• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு காதல் கனா காண்போம் - 16

STN - 91

New member
"இதற்கு மேல் வெவ்வேறு திசையில் பயணிக்கும் எங்கள் வாழ்வு இறுதியில் ஒரே திசையில் இணையுமா என்று கேட்டால்…. அதற்கான பதில் காலம் தான் உரைக்க வேண்டும்.

பயம்தான். எனக்கும் சற்று பயமாகத்தான் இருக்கிறது. என் லட்சியத்திற்காக அவள் காதலை காத்திருக்க வைத்தேன்.

லட்சியம் இனி நான் இருந்தாலும் இறந்தாலும் நிச்சயம் நிறைவேறி விடும் என்ற நம்பிக்கை அதிகமாகவே எனக்கிருக்கிறது.

ஆனால் எங்கள் காதல்?”

வாசித்துக் கொண்டிருந்த நாட்குறிப்பின் கடைசி பக்கத்தின் கடைசி வரிகள் முழுமை பெறாமல் அப்படியே நின்றது.

படித்துக் கொண்டிருந்த ஆதிரனுக்கோ இதயம் தாறுமாறாய் எகிறி துடிப்பது போல் இருந்தது.

அவன் கைகள் அந்த நாட்குறிப்பை இறுக்கமாக பற்றி இருந்தது.

“அதுக்கப்புறம் என்ன ஆச்சு? இவரு ராணுவத்தில் சேருவதற்கு போய்ட்டார்னா அந்த பொண்ணு என்ன நாங்க?

அவங்க டேவிட் விட்டரோட ஆளுங்க இழுத்துட்டு போனாங்கன்னு எழுதி இருக்காரு.

அப்ப அவங்களுக்கு என்ன ஆச்சு?” ஒரு பாதி கதையை மட்டும் படித்து முடித்தது அதிரனின் இதயம் தாறுமாறாக துடித்தது.

அவன் கைகள் நடுங்கி தலை ‘வின் வின்’ என்று வலிக்க தொடங்கிவிட்டது.

வரிசையாக ஒவ்வொன்றாய் திறந்து பார்த்தவனுக்கு எதிலுமே இந்த கதையின் தொடர்ச்சி கிடைக்கவில்லை.

இறுதியில் இருந்த ஒரு சிவப்பு நிற நாட்குறிப்பேட்டை நடுங்கிய கைகளுடன் எடுத்த ஆதிரன், மனதிற்குள் ‘நிச்சயம் இதிலாவது மீதி கதை எழுதப்பட்டிருக்க வேண்டும்.’ என்று வேண்டிக் கொண்டான்.

அவன் பதற்றத்துடன் அந்த குறியீட்டின் முதல் பக்கத்தை திருப்ப, அதில், அவன் நினைத்ததைப் போலவே மீதி பாதி கதை இளங்கோவனின் கைப்பட எழுதப்பட்டிருந்தது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தீரேந்திரனின் குழு கப்பலில் வட இந்தியா நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது.
அவன் மனம் படும் பாட்டை அவன் முகம் தெள்ளத்தெளிவாய் கம்பீரம் என்னும் போர்வையை போர்த்தி மறைத்திருந்தது.

அவன் யாஸ்மினை விட்டு வெகு தூரம் சென்றான் உடலால் மட்டும். ஓரிரு நாட்களாகவே அவன் மனதில் ஏதோ ஒரு நெருடல்.

‘தன்னவளுக்கு ஏதோ ஒரு தீங்கு நடக்கப் போகிறது.’ என்று அவன் காதல் கொண்ட மனம் உணர்ந்து கொண்டதோ என்னவோ.

ஆனால் தொடர்ச்சியாக அவன் பயிற்சியிலும் போராட்டத்திலும் கவனம் செலுத்த விடாமல், அவள் நினைப்பே அவனை கலங்கடித்தது.

இத்தனை நாள் செய்தித்தாள்கள் வழி இருவரும் நடத்தி வந்த மௌன பேச்சுவார்த்தைக் கூட, தற்போது முற்றிலுமாக நின்றுவிட்டது.

அங்கே அவள் நிலையை, அவள் வார்த்தைகளில் மறைத்து வைத்து இவனுக்கு உணர்த்துவதும், அதற்கு பதிலாய் இவன் கவிதையில் ஆறுதலை ஒழித்து வைத்து உணர்த்துவதும் என்று உயிர்ப்புடன் இருந்த அவர்கள் காதலில் ஏதோ ஒரு மெல்லிய திரை விழுந்ததை போல் உணர்வு இளங்கோவனுக்கு. அவனுக்கு மட்டுமா….

