• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு - 8

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-8


அடுத்த நாள் சனிக்கிழமை என்பதால் மரகதமும் கவிநயாவும் நன்கு விடிந்தபின்னரே எழுந்தனர். கவிக்கு உடல்வலி என்றால் மரகதத்துக்கு மனதில் வலி!

கவிக்கு இன்று இன்னும் அதிகமாகக் கால்கள் வீங்கி, வலியும் அதிகமாக இருந்தது. நடக்கவே சிரமப் பட்டாள்.

"வலி அதிகமாக இருக்கிறதா கவி?" மரகதம் கேட்கவும்,

"கை வலிக்கும் வரை அடித்தீர்களே. உங்களுக்குத் தெரியாதா எவ்வளவு வலிக்கும் என்று?" கேட்டவளின் குரலில் சிறுபிள்ளைக் கோபம் மீண்டிருந்தது.

"நீ செய்யும் வேலைகளுக்கு உன்னைக் கொஞ்சுவார்களா?" என்று அதட்டிய மரகதமும் வழமைக்குத் திரும்பியிருந்தார்.

இதுதான் அவர்கள்! கவியின் துடுக்கு பிறப்பிலே வந்தது. மரகதத்தின் இறுக்கம் வாழ்வில் பலமாக அடிபட்டு வந்தது!

"காலை நீட்டியபடி நிலத்தில் இரு. வெந்நீர் ஒத்தடம் கொடுக்கிறேன்..." என்றவர், வெந்நீரையும் துண்டு ஒன்றையும் எடுத்துக்கொண்டு நிலத்தில் அமர்ந்தார்.

தாயை முறைத்த கவி, காலை மட்டும் அல்லாது முகத்தையும் நீட்டிக்கொண்டு அமர்ந்தாள்.

"இந்தக் கோபத்தைக் குறை என்று சொன்னால் மட்டும் கேட்டுவிடாதே. எவ்வளவு அடித்தாலும் திருந்தமாட்டாய்.” என்று சலித்தவர், மகளின் கால்களுக்கு மிக மிக மென்மையாக ஒத்தடம் கொடுத்தார்.

சனி ஞாயிரு இரண்டு நாட்களும், தாய்க்கும் மகளுக்கும் சின்னச் சின்ன வாக்கு வாதத்துடன் நகர்ந்தது.

திங்கட்கிழமை விடியவே, வழமை போல் கவிநயா பள்ளிக்குத் தயாராகவும், மகளை ஒரு பார்வை பார்த்தவர், "எந்த வம்புக்கும் போகாது போய்வா!" என்றார் சற்று அதட்டலாக.

தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டு, "சரிம்மா. உங்கள் பல்லவியைத் திரும்பவும் ஆரம்பிக்காதீர்கள்!" என்று சினத்துடன் பதில் சொன்னாள் கவி.

மரகதம் முறைக்கவும், "அதுதான் வம்புக்குப் போகவில்லை என்று சொன்னேனே. பிறகு என்னம்மா. சும்ம்மா அதையே திரும்பத் திரும்பச் சொல்லாதீர்கள்..” என்று கடுப்புடன் பதில் சொல்லிவிட்டுப் பள்ளிக்கு விரைந்தாள்.

சற்றுத் தூரம் நடந்ததும், வழமை போல் எதிரிலே ரவி வந்துகொண்டிருந்தான். அவனைப் பார்க்கக் கூடாது, அவன் என்ன சொன்னாலும் வாயே திறக்க கூடாது என்று உருப் போட்டபடியே நடந்தவளின் தலை, என்றுமில்லாது இன்று குனிந்திருந்தது.

தாய் அடித்தது உடலில் வலித்தாலும் மனதில் வலிக்கவில்லை அவளுக்கு. அடிக்கடி அடிவேண்டுவதால் அது பெரிதாகவும் தோன்றவில்லை. என்ன, இந்த முறை விழுந்த அடிகளின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகம்! அவ்வளவே!

