உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 3

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 71

Member
Staff member
May 13, 2026
36
74
18
India
அத்தியாயம் - 3

"அடடே காலைலயே நம்ம வீட்டு பொண்ணை அழ வைக்கிறீங்க போல" என்று கேட்டபடி கையில் காபி கப் நிறைந்த ட்ரேயை கொண்டு வந்தார் வாசுகி,...

"நான் எங்கேமா அழ வச்சேன், பிள்ளைக்கு ஆறுதல் சொல்லிட்டு இருந்தேன்" சரணவன் பாவமாக விழிக்க,... "நான் தான் பார்த்தேனே" வாசுகி கணவனை வம்புக்கு இழுக்க,.. பவித்ராவோ பதறிக் கொண்டு,.. "ஐயோ அப்படியெல்லாம் இல்ல, சித்தப்பா என்னை அழ வைக்கல, அவரோட பாசத்துல அப்பா அண்ணா நியாபகம் வந்து தானா கண் கலங்கிடுச்சி" என்றாள் அவசரமாக,..

"ஆஹா.. என்ன சித்தப்பாக்கு வக்காலத்தா?" என்று வாசுகி அவளையும் வாற, அவள் பாவமாக சரவணனை தான் பார்த்து வைத்தாள்,..

"ஏன்மா வாசுகி இப்படி? காலைலயே வம்பு பண்ண ஆரம்பிச்சிட்ட போல, எப்போவும் என்னைய வம்புக்கு இழுப்ப, இப்போ பாவம் இந்த பொண்ணையும் இழுக்குறியா?" என்று அவர் தன் மனைவியிடம் கேட்க,.. "நான் எங்கே வம்புக்கு வந்தேன், ஏன் பவித்ராவை அழ வச்சீங்கன்னு தானே கேட்டேன்" அவர் வினவ,.. "சித்தப்பா ஒன்னும் அப்படி பண்ணல" என்றாள் பவித்ரா மீண்டும் இந்த முறை மிகவும் வாடிய முகமாக,..

"ஐயோ.. அழுதுடாதம்மா, நான் சும்மா தான் சொன்னேன்" அவள் முகம் வாடியதை கண்டு கேலி செய்த வாசுகி,.. "உன் சித்தப்பாவை பத்தி எனக்கு தெரியாதா என்ன? நான் சும்மா உன்னை கிண்டல் பண்ண தான் அப்படி சொன்னேன், அதுக்கு போய் இப்படி முகத்தை தொங்க போட்டுக்கலாமா?" என்று அவர் கூற,.. பவித்ராவிற்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது,..

"இந்தாம்மா காபி குடி. உனக்கு சர்க்கரை கம்மியா, அதிகமானு தெரியல, அதான் மீடியமா போட்டிருக்கேன்," என்று வாசுகி ஒரு கப்பை அவளிடம் நீட்டிட, அவளும் காபியை வாங்கியவள் மெல்லப் பருகத் தொடங்கினாள். காபியின் சுவையை விட அந்தச் சூழலின் நிம்மதி அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதன் பிறகு ஜானகியும் சரண்யாவும் கூட வந்து விட்டனர். திருமண அலைச்சலால் அவர்கள் எழுந்து கொள்ளவே நேரமாகி விட்டது, அந்த கணம் தான் சரண்யாவின் ஏழு வயது மகள் அதிதியும் வந்தாள், நேற்று கல்யாணம் காலையில் சீக்கிரமே எழுந்து விட்டதால் மண்டபத்திலிருந்து காரில் வரும் வழியிலேயே அவள் தூங்கி விட, சரண்யா மகளை அறைக்கு கொண்டு போய் படுக்க வைத்து விட்டாள், அப்போது தூங்கியவள் தான், இரவில் தூக்கத்திலேயே கொஞ்சமாக தாய் ஊட்டிய உணவை உண்டு விட்டு இப்போது தான் எழுந்து வந்தாள்,...

அதிதியை இப்போது இரண்டாவது முறை சந்திக்கிறாள் பவித்ரா, சிறு பிள்ளை என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அத்தை அத்தை என்று உரிமையோடு பேசும் அதிதியை பவித்ராவிற்கு மிகவும் பிடித்து போக, அதிதிக்கும் தனது அத்தையை மிகவும் பிடித்திருந்தது.

"அத்தை... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, என் கூடடெய்லி விளையாட வருவீங்களா?" என்று அதிதி மழலை மாறாமல் அவளது மடியில் வந்து அமர்ந்து கொள்ள, பவித்ராவிற்குள் எஞ்சியிருந்த தயக்கமும் அந்த சிறுமியின் தீண்டலில் கரைந்து போனது. மெல்ல அதிதியின் கன்னங்களை வருடியவள், ஒரு தாய்க்குரிய வாஞ்சையோடு அவளை அணைத்துக் கொண்டாள்.

அந்தக் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அவளைத் தங்கள் இதயத்தில் ஏந்திக் கொள்வதை உணர உணர, பவித்ராவின் மனதில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது. இத்தனை காலமாய் அவள் தேடிய அமைதி, இந்த வீட்டில் தான் அவளுக்குக் கிடைக்கத் தொடங்கியிருந்தது.

"கௌதம் எங்கே. டைமாச்சு இன்னும் வர காணோம்" என்று ஜானகி பவித்ராவை நோக்க, அவளுக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை, அவள் எழும் போதே அவன் அறையில் இல்லையே, இப்போது எங்கே என்று கேட்டால் நான் என்ன சொல்வது என்ற எண்ணம் தான் அவளுக்கு,..

ஆனால் அவளுக்கு ரொம்ப நேரம் கஷ்டம் கொடுக்காமல் கௌதமே மாடிபடியிலிருந்து இறங்கி வந்தான், அவன் அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான் என்பது அவனது உடையில் இருந்தே தெரிந்தது, நேவி ப்ளூ நிற கோட் சூட்டில் மிக கம்பீரமாக இறங்கி வந்தான், நேற்றைய திருமணக் களைப்பு மறைந்து, அவனது முகத்தில் ஒரு கறாரான பிஸ்னஸ்மேனின் தோரணை வந்துவிட்டிருந்தது.

அவன் வருவதை கண்டதும் பவித்ராவிற்குள் மீண்டும் ஒரு இனம் புரியாத நடுக்கம் தொற்றி கொண்டது, அவன் இரவு ஆறுதலாக பேசினாலும் முழுதாக அவளை விட்டு அந்த நடுக்கம் ஏனோ போகவில்லை. கீழே இறங்கி வந்தவன், ஹாலில் பவித்ரா அமர்ந்திருப்பதைப் பார்த்தான். இருவரின் விழிகளும் ஒரு கணம் சந்தித்துக் கொண்டன.

"என்ன கௌதம் அதுக்குள்ள கிளம்பிட்ட, இன்னைக்கு ஒரு நாள் லீவ் போட கூடாதா" என்று சரவணன் கேட்க,.. "இல்ல மாமா, இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, அதான் கிளம்பிட்டேன்" என்று சுருக்கமாக பதில் அளித்தான்,..

"இருந்தாலும் இன்னைக்கு ஒரு நாள் வீட்ல இருக்கலாம்ல" வாசுகி கூற,.. "வேலை இருக்கு அத்தை" என்று மட்டும் சொன்னவன், தன் தாய் மற்றும் தமக்கையை நோக்க, அவரோ இவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்பது போல் பெருமூச்சு விட்டு,.. "சாப்பிட்டாவது போவியா?" கேள்வியாக நிறுத்தினார் அவனின் அன்னை.

"ம்ம்.. எடுத்து வைங்க" அவன் கூற,.. "பவித்ரா வாமா, இனிமே உன் புருஷனை கவனிச்சிக்கிறது உன் பொறுப்பு" என்று கூறி அழைத்திட, அவளுக்கு பதட்டமாக இருந்தாலும், மறுக்க முடியாமல் எழுந்து தன் அத்தையின் பின்னால் சென்றாள்.

"கொஞ்சம் அவளுக்கு டைம் கொடுக்கலாமே" வந்த அடுத்த நாளே அவள் பணிவிடை செய்ய வேண்டுமா என்ற எண்ணத்தில் அவன் தன் தமக்கையிடம் கூற,.. அவளோ.. "அப்போ தான் ரெண்டு பேரும் புரிஞ்சிக்க முடியும்" என்றாள்.

அவனும் ஒரு பெருமூச்சுடன் டைனிங் அறை நோக்கி செல்ல,.. அங்கே அவனை கண்டதும் பதட்டமாக தலை குனிந்து கொண்டாள் பவித்ரா,..

ஜானகி அதனை கவனித்தாலும்,.. "அவனுக்கு பரிமாறுமா, நான் இதோ வரேன்" என்று கூறிவிட்டு, அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி வெளியே சென்றிட, அவளோ கரங்களை பிசைந்த நிலையில் நின்றிருந்தாளே தவிர அவனுக்கு எதுவும் எடுத்து வைக்கவில்லை,..

அவனும் சில நொடிகள் பார்த்தவன், பின் அவனே எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்து விட, அவளுக்கோ ஒரு மாதிரியாக போய்விட்டது,..

"நா.. நான் பறிமாட்டுமா" என்று வினவ,.. "இல்ல வேணாம்" என்றவன் சாப்பிட தொடங்கி விட்டான். அவனது அந்த ஒற்றை வார்த்தை அவளுக்குள் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. 'நாமளே எடுத்து வச்சிருக்கலாமோ' என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவன் மீண்டும் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

அவன் பார்த்ததும் அவளுக்குள் மீண்டும் பதட்டம், வேகமாகத் தலை குனிந்து கொண்டாள்.

'சும்மா பார்த்தது ஒரு குத்தமா?' என்ற எண்ணம் தான் அவனுக்கு. அதன் பிறகு அவன் உண்டு விட்டு எழுந்து கை கழுவிக் கொண்டான். அவளுக்கோ அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை. அவனோ ஈரக் கையையும் டவலில் துடைத்தவன், மீண்டும் அவளைப் பார்க்க, அவன் பார்த்த நேரம் அவள் மீண்டும் வேகமாகத் தலை குனிந்து கொண்டாள்.

அவளது இந்த செயல் அவனுக்கு சிரிப்பு வருவது போல் இருக்க, அதனை அடக்கிக் கொண்டே "வரேன்" என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டுச் சென்று விட, அவளுக்கோ ஒரு பெரும் நிம்மதிப் பெருமூச்சு மட்டுமே வெளிவந்தது.

அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தவள், மெல்ல ஹாலிற்கு வந்தாள். அங்கே ஜானகியும் வாசுகியும் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்க, பவித்ராவைக் கண்டதும் ஜானகி...
"என்னம்மா... சாப்பிட்டானா கௌதம்? எதுவும் சொல்லாமப் போறானேன்னு பார்க்காதே, அவனுக்கு வேலைன்னு வந்துட்டா வேற எதுவும் கண்ணுக்குத் தெரியாது" என்று மகனுக்கு வக்காலத்து வாங்கினார் ஜானகி.

"இல்ல அத்தை... அவர் சாப்பிட்டுட்டுச் சொல்லிட்டுத் தான் போனாரு" என்று பவித்ரா மெல்லிய குரலில் கூற, "அப்படியா? உன்கிட்டயாவது சொல்லிட்டு போனானே, எங்களை கண்டுக்கவே இல்ல" என்று வாசுகி மீண்டும் ஒரு கிண்டல் பார்வையை வீசினார்.

பவித்ராவிற்கு அந்த வீட்டின் கிண்டல்களும் கேலிகளும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. யாருமே அவளிடம் கடுமையாகப் பேசவில்லை, அவளது மௌனத்தைக் கண்டு அவளைத் தனிமைப்படுத்தவும் இல்லை.

ஜீவிதா அப்போது தான் வந்தாள். "அம்மா எனக்கு ஒரு காபி" என்று கூறியபடி வந்து அமர்ந்தவள், "என்ன அக்கா இங்கே இருக்கீங்க, அத்தான் எங்கே?" என்றாள் பவித்ராவிடம்.

"அவன் ஆபீஸ் போயிட்டான்மா," ஜானகி சலிப்புடன் கூற, "என்ன அத்தை சொல்றீங்க? நேத்து தான் கல்யாணமாகிருக்கு, எப்படி நீங்க அவரை ஆபீஸ் போக விடலாம்?" என்று அவள் வினவிட, "என்னை நீயும், கூட கொஞ்சம் டென்ஷன் ஏத்தாத ஜீவி! உன் அத்தான் அப்படியே சொன்னதும் கேட்டுடுவானாக்கும், அவனை பத்தி உனக்குத் தெரியாதா? பிடிவாதம் பிடிச்சு கிளம்பிட்டான். நான் என்ன பண்றது?" என்று ஜானகி கூற, ஜீவிதா பவித்ராவைத் திரும்பிப் பார்த்தாள்.

"அக்கா நீங்களாச்சும் தடுத்திருக்கலாம்ல" என்று அவள் கேட்க, பவித்ராவிற்குத் தான் எங்கே அவரிடம் உரிமையாகப் பேசுவது என்ற எண்ணம் வந்தது. பதில் சொல்லத் தெரியாமல் அவள் அமைதியாக இருக்க, வாசுகி குறுக்கிட்டு.. "அவ இப்பதான் வந்திருக்கா ஜீவி, அதுக்குள்ள அவனைத் தடுத்து நிறுத்துற அளவுக்குப் பேசிப் பழக்கம் கூட வரல, நீ வேற அவளைக் கேட்டு சங்கடபடுத்தாத," என்று வாசுகி சொல்ல, ஜீவிதா தன் தவறை உணர்ந்து... "சாரி அக்கா, நான் சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன். அத்தான் எப்போதுமே இப்படித்தான், வேலையைத் தான் கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி ஓடுவார். ஆனா நீங்க கவலைப்படாதீங்க, இன்னைக்கு நாம எல்லாரும் சேர்ந்து ஜாலியா இருப்போம்," என்று பவித்ராவின் கையைப் பிடித்துக் கொண்டு அவளது சங்கடத்தைப் போக்கிட, அவளது கலகலப்பான பேச்சில் ஈர்க்கப்பட்டு மெல்ல புன்னகைத்தாள் பவித்ரா,..

அந்த நேரம் அங்கு ஓடி வந்த அதிதி,.. "அத்த என்கூட விளையாட வரேன்னு சொன்னீங்களே கார்டன்க்கு போலாமா" என்று பவித்ராவிடம் கேட்க,.. "ம்ம்.. போலாமே" கொஞ்சலுடன் சொன்னவள்,.. "நீங்களும் வாங்க ஜீவிதா" என்றாள்,..

"நான் வராம உங்களை விளையாட விட்டுடுவேனா வாங்க வாங்க போலாம்" என்று மூவரும் வெளியே இருக்கும் தோட்டத்திற்கு வந்தனர்.

 

Author: STN - 71
Article Title: உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
அட பவி என்ன இப்படி பயந்து இருக்கா..... கௌதம் நல்லவன் தான் போல.....