அந்த விசாலமான கப்பலில் வீரர்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையில் அமர்ந்திருக்க, இளங்கோவன் மட்டும் எதையோ பறி கொடுத்ததைப் போல் நிசப்தமான அந்த ஆழியையே கண்டிருந்தான்.

இறுதியாக அவளை விட்டு பிரியும் முன்பு அவர்கள் பிரிவிற்கு சாட்சியாய் நின்ற அதே ஆழி.

இந்த ஆழியின் ஓரத்தில் தானே அவர்கள் காதல், பேசி, சிரித்து, கொஞ்சி, விளையாடி என்று வளர்ந்தது.

விழிகளை மூடி அவள் நினைப்பை மனதிற்குள் நிறைத்த இளங்கோவனுக்கு, முதன் முதலில் அவளை கண்ட நினைவுகள் நினைவடக்குகளில் வந்து மின்னி மின்னி மறைந்தது.

நேற்று நடந்ததை போல் இன்றும் பசுமையாக மனதில் பொதிந்து போயிருந்தது அந்த நிகழ்வுகள் அவை யாவும்.

சிறிது காலத்திற்கு முன்…….

யாஸ்மின் குடும்பம் அப்போது தான் நெடுவயல் கிராமத்திற்கு வந்திருந்த புதிது.

ஊருக்குள் புதிதாக ஒரு பெண் வந்திருக்கிறாள். அதுவுப் அவள் படித்து ஆசிரியையாக இருக்கிறாள் என்றெல்லாம் அனைவரும் வளவளத்து கொண்டிருந்த சமயம்.

இளமை துடிப்பிலும், வயதிற்கே உண்டான துள்ளலுடனும் இளங்கோவன் சுற்றித்திரிந்து வந்த காலம் அது.

அப்போதெல்லாம் யாஸ்மின் பள்ளிக்கு செல்லும்போது அவள் தந்தை காதர் தான், அவளை உடன் அழைத்து வந்து விட்டு செல்வார்.

உடலை முழுவதும் மறைத்து, தரையை மட்டும் பார்த்து நடக்கும் அவள் விழிகள் ஒருவரையும் வீதியில் நிமிர்ந்து பார்த்துவிடாது.

அதனாலயே அவள் முகத்தை காணவும் அவள் பார்வையை தன் மீது திருப்பவும் பல ஆண் மகன்கள் முயற்சிப்பர்.

ஆனால் யாஸ்மினின் ஓர வழி பார்வையேனும் ஒருவர் பாதத்தையும் தொடாது.

“இந்த புள்ளைய பாரு மாப்ள அவங்க அப்பங்காரன், கங்காரு குட்டி மாதிரி எந்நேரம் அது பின்னாடியே சுத்துறான்.” நண்பர்களின் கேலிப்பேச்சில் தான் முதலில் யாஸ்மினின் புறம் இளங்கோவனின் பார்வை திரும்பியது.

தலை முதல் கால் வரை கருப்பு நிற துணியால் மறைந்திருந்த அவள் உருவமும், தந்தை முன்னே நடக்க அவர் பின் எட்டு வைத்து நடக்கும் அவள் பொறுமையும், யாரையும் நிமிர்ந்தும் பார்க்காத அவள் சுபாவமும் இளங்கோவனுக்கு ஏதோ ஒரு குறுகுறுப்பை கொடுத்தது.

ஒரு முறை ஏதோ ஓர் உந்துதலில் நிலத்தை மட்டுமே நோக்கும் யாஸ்மினின் பார்வை நிமிர்ந்து இளங்கோவனை கண்டது.

பார்த்த நொடி அவள் விழிகள் இளங்கோவனின் விழிகளுடன் கொக்கியிட்டு சிக்கிக் கொண்டது.

அவளின் அந்த கூறிய விழிகள், ஆழியின் ஆழத்தை விட ஆழமானது என்று அவன் உள்ளம் கத்தி கூறியது.

அவனின் இந்த ஆளை முழுங்கும் பார்வையில் படபடத்தை யாஸ்மின் விழிகள் சட்டென்று மீண்டும் குனிந்து கொண்டது.

ஆனால் அந்த சில வினாடி பார்வை பரிமாற்றத்திலேயே மொத்தமாக விழுந்துவிட்டான் ஆடவன்.

அவள் கண்கள் அவனுக்கு எதையோ ஓயாமல் உணர்த்துவதை போன்றிருந்தது.

பெரும்பாலும் அந்த காலத்தில் பள்ளிக்கூடங்கள் மரத்தின் நிழலில் வெட்ட வெளியில் தான் நடக்கும்.

யாஸ்மினும் மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தர வெளியில் நின்றிருக்கும் சமயங்களிலும் அவள் முகத்திரையை விலக்க மாட்டாள்.

அப்படி ஒரு நாள் அந்தப் பெருமை அவளைப் பார்த்துக் கொண்டே சென்ற இளங்கோவனுக்கு தேனாய் வந்து காதில் பாய்ந்தது அவள் குரல்.

வீராப்பான ஆடவன் தான் அவளை கண்டதும் மந்தகாசமான புன்னகையை உதிர்ப்பதும், அவளைக் காண வேண்டும் என்று கால் கடக்க மணி நேரங்கள் காத்திருப்பதும் என்று அவனுக்கே அவனை புதிதாக உணர்த்தி விட்டாள் யாஸ்மின்.

அவனை கண்டும் காணாமல் கடந்து செல்லும் பாவை அவளுக்கும், அவனின் குறுகுறு பார்வையும் தன் விழிகளை தவிர்த்து வேறு எங்கும் பார்வை செலுத்தாத அவன் கண்ணியமும், அவளுக்குள் இதுவரை வேறு எந்த ஆண்களிடமும் தோன்றாத ஒரு உணர்வை தோற்றுவித்தது.

அவன் விழிகளை நேருக்கு நேர் சந்திக்கும் சமயங்களில் அவள் இதயத்துடிப்பு ஏகத்துக்கும் எகிறி எதையோ அவள் மூளைக்கு உணர்த்தவிட விழையும்.

ஒருபுறம் அவன் பின்னால் செல்லும் மனதை கட்டுப்படுத்த முடியாமல் அந்த உணர்வை மட்டும் எனக்குள் வர விட்டு விடாதே மனமே என்று அவளுக்கு அவளை கடிவாளம் கட்டிக்கொண்டு உணர்வுகளை அடக்கிக் கொள்வாள்.

ஆனால் அவள் மனம் அவளையும் அறியாது இளங்கோவனை விரும்பி தொலைத்தது.

ஒரு நாள் ஒரு பொழுது அவனை காணவில்லை என்றாலும் நாள் முழுவதும் அவன் நினைவில் வாடும் மனதை எப்படி நிலை கொள்ள செய்வது என்ற வலி அறியாமல் தான் அவளும் அவன் பார்வையில் சுற்றித்திரிந்தாள்.

இது எல்லாம் எதற்கு? உனக்கு அவன் மேல் இருப்பது என்ன என்று அவள் இதயம் கேட்கும் கேள்விகளுக்கு அவளிடமே பதில் இல்லை….

தெரிந்தும் அதை அறிந்து கொள்ள விரும்பாதவளை போல் நடித்து அவளையே ஏமாற்றிக் கொண்டாள்.

ஆனால் இளங்கோவன் அவளை விடவில்லை.

அவனுக்கு அவள் மேல் இருக்கும் உணர்வின் பெயரும் தெரியும். அவளுக்கு தன் மேல் இருக்கும் விருப்பமும் அவள் தன்னை காணும் அந்த பார்வையிலேயே புரிந்தும் வைத்திருந்தான்.

உரியதை உரியவளிடம் தீர்க்க வேண்டும் என்று தீர்மானம் செய்திருந்தவனுக்கு ஒரு நாள் நேரமும் கூடி வந்தது.

அன்று ஏதோ வேலை இருந்ததால் காதர் மகளை அழைத்துச் செல்ல வரவில்லை. இளங்கோவனும் அன்று பணி முடித்து நேரமே வந்திருந்ததால் பள்ளிக்கூடத்திற்கு வெளியே காத்திருந்தான்.

அவள் தந்தை இருக்கும்போது கூட ஏதோ ஒரு தைரியத்தில் அவனை கடந்து செல்பவருக்கு அவனை தனியாய் ஏறிட மட்டும் ஏன் தான் அத்தனை தயக்கமோ.

வெகு நேரம் அவன் நின்றிருப்பதை கண்டு தயங்கியபடியே மரத்தின் பின்னால் மறைந்து நின்றிருந்தாள்.

இதையெல்லாம் கவனித்தபடி தான் தன் மிதிவண்டியின் மீது சாய்ந்து ஒய்யாரமாக நின்றிருந்தான் இளங்கோவன்.

மரத்திற்கு நடுவில் இருக்கும் இடுக்கின் வழியாக அவனைப் பார்ப்பதும், பின் பயந்து கொண்டு பின்னால் திரும்பி நிற்பதுமாக இருந்தவள், இந்த முறை திரும்பி பார்த்த போது இளங்கோவன் நின்றிருந்த இடத்தில் அவனை காணவில்லை.

நொடியில் அவள் இதயம் அவன் சென்று விட்டான் என்று சற்று நிம்மதியுற்றாலும் எங்கே சென்றான் என்று தவிக்கவும் செய்தது.

அவள் குழப்பமான பாவனையுடன் மீண்டும் திரும்பியபோது அவள் எதிரில் நின்றிருந்தான் இளங்கோவன்.

எதிர்பாராமல் தன் முன் வந்து நின்றதனால் பெண் அவள் இதயம் புகை வண்டியின் ஓட்டத்தை போல் ‘தட தட’ என்று அடித்துக் கொள்ள, இமை சிமிட்டி அவனை பார்த்தாள்.

அவன் நீட்ட கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு அவளையே அழுத்தமாக பார்த்தான் இளங்கோவன். அங்கிருந்து வேகமாக நகர சென்றவளுக்கு குறுக்காக கையை நீட்டி தடுத்தான்.

ஒரு நிமிஷம் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று கூறினான் இளங்கோவன்.

அவன் பார்வையே அவளை நகரவும் விடாமல், அங்கே நிற்கவும் விடாமல் வாட்டி வதைத்தது.

அவள் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்டு, “நான் உன்னை காதலிக்கிறேன். ரொம்ப நாளா இது உன்கிட்ட சொல்லனும்னு மனசுக்குள்ளே பத்திரமா பூட்டி வச்சிருந்தேன்.

உன்னை எனக்கு பிடிச்சிருக்கு என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?” அவள் முகம் பார்த்ததில்லை. அவள் நிறம் தெரியாது. அவள் பெயர் கூட தெரியாது.

விழிகளை கண்டும் குரலைக் கேட்டு மட்டும் எப்படி ஒரு நாள் காதல் செய்ய முடியும்? செய்கிறானே…

அவனின் இந்த நேரடியான வெளிப்பாடு யாஸ்மினுக்கு இதயத்தை ஒரு நொடி மொத்தமாக நிறுத்திவிட்டிருந்தது.

அதிர்ச்சியாக அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, “பதில உடனே சொல்லணும் அவசியம் இல்ல. உன் கண்ணே எனக்கு தேவையான பதில சொல்லிடுச்சு.

நீ பொறுமையா யோசிச்சு வாயால சொன்னா போதும்.” என்று கூறினான்.

“நீ.. நீ… நீங்க என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா? இதெல்லாம் ஒத்து வராது. எங்க வீட்டுக்கு தெரிஞ்ச பெரிய பிரச்சனை ஆயிடும்.

இதுக்கு மேல இந்த மாதிரி பேசிட்டு என் முன்ன வராதிங்க.” தடுமாறி பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு ஒருவாறு கூறி முடித்திருந்தாள் யாஸ்மின்.

அவ்வளவுதானா உன் எதிர்ப்பு என்பதைப் போல் அவளை கண்டவன், நான் கேட்டது உனக்கு என்ன புடிச்சிருக்காங்கறது மட்டும் தான்.

பிரச்சனை வரும் வராதுங்கறத பத்தி இல்ல.” என்று அவன் அழுத்தமான வாதத்திற்கு எதிர்பார்த்தம் செய்ய முடியவில்லை அவளால்.

“எனக்கும்….. இதெல்லாம் பிடிக்காது” கண்களை இறுகு மூடிக் கொண்டு அவள் கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக ஓடிவிட்டாள்.

“உன்னை நீயே ஏமாத்திக்கிற. உன்னால உன் மனசுல இருக்குறத ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது” இன்று அவன் கட்டி கூறியதெல்லாம் காற்றோடு வந்து அவள் செவிகளை தீண்டதான் செய்தது.

இருந்தும் இந்த உணர்வுகளையும் அவனையும் தன்னை தீண்ட விடாமல் விலகியே நின்றாள் யாஸ்மின்.

இதையெல்லாம் கவனித்தபடியே அவன் மிதிவண்டியில் ஒய்யாரமாய் சாய்ந்து நின்றிருந்த இளங்கோவன்.

-கனா 🤎
 
Top Bottom