ஆனால் தாய் கண்ணீர் விட்டு அழுதது அவளைப் பாதித்து இருந்தது. தாயின் உணர்வுகளை முழுதாக உணர்ந்துகொள்ளும் வயதோ அல்லது பக்குவமோ இல்லாத பருவமாகையால், தான் வாய் காட்டுவதால் அம்மா வருந்துகிறார் என்கிற வரையில் புரிந்திருந்தது அவளுக்கு.

அவன் எதுவும் பேசக்கூடாது. கடவுளே.. நானும் வாயைத் திறக்கக்கூடாது என்று கடவுளிடம் மன்றாடியபடி அவனைக் கடந்தவளுக்கு, அவனும் எதுவும் பேசாது இருக்கவே, 'அப்பாடி...' என்றிருந்தது. அவனைக் கடந்த பிறகுதான் தலையை மறுபடியும் நிமிர்த்தி நடந்தாள்.

தூரத்திலேயே அவளைக் கண்டுவிட்ட ரவிக்கு, மனதில் ஒருவித சுகம் பரவியது. உடலில் ஒருவித பரபரப்பு. இரண்டு நாட்களாக அவளைக் காணாது கண்ட அவனின் கண்கள் அவளையே மையம் கொண்டிருந்தாலும், வாய் அசைய மறுத்தது. ஏதாவது சொல்லி அவளைச் சீண்டி அவளின் கோபத்தை ரசிக்க வேண்டும் என்றுதான் அவனும் காத்திருந்தான். ஆனாலும் ஏனோ முடியவில்லை. அவளைப் பார்ப்பதே போதும் என்பதுபோல் ஆசையுடன் அவளையே பாத்திருந்தான்.

தன்னைக் கடந்து செல்பவளையே கண்வெட்டாது பாத்திருந்தவனின் இதயம் தாறுமாறாகத் துடிக்க, பிடரி முடியினை இருகைகளாலும் கோதிக்கொண்டவன், கண்களை இறுக மூடித்திறந்தான். உள்ளமோ ஏதோ ஒன்றை எதிர்பார்த்து, ஏங்கிக் கிடந்தது.

அவள் பார்வையிலிருந்து மறைந்தபின்னரும், அவள் சென்ற பக்கமே பார்வையை வைத்திருந்தவன் விழிகள் உருவமில்லாக் கனவில் மிதந்தது.

நீண்ட நேரத்திற்குப் பிறகே, எங்கே ராஜைக் காணவில்லையே என்று யோசித்தபடி கைக் கடிகாரத்தைப் பார்த்தான். நேரமோ, பள்ளி தொடங்கும் நேரத்தை நெருங்கியிருந்தது. இனியும் தாமதிக்க முடியாது என்று நினைத்தவன், சைக்கிளைப் பள்ளி நோக்கி மிதித்தான்.

அங்கே நடந்து சென்றுகொண்டிருந்த கவியைக் கண்டதும், ராஜைப் பற்றி அவளிடம் விசாரிக்கலாம் என்று நினைத்து, அவளின் அருகே சைக்கிளை கொண்டுபோய் அவன் நிறுத்தவும் கவி பயந்துபோனாள்.

"அம்மா...!" என்றபடி திகைத்து விலகியவளை, "ஹேய்...நான்தான்...!" என்றான் ரவி.

அப்போதும் அவள் பயத்துடன் மிரண்டு விழிக்கவும், "ஏய் காட்டுராணி, நீ கூட பயப்படுவாயா?" என்று கேட்டவனின் குரலில், கேலி இருந்தாலும் கனிவு கலந்து வந்தது.

புதிதாக அவனிடம் தெரிந்த அந்தக் கனிவு கூட அவளுக்குத் திகைப்பை உண்டுபண்ணியது போலும், அப்போதும் வாயைத் திறக்க முடியாமல் நின்றாள்.

அவளை ரசித்தபடி, "ராஜ் ஏன் இன்று வரவில்லை கவி? உனக்கு ஏதாவது தெரியுமா?" என்று அவன் சாதாரணமாகக் கேட்டான்.

இதுவரை இப்படியான சாதாரண உரையாடல்கள் அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்திருக்காத படியினால், அவனையே விழி விரிய பாத்திருந்தவளின் உதடுகள் அசைய மறுத்தது.

