தேன் நாட்டு பைங்கிளி - 18

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,451
113
Germany
அத்தியாயம்: 18

எதிர்பார்ப்பற்ற அன்பையும், அக்கறையையும், சிறு துளி காமத்துடன் சேர்த்து, பெறுவதும், தருவதும், ஆழ்ந்து அனுபவிப்பதும் தான் காதல்.

ஆஹா... காதல் என்றால் என்னவென்று எத்தனை எளிதாக புரிய வைத்துவிட்டது இந்த வாக்கியம். இதில் புரியாதது என்னவென்றால், அந்தக் காதலைக் கொடுப்பவர் மற்றும் பெறுபவரின் மனநிலை...

நம் வர்மாவிற்கு அவனின் ஆருயிர் காதலி வானதியின் மனநிலை என்னவென்று புரியவே இல்லை. தருவதிலும், அனுபவிக்க வைப்பதிலும் சிரத்தைக் காட்டும் அவள், தான் கொடுக்கும் காதலை ஏற்க மறுப்பது அவனுக்கு ஆயாசமாக இருந்தது. குளிர் பனியாய் இதம் தருபவள், சடுதியில் சுடும் நிலவாய் மாறிப் போகும் மாயமும் புரியவில்லை‌.

பாவம், ஒன்றிற்கு இரண்டு காதல் செய்தும், தேர்ச்சி அடையாத அவனின் காதல் கதையை என்னவென்று சொல்வது?

Light kiss....

அதான் பட்டும்‌ படாமலும், தொட்டும் தொடாமலும் தாமரை இலையில் தடம் பதித்திடாது உருண்டோடி வடியும் தண்ணீரைப்போல் தரப்படும் மெல்லிய இதழொற்றலுக்கு ஆங்கிலத்தில் Light kiss என்று பெயர்.

பெரும்பாலும் காதலர்களுக்குள் இந்த முத்தம் தான் முதல் முத்தமாக அமையுமாம். நான் சொல்லவில்லை இணையத்தில் வந்தது. எவ்வித திட்டமும் போடாது திடீரென பரிமாறப்படும் முதல் முத்தம், உணர்வுகளைத் தீண்டி, நாணத்தை எட்டிப் பார்க்க வைக்கும். அது காதலர்களின் முதல் மொழி.

தன் காதலியிடம் முதல் மொழி பேசிய குழந்தையின் குதுகலத்துடன் மறுநாள் அலுவலகம் வந்தவனின் உற்சாகம் மொத்தத்தையும் உறிஞ்சி எடுத்தார்போல் செய்துவிட்டாள் வானதி.

மனம் நிறைந்த காதலுடன் கொடுக்கப்பட்ட முத்தத்தை நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும், மயிர்கால்களைச் சிலிர்த்து எழுந்து அவனுள் மின்சார பாய்ச்சலை உண்டாக்கியது. இப்போது அவன் உணர்ந்ததைப்போல் முன் எப்பொழுதும் உணர்ந்தே இல்லை. அவனின் உதடுகளைத் தீண்டிச் செல்லும் காற்று கூட அவளின் வெம்மையை உணர்த்திவிட்டுச் சென்றது.

அன்றைய நாளில் எத்தனைமுறை, ரகசியமாக தன் உதடுகளைத் தொட்டுப்பார்த்தான் என்ற எண்ணிக்கையே இல்லை. இதழ் மடித்து உதடுகளை ஈரம் செய்கையில் ஒருவித தவிப்பு.

அதே தவிப்புடன் அலுவலகம் வந்ததவனின் முகத்தின் வெட்கத்தின் சாயல்.

மின்தூக்கிக்காக நின்றிருந்தவளை ஏறிடுகையில் சிறு சங்கட்டம், கூச்சம் என வார்த்தைகளால் விவரிக்க இயலாத பரவசநிலையில் இருந்தான். ஆனால், அவனின் விழிகளை நேருக்கு நேர் பார்த்து காலை வணக்கம் சொன்னவள்,

"நேற்று பார்ட்டி நல்லா இருந்தது." என்று இவனைப் பார்த்தபடி ஆகாஷிடம் சொன்னவள், "நன்றி அண்ணா. ட்ரீட் தந்ததுக்கு." என்றாள்.

அவனும், "நீ தான் ட்ரெயினுக்கு லேட்டாச்சின்னு சீக்கிரமா கிளம்பிட்ட. கூட கொஞ்சநேரம் இருந்திருக்கலாம். நானே உன்னை ட்ராப் பண்ணிருப்பேன். இல்லன்னா இவன் பண்ணிருப்பான். என்னடா பண்ணிருப்ப தான?" என்க,

"நல்லாச் செய்திட்டார்ண்ணா." என்று அவனைப் பார்த்தவாரே முணுமுணுக்க, அவனுக்குப் புரிந்தது அவள் எதைச் சொல்கிறாள் என்று.

"என்ன பண்ணான்ம்மா?" என்று ஆகாஷ் கேட்க,

"மற்றாட்களுட்ட கதைக்க முடியாத காரியம் அண்ணா அது. பப்ளிக்கா சொல்ல ஏலாது. பிறகு கதைப்பம் அதப் பத்தி. இப்ப கதைச்சா உங்கட நண்பன் நம்மளச் சுட்டுப் பொசுக்கிடுவார்." என்று கேலிசெய்ய, இவன் தான் பதறிப்போனான்.

ஆகாஷ், வானதியை விட்டு விட்டு நண்பனிடம் தாவினான், "அப்படி என்னடா பண்ண?" என்று.

"சும்மா இரு டா." என்று அவன் கடியவும், ஆகாஷ் வானதியுடன் திரும்பிக்கொண்டான்.

"இவளுக்கு எதுவும் தோணலயா? வெட்கம், கூச்சம் இந்தமாதிரியான க்ரைடீரியா எதுவும் இல்லையா இவக் கிட்ட..." என்றவனுக்கு நேற்றைய முத்தத்தின் தாக்கம் இப்பொழுதும் அவனைத் தொடர்வதுபோல் இருந்தது. ஆனால் அவளின் முகத்தில் எத்தனை தேடியும் அது கிடைக்காதுபோக தோற்றுப்போன ஓர் உணர்வு.

"நிஜமா அவளுக்கு எந்த பீலிங்ஸ்ஸூம் இல்லையா? எனக்கு மட்டும்தான் இப்படி இருக்கா?" என்ற கேள்வியுடனேயே நிற்க, அவனிடம் தன் ஓரப் பார்வையை வைத்தாள் வானதி.

அவனின் குழம்பிய நிலை அவளுக்குப் பேரானந்ததைத் தந்தது. 'எத்தனை காலம் நான் தவிச்சிருப்பன். இப்ப நீ கிடந்து தவி... நல்லா தவி... ஒரு நாள்ளயே உண்மையான மூஞ்சாறாகிட்டான் காட்டான்...' என்று அவன் முகம் போன போக்கை உள்ளுக்குள் ரசித்துக்கொண்டிருந்தாள். அதை அப்பட்டமாக அவளின் விழிகள் காட்டிக்கொடுத்தன.

அவன் முறைத்தவாறே நிற்க, இருவரும் பேசியபடியே இப்படி ஒருத்தன் பக்கத்தில் இல்லை என்பதுபோல் கடந்து சென்றனர் அலுவலகத்திற்குள்.

மமதி விடுப்பு எடுக்க உள்ளதால், ஒரு நாளில் அனேக முறை இருவரும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அமைந்தன. அவன் கூடவே சுற்றுவாள். ஆனால்... அவள் தான் எதையும் வெளிக்காட்டாது கல்லாய் இருக்கிறாளே! பிறகு எங்கிருந்து காதல் செய்வது.

காதல் செய்ய வேண்டும். அதற்கு அவள் தனியாகச் சிக்க வேண்டும். அவளின் தோழிகள் மற்றும் அட்டையாய் ஒட்ட நினைக்கும் ஜெய்யிடமிருந்தும் அவளைப் பிரித்திழுக்கவேண்டும்.

வேகமாக தன் மடிக்கணினியைத் திறக்க, வானதியின் திரை வர்மா அனுப்பிய குறுஞ்செய்தியைக் காட்டியது,

"Nathi, I need a favour?" என்று.

"என்ன?"

"ஆகாஷ் மமதி கல்யாணம்."

"ஓம்..."

"அதுக்கு பரிசு வாங்கணும்."

"ம்... வாங்குங்க."

"ம்ச்... மமதி பிறந்தநாள் அப்ப நீ குடுத்து பரிசு மாதிரி ஸ்பெஷலான ஒன்ன அவங்க ரெண்டு பேருக்கும் குடுக்கணும் ஆசப்படுறேன். அதுக்கு உன்னோட உதவி வேணும்."

"நான் என்ன செய்ய ஏலும்?"

"உன்னோட செலக்சன் மமதிக்குப் பிடிச்சிருக்கு. சோ... எங்கூட சாப்பிங்க்கு வரணும்." என்று அனுப்பிவிட்டு அவளையே பார்த்தபடி இருந்தான்.

உடனேபதில் வந்திருந்தது, "ஓகே... இண்டைக்கு ஈவ்னிங். ஆஃபிஸ் முடியவும் கேட்ல மீட் பண்ணுவம். ஏழரை மணிக்குள்ள வீட்ட நான் போகணும். அதுக்குள்ள உங்கட செலக்சன முடிச்சிடுங்க. நிறைய நேரம் வேஸ்ட் பண்ணிட்டு திரும்பக் கூப்பிட்டா நான் வரமாட்டன்." என்று அனுப்பிவைக்க, வர்மாவிற்கு தான் சாக்.

அவள் தன்னுடன் தனித்து இருக்கவோ தனிமையில் சந்திக்கவோ மாட்டாள். அழைத்தால் கூட 'வர மாட்டன்.' என்று முரண்டு பிடிப்பாள் என்று நினைத்திருக்க, வருகிறேன் என்றது அதிர்ச்சி தான்.

அதை விட பேரதிர்ச்சி, "ம், பைக்க எடுங்க." என்று அவனின் இடையில் கரம் பதித்து ஏறி அமர்ந்துகொண்டு செய்த பயணம்.

கண்ணாடி வழியே தெரிந்த பெண்ணவளை ரசித்தவாறே ஆரம்பித்த அது, மால் ஒன்றில் நிறுத்தும் வரை தேவலோகத்தில் இருப்பது போன்று உணர வைத்தது அவனை.

இறங்கியதும், அவனின் முழங்கைக்குள் தன் கரத்தை அடைத்துக்கொண்டு, கடைகளை வாய்ப் பார்த்தபடி நடந்தாள். விரலோடு விரல்கள் பின்னியிருந்தால் கூட அத்தனை நெருக்கும் உண்டாகியிருக்காது. சங்கிலிபோல் இருவரின் முழங்கைகளும் கோர்த்துக் கொண்டு நடந்ததும், தன் கரம் அணைத்திருக்கும் அவளின் வெம்மையான தேகச் சூடும், நிரந்தரமாகக் கிடைத்து, இப்படியே முடிவில்லா நீண்ட நெடி பயணம் செய்தால் என்ன என்று தோன்றச்செய்தது.

ஒரு தங்க நகைக் கடைக்குள் அழைத்துச் சென்றாள். வரவிருக்கும் காதலர் தினத்திற்காகவும் விதவிதமான கலெக்சன்கள் இருந்தன.

"இது சரியா இருக்குமா?" என்று ஒரு ஜோடிக் காதணிகளை அவளின் காதில் வைக்க, கண்ணாடியின் அவள் முகம் பார்த்தான். குடை போல் விரிந்த ஜிமிக்கி, கன்னம் தொட்டு ஆடிய ஊஞ்சலாட்டத்தில் இவனுக்குத் தலைசுற்றல் வந்தது. தோடு, பெண்ணவளின் மதி முகத்திற்குத் தனிப் பெருமை சேர்க்க, விழிகள் அவளைவிட்டு நகர மறுத்து அடம்பிடித்தன.

அவனின் முகம் பார்த்தவள்,
"கம்மல், நெக்லஸ் எல்லாம் பெண்கள் சமாச்சாரம். ரெண்டு பேருக்கும் பொருத்தமா ஏதாவது ஒரே டிசைன்ல வாங்குவம்." என்றவள், கப்பிள்ஸ் கலெக்சனுக்குச் சென்றாள். கூடவே அந்த ஜிமிக்கியை அசையோடு வருடிவிட்டு நகர்ந்தாள்.

ஒவ்வொரு ஃப்ரெஷ்லெட்டையும் அவள் தன்னுடலில் மட்டுமல்ல அவனையும் அணியச் சொல்லி, இருவரின் கரத்தையும் அருகருக்கே வைத்துப் பார்த்து தேர்வு செய்த அழகிற்காகவே கடையை வாங்கிக் கொடுக்கும் ஆவல் மேலோங்கியது வர்மாவிற்கு.

ஆனால், வாங்கிக் கொடுத்தால் அவள் வாங்குவாளா என்ன!!

இதற்கு முன் டி-சர்ட்டிற்காக அவளைக் கடை கடையாக கூட்டிச்சென்றானே அதில் உண்டான அனுபவம். ஒரு ஜூஸ் குடித்தாளே அவளுக்கான பணத்தை அவள் தான் தருவாள். அவன் தருகிறேன் என்றாள் சண்டை பிடிப்பாