• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சின்னா 'தி ரோமியோ' - 17

STN - 39

New member
சின்னா - 17

“என்ன ரவுடி பேபீஸ், எங்க போய் எல்லாம் குளிச்சிட்டு வாரீங்க? இங்க பம்ப்செட்ல தண்ணீ குற்றாலமாட்டம் கொட்டுது” என்றான், பக்கத்தில் வயலுக்கு பாய்ந்துகொண்டிருந்த பம்ப்செட்டில் குளித்துக்கொண்டிருந்த மணிகண்டன்.

“எங்க சின்னாவோட காதல காவு வாங்குன கிணத்து தண்ணீ எங்களுக்கு வேணாம்டாப்பா" என்றார் பெரியாத்தா. அவர்கள் பக்கத்தில் வேறு கிணற்றில் குளித்து வந்திருந்தனர்.

எல்லாவற்றையும் காதில் வாங்கியும் வாங்காமலும் கிணற்றையே வெறித்து நின்றிருந்தான் அரவிந்தன்.

அதன் படிகளில் இன்னமும் சின்னாவும் அன்பிலரசியும் பேசிச்சிரிப்பது போலொரு பிரம்மை நெஞ்சை இறுக்கிப் பிழிந்தது.

சண்முகவேலும் அவரது மனைவியும் இரவு கிளம்பியபின் அனைவரும் சிறிது புலம்பிவிட்டு உறங்கிவிட அரவிந்தனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை.

அவன் வந்த நோக்கமே வேறல்லவா? வீட்டையே அடிவிடாமல் அலசியிருந்தான். எல்லாம் ஏற்கனவே யாரோ கிளறியதுபோல் இருக்க அவன் எதிர்பார்த்தது மட்டும் கிடைக்கவேயில்லை.

எல்லா கதவிற்கும் பொருந்தியது போக எச்சமாய் ஒரு சாவி கைகளில். அது எதனுடையதாய் இருக்கும் என்ற சிந்தையில் ஆழ்ந்திருந்தவன் கிணற்று நீரில் சின்னாவின் பிம்பத்தைத் தேட,

“என்னங்கய்யா இன்னும் குளிக்காம கிணத்தையே உத்து பாத்துட்டு நிக்கிய, நீச்சல் தெரியாதோ?" என்று கிராமத்துக்கே உரிய கேலியில் கையில் பெரிய சாப்பாட்டு கூடையுடன் வந்து நின்றான் இசக்கி.

“இங்க காத்தாட சாப்டுவியன்னு அய்யா காலை பலகாரம் குடுத்தமைச்சாவ" என்று அதற்கும் சேர்த்தே பதில் சொன்னான்.

“இதுல எது சின்னாவோட வயல்?"

அரவிந்தனின் கேள்வியில் அங்கு குளிக்க வந்திருந்த மூதாட்டி ஒருவர், “இந்தா இந்த கொள்ளை பூரா அவேன் லவ்வரு வயலு அதுக்கு எதிர்பக்கம் அவேன் பொண்டாட்டி வயலு” என்று கைக்காட்டினார்.

மேலும், "எங்களுக்கு இரண்டுமே அவேன் பொண்டாட்டிதான்” என்று குண்டைத் தூக்கிப்போட, ஆனந்தமாய் குளியல் போட்டிருந்த மணிகண்டன் அதிர்ந்து எழுந்திருந்தான்.

“சின்னா பொண்டாட்டியா? அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சா?" என்று அதிர்ச்சியில் உள்ளாடையுடன் தொட்டி தண்ணீரிலிருந்து இறங்கி வர,

“எப்பு முத துண்ட கட்டுப்பு” என்று சிரித்தவரில், குனிந்து பார்த்து அவசரமாய் துண்டை தேடினான்.

‘இந்த மனுஷனால என் மானம் போச்சே! தோண்ட தோண்ட பூதம் மாதிரி அதிர்ச்சி மேல அதிர்ச்சி வச்சிருக்கார்’ துண்டை கட்டிக்கொண்டு மீண்டும், “சின்னாவுக்கு அதுக்கு அப்புறம் கல்யாணம் ஆச்சா" என்று மூதாட்டியை உலுக்காத குறையாக வந்து நின்றான் அவன்.

“ஏன் கல்யாணம் ஆகாம அதெல்லாம் ஆச்சி!" என்று குளிக்க ஆயத்தமானவரில் அனைவரும் வாயைப்பிளந்து நிற்க,

"ஏன் இதெல்லாம் பாண்டியும், மண்ணுவும் உங்ககிட்ட சொல்லலையா?” என்று மேலும் அதிர்ச்சியூட்டியவர்,

“தங்காச்சாகாரிக்கு நிதமும் பாடுபாக்கணும்னு பாண்டிக்கு பொண்ணு தரமாட்டேன்னாக. பொண்ண தூக்கிட்டு வங்து, பாண்டிக்கும் மனோரஞ்சிதத்துக்கும் கல்யாணம் பண்ணி வச்சதே எங்க சின்னாதான்” என்றார் அவர் பெருமையாக.

‘என்னது பாண்டியும் மண்ணுவுமா’ அடுத்த அதிர்ச்சியாக “சண்முகவேல் பாண்டி அய்யாவையா சொல்றீங்க” என்றான்.

“என்னப்பு எல்லாத்துக்கும் பூகம்பம் வந்தாபோல நிக்க, எங்க சின்னாக்கு பேர புள்ளையே இருக்கு" என்றவரில், மண்டை சூடாகி நின்றிருந்த மணிகண்டன்,

“என்னது பேரபுள்ளையா" என்றவன் அதிர்ச்சியில் நீர்தொட்டிக்கு பதிலாய் கிணற்றுக்குள் குதித்திருந்தான்.

பாதி தூரத்தில்தான் தான் குதித்தது கிணறு என்பது புரிய, “அய்யய்யோ நீச்சல் தெரியாதே! சார் என்னை எப்படியாச்சும் காப்பாத்துங்க” என்று அலறிக்கொண்டே விழ, அடுத்த நொடி அரவிந்தன் கிணற்றில் குதித்திருந்தான்.

தத்தளித்த மணிகண்டனை இழுத்துப் படிக்கட்டில் உட்காரவைத்தவன் அந்நீரின் கதகதப்பில் ஆனந்தக் குளியல் போட்டுவிட்டே வந்தான்.

“உன்னையெல்லாம் எவேம்ல போலீஸ்ல சேர்த்தது" மரத்தினடியில் அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்க இன்னமும் பேயறைந்தார் போலிருந்த மணிகண்டனை கேலி பேசினார் பெரியாத்தா.

“சின்னா சின்னான்னு பெயரை மட்டும் சொல்லி கடைசிவர உங்க ஆளோட வயச சொன்னியா ரவுடி பேபி” என்று அவனும் எகிற, "அதாம்ல கேக்கேன் உனக்காரு போலீஸ் வேல குடுத்தது? தம்பிய பாரு சிரிக்குது. அதுக்கு சொல்லியா தெரிஞ்சிது?” என்று அரவிந்தனைக் காட்டினார்.

“நீங்களுமா?” என்று கேட்டவனில் அரவிந்தனின் புன்னகை பெரிதாகியது. அவன் நமது நெல்லைக் காப்போம் இயக்கத்தில் சின்னாவின் புகைப்படத்தை பார்த்த போதே அதில் குறிப்பிட்ட வருடத்தை வைத்து கணித்திருந்தான்.

சண்முகவேல் பாண்டி அவரை முதல்முறை பார்த்த போது அவனுக்கும் சின்னா இப்படித்தான் இருப்பார் என்றே தோன்ற, அவன் கணிப்பு சற்றும் பொய்க்காமல் நேற்றைய அலசலில் சில புகைப்படங்களையும் பார்த்திருந்தான்.

“உங்க அண்ணனுக்கும் சின்னாக்கும் பொண்ணு தேடுவமா? யாருக்கு முதல் பொண்ணு கிடைக்குதுன்னு?” என்று சரஸ்வதிபாட்டி மல்லுக்கு நிற்க, ‘இதேதுடா வம்பு’ என்று அதிர்ந்திருந்தான் அரவிந்தன்.

“அதான் இந்த வயசுலயும் நவீன வாலிபிகள் சங்கம் வச்சிருக்காரே உங்காளு" என்ற மணிகண்டன், “வாட் ரவுடி2 யோசனை?" என்றான் வாயில் கைவைத்து யோசனையாயிருந்த பார்வதியிடம்.

“ஜஸ்ட்டு மிஸ்ஸூ! தலை நரைக்காததுல ஏமாந்துட்டேன்" என்ற பார்வதி, “முன்னமே தெரிஞ்சிருந்தா சின்னாக்கு லவ் போஸ்ட்மார்டம் பண்ணிருப்பேன்” என்றவரில் மணிகண்டன் வாயிலிருந்த அடை அடைத்துக்கொண்டு வெளிவரப் பார்க்க,

"அது லவ் ப்ரோபோசல் பாட்டி" என்றான் அகரன்.

"இப்பவும் அவருக்கு உன்னை விட வயசு கம்மிதான் ரவுடி” என்றதும்

"அடப்போடா நம்ம சச்சினே..” என்று ஆரம்பித்தவரை "ரவுடி நிறுத்து! ஆனா ஊன்னா அவர புடுச்சி இழுக்க வேண்டியது” என்ற மணிகண்டன்,

“காலைலருந்து சிவாஜி கணக்கா நெஞ்ச புடிச்சிட்டு கிணத்தையே உத்து உத்து பார்த்து சின்னாவோட லவ்வ ஃபீல் பண்ணிட்டிருந்த மனுஷன நினைச்சாதான்” என்று அரவிந்தனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க,

“எங்க சின்னாவோட காதலுக்கு என்னப்பு குறைச்சல்! அவேங் கல்யாணமே அந்த காதலால நடந்ததுதான்" என்று வந்தமர்ந்தார் குளித்து முடித்து வந்த மூதாட்டி.

அன்பிலரசியை காணாமல் கிட்டதட்ட ஒரு மாதமாகியிருக்க, மரகதம் அன்பாவின் வயலை விற்க ஏற்பாடு செய்வதையறிந்து எரிமலையாய் அவர்முன் நின்றிருந்தான் சின்னா.

அவள் தொலைந்தபோதே உங்களை நம்பித்தானே அனுப்பினேன் என்று சீறியவனை காணவிடவில்லை அவர்.

‘என் பொண்ண அப்படியே விட்டிருந்தாகூட என்னோடயே இருந்திருப்பா கல்யாணம்னு பேசி அவளை துரத்திவிட்டதே நீதான்’ என்று அவன் மீதே காய்ந்திருந்தவர், ‘டாக்டர பார்க்க போறேன்னு உள்ள போனவ திரும்பி வராம போவான்னு நான் கனவா கண்டேன்’ என்று எரிந்தும் விழ அவரோடு அடியோடு பேசுவதை நிறுத்தியிருந்தான்.

அவள் சொன்னதற்காக விட்டுவிடவில்லை அவன், அன்னம் தண்ணீரின்றி பாண்டியுடன் சேர்ந்து தேடிக்கொண்டிருக்கிறான். இந்நிலையில் அவள் சொத்தையும் விற்க தயாராகிவிட்டவரில் ஆத்திரம் எழ, தேடி வந்திருந்தான்.

என் மக காணாம போனதுக்கு காரணமானவனே அந்த வயலை பார்த்துக்கொள்வதில் தனக்கு விருப்பமில்லை என்று முகத்திலடித்தார் மரகதம்.

இரண்டு நாட்களில் அந்த வயலுக்குரிய பணத்தை மரகதத்தின் வீட்டு வாசலில் விட்டெறிந்தவன், நேரே உள்ளே சென்று பீரோவிலிருந்த பத்திரத்தை எடுத்துக்கொண்டு வெளிவர,

“இந்தா இதையும் கொண்டு போ" என ஒரு காகிதத்தை அவன் முகத்திலடித்தார்.

முத்து முத்தான அன்பிலரசியின் கையெழுத்தில் ‘என் சின்னுவுக்கு’ என்று மேல்பக்கம் எழுதியிருந்தது. “இது எப்போ குடுத்தா” அதிர்ச்சியைத் தாங்கி கேள்வியாக அவன் பார்க்க,

“இதையும் காணாம போன அன்னைக்கு அந்த நர்ஸ்கிட்டதான் குடுத்து விட்டிருந்தா" என்று முகத்தைத் திருப்பினார்.

"இதை ஏன் அப்பவே குடுக்கல" என்றவனிடம், “இதை ஒருமாசம் கழிச்சிதான் உன்கிட்ட குடுக்க சொல்லி நர்ஸ்கிட்ட சொல்லியனுப்பியிருந்தா" என்றவரின் குரல் திடீரென தழுதழுக்க, “ஒரு தாயா அவளுக்கு எதுவுமே நான் செய்யல என் பொண்ணு கடைசியா என்கிட்ட கேட்டது இதுதான்” என்றவர் அழுதபடி உள்ளே மறைந்து கதவடைத்தார்.

கரங்கள் நடுங்க பிரித்தான். ‘மாமா இந்த கடிதம் சரியா ஒருமாசம் கழிச்சி உன் கைல கிடைச்சிருக்கும்னு தெரியும்’ தேதியைப் பார்த்தான் சரியாக ஒருமாதம் கடந்திருந்தது.

‘அன்னைக்கே குடுத்திருந்தா என் மேலிருந்த கோபத்துல படிக்காமலேகூட கிழிச்சி தூக்கி போட்டிருப்ப அதான் உன் அத்தைய லேட்டா குடுக்க சொன்னேன்’ என்றவள் அந்நிலையிலும் மரகதத்தை அம்மாவென குறிப்பிட தவிர்த்திருக்க விரக்தி சிரிப்புடன் தொடர்ந்தான்.

‘விசயத்துக்கு வரேன். இந்த கடிதம் கிடைச்ச பதினைந்தாவதுநாள் உன் திருமணச் செய்தி நீ படிக்கிற பத்திரிக்கைல வரணும் மாமா. இல்லை பதினாறாவது நாள் உன் அன்பாவோட மரணச்செய்தி அதே பத்திரிக்கைல வரும்.

இது வெறும் மிரட்டல் இல்ல மாமா. உன் அன்பாவ உனக்கு தெரியும்ல! பதினைஞ்சு நாளில் கல்யாணமான்னு கேட்காத நீ மனசு வச்சா பத்து நிமிசத்துல உன்னைக் கட்டிக்க பொண்ணுங்க வருவாங்கன்னு தெரியும். என்னை மன்னிச்சிடு’ இறுதியாக சின்னுவின் அன்பா என்று முடித்திருக்க, சின்னாவின் கைகளில் அவன் விழிநீர் பட்டுத் தெறித்து கடிதத்தில் சிதறியது.

கோபம், ஆத்திரம், வெறுப்பு, இயலாமை என்று அனைத்து உணர்வுகளையும் காட்டி தரைக்குத் தாவிய மீனாய் தத்தளித்து நின்றான்.

சொத்துவிற்பு நாடகமெல்லாம் மரகதம் நடத்தியது என்று புரிந்தது. ஏன்! தான் இன்று பணத்துடன் வராவிட்டாலும் இந்தக் கடிதம் தன்னைத் தேடி வந்திருக்கும் என்றும் புரிந்திருந்தான்.

பதினான்கு நாட்கள் கடந்திருந்தது. இதற்கிடையில் ஏற்கனவே விசாரித்திருந்தாலும் மீண்டும் மருத்துவமனை, செவிலியர், உள்ளூர், வெளியூர் தோழிகள் என்று ஒன்று விடாமல் அலசியிருந்தான்.

அவள் பத்திரிக்கை என்றதை வைத்து, தோழியென்றது நினைவில் வர நேரே பத்திரிக்கை அலுவலகம் சென்றான். அங்கு அவர் மகள் கனடாவில் இருப்பதாகச் சொல்ல, கனடாவுக்கே சென்று அவனவள் அங்கும் இல்லாததை உறுதிப்படுத்திவிட்டு அன்றுதான் ஊர் திரும்பியிருந்தான் சின்னா.

அவன் வீட்டின் உள்ளேகூட நுழையவில்லை சின்னாவின் கால்களில் விழுந்தார் கருணாகரன்.

“என் பொண்ண பத்தி என்னைவிட உனக்கு நல்லாவே தெரியும். உன் விசயத்துல அவ சொன்னா சொன்னதை செய்வா. ஒருநாள்தான் இருக்கு என் பொண்ண காப்பாத்துய்யா!" என்று அவன் காலைப் பிடித்துக்கொண்டு கதற,

“எங்க இருந்தாலும் அவ உயிரோட இருந்தா போதும்" கண்களில் நீருடன் கையேந்தி நின்றார்.

அன்று அம்மையப்பன் சாட்சியாக என் மாமா காலைப்பிடித்து கெஞ்சுவ என்று சாபமிட்டவள் இன்று எங்கோ இருந்துகொண்டு அதைச் செய்து முடித்திருந்தாள்.

"அம்மா நாளைக்கே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க! பொண்ணு…” என்றவன் நிறுத்தி,

“நம்ம தேன்மதி" என்றான்.

குணசேகரனை திரும்பியும் பாராமல் அவன் உள்ளே செல்ல,

"எய்யா ராசா" என்று நெஞ்சில் கைவைத்து கதவு நிலையிலயே சாய்ந்தார் திலகவதி.

"அய்யோ.... அய்யோ… குருவி கூடாட்டம் இருந்த எம் புள்ளைங்க வாழ்க்கைய நானே கெடுத்துட்டனே" தலையில் அடித்துக்கொண்டு கதறினார் குணசேகரன்.

‘பழி வாங்கறதாப்பா காதல் உண்மையான காதல்னா என்னன்னு என் மாமன் காட்டும்பா’ மகளின் குரல் காதில் அசரீரியாய்.

கழுத்துக்குகீழ் மரத்துவிடாதா என்று தன்னைக் கட்டிக்கொண்டு அழுதவளுக்காக அப்படி ஒருவளையே மனைவியாக்கத் துணிந்தவன் சென்ற திசையை கையெடுத்துக் கும்பிட்டார்.

தன் மாமனை வாழவைக்க அவள் மறைந்திருந்து ஆட்டங்காட்ட, உன் உடல் அல்லடி உள்ளம் பெரிதென பதில் காதலைக் காட்டி நின்றவனில் உறைந்திருந்தார் கருணாகரன்.

“சிறுக்கி மவ எங்கயோ இருந்துகிட்டு என் புள்ளைய ஆட்டி வைக்கிறாளே…” நெஞ்சிலடித்துக்கொண்டு மகனிடம் விரைந்தார் திலகவதி.

கட்டிலில் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

“எய்யா கொஞ்சம் நிதானமா யோசனை பண்ணுய்யா" என்ற தாயை இடுப்போடு அணைத்துக்கொண்ட தலைமகன் முதன்முறையாய் கதறி அழுதான்.

"உன் பையனைக் கட்டிக்க அந்தப் பொண்ணுதாம்மா யோசிக்கணும். அவ உணர்வுள்ள பொண்ணும்மா… என்னை உயிரில்லாத ஜடமா மாத்திட்டாளேம்மா உன் மருமக…” என்று கதறிய மகனின் தலையைக் கோதி செய்வதறியாது அவர் நிற்க,

“எப்படிம்மா அவ உடம்புதான் பெருசுன்னு அவ நினைக்கலாம்? அவ்ளோ கேவலமா போய்ட்டேனாம்மா உன் புள்ள!.

நான் குளிக்க வச்சி வளர்த்து விட்ட உடம்புதானம்மா… இடையில வந்த நாய் ஏதோ பண்ணிச்சின்னு…” என்றவன் அதற்குமேல் முடியாமல் தடுமாற, “எய்யா விடுய்யா" என்றவரிலும் கண்ணீர்.

"அந்தக் கிறுக்கச்சி சொன்னதை செய்வாளேம்மா…” என்று கதறியவன், “சின்னதுல நான் ஏதோ சொல்லிட்டேன்னு கிணத்துல குதிச்சி சாகப்பார்த்தான்னு தானம்மா அவளுக்கு நீச்சலே கத்துக் குடுத்தேன்" என்று மனதுள் அடக்கிவைத்த ஆற்றாமையை எல்லாம் தன்னை மறந்து அந்த ஆண்சிங்கம் கொட்டிக்கொண்டிருந்தது.

“என்னைத்தவிர அவளுக்கு உலகமே தெரியாதுன்னு நினைச்சிருந்தேன்… என்கிட்டருந்து ஒளிஞ்சிக்கவும் உலகம் அவளுக்கு தெரிஞ்சிருக்கேம்மா...” என்று தாயை இழந்த கன்றாய் தாய் மடியில் துடித்தவன், கண்ணைத் துடைத்துக்கொண்டு எழுந்தான்.

“அவ மனசு எனக்கு முக்கியமில்ல, உடம்புதான் முக்கியம்னு போனால்லம்மா உடம்பு இல்லாதவளுக்கும் மனசிருக்கு அதை என்னால பத்திரமா பார்த்துக்க முடியும்னு உன் மருமகளுக்கு புரியவைக்கிறேன்” என்று எழுந்து செல்ல, எதிர்ப்பட்டார் சிவச்சாமி. அனைத்தையும் கேட்டுதானிருந்தார்.

மகனை நன்றாகவே அறிந்திருந்ததால் இதற்குமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் ‘எல்லாம் தன்னால்தானோ’ என்ற குற்ற உணர்ச்சியில் தத்தளித்தார்.

"அப்படி எத்தனை பொண்ணுங்க மனசப்பா உன்னால பத்திரமா பார்த்துக்க முடியும்?” என்ற தாயின் ஆற்றாமையில் சின்னாவின் கால்கள் நின்றன.

இன்று தன் அத்தை மகளின் உள்ளத்துக்கு ஏங்கி அதைத் தர மறுத்தவளுக்காய் இப்படியொரு முடிவெடுத்த மகனுக்கு நிதர்சனத்தைப் புரிய வைக்க முயன்றார்.

தாயின் கேள்வியில் ஒருநிமிடம் விழிகளை இறுக மூடித்திறந்தான். அடுத்து அவன் நின்றது குணசேகரனின் வீட்டில்தான்.

“மாமா" என்று நின்றிருந்தவனிடம் கலங்கிய விழிகளுடன் கையெடுத்துக் கும்பிட்டார் குணசேகரன். தன் பெண்ணே ஆனாலும் ஆரூயிர் நண்பனின் மகனாயிற்றே! உறுதியாய் மறுத்தார். நண்பனை அடிக்கவே பாய்ந்தான் பாண்டி.

“நான் கட்டிக்கிறேன்" என்ற தேன்மதியின் குரல் உள்ளிருந்து வர சின்னாவை தவிர அனைவரும் சமைந்து நின்றனர்.

தன் தோழியின் காதலை உணர்ந்திருந்தவள், சிறு வயதிலிருந்து பார்த்திருந்த சின்னாவையும் உணர்ந்தேயிருந்தாள்.

அவளும் சொன்னதைச் செய்வாள். சின்னாவாலும் வேறோரு பெண்ணுடன் மனமுவந்து வாழமுடியாது என்பதை நன்கறிந்தவள் தன் தோழியின் உயிரைக் காப்பாற்ற சந்தோஷமாகவே அந்த முடிவை எடுத்திருந்தாள்.

மறுநாள் மணமகளை கையில் அள்ளிக்கொண்டு மேடையேறியவனை அந்த ஊரே கண்களில் நீர்வடிய பார்த்திருந்தது.

ஒரு பத்திரிக்கையில் அவன் திருமணத்தைச் செய்தியாக்க அவனவள் ஆணையிட்டிருக்க, அனைத்துப் பத்திரிக்கையிலும் தலைப்புச் செய்தியாகியிருந்தது சின்னாவின் திருமணம்.

சின்னா வருவான்...
 
Top Bottom