சில நொடிகளில் அவனின் கேள்வி புரியவே, "அது.. அது மாமாவுக்கு உடம்பு சரியில்லையாம். அதனால் தான் என்று நினைக்கிறேன். எனக்கு சரியாக தெரியாது, ராஜ் அண்ணா ஏன் வரவில்லை என்று..." திக்கியவாறே பதில் சொன்னாள் கவி.

அவன் நினைத்ததுதான் என்பதால் அந்த விஷயத்தை விட்டுவிட்டு, "எதற்காக திக்குகிறாய்? பயந்துவிட்டாயா?" என்று மீண்டும் இதமாகக் கேட்டான்.

அப்போதும் அவள் தலையை ஆம் என்பதாக அசைக்க, உண்மையாகவே பயந்துவிட்டாள் என்று புரிந்தது அவனுக்கு.

சின்னச் சிரிப்புடன், "லூசு! எதற்கு பயப்படுகிறாய்..!” என்று அவளின் தலையில் தன் கையினால் மெல்லத் தட்டி, "பயப்படாமல் போய்வா....!" என்று மென்மையாகச் சொன்னான். அவன் தலையில் தட்டியதும் அவளின் உடலில் மெல்லிய சிலிர்ப்பு ஒன்று ஓடி மறைந்தது.

அவனின் அந்தச் செயலும், அதை அவன் உணராது இயல்பாகச் செய்த விதமும் அவளுக்கு ஆச்சரியத்துடன் அதிர்ச்சியையும் சேர்த்துக் கொடுத்தது.

சரி என்பதாக அவள் தலையை அசைக்கவும், ‘இவளுக்கு என்ன ஆகிவிட்டது. இன்று அநியாயத்திற்கு அமைதியாக இருக்கிறாளே..’ என்று நினைத்தபடி தானும் பள்ளிக்குச் சென்றான் ரவி.

என்றுமில்லாது இன்று கவி என்று அவன் அழைத்ததும், மிகச் சாதாரண குரலில் பேசியதும், அவன் கண்களில் இருந்த கனிவும், குரலில் இருந்த மென்மையும், போதாக்குறைக்கு அவள் தலையை அவன் தட்டியதும் அவளின் வாயை அடைத்திருந்தது என்பது அவனுக்குப் புரியவில்லை.

அவன் செயல்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாமல், 'என்ன ஆகிவிட்டது இவனுக்கு? வித்தியாசமாக பேசுகிறானே இன்று', என்று சிந்தித்தபடியே சென்றாள் கவி.

அவளின் புதுவிதமான அமைதியே அன்று முழுவதும் ரவியின் மனதைக் குடைந்தது. அவனை அவள் பார்க்கும் பார்வையிலேயே முறைப்பு இருக்கும். இல்லையானால் என்னிடம் வம்பு வளர்த்தால் உன்னை ஏதாவது செய்துவிடுவேன் என்கிற மிரட்டல் இருக்கும். இன்றானால் ஏதோ ஒரு தயக்கம், பயம் அல்லது தடுமாற்றம் இருந்தது.

ஏன்? ஏன் அப்படிப் பார்த்தால் என்று யோசித்தவனை, "அடேய், ஏதாவது சாப்பிட வருகிறாயா என்று எத்தனை தடவை கேட்பது? காதை எங்கே வைத்திருக்கிறாய்...?" என்று பாய்ந்தான், ரவியின் நண்பர்களில் ஒருவனான தேவன்.

"அதுவாடா, அவனின் உயிர் நண்பன் ராஜ் இன்று பள்ளிக்கு வராததால் நம் நண்பன் சோகமாக இருக்கிறான். இல்லையாடா ரவி?" என்று கேட்ட கண்ணனின் குரலில் சிறு குத்தல் இருந்தது.

"என்னடா சொல்கிறாய்? அவன் உயிர் நண்பன் என்றால் நாம் யார், இவனின் தயிர் நண்பர்களா?" என்றான் தேவன்.

தங்களை விட ராஜுடன் ரவி நெருங்கிப் பழகுவதில், கண்ணனுக்கும் தேவனுக்கும் சிறு பொறாமை இருந்தது. அவர்கள் நால்வரும் படிப்பில் கெட்டிக்காரர்கள்! பணத்தில் ரவியளவு இல்லை என்றாலும் கண்ணனும் தேவனும் வசதியில் குறைந்தவர்கள் அல்ல!

அப்படி இருக்கையில், தினக்கூலியின் மகனான ராஜுடன் அவன் நட்பு பாராட்டுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

"அப்படியா ரவி? உனக்கு எங்களை விட அவன்தான் நெருங்கிய நண்பனோ?" தேவனின் குரலிலும் சிறு பொறாமை ஒழிந்திருந்தது.

"தேவை இல்லாமல் பேசாதீர்கள்...!" ரவியின் குரலில் அதட்டல் இருக்கவே,

"எது தேவை இல்லாத விடயம் ரவி? உன் ஊரிலேயே வசிக்கும் உன்னுடனேயே சுத்தும் எங்களை விட அவனுடன் நீ நெருங்கிப் பழகுவது எங்களுக்குத் தேவை இல்லாத விசயமாடா?" என்று கேட்ட தேவனின் குரலிலும் இப்போது சிறு கோபம் இருந்தது.

இந்த வாதத்தை வளர்க்க விரும்பாத ரவி, "விசராடா உங்களுக்கு? எனக்கு நீங்கள் மூவருமே ஒன்றுதான்! ராஜ் எனக்கு மட்டும் இல்லை உங்களுக்கும் நண்பன் தான். ஆனால் இப்போது நான் ராஜைப் பற்றி யோசிக்கவே இல்லை..." என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்த விஷயத்தைத் தவிர்க்க நினைத்து வாயை விட்டான்.

"நீ சொல்வதை நம்பிட்டோம்!" என்று நம்பாத குரலில் சொன்ன கண்ணன், "அப்படியானால் இலங்கையின் பொருளாதாரத்தை எப்படி உயர்த்தலாம் என்று யோசித்தாயா ரவி?" என்று நக்கலாக வேறு கேட்டான்.

"நான் கவியைப் பற்றி யோசித்தேனடா..." என்று முறைப்புடன் உள்ளதை உளறினான் ரவி.

"என்னது? கவியைப் பற்றியா? அவளைப் பற்றி யோசிக்க என்னடா இருக்கிறது?" என்று கேட்ட தேவனின் குரலில் புது ஆர்வம் பிறந்திருந்தது.

அவர்கள் இருவரின் பார்வையும் குறுகுறு என்று ரவியின் முகத்தை ஆராய்ந்தது.

அவர்களின் பார்வையை எதிர்கொள்ளாது, "இல்லை… இன்று அவள் இயல்பாக இல்லை. அதுதான் ஏன் என்று யோசிக்கிறேன்.." தன் யோசனையில் மிதந்தவாறே சொன்னான் ரவி.

"என்னடா..? அன்று நான் சொன்னதுபோல அவளைக் காதலிக்கிறாயா?" கேட்ட கண்ணனின் குரலில் சிறு ஏளனம்.

எதுவும் சொல்லாது அமைதியாக இருந்தவனின் செயல் இன்னுமே சுவாரசியத்தைத் தூண்ட, "ஓ.. காதல்தானா.....? அதுவும் அந்தக் குண்டுக் கறுப்பி மீது?" என்று தேவன் கேட்கவும், ரவி அவனை முறைத்தான்.
 

Vishakini

Moderator
Staff member
அவனின் கோபம் கூட அவர்களுக்கு ஆர்வத்தைக் கிளப்பியது. "ஆனாலும் தேவா.. அவள் கறுப்பாக இருந்தாலும் முகவெட்டான பெண். ஆனால் நம் ரவி, வெயில் பட்டால் மினுங்கும் கறுப்பு. அப்படியானவனை இவன் காதலித்தாலும் அவள் காதலிப்பாள் என்றா நினைக்கிறாய்..." என்று கேட்ட கண்ணனின் குரலில், நான் உன்னை விட நிறமானவன் என்கிற கர்வம் இருந்தது.

எப்போதும் தான் கறுப்பன், அழகற்றவன் என்கிற எண்ணம் ரவியின் மனதில் இருந்ததால், கண்ணனின் இந்தப் பேச்சு அவனைப் பலமாகத் தாக்கியது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல், "எனக்கென்னடா குறை? நான் நிறம் குறைவாக இருந்தாலும் உன்னைப் போல குண்டும் இல்லை. தேவனைப் போல குள்ளமும் இல்லை!" என்றவனின் குரலிலும் கிண்டல் இருந்தது.

அவன் பேச்சால் முகம் சிறுத்தாலும், "அவன் குண்டாக இருந்தாலும் நான் குள்ளமாக இருந்தாலும், எங்களை ஆர்வத்துடன் பார்க்கும் பெண்கள் தான் அதிகம். உன்னைக் கறுப்பன் என்று சொல்லும் பெண்கள் தான் அதிகம்! இதை இல்லை என்று சொல்வாயா?" என்று கேட்ட தேவனின் குரலில், ரவியைத் தாக்கும் வேகம் இருந்தது.

அவன் சொல்வது உண்மை என்பதால் ரவியின் வாய் தானாக மூடிக்கொண்டது. இவர்கள் மூவரும் சென்றால், ரவியின் மீது ஒரு பெண்ணின் பார்வையும் திரும்பாது. இதுவரை அது ஒரு குறையாக அவன் எண்ணியது இல்லை. ஏன், அவர்கள் ஏன் தன்னைப் பார்க்கவில்லை என்று கூட அவன் யோசித்தது இல்லை. ஆனால், இன்று காதல் என்கிற ஒன்றினால் தாக்கப்பட்ட அவன் உள்ளம், இவர்களின் பேச்சைக் கேட்டு மிக ஆழமாகக் காயப்பட்டது.

"அத்தோடு திருமணம் என்று வருகையில் பெண்கள் அழகைத்தான் பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கையில் உன்னையும் பிடித்து ஒருத்தி கட்டுவாள் என்று எனக்குத் தோன்றவில்லை!" என்ற கண்ணனின் பேச்சில் எள்ளல் நிறைந்திருந்தது.

உலக அனுபவம் இல்லா அந்தப் பதினெட்டு வயதில், ஏற்கனவே நான் அழகற்றவன் கறுப்பன் என்று தாழ்வுணர்ச்சியுடன் இருந்த ரவியை, அவர்கள் பேச்சு மிகவும் வேதனைப்படுத்தியது. அவன் நண்பர்களுக்கோ அவனின் அமைதி பேச்சை வளர்க்க இன்னும் வசதியாக அமைந்தது.

"கண்ணா, சிலநேரம் இவனிடம் இருக்கும் பணத்துக்காக கவி இவனைக் காதலிப்பது போல் நடிக்கலாம்....!" என்றான் தேவன்.

"அவளுக்கு இவன் பணக்காரன் என்று தெரியாது தேவா. எங்கள் ஊருக்கு அவள் வந்ததில்லையே. பிறகு எப்படி அவனின் வசதிக்காவது அவள் இவனைக் காதலிப்பாள்?”

"அப்படி என்றால், பணத்துக்காக மட்டும்தான் ரவியை யாராவது திருமணம் முடிப்பார்களா?"

"அடப்போடா, அப்படியானால் ரவியின் வாழ்வில் காதலும் இல்லை! கல்யாணமும் இல்லை..." கிண்டலாக சொன்னான் தேவன்.

"அப்படியும் சொல்ல முடியாது தேவா. கவியிடம் யாராவது இவனின் பணவசதியைப் பற்றிச் சொன்னால், சில நேரம் அவள் இவனைக் காதலிக்கலாம். ஆனால் அதுவும் உறுதியாகச் சொல்லமுடியாது..."

"ஏன் கண்ணா, இப்படிச் சொல்கிறாய்? அவளுக்கு அப்பா இல்லையாமே, அம்மா சமையல் வேலை செய்துதான் அவர்கள் வாழ்க்கை ஓடுகிறதாம். அப்படி இருக்கையில் இவனின் வசதியை அறிந்தால் அவள் நம் ரவியின் காதலுக்கு சம்மதம் சொல்வாள் தானே..."

தேவனின் பேச்சில் இவனின் பணத்தை நம்பி மட்டுமே ஒருத்தி ரவியைக் காதலோ, திருமணமோ செய்வாள் என்கிற தொனி இருந்தது.

"எனக்கு நம்பிக்கை இல்லை தேவா. நீயே யோசி, அவள் இவனைத் திட்டும் போதெல்லாம் கரிவாயா, கறுப்பா, எலும்புக்கூடு, கொக்கத்தடி என்று படு கேவலமாகத் தான் திட்டுவாள். மனதில் இருப்பது தானே வாயில் வரும். அப்படி நினைப்பவள் இவனைக் காதலிப்பாள்?"

"இல்லை என்கிறாயா...?"

"ஆமாமடா..."

"பணத்துக்காக அவள் இவனைக் காதலிப்பாள்.....!"

"இல்லை தேவா, நிச்சயமாக இல்லை!"

"என்ன கண்ணா, பணத்துக்காகத்தன்னும் நம் ரவியை ஒருத்தியும் காதலிக்க மாட்டாளா?"

"அந்தச் சின்ன பெண் கவியே காதலிக்க மாட்டாள் என்கிறேன். இதில் நீ மற்றப் பெண்களைப் பற்றிப் பேசுகிறாய். போடா....!"

"பாவம்டா நம் ரவி. நீ கவலைப் படாதே ரவி. உனக்கென்று ஒருத்தி இதுவரை பிறக்காமலா இருக்கப்போகிறாள். உனக்கும் கல்யாணம் நிச்சயம் நடக்கும்...."

அவர்களின் எள்ளலைச் சமாளித்த ரவியால், பரிதாபம் என்கிற போர்வையில் அவர்கள் காட்டிய பொய்யான அனுதாபத்தை சமாளிக்க முடியவில்லை.

ஆழமாக மனதில் உண்டான காயத்தை மறைத்து, "நான் யாரையும் காதலிக்கவில்லை! என்னை யாரும் காதலிக்கவும் தேவையில்லை!” என்று இரைந்தவன், "என்னைப் பற்றி நீங்கள் கவலைப் படவும் தேவையில்லை!" என்று ரோசத்துடன் சொன்னான்.

அவர்களை மேலே பேசவிடாது, "நான் காண்டீன் செல்கிறேன். வர விருப்பமானவர்கள் வாருங்கள்..." என்றவன் விறுவிறுவென்று முன்னே நடந்தான்.

அவன் கொஞ்சம் முன்னால் சென்றதும், வயிற்றைப் பிடித்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்த தேவன், "அவனை நன்றாகக் குழப்பி விட்டோம்...." என்றான் கண்ணனிடம்.

அவர்கள் மனதிலும் வஞ்சம் இல்லை. தங்களின் பேச்சால் பெரிய பாதிப்புக்கள் நடக்கும் என்று யோசிக்கவும் இல்லை. அந்த வயதுக்கே உரிய எரிச்சல் குணமும், சிறு பொறாமையும் அவர்களை இப்படிப் பேச வைத்தது. ஆனால் அந்த பேச்சே இரு உயிர்களின் வாழ்வை பிரட்டிப் போடப்போகிறது என்பதை அவர்கள் அறியவில்லை!

காலத்தின் கோலம் இதுதான் போலும்!

பள்ளி முடிந்ததும் எப்போதும் ராஜுடன் அவன் கிராமத்தின் எல்லை வரை செல்லும் ரவி, இன்று ராஜ் வராததால் தன் வீட்டுக்கே சென்றான்.

மனம் முழுவதும் கழிவிரக்கம் நிறைந்து கிடந்தது. என்னை யாருக்கும் பிடிக்காதா? கறுப்பு என்றால் என்ன? அதுவும் ஒரு நிறம் தானே! அந்த நிறத்திலும் அழகு உண்டுதானே! என்று தன்னைத் தானே தேற்றினாலும், மூளைக்குப் புரிந்த உண்மையை மனது ஏற்க மறுத்தது அவனுக்கு!

என்னை யாரும் காதலிக்க மாட்டார்களா? கவிக்கும் என்னைப் பிடிக்காதா? அவளும் கறுப்புத் தானே… என்ன கொஞ்சம் பெரிய கண்கள், குட்டி மூக்கு, அழகான சின்ன உதடு. இவை பார்க்க அழகாக இருக்கிறது!

இப்போதே அவளிடம் சென்று, என்னைத் திருமணம் செய்துகொள்கிறாயா என்று கேட்டால் என்ன சொல்வாள்?

சம்மதிப்பாளா இல்லை எப்போதும் பார்ப்பது போல முறைத்துப் பார்ப்பாளா.... என்று யோசித்தவன், அவளின் வயதென்ன தன் வயதென்ன என்பதை யோசிக்க மறந்தான். அல்லது அந்த அளவுக்கு அவனுக்குமே விளக்கம் இல்லையோ...

சிறுபிள்ளையாய் இருந்த அவன் மனதைக் கலைத்துவிட்டவர்களின் சூழ்ச்சி தெரியாது எதை எதையோ யோசித்துக் கலங்கி கிடந்தது அவன் உள்ளம்.

வீடு சென்றவனை, "என்னடா, இன்று மழை கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறது! பள்ளி முடிந்ததும் என் மகன் நேரே வீட்டுக்கு வந்திருக்கிறானே...." என்று கேட்ட தாயை முறைத்தான்.

"ஏன்மா? நான் இவ்வளவு கறுப்பாகப் பிறந்தேன்? அப்பாவும் நீங்களும் கறுப்பு இல்லையே....? பிறகு எப்படி நான் மட்டும் இப்படி அட்டைக் கரிபோல அழகில்லாமல் இருக்கிறேன்.." என்று ஒரு பரிதவிப்போடு கேட்டவனை பார்த்த சகுந்தலா, "யார் சொன்னது நீ அழகில்லை என்று? சொன்னவனுக்கு கண்ணில்லை! என் மகன் கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறான்." என்று சொன்னார்.

அவரின் வார்த்தைகள் பொய்யாக இல்லாமல், என் மகன் அழகன் என்கிற பெருமிதத்தோடும் அன்போடும் வந்தது.

அப்போதும் முகம் தெளியாது இருந்தவனைப் பார்த்தவர், "உன்மேல் பொறாமைப் பட்டு யாராவது சொன்னால், அதை நம்பி விடுவாயா ரவி? யாரடா சொன்னது அப்படி?" என்று கேட்டார்.

"ஒருவரும் இல்லை. நான்.. நானாகத்தான் கேட்டேன் அம்மா...." நண்பர்களை கட்டிக்கொடுக்க மனமில்லாமல், சமாளித்தான்.

"இனி இப்படி உளறாதே! நிறம் மட்டுமே ஒருவரின் அழகைத் தீர்மானிப்பது இல்லை ரவி! ஒருவர் மற்றவர்களுடன் பழகும் முறை, நடந்துகொள்ளும் விதம், தன்னைத் தானே பராமரிக்கும் தூய்மை. இவைதான் ஒருவரை அழகாகக் காட்டுவது! ஆனால், இதுகூட நிரந்தரமில்லாத அழகு ரவி! மனம் இருக்கிறதே நம் மனம்.. அது அழகாக இருக்க வேண்டும்! நாம் பேசும் வார்த்தைகள் அழகாக இருக்க வேண்டும்! நாம் நடந்துகொள்ளும் முறை அழகாக இருக்க வேண்டும்! அதுதான்டா நிரந்தரமான நிஜமான அழகு! புரிந்ததா?" என்று கேட்டவரின் குரலில் சிறு கண்டிப்பும் கலந்திருந்தது.

மகனின் மனதில் தான் கறுப்பு என்பது சிறு பாதிப்பைக் கொடுத்திருக்கிறது என்று யோசித்தே, அவர் இந்த விளக்கத்தை கொடுத்தது. ஆனால் அவனின் மனதின் பாதிப்பு இந்த விளக்கத்தில் அடங்கி விடுமா? அல்லது அடங்கி விட்டதா?
 
Top Bottom