• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 34

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை 34

கண்ணா, நான் சொல்லப் போகிறதை கேட்டு, இந்த மாமாவை எப்போதும் தவறாக நினைக்கக் கூடாது என்று பிடிவாதமாகச் சொன்னார்.
அவன் அவரையே பார்த்தான். அவரும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்; கண்களில் அதே கனிவுடன். .

“அவள் என் மகள்…” என்றவரின் குரல் தழுதளுத்தது. “மாமா…” என்று அவன் அதிர்ந்து விழித்தபோது, அவர் மேலும் தொடர்ந்தார்.

ஆமா கண்ணா, என்னோட முதல் மனைவி மரகதம். நாங்க யாருக்கும் தெரியாம பதிவு திருமணம் செஞ்சுகிட்டோம். எங்க காதலுக்கு சாட்சியாக எங்க குழந்தை, என் செல்வம்… என்றவர் குரல் நடுங்கியது.

என் செல்லத்தோட பேரு என்னன்னு தெரியுமா கண்ணா? என்றவர். “மதுமதி பிரதிஷா,” என்றவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. வசீகரன் இதில் எதுவும் குறுக்கிடவில்லை.

பரிமளா, உங்க அம்மா, உன் அத்தை லலிதா—அவர்கள் எல்லாம் ஒரே வகுப்பு. பரிமளாவுக்கு ஒரு அக்கா; அவள் தான் என் மரகதம். பெயருக்கு ஏற்றபடி அவள் உண்மையிலேயே மரகதம் தான். ஆனால் அந்த மரகதத்தை நான் தான் தொலைத்துவிட்டேன்.

மரகதமும் பரிமளாவும் என் மாமன் மகள்கள். அந்த காலத்திலேயே எங்கள் மாமா வேறு சாதிப் பெண்ணை திருமணம் செய்ததால், அவரை எங்கள் சின்ன அம்மாட்சி வீட்டில் ஒதுக்கி வைத்தார்கள். உன் அம்மாச்சியின் சித்தப்பா மகன் அவர். எங்கள் அம்மாவுக்கு அண்ணன் மீது மிகவும் பாசம்.

சில வருடங்களில் எங்கள் மாமா இறந்து விட்டார். அந்த வருத்தத்திலேயே அத்தையும் சில வருடங்களில் இறந்துவிட்டார். பெற்றோர் இல்லாத அவங்க இரண்டு பேரையும் எங்கள் அம்மா ஆதரித்து வளர்த்தார்.

அவர்களின் அம்மா இறந்த பிறகு, மரகதம் பள்ளிக்கூடம் போவது நிறுத்தி, தங்கையை படிக்க வைக்க வேலைக்கு போகத் தொடங்கினாள். பரிமளாவும் நன்றாகப் படிப்பாள். எனக்கு எப்போதும் அந்த இருவரிடமும் தனி பாசம் இருந்தது.

ஒரு வயதில், எனக்கு மரகதத்தை வேறு விதமாக பிடிக்கத் தொடங்கியது. ஆம்… அவளை நான் காதலிக்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் அவள் ஒத்துக்கொள்ளவில்லை. பல நாட்கள் காத்திருந்து அவளை சம்மதிக்க வைத்தேன். எங்கள் காதல் வளர்ந்தது.

அதே நேரத்தில், பரிமளா மீது உன் அத்தை லலிதாவுக்கு பொறாமை உருவாகத் துவங்கி இருந்தது . மீனுவும் நானும் பரிமளா மீது பாசமாக இருந்ததைப் பார்த்த லலிதாவுக்குள் அந்த பொறாமை அதிகரித்தது. பரிமளா நன்றாக படிப்பதால் எல்லோருக்கும் அவளை பிடிக்கும். ஆசிரியர்கள் அவளை புகழ்ந்து பேசுவது லலிதாவுக்குள் பொறாமை தீயை மேலும் வளரச் செய்தது. அது எந்த அளவுக்கு என்றால்—பரிமளாக்கு கிடைக்கும் எல்லாம் அவளுவுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து, பரிமளாவுடையது எல்லாம் தன்னுடையதாக ஆக வேண்டும் என்ற ஆசை வரை வளர்ந்தது.

.அப்போது இவர்கள மூவரும் கல்லூரி முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான், உன் அப்பா வெளிநாட்டிலிருந்து வந்தார். அப்போது உன் அத்தை—அதாவது உன் அப்பத்தாவிக்கு—உடல்நிலை திடீரென மோசமாயிற்று. உடனே மகன் கல்யாணத்தை பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, மீனுவின் படிப்பை நிறுத்தி, உன் அம்மாவை உன் அப்பாவுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

அந்த சந்தோஷத்திலேயே எங்க அத்தை, உங்க அப்பத்தா கண்களை மூடினார்.

அடுத்த வருடமே நீ பிறந்தாய். அப்படியே இரண்டு வருடங்கள் எப்படி கடந்தது என்று தெரியாமல் போய்விட்டது. அந்த நேரத்தில் எங்கள் காதலும் நன்றாக வளர்ந்தது.

பரிமளா, கணேஷ் மூர்த்தி—என் சித்தி மகனை காதலித்தாள். எங்கள் சித்தி சாதி , வசதி பார்ப்பவர் என்பதால், அவர்களது காதலை எங்கள் சித்திக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டோம்.

அதே சமயம், உன் அத்தை லலிதா, நான் பரிமளாவுடன் பேசுவதை பார்த்து, நான் தான் பரிமளாவை காதலிக்கிறேன் என்று தவறாக நினைத்தாள். பரிமளாவுக்கு நான் கிடைக்க கூடாது என்ற வெறியில், என்னைத் திருமணம் செய்ய முடிவு செய்தாள்.

பரிமளாவின் படிப்பு முடிந்ததும், மூர்த்தி அவளைத் திருமணம் செய்யத் தயாரானான். ஆனால், “மரகதம் திருமணம் செய்யாமல் நான் திருமணம் செய்ய மாட்டேன்” என்று பரிமளா திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள்.

வேறு வழியில்லாமல், நான் மரகதத்தை யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்துகொண்டேன். மூர்த்தி, பரிமளா, மோகன்—இந்த மூன்று பேருக்கு மட்டும் தான் எங்கள் திருமணம் பற்றி தெரியும்.

நான் பக்கத்து ஊரில் வீடு எடுத்து, மரகதத்தையும் பரிமளாவையும் அங்கே தங்க வைத்தேன்.

மூர்த்தி வந்ததும் பரிமளா மற்றும் மூர்த்தி திருமணத்தை முறையாக நடத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தோம். அந்த நேரத்தில், உன் அத்தைக்கு, நான் அவர்களை பக்கத்து ஊரில் வைத்திருப்பது அவளுடைய தோழி மூலம் தெரிய வந்தது.

பரிமளாவின் கல்யாணத்தன்று, அவள் மருந்து குடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். நான் , உன் அம்மா ,மோகன் . எல்லோரும் அவர்களது திருமணத்தை யாருக்கும் தெரியாமல் முடித்து கொண்டு வரும் போது தான் எங்களுக்கு விஷயம் தெரிந்தது. .

அந்த நேரத்தில், உன் அத்தை, “என்னைத் தான் கல்யாணம் பண்ணுவேன்; அப்போதுதான் ட்ரீட்மெண்ட் எடுப்பேன் ” என்று பிடிவாதமாகக் மருத்துவ மனையில் இருந்தாள் . .

இந்த தகவல் அறிந்து, நானும் மரகதமும் பரிமளாவை மூர்த்தியுடன் அனுப்பிவிட்டு, மீனுவை வீட்டில் விட்டுவிட்டு மருத்துவமனைக்கு சென்றோம். அப்போது வருண் நான்கு மாதம் வயிற்றில் இருந்தான்.அதனால் மீனு வருகிறேன் என்று கூறியும் நான் மறுத்துவிட்டேன்.

அங்கே எல்லோரும் எனக்காகக் காத்திருந்தார்கள். மரகதம் யாருக்கும் தெரியாமல் வெளியே நின்றாள்; நான் மட்டும் உள்ளே சென்றேன்.

அங்கு உன் அத்தை என்னை உடனே கல்யாணம் செய்யச் சொல்லி அப்போது தான் ட்ரீட்மெண்ட் எடுப்பேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தாள். நான் முடியாது என்று மறுத்தேன். அவள் யார் சொல்லியும் கேட்பதாக இல்லை என்று தெரிந்து கோவமாக கத்திவிட்டு நான் வெளியே வந்தபோது, என் அப்பா தான் என்னை லலிதாவுக்கே கட்டி வைப்பேன் என்று வாக்கு கொடுத்து அவளை சமாதானப்படுத்தினார்.

எல்லோரும் என்னை வற்புறுத்தினார்கள். என்னால் அதனை ஏற்க முடியவில்லை. நான் மரகதத்திடம் சென்று, “நாம் திருமணம் செய்ததை சொல்லிவிடலாமா?” என்று கேட்டேன்.

ஆனால் அவள் மறுத்தாள். “வேண்டாம் மாமா… எனக்கு பரிமளா வேற, லலிதா வேற இல்லை. அவள் உங்களை விரும்பினால், நான் உங்களை விட்டுத் தருகிறேன்…” என்றாள்.

அதை கேட்ட நான் அதிர்ச்சியில் பேச முடியாமல் அவளை பார்க்க,

லலிதாவோட கண்ணீரில் நம்ம வாழ்க்கையை தொடங்க என்னால் முடியாது, மாமா. உங்களுடன் வாழ்ந்த அந்த ஒரு நாள் மட்டும் போதும் எனக்கு; அதை நினைத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் நான் வாழ்ந்துவிடுவேன். ஏமாற்றம் எனக்கு எப்போதுமே பழக்கப்பட்ட ஒன்றுதான். லலிதாவுக்கு அப்படி இல்லை, அதனால் நீங்கள் அவளை கல்யாணம் செய்து கொள்வது தான் சரி. என்று . அவள் என்னையே சமாதானப்படுத்தினாள்.

அவள் என்ன சொல்லியும் , நான் முடியாது என்று சொன்னேன்.

ஆனால் ஒரு கட்டத்தில், “அவ இருந்தால் நான் லலிதாவுடன் திருமணதுக்கு சம்மதிக்க மாட்டேன்னு …” என்று…

என்னிடம் கூட சொல்லாமல் என்னை விட்டுப் போய்விட்டாள். அவள் போனபோது என்னால் தாங்கவே முடியவில்லை. அம்மாவிடம் சொன்னேன்; அவரும் எனக்காக அவளை தேட ஆறு மாதம் எனக்கு அவகாசம் தந்தார். அதற்கு பிறகும் அவள் கிடைக்கவில்லை என்றால், நான் லலிதாவை திருமணம் செய்ய சம்மதிக்க வேண்டும் என்று என்னிடம் வாக்கும் வாங்கிக் கொண்டார். எங்கே என் வாழ்க்கை இப்படியே போய்விடுமோ என்று அவருக்கு பயம்.அவளைத் எங்கெல்லாமோ தேடினேன்; எனக்கு அவள் கிடைக்கவில்லை. பரிமளாவுக்கும் தெரியவில்லை. நாங்கள் ஒரு நாள் வாழ்ந்த வாழ்க்கைக்குச் சாட்சியாக என் மகள் இருப்பாள் என்று அவள் நிச்சயம் நினைத்திருக்க மாட்டாள். வேண்டாம்னு விட்டுட்டு வந்துட்டோம் இனி நான் எப்பவும் வேண்டாம்னு நினைச்சிட்டா போல.

அதற்குப் பிறகுதான் உன் அத்தையை திருமணம் செய்தேன். பின்னர்தான் எனக்கு தெரிந்தது—பரிமளாவுடன் இருந்த போட்டியால்தான் என்னைத் திருமணம் செய்துகொண்டாள் என்று.

மரகதத்தை மறக்க முடியாமல் உள்ளுக்குள் தவித்தேன். லலிதாவின் குணத்தால், அவளுடன் மனமொத்து என்னால் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் இருந்தேன் . உன் அத்தை பேசும் தரமற்ற பேச்சிலேயே எனக்கு அப்போதே வாழ்க்கை மீது வெறுப்பு வந்துவிட்டது, இரண்டு வருடங்கள் நான் அவளுடன் பேசவே இல்லை. பின்னர் அம்மாதான் “ஏன் தம்பி இப்படி இருக்கிறாய்? பாவம் லலிதா…” என்று என்னை சமாதானப்படுத்த முயன்றார். நானும் இப்படியே இருக்க முடியாதே என்று மாற முயற்சித்து கொண்டிருந்த நேரம் மீண்டும் உன் அத்தை வரைமுறை இல்லாமல் பேசி பேசி என்னை அவளுடன் வற்புறுத்தி வாழ வைத்தாள்.

இப்போதும் அவள் பேச்சு வரைமுறை இல்லாமல் தான் வரும் .என்ன ஒன்னு நான் பார்க்கும் ஒரு பார்வைக்குத்தான் அவளிடம் கொஞ்சம் மதிப்பு இருக்கும். இப்போது என் பிள்ளைகளுக்காகத்தான் வாழ்கிறேன், கண்ணா…” என்றவரின் கண்களில் கண்ணீர் நிற்கவேயில்லை .

“மாமா…” என்று அவரது கையைப் பற்றியவனை நிமிர்ந்து பார்த்தவர், “கண்ணா, எனக்கு ஒரு உதவி செய்யுயா … என் மகள்—மூத்த மகள் மது —அவ நல்லா இருக்கணும். அவள் வாழ்க்கை நல்லா அமையனும். அதுக்கு எனக்கு உன் உதவி வேணும் கண்ணா… மாமாவை தப்பா நினைக்கலைல?” என்றவரது குரல் உடைந்தது.

“நான் இன்னும் தேடி என் பொக்கிஷத்தை கண்டுபிடிச்சிருக்கணும் கண்ணா… தப்பு பண்ணிட்டேன் டா…” என்று குழந்தை போல கண்ணீர் சிந்தினார்.

“பார்த்துக்கலாம் மாமா… விடுங்க…” என்று அவரை ஆறுதல் கூற, அவர் சிறிது தேறினார்.

“கண்ணா, இன்னும் ஒரு விஷயம்… இந்த விஷயம் யாருக்கும்…” என்று அவர் சொல்ல வர,

“கண்டிப்பா யாரிடமும் சொல்ல மாட்டேன் மாமா,” என்றான் வசீகரன்.

“சரி கண்ணா, நான் புறப்படுறேன். இப்போ கொஞ்சம் மனசு ஆறுதலா இருக்கு. நீ எப்படியும் பார்த்துக்குவே. இன்னைக்காவது எனக்கு தூக்கம் வரும்னு பார்க்கிறேன்…” என்றார்; அவரது முகத்தில் அதிக களைப்பு தெரிந்தது.

அப்படியென்றால் எவ்வளவு நாட்களாக இவர் தூக்கம் இல்லாமல் இப்படி துன்பத்தில் இருக்கிறார் என்று மனம் வருந்தியது.

“மாமா…” என்று அழைத்தவனின் குரலில் நின்றவர், “என்ன கண்ணா?” என்றார்.

“எதையும் நினைத்து கவலைப்படாதீங்க… நான் இருக்கேன், பார்த்துக்குவேன்,” என்றான்.

அவரும் முகத்தில் இருந்த களைப்பை மீறி சிறு புன்னகையுடன் தலையசைத்து திரும்பிப் போனார்.

இதையெல்லாம் சொல்லி முடித்தவன் மதுமதியை பார்த்தான். அவளின் கண்களில் கண்ணீர் பெருகியது.

“வசீ… அவரை நான் ஒரு முறை பார்க்கணும்…” என்றாள்.

“யாரை?”

“அப்பா…” என்றவள் குரல் நடுங்கியது

“சரி, ஏற்பாடு செய்கிறேன்,” என்றவன், “இங்க வா…” என்று அவளை அருகில் அழைத்தான்.

அவள் கண்களில் கண்ணீர் வழிய, “ஏன்?” என்று கேட்டாள்.

அவள் வர மாட்டாளோ என்று நினைத்து, அவன் அவளருகில் சென்றான். அவளை தோளோடு அணைத்து ஆறுதல் கூறினான்.

“எல்லாம் முடிந்த விஷயங்கள் மது… யாராலும் அதை மாற்ற முடியாது. இனி வரும் காலத்தை நம்ம விருப்பப்படி மாற்ற முடியும்… புரியுதா?” என்றான்.

“அப்போ உங்க மாமாவுக்காகத்தான் இந்த திருமணமா?” என்றாளே பார்க்கலாம் .
அவன் திகைத்து விழித்தான்.
“அவருக்கு கொடுத்த வாக்குக்காகவா?” என்று அவள் தொடர்ந்து கேட்டாள்.
அவளை முறைத்தவன், “என் காதல்மேல் உனக்கு எப்போதும் நம்பிக்கையே இல்லை இல்ல ,” என்றான் கோபத்தில்.
“அப்படி சொல்லல,” என்றாள் அவள்.
“வேற?” என்று கேட்டான்.
“அது…” என்றவள் என்ன சொல்லுவது என்று தெரியாமல் விழித்தாள். அவனை சீண்ட வேண்டும் என்று தான் கேட்டாள், அவன் திருப்பி கேக்கவும் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
“இது யாருக்காகவும் இல்லை; நமக்காக, நம்ம காதலுக்காக,” என்றவன், உன் இடத்தில் வேற யாரவது இருந்திருந்தால் மாமவுக்காக வேற ஏதாவது உதவி தான் செய்து இருப்பேன் கல்யாணம் எல்லாம் பண்ணி இருக்க மாட்டேன் “என்ன புரியுதா?” என்று கேட்க,
அவளும் “ஆம்” என்று தலையசைத்தாள்.

Bottom of Form
“அதை கொஞ்சம் சிரிச்சுக்கிட்டே சொல்லணும்… இப்படியா ‘ஜெம்- GEM’ மாதிரி சொல்லலாமா?” என்று அவளை இயல்பாக்க அவன் சிரித்துக் கிண்டலிட்டான்.

அவன் அவளை ‘ஜெம்- gem ’ என்று சொல்லியதற்கு, அவள் அவனை முறைத்தாள்.

சரி சரி அப்படி சொல்லல மை லிட்டில் லவ் என்றான் கண்களில் காதலுடன்.

அவனது புன்னகை அவளையும் தொற்றி கொள்ள ஓகே மை அங்கரி பேட் என்றாள்.

அவனுக்கு தோன்றியது எல்லாம் ஒன்றே ஒன்று தான் அவளுடன் வாழ்ந்து தான் அவனை அவளிடம் நிரூபிக்க வேண்டும் வார்த்தையில் வடிக்க முடியாத தன் காதலை அவள் வாழ்ந்து தெரிந்து கொள்ளட்டுமே என்று எண்ணினான்.

பின்னர் இருவரும் பேசிக்கொண்டே ஆர்த்தி இருந்த இடத்திற்குச் சென்றனர்.
 
Top Bottom