்திட்டாய் எல்லாடா, வா போவம்!” என்று அவனைப் பிடித்து இழுத்தான். அவனோடு இழுபட்டபடி, “நங்கி, ஒயாகே யாலுவாட்ட கியளா தியன்ன, மேகட்ட தண்டுவமக் தியனவா கியளா ஹரித?(தங்கச்சி, உன்ர நண்பியிடம் சொல்லி வை, இதுக்கு அவளுக்கு ஒரு நாளைக்கு தண்டனை இருக்காம் எண்டு.)” என்று சரண்யாவிடம் சொல்லிவிட்டுப் போனான் அவன்.

சரண்யா மொழிபெயர்க்கும் அவசியம் இல்லாது அவளுக்கே அவன் என்ன சொன்னான் என்று விளங்கிற்று. அப்படி என்ன தண்டனை தருவானாம்? கேள்வி உள்ளே ஓட, அது சிரிப்பாக முகத்தில் விரிய, நண்பனின் இழுப்புக்கு இழுபட்டபடி போய்க்கொண்டிருந்தவனையே பார்த்திருந்தாள் நிரல்யா.

மறையப்போகும் நொடியில், “இன்ன மச்சங்! (பொறு மச்சான்)” என்றுவிட்டு மீண்டும் வந்தான். என்ன செய்யப் போகிறானோ என்று மெல்லிய திகிலுடன் பார்க்க, அவள் முகத்துக்கு நேராகத் தன் முகத்தைக் கொண்டுவந்தான் அவன். அவள் மிரண்டு, சுற்றி இருக்கிறவர்களை விழிகளால் காட்டி மிரட்டியபடி பின்னால் தலையைக் கொண்டு போக, அவனும் கொண்டுவந்தான்.

“சிசிர!” சத்தமே வராமல் அலறினாள் நிரல்யா. முதன் முதலாக அவள் உதடுகள் உச்சரித்த தன் பெயரை ரசித்தபடி கண்ணைச் சிமிட்டிவிட்டு, அவளின் முட்டை பணிசை எடுத்துக் கடித்தபடி திரும்பிப் போனான் அவன்.

‘அடேய்ய்ய்ய்ய்!’ அவள் முறுவல் மலர்ந்து முகம் முழுக்கப் பூத்துக் குலுங்கிற்று.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சரண்யா,

“காற்றே கேள்! மழையே கேள்! பேராதெனியாவே கேள்! இல்லவே இல்லை என்று சொன்ன ஒருத்தி இன்று முகம் சிவக்கிறாள், உதடு கடிக்கிறாள், கனவில் மிதக்கிறாள். கேட்டால் அது காதல் இல்லையாம்!” என்று கவிதை வாசித்தாள்

“ஏய் லூசு, சும்மா இரடி!” பொய்யாய் அதட்டியவளுக்கு நண்பியின் கிண்டல் உள்ளே தித்தித்தது.

“நடிக்காதயடி! கண்ணுக்கு முன்னால படத்தையே ஒட்டிப்போட்டு ஒண்டும் இல்லையாம். சீனியரிட்ட விழுந்திட்டியாடி!”

“அவர் என்ன பள்ளமா நான் விழ?” விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று மல்லுக் கட்டினாள் நிரல்யா.

“விழாத இந்த முகத்தை ஒருக்காக் காட்டு, சாத்திரம் பாப்பம்!” என்று அவள் முகத்தைப் படக் படக்கென்று அப்படியும் இப்படியுமாக வேண்டுமென்றே திருப்ப, “அடியேய்! கழுத்தை உடைச்சிடாத!” என்றவளுக்கு அதற்குமேல் முடியாமல் சிரிப்பு வெடித்திருந்தது.

குழந்தை முதலில் பென்சிலால் கிறுக்கி, குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகளைப்போட்டு, மெல்ல மெல்ல எழுதப் பழகுவதைப் போல, அவர்கள் இருவருக்குமிடையிலான ஈர்ப்பு வளர்ந்துகொண்டிருந்தது. அது உயிர் நேசம் எனும் பாதையில் மடை மாற்றம் காணக் காத்திருந்தது. இருவரும் அதை அறிந்தே இருந்தனர். தடுக்கும் நிலையைத் தாண்டியிருந்தனர்.



கருத்திட
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 8



பல்கலையில் சித்திரை வருடப் பிறப்புடன் சேர்த்து ஒரு மாத விடுமுறை விடப்பட்டது. என்னவோ இந்தமுறை அவளுக்கு இங்கிருந்து போகவே விருப்பமில்லை. போகாமல் இருக்க முடியாதே.

“ஒரு மாதத்துக்குப் பாக்கேலாது.” பார்வை அவள் மீதிருக்கச் சொன்னான் சிசிர. அவ்வளவு நேரமாக மனத்தை அரித்துக்கொண்டிருந்த அந்தப் பிரிவு, அவன் வாய் விட்டுச் சொன்னபோது மலையளவு துன்பமாய் வந்து நின்று மருட்டியது. என்ன சொல்வது என்று தெரியாது தம்மைச் சுற்றிப் பார்வையை அலையவிட்டாள்.

விடுதியிலிருந்து பல்கலை நோக்கி நடந்து செல்லும் அதே வீதி. எப்போதும் அவர்கள் சந்தித்துக்கொள்ளும் இடம். புறப்பட்டுக்கொண்டிருந்த மற்றைய மாணவர்கள் எல்லோர் முகத்திலும் அத்தனை சந்தோசம். ஒரு மாதத்துக்குப் படிப்பு இல்லை, ப்ராஜெக்ட் என்று மண்டையை உடைக்கத் தேவை இல்லை, விருப்பம்போல் ஊர் சுற்றலாம், வீட்டுச் சாப்பாடு நன்றாகச் சாப்பிடலாம் என்று விடுமுறையை அனுபவிக்கப் போகும் குதூகலத்தில் அவர்கள் இருக்க, இந்த இரண்டு இதயங்கள் மட்டும் அடுத்த ஒரு மாதத்துக்கு ஒருவரை ஒருவர் பாராமல் எப்படி இருப்பது என்று தவித்துக் கொண்டிருந்தன.

“இவ்வளவு காலமும் வீட்டுக்குப் போகப்போறன் எண்டாலே அவ்வளவு சந்தோசமாப் போவன். ஆனா இந்தமுறை…” என்றவனுக்கு மேலே பேச வரவில்லை. தன் விருப்பம் என்ன, தான் ஏன் அவளையே சுற்றி சுற்றி வருகிறோம் என்றெல்லாம் அவளுக்குத் தெரியும் என்று அவனுக்கும் தெரியும். அவளுக்கும் அவன் மீது நேசமுண்டு என்றும் தெரியும்.

ஆனாலும் ஒரு தயக்கம். இத்தனை சேட்டைகளைச் செய்தவனால் தயக்கம், வெட்கம், எதிர்பார்ப்பு என்று எல்லா மென் உணர்வுகளையும் ஒன்றாகத் தேக்கி, அவனை நோக்கும் அந்த விழிகளைப் பார்த்து, உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது என்று நேராகச் சொல்ல முடியாமல் திணறினான்.

சொல்லிவிட வேண்டும் என்றுதான் வந்தான். ஆனால் சொல்லுவோம் என்று வாயைத் திறக்கையிலேயே சுவாசம் சீரற்றுப் போனது, உதடுகள் வறண்டன, காதுகள் இரண்டும் அடைத்துக்கொண்ட உணர்வு.

இப்படி அவன் தனக்குள் போராடிக்கொண்டு நிற்க, “நான் வெளிக்கிடோணும்.” என்றாள் அவள் கைப்பேசியில் நேரத்தைப் பார்த்துவிட்டு.

“உன்ன விட நான் வரவா?” அந்தப் பயணத்தின் போதாவது மனம் திறந்துவிட முடியாதா என்கிற எதிர்பார்ப்புடன் வினவினான்.

“இல்ல… வேண்டாம் ப்ளீஸ்.” அவன் என்ன சொல்ல முயல்கிறான் என்று ஊகித்துக் கொண்டதில் அவளுக்குள்ளும் பெரும் பதற்றம். மெலிதாக வியர்க்க ஆரம்பித்திருந்தாள்.

“எனக்கு… உன்னோட கதைக்கோணும்.”

“நேரம் போகுது…” என்று அவசரமாக முணுமுணுத்தாள்.

அவனுக்கு அது மெல்லிய ஏமாற்றம்தான். அவனே பெரும்பாடுபட்டு சொல்ல வருகையில் ஏன் தடுக்கப் பார்க்கிறாள்? ஆனால், இனி முடியாது என்று விலக்கிவிட, “சரி, கவனமாப் போயிற்று வா!” என்று மனதேயில்லாமல் அனுப்பிவைத்தான்.

*****

பஸ் ஓட்டுனர்களின் திறமையால் மறந்தும் கூட பஸ்ஸில் வரக் கூடாது என்பது அமிர்தவல்லியின் கண்டிப்பான உத்தரவு. தனியாகப் போய்வர விட்டதே பெரிய விசயமாக இருந்ததில் அவளும் இரயிலிலேயே தன் பயணங்களை அமைத்துக்கொள்வாள். அன்றும் வவுனியா இரயில் நிலையத்தில் வந்திறங்கியவளை சுந்தரலிங்கம்தான் அழைத்துப்போக வந்திருந்தார்.

அவள் கேள்வியாக ஏறிட, “கடையில வேலை நடக்குது. உடைச்சுக் கட்டுறம். எனக்குத் தூசு ஒத்துவதருதில்ல. அதால நந்தன் அங்க நிண்டு கவனிக்கிறான்.” என்று, அவளின் பெட்டியைக் காரின் பின்னால் வைத்தபடி சொன்னார் அவர்.

கடையைப் பூட்டி வியாபாரத்தை உடைக்க விரும்பாமல், ஒரு ஓரமாகக் கடை நடந்துகொண்டிருக்க, கட்டுமான வேலைகளை இன்னொரு பக்கமாக ஆரம்பித்திருந்தான் அனந்தன்.

அப்படி உடைத்துக் கட்டும் அளவுக்குத் தேவை என்ன வந்தது என்று யோசனை ஓடினாலும் அவரிடம் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை அவள்.

“அப்பாவில இருக்கிற கோவம் இன்னும் போகேல்லையா பிள்ளை?” அவரும் அவளும் மட்டுமான தனிமையை அவள் உருவாக்கவே மாட்டாள். அப்படியே அவர் கதைக்க வந்தால் கூட நடுவில் அமிர்தவல்லி இருப்பார். இருப்பதுபோல் நிரல்யா பார்த்துக்கொள்வாள். இன்று வீடு வரையிலான இந்தக் கார் பயணம் அப்படி அமைந்துபோனதில் மெல்லிய ஏக்கத்துடன் வினவினார்.

கடந்த சில மாதங்களாக இங்கிருந்து முற்றிலும் தள்ளி இருந்ததாலோ என்னவோ அவர் மீதிருந்த கோபம், அவர் செய்யும் தொழில் மீதான வெறுப்பு எல்லாம் சற்றே மங்கிப்போயிருக்க, அப்படிக் கேட்ட தந்தையின் பாசம் மட்டும் முதன்மையாய்த் தெரிந்து, ‘அப்பா பாவம்’ என்று தோன்றவும் வைத்தது. ஆனாலும் இப்போது கூட அவர் செய்கிறவற்றை ஏற்றுக்கொள்ள முடியவும் இல்லை. அதில், “நீங்க உங்கட வேலைய மாத்திட்டீங்களா?” என்று தானும் திருப்பிக் கேட்டாள்.

“அதெல்லாம் இனி நானே நினைச்சாக்கூட விடேலாது பிள்ளை. விட்டா எனக்குத்தான் ஆபத்து. அதைவிட அப்பாக்குப் பிடிச்ச தொழில் இதுதான். விரும்பித்தான் செய்றன். நீ நினைக்கிற மாதிரி அப்பா பொல்லாத ஆளா இருக்கலாம். அது வெளில. உனக்கு நான் உன்ர அப்பா மட்டும்தான்.” அன்றுதான் சின்ன பிள்ளை. இன்று வளர்ந்தவளாயிற்றே. தன்னை விளங்க வைக்க முயன்றார்.

“என்ர அப்பா எனக்கு மட்டும் நல்லவரா இருந்தா காணும் எண்டு நினைக்கிறது படு சுயநலம். என்னால அப்பிடி நினைக்கேலாது. உங்களால பாதிக்கப்பட்ட குடும்பங்களில என்னை மாதிரிப் பிள்ளைகள் நிறையப் பேர் இருப்பினம்.” என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு.

அவரிடம் அந்த வாதத்துக்குப் பதில் வாதம் இல்லாமல் போனதில் அமைதியாகிப்போனார். நானாக யார் வீட்டுக் கதவையும் தட்டவில்லை என்றோ, அவர்களுக்கென்று கொடுத்த காலம் முடிந்த பிறகும் தராமல் இருக்கிறவர்களிடம்தான் என் கையாளும் முறை மாறுகிறது என்றோ சொல்லலாம்தான். அந்த வாதங்கள் எதுவும் ‘என் அப்பா நல்லவராக இருக்க வேண்டும்’ என்கிற அவளின் எதிர்பார்ப்புக்கு எந்த வலுவும் சேர்க்கப் போவதில்லையே!

வீட்டில் இருக்கையில் இன்னும் மும்முரமாகச் சிங்களம் கற்க ஆரம்பித்தருந்தாள் நிரல்யா. அவளைப் போல அவனும் தமிழ் கற்பனா? ‘பழகாம மட்டும் இருக்கட்டும், மண்டைல குட்டி நானே படிப்பிக்கிறன்.’ என்று தன்னிச்சையாய் ஓடிய எண்ணத்தில் திகைத்து நின்றுவிட்டாள்.

‘கடவுளே! போற போக்கில இவன் என்ன பைத்தியமாக்கப் போறான்!’ என்று திட்டிக்கொண்டாள். அன்று புறப்படுகையில் தன் மனத்தைச் சொல்ல வந்துவிட்டுச் சொல்ல முடியாமல் அவன் திணறிய காட்சி இப்போது முறுவலை வரவழைத்தது.

அந்தப் பயம் இருக்கட்டும் என்று உற்சாகமாய் எண்ணிக்கொண்டாள்.

அனந்தனை முதல் வாரம் முழுவதும் காணவே கிடைக்கவில்லை. அவன் ஜீப்பை வைத்துத்தான் வீட்டுக்கு வந்திருக்கிறான் என்று கண்டுகொள்வாள். சாப்பாடு கூட யாராவது வந்து வாங்கிச் செல்வார்களே தவிர்த்து அவன் வருவதில்லை. அடகு பிடிக்கப்பட்ட நகைகள் வைக்கப்பட்டிருந்த லொக்கர் அறையும் உடைக்கப்பட்டுவிட்டதால் யாராவது ஒருவர் கடையிலேயே இரவும் பகலும் நிற்கவேண்டிய கட்டாயமாயிற்று. குளிக்க மட்டுமே வீட்டுக்கு வந்து போய்க்கொண்டிருந்தான்.

அன்று அவன் வந்துவிட்டதை அறிந்து “அம்மாச்சி, ஓடிப்போய் இந்தத் தேத்தண்ணியையும் எள்ளுப் பணியாரத்தையும் நந்தனுக்குக் குடுத்துப்போட்டு ஓடி வாம்மா. இனிப் போனா நாளைக்குத்தான் வருவான்.” என்று சொன்னார் அமிர்தவல்லி.

ஒருகணம் தயங்கினாலும் வந்ததற்கு அவனைப் பார்க்கவில்லை என்பதில் எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு ஏறினாள். அங்கே வெளியே அவனைக் காணோம். அறைக்குள் நிற்கிறானோ? இப்போது எப்படி அவனை அழைப்பது?

சிறு வயதில், ‘அவன் உன்ர மச்சானாச்சி.’ என்று அன்னை சொல்லித் தந்து, அதுவே அழைப்பாய் இருந்தது. கோபத்தில் முற்றிலுமாக அவனோடு கதைக்காமல் விட்டதன் பின்னால் அந்த அழைப்பும் விடுபட்டுப் போயிற்று.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
இப்போது என்ன செய்ய என்று யோசிக்க, கீழே அவன் பஜிரோ புறப்படும் ஓசை கேட்டது. “அடக்கடவுளே! நான் மேல வாறதுக்கிடையில அவர் வெளிப் பக்கத்தால இறங்கிட்டாரா!” வாய்விட்டுச் சொன்னபடி ஓடிப்போய் எட்டி பார்த்தாள். அவன் பஜிரோ கேட்டை தாண்டி வீதியில் பயணிக்க ஆரம்பித்திருந்தது.

எப்படி உணர்கிறோம் என்றே தெரியாமல், அவன் பஜிரோ கண்ணை விட்டு மறையும் வரையிலும் பார்த்திருந்தாள். அதன் பிறகும் எவ்வளவு நேரம் கடந்ததோ! மெல்லத் திரும்பியபோதுதான் எங்கே நிற்கிறோம் என்றே உரைத்தது. எத்தனை காலமாயிற்று இங்கே வந்து?

கடைசியாக அவனோடு கதைக்காமல் விட்ட பிறகு வரவேயில்லை. அந்த மொட்டை மாடியும் அவனோடு செலவழித்த பொழுதுகளும் மனக்கண்ணில் வந்து போயின. தொண்டை அடைத்துக்கொண்டது. அங்கேயே சரிந்து அமர்ந்து, மொட்டை மாடிச் சுவரில் சாய்ந்துகொண்டாள். அதன் பிறகுதான் அந்த இடத்தை முழுமையாகக் கவனித்தாள்.

அறை, குளியலறையோடு சேர்த்து மழையும் வெயிலும் தாக்காமல் இருக்க மேலே பிளாட் இழுக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு பால்கனி அமைப்புடன் இருந்தது மொட்டை மாடி.

அந்த முன் துண்டில் அவனின் உடற்பயிற்சிச் சாதனங்கள் இருந்தன. அத்தனையும் புதிது. அவற்றோடுதான் அவன் வாழ்க்கை கழிகிறது போலும். அதற்குக் காரணம் அவள்! அவளின் விலகல்! அவர்களோடு ஒரு வீட்டில் இருந்தாலும் தன்னைத் தானே தனியாக்கிக் கொண்டிருக்கிறான் என்று அவன் வாழும் அந்தப் பகுதியே சொல்லிற்று.

கண்ணோரம் கரிக்க அப்படியே அமர்ந்திருந்தாள். அந்த மொட்டை மாடி, அவனோடு பேசிச் சிரித்த நாள்கள் என்று சிறுவயது நினைவுகள் எல்லாம் வந்து சுகமான சோகத்தை அவளுக்குள் பரப்பிற்று. அவனுக்கு என்று கொண்டுவந்த தேநீரும் பலகாரமும் அவளுக்கு உணவாயிற்று.

*****

அடுத்த வாரமும் அவனைக் காணக்கிடைக்கவில்லை.
அப்படி என்ன வெட்டிக் கிழிக்கிறான்? கடையைப் பெருப்பித்து என்ன செய்யப் போகிறார்களாம் என்கிற குறுகுறுப்பும் சேர்ந்துகொள்ள, அமிர்தவல்லியையும் இழுத்துக்கொண்டு அவர்களின் கடைக்குப் புறப்பட்டுச் சென்றாள்.

கீழேயும் கடையை நீட்டி, கூடவே ஒரு மாடியும் எழுப்புகிறார்கள் என்று அங்குப் போன பிறகுதான் தெரிந்தது.

உள்ளே ஆனந்தனும் தானும் ஒருவனாக நின்று வேலை செய்துகொண்டிருந்தான். யாரோ வரும் அரவத்தில் திரும்பியவனின் விழிகள், இவளைக் கண்டதும் சில கணங்களுக்கு அதிகமாகவே அவள் மீது படிந்து மீண்டது.

அவளும் அவனையேதான் பார்த்தாள். அதே தோற்றம், அதே கடின முகம், அதே இறுக்கம் என்று மாறாமல் இருந்தான் அனந்தன்.

கடைசியாகப் பார்த்துக்கொண்டபோது நடந்த கசப்பான சம்பவம் நினைவில் வந்து போக, எதுவும் பேசாமல் நடப்பவற்றைச் சுற்றிப் பார்த்தாள்.

“இங்கே ஏன் மாமி வந்தனீங்க? தூசு தும்பை சுவாசிச்சு வருத்தம் வந்திடும்.” அவளை பார்வை ஒருமுறை தொட்டு வர வினவினான் அனந்தன்.

“பிள்ளைதான் அப்பிடி என்னதான் நடக்குது எண்டு பாத்துக்கொண்டு வருவம் எண்டு சொன்னவாப்பு. ஆனா ஏன் இவ்வளவு பெருசா?” என்றார் கேள்வியாக.

கணவரின் தொழில், அவர் வெளியே நடந்துகொள்ளும் முறை என்று அமிர்தவல்லிக்குமே மெல்லிய கவலை இருப்பதால் தொழில் பற்றிப் பெரிதாகக் கேட்டுக்கொள்ள மாட்டார். கேட்டு மனத்தை ஏன் கெடுத்துக்கொள்ள என்று நினைப்பார். அனந்தன் வந்த பிறகு அவன் இருக்கிறான் என்கிற தெம்பு வந்திருந்தது. சுந்தரலிங்கமும் வெளியில் நடப்பவற்றைப் பற்றி வீட்டில் பகிர்கிற மனிதர் அல்லர் என்பதால் அவனிடம் விசாரித்தார்.

“இனி அடகு கடை எண்டில்லாம நகைக் கடையா மாத்தப்போறம் மாமி.அதுக்கு ரெண்டு மாடி இருந்தா நல்லம். திரும்ப திரும்ப கட்டிக்கொண்டு இருக்கிறது சரி வராதெல்லா.” என்றான் இருவருக்கும் பொதுவாக.

“அதுக்கு அள்ளு கொள்ளையாக் காசு வேணுமேப்பு.”

“ஊரை அடிச்சு உலையில போட்ட காசெல்லாம் இருக்கும் தானேம்மா.” அதுவரை அவர்கள் கதைப்பதைக் கேட்டுக்கொண்டிருந்தவள் இடையிட்டுச் சொன்னாள்.

“அந்தக் காசிலதான் நீ வளந்தது, படிக்கிறது எல்லாம்!” அனந்தனும் பட்டென்று மூண்டுவிட்ட சினத்துடன் சொன்னான்.

அவளுக்கு முகமெல்லாம் ஒருமாதிரி ஆகிப்போயிற்று. ஆனாலும் விடாமல், “வேற வழி? சுந்தரலிங்கத்தாருக்கு மகளாப் பிறந்திட்டேனே. கூட இருக்க வந்தவையாவது அவரைத் திருத்தி இருக்க வேணும். அத விட்டுப்போட்டு நீங்க சேத்துக்கையா இருக்கிறீங்க, இருங்க நானும் அங்க வாறன் எண்டு போய் விழுந்து கிடந்தா நான் என்ன செய்ய?” என்றாள் கலங்கிவிட்ட விழிகளோடு.

“அம்மாச்சி என்ன கத பேச்சு இது?” என்ற அமிர்தவல்லியையும் முறைத்தாள்.

“பின்ன என்னம்மா? நீங்களும் வேணாம், உங்கட காசும் வேணாம் எண்டு நான் வீட்டை விட்டு வெளில போயிருக்க வேணும் எண்டா சொல்லுறார்? என்னால முடிஞ்சது நீங்க செய்றது பிழை எண்டு சொல்லுறதும், கதைக்காம இருக்கிறதும் மட்டும்தான். ஆனா ஒண்டு! இவே நியாயமே இல்லாம உழைக்கிற காசில நான் சாப்பிடுறது இன்னும் ரெண்டு வருசத்துக்குத்தான். பிறகு என்ர சொந்தக் காசிலையே சாப்பிடுவனாம் எண்டு உங்கட மருமகனிட்ட சொல்லி விடுங்க!” என்று சினந்துவிட்டு, விறுவிறு என்று கடையின் பின்னால் சென்று நின்றுவிட்டாள்.

அப்பாவைப் போல் நீயும் தவறான பாதையில் போகாதே என்று அவள் அவனுக்காக அவனோடே மல்லுக்கட்டிக்கொண்டிருக்க என்ன வார்த்தை சொல்லிவிட்டான்? இதில் அவன் சொன்னது ஒருவகையில் உண்மைதானே என்று மனச்சாட்சியும் இடித்துரைத்துவிட்டதில் நிலைகுலைந்து போனாள். கண்ணீர் இதோ இதோ என்று நின்றது.

“குறை நினைக்காத அப்பு. என்னவோ கோவத்துல கதைச்சுப்போட்டா!” என்று மகளுக்காக அமிர்தவல்லி பரிந்துவர, “என்னட்ட தானே மாமி. அது பரவாயில்ல நீங்க வாங்க!” என்று அழைத்துச் சென்று, தற்காலிகமாக அலுவலக அறையாக இயங்கும் அறையில் அவரை அமர்த்தி, அருந்துவதற்குக் கொடுத்துவிட்டு வந்தவனை அவளின் கலங்கி சிவந்திருந்த விழிகள் பாடாய்ப் படுத்தின.

திரும்பிப் பார்த்தான். அவனுக்கு முதுகு காட்டி நின்று குளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். இதனால்தான் அவளைப் பார்க்க உள்ளம் அவ்வளவு ஏங்கினாலும் எட்டியும் பாராமல் இருந்தான். இதோ பார்த்த நொடி ஒரு சண்டையைப் போட்டாயிற்று. அவளைச் சமாதானம் செய்ய விரும்பினான். பேசப்போனால் சாமாதானத்துக்குப் பதிலாக இன்னொரு சண்டைதான் நிச்சயம் வரும் என்பதில் போகவில்லை.

மனத்தின் கொதிப்பெல்லாம் அடங்கி, சற்றே நிதானத்துக்கு அவள் வந்த வேளையில், “அக்கா இந்தாங்க!” என்று வந்தாள் ஒரு பெண்.

திரும்பிப் பார்த்தாள். அவள் கையில் இவளுக்கு மிகவும் பிடித்த வென்னிலா மில்க் ஷேக் இருந்தது. இது அவன் வேலைதான். சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டுச் சமாதானத் தூதா? அங்கே கடைக்குள் பார்க்க இவளைப் பார்த்தபடி நின்றிருந்தான் அவன். அவனை நன்றாக முறைத்துவிட்டுப் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.

நிறைய நாள்களுக்குப் பிறகு அவன் உதட்டோரம் குட்டியாய்ச் சிறு சிரிப்பு மலர்ந்து போயிற்று. மனத்தின் அழுத்தங்கள் எல்லாம் பனியாய் விலகிய உணர்வு. அவனோடு மொட்டை மாடியில் மல்லுக் கட்டும் குட்டி நிரல் கண் முன்னால் வந்து போனாள். அதன் பிறகு அவன் யோசிக்கவில்லை. அங்கே வந்து, கையில் இருந்ததை வாங்கி, அவள் கையில் திணித்துவிட்டு, “கூலாத்தான் இருக்கு, குடி! கோவம் குறையும்.” என்றுவிட்டுப் போனான்.



கருத்திட


அத்தியாயம் 7, 8, 9 அதாவது போன அத்தியாயம், இந்த அத்தியாயம், அடுத்து வரப்போகிற அத்தியாயம் முண்டையும் ஒரு அத்தியாயமா தரத்தான் பிளான் பண்ணினேன். அது பாத்தா எழுத எழுத வந்துகொண்டே இருக்கு. அலட்டுறேனா தெரிய இல்ல. கதை முடியவிட்டி பார்ப்போம் என்று விட்டாச்சு. எங்கயாவது லொட லொடக்கிற பீல் வந்தா சொல்லிடோணும் சரியா?

கருத்திடும் அனைவருக்கும் நன்றி!
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 9


கடையின் தற்காலிக அலுவலக அறையையே அனந்தன் படுக்கை அறையாகவும் பயன்படுத்தினான். மடித்து வைக்கக்கூடிய வகையிலான கட்டிலை எடுத்து விரித்துவிட்டுப் படுத்துக்கொண்டவனுக்கு மாலையில் வந்துவிட்டுப் போன நிரல்யாவின் நினைவே!

அவனோடு சரிக்குச் சரியாக வாயாடும் அவள், அவன் கோபமாக இருக்கிறான் என்று தெரிந்துவிட்டால் மூச்சு விடுவதற்குக் கூட நடுங்குவாள். அப்படியானவள் இன்று என்ன சீறு சீறினாள்? எப்படி வந்தது இந்தத் தைரியம்? அந்தளவுக்கு வளர்ந்துவிட்டாளா என்ன? வளர்ந்துவிட்டாள் என்றுதான் அவன் கண்கள் சொல்லின.

உதட்டோரம் ரகசிய சிரிப்பில் விரிய, ‘எல்லை மீறாதையடா!’ என்று தன்னைத்தானே அடக்கினான். அவர்கள் இருவரும் ஒன்றும் சந்தோசமாகக் கதைத்துக்கொள்ளவில்லை, சமாதானமும் ஆகவில்லை. ஆனாலும் என்னவோ ஒரு இதம் மனத்தில் பரவிக்கிடந்தது. சுகமான நினைவுகளில் மூழ்கச் சொல்லி எண்ணங்கள் உந்தின. உடல் களைத்துக் கிடந்தாலும் உறக்கம் வரவில்லை.

அவளின் கோபத்தைத் தீர்ப்பதற்கான வேலைதான் இப்போது அவன் ஆரம்பித்திருப்பது. ஆரம்பத்தில் கடையை உடைத்துக் கட்டுவதிலோ, நகைக்கடை ஆரம்பிப்பதிலோ சுந்தரலிங்கத்துக்கு பெரிய ஆர்வம் இருக்கவில்லை. முதலில் மறுக்கவே செய்தார்.

அவன்தான் பேசி அவருக்கு விளங்க வைத்தான்.

அவள் எதிர்பார்ப்பது போன்று திருந்தி, நேர்வழியில் நடக்கக்கூடிய தொழிலன்று அவர்களது. நாளை ஒரு பிரச்சனை என்று வந்தாலுமே சட்டத்தை அணுக முடியாத வகையில் டவுன் கடை முதலாளிகளிடம், சாதாரண மனிதர்களிடம், முக்கிய பிரமுககர்களிடம் எல்லாம் கறுப்புப் பணத்தைத்தான் வட்டிக்கு விட்டிருக்கிறார்கள்.

அதனாலேயே இவர்களைச் சுற்ற நினைப்பவர்களை நேர் வழியில் அணுக முடிந்ததில்லை. அதனால் இதுவரை காலத்தில் அவர்கள் பகைத்துக்கொண்டது பலரை, எதிரிகள் இன்னும் பலர். அவர்கள் எல்லோரும் எங்காவது சந்தர்ப்பம் அமையாதா என்று காத்திருப்பவர்கள். அப்படியிருக்க அடிதடியும் வேண்டாம், இந்தத் தொழிலும் வேண்டாம் என்று இவர்கள் மாறுவதே அவர்கள் இவர்களைத் தாக்குவதற்கு இவர்களே அமைத்துக்கொடுக்கும் வாய்ப்பாகிவிடும். அதற்குப் பதிலாக, நடப்பதே தெரியாமல் தொழிலை நேர்த்தியாக்க முயல்கிறான்.

இவ்வளவு காலமும் அடகு கடைதான் கண்ணுக்குத் தெரியும் பிரதான தொழில். வட்டிக்கு விடுவதும், திருப்பாமல் இவர்களிடம் தங்கிப் போகும் நகைகளை ஏலம் விடுவதும் அதன் பின்னால் நடப்பது. ஆனால் இனி நகைக்கடை முதன்மை பெற்று வட்டித்தொழில் பின்னால் வரும். அதையும் நாளாக நாளாக முறையான பத்திரப் பதிவுடன் கூடிய, நேர்வழித் தொழிலாக மாற்றிவிட வேண்டும் என்பதே அவன் திட்டம்.

அதுவும் அவன் நினைக்கும் வேகத்தில் நடக்கப் போவதில்லை. இவ்வளவு காலமும் கறுப்பில் பணம் வாங்கித் திருப் பியவர்கள் இனி பத்திரப் பதிவுடன் முறையாகத்தான் வாங்க வேண்டும் என்று சொன்னால் முரண்டுவார்கள். அதிலும் பலரைப் பகைக்க வேண்டி வரலாம். இன்னும் என்னென்ன சிக்கல்களை, இடைஞ்சல்களை, நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வருமோ தெரியாது. பல புதிய எதிரிகள் உருவாகுவார்கள். அவர்களையும் சமாளிக்க வேண்டும்.

சுந்தரலிங்கமும் அதை யோசித்துத்தான் மறுத்தார். காலம் முழுக்க மறைமுகமாக ரவுடித்தொழில் பார்ப்பதற்கு கொஞ்ச நாள்களுக்கு அந்தப் பிரச்சனைகளைக் கையாண்டு, எல்லாவற்றையும் நேராக்கிவிட்டால் பிறகு பயமற்றுத் தொழில் செய்யலாம் என்று அவன் சொன்னதை ஏற்று அவரும் சம்மதித்திருந்தார்.

அவனும் எல்லாவற்றையும் சமாளிப்பான்! அத்தனையும் அவளுக்காக! அவனிடம் கோப முகம் காட்டும் அவளுக்காக! பழையபடி மச்சான் என்று வந்து, அவன் முகம் பார்த்துக் கதைக்கப்போகும் அவளின் ஒற்றை வார்த்தைக்காக!

ஒரு ஆழ்ந்த மூச்சுடன் அவன் விழிகளை மூடிக்கொள்ள அவனைப் பார்த்து முறைத்தாள் நிரல்யா. ‘போடி!’ உதட்டில் மலர்ந்த முறுவலோடு திரும்பிப் படுத்தான் அனந்தன்.

*****

ஒருமாத விடுமுறையும் ஒரு வழியாக முடிந்து போயிற்று. அன்னையோடு கடைகளுக்கு வந்திருந்த நிரல்யா, சிசிரவுக்கு ஏதாவது வாங்க விரும்பினாள். கை வேறு அடிக்கடி அவன் கட்டிவிட்ட கயிற்றையே வருடிற்று. அமிதவல்லி பக்கத்திலேயே நிற்கையில் அவருக்குத் தெரியாமல் அவனுக்கு எதையும் வாங்க முடியாமல் தனக்குத் தேவையானவற்றை மட்டும் வாங்கிக்கொண்டு திரும்பினாள்.

இதற்கே இந்தப்பாடு என்றால் மிச்சவற்றுக்கு?

அன்று மனத்தைச் சொல்ல வந்தவனைச் சொல்லவிடாமல் தவிர்த்துவிட்டுத்தான் ஓடி வந்திருந்தாள். அவன் முகம் வாடி நின்றதும், ஏமாற்றத்துடன் நோக்கியதும் சுருக்கென்று ஒரு வலியைத் தந்திருந்த போதிலும் தன் வீட்டினரை எண்ணி மிகவுமே பயந்தாள். அன்று, அன்னையின் பேச்சைச் சாதாரணமாகக் கடந்தவள் இன்று அதை எண்ணி நடுங்கினாள்.


அங்கிருக்கையில் இதெல்லாம் வேண்டாம், விலகி நில், உன்னால் அவன் வாழ்வில் சிக்கல்களை உருவாக்கி விடாதே என்று அறிவு எடுத்துச் சொன்னது. பிராத்தனைக்கு வந்து இறங்கியதுமே மனம் அலைபாய்ந்து அவனைத் தேடியது.

முதல் நாள் வகுப்புக்காகப் பல்கலை நோக்கி நடந்தவளால் அவனைத் தேடும் விழிகளைத் தடுக்கவே முடியவில்லை. அவளைக் காண ஓடி வருவான் என்று நினைக்க அவனைக் வரவில்லை. முகம் வாடிப்போனது.

“என்னடி சீனியர தேடுறியா?” அவளை உணர்ந்து கேட்டாள் சரண்யா.

“இல்ல விடு. பாக்காததுதான் நல்லம்.” குரல் தழுதழுக்கச் சொன்னாள்

“என்னடி இப்பிடிச் சொல்லுறாய்?” மெல்லிய திடுக்கிடலுடன் திரும்பி அவளைப் பார்த்தாள் சரண்யா.

“பயமா இருக்கு.” என்றாள் விழிகள் கலங்க. “என்னால அவருக்கு ஏதும் நடந்திடுமோ எண்டு.”

“இத நீ முதல் யோசிச்சு இருக்கோணும். சீனியர் பாவம் எல்லா.” மெல்லிய கோபத்துடன் சிடுசிடுத்தாள்.

அவள் கேட்பது நியாயம்தானே? அவளுக்கே அவனுக்கு நம்பிக்கையைக் கொடுத்துவிட்டு ஏமாற்ற முயல்வதுபோல் தோன்றிற்று. மனம் ஒரு பக்கமும் மூளை இன்னொரு பக்கமும் நின்று சண்டையிட்டுக்கொண்டிருந்தன.

இன்னோர் பக்கம் ‘உதவிக்கரம் நீட்டுவோம்’ என்று மூன்றாம் வருடத்து மாணவர்கள், மழையாலும் மண் சரிவினாலும் பாதிக்கப்பட்ட கிராமம் ஒன்றுக்கு உதவி செய்யச் சென்றுவிட்டார்களாம் என்று அறிந்து, இவன் ஒரு வார்த்தை என்னிடம் சொல்லவில்லையே என்று அதற்கும் வருந்தினாள்.

இப்படி இருக்கையில்தான் பேராதனை, தமிழ்ச் சங்கத்தின் மூலம் தமிழ் மாணவர்கள் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடியிருந்தார்கள். அதைப் போலவே விவசாயத்துப் பீட சிங்கள மாணவர்களும் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர்.

அவளுக்குள் ஒருவிதக் குறுகுறுப்பு. அங்கே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இவர்களை விடவும் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று வேறு கேள்விப் பட்டிருந்தாள்.

“போய்ப் பாப்பமாடி?” சரண்யாவிடம் இவள் எதேற்சையாகக் கேட்டதை மனத்தில் வைத்திருந்து, உதவிக்கரம் நீட்டுவோம் செயற்திட்டத்தை முடித்துக்கொண்டு வந்த சிசிரவிடம் சொல்லிவிட்டாள் சரண்யா.

“அண்ணா, இவளுக்கு உங்கட புத்தாண்டு கொண்டாட்டம் பாக்க விருப்பமாம்.” அவளுக்கு மதில்மேல் பூனையாக நிற்கும் நண்பியை ஏதாவது ஒரு முடிவை எடுக்க வைக்க வேண்டும் என்று தோன்றிற்று.

“எத்தடமத? ஆச த?(உண்மையாவா? விருப்பமா?)” அவள் மனநிலை அறியாதவனுக்கு அவள் அப்படி ஆர்வம் காட்டுவதே அவனுக்கான பச்சைக் கொடிபோல் தென்பட்டதில் முகம் மலர்ந்து போயிற்று.

நண்பியை முறைத்தாலும் அவளும் மறுக்கவில்லை. அவன் சிந்தும் சிரிப்பின் முன்னே, அவன் விழிகளில் தெரியும் ஈர்ப்பின் முன்னே அவளின் தடுமாற்றங்கள் எல்லாம் காணாமல் போயின.

*****

‘Ape Aurudu 2024’ என்று சித்திரை வருடப் பிறப்புக் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் கிரவுண்டில் நடந்திருந்தன. ஒருவித குறுகுறுப்போடுதான் சரண்யாவுடன் வந்திருந்தாள் நிரல்யா.

பெரும்பான்மையான சிங்கள மாணவிகள் அவர்களின் பாரம்பரிய உடையான சீத்த ஹெட்ட(சரங் ஹெட்ட) வுடன் இருக்க, ஆண்கள் சரமும் சேர்ட்டும் அணிந்திருப்பதைப் பார்க்கவே சிரிப்பு அரும்பிற்று.

இதை விடவும் கேவலமான சரம் ஒன்று இந்த உலகத்திலேயே இருக்க முடியாது என்பது போன்ற ஒன்றைக் கட்டி, அப்போதும் செக் செக் ஷேர்ட் ஒன்று அணிந்து, அதைவேறு சரத்துக்குள் இன் பண்ணி, பச்சை நிறத்தில், குறைந்தது ஏழு செண்டிமீட்டர் அகலத்தில், அந்தக் காலத்து மைனர் பெல்ட் ஒன்றால் சரத்தை இடுப்பில் பிடித்து வைத்திருந்தான் சிசிர.

பார்த்தவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ‘இவன்ர ரசனைல கொள்ளி வைக்க!’ சரண்யாவுக்கும் என்னடா இது என்றுதான் இருந்தது. “அந்த பெல்ட்டை பிடுங்கிக்கொண்டு ஓடினா எப்பிடி இருக்கும்?” என்றாள் நிரல்யாவிடம்.

“ஏன் எங்கட கண் ரெண்டும் அவிஞ்சு போறதுக்கா?”

“ஹல்லோ தோழி! நீர் 18+ கதை கதைக்கிறீர்!”

“ஆரம்பித்து வைத்ததே நீர்தான்!”

இருவருக்கும் அடக்க முடியாத சிரிப்பு.

அங்கே மைக்கில் சித்திரைப் புது வருடத்தைப் பற்றிப் பேசி, கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்துக்கொண்டிருந்த சிசிரவின் கவனம் இவர்களில்தான். நிரல்யா தன்னைப் பற்றித்தான் என்னவோ சொல்லிச் சிரிக்கிறாள் என்று கண்டுகொண்டவனின் முகத்திலும் சிரிப்பு.
 
Status
Not open for further replies.
Top Bottom