• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடலின் மடியில் கதைப்போம் வா! - 7

ரோசி கஜன்

Administrator
Staff member
கதை 07

"தனியா ட்ராவல் பண்ணப் பழகிட்டேன். வழி மாறிப் போய் கத்துக்கிட்டு, நெறய பேர் கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, லொக்கேஷன் போட்டு எனக்குத் தேவேயான இடங்களுக்குப் போய் வாறேன். இருந்தாலும் உங்களோட போகும் போது கிடைக்குற பாதுகாப்பான உணர்வு இல்லப்பா"

-ஆதிராவின் டயரி


தன் நெஞ்சத்தில் ஆதிராவுடனான நட்புப் பூத்த தினத்தில் இருந்து அவளுடனான உறவைப் பக்குவமாகவே கையாண்டான் விஷ்ணு. அவனைப் பொருத்தவரை தம் நட்பு கண்ணாடிப் பாத்திரம் போன்றது. அதில் சிறு கீறல் கூட விழக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

பல மாதங்கள் உருண்டோடின. அவளுக்குப் பக்கபலமான துணையாக இருந்தான் அவன். ஆதிராவும் அவனை மட்டுமே முழுமையாக நம்பினாள்.

வார்த்தைகளை விட செயல்களுக்கு வலிமை அதிகம் அல்லவா? அவன் வார்த்தையால் சொன்னது ஒரு புறமிருக்க, தன்னோடு நடந்து கொள்ளும் முறையில் தான் அவன் மீது வலுவான நம்பிக்கை பிறந்தது அவளுக்கு.

அதுவொரு புதன்கிழமை. கடைசியாக ஆதிராவைப் பார்த்து இரண்டு வாரங்களாகி விட்டன. ஸ்டடி லீவ் என்று வீடு சென்றவள் நாளைக்குத் தான் விடுதிக்கு வருவாள் என்று ஏற்கனவே சொல்லி இருந்தாள்.

அவனது மனமோ அவளுக்காகத் தான் ஏங்கிக் கொண்டிருந்தது. நான்கைந்து தடவை குறுஞ்செய்தி அனுப்பியவன் பிறகு அவள் படிக்கட்டும் என அமைதியாக இருந்து விட்டான்.

ஆனால் இப்போது அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. யன்னல் வழியே வானத்தைப் பார்த்தான். காலை வானமும் இருண்டது போன்ற மாயை. அலைபேசியை எடுத்து ரீல்ஸ் பார்க்க ஆரம்பித்தான்.

"உன் பேர் மெல்ல
நான் சொன்னதும் என் வீட்டு
ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னைக் காணாவிடில்
எங்கே உன் அன்பென்று
கேட்கின்றன
நீ வந்தால்
மறுகணம் விடியும் என்
வானமே..." என்ற பாடல் அவனது இயத்தின் அடியாழம் வரை சென்று தாக்கியது.

"ஆதி" பூவினும் மென்மையாய் அவளது பெயரை உச்சரித்தவனுக்கோ உள்ளம் உருகியது.

திடீரென அவனிடம் திடுக்கிடல். விலுக்கென எழுந்து அமர்ந்து கொண்டான். தன் யோசனை செல்லும் திசையைக் கண்டு அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இது காதல் பாடல் அல்லவா? அப்பாடல் வரிகளுடன் நான் எதற்கு ஆதிராவை இணைத்துப் பார்க்க வேண்டும்? அவள் மீது தனக்கு இருப்பது நட்புத் தானே? தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

உடனே வைஷாலியிடம் சென்று தன் மனதில் உள்ளதைக் கொட்டினான்.

"ஏன்க்கா எனக்கு இப்படி எண்ணம் வருது? இது தப்புத் தானே? அவ என்னை நம்புறா" புலம்பித் தீர்த்தான் சகோதரன்.

"இதுல தப்பு எதுவும் இல்லடா. நட்பு காதலா மாறவே கூடாதா? நீ ஏன் இப்பிடி அலட்டிக் கொள்ற" அவனது தலையைக் கோதிக் கொடுத்தாள் வைஷாலி.

"இல்லக்கா என்னால இதை ஏத்துக்கொள்ள முடியல. அவ என்னோட ஃப்ரெண்ட். இது தெரிஞ்சா என்னை என்ன நெனப்பா?"

"இந்தளவு யோசிக்க ஒண்டும் இல்ல. அவ மேல இவ்ளோ அன்பா இருக்கிற உன்னத் தவிர யாரால ஆதிய நல்லாப் பாத்துக்க முடியும் சொல்லு" வைஷாலி எவ்வளவு சமாதானம் கூறியும் அவன் ஏற்கவில்லை.

மதனிடம் சொல்ல, "ஒன்னே ஒன்னு பண்ணு. இதை ஆதி கிட்டச் சொல்லு. அவ கருத்தைக் கேளு. அப்ப சரி தானே?" என்று யோசனை சொன்னான் அவன்.

"அவ என்னைத் தப்பா நெனச்சிட்டா?" என்று கேட்க வந்தவன் தலையைச் சிலுப்பிக் கொண்டு, "இல்ல இல்ல. ஆதி என்னைத் தப்பா நெனக்க மாட்டா. நான் அவக் கிட்டயே கதைக்கிறேன்" என்று முடிவாகக் கூறினான்.

அன்று பரீட்சை முடிந்து கடற்கரைக்கு வந்த ஆதிராவின் விழிகளில் விஷ்ணுவைத் தேடின. அவளது தேடலுக்குக் காரணமானவன் அப்பொழுது தான் தூரத்தில் வந்து கொண்டிருந்தான்.

"ஹாய் விஷ்" என்று குதூகலமாகக் கையை அசைத்து அழைக்க, "மேடமுக்கு எக்ஸாம் ஈசி போல. ஜாலியா இருக்கீங்க" என்று கேட்டவாறு வந்தமர்ந்தான் விஷ்ணு.

"அது ஓரளவுக்கு ஓகே. ரொம்ப நாள் கழிச்சு உன்னப் பாக்குறேன்ல? அதான் கொஞ்சம் ஜாலியா இருக்கு. அப்புறம் ரொம்ப நாள் வீட்ல இருந்தேன். அது வேற ஹேப்பி" என்று சொன்னாள் அவள்.

"ஆமாமா. ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கும் போது நமக்கு வீட்டுல போய் இருக்கிற அந்தக் கொஞ்ச நாளும் சொர்க்கம் மாதிரி இருக்கும். வீட்டை நெனச்சாலே அப்படி ஒரு ஹேப்பினஸ் வந்துடும்" அந்த உணர்வைத் தானும் அனுபவித்து உள்ளதால் அவன் மகிழ்வோடு சொல்ல, அவளும் ஆமோதிப்பாகத் தலையை ஆட்டினாள்.

"நாளைக்கு எக்ஸாம் இல்லயா?"

"இல்ல. இன்னும் ரெண்டு நாள் கழிச்சு பாலிட்டிக்கல் சயன்ஸ்" என்றவளோ, "ஸ்கூல்ல தமிழ் செஞ்சேன். இங்க அறிமுகமே இல்லாத பாடத்த எடுத்துப் படிக்கிறேன்" என சோகப் பெருமூச்சு விட்டாள்.

"என்ன செய்றது? உங்க யுனிவர்சிட்டில தமிழ்ப்பாடம் இல்லையே"

"அதான் விஷ் வேடிக்கையா இருக்கு. எனக்குத் தமிழ்னா பைத்தியம். அவ்ளோ ரசிச்சுப் படிப்பேன். தமிழ் ஸ்பெஷல் செய்யனுமெண்டு ஆசப்பட்டேன். ஆனா எனக்குக் கெடச்சது தமிழே இல்லாத யுனிவர்சிட்டி" உதட்டைப் பிதுங்கிட,

"வாழ்க்கை வேடிக்கையானது தானே ஆதி? விரும்புற ஒருத்தருக்கு அது கெடக்காது. விருப்பமே இல்லாத ஒருத்தர் பக்கத்துல அது இருக்கிறதப் பாத்தா நமக்கு அநியாயமாத் தோணும். நமக்கெண்டு எழுதி வெச்சது தான் நமக்கு வந்து சேரும். அதை யாரால மாத்த முடியும்?" அவன் யதார்த்தம் பேசினான்.

"நெறய நாளா பாத்துக்கல. ஏதாவது புது நியூஸ் இருக்கா?" ஆதிராவிடம் அதீத ஆவல்.

"பக்கத்து வீட்டு நாய் ரெண்டு குட்டி போட்டிருக்கு ஆதி. ரொம்பக் கியூட்டா இருக்கு. அப்பறம் அக்காவோட ஹெல்ப் இல்லாம யூடியூப் பாத்து பிரியாணி செஞ்சேன்"

"சாப்பிட முடிஞ்சுதா?" சிரிப்போடு கேட்டாள் காரிகை.

"அதெல்லாம் சாப்பிட்டோம். லைட்டா சொதப்பிட்டேன். இருந்தாலும் அக்கா மாமா சாப்பிட்டாங்க. நல்லா இருக்கெண்டு சொன்னாங்க" என்றவனுக்கோ காதல் விவகாரம் மட்டும் மனதை நெருடியது.

"எனக்கு இன்னும் சோறு சமைக்கக் கூடத் தெரியாது விஷ். போர்டிங்ல இருக்கும் போது வீட்டுக்குப் போனா சமைக்கக் கத்துக்கனும் எண்டு நெனப்பேன். அங்க போனா எதுவுமே தோணாது. ஜாலியா விளையாடிட்டு, தம்பி தங்கச்சி கூட பேசிட்டு, வாசல்ல சுகமா சாஞ்சுட்டு இருப்பேன்" என்று சொன்னாள்.

அவன் தன் பேச்சைக் கவனிக்காமல் தீவிர யோசனையில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு "என்னாச்சு" என்று வினாத் தொடுத்தாள்.

சிந்தனையில் இருந்து மீண்டவன் "உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்" என்றான் தீவிரமாக‌.

"சொல்லு" என்பதாகச் செய்கை செய்தாள்.

"உன் கிட்ட எதையும் மறைக்கக் கூடாதெண்டு நெனக்கிறேன்‌. கொஞ்ச நாளாவே எனக்குள்ள ஒரு விஷயம் புகுந்து தடுமாறிட்டு இருக்கு. சொன்னா நீ எப்படி எடுத்துப்பியோ எண்டு பயப்பட்டேன். ஆனா நீ என்னப் புரிஞ்சுப்பண்டு நெனச்சித் தான் இப்ப சொல்றேன்" என்றவனது பேச்சு அவளுக்குப் புதிராய்.

"ஒரு பாட்டுக் கேட்டேன் ஆதி. காதல் பாட்டுத் தான். அதைக் கேக்குறப்ப உன் ஞாபகம் வந்தது. அது தப்பில்லயா? ஏதேதோ ஞாபகம் வருது. உன் மேல எனக்கு நட்பு மட்டும் தானே இருக்கோனும்?" சின்னத் தடுமாற்றத்துடன் அவன் கூற, அவளிலும் மெல்லிய அதிர்வலையொன்று உருவாயிற்று.

"ஃப்ரெண்ட்டா இருப்பேன் எண்டு வாக்குத் தந்தேன். இப்ப இந்த மாதிரி காதல் கத்திரிக்கா எண்டு கதைக்கிறதா நெனக்காத. மனசுல தோணுறத மறைக்க முடியல"

"மறைக்காமச் சொல்றது நல்லம் தான்" ஒரேயொரு வாசகம் மட்டும் அவளிடம் வெளிப்பட்டது.

"நான் உன்னைக் காதலிக்கிறேன் எண்டு நெனக்கிறேன் ஆதி" அவள் விழிகளை நேருக்கு நேர் பார்த்தபடி சொன்னான்.

"உன் பார்வைல நட்புக்கும் காதலுக்கும் அப்படியென்ன வித்தியாசம் விஷ்?"

"அதைத் தான் நானும் யோசிச்சேன். என்னைப் பொறுத்தவரைக்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்ல. ஃப்ரெண்ட்ஸா இருக்கும் போது எப்படி இருந்தோமோ அப்படியேதான் இருப்போம். இதுல கூடுதலா ஒன்னுமே இல்ல. நாம அதுக்கு வெச்சுக்குற பெயர் தான் வேற வேற"

"எனக்குத் தெரிஞ்ச வரை அப்படி இல்ல. ஃப்ரெண்ட்ஸா இருக்கும் போது லிமிட்டோட இருப்பாங்க. அப்பறமா அந்த லிமிட்டே இல்லாம இருப்பாங்க. டச் பண்ணுறது இருந்து எவ்ளோவோ இருக்கு" அவள் அறிந்தது அதனைத் தான்.

"நானும் அக்ஸப்ட் பண்ணிக்கிறேன். மத்தவங்க அப்படித் தான். ஃப்ரெண்டுன்னா பேச்சு வார்த்தையோட இருந்துடும். இவங்க லவ்வர்ஸா மாறினா கையைப் பிடிக்கிறதுல தொடங்கி பைக்ல ஹக் பண்ணிட்டு உலகமே அறியச் சுத்துவாங்க. மத்தவங்க பாப்பாங்க, நம்ம உறவை வேற மாதிரி பேசுவாங்கண்டு பயப்பட மாட்டாங்க‌. அவங்களுக்குத் தெரியும் அவங்களுக்குள்ள வேற யாரும் வர முடியாதெண்டு" என நிறுத்தி மூச்சு வாங்கியவன் மீண்டும் தொடர்ந்தான்.

"எனக்கு உன் கிட்ட வேண்டியது ஒன்னே ஒன்னு தான். நீ என் பக்கத்துல எப்பவும் இருக்கனும். உன்ன நான் பாத்துட்டே இருக்கனும். ஃப்ரெண்ட்ஸா இருந்தா பிறகு ஒரு காலத்துல உனக்கெண்டு ஒருத்தனும் எனக்கெண்டு ஒருத்தியும் வருவா. அப்ப நான் உன் கூட இந்த மாதிரி பேச முடியுமா? அதை யாருமே ஏத்துக்க மாட்டாங்க. அதனால தான் இந்த நட்பு காதலா மாறினதை மறுக்காம உன் கிட்டச் சொல்றேன்"

"அப்ப இனி நாம ஃப்ரெண்ட்ஸ் இல்லயா?" அவளிடம் ஒருவித தவிப்பு.

"அப்படி இல்ல ஆதி. இந்த நட்பு எப்பவும் மாறாது. என்னப் பொறுத்தவரைக்கும் லவ்வ விட ஃப்ரெண்ட்ஷிப் தூய்மையானது. உண்மையான நட்பு சுயநலம் பாக்காது. காதல்ல ஏகப்பட்ட சுயநலம் இருக்குமெண்டு எனக்குத் தோணுது. உனக்கு நான் டைம் தர்றேன். ஃபர்ஸ்ட் இயர் முடிஞ்சு வீட்டுக்குப் போவ தானே? செமஸ்டர் ப்ரேக்ல இதப் பத்தி யோசி. ஒழுங்கா யோசிச்சு உன் மனசுக்குப் படுற பதிலைச் சொல்லு.

நீ ஓகே சொன்னா எனக்குச் சந்தோஷம். உன்ன யாருக்கும் விட்டுக் குடுக்கத் தேவயில்லண்டு நெனச்சுப்பேன். மறுத்தாலும் பரவாயில்லை. என்னால முடிஞ்ச வரைக்கும் நல்ல ஃப்ரெண்டா இருப்பேன். காதல் என்னவானாலும் இந்த நட்பு அப்படியே தான் இருக்கும்‌. நீ அத நெனச்சுப் பயப்பட வேண்டாம்"

அவளிடமோ அசாத்திய அமைதி. உள்ளுக்குள் யோசனைச் சுழல்கள் அவளைச் சுழற்றியடிப்பது புரிந்தது. படிக்க வேண்டியவளைத் திசை திருப்பி விட்டோமோ என்ற அச்சம் அவனைச் சூழத் துவங்கியது.

"இல்ல விஷ் நான் ஓகே தான். இத நெனச்சு ஓவரா அலட்டிக்க மாட்டேன்‌. நீ லவ் சொன்னத நான் சாதாரணமாத் தான் எடுத்துக்கிட்டேன். எக்ஸாம் நல்லபடியா பண்ணிட்டு வீட்டுக்குப் போய் யோசிச்சு என் முடிவச் சொல்றேன். செகண்ட் இயர் ஃபர்ஸ்ட் டே என் முடிவு உனக்குத் தெரியும்" உறுதியான குரலில் அவள் கூற,

"தாங்க் யூ ஆதி" தன்னைப் புரிந்து கொண்டு பேசியவளை நேசப் பார்வையால் வருடினான் வேங்கை.

தொடரும்...
 
Top Bottom