விழித்தெழுந்தாள் உத்ரா. காட்சிகள் தெளிவின்றி மசமசவென்று இருந்தது. பிறகு மெல்ல அனைத்தும்த் தெரிந்தது. சில நொடிகள் தாம் எங்கு உள்ளோம் என்றே புரியவில்லை.
மருத்துவமனைக்கே உரிய வாசம் நாசியைத் தாக்கியது. மருத்துவமனையின் அறையில் படுத்திருப்பதை உணர்ந்தாள். சுவர் கடிகாரம் காலை எட்டு மணி எனக் காட்டியது. ஏசி அறைக்கு வெளியே தகதகக்கும் வெயில்.
மேகம் விலகுவது போல முன்தின இரவு தனக்கு நேர்ந்த விபத்தும் அதனைத் தொடர்ந்து தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவிற்கு வந்தது.
உத்ராவிற்கு தலையிலும் வலது கையிலும் சிறிய கட்டுகள் போடப்பட்டிருந்தன. அவற்றை அசௌகரியமாய் உணர்ந்தாள். அதனுடன் டிரிப்ஸ், ஆக்சிஜனுக்கான ஆக்சிமீட்டர் போன்ற இதர வஸ்துக்களும் அவள் இடது கையை அலங்கரித்திருந்தன.
சிறு விபத்துதான் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை எனப் புரிந்தது. அருகிலிருந்த அழைப்பு மணியை அழுத்தினாள்.
அடுத்த நொடி நர்ஸ் வந்தார். உத்ராவின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றைப் பார்வையிட்டுக் குறிப்பெடுத்தார்.
“டாக்டர் எப்ப வருவாங்க சிஸ்டர்?” உத்ரா கேட்டாள்.
“ ரவுண்ட்ஸ்ல இருக்காங்க .. வந்திடுவாங்க ..” என்றார்.
பின் உத்ராவின் போன், ஹேண்ட்பேக், ஐடி கார்ட் மூன்றையும் எடுத்து அவளருகில் வைத்தார். “சரியா இருக்கானு செக் பண்ணிடுங்க” என்றுவிட்டுச் சென்றார்.
உத்ரா அவற்றைப் பார்த்தாள். அனைத்தும் சரியாக இருந்தது. அலுவலகத்திற்கு போன் செய்து நிலைமையை விளக்கினாள். மூன்று நாட்கள் விடுப்பு உடனே கிடைத்தது. தேவையெனில் மேலும் விடுப்பு பெறலாம் என்றனர்.
மருத்துவமனையில் வேலை செய்யும் பெண் ஊழியர் உத்ராவின் அறையை சுத்தம் செய்து படுக்கை விரிப்பை மாற்றினாள். பின் உத்ராவையும் கழிவறைக்குப் பத்திரமாக அழைத்துச் சென்று உதவினாள். பின் படுக்கையில் படுக்க வைத்தாள்.
“தேங்க்ஸ்” என்றாள் உத்ரா
கடமையே கண்ணாக “இது எங்க வேலை தேங்க்ஸ் எதுக்குங்க?” என்றாள்.
“உங்க பேர் என்ன?” உத்ரா வினவ
“என் பேர் சாம்பவி. எதுனா தேவைனா கூப்பிடுங்க. வெளியிலதான் இருப்பேன்”
“ம்ம் சரி”
சாம்பவி சென்றதும் கண்களை மூடி உறங்க முற்பட்டாள் உத்ரா. மீண்டும் தனிமையின் வெறுமையில் பழைய நினைவுகள் ஓயாமல் அலைபாய்ந்தன.
சேலம் வந்ததிலிருந்து உத்ரா புது வேலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள். புதிய இடத்தில் பழைய நினைவுகளை அரவே மறந்தும் மரத்தும் போக முயன்றாள்.
இனி தன் வாழ்க்கையில் எந்த ஆணுக்கும் இடம் இல்லை என்னும் முடிவை எடுத்தாள். அதில் ஸ்திரமாகவும் இருந்தாள். பிரபாவை காதலித்து ஏமாந்தது அவளுள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
கடந்த கால கசப்பான நிகழ்விற்கு பிரபா மட்டும் காரணம் அல்ல தன் பங்கும் உள்ளது எனத் தெளிவாகப் புரிந்தது. விட்டில் பூச்சிகள் நெருப்பை அதன் நிறத்தைக் கண்டுத் தீஞ்சுவை பழம் என எண்ணித் தீயைச் சுவைக்க முற்படும். இறுதியில் தீயில் கருகி மடிந்து போகும்.
