• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தகிக்காதே குளிர்நிலவே..!(24)

STN46

New member
அத்தியாயம் -24

தனது அறைக்கு நந்தனியுடன் வந்த அருண்மொழி , “உக்காருங்க “. என்றான்.

“இல்ல பரவாயில்ல…” என்றபடி நின்று கொண்டிருந்தாள்.

“இந்த காஸ்ட்லி சோஃபா நீங்க உக்காரதுனால கரைஞ்சு போயிடாது…” என அழுத்தமாக கூறியவுடன் படக்கென்று அமர்ந்து விட்டாள்.

அறையை சுற்றிலும் பார்வையை சுழல விட்டாள்.

அத்தனை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

ஒவ்வொரு இடத்திலும் பணத்தின் செழுமையை அவளால் உணர முடிந்தது.

அலங்கார விளக்குகள் முதல் அமரந்திருந்திருக்கும் சாய்வு நீள்விரிக்கை வரை அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டப் பொருட்கள்.

எல்லாவற்றையும் பார்க்க பார்க்க அவளுக்கு குற்றவுணர்ச்சி அதிகரித்தது.

“ மிஸ் நந்தினி…இதெல்லாம் அஞ்சு வருஷத்துக்கான லேபர்ஸ் ஃபைல்… நம்ப கம்பெனில எல்லா நாட்டை சேர்ந்தவங்களும் வேலைப் பார்க்குறாங்க. அதுல சில பேர் இந்த வருஷம் ப்ரோமோஷனுக்கு எலிஜிபில் கேண்டிடேட்ஸ்…சோ..நீங்க அவங்களோட டேட்டா பேஸை தனியா எடுத்து ஷார்ட் லிஸ்ட் பண்ணிடுங்க. கடை நிலை ஊழியர்ல இருந்து மூத்த அதிகாரிகள் வரை எல்லாரையும் தனியா பிரிச்சு போட்டுடுங்க. இன்னும் ரெண்டு நாள்ல எனக்கு பக்காவா டேட்டாபேஸ் ரெடி ஆகியிருக்கணும். “ என்றபடி அவளுக்கெதிரே வந்தமர்ந்தான்.

“ சார்…ஆனா ரெண்டாயிரம் லேபர்ஸ் இருக்காங்களே…ரெண்டு நாள்ல ரெடி பண்ண முடியாது சார்…கண்டிப்பா டைம் வேணும். அப்பறம் கடை நிலை ஊழியருக்கு கூட ப்ரோமோஷன் கொடுத்தாகனுமா? சீனியர்ஸ்க்கு மட்டும் போதாதா..” என்றாள்.

“ ஹலோ…! இங்க வியர்வை சிந்தி உழைக்குறது முக்கால்வாசி கடை நிலை ஊழியர்கள் தான். அவங்களோட உழைப்புக்கேத்த ஊதியம் கொடுத்து தான் ஆகணும். இதொன்னும் சாஃப்ட்வேர் கம்பெனி கிடையாது. அழுக்குப்படாம…உடல் நோகாம சம்பளத்தை வாங்கிட்டு போக. இரும்பை உருக்குறாங்க… நெருப்புலையும் சூட்டுலையும் வேகுறாங்க. அவங்களுக்கு செய்யாம வேற‌ யாருக்கு செய்றது?. உயர்ந்த இடத்துல இருந்துட்டு உழைப்பை மட்டும் உறிஞ்சி எடுக்கும் சராசரி முதலாளி வர்க்கம் நான் கிடையாது. இறங்கி வேலை செய்யணும். இதெல்லாம் உங்களுக்கு எங்கப் புரியப் போகுது. ம்ம்ச்..அதை விடுங்க…எனக்குத் தேவையான டேட்டாபேஸ் ரெண்டு நாள் ல வந்தாகணும் . அதுக்குத்தான உங்களுக்கு சம்பளம் போட்டுக் கொடுக்குறோம்…“ என்று கறாராக கூறி விட்டு நன்றாக சாய்ந்தமர்ந்தான்‌.

“ ஓகே சார்…” என்றவளின் மனம் தன்னையும் அருண்மொழியையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டது.

முற்றிலும் வேறாகத் தெரிந்தான் அருண்மொழி.

தலைமை ஊழியர் முதல் கடை நிலை ஊழியர் வரை அனைவரை பற்றியும் சிந்தித்து செயல்படும் அவனது பக்குவம் அவளை வியப்பில் ஆழ்த்தியது.

தான் கூட இந்தளவிற்கு அலுவலக ஊழியர்களைப்‌ பற்றி சிந்தித்ததில்லை என நினைத்தவளுக்கு தன்னை நினைத்தே கோபமாக வந்தது.

ஊழியர்களுக்கு சம்பளத்தை மட்டும் உயர்த்தி கொடுத்து விட்டால் அவர்கள் காலம் முழுவதும் நமது அடிமை‌ போல வேலை செய்வார்கள் என நினைத்திருந்தவளின் எண்ணம் தூள்தூளானது.

கொஞ்சம் கொஞ்சமாக தன்னை உணர ஆரம்பித்தாள் நந்தினி.

அப்போது கதவை தட்டாமலேயே திடீரென உள்ள நுழைந்த பாரதி அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு, “ ஓ…ஐ யம் சாரி…நான்‌ அப்பறமா வர்றேன்..” என திரும்பிச் செல்ல முயன்றாள்.

“ தட்ஸ் ஓகே பாரதி…அபபடியொன்னும்‌ முக்கியமா பேசிட்டு இருக்கல..என்ன பாரதி ஏதாவது முக்கியமான விஷயமா?” என்றான் .

“ கொஞ்சம் பர்சனலா பேசணும் …” என்றபடி நந்தினியை பார்த்தாள்‌ பாரதி.

அவளது பார்வையில் கூனிக் குறுகி தான் போனாள்‌ நந்தினி.

பாரதியின் பார்வையில் ஏளனம் இருந்ததோ என நினைத்து அவளை கூர்ந்து பார்த்தாள் .

அவளும் நந்தினியை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“ ஹலோ…! மிஸ்…” என நந்தினியின் முகத்தின்‌ முன்பு சொடக்கிட்டான் அருண்மொழி.

“ சார்….” என திடுக்கிட்டாள்.

“கொஞ்சம் கிளம்புனீங்கன்னா..நாங்க கொஞ்சம் பர்சனலா பேச முடியும்…” என்றான் அலட்சியமாக.

அவளுக்கோ அவமானமாக இருந்தது.

அதுவும் பாரதியின் முன்பு அருண்மொழி அவ்வாறு பேசியது மிகுந்த அழுத்தத்தை ஏற்ப்டுத்தியது.

“ ம்ம்…போ…போ..போறேன்..சார்.." என்றவள் வேகமாக வெளியேறினாள்.

வாசலை தாண்டியவுடன் பட்டென்று கதவு சாத்தப்பட்டது.

இரண்டடி எடுத்த வைத்த பின்பு தான் தனது கைப்பையை மறந்து அறையினுள்ளேயே வைத்து விட்டு வந்தது நியாபகம் வந்தது.

வேகமாக திரும்பிச்‌ சென்று அறையை தட்ட கை ஓங்கியவள் கண்கள் கலங்க கையை இறக்கி விட்டு படியிலிறங்கி நடந்தாள்.

“ ஏய்..பொண்ணு.. என்ன நீ இந்த நேரத்துல மாடியிலிருந்து வர்ற? ஆமா…யாரைக் கேட்டு உள்ள வந்த நீ? வீட்டாளுங்க மட்டுந்தான் இங்க இருக்கணும். வேலைக்கு வந்த பொண்ணு இவ்வளவு தூரம் மாடியேறி போயிருக்க. யாரு உன்னை இவ்வளவு தூரம் உள்ள விட்டது.?” என கடுகடுத்தார் மந்தாகினி.

ஏற்கனவே துவண்டு போயிருந்தவள் மந்தாகினியின் பேச்சில் இன்னும் அதிகமாக காயப்பட்டு தான் போனாள்.

“இல்லைங்க..அருண்..தான்…ம்ம்க்கூம்.. அருண்மொழி சார் தான் ஆஃபிஸ் விஷயமா பேசணும்னு கூப்பிட்ருந்தாரு.. அதான்…” என்றவளுக்கு மேற்கொண்டு அவரிடம் என்ன பேசுவது என்று புரியாமல் நின்றாள்.

“ அதுக்குன்னு கட்டுன பொண்டாட்டி மாதிரி‌ ரூம் வரைக்கும் போய் பேசுவியோ.? ஏன் இங்க உக்காந்து பேச முடியாதோ…அவனுக்கு தான் அறிவில்ல..உனக்குமா‌ இல்ல.. இந்த வீட்டுல எல்லாரும் அவங்கவங்க இஷ்டத்துக்கு ஏதோ பண்ணிட்டு இருக்காங்க…ச்சை…. “ என அலுத்துக் கொள்ள “ மந்தாகினி…” என வீர‌ ராஜசிம்மர் அழைக்க அவரை நிமிர்ந்து பார்த்தவர், “ நான் யாரையும் ஒண்ணும் சொல்லல ப்பா.. “ என்று கழுத்தை நொடித்துக் கொண்டு விடுவிடுவென தனதறைக்குச் சென்றார்.

“ அவங்க பேசுனதை மனசுல வச்சிக்காத மா..” என்றார் வீர‌ராஜ சிம்மர்.

“ பரவாயில்லங்க…” என்று கூறி விட்டு வெளியேறினாள்.

அடுக்கடுக்கான அலட்சிய பேச்சினால் மனம் நொந்து தான் போனாள் நந்தினி ‌.

கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றாள்.

பாரதியோ அருண்மொழியிடம் மாறவர்மன் தன்னிடம் நடந்து கொண்டதைப் பற்றிக் கூறினாள்.

அவள் கூறுவதைனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்டான்.

“ ப்ளீஸ்…அருண்..என்னைய இந்தியாவுக்கே அனுப்பி வச்சிடு… என்னால தினம் தினம் வர்மனோட போராட முடியல…எப்ப எப்படி நடந்துப்பாறோன்னு பயமா இருக்கு…நாம அவரை ஏமாத்துறதை நினைச்சா ரொம்பவே கஷ்டமா இருக்கு. போதும் இந்த விளையாட்டு. இதோட நிறுத்திக்குவோம்..அதான் எல்லாருக்குமே நல்லது…” என்றாள் தீர்மானமாக.

அவளை தீர்க்கமாக பார்த்தவன், "சரி அண்ணா கிட்ட உண்மையை சொல்லிடலாம்…அதுக்கு முன்னாடி நான் கேக்குற கேள்விக்கு நீ பதில் சொல்லு…"

“ என்ன கேளு அருண்”

“ இப்படி உன் கிட்ட கேக்கறதுக்கு கொஞ்சம் கஷ்டமாதான்‌ இருக்கு‌..பட் கேட்டே ஆக வேண்டிய கட்டாயம். நீ இன்னமும் என்னை விரும்புறியா? உன் மனசுல இன்னும் நான் இருக்கேனா?” என நேருக்கு நேராக கேட்டான்.

மெலிதாக சிரித்தவள்,” உம்மனசுல நந்தினியை தவிர வேற யாரும் நுழைய முடியாதுங்கறதை அன்னைக்கே நீ அடிச்சி புரிய வச்சிட்ட. நடந்த குழப்பத்துக்கு முக்கிய காரணம் நான்‌ தான். நான் மட்டும் உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வரலைன்னா இந்நேரம் நந்தினியோட உனக்கு கல்யாணம் ஆகியிருக்கும். முழு தப்பும்‌ என் மேல தான். சத்தியமா என்‌ மனசுல நீ இப்ப இல்ல… நீ ஏன் நந்தினி கிட்ட இவ்வளவு ரூடா நடந்துக்குற? இப்ப தான்‌ எல்லாம் சரியா போச்சுல்ல… தாத்தா கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாம் ல..” என்றாள்..

“ சரி‌ பண்ண வேண்டியது நிறையவே இருக்கு பாரதி. முதல்ல அண்ணனுக்கு கல்யாணம் பண்ணிட்டு தான் என் வாழ்க்கையை பாக்கணும். அதை பத்தி தான் உன் கிட்ட கேக்க வந்தேன். உனக்கு ஆட்சேபனை இல்லன்னா வர்மன் அண்ணாவை நீயே முறைப்படி கல்யாணம் பண்ணிக்க. உன் வாழ்க்கை நல்லா இருக்கும். தவறா கேட்டுருந்தா மன்னிச்சுக்க..” என்றான்‌..

“ உளறாத அருண்…அவரைப் போய் நான் எப்படி? இது விளையாட்டு விஷயமில்லை…பீ சீரியஸ்... அவரோட மனசுல தேவி மட்டும் தான் ‌இருக்காங்க. இந்த டாபிக் பத்தி இனி பேசாத…” என்றாள் அழுத்தமாக.

“ அவனுக்கு மனநிலை சரியில்லங்கறது தான பாரதி பிரச்சினை.?”

“ ஹேய் என்னடா பேசிட்டு இருக்க? அவரு குழந்தை மாதிரி டா… அவருக்கு வேணுங்கறது தேவி மட்டும் தான் இந்த பாரதி இல்ல..அதை முதல்ல புரிஞ்சுக்க “

“ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம பேச்சை மாத்திட்டு இருக்க…ஓகே வெல்…ஒரு வேளை அண்ணன் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டா நீ ஓகேன்னு சொல்லிடுவியா?”

“வேண்டாம் அருண்…நான் இப்படியே இருந்துட்டு போறேன்…அதுக்கு தான் சொன்னேன் நான் சென்னைக்கு கிளம்புறேன்னு.. ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரமா நான் கிளம்ப ஏற்பாடு பண்ணு...அவரை ஒரு அளவுக்கு மேல என்னால கன்ட்ரோல் பண்ண முடியல…உனக்குப் புரியும்னு நினைக்குறேன்…” என்றவளுக்கு அவன் முத்தமிட்ட நினைவே கண்முன் தோன்றி தடுமாறச் செய்தது.

அவளை‌‌ மேலும் கட்டாயப்படுத்த விரும்பாதவன் ஒரு பெருமூச்சுடன் வெளியேறினான்.

மாறவர்மனோ ஜன்னலருகே நின்று கொண்டு சற்று தொலைவில் தெரிந்த கடலை வெறித்துக் கொண்டிருந்தான்.

மனம் அந்த கவலைகளை போலவே முன்னும்‌பின்னும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

அவனை சிகிச்சையளிக்கும் பிரயத்யேக மருத்துவர் அவ்வப்போது வந்து அவனை பரிசோதித்து விட்டுச் செல்வார்.

கிட்டத்தட்ட ஆறாண்டுகளுக்கு மேலாக சிகிச்சை சென்று கொண்டிருக்கின்றது. பாரதி வந்த பிறகு தான் அவனிடம் சிறிது முன்னேற்றம் காணப்படுகிறது.

தாய் மற்றும் தந்தையை கண்டாலே மூர்க்கனாகி அனைத்து பொருட்களும் தூக்கி வீசி கட்டுக்கடங்காத காளையாக சிலிர்த்துக் கொண்டிருந்தவன்‌ பாரதியின் வருகைக்குப் பிறகு மடி தேடும் கன்றைப் போல் அவளை சுற்றி சுற்றி வர ஆரம்பித்து விட்டான்.

சில மாதங்களாகவே மங்கலாக ஏதேதோ நிழற்படங்கள் போல மனக்கண்ணில் தோன்றி அவனை அலைக்கழிக்கின்றது.

பாரதியை முத்தமிட்ட பிறகு அவனுள் ஏதோ மாற்றம்.

அந்த முத்தத்தில் சர்வ நிச்சயமாக தேவியை அவனால் உணர முடியவில்லை. வேறு ஏதோ ஒரு பெண்ணை தொடுவதைப் போன்று ஒரு அசூயை.

மனதை நிதானப்படுத்த முயன்றான். முடியவில்லை. மெல்ல எழுந்தவன் கடற்கரை ஓரம் நடக்க ஆரம்பித்தான்..
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

No members online now.
Top Bottom