• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு காதல் கனா காண்போம் - இறுதி அத்தியாயம்

STN - 91

New member
“எங்கள் காதலின் சக்தி எங்களை சேர்த்து வைக்கும் என்று அன்று நான் கூறிய போது என் நண்பனில் தொடங்கி அனைவரும் என்னை கிறுக்கன் என்றார்கள்.

ஆனால், லட்சியத்தையும் காதலையும் ஒன்றாக மனதில் வைத்து போராடிய என் போராட்டம், இறுதியில் ஒன்றாக வென்றுவிட்டது. அவள் காதலால் அது சாத்தியம் அவள் தியாகத்தால் அது சாத்தியம்.

அதன் பிறகு எங்களை தடுக்க எந்த தடைகளும் இல்லை. சமூகம், சமயம் உறவுகள் என்று எதையெதையோ நினைத்து அவள் என் காதலை நிராகரித்தாள். இறுதியில் அவளை அந்த தடைகளை அனைத்தையும் விடுத்து என்னிடம் வந்து சேர்ந்தாள்.

ஆனால் அதே சமூகத்தில் பல பேருக்கு உதாரணமாக எங்கள் உறவு கை சேர்ந்தது.

சமயத்தை துறந்து மனங்களை மட்டும் கண்ட எங்கள் காதல் திருமணத்தில் முடிந்தது. அந்த திருமணத்தில் இந்த சமுதாயத்தையோ எங்கள் பெற்றோரையோ மற்றவர்களின் விருப்பத்தையோ நாங்கள் கண்டு கொள்ளவில்லை.

என்னவள் ஆசை படியே எங்கள் சொந்த ஊரிலேயே, அமைதியாக நிம்மதியாக அவள் அருகில் இருந்து கொண்டே விவசாயம் செய்ய தொடங்கினேன்.

என்னவள் தொடங்கிய எழுத்துப் பணி அவளை விட்டு பிரியாமல் காலம் முழுவதும் தொடர்ந்து வந்தது.

மனதால் நினைப்பதை செயல்களால் பிறருக்கு வெளிப்படுத்த தெரியாத சிலருக்கு அதை எழுத்தில் வடிப்பது மட்டும் அவ்வளவு கடினமாக இருப்பதில்லை.

போராட்டத்தின் நடுவே மலர்ந்த எங்கள் காதல், என்னவளின் ஆசைப்படி அமைதியான நிம்மதியாக அன்பால் நிறைந்தது.

இதோ எங்களின் காதலின் பரிசாக இதோ என்னவள் மடியில் தவழ்ந்து விளையாடும் எங்கள் மகன்.

பெற்றவர்கள் பிள்ளைகளை பூமிக்கு கொண்டு வரும் ஒரே காரணத்தினால் அவர்கள் வாழ்வில் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்று இறைவன் ஒன்றும் ஆணையிட்டுச் செல்லவில்லை.

இந்த உலகில் நம்மால் வரும் உயிர்களுக்கு கைபிடித்து நடக்க கற்றுக் கொடுத்து, தோள் பிடித்து வாழ்வை வாழ சொல்லிக் கொடுத்தால் மட்டுமே போதும். அவர்களே அவர்களின் வாழ்வை அழகாக வாழ்ந்து கொள்வர்.

தவறு செய்து பழகிக் கொள்வது தானே வாழ்க்கை. அனைவருக்கும் இது தானே முதல் முறை வாழ்வு. தவறு செய்தால் தான் என்ன?

அதை அழகாக மாற்றுவதும் பாடமாக மாற்றி கடந்து செல்வதும் அவரவர் மனப்போக்கு.

காதலிக்க தோன்றினாள் காதலியுங்கள். வேறுபாடுகளையும் சேர்வதற்கு இடையில் இருக்கும் தடைகளையும் சிந்திக்காதீர்கள்.

காதலே ஒரு கிறுக்குத்தனம் தான். அதில் பிழைகள் இருக்கும். தவறுகள் இருக்கும். தியாகங்கள் இருக்கும். ஆசைகள் இருக்கும். ஏமாற்றங்கள் இருக்கும். வலிகள் இருக்கும். அதிருப்திகள் இருக்கும்.

இது எல்லாம் கடந்து வரும் காதல் காவியம் ஆகிறது. சேர்ந்த காதலும் சேராத காதலோ இவ்வுலகே காதல் என்ற ஒற்றை மாயத்தில் தான் அசையாது ஓடிக்கொண்டிருக்கிறது.

மழை நீருக்கு நிலத்தின் மேல் இருக்கும் காதலைப் போல், அலைகளுக்கு கரையின் மேல் இருக்கும் காதலைப் போல், சில காதலர்கள் சேராதிருத்தலும் அழகு தான்.

இறுதியில் இணைவது மட்டும் காதல் அல்ல. சேர்ந்தும் சேராமலும் ஆசை கொண்டு காத்திருப்பது தான் காதல்.

கனா காணுங்கள். இந்த உலகில் எதிர்பார்ப்பின்றி ஆசை கொள்ளுங்கள். அது உங்களுக்காய் எழுதப்பட்டிருந்தால், எத்தனை போராட்டங்களைக் கடந்தும் உங்களை வந்து சேரும்.

உங்களுக்காக எழுதப்படவில்லை என்றால், ஒதுங்கிவிடுங்கள். சில பயணங்களும் சில மனிதர்களும் கடந்து செல்ல தான் வாழ்வில் வருகின்றனர்.

முடிவுவரை அழகாய் இருந்த பயணம் நினைவுகளிலும் அப்படியே இருந்து விட்டுப் போகட்டுமே.

கனாக்களுக்கு ஏது எல்லை. கனா காணுங்கள், இந்த பிரபஞ்சமே உங்களுக்கானதை உங்கள் கைவந்து சேர்க்கும்.” என்ற இறுதி வார்த்தைகளோடு அந்த சிவப்பு வண்ண நாட்குறிப்பேட்டில் இருந்த பக்கங்கள் தீர்ந்தது.

இறுதியாக அந்த நாட்குறிப்பேட்டை மூடி வைக்கும் போது ஆதிரனின் இதழ்களில் ஒரு நிறைவான புன்னகை.

இதோ அந்த காலத்திற்கே சென்று நடந்த நிகழ்வுகள் யாவையும் கண்ணால் கண்டுவிட்டது போன்று ஒரு திருப்தி ஆதிரனுக்கு.

‘ஒருவேளை தான் கேட்டபோதே, தன் தாத்தா இதை தன்னிடம் காட்டி, இதை தான் படித்திருந்தால் கூட, இத்தனை புரிதலும் தெளிவும் இவர்கள் கதையின் மூலம் தனக்கு கிடைத்திருக்காது.’ என்று அவன் மனம் உரைத்தது.

ஏதேதோ எண்ணங்களில் தவறான புரிதல்களுடன் தொடங்கிய வேகத்தில் முடிந்த காதல் தோல்வியில் இருந்த ஆதிரனின் மனம் தற்போது தெளிந்த நீரோடையை போல் தெளிவானது.

அந்த குறிப்பேடுகளை எல்லாம் பத்திரமாக பெட்டியில் அடுக்கிய ஆதிரன் அதை அந்த பரண் மேலேயே வைத்துவிட்டு எழுந்து வெளியில் வந்தான்.

மாலை இருட்டி காரிருள் கருமையை மேகம் தனக்கு மேல் பூசிக்கொண்டு ஆங்காங்கே நட்சத்திரங்களை மின்ன விட்டு பறந்து விரிந்து கிடந்தது.

தூரத்தில் அந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்த தன் தாத்தாவையும் பாட்டியையும் நோக்கி ஆதரனின் கால்கள் தானாக எட்டு வைத்தது.

அந்த கடலோர கிராமத்தில், பௌர்ணமி நிலவொழியில் மரத்தின் கீழ், வாழ்வின் பல்வேறு கறைகளை கடந்து, தோல் சுருங்கியும், நடை குறைந்தும், பார்வை குறைந்தும், அவர்கள் கொண்ட காதல் மட்டும் சற்றும் குறையாது வாழ்ந்த தன் தாத்தாவையும் பாட்டியையும் சற்று தொலைவில் நின்றே கையைக் கட்டி ரசித்து நின்று விட்டான் ஆதிரன்.

மெய்யான காதலின் மெய் அர்த்தத்தை இளங்கோவன் மற்றும் யாஸ்மின் காதல் கதையை வைத்து தான் புரிந்து கொண்டான் ஆதிரன்.

“டேய் படவா. அங்க நின்னு என்ன டா என்னையும் என் பொண்டாட்டிய முறைச்சு முறைச்சு பார்க்கிற?” என்று பின்னால் திரும்ப அது கேட்டதன் தாத்தா இளங்கோவனை நினைத்து புன்னகையுடன் அவர்கள் முன் வந்து அமர்ந்தான் ஆதிரன்.

‘பாரு டா துரைக்கு சிரிக்க எல்லாம் தெரியுது? வந்ததுல இருந்து எங்க ரெண்டு பேர்கிட்டயும் மூஞ்சிய தூக்கி வச்சிட்டு உர்ருனு தானே இருந்த? இப்ப மட்டும் எதுக்கு சிரிக்கிற?” என்று கேட்டார் இளங்கோவன்.

“சும்மா இருங்க.அவனே இப்பதான் கொஞ்சம் தெளிஞ்சு வந்திருக்கான். இப்ப பாரு பையனா வம்பு இழுத்துக்கிட்டு” என்று கணவனிடம் பேரனுக்கு பரிந்து பேசினார் யாஸ்மின்.

“அதானே? அப்படி சொல்லுங்க பாட்டி. நீங்களா நானும் வரும்போது பாட்டி எப்பவுமே என்னதான் சூஸ் பண்ணுவாங்க தெரியும்ல?” என்று அவன் சட்டையில் இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டான் ஆதிரன்.

“போடா பொடி பயலே. அது எல்லாம் அவ முன்னாடி நடிக்கிற நடிப்பு. உன் பாட்டிக்கு எப்பவுமே நான்தான் முதல்ல அவளோட மகனே எனக்கு அடுத்து தான்.” என்று பேரனை விடாது வம்பு செய்து கொண்டிருந்தார் இளங்கோவன்.

“அதெல்லாம் இருக்கட்டும் ஓல்ட் கப்பில். உங்க கிட்ட நான் ஒரு விஷயம் கேட்கணுமே.

அது எப்படி? இத்தனை வருஷத்துல எவ்வளவு சண்டைகள் வந்திருக்கும்? எவ்வளவு மாற்றங்கள் நடந்திருக்கும்? ஆனா இப்ப வரைக்கும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுகிட்டு இவ்வளவு தூரம் வந்தும் உங்க நேசமும் அன்பும் குறையாம இருக்கிங்க?” என்று கேட்டான்.

மாதிரி கேட்ட கேள்வியில் ஒருவரை ஒருவர் அர்த்தமாக பார்த்து புன்னகைத்துக் கொண்ட இளங்கோவனும் யாஸ்மினும் ஒன்றாக திரும்பி பேரனை கண்டனர்.

“வாழ்க்கை ரொம்ப கஷ்டம் இல்ல ஆதி. நம்ம பாக்குற கண்ணோட்டத்தில் தான் நமக்கு வர பிரச்சனை நம்மள கடந்து போற உறவுகள் எல்லாமே இருக்கு.

முடியாதுன்னு நினைச்சு துவண்டு போய் ஒரே இடத்தில் முடங்கிட்டா, இந்த பக்கத்துல வாழ்க்கை நமக்காக என்ன அழகான அத்தியாயத்தை வைத்திருக்கென்று தெரியாமலே போயிடும்.

நல்லதோ கெட்டதோ பிடிச்சிருக்கும் பிடிக்கலையா நம்ம வாழ்க்கையில ஒரு அத்தியாயம் முடிஞ்சிருச்சுன்னா அதோட வாழ்க்கையை முடிஞ்சிடாது.

இந்த காலத்து பசங்களுக்கு எல்லாமே உடனே நடக்கணும் சீக்கிரமா எந்த தடையும் இல்லாமல் நடக்கணும். அது காதலாக இருந்தாலும் சரி வாழ்க்கையா இருந்தாலும் சரி.

எதுக்கு இவ்ளோ அவசரம்? உன் வாழ்க்கையோட ஒவ்வொரு அத்தியாயங்களுக்கும் அவகாசம் தீர்மானிக்கப்பட்டிருக்கு.

இங்க விதி ஆட்டி வைக்கிற பொம்மைகள் மட்டும் தான் நம்ம. உனக்கு பிடிச்சதுக்காக உறுதியா நின்னு போராடவும் தெரியனும்.

பிடிக்காதத உறுதியாக எனக்கு இது வேண்டாம் என்று மறுக்கவும் தெரியணும். இது ரெண்டுக்குமே தைரியம் வேணும்.

உங்க அப்பா சொன்னான். என் மகனுக்கு காதல் தோல்வி பத்திரமா பாத்துக்கோங்கன்னு.

காதல்னா என்னன்னே தெரியாம காதலிச்சிட்டு அதுல தோல்வி வேற என்று புன்னகைத்த இளங்கோவன், ஈர்ப்பு நம்ம பாக்குற யாரு மேல வேணாலும் வரலாம்.

ஆனா இவங்க தான் நம்ம வாழ்க்கை. இவங்களுக்காக எவ்வளவு கஷ்டத்தை வேணாலும் வாங்கிக்கலாம், யாரை வேணாலும் எடுத்து நிக்கலாம், உயிர் போற கடைசி நிமிஷம் வரைக்கும் அவங்களுக்காக போராடலாம்னு தோணனும். அதுக்கு பேரு தான் காதல்.

காதலில் சுயநலம் கிடையாது. ஒருத்தரோட ஆசை கனவு லட்சியம் இது எல்லாம் இன்னொருத்தரும் சேர்ந்து சுமக்கும் போது அது சுமையா இருக்காது.

காதல்ல தியாகம் கிடையாது. அது ஒருத்தருக்காக ஒருத்தர் காட்டுற அன்பு.

இது எல்லாத்தையும் எங்க கதையை படிக்கும் போதே, உனக்கு புரிஞ்சிருக்கும் டா. இப்ப நான் சொல்றத ஒன்னும் தெரியாது பச்ச குழந்தை மாதிரி உட்கார்ந்து கேட்டுகிட்டு இருக்க.” என்று அறிவுரையில் தொடங்கி கேலியில் முடித்திருந்தார் இளங்கோவன்.

அவரை அதிர்ச்சியாக கண்ட ஆதிரன், “தாத்தா. உங்களுக்கு எப்படி நான் உங்க டைரிய படிச்சது தெரியும்?
இத்தனை நேரம் நீங்களும் பாட்டி இங்கதான இருந்திங்க? உள்ள கேமரா எதுவும் வச்சிருக்கீங்களா?” என்று கேட்டான்.

“நீ அதை எடுத்து படிக்கணும்ங்குறதுக்காக தான் பெட்டிய பூட்டு போடாம வச்சிருந்தேன். சாயந்திரம் வீட்டுக்குள்ள போனவன் இப்ப நடுராத்திரி எழுந்து வெளியே வர இதிலிருந்தே தெரியலையா இதுக்கு தனியா கேமரா வேற வச்சு கண்டுபிடிக்கணுமா? போடா டேய் போ போ போய் சாப்பிட்டு படுத்து தூங்கு.” என்று கூறினார் இளங்கோவன்.

புன்னகையுடன் யாஸ்மின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்ட ஆதிரன், “உண்மையா உங்க ரெண்டு பேரோட லவ் ஸ்டோரி சூப்பர்.

ஆனாலும் தாத்தா, நீங்க பண்ணது கொஞ்சம் ஓவர் தான். என் பாட்டிய எவ்ளோ கஷ்டப்படுத்தி இருக்கீங்க?

நீங்க ஏன் பாட்டி இவரு வந்ததும் உடனே ஒத்துக்கிட்டிங்க? ஒரு ரெண்டு வருஷம் அலைய விட்டு இருக்க வேண்டியது தானே?” என்று தன் பழைய நிலைக்கு மாறி கேலியாக கேட்டான் ஆதிரன்.

“நீ ஒருத்தன் போதும் டா. திரும்ப எங்கள பிரிச்சு வைக்க பாக்குறியா? எந்திரிச்சு போ டா” என்று ஆதிரனின் தோளிலேயே ஒரு அடியை வைத்தார்.

வாழ்வில் புரிதலற்ற காதலில் தோல்வியுற்று நெடுவயல் கிராமத்திற்கு வந்த ஆதிரனுக்கு ஏதோ ஒரு வகையில் இளங்கோவன் மற்றும் யாஸ்மின் இருவரது காதல் வாழ்வும், காதலின் மெய் நிலையை உணர்த்தியது.

அவர்கள் கனா கண்டு போராடி வாழ்ந்த வாழ்வை போல் தானும் நிறைவான ஒரு வாழ்வை தேட வேண்டும் என்று அவன் மனதில் ஆசை எழுந்தது.

காதலால் தான் வாழ்வே போனது என்று நினைத்த ஆதிரனுக்கு இந்த பயணம் அவன் வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதோ அவன் வேண்டி வந்த தெளிவை முழுமையாகப் பெற்றுக் கொண்டு மீண்டும் அவன் சொந்த ஊருக்கு புறப்பட அதே புகை வண்டியில் வந்து அமர்ந்திருக்கிறான்.

அப்போது தான் தொலைத்தொடர்பின் புதிய கண்டுபிடிப்பாக வந்திருந்த குட்டி கைபேசிகள் வந்திருந்த காலம்.

ஆதரனின் சட்டைப்பைக்குள் இருந்த அந்த குட்டி கைபேசி அலற, அதை எடுத்து காதில் வைத்தான்.

எதிர்ப்புறத்தில் அவன் நண்பன் வினித் தான் அழைத்திருந்தான்.

“என்னடா ட்ரெயின் ஏறிட்டியா?” என்று வினித் கேட்க, “இப்ப தான் மச்சான் ஏறுனேன். நாளைக்கு காலைல ஊருக்கு வந்து சேர்ந்திடுவேன். நீ என்னை பிக்கப் பண்ண வந்திரு.” என்று ஆதரனின் குரலில் அந்த பழைய துள்ளலான குறும்பான துடுக்குத்தனம் எட்டிப் பார்த்தது.

“பாருடா அப்படி உங்க தாத்தா என்னடா உனக்கு மந்திரம் போட்டாரு?

நான்‌ எல்லாம் உன்கிட்ட தலைகீழா நின்னு தண்ணி குடிச்சும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசினியா நீ?

போகும்போது வாழ்வே மாயம்னு தேவதாஸ் போன பையன இப்படி பழையபடி மாத்தி அனுப்பி இருக்காரு?” என்று தானும் கேள்வியாக கேட்டான் வினித்.

“வாழ்க்கையோட புரிதலே எனக்கு இப்ப தான் டா வந்திருக்கு.

அவ மேல எனக்கு வந்தது காதலா இல்ல ஈர்ப்பானு இப்ப வரைக்கும் என்னால உறுதியா சொல்ல முடியாது.

ஆனா நான் எனக்காக தேர்ந்தெடுத்த ஆள் சரியில்ல. ஒருவேளை அவளுக்கு நான் தான் வேணும்னு நினைச்சிருந்தா என்கிட்ட திரும்பி வர ஏதாவது ஒரு வழியிலாவது முயற்சி செஞ்சிருப்பா தான?

ஆனா அவ அந்த மாதிரி எதுவுமே செய்யலன்னா என்ன அர்த்தம், என் காதல் உண்மையானது ஆனா அதுக்கு அவ தகுதியானவ கிடையாது.

சோ என் காதலுக்கு தகுதியே இல்லாதவை என்னை ஏமாத்திட்டு போயிட்டானு நான் நினைச்சு புலம்பி என்னை ஏன் கஷ்டப்படுத்திட்டு கூட உங்க எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டு இருக்கிறது சரி இல்லன்னு புரிஞ்சுகிட்டேன். “ என்று கூறினான் ஆதிரன்.

“பரவாயில்லையே. இந்த அளவுக்கு நீ தேறி வந்ததே ரொம்ப சந்தோஷமா இருக்குடா. இதுக்கு மேல தயவு செஞ்சு காதல் கத்திரிக்காய்ன்னு எவ பின்னாடியும் சுத்திட்டு திறியாத.

போறவங்க சும்மா போகாம இருக்க வேண்டியது எல்லாத்தையும் சேர்த்து கெடுத்து விட்டுட்டு போயிடறாங்க.” என்று கடுப்பாக கூறினான் வினித்.

“இல்ல மச்சி. எனக்கு இப்பதான் காதல் மேல இன்னும் நம்பிக்கை அதிகமா வந்திருக்கு.

புரிதலோட ஆழமா காதலிக்கணும்னு முடிவோட தான் அங்க வரேன். அதுக்காக கிடைக்கிற பொண்ண எல்லாம் பார்த்து சொல்லிவிட்டு சுத்த மாட்டேன்.

இந்த முறை நிறுத்தி நிதானமா எந்த ஒரு பொண்ண பாத்தா என் மனசு இவ தான்டா உன் வாழ்க்கைனு அடிச்சு சொல்லுதோ, அவளை விடாமல் துரத்தி துரத்தி லவ் டார்ச்சர் பண்ண போறேன்.” என்று கூறினான் ஆதிரன்.

“அப்ப இந்த ஜென்மத்துல எனக்கு உன் பின்னாடி சுத்துறது மட்டும் தான் வேலையா டா?” என்று எதிர்புறம் இருந்து புலம்பும் தன் நண்பனின் பேச்சில் குலுங்கி குலுங்கி சிரித்தான் ஆதிரன்.

அப்போது அவனுக்கு இடது பக்கம் இருந்து “ஹலோ. இந்த சீட் என்னோடது நீங்க மாறி உக்காந்து இருக்கீங்கனு நினைக்கிறேன்.” என்று ஒரு மெல்லிய குரல் கேட்டது.

அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த ஆதிரன் அப்படியே திரும்பி பார்க்க அங்கு பாவாடை தாவணியில் கிராமத்து பைங்கிளியாக, தோளில் பையை மாட்டிக் கொண்டு ஒரு பெண் நின்றிருந்தாள்.

அப்பாவி முகம், ஐந்து அடி உயரம், மாநிறம் கலையான முகம், நீட்ட முடி அதை பின்னலிட்டு சரம் சரமாக மல்லிகையே தொங்க விட்டிருந்தாள்.

அந்த கத்திரிப்பூ நிற தாவணி அவளை நிறத்தை மேலும் தூக்கிக்காட்ட ‘வாய்க்குள் ஏதேனும் சென்று வந்தால் கூட தெரியாது’ என்ற நிலையில் அவளையே வைத்து கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதிரன்.

அவன் தனியே வெகு நேரமாக பார்த்துக் கொண்டிருப்பதை அந்தப் பெண், “ஹலோ உங்க கிட்ட தான்ங்க பேசுறேன்.” என்று அவன் முன் கையை அசைத்தாள்.

அவனுக்கு எங்கு அதெல்லாம் மூளைக்கு ஏறியது தன் முன் அசைந்தாடிய அவள் கருத்தில் இருந்த கண்ணாடி வளையல்களின் ஓசைதான் அவன் செவிகளில் இசையாய் ஒலித்தது.

அவள் தன்னை குறுகுறுவென்று பார்ப்பதே வெகு தாமதமாகவே உணர்ந்து கொண்ட ஆதிரன் தன்னிலை உணர்ந்து சுதாரித்த படி “சாரி என்னுடைய ஆப்போசிட் சீட் மாறி உக்காந்துட்டேன்.” என்று எதிர்புறம் இருந்து இருக்கைக்கு மாறினான்.

அவன் நகர்ந்ததும் தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்த அந்த பெண்ணோ தோளில் இருந்த பையை கழற்றி தன் மடியில் வைத்துக் கொண்டு அவள் விட்டு செல்லும் இந்த ஊரையே ஏக்கமாக கண்டாள்.

ஆதிரனின் விழிகளோ அவளை தலை முதல் கால் வரை சிறிது சிறிதாக அளந்தது.

பெரும்பாலும் நகரத்தில் வளர்ந்து நவீன பெண்களை மட்டுமே பார்த்து சுற்றி திரிந்த ஆடவனுக்கு அவளின் இந்த அப்பாவியான முகமும், படபடக்கும் கண்களும் ஏதோ சொல்ல முடியாத உணர்வை தோற்றுவித்தது.

அவன் வெகு நேரமாக தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பெண்மையில் உள்ளுணர்வு உணர்த்தி விட வேகமாக அவன் புறம் திரும்பியவள் “எதுக்கு என்னை இப்படியே பாக்குறீங்க?” என்று கேட்டாள்.

“இல்ல நீங்க எந்த ஊரு தான? இதுக்கு முன்னாடி நான் உங்கள பார்த்ததே இல்லையே?” என்று தன் சந்தேகத்தை கேட்டான் ஆதிரன்.

“ஹலோ அத நான் கேக்கணும். உங்கள பார்த்தா தான் இந்த ஊருக்கு சம்பந்த இல்லாத மாதிரி தெரியுது. ஆமா நீங்க யாரு முதல்ல?” என்று புருவம் உயர்த்தி அவள் கேட்டது கொள்ளை அழகு என்று அவன் மனம் தானாக கருத்து தெரிவித்தது.

‘உன்னை யார் இப்போது அழைத்தார்கள்? உள்ளே செல்’ என்று அதைத் தட்டி உள்ளே போட்ட ஆதிரன், “நான் சிட்டி தாங்க. இங்கே என் தாத்தாவோட வீடு‌ இருக்கு. அங்க வந்துட்டு இன்னைக்கு தான் திரும்பி கிளம்புறேன்.” என்று கூறினான்.

“ஓஹோ” என்பதோடு முடித்துக் கொண்டவளிடம் ஏதேனும் பேச்சை தொடர வேண்டும் என்ற நோக்கத்திலேயே “ஆமா நீங்க எங்க வரிங்க?” என்று கேட்டான் ஆதிரன்.

“நான் இந்த வருஷம் தாங்க பிளஸ் டூ முடிச்சேன். எனக்கு எப்படியாவது பட்டணத்தில் போய் காலேஜ் படிக்கணும்னு ரொம்ப ஆசை.

அதான் கஷ்டப்பட்டு படிச்சு பாஸ் பண்ணி காலேஜ்ல சீட்டு வாங்கிட்டேன். இப்ப படிப்பதற்காக தான் கிளம்பி இருக்கேன்.” என்று அவள் முட்டை விழிகள் அங்கும் இங்கும் உருண்டோடி கையை அசைத்து அசைத்து பாவனைகள் பிடித்து பேசும் பேச்சில் ஆதிரன் மொத்தமாக தன்னை தொலைத்தான்.

இந்தப் பெண்ணிடம் தோன்றியதைப் போல் உணர்வு அவன் இதற்கு முன்பு காதலித்த அவளிடம் ஒருபோதும் தோன்றியது இல்லை என்பதை இனம் கண்டு கொண்டான் ஆகிரன்.

ஆதரன் கேட்ட ஒரு கேள்வியில் அந்த பெண்ணும் தொடர்ந்து வளவளத்துக்கொண்டே வர, அந்த புகை வண்டி மெதுவாக புகையை வெளியேற்றி தன் பாதையில் முன்னேறியது.

“ஆமா நீங்களும் அந்த காலேஜ்ல தான் படிக்கிறிங்களா? பாருங்களேன்.”

“அங்க எப்படி பாடம் எல்லாம் நல்லா சொல்லித்தருவாங்களா?”

“உங்க ஊர்ல ஹோட்டல் சாப்பாடெல்லாம் நல்லா இருக்குமா?”

“சீனியர்ஸ் எல்லாம் ராகிங் பண்ணுவாங்களோ?”

“எப்படியோ காலேஜுக்கு போறதுக்கு முன்னாடியே ஒரு சீனியர் பிரண்டு புடிச்சிட்டேன்” என்று வாய் ஓயாமல் அந்தப் பெண் பேசிக்கொண்டே வந்தாள்.

அவளின் பேச்சு அவனுக்கு தொந்தரவாகவோ இல்லை எரிச்சலாகவோ இல்லை.

மாறாக முதல் முறை ஒரு பெண் தன்னிடம் பேசுவதை முழுதாக புரிந்து கொண்டு கவனிக்க விரும்பி அப்படியே அமர்ந்திருந்தான் அதிரன்.

வைத்த கண் வாங்காமல் அவள் பேசுவதையே பார்த்துக் கொண்டு வந்த ஆதிரனுக்கு அந்த பெண்ணின் மேல் என்ன எண்ணம் அது எந்த அளவு வீரியம் என்பதெல்லாம் காலம் அவனுக்கு மறைத்து வைத்திருக்கும் ரகசிய விடைகள்.

ஆனால் இந்த முறை அவனுக்கு காதல் வந்தால் அது புரிதலுடன், அர்த்தத்துடன், ஆழமாக புலரும் என்பது மட்டும் திண்ணம்.

அவன் புரிதலுக்காக மேற்கொண்ட இந்த பயணம் இறுதியில் அவனுக்கு தேவையான புரிதலையும் கூடவே மீண்டும் ஒரு காதல் அத்தியாயத்தின் தொடக்கத்தையும் எழுதிவிட்டிருந்தது.

ஆதிரன் படித்த அவன் தாத்தா பாட்டியின் கதை ஏதோ ஒரு வகையில் ‘காதல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். அதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லலாம்’ என்று அவன் மனதில் ஆணி அடித்ததை போல் பதிந்து போனது.

தற்போது புகைவண்டி தண்டவாளத்தில் முன்னே செல்ல, ஆதிரனின் மனமும் வாழ்வும் ஒரே கோட்டில் தனக்கு எதிரில் அமர்ந்திருப்பவரளின் திசையில் நகரத் தொடங்கியது.

இனி அவன் வாழ்வில் காணும் கனாக்கள் யாவும் வசந்தமாக அமையும் என்பது உறுதி.

ஆதிரனுடன் சேர்ந்து பயணித்த அனைவருக்கும் நன்றிகள்.

கனா நிறைவு 🤎
 
Last edited:
Top Bottom