அதற்கு உண்ணும் பழத்திற்கும் நெருப்பையும் வேறுபடுத்தி காணத் தெரியாது. ஆனால் மனிதன் அப்படி அல்ல அவனுக்குப் பகுத்தறிவு இருந்தும் இப்படி சில நேரங்களில் விட்டில் பூச்சியாய் இறையாகிறான்.
சில தோழிகள் மனதில் நஞ்சை விதைத்தனர். அவர்கள் சொற்படி நடந்து இன்று வாழ்க்கையே நாசமாகிவிட்டது. அவர்களில் சிலர் விட்டில் பூச்சியாய் மாறி வருந்தினர். சிலர் தேங்கி நின்றுவிட்டனர்.
படித்து என்ன பயன்? சுயசிந்தனை இல்லாமல் நடந்து கொண்டோம் என உத்ரா மறுகினாள்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் தன் பிள்ளைகளின் நலனை மட்டுமே லட்சியமாக்கி வாழும் தன் பெற்றோரை வீசி எரிந்தது எத்தகைய தவறு என அனுதினமும் எண்ணி வருந்தினாள்.
இந்த நொடி தான் சென்றாலும் தன்னை வாரி அணைத்து வரவேற்பார்கள். ஆனால் ஏனோ தோல்வியுற்றவளாக அவர்கள் முன் தலைகுனிந்து நிற்க அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.
சிறிது காலம் செல்லட்டும். தன் மனக் காயத்திற்கு மருந்திட்ட பின் செல்லலாம் என மனதை அடக்கினாள்.
இந்த எண்ணங்கள் அவளுக்கு அவ்வப்பொழுது மனம் மற்றும் உடல் சோர்வை ஏற்படுத்தியது.
மனவருத்தங்களை மடைமாற்றவே வேலையில் அதீத கவனம் செலுத்தினாள். இரவு வெகு நேரம் வரையில் அலுவலகத்தில் இருப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள்.
நேற்றைய இரவு எப்பொழுதும் போல இரவு பத்து மணியளவிற்கு வேலை முடித்துக் கிளம்பினாள்.
சில தெருக்கள் அத்வானமாய் இருட்டில் மூழ்கியிருந்தது. சில வீடுகள் உறங்கியிருந்தன. சில கடைகள் மூடுவிழாவை எதிர் நோக்கியிருந்தன. அங்கிங்கென சில மனித நடமாட்டம். சில தெரு விளக்குகள் முக்கி முனகி வெளிச்சத்தை உமிழ்ந்தது.
உத்ரா காரை ஓட்டுகையில் எங்கிருந்தோ இரண்டு தெரு நாய்கள் சண்டையிட்டபடி அவள் காரின் முன் ஓடின.
நாய்கள் மீது கார் படாமல் இருக்க சட்டென காரைத் திருப்பினாள். அங்கு இருட்டில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கார் மேல் அவளின் கார் இடித்து டமார் என்று பெரும் சத்தத்தை ஏற்படுத்தியது.
அவளுக்கு அதிர்ச்சியில் என்ன செய்வதென்றேத் தெரியவில்லை. இடித்த வேகத்தில் அடிபட்டு தலையிலும் கையிலும் ரத்தம் வழிந்தது. வலியில் துடித்தாள்.
எங்கிருந்தோ சிலர் வந்தனர். அவளுக்கு முதலுதவி செய்து அவளின் காரிலேயே அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
மருத்துவமனைக்கு உள்ளே பத்திரமாக அழைத்துச் சென்றனர். பின் கார் சாவியை அவள் கைப்பையில் பத்திரமாக வைத்துவிட்டனர். “பத்திரமா இரு” என ஏதோ சொன்னார்கள். அவள் எதையும் கிரகிக்கும் நிலையில் இல்லை. அவசர சிகிச்சை நடந்தேறியது. பின் மருந்தின் உதவியால் நல்ல உறக்கம்.
தான் இடித்த கார் யாருடையது? தன்னால் பாதிப்பு உண்டான காருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணினாள். ஆனால் எதுவும் முடியவில்லை.
உத்ராவின் நினைவு சங்கிலியை உடைத்தது ஒரு குரல். “ஹாய் உத்ரா எப்படி இருக்கீங்க?” என மருத்துவர் தேவகி அறைக்கு வந்தார். “உத்ரா தானே உங்க பேர்? உங்க கழுத்துல ஐ.டி. கார்ட் இருந்தது” என மென்னகையுடன் கேட்டார். ஐம்பது வயதானவர். பார்வையில் கனிவு.
“ஆமா டாக்டர். நான் உத்ரா” என எழுந்து அமர்ந்தாள்.
மருத்துவர் குறிப்பேட்டில் இருந்த உத்ராவின் உடல்நிலையைப் பற்றிய விவரங்களைப் பார்த்தார்.
மருத்துவர் அவள் காயங்களை பரிசோதித்தார். அடுத்த ஒரு வாரம் மருந்துகளை எடுக்கப் பரிந்துரைத்துச் செய்தார்.
“நீங்க இப்பவே கூட வீட்டுக்கு கிளம்பலாம். பெரிய பாதிப்பு எதுவுமில்ல. நீங்களும் உங்க குழந்தையும் நல்லா இருக்கீங்க.” என்றார்.
இடியாய் அவரின் சொற்கள் இறங்க புருவத்தை சுருக்கி “என்ன டாக்டர்? குழந்தையா ?” என விழித்தாள்.
மருத்துவர் தன் அனுபவம் கொண்டு நொடியில் புரிந்து “நீங்க கர்ப்பமா இருக்கிங்க. தெரியும் தானே?” எனக் கேட்டார்.
“அது .. அது நான் டெஸ்ட் பண்னேன். நெகடிவ் வந்தது” வார்த்தைகள் தந்தியடித்தன.
“ எந்த ஹாஸ்பிட்டல? எப்ப? ”
“வீட்ல பிரெக்னன்சி கிட்”
“சில சமயம் அதுல தப்பா காட்டும். ஆனா நீங்க இப்ப கர்ப்பமாதான் இருக்கீங்க” என்றார்.
உத்ரா இன்னமும் அதிர்விலிருந்து வெளிவர முடியாமல் தவித்தாள்.
“உங்களுக்கே சிம்டம்ஸ் தெரியும் இல்லையா?” தேவகி கேட்டார்.
“ஆம்” எனத் தலையசைத்து வைத்தாள். இனி என்னவென்று சொல்ல?
சிறு வயதில் உத்ராவிற்கு மாதவிடாய் எப்பொழுதேனும் தள்ளிப் போகும். அன்னம் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். தேர்வுகளால் ஏற்பட்ட மன அழுத்தம் அல்லது ஹார்மோன் பிரச்சனை காரணமாக இப்படி ஆகி வாய்ப்பு உள்ளதாக மருத்துவர் கூறி டானிக் வகைகளைக் கொடுத்தார்.
தற்பொழுதம் மாதவிடாய் தள்ளிப் போனதிற்கு அதே போல் காரணமாக இருக்கலாம் எனக் கருதி விட்டுவிட்டாள். அதிலும் கர்ப்பமா என பார்த்தாகியும் விட்டது அதனால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
“டாக்டர் எனக்கு இப்ப குழந்தை வேண்டாம். அபார்ட் செய்ய முடியுமா?” எனச் சட்டெனக் கேட்டுவிட்டாள்.
“அபார்ட் செய்ய சில வரைமுறைகள் இருக்கு. குழந்தையின் அப்பா அதாவது உங்க கணவர் வந்து கையெழுத்து போடணும்” எனத் தொடர்ந்து பல மருத்துவத்துறைச் சார்ந்த சட்ட திட்டங்களை விளக்கிக் கூறினார். பிறகு தங்கள் மருத்துவமனையில் இதைச் செய்வதில்லை என்றும் கூறிவிட்டார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் மருத்துவமனைக்கு தன் அறையிலிருந்தபடி செல்போன் மூலம் கட்டணம் செலுத்தி வீட்டிற்கு செல்ல ஆயத்தமானாள். மருந்துகளை வாங்கிக் கொண்டாள். அனைத்திற்கும் சாம்பவி உதவினாள்.
மருத்துவமனை கேன்டீனிலிருந்து உத்ராவிற்காக காலை உணவு வந்தது. உண்டும் முடித்தாள்.
இறுதியாக மருத்துவமனையிலிருந்து கிளம்புகையில் சக்கர நாற்காலியுடன் “வாங்க” என்றாள் சாம்பவி.
“இல்ல நடந்தே போயிடுவேன் வீல்சேர் வேண்டாம்” என உத்ரா மறுத்தாள்.
இரண்டடி நடப்பதற்குள் தள்ளாடினாள் உத்ரா. சாம்பவி சட்டெனப் பிடித்துக் கொண்டாள்.
“நான் கூடிட்டு போறேன் மேடம்” எனப் பத்திரமாக உத்ராவை சக்கர நாற்காலியில் அமர வைத்தாள். உத்ராவின் பொருட்களை தானே எடுத்துக் கொண்டாள்.
சக்கர நாற்காலியைத் தள்ளிச் சென்றபடி “உங்க கூட யாராவது வந்திருக்காங்களா?” சாம்பவி கேட்க
சட்டென உத்ரா “இப்போதைக்கு நான் அனாதை” என்றுவிட்டாள்.
லிப்ட் பொத்தானை அழுத்தியபடி “என்னை மாதிரினு சொல்லுங்க” என நகைத்தவாறு சாம்பவி பதிலளித்தாள்.
“ரியலி?”
“ஆமா இங்கதான் மேல் மாடியில தங்கி இருக்கேன். உங்களுக்கு எதாவது உதவி தேவைப்பட்டா சொல்லுங்க” என்றபடி தன் போன் நம்பரைச் சொன்னாள். உத்ரா தன் போனில் பதிந்து கொண்டாள்.
உத்ரா சாம்பவியை ஊன்றுக் கவனித்தாள் .
உத்ராவைவிட இரண்டு அல்லது மூன்று வயது சிறியவளாக இருக்கலாம். மருத்துவமனை சீருடையான நீல சேலையும் வெள்ளை பிளவுஸ் அணிந்திருந்தாள். மருத்துவமனை விதிப்படி தலையில் அணைத்து முடியும் வாரி கொண்டை போட்டிருந்தாள். நெற்றியில் சிறிய பொட்டைத் தவிர வேறு அலங்காரம் இல்லை.
லிப்ட் தன் வாயைத் திறக்க உள்ளிருந்தவர்கள் வெளியேறினர். சாம்பவி சக்கர நாற்காலியை லாவகமாக லிப்ட்டின் உள்ளே எடுத்துச் சென்றாள்.
லிப்ட் கிர்ர் எனக் கீழே வந்து நின்று கதவு திறந்தது. சக்கர நாற்காலியை வெளிக் கொண்டு வந்த சாம்பவி “எப்படி வீட்டுக்கு போவீங்க?” எனக் கேட்க
“என் கார்” எனச் சுற்றும் முற்றும் பார்த்தவள் “அதோ இருக்கு” என காண்பித்தாள். அதுவும் அவளைப் போலவே அடிப்பட்டிருந்தது.
“ஆனா இப்ப இந்த நிலைமையில டிரைவிங் முடியுமா? …” சாம்பவி ஆதங்கத்துடன் கேட்க
“ஆமா முடியாது” என்ற உத்ரா
”எனக்கு தெரிஞ்ச அண்ணா இங்க இருக்கார். அவர் கார் டிரைவ் செய்வார். கூப்பிடவா?” சாம்பவி கேட்க
உத்ரா “தேங்க் காட் கூப்பிடு சாம்பவி” அப்பாடா என்றிருந்தது.
சாம்பவி சென்று இரண்டு நிமிடங்களில் ஒரு வாலிபனுடன் வந்தாள். “அண்ணே இவங்க தான்” என உத்ராவைக் சுட்டிக் காட்டினாள்.
அவனும் “நான் கூடிட்டு போறேன் வாங்க அக்கா” என அழைத்து உத்ராவை அவள் வீட்டில் பத்திரமாகச் சேர்த்தான்.
“கார் கதவு டேமேஜ் ஆகியிருக்கு. வேறு எந்த பிரச்சனையும் இல்ல” என்றபடி கார் சாவியைக் கொடுத்தான்.
உத்ரா நன்றியுடன் பணம் கொடுத்தாள். அவன் மறுத்துச் சென்றுவிட்டான்.
கர்ப்பமானது தான் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. ஆயாசமாய் உணர்ந்த உத்ரா அப்படியே உறங்கிவிட்டாள்.
காலிங் பெல் சத்தம் உத்ராவை எழுப்பியது. கதவைத் திறக்க புன்னகையுடன் சாம்பவி நின்றிருந்தாள்.
“அக்கா உங்களுக்கு சாப்பாடு” என நீட்டினாள்.
உத்ராவும் சிரித்தபடி உள்ளே வா என அழைத்தாள்.
“அக்கா இன்னும் ஒரு வாரத்துக்கு உங்களுக்கு மூணு வேலை சாப்பாடும் நானே சமைச்சி எடுத்துட்டு வரேன். நீங்க நிம்மதியா ரெஸ்டு எடுங்க”
ஏனோ உத்ராவிற்கு சாம்பவியைப் பிடித்து போயிற்று “இங்கேயே என்னோடு இருந்திடு சாம்பவி” எனக் கேட்டாள்.
தான் நினைத்த மாதிரி காய்கள் நகருவதை எண்ணி மகிழ்ந்தாள் சாம்பவி. இத்தனை எளிதாக வீட்டிற்குள் புக முடியுமென அவள் எதிர்பார்க்கவில்லை.
தொடரும் …