செந்தமிழ் - 18

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,543
6,383
113

கண்ணம்மா.

அத்தியாயம் 18.

தனது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்தப் பொன் சங்கிளியைத்தான் விடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் செந்தமிழ். இந்தநொடியில் கூட நடந்த எதையும் அவளால் நம்பமுடியவில்லை. ஒரேநாளில் காரிகையின் பாதை வேறாகிப்போனதே!

நிலவன் அவளின்மீதான அவனது நேசத்தை வெளிப்படுத்தியவுடன், மறுப்புயென்பது சிறிதுமின்றி அவனது கையைப் பிடித்துவிட்டாளே! எது அவளை அவ்வாறு செய்யத் தூண்டியது? எது நிலவனைக் கண்மூடித்தனமாக நம்பவைத்தது? முதலில் அந்த உணர்வுக்குப் பெயர் கண்மூடித்தனமான நம்பிக்கைதானா? ஒன்றுமே விளங்கவில்லை செந்தமிழுக்கு. நிகழ்ந்துவிட்டத் திடீர் மாற்றங்களால் பெண்ணவளின் மூளை சிந்திக்கும் திறனை இழந்திருந்தது. அதற்காக அவளுக்கு எதைநினைத்தும் பயமெல்லாம் கிடையாது. அவளுக்கு அரணாக நிலவன் இருக்கையில் தேவையற்றப் பயங்கள் எதற்கு?

"ஆமாம் எனக்காக நிலவன் இருக்கிறான்." என்றெண்ணும்போதே உள்ளுக்குள் என்னவோ ஒன்று இனித்துக் கொண்டு இறங்கியது பெண்ணுக்கு.அதைத்தானே அவளது நெஞ்சோடு உறவாடிக் கொண்டிருக்கும் இந்தப் பொன் சங்கிலியும் பறைசாற்றுகிறது?
சிந்தனைகளின் தாக்கத்தாலோ என்னவோ செந்தமிழின் கைகள் தண்ணியல்பாய்க் கழுத்தில் கிடந்தச் சங்கிளியைப் பற்றிக்கொண்டன.

கழுத்துடன் உராயும் ஒவ்வொருமுறையும் தன்னைச் சிளிர்க்கவைக்கும் அந்தச் சங்கிலியை அப்போதுதான் உற்றுநோக்கினாள் செந்தமிழ். சற்றே நீளமான தங்கச் சங்கிலியில்சுமார் ஒன்றரை அங்குல அளவில் இதய வடிவத் தங்கப் பதக்கம் ஒன்று கோர்க்கப்பட்டிருந்தது.

பதக்கத்தின் மையப் பகுதியில் அழகிய பிறைநிலா வடிவமும், அதற்குள்ளே செந்து என்ற பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது.பதக்கத்தின் நுணுக்கங்களை செந்தமிழ் தொட்டு உணரும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைத்து வாங்கியிருந்தான் நிலவன்.

பிறைநிலாவினுள் வாகாகப் பொருந்தியிருந்த எழுத்துக்களை வருடிய செந்தமிழ், அது நிலவனால்மட்டுமே அழைக்கப்படும் அவளுக்கான பெயர்தான் என்பதைப் புரிந்து கொண்டாள்.

தனக்குள் உழன்றபடி பலாமரத்தடித் திண்டில் கால்களைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த செந்தமிழைக் கலைத்தது மீராவின் குரல்.

"தமிழு நீ இங்கதான் இருக்கியா? உன்ன நான் வேற எங்கெல்லாமோ தேடிட்டு இருந்தேன்."
எனக் கூறிய மீராவைப் பார்த்துப் புன்னகைத்த செந்தமிழ்,

"இல்ல சும்மாதான் இங்க உக்காந்திருந்தேன். ஏதும் முக்கியமான விஷயமா?"
என்று மீராவிடம் வினவினாள்.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல தமிழு. நீ வேற இயல்பிலேயே கொஞ்சம் தனிமைவிரும்பி.
பெருசா யாரு கூடயும் ஒட்டமாட்ட. இந்த அண்ணா வேற திடுதிப்புன்னு எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டான். எல்லாத்தையும் பண்ணவன், கொறஞ்சபட்சம் ரெண்டுநாளாவது உங்கூட இருக்கணுந்தானே? அதையும் செய்யாம தொர ஏதோ முக்கிய வேலையிருக்குன்னு ஆபீசுக்குப் போயிட்டாரு. மலரினியும் மாமாவ வால்பிடிச்சுக்கிட்டுப் போயிட்டா. இந்தமாதிரியான சூழ்நிலையில உன்னோட மனநிலை என்னன்னு
என்னால புரிஞ்சுக்கமுடியல.

அதான் வேலையெல்லாம் முடிச்சுட்டுக் கொஞ்சநேரம் உங்கூட பேசிட்டிருக்கலாம்னு வந்தேன்." என்று பதிலியம்பினாள் மீரா.

அதற்கும் செந்தமிழின் இதழ்கள் அழகியச் சிரிப்பையே உதிர்த்தன.

"சிரிக்கும்போது நீ ரொம்ப அழகா இருக்க." எனக் கூறி செந்தமிழின் கன்னத்தைக் கிள்ளிய மீரா, எதுவென்று இல்லாமல் தனக்குத் தோன்றுவதையெல்லாம் செந்தமிழிடம் வளவளக்கத் துவங்கினாள். செந்தமிழுக்கு மீராவின் துருதுறுக் குணம் மிகவுமே பிடிக்கும். ஆகையால் மீராவின் பேச்சைப் புன்னகையோடுக் கவனித்தாள் செந்தமிழ். ஒவ்வொன்றைக் குறித்துச் சொல்லும்போதும் மீரா தனது குரலில் காட்டியப் பாவனைகளால் நீண்டநாட்களுக்குப் பிறகு வாய்விட்டுச் சிரித்தாள் செந்தமிழ்.

"சரி சரி என்ன பேசவிட்டா நான் இப்படியேதான் பேசிக்கிட்டிருப்பேன். அண்ணா எப்ப வருவான்னு தெரியாது. அதனால அவனுக்காகக் காத்திருக்காம நீ வந்து முதல்ல சாப்பிடு." எனக் கூறியவள் செந்தமிழை அழைத்துக் கொண்டு உணவருந்தச் சென்றாள். இரவு உணவுவேலையும் கலகலப்பிற்குப் பஞ்சமின்றிக் கழிந்தது. எல்லோரும் செந்தமிழைத் தங்களது பேச்சில் இயல்பாகவே இணைத்துக் கொண்டார்கள்.

"இந்தா கண்ணு இந்தப் பூவைத் தலையில வச்சுக்கோ."என்றவாறு செந்தமிழின் கூந்தலில் முல்லைச் சறங்களைச் சூட்டினார் பர்வதம் பாட்டி.

"இங்கப் பாரு ஆத்தா. இனிமே நீ ஒன்னும் தனிக் கிடையாது. உனக்காக உன்னச் சுத்தி நாங்க இத்தனப் பேர் இருக்கோம். இங்க உன்னோட உணர்வுகளுக்கு நிச்சயம் மதிப்பு உண்டு. இத எல்லாத்தையும் மனசுல நிறுத்தி, நிலவனோட சேர்ந்து நல்லா வாழப் பாரு.
நாங்கயிருக்கோம் உனக்காக. தேவையில்லாத தயக்கங்களையெல்லாம் உதறிட்டு நீ நீயா இரு அதுபோதும். இதுக்குமேல நிலவன் உன்னைப் பார்த்துப்பான்.." எனக் கூறியவர்
பெண்ணவளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, அவளை நிலவனின் அறைக்கு அனுப்பிவைத்தார்.

அறைக்குள் வந்த செந்தமிழ் நிலவனின் வருகைக்காகக் காத்திருக்கத் துவங்கினாள்.
என்னவோ எல்லாமே அவளுக்குப் புதிதாக இருந்தது. சிறிதுநேரத்தில் வளாகத்திற்குள் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. உடனே செந்தமிழின் புலன்கள் அனைத்தும் விழித்துக் கொண்டன. ஏனென்றே தெரியாமல் நிலவனின் அசைவுகளைக் கவனமாக உள்வாங்கினாள் காரிகை.

"டேய் அண்ணா இன்னைக்கு உனக்குக் கல்யாணமாச்சு நினைவிருக்கா?" என வீட்டிற்குள் நுழைந்த நிலவனைப் பார்த்து நக்கலாகக் கேட்டாள் மீரா.

"ஏன் இல்லாம? அதெல்லாம் நல்லாவே நினைவுல இருக்கு."எனக் கூறித் தோள்களைக் குலுக்கினான் நிலவன்.

"அப்ப சரி. தமிழு உன்னோட ரூம்லதான் இருக்கா போய்ப் பாரு." என்றபடி தொடர்ந்து
"அண்ணா தமிழு இந்தச் சூழலுக்குக் கொஞ்சமேனும் பழகுற வரைக்குமாவது நீ அவ கூடயே இரு. அவ இயல்பா பழகுற ஒரே ஒரு ஆள் நீமட்டுந்தாங்குறது தெரிஞ்சும்
இப்படியிருக்கலாமா நீ?"என தாங்கலுடன் கேட்டாள் மீரா.

"சரி தாயே இனி எல்லாத்தையும் கவனமாப் பார்த்துக்கிறேன்."என்று சொல்லிக்கொண்டே
மாடிப்படிகளில் ஏறியவனைக் கண்டு முகவாயைத் தோளில் இடித்தவாறு "உன்ன எல்லாத்தையும் பாத்துக்கச் சொல்லி யாரு கேட்டது? நீ உன் பொண்டாட்டியமட்டும் கவனமாப் பாத்துக்கோ அதுபோதும்."எனக்கூறியவள் மலரினியுடன் தங்களது அறைக்குச் சென்றாள்.

மீராவின் பேச்சில் உதட்டில் அரும்பியப் புன்னகையோடுத் தனது அறைக்கு விரைந்தான் நிலவன்.

கீழே நடந்த உரையாடல்கள் செந்தமிழின் செவிகளையும் தவறாமல் சென்றடைந்தன.
மென்புன்னகையுடன் அறையின் மூலையில் வீற்றிருந்த மேசையின்மீது சாய்ந்து கொண்டு, எதிர்த் திசையிலிருந்தக் கண்ணாடியின் ஊடாகத் தனது பிம்பத்தில்
விழிகளைச் சுழலவிட்ட செந்தமிழின் கைகள், அந்தப் பொன் சங்கிலியை ஏந்தியிருந்தது.
நிலவனின் காலடி ஓசை செவிகளை மோதியபோதும் அங்கேயே அசையாமல் நின்றிருந்தாள்.

"என்ன செந்து தாலி பிடிச்சிருக்கா?"எனக் கேட்டுக் கொண்டே கோதையை நெருங்கினான் ஆடவன். "தாலியா?"என ஒற்றை வார்த்தையில் வினாத் தொடுத்தாள் செந்தமிழ்.

"ஆமாம்; என்னோட செந்துக்காகவே நான் இதப் பார்த்துப் பார்த்து வடிவமைச்சு, நீ என்னோட சரிபாதிங்குறதுக்கு ஆதாரமா இத உன் கழுத்துலப் போட்டிருக்கேனா அதுக்குப் பேரு தாலிதானே? உனக்குத் தெரியாததில்ல; நம்ம சங்ககாலத் தமிழர் சமூகத்துலத் தாலிக் கட்டுற வழக்கமே கிடையாது. தாலியைப் பற்றியக் குறிப்புகள் இலக்கியங்களிலும் பெருசா தென்பட்டமாதிரித் தெரியலையே. இதெல்லாம் ஒரு சில காரணங்களுக்காக நம்மளோட முன்னோர்கள் வகுத்துவச்சக் கோட்பாடுகள் மட்டுந்தான். அதப் பின்பற்றுறதும் பின்பற்றாததும் ஒவ்வொரு தனிமனிதனோட விருப்பம். அப்படிப்பார்த்தா உனக்குக் கடவுள் நம்பிக்கக் கிடையாது. எனக்கு இந்த சாஸ்திர சடங்குகள் மேல பற்றில்ல. திருமணத்தோட அடிநாதமே இரண்டு உள்ளங்களோட சங்கமம் அப்படிங்கும்போது,
அத வெளிப்படுத்தறமாதிரி எதையாவது செஞ்சா நல்லாயிருக்கும்னு தோனினச் சமயந்தான் எனக்கு இந்த யோசனை வந்தது." என்றவன் அவளைப் பின்னிருந்து அனைத்தபடிபெண்ணவளின் கைகளில் பள்ளி கொண்டிருந்த அந்த இதய வடிவ தங்கப் பதக்கத்தை ஒற்றை விரலால் வருடினான் நிலவன்.

"இந்தப் பதக்கம் என்ன சொல்லுதுன்னு உனக்குப் புரியுதுதானே செந்துமா?"
எனக் கேட்டான் மென்மையாக.

"ம்" என்ற ஓசையே பாவையின் பதிலானது.

"இப்படி என் கைக்குள்ள நிக்கிறதுல உனக்கு ஏதும் அசவுகரியம் இல்லதானே செந்து?" எனக் கேட்ட நிலவனை ஏறிட்டுப் பார்த்த செந்தமிழ், "இல்ல. இந்தக் கைகள் என்னச் சுத்திவளச்சிருக்கும்போது நான் ரொம்பப் பாதுகாப்பா உணருறேன் நிலவன்.
எல்லாமே ஒருமாதிரி வித்தியாசமா இருக்கு நிலவன். கூடவே என்மீதான ஒங்களோட காதல்; அது என்ன வியக்கவெக்குது. அதுக்காகல்லாம் ஏம்மேல ஒங்களுக்கு எப்படிக் காதல் வந்துச்சுன்னு கேக்கமாட்டன். அது எனக்குத் தேவையுமில்ல. ஆனா ஒங்க அளவுக்கு என்னால காதலிக்க முடியுமான்னுதான் தெரியல.ஒண்ணுமட்டும் நிச்சயம் நிலவன்; ஒங்களோட இந்த அளவற்ற நேசமே போதும் நம்ம பயணம் இனிமையா அமைய. ஒங்களோட கையப் பிடிச்சிக்கிட்டுக் காலம் முழுசுக்கும் கூடவர நா தயார் நிலவனோட செந்துவா. எனக்கான சிறகுகள் இதுதான்னு நினைக்கும்போது,என்னோட அந்த உணர்வுகளுக்கு நான் வார்த்தை வடிவம் கொடுக்கவிரும்பல. அது அப்படியே இருக்கட்டுமே. அதோட அழகியலே இதுதான்னு நினைக்கிறேன் நான்."எனக் கூறியவளின் பளிங்குமுகத்தைத் தன்புறம் திருப்பி அவளது நெற்றியில் இதழ்ப் பதித்தான் நிலவன்.

உனக்காக நானிருக்கிறேன் என்ற வாக்குறுதியைத் தாங்கியிருந்தது அந்த நெற்றிமுத்தம்.

"எனக்கு இந்தக் கைகளுக்குள்ள நிம்மதியாத் தூங்கணும். வாய்ப்புக் கிடைக்குமா?"எனக் கேட்டவளின் நெற்றிமுட்டிய நிலவன், அவளைத் தனது கை வளைவிற்குள் வைத்துக் கொண்டு மெல்ல உறக்கத்தைத் தழுவினான். அவனையே பார்த்தபடி அவனது மார்பில் தலைவைத்துப் படுத்திருந்த செந்தமிழும் தனக்கான சிறகுகளின் கதகதப்பில்
தனது அத்தனை அலைப்புறுதல்களையும் தள்ளிவைத்துவிட்டு, இதமான மனநிலையுடன் தூங்கிப்போனாள்.

யாருக்காகவும் எதற்காகவும் இல்லாமல் நாட்கள் ஒருவித ஜதியில் நகர்ந்து கொண்டிருந்தன. செந்தமிழும் சூழலுக்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ள் துவங்கினாள். தயக்கங்கள் ஏதுமின்றி அனைவரிடமும் இயல்பாகப் பேசமுயன்றாள்..

நிலவனின் துணையோடு தனது எல்லைகளைப் பெரிதாக்கினாள்.மறுவாழ்வு மைய பெண்களோடு நேரம் செலவிட்டாள். மலரினிக்குப் பிடித்தச் சிற்றுண்டிவகைகளை
வீட்டிலேயே தனது கைப்பக்குவத்தில் செய்துக் கொடுத்தாள்.

அமுதவல்லியும் கூட செந்தமிழின்மீதான தனது பார்வையை மாற்றிக்கொள்ளத் துவங்கியிருந்தார். விளைவு மாமியாருக்கும் மருமகளுக்குமிடையில் ஆரோக்கியமான உறவு இருந்தது. நிலவனின் அறுகான்மயில் செந்தமிழ் தன்னை இன்னுமே பண்படுத்திக் கொண்டாள்.

வாய்வார்த்தைகளாக அல்லாமல் நேசத்தைச் சுமந்த நெஞ்சங்களிரண்டும் தங்களுக்குள் மௌனமாய் உரையாடிக் கொண்டன. வார்த்தைகளற்ற மௌனங்களும் காதலின் பார்வையில் அழகியல்தானோ?

அந்த மௌனமழை செந்தமிழ் நிலவனின் வாழ்விலும் நேசத்தின் சுகந்தத்தைப்
பனிச்சாரலாய்த் தெளிக்கத் துவங்கியது.
 

Author: Vishakini
Article Title: செந்தமிழ் - 18
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty