• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சின்னா 'தி ரோமியோ' - 19

STN - 39

New member
சின்னா - 19

+63 என்று ஆரம்பித்த இளவரிசியின் எண்ணைக் கண்டதுமே அரவிந்தனின் புருவங்கள் முடிச்சிட்டன.

எந்த நாடு சின்னா கண்டறிந்த கருடன் சம்பாவிற்கு பேட்டர்ன் ரைட் கேட்டிருக்கிறதோ அதே பிலிப்பைன்ஸ் நாட்டின் எண்.

“இளவரசி எப்பவாவது சின்னாவோட வயலை வீடியோ எடுத்திருக்காங்களா?" என்றான் அவசரமாக…

"அவளோட தீஸீஸ் விசயமா கேட்டான்னு இரண்டு மூணுமுறை சின்னாதான் வீடியோ எடுத்து அனுப்பி இருக்கான்” என்றார் சண்முகவேல் யோசனையாக.

பிரச்சனையின் ஆரம்பப்புள்ளி புரிந்ததில் சன்ன புன்னகைத் தோன்ற அவர் தந்த எண்ணை தொடர்பு கொண்டான்.

“அவருக்கும் எனக்குமான உறவு முறிஞ்சி வருஷக் கணக்காகுது. தயவு செஞ்சி இது விசயமா போன் பண்ணாதீங்க” என்று முடித்துக் கொண்ட பெண்குரல், கடைசியாக, “அண்ட் அவர் கிடைச்சாலும் எனக்கு தெரிவிக்க வேண்டாம்!” என்றதோடு அலைபேசியை துண்டித்தது.

சிறிது நேரத்திலேயே வேறு எண் அதே நாட்டிலிருந்து… யோசனையாக அரவிந்தன் எடுக்க, “அவ சின்ன பொண்ணு ஏதோ அவங்கப்பா மேல கோவத்துல சொல்றா, நீங்க அவர் கிடைச்சதும் தயவு செஞ்சி சொல்லுங்க… பாவம் நல்ல மனுஷன்” என்றது கனிவாய் ஒரு குரல்.

இரண்டு குரலுக்குமான வேறுபாட்டை அரவிந்தன் ஆராய்ந்திருந்த அதே வேளையில்,

பேசி முடித்து தனதறைக்குள் நுழைந்து தாழிட்ட இளவரசியின் கண்ணில் நீர் திரையிட்டது

தனது செல்ல தந்தையுடனான உறவை முறித்துக் கொண்ட அன்றைய நாளில் அவளிதயம் உழன்றது.

அன்று தன் பேரனுக்கு தாய்மண் வேண்டும் என அவளது மாமனார் கேட்டதும் அதிர்ந்தது சின்னா மட்டுமல்ல இளவரசியும்தான்.

தாய் மண்ணா? தன் மகன் ஒருபோதும் இந்தியாவில் வாழப்போவதில்லை, உன் தந்தை இதற்கு சம்மதிப்பாரோ மாட்டாரோ என்றச்சுறுத்தி ‘திருமணம் முடிந்ததும் சொல்லிக்கொள்’ என்று திருமணத்தை அவசரமாய் முடித்து வைத்தவரே அவர்தானே!

இருதலைமுறைக்கு முன்னரே இந்தியாவைக் கைக்கழுவி புலம்பெயர்ந்த குடும்பம் அவருடையது.

அதுவும் பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசியலின் முக்கியப்புள்ளி அவளது மாமனார். அவர் இந்தத் திருமணத்திற்கு சம்மதித்ததே இன்னமும் அவளுக்கு ஆச்சரியம்தான். அந்நாட்டின் முக்கிய துறையான விவசாய மந்திரியின் கீழ் நேரடி பொறுப்பிலிருப்பவர்.

அவரே அரசியல் காரணமாக நெருக்கடியில் இருப்பதாகக் கூறி திருமணத்திற்கு அவசரப்படுத்தியபோது அவளால் மறுக்க முடிந்திருக்கவில்லை.

கெவின் மேத்யூ! மற்றவர்களின் கேலியான பார்வையிலிருந்து விலகி இலேசாக கால் தாங்கி நடந்தவளின் திறமையை மட்டுமே கொண்டாடியவன்.

அவனது அக்கறையிலும் அன்பிலும் தனது தந்தையைக் கண்டவள் தயங்காமல் அவனது காதலை ஒப்புக் கொண்டாள்.

ஆனால் தாய் சொல்லி தந்தையின் தனிமையை உணர்ந்தவளுக்கு தான் மட்டுமே பிடிப்பு என்பது புரிய, அந்நியமண்ணின் மருமகளாவது அச்சுறுத்தியது.

காதலுக்கே அதுதானே வழக்கம். முதலில் கண்ணை மூடிக்கொள்வது. தெளிவு வரும்போது மீளமுடியாத அன்பில் சிக்கிக் கொள்வது.

இளவரசியை தன் தந்தைக்கு அறிமுகப்படுத்திய கெவின் அவர் மறுத்துவிடக்கூடாதே என்பதற்காக அவளது தீஸிஸ் காணொளிகளை அவருக்கு பெருமையாகக் காட்டினான்.

விவசாயத் துறையில் முக்கியப் பொறுப்பிலிருப்பவருக்கு அதிலிருக்கும் ஆர்வத்தை அறிந்து அதைச் செய்திருந்தான்.

ஆனால் அந்த காணொளியே தன் தந்தையிடமிருந்து ஒட்டு மொத்தமாய் தன்னை பிரிக்கும் என்று அறிந்திருந்தால் கெவின் மேத்யூவின் காதலை தன் மனதிலிருந்து அன்றே துடைத்தெறிந்திருப்பாள்.

எல்லாம் அறிந்தபோது காலம் கடந்திருந்தது.

பேரனுக்காகக்கூட தந்தை மண்ணைத் தர மறுத்தபோது பெருமைதான், துளியும் வருந்தவில்லை அவள். பணம் தருவதாய் சொன்ன தந்தையை நினைத்துச் சிரிப்புதான் வந்தது. தன் மாமனாரிடம் இல்லாத பணமா? காலையில் நடந்த சம்பாஷனையை மறந்து விளையாட்டாகத்தான் எடுத்திருந்தாள். எல்லாம் அந்த தொலைபேசி உரையாடலை கேட்கும் வரை.

கணவன் ஜெட்லாக் காரணமாக விரைவில் உறங்கிவிட வெகுநாள் சென்று கண்ட தந்தையிடம் கெஞ்சி கொஞ்சி பின்முற்றத்தில் உரையாடிக் கொண்டிருந்தாள் இளவரசி.

கோவில் கும்பாபிஷேகம் காரணமாக அதிக வேலையிருப்பதால் தான் கோவிலிலேயே தங்கிக்கொள்வதாக சிறிதுநேரத்தில் சின்னாவும் கிளம்பிவிட வீட்டினுள் நுழைந்தவளின் காதில் விழுந்தது அந்த அமில வார்த்தைகள்.

“எங்க போய்ட போகுது. இன்னும் மூனு மாசம் குழந்தை பிறந்ததும் இந்த மண்ணை எழுதி வாங்கிட்டுதான் ஊர் திரும்புவேன். வீடியோ பார்த்ததும் அவசரமா கல்யாணம் பண்ணி வச்சதே அதுக்காகத்தானே!"

"இல்ல என் மகனுக்கு அந்த நொண்டியா?” என்று கடகடவெனச் சிரித்தார்.

இளவரசியின் கால்கள் உறைந்தன.

“நோ.. நோ.. ஹீ லவ்ஸ் ஹர் வெரி மச். அவனுக்கு எதுவும் தெரியாது”

இவள் கணவனுடன் தூங்குவதாக நினைத்து சிரித்தபடி ஆங்கிலத்தில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார் அவளது மாமனார்.

“சுயர் சார்! இந்த மூணு மாசத்துல இந்த மண்ணோட தன்மை, இந்த மண்ணில் இருக்கக்கூடிய சத்துத்தாதுக்கள் என்னமாதிரியான உரம், கம்ப்ளீட் ரிப்போர்ட் உங்க கைல இருக்கும்”

நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தாள். திருமணம் முடிந்து இத்தனை மாதங்களாகியும் தன் பதவியைக் காரணம் காட்டி அனுப்பாதவர் கும்பாபிஷேகத்துக்கென்று கூடவே கிளம்பியபோது விகல்பமாக எண்ணவில்லை அவள்.

பேசிக்கொண்டே அவர் சின்னாவின் வயலை நெருங்கியிருக்க, இருட்டில் பொன்னாய் பளபளத்தது கருடன் சம்மா கதிர்கள். இளவரசியும் ஓசைப்படாமல் தாங்கியே நடந்து தொடர்ந்திருந்தாள்.

கண்கள் பளபளக்க குழியடிச்சான் கதிர்களுக்கு நடுவில் குந்தமாய் வளர்ந்திருந்த நெல்மணிகளை ஆர்வம் மீதூற விரல்களால் வருடியவர், “Divine Eagle is in my hand now” என்றார்.

“சும்மா கம்பீரமா அறுவடைக்கு நிக்கிறான் சார் கருடன். கண்டிப்பா சேம்பிள்ஸோடதான் வருவேன்” பேசிமுடித்து அவர் வீட்டுக்குள் திரும்ப உளையாய் கொதித்தது அவள் உள்ளம்.

தந்தை சொல்லி அவளும் பேட்டர்ன் ரைட் திருட்டுக்களை அறிந்திருக்கிறாள். அதுவும் கொஞ்ச நாளாக தன் பயிர்களை யாரோ இரவில் நோட்டமிடுவதாகவும் அதனாலயே கருடன் சம்பாவை பயிர்களுக்கு மத்தியில் வளர்ப்பதாகவும் தந்தை சொல்லியிருக்க, அனைத்திற்கும் அவ்வப்போது ஆர்வமிகுதியில் இவள் அனுப்பச் சொல்லி கேட்ட காணொளிப் பதிவுகளே காரணம் என இப்போது புரிந்தது.

அறுவடைக்காய் தலைகுனிந்து நின்ற கருடன் சம்பா கதிர்களை அதை உருவாக்கிய தந்தையின் நினைவில் தலை நிமிர்ந்து முடிந்தவரை தன் முந்தானைக்குள்
சேகரித்துக் கொண்டாள்.

பின் சற்றும் தயங்கவில்லை அவள். நிறுத்தி வைத்திருந்த டிராக்டர்களில் இருந்த எரிபொருட்களை மொத்தத்தையும் வயல் முழுவதும் தெளித்து விட்டவள், நிறைந்த வயிறுடன் குனிந்து அந்த மண்ணிற்கு முத்தமிட்டு தன் மன்னிப்பை யாசித்தாள்.

அடுத்தநொடி சின்னாவின் வயல் திகுதிகுவென தீப்பற்றி எரிய, கருடன் சம்மா குண்டு மணி அளவில்கூட மிஞ்சாமல் பார்த்துக் கொண்டாள்.

என் மண்ணின் தன்மை அறிய தொடுவாயா? தொட்டுக்கொள் நெருப்பின் சுடு சாம்பலில் என்னத்தை ஆராய்வாய்? பத்திரகாளியாய் நின்றாள்.

தன் தாய்நாட்டின் மண்ணை ஆராய்ச்சி செய்ய மூன்று மாதங்கள் கேட்டவரை மூன்று மணி நேரங்கள் கூட இம்மண்ணில் விட்டு வைக்கவில்லை அவள்.

ஒரு முடிவுடன் வீடு திரும்பியவள், முந்தானையில் முடிந்து வைத்த நெல்மணிகளை சிறிய மூட்டையாகத் துணியில் கட்டி அதைத் தன் அன்னையின் புகைப்படத்தின் பின்னே வைத்தாள். அவசரமாய் தந்தைக்கு ஒரு கடிதத்தையும் எழுதி அதனுடனே வைத்தவள் புகைப்படத்தின்முன் எரிந்துகொண்டிருந்த தீபத்தை தந்தை எளிதில் புரிந்து கொள்வதற்காக அவளே அனைத்தாள்.

அவளது அறையில் யாதுமறியாது உறங்கியிருந்தான் அவளது கணவன். சின்னாவைப் போல் அன்பும் கருணையும் நிறைந்தவன். அவன் நெற்றியில் உதடு ஒட்டியெடுத்தாள்.

தாய்நாட்டிற்காக தந்தையை இழக்க துணிந்தவளால் கணவனை இழக்க முடியவில்லை. அதை அவளது தந்தையுமே விரும்ப மாட்டாரே!

இப்போதெல்லாம் அன்பிலரசியை தான் திருமணம் முடிக்க கேட்காவிட்டால் அவள் அன்னையுடனாவது இருந்திருப்பாளோ என்ற குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருக்கும் தந்தை தன் திருமண உறவும் அவரால்தான் பிரிந்தது என்றறிந்தால் தாங்கமாட்டாரே!

விசயம் அறிந்து அணைப்பதற்குள் அனைத்தும் எரிந்திருந்தது.

ஊரே வந்த போது சொத்துக்காக தான்தான் செய்ததாக ஒப்புக்கொண்டவள், நினைத்தாலும் மீண்டும் உறவு ஏற்படாதபடி மனதறிய தந்தையை இழிவாகப் பேசினாள். இல்லை மீண்டும் அவள் வயிற்றில் வளரும் சிசுவைக்காட்டி அவளது மாமனார் தந்தையை மிரட்டக் கூடுமே!

தாயின் படத்தை தந்தைக்கு பூடகமாகச் சுட்டிக்காட்டிவிட்டு அதிர்ந்திருந்த மாமனாரை அலட்சியமாகக் கடந்தவளின் நிமிர்வில் ‘நான் என் தந்தையின் வளர்ப்பு’ என்ற திமிர் இருந்தது.

அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவருக்குதான் சாமர்த்தியமில்லை. மருமகளின் கோபம் உண்மையென்றே திகைத்திருந்தார்.

தன்னால் தன் தாய்நாட்டிற்குள் நுழைந்த விஷச்செடியை தன்னுடனே அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் இளவரசி.

அரவிந்தனுக்கு ஏதோ உறுத்தல். அலட்சியமாய் ஆரம்பித்த இளவரசியின் பதில் அவரைக் கண்டுபிடிச்சாலும் என்னிடம் சொல்ல வேண்டாம் எனும்போது தளும்பிற்றோ!

அதே வேளையில் இளவரசியின் மாமனாரின் குரலில் இருந்த அநாவசிய பதற்றம் யோசிக்கச் செய்தது.

அனைவரும் ஊருக்கு திரும்ப தயாராகிக் கொண்டிருக்க, கடைசியாக ஒருமுறை வீட்டைச் சுத்தி வந்த அரவிந்தனின் பார்வை பூஜையறையின் இடதுபுறம் பளிச்சென்று பூப்போட்டு விளக்கேற்றி வைத்திருந்த தேன்மதியின் புகைப்படத்தில் பதிந்தது. நேற்றய இரவின் தேடலிலும்கூட அது எரிந்து கொண்டேயிருந்ததாய் ஞாபகம்.

ஆளில்லாத போதும் பளிச்சென்று பராமரிக்கப்படும் புகைப்படம் இளவரசி சண்டையிட்டுச் சென்றபோது மட்டும் தூசி படர்ந்திருக்குமா?

“தேன்மதிம்மா இறந்தப்புறம் எங்க சின்னய்யன் பொண்ண கூட்டிட்டு இங்க அவர் வீட்டுக்கே வந்துட்டாருங்க… அன்னைலருந்து முடிஞ்சவரை விளக்கு அனையாம பார்த்துக்குவாருங்க… இப்பவும் எம்பொஞ்சாதி விளக்கேத்தும் இராவுல ஒருதரம் நான் எண்ணெய் ஊத்திட்டு போய்டுவேங்க” என்றான் அந்தப் பக்கமாய் வந்த இசக்கி. அவன் கணிப்பு பொய்யாகவில்லை.

சண்முகவேல் சொன்னபடி பார்த்தால் சின்னா தன் மகளிடம் அனைத்தையும் பகிர்ந்திருக்கிறார். வெளிநாட்டிலிருக்கும் இளவரசி திடிரென தந்தையை அவ்வளவு இழிவாய் பேசிவிட முடியுமா? பெண்களுடன் சகஜமாய் பழகுவது சின்னாவே சொல்லப்போய்தானே அவர் மகளுக்கு தெரிந்திருக்கும்…

அப்போது வராத கோபம் திடிரென வந்ததேன்? தன்னலமின்றி வளர்த்த தந்தையை அவ்வளவு இழிவான வார்த்தைகளைக் கொண்டு பேசிவிட்டு பின் விசும்பல் ஏன்?

விவசாயத்தை ஆர்வமாக தேர்ந்தெடுத்து படித்த ஒரு பெண்ணால் அவ்வளவு பயிர்களை எரிக்க முடிந்ததா? அதுவும் நிறைமாத வயிறோடு! இளவரசியின் செயல்கள் போலீஸ்காரனான அவனுக்கு முன்னுக்குப் பின் முரணாய் தோன்றியது.

அவனின் கேள்விகளுக்கு புகைப்படத்தின் பின்னிருந்து ஊர்ந்து சென்ற எறும்பின் வாயிலிருந்த நெல்மணி பதில் சொன்னது.

புகைப்படத்தின் பின்னால் நெல்மணியா? வித்தியாசமாகத் தோன்ற
படத்தின் பின்னால் எட்டிப் பார்த்தான். எறும்பு அரித்த வெறும் நெல் கூடுகளே சிலது கிடக்க, புகைப்படத்தை அதன் இடத்திலிருந்து சற்றே அசைத்தான்.

சுவற்றிற்கும் சட்டத்திற்குமான இடைவெளியில் சிக்கிக்கொண்டிருந்ததில் எறும்பிடம் தப்பித்த சில நெல்மணிகள் பொல பொலவென உதிர்ந்தன. ஒரு உள்ளங்கையளவு தேறியவற்றை எதற்கும் இருக்கட்டுமென பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான்.

வெளிப் பக்கத்தில் அன்பிலரசியும் சின்னாவும் இளம் வயதில் சேர்ந்தெடுத்த புகைப்படமும் அதையடுத்து தேன்மதி இளவரசி சின்னா மூவரும் ஒன்றாகவிருந்த ஒரு புகைப்படமும் இருந்தது. அவற்றைத் தன் கைப்பேசியில் சுருட்டிக் கொண்டான்.

சண்முகவேல் பாண்டி மற்றம் மனோரஞ்சிதத்திடம் அனைவரும் சொல்லிக்கொண்டு கிளம்ப, அரவிந்தனிடம் சிறு பெட்டியைத் தந்தார் அவர். கூடவே ஒரு சொத்து பத்திரமும்.

அவன் கேள்வியாக புருவத்தை உயர்த்த, கவர்மெண்ட் தன்னை தேடிவந்தா இந்த பெட்டியை கொடுக்கச் சொல்லி சொன்னான் சின்னா. இந்த பத்திரம் யாரோ ஃபிலோமினான்னு அவங்க பெயர்ல பண்ணைவீடு ஒன்னு ரிஜிஸ்டர் பண்ணி அனுப்பச் சொன்னான். நீங்க அங்க பக்கத்து ஊர்தான இதையும் அவங்ககிட்ட சேர்த்திருங்க தம்பி” என்றார் அவர்.

‘இதை கடைசியாகவா கொடுப்பது? இதற்காகத்தானே அவன் வந்ததே’ ஆசையுடன் பெட்டியை திறந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் எதிர்பார்த்த நெற்கதிர்கள் அதிலில்லை. பதிலாக சின்னா ஆராய்சியின் மொத்த குறிப்புகளும் இருந்தன. எந்தெந்த விதைப்பயிர்கள் சின்னா எங்கிருந்து கிடைக்கப்பெற்றார். நீரின் அளவு உயரம் மண்ணின் தன்மை சீதோஷ்ன நிலை பயிரின் கால அளவு அனைத்தும் குறிப்புகளாய். பத்திரப்படுத்திக் கொண்டான்.

“அப்புறம் தம்பி நீங்க இன்னொரு சாவி எதோடதுன்னு இசக்கிய கேட்டீங்களாம்… அது சின்னா கட்டின புது கோவிலோடது தம்பி” என்றார் சண்முகவேல்.

"இத்தாம் பெரிய கோவில் ஊருக்குள்ள இருக்க சின்னா எதுக்கு வயலுக்குள்ள கோவில் கட்டிச்சி” என்றார் பெரியாத்தா.

“ஒவ்வொரு கொடைக்கும் சின்னாவோட வயல் நெல்லுதான் கோவில் அன்னதானத்துக்கு வரும். ஆனா அந்த வருஷம் சின்னாவோட வயல் எரிஞ்சிட்டதால தோஷம்னு கோவில்ல வாங்க மாட்டேன்னு மறுத்துட்டாக. அன்னைக்கு கோவிச்சிட்டு இந்த ஊர் மண்ண அள்ளி ஒரு துணில முடிஞ்சிக்கிட்டு போனவன்தான் நான் எவ்வளவு தடுத்தும் ஊரை விட்டு போய்ட்டான். அப்புறம் போட்டிக்குன்னு இந்த கோவில கட்டினான்.

தோன்றப்போ ஊருக்கு வருவான். வயலு, கோவிலு, அவன்வீடு எல்லாம் அவனுக்கு குடுக்க வேண்டிய குத்தகை பணத்துல நான்தான் பார்த்துக்கிடுறேன்” என்றார் அவர்.

“அந்த கோவில பார்க்கலாமா?"

“எப்பு அப்படியே சின்னா கட்டின அந்த மரமல்லி குடிசையையும் ஒரு எட்டு பார்த்துட்டு போவம்யா” என்றார் அரவிந்தனிடம் பார்வதி பாட்டி.

இசக்கியை கூட அனுப்ப, “இதானுங்க மரமல்லி வீடு" என்று காட்டினான் அவன்.

தூரத்தில் குட்டி கோவிலைப் போலிருந்தது அந்தக் குடில்.

சுற்றிலும் மரமல்லி மலர்கள் காய்ந்து உதிர்ந்து கிடக்க, அந்த மரமல்லி மலர்களை எல்லாம் ஒன்றாக ஓரிடத்தில் கூட்டிப் பெருக்கி அள்ளி எடுத்த உருவத்தைக் கண்டு அனைவருக்குமே அதிர்ச்சி.

அவர் கருணாகரன். இவர்கள் யாரையும் அவர் கண்டுகொண்டதாய் தெரியவில்லை. ஏதோ சூன்யத்தில் உழன்றவர்போல் தன்பாட்டில் செய்து கொண்டிருக்க, அந்த வயதில் உடல் களைத்திருந்ததையும் அவர் உணர்ந்திருக்கவில்லை.

அனைத்தையும் முடித்து அந்த குடிலின் வாயிலில் தோளில் கிடந்த துண்டை விரித்து படுத்துக் கொண்டார்.

“அந்தம்மா எதாவது குடுத்தா சாப்பிடுவாருங்க. மீதி நேரமெல்லாம் இங்கனதான். அவர் வாயைத் திறந்து பேசியே பல வருஷமாச்சுங்க" என்றான் இசக்கி.

யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை. மனங்கனத்துக் கிடந்தது.

கோவில் சின்னதாய் இருந்தாலும் கோபுரமும் அதன் அமைப்பும் பிரம்மாண்டமாய். சூடிக்கொடுத்த கோதை நாட்சியாரும் அரங்கப் பெருமானும் அன்பே உருவாய் காட்சியளித்தனர்.

“கோவில் கருவறைய ஒருமுறை பார்க்கலாமா" அரவிந்தன் கேட்கவும் முழித்தான் அங்கிருந்த பூசாரி. அவன்தான் கோவிலை பார்த்துக் கொள்கிறான்.

“இருங்கய்யா அய்யாகிட்ட கேட்டுக்கிறேன்” என்று அலைபேசியை தூக்கிக்கொண்டு வெளியில் சென்றவன், "நீங்க மட்டும் போங்கய்யா" என்றான்.

அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த அரவிந்தன், கையிலிருந்த பெட்டியை வெளியில் வைத்துவிட்டு, பேசியபடியே உள்ளே சென்று ஒருமுறை துழாவி வந்தான். அங்கும் ஏமாற்றமே!

“சார் பெட்டிய காணோம்" மணிகண்டனின் கேள்வியில் சிரித்தான் அரவிந்தன்.

“அது அந்த கோவில் பூசாரி சுட்டுட்டான்” என்றான் வண்டியை ஓட்டியபடி. முருகேசனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அரவிந்தன்தான் ஓட்டினான்.

“என்ன சார் சிரிக்கிறீங்க?” என்றவனிடம் கையிலிருந்த பேப்பர்களை எடுத்துக் கொடுத்தான். அது சின்னா கொடுத்த பேப்பர்கள்.

"அப்போ அந்த பெட்டிக்குள்ள”

" நாமம்” என்று சிரித்தான் அகரன்.

பூசாரி கேட்டுவிட்டு வருகிறேன் என்று சென்றபோது உண்மையில் அரவிந்தன் சண்முகவேலிடம்தான் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்.

சிறிதுநேரத்தில் அவன் வந்து நீங்க மட்டும் போலாம் என்றதும் அவனுக்கு அதிர்ச்சிதான். தான் பேசிக்கொண்டிருக்க இவன் யாரிடம் கேட்டு வந்தான்?

அவனை சோதிக்க பெட்டியிலிருந்த தகவல்களைப் பற்றி பேசியவன் அதிலிருந்த பேப்பர்களை அகரனிடம் கொடுத்துவிட்டு, வேண்டுமென்றே வெளியில் விட்டுச் சென்றான்.

அதைக் கவனிக்காத அந்தக் கூவை பெட்டியைத் திருடி மாட்டிக்கொண்டது.

“அவனை அரெஸ்ட் பண்ணிருக்கலாமே சார்"

“இதுல பெரிய புள்ளி ஒன்னு இருக்குது மணி" என்றவன் அந்த பெட்டியிலிருந்த கடிதம் ஒன்றை அகரனிடம் படிக்கச் சொன்னான்.

‘அப்பா! உங்க இளவரசிய மன்னிச்சுருங்கப்பா…

எனக்கு வேற வழி தெரியல.

என் மாமனார் இங்க சும்மா வரல. நம்ம மண்ணை ஆராயவும் கருடன் சம்பாக்கு பேட்டர்ன்‌ரைட் வாங்கவும்தான் வந்திருக்கார். அன்பிலரசி அம்மாவோட தியாகத்துல விளைந்த உழைப்ப, தேன்மதி அம்மாவோட விட்டுக் கொடுத்தல்ல உருவான கதிரை யாரோ கொண்டுபோக உங்க மக விடமாட்டாப்பா!

நீங்க பாடுபட்டு உருவாக்கின பயிர்களை நானே என் கையால அழிச்சிட்டேன். விதை நெல்லுக்காக சிலதை மட்டும் மூட்டையா கட்டி வச்சிருக்கேன்.

எனக்கு நம்பிக்கையிருக்கு… எங்கப்பாவால திரும்பவும் அந்த ஆறை
நூறாக்க முடியும். நூறை இந்தியா முழுவதும் விதைக்க முடியும்!

உறவு முறிந்தது முறிந்ததாகவே இருக்கட்டும்! தொடர்பு கொள்ள வேண்டாம்.

உங்கள் செல்ல மகள் இளவரசி!

ரவுடீ பேபீஸின் கண்களில் நீர் கோர்த்தது. மேலோட்டமாய் பயிர்களைப் பற்றி அவர்களுக்கும் அரவிந்தன் சொல்லியிருந்தான்.

“அந்த பிள்ளைய தப்பா நினைச்சிட்டோமய்யா" பெரியாத்த கண்கள் கலங்க ஊர் எல்லையை நெருங்கியிருந்தனர்.

முதலில் பார்த்த அந்த மூதாட்டியின் வீடு தூரத்தில் தெரிய, அந்த வீட்டின் முற்றத்தில் கட்டி போடப்பட்டிருந்தவன், “எம் பொண்டாட்டி" என்று இன்னமும் கத்தி சிரித்தது அவர்கள்வரை கேட்டது.

“ஏனப்பு இவன்தான் நம்ம அன்பிலரசி புருஷனா இருப்பானோ?"

சரஸ்வதிபாட்டி சட்டென கேட்க, அரவிந்தனின் கையில் வண்டி கிறீச்சிட்டு நின்றது.
 
Last edited:
Top Bottom