அத்தியாயம் 3
பிரபல பள்ளியின் காலை வணக்க நேரம். மாணவ மாணவியர் வரிசை மாறாமல் நின்றிருந்தார்கள். மாணவர்கள் ஒரு அணியிலும் மாணவியர்கள் எதிரணியிலும் வரிசையாக நின்றிருந்தார்கள் இருப்பாளரும் படிக்கும் பள்ளி தான். ஆனால் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள முடியாது. கண்டிப்புக்கு பெயர் போன பள்ளி அது.
வரிசையில் நின்றிருந்த ரோஷினியின் கண்கள் தன் எதிரில் நின்றிருந்த மாணவர்களின் பக்கமே சுற்றி சுழன்று கொண்டிருந்தது. அவளின் தேட்டம் முடிவுக்கு வரும் வரை. சிறகடிக்கும் பட்டாம்பூச்சி போல அவள் விழிகளும் சிறகடித்த படியே தேடின.
வரிசையில் சற்று மறைந்து நின்றிருந்தபடியே அவள் விழி அசைவைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கும் சிரிப்பு தான். சுற்றிச் சூழல்ன்ற விழிகள் அவளின் தேடலையும் ஆவலையும் அவனுக்கு உணர்த்தியது. சற்று நகர்ந்து அவளுக்குத் தெரிவது போல் நின்று கொண்டான். அவன் இருக்கும் இடத்தைப் பார்த்ததும் அப்படியே நின்றது அவளின் தேடும் படலம். தன்னை கண்டு கொண்டவளுக்கு முகம் முழுவதும் விகாசிக்க பூரணமான புன்னகையை பரிசளித்தான். அந்தப் புன்னகை அவளையும் பற்றிக்கொள்ள அதற்குப் பின் எங்கும் இருவரின் விழிகளும் நகரவில்லை. ஒருவரின் மேல் ஒருவர் ஆணி அடித்தது போலப் பார்வையால் தங்கள் காதலை கடத்திக் கொண்டிருந்தார்கள்.
இயந்திரகத்தில் அன்றைய காலை நேர அசெம்பிளி முடிந்ததும் அவரவர் வகுப்புக்குப் பிரிந்து சென்றார்கள். அதுவரை இருவரின் பார்வையும் வேறு எங்கும் நகர வில்லை.
வகுப்பறைக்குள் வந்ததும் தன்னிடமான இரண்டாம் வரிசையில் சென்ற அமர்ந்தாள் ரோஷினி. அசெம்பிளியின்போது இவள் பின்னே நின்று அவளையே அவதானித்துக் கொண்டிருந்த அவளின் தோழி வித்யா அவளின் அருகில் அமர்ந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். அதுவரை ஒரு விதமான சந்தோஷ அலையில் அலைந்து கொண்டிருந்த ரோஷினி இப்படி தன் பக்கத்தில் அமர்ந்து தன்னை ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் தோழியை அப்போதுதான் திரும்பிப் பார்த்தாள். பார்த்தவளுக்கு அவளின் வேறுபாடு முதலில் தெரியவில்லை.
"என்னடி என்னையே பாத்துட்டு இருக்க.?"
"ம்ம், ஆமா, உன்ன தான் பாத்துட்டு இருக்கேன்." என்றாள் இப்போதும் ஆராய்ச்சியாக.
"அதுதான் ஏன் இப்படி கண்ண உருட்டி என்னையேப் பார்த்துட்டு இருக்கேன்னு தான் கேட்கிறேன்.?" எனக் கேட்டப்படியே அவள் கண்களைக் குத்துவது போலத் தன் இரண்டு விரல்களைக் கொண்டு செல்ல, எதிர்வினையாக நகர்ந்தவள்
"நீ செய்றதெல்லாம் புதுசா இருக்கேனு உன்ன பாத்துட்டு இருக்கேன்." என்றாள் அவளும். தன் மனதில் எழுந்துள்ள சந்தேகத்தைக் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுடன்.
அவள் கேட்க வருவது புரியாமல் "என்னடி. சொல்ல வர?" எனத் திரும்பக் கேட்டவள், அவளின் பார்வை தன்னை விட்டு மாறாமல் இருப்பதைக் கண்டு தான் மறைத்து வைத்த தன் மனதின் ரகசியம் தோழிக்குத் தெரிந்திருக்குமோ என்ற சிறு அச்சம் எழ, இப்போது அவளின் ஆராய்ச்சி பார்வையை இவள் எடுத்துக்கொண்டு பார்த்தவளுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.
அவளிடம் மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் இப்போதே தன் மனதில் இருப்பதை கூற வேண்டுமா என்ற சிறு யோசனை மட்டுமே. தோழி தன்னை கண்டு கொண்டாளெனத் தெரிந்து கொண்டவள் இதற்கு மேல் அவளிடம் மறைக்க விரும்பாமல். சற்று நிமிர்ந்து அமர்ந்தபடி,
"என்ன உன் சந்தேகம். ஒடச்சு கேளு.?" என்றாள்.
"உன் பார்வை எல்லாம் எங்கேயோ இருக்கு போலையே.?"
"ஆமா என் பார்வை நீ நினைக்கிற இடத்தில்தான் இப்போ இருக்கு." என்றாள் அவளும்.
"இது சரி வரும்னு நினைக்கிறியா.?" "கட்டாயமா வரும்."
"எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற.?"
"நம்பிக்கை டி. வேற என்ன சொல்றது.?"
"அவன் பேரு தெரியும்ல உனக்கு.?" "தெரியும்." என்றாள் அழுத்தமாக அவளைப் பார்த்துக் கொண்டு.
"ஓஹ்.!" என்றவளுக்கு அதற்கு மேல் பேச்சு வரவில்லை. சிறிது நேர அமைதிக்கு பிறகு,
“அப்புடைத்தே அந்நி தெலிசே உண்டாவா?”
("அப்போ எல்லாமே தெரிஞ்சு தான் இருக்க.?)
"இப்போ எதுக்கு தெலுங்குல பேசுற. நான் எங்க அப்பா, அம்மா கிட்டயே தெலுங்கில் பேசமாட்டேன். அதனால தமிழ்லயே பேசு." என்றாள் தனக்கு தோழி மட்டுமல்லாமல் தூரத்து உறவானவளிடம்.
"சரிடி டாபிக்கை மாத்தாத.?"
"அப்ப, அவங்க ஆளா மாறிடுவ.?"
"அவங்க ஆளானா.? ஓஹ்.! அத சொல்றியா.நான் ஏன் மாறணும்.?"
"அப்ப அவன் மாறுவானா.?"
"அவனும் தான் ஏன் மாறனும்.?"
" அப்ப என்ன பண்ணுவீங்க.?"
எனக் கேட்டவளுக்கு சொல்வதற்கு அவளிடம் பதில் இல்லை. யோசனையாக அவளையே பார்த்துக் கொண்டிருக்க.
"சரி எவ்வளவு நாளா ஓடுது உங்களுக்குள்ள.?"
"ஒரு மாசமா.?"
"என்கிட்ட சொல்லணும்னு தோணலையா உனக்கு."
"இன்னும் கொஞ்ச நாள் ஆன பிறகு சொல்லலாம்னு நெனச்சேன்."
அவளின் பதிலில் பெருமூச்செறிந்தவள்.
"வேறு காஸ்டாக இருந்தாலே ரொம்ப கஷ்டம் நம்ம குடும்பத்துல. இது டோட்டலாவே வேற. நல்ல யோசிச்சுக்கோ. ஒரு பிரண்டா என்னோட அட்வைஸ். இதுக்கு மேல நான் இத பத்தி பேசமாட்டேன். நீ உன்னுடைய வாழ்க்கைக்கு முக்கியமான ஒரு விஷயத்தைச் செய்றனா அத பத்தி யோசிக்காம இருந்திருக்க மாட்ட. இருந்தாலும் இன்னொரு முறை நல்லா யோசிச்சுக்கோ." என்று ஒரு நல்ல தோழியாக அவளுக்கு அறிவுரை கூற ஆழ்ந்த யோசனையுடன் தலையாட்டி அவள் கூற்றை ஏற்றுக்கொண்டாள்.
மாலை மணி ஐந்து. பிரபலமான டியூஷன் சென்டர் அது. பள்ளிக்கூடத்தைப் போலவே மிகுந்த தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. இங்குச் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்ததால் பள்ளியைப் போலவே இங்கேயும் மாணவ மாணவியரின் கூட்டம் அதிகமாகவே காணப்படும். பள்ளியைப் போல மாணாக்கருக்கு தனியே மாணவிகளுக்குத் தனியேயெனப் பிரித்து வைக்காமல் ஒரே வகுப்பு தான். அந்தந்த பாடப்பிரிவில் மாணவ, மாணவியருக்கு ஒன்றாகவே பாடம் நடத்தப்படும். மாலை ஐந்து மணியிலிருந்து எட்டு மணிவரை நடைபெறுகிறது இந்த டியூஷன் சென்டர். ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் இடையே பத்து நிமிடம் ஓய்வு கிடைக்கும் அந்நேரத்தில் தான் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள் மாணவர்களும் மாணவியரும்.
அப்படித்தான் அன்றைய டியூஷன் ஆரம்பமாவதற்கு நேரம் இருக்க மன்சூரின் வரவிற்காகக் காத்திருந்தாள் ரோஷினி. பள்ளியின் அருகிலேயே வீடு இருந்ததால் மூன்று முப்பதுக்கு பள்ளி முடிந்ததும் தந்தையுடன் வீட்டிற்கு செல்பவள், நான்கு ஐம்பதுக்கு தந்தையுடன் பயிற்சி வகுப்பிற்கு வந்துவிடுவாள்.
இவளை வெகுநேரம் காத்திருக்க வைக்காமல் மன்சூரும் உள்நுழைய அவனை வேகமாக நெருங்கியவள். "ஏன்டா இவ்வளவு லேட்டு.? வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பி வர நானே சீக்கிரம் வந்துடுறேன். நீ ஸ்கூல்ல இருந்து நேரா இங்கதானே வர. உனக்கு எதுக்கு இவ்வளவு நேரம்.?"என்று அவன் தாமதமாக வந்ததற்கு நிற்க வைத்துக் கேள்வி கேட்க.
"இப்பவே பொண்டாட்டி அவதாரம் எடுக்காதடி." என்றவனின் பேச்சில் அவளுக்குத்தான் புதிதான இந்த வார்த்தையால் முதல்முறையாக வெட்கம் வருவது போல் இருந்தது.
"ம்ம். எடுக்குறாங்க அவதாரம். ஏன் லைட்னு கேட்டா அதுக்கு பதில் சொல்லு.?" என்று அவன் பேச்சை வளர்க்காமல் அவளின் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்து நிற்க.
"உனக்கு என்னம்மா ஸ்கூல் முடிஞ்சதும் உங்க அப்பா வந்து உன்னைச் சல்லுன்னு வண்டில ஏத்தி வீட்டுக்குக் கூட்டிட்டு போயிடுறாரு. நீயும் நல்லா வீட்ல போய்ச் சாப்பிட்டுவிட்டு, தூங்கி ரெஸ்ட் எடுத்துப் பிரஷ்ஷா வர டியூசனுக்கு. ஆனா நான் அப்படியா.? என் தம்பி வர வரைக்கும் வெயிட் பண்ணி, அவன் வந்ததுக்கு அப்புறம் எங்க கார்லயே ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு, டிரைவர் அண்ணா கிட்ட எங்கம்மா கொடுத்து விடுற ஸ்நாக்ஸை சாப்டுட்டு, சூடா டீயும் குடிச்சுட்டு, ரோட்டோரமா முகம் கழுவிட்டு, நேரா இங்க வரோம்." என்றான் நீண்ட விளக்கமாக.
"அடப்பாவி.! நான் வீட்டில தூங்கிட்டு வரேன். நீ அதையே கார்ல செய்ற. அப்புறம் என்ன.?"
"இருந்தாலும் வீட்ல நீட்டி நிமிர்ந்து ரெஸ்ட் எடுக்கிற மாதிரி வருமா.?" என்றவனை முறைத்தபடி பார்த்தவளை கூல் செய்யும் பொருட்டு தன் பாக்கெட்டில் இருந்த பெரிய டைரி மில்க் சில்க்கை அவளிடம் நீட்ட. கண்கள் விரிய வாங்கிக் கொண்டவள்
"இந்தச் சாக்லேட் எனக்குப் பிடிக்கும் தான்.ஆனா இதைவிட எனக்கு ரொம்ப பிடிச்சது சினிக்கர்ஸ்(Snickers) சாக்லேட் தான்." என்றவளை பார்த்தவன், மேற்கொண்டு ஏதோ பேச வருவதற்குள் அந்த வகுப்பிற்கான ஆசிரியர் உள் நுழைய. அத்துடன் பேச்சை நிறுத்திவிட்டு இருவரும் அவர்களுக்கான இடத்தில் சென்று அமர்ந்து கொண்டார்கள்.
அதற்குப் பின்பு அடுத்து இரண்டு வகுப்புகள் முடியும் வரை அவர்களால் பேசிக்கொள்ள முடியவில்லை. வெறும் பார்வை பரிமாற்றம் மட்டும் செய்து கொண்டு எடுக்கும் பாடத்தில் கவனத்தை செலுத்தினார்கள் இருவரும். கடைசி வகுப்பிற்கு முன்பு கிடைத்த இடைவெளியில் எப்படியேனும் மன்சூரிடம் பேசி விட வேண்டும் எனக் காத்துக் கொண்டிருந்தாள் ரோஷினி. வகுப்பு முடிந்ததும் அவளுக்கு நின்று பேசுவதற்கு நேரம் கிடைக்காது. வகுப்பு முடிய ஐந்து நிமிடம் இருப்பதற்கு முன்பாகவே அவளின் தந்தை வந்து அவளுக்காகப் பயிற்சி வகுப்பின் வாயிலில் காத்துக் கொண்டிருப்பார். அதனால் கிடைத்த இடைவெளியில் அவன் அருகில் சென்று அமர்ந்தவள்.
"உன்கிட்ட ஒன்னு சொல்லணும்." என்றாள் வேகமாக.
"சொல்லு." என்றவனும் அவளைப் பார்த்த மாதிரி திரும்பி அமர்ந்து கொள்ள,
"என் பிரண்டு வித்யா இருக்கால்ல." "யாரு.? அந்த நெட்ட பொக்கா.?" "ஹேய்.! அப்படி எல்லாம் சொல்லாதே." என்று முறைத்தவளை பார்த்தவன்.
"சரி, சொல்லல. சொல்லு. அவளுக்கு என்ன.?"
"அவ கேட்கிறா.? நான் மதம் மாறப்போறேனா.?? இல்லை நீ மதம் மாறப் போறியான்னு.?"
"என்ன தேவைக்கு.?" என்றான் வேகமாக.
"அதுதான் எனக்கும் புரியல. ஆனா அவ சொல்றா, இப்படியே இருக்க முடியாதுன்னு. எல்லாமே ஆரம்பத்துல நல்லா தான் இருக்கும். போகப் போகத் தான் கஷ்டமா இருக்கும். அதனால முதலிலேயே பேசித் தெளிவாகிகோன்னு சொல்றா.?"
"அவ சொன்னான்னு நீங்களும் தெரிஞ்சுக்க வந்து இருக்கீங்க." என்று கேட்டவனை பார்த்தவள்
"ஆம்." என்பதாகத் தலையசைக்க. தங்களை யாரேனும் கவனிக்கிறார்களா என்று விழிகளைச் சுழற்றி பார்த்தவன் பின்ப அவளின் காதின் அருகே சற்று நெருங்கி.
"இங்க பார். யார் என்ன சொன்னாலும் மண்டையில் எடுத்துக்காதே. நீ.நீயாக இரு. நான், நானாவே இருப்பேன். இதெல்லாம் யோசிக்கிறதுக்கு நமக்கு இன்னும் நிறைய காலம் இருக்கு. இப்போ எதையும் யோசிச்சு நம்மை நாமே கஷ்டப்படுத்திக்க வேண்டாம். எனக்கு உன்ன பிடிச்சிருக்கு உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு. இது ரொம்ப இயல்பா நடந்தது. பெருசா நம்ம ரெண்டு பேரும் ப்ரொபோஸ் கூடப் பண்ணிக்கல."
"ஹேய் ஆமாடா நீ என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணவே இல்ல. அப்புறம் எப்படி இத லவ்ன்னு நம்மளே முடிவு பண்ணிட்டோம்." என்று யோசனையாகக் கேட்டவளை பார்த்தவன்,
"அதுதான் லவ்??" என்றான் அழகான சிரிப்பை உதிர்த்து.
"நம்ம ரெண்டு பேரும் சொல்லிக்காமலே ஒருவர் மேல் ஒருவருக்கு எட்டாம் வகுப்பிலிருந்து இருந்த ஈர்ப்பில் இந்த வருட தொடக்கத்தில் அலைபேசி எண்ணை மாற்றிக் கொண்டதிலேயே நம்ம மனசு இருவருக்கும் புரிந்தே இருந்திருக்கு. அதுதான் ரொம்ப இயல்பா இந்த விஷயம் நடந்திருக்கு. இப்ப முழுசா படிப்புல கான்சென்ட்ரேட் பண்ணுவோம். அப்பப்ப நம்ம பற்றியும் பேசித் தெரிஞ்சுக்குவோம். இப்பவே காம்ப்ளிகேட்டான விஷயத்தைப் பத்தி பேசிக்க வேண்டாம்."
"இப்ப பேசிக்க வேண்டாம்னா அப்ப இதுக்கு அப்புறம் பேசிக்குவோமா.?" என்று குழப்பத்துடன் கேட்டவளை பார்த்தவன்.
"அப்பச் சூழ்நிலை எப்படி இருக்கும்னு நமக்குத் தெரியாது. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் ஒரு காலத்திலேயும் உன்னை மாறச் சொல்லி நான் சொல்லமாட்டேன். அந்த உறுதி மட்டும் இப்போ உனக்கு நான் கொடுக்கிறேன்." என்றதும் அதுவரை குழப்பத்திலும் பயத்திலும் இருந்தவளது முகம் சற்ற தெளிவாக. அதுவே அவனுக்குப் போதுமானதாக இருந்தது.
"போதுமா.? இப்ப புரிஞ்சுதா.? இதைப் பற்றி நம்ம திரும்ப எப்பவுமே பேசிக்க வேண்டாம். இப்படியே போவோம். கண்டிப்பா நம்ம லைப் நல்லா தான் இருக்கும்." என்று புன்னகையுடன் கூற, அதே புன்னகை அவளையும் தொற்றிக் கொண்டது. சரியாக அந்நேரம் ஆசிரியரும் உள்நுழைய, அவனிடம் தலையாட்டியவள் வேகமாகத் தன் இடம் சென்று அமர்ந்து கொண்டாள். குழப்பங்கள் அனைத்தும் நீங்கியவளாக. சற்று நிம்மதியுடன்.