• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தீஞ்சுவை தீ - 5

ரோசி கஜன்

Administrator
Staff member

வானும் மண்ணும் தனக்காகப் படைக்கப்பட்டது போல ஒவ்வொரு நொடியும் ரசித்து அனுபவித்தாள் உத்ரா. டிஸ்கோ, பப்பு (pub) போன்ற இடங்களில் பிரபாவுடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என உல்லாசமாய் மகிழ்ந்தாள்.

இதுதான் உலகம். இப்படிதான் உலகில் அனைவரும் வாழ்கின்றனர் என்றொரு மாய வலையில் சிக்கியிருந்தாள். காலம் முழுவதும் இன்று போல இன்பமாக இளமை துள்ளலுடன் இருக்கலாம் என்னும் நினைப்பும் இலவச இணைப்பாகச் சேர்ந்து கொண்டது. உலகின் மற்ற பகுதிகளில் நடக்கும் விடயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவளிடம் இல்லை.

மேலும் பல உடலுக்குத் தீங்கான பழக்கங்களும் வழக்கமாயின.

ஆண்கள் மட்டும் எந்த வரைமுறையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பெண்கள் கட்டுபாடுடன் வாழ வேண்டுமா? எனத் தோழிகள் அவ்வப்பொழுது மூளைச்சலவை செய்தனர். அதையும் சிரம் தாழ்த்தி ஏற்றாள். சுயசிந்தனையற்றுப் போனாள்.

பிரபாவிற்கு அலுவலகம் தாண்டி மேலும் பல நண்பர்கள் இருந்தனர். உத்ராவிடம் நண்பர்களை அறிமுகப்படுத்திய பிரபாகர் தன் குடும்பத்தாரைப் பற்றிய விவரங்களை பகிரவில்லை.

ஒருமுறை அவன் தந்தைக்கு உடல் நலம் மோசமாகி இருந்ததாக போன் வந்தது. அவன் ஊருக்குப் புறப்படத் தயாரானான்.

“நானும் வரவா?” உத்ரா ஆசையாகக் கேட்டாள்.

“இல்ல வேண்டாம்” தனக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்தபடி பதில் சொன்னான்.

“நாளைக்கு எப்படியும் நம்மைப் பத்தி தெரியணும்ல?”

“எதுக்கு?”

“என்ன டா நம்ம காதல் பத்தி அவங்களுக்குத் தெரியணும் இல்லையா? ”

“இப்ப நிலைமை சரியில்ல உத்ரா. அதனால வேண்டாம்”

பிரபாகர் கிளம்பிச் சென்றுவிட்டான். ஒரு வாரத்தில் திரும்பினான்.

“அப்பா உடம்பு எப்படி இருக்கு?” உத்ரா ஆர்வமாகக் கேட்க

அலட்சியமாக “ம் நல்லாயிருக்கார்” என்று பதில் வந்தது.

“என்ன உடம்புக்கு?”

“ஹார்ட் அட்டாக். இப்ப பிரச்சனை இல்ல” என முடித்துவிட்டான்.

“நான் உனக்கு எத்தனை போன் செஞ்சேன் தெரியுமா? ஆனா நீ எடுக்கல” குறையாக அவள் சொல்ல

“அங்க போன் எடுக்க முடியல.. புரிஞ்சிக்க டி ” எனச் சுள்ளென பேசினான்.

உத்ரா முகம் சுருங்கிப் போனது. “தான் அப்படி என்ன தவறாகக் கேட்டுவிட்டோம்” எனப் புரியவில்லை.

அவன் ஒருமுறை கூட “நீ எப்படி இருக்க?” எனக் கேட்கவில்லை.

அவன் புன்னகை, பாசம், நேசம் அனைத்தும் ஆவியாகிக் காணாமல் போனதா? குழம்பிப் போனாள். பின் அவன் களைப்பாக இருக்கலாம் என நினைத்துத் தன்னையே சமாதானம் செய்து கொண்டாள்.

அடுத்து இரண்டு நாட்களில் அவள் ஆசையாக அருகே சென்றாலும் அவன் விலகிப் போனான்.

பின் அவனே “என் தங்கைக்கு என்கேஜ்மெண்ட் ஆக போகுது. இன்னும் மூணு மாசத்துல கல்யாணம்” என்றான்.

“வாவ் இது சந்தோஷமான விஷயம் டா. ஏன் அதை சோகமா சொல்ற? நம்ம லைன் கிளியர் ஆகப் போகுது”

“ஆமா.. லைன் கிளியர் ஆகப் போகுது” என் கூறினான். அதன் உள்ளர்த்தம் புரியாமல் உத்ரா மகிழ்ந்தாள்.

“உன் தங்கைக் கல்யாணம் லவ்வா? அரேஞ்சிடா?” எனச் சாதரணமாக வினவினாள்.

சட்டென பிரபா முகம் சிவக்க “என் தங்க என்ன உன்னை மாதிரினு நினைச்சியா?” எனக் கேட்டுவிட்டான்.

அதோடு நில்லாமல் “என் அப்பா அம்மா யாரை கட்டிக்க சொல்றாங்களோ அவங்களைத் தான் என் தங்கை கல்யாணம் செய்வாள்” என முடித்து கோபமாக வீட்டைவிட்டு வெளியேறினான்.

மின்சாரம் தாக்கியதை போல அதிர்ந்து போனாள். அவளால் அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை. இதயம் நொறுங்கிப் போனது.

பிரபாவைக் காதலிப்பது தவறா? முதல் முறையாக அவன் மேல் சந்தேகம் உண்டானது.

இதுதான் பிரபாவின் உண்மை முகமா? இனி தன் எதிர்காலம் என்ன ஆவது? வாழ்க்கையின் மீது பயம் எழுந்தது.

தன் தோழிகள் சொற் கேட்டுத் தவறு செய்துவிட்டோமா? எனத் தன்னையே கேட்டுக் கொண்டாள். இல்லை எத்தனைப் பேர் இப்படி உள்ளனர். அது தவறில்லை என தன் செயல்களுக்கு வக்காலத்து வாங்கினாள்.

பிரபா தன்னைவிட்டு விலகிச் செல்வது போல அவள் உள்ளம் உணர்த்தியது. இருவருக்குமான நெருக்கத்தில் விரிசல்.

உத்ரா அலுவலகம் செல்வது பின் வெளியே எங்கேயாவது சாப்பிட்டுவிட்டு இரவு வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டாள்.

இப்போதெல்லாம் ஏனோ இந்த வீட்டின் மேல் அவளுக்கு பிடித்தம் இல்லை. இரவு தனியறையில் உறங்க தொடங்கினாள்.

“சாரி பேபி” என்றபடி பிரபா அவள் படுத்திருந்த அறைக்கு வந்தான்.

உத்ரா கண்களை மூடியிருந்தாள். அவள் உறங்கவில்லை என பிரபாவுக்குத் தெரியும். அவளை முத்தமிட முனைந்தான்.

“பிரபா ப்ளீஸ் வெளில போ .. எனக்கு டையர்டா இருக்கு”எனச் சத்தமிட்டு பின் திரும்பிப் படுத்தாள்.

மன்னிப்புக் கேட்கும்ப் பாவனையில் “நான் மூடுஅவுட்ல பேசிட்டேன். வேற எந்த அர்த்தமும் இல்ல உத்ரா. வெரி சாரி” என்றான்.

சில நொடிகள் காத்திருந்தான். அவள் பதில் அளிக்கவில்லை என்றதும் எழுந்து விளக்கை அணைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.

எப்பொழுதும் அவன் உண்டானா? எனக் கேட்பது அவள் வழக்கம். கடந்த சில நாட்களாக அக்கேள்விகள் மறைந்து போயின. பசித்தால் உண்பான் அவன் என்ன குழந்தையா? என அதற்கும் பதில் சொல்லிக் கொண்டாள்.

அவன் சொன்ன வார்த்தை முள்ளாய் குத்தியது. அது சாதாரண சொல் அல்லவே? தன் நடத்தையை அவன் சந்தேகிக்கிறான் என எண்ணுகையில் கண்ணீர் தலையணையை நனைத்தது.

உத்ரா உண்மையாக பிரபாகரைக் காதலிக்கிறாள். அவன் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.

நாம்தான் அவன் மீது பாசமும் அக்கறையும் செலுத்துகிறோம். அவன் மிகவும் மாறிவிட்டான் என்று எண்ணிக் கசிந்து உருகினாள். உத்ரா உறக்கம் இல்லாமல் பலவாறு நினைத்து நீண்ட நேரத்திற்குப் பிறகு உறங்கினாள்.

அடுத்த வந்த நாட்களில் உத்ரா பெரும்பாலும் மௌனத்தை கடைப்பிடித்தாள். தேவையெனில் மட்டும் பேசினாள்.

ஒரு ஞாயிறு காலை நாற்காலியில் அமர்ந்தவண்ணம் செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிரபா “உத்ரா போதும் இந்த சண்டை. என்னால உன்கூட பேசாம இருக்க முடியலை. உனக்கு வேணும்னா என்னை ரெண்டு அடி அடிச்சிடு. ஐ லவ் யூ டி” என அவள் காலடியில் அமர்ந்தான்.

“நான் வேற மாதிரி பொண்ணுடா உன் தங்கை மாதிரி இல்ல” என்றாள். சொல்லுகையில் துக்கம் தொண்டையை அடைத்தது. கண்ணீருடன் விரக்தி நிலையில்க் கூறினாள்.

அவள் கையை இழுத்து தன் கன்னத்தில் பளார் பளார் என அடித்துப் பித்துப் பிடித்தவன் போல நடந்து கொண்டான்.

“நான் உன் கூட படுத்தேன். அது உன் மேல வெச்ச காதல்னால மட்டும் தான். நீ என்னை கைவிட மாட்டேன்னு முழுசா நம்பினேன். ஆனா நீ என்னை ஒரு விபச்சாரி மாதிரி பார்த்திருக்க. நான் உன்னைத் தவிர யாரையும் மனசால கூட நினைச்சத்தில்ல” என உதடுத் துடிக்க அழுதாள்.

“ஐயோ சாரி உத்ரா” பதறினான்.

“உன் மனசில் இத்தனை நாட்களா இருந்தது வெளில வந்திருக்கு. நாம பிரேக்அப் செய்திடலாம். என்னால உன்னோடு இருக்க முடியாது” என்றாள் எங்கோ பார்த்தபடி

“அன்னிக்கு நான் எதோ கோபத்துல சொல்லிட்டேன். என்னை மன்னிச்சிடு” என அவள் முகத்தை தன் கையில் ஏந்தி மன்னிப்புக் கோரினான்.

“நானும் கோபத்துல இருக்கேன். அப்ப நானும் பேசவா பிரபா? .. உன்னை .. உன் குடும்பத்தை .. உன் தங்கையப் பத்தி” என அவள் பட்டியலிட அவன் முகம் மொத்தமாக விழுந்து போனது.

இதற்கு என்ன பதில் சொல்வான். அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவனின் சக்தியை அவள் மொத்தமாக உறிஞ்சி விட்டதை போல உணர்ந்தான்.

இதற்கு மேல் பிரபா மன்னிப்பு கேட்கவில்லை. இருவரும் தனித்தனி அறையில் இருக்க வீடே மயான அமைதியானது.

பிரபாவை வேலை நிமித்தமாகச் சிங்கப்பூர் அனுப்ப அலுவலகத்தில் முடிவு செய்தனர். அவன் அங்கு இரண்டு மாதங்கள் இருக்க வேண்டி வரும் என்றச் செய்தியும் உத்ரா காதில் விழுந்தது.

உத்ரா வீட்டை காலி செய்து முன்பு இருந்தது போல தன் தோழியுடன் வசிக்கத் திட்டமிட்டாள்.

பிரபாவிடம் சொல்லவில்லை. அவள் செயல் மூலம் புரிந்து கொண்டான். அவளைத் தடுத்து நிறுத்த முயலவில்லை. அது அவளுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது.

ஆனால் ஒரு நொடி போதும் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்ற. அந்த மாற்றம் நிகழ்ந்தது.

ஒரே ஒரு போன் கால் மீண்டும் இருவரையும் காதல் என்னும் நதியில் ஒன்றாக நீந்த வைத்தது.

“ஹலோ உத்ரா” எனப் பதட்டமாக அவள் தோழி போனில் பேசினாள்.

“என்ன?” என்றாள் சுவாரசியம் இல்லாமல்

“பிரபாவுக்கு ஏக்சிடெண்ட் ஆகிடுச்சி. அவனை ரீகன் ஹாஸ்பெட்டல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க”

உத்ரா இதைக் கேட்ட நொடி பிரபாவின் மேலிருந்த கோபம் வெறுப்பு ஆற்றாமை அனைத்தும் விலகி மீண்டும் காதல் என்னும் ஆழி அலையில் மூழ்கத் தொடங்கினாள்.

அவனைக் காண மருத்துவமனைக்கு ஓடோடிச் சென்றாள். அவன் எத்தனை முறை தன்னிடம் மன்னிப்பு கோரினான் தான் பிடிவாதமாக இருந்துவிட்டோம் எனப் பொங்கிவந்த அழுகையை நிறுத்தப் பெரும்பாடுபட்டாள். அவனைக் காண துடித்தாள்.

தன்னால்தான் அவனுக்கு இந்த நிலை எனத் தன் மீது பழி போட்டு கொண்டாள்.

மருத்துவமனையை அடைந்து அவனிருக்கும் இடத்தை அடைவதற்குள் பல யுகங்கள் ஆனது போலொரு பிரமை. அனைத்து கடவுளிடமும் அவன் நலனுக்காக மனுப் போட்டாள்.

பிரபா கண்மூடி நினைவின்றி படுத்திருந்தான். அவனை சுற்றி சிவனின் நாக ஆபரணங்கள் போலப் பல டியூபுகள் இருந்தது. அவனை ஐ.சி.யூவில் கண்ட நொடி உத்ரா மூச்சே நின்றுவிட்டது.

பிரபா என அழைக்க முற்பட அதற்குள் “உத்ரா” என அழைத்தான் சித்து.

பிரபாவின் உற்ற நண்பன் சித்து பேசாதே எனச் செய்கை செய்து உத்ராவை வெளியே அழைத்து வந்தான். அங்கே பார் என்றான்.

பலத் தெரியாத முகங்கள் பிரபாவிற்காக நின்றனர். சுற்றியிருப்பவர்களை இப்பொழுதுதான் உத்ரா கவனிக்கத் தொடங்கினாள்.

பத்து பேர் அளவிலிருந்தனர். பெண்களின் தங்க நகைகள் கண்ணைப் பறித்தன. ஒரு இளம் பெண் அழுதபடி அமர்ந்திருந்தாள். அது பிரபாவின் தங்கையாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டாள் உத்ரா.

“அவங்க பிரபா சொந்தகாரங்க. நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாத” எனச் சித்து எச்சரித்தான்.

“நான் அவங்களோடு பேசவா?”

“வேண்டா தாயே இப்ப நிலைமை சரியில்ல” எனக் கையெடுத்துக் கும்பிட்டான்.

“சித்து” என ஒருவர் அழைக்க அவன் சென்றான். பிரபாவின் உடல் நிலைபற்றி பேசிவிட்டு அம்மனிதர் உத்ராவை யாரெனக் கேட்க

“பிரெண்ட்” எனச் சித்து சொன்னது கேட்டது. பிரபாவின் சில நண்பர்கள் வந்திருந்தனர். அதனால் உத்ராவை அவர் அத்தனையாகக் கண்டு கொள்ளவில்லை.

அடுத்த ஒரு வாரம் அவர்கள் இருந்தனர். பிரபாவிற்கு ஆபத்தாக எதுவும் இல்லை. கையில் சின்ன எலும்பு முறிவு. அடிப்பட்ட அதிர்ச்சியில் மூர்ச்சையாகிவிட்டான்.

உத்ரா தினமும் மருத்துவமனைக்கு வந்தாள். அவன் உறவினர் அறியாமல் இருந்த பார்த்துச் சென்றாள்.

உறவினர்கள் ஊருக்குச் சென்றதும் அவனைக் கட்டி அணைத்து விம்மி விம்மி அழுதாள்.

பிரபா “எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை உத்ரா அழாத” எனச் சமாதானம் செய்தான்.


தொடரும் …
 
Top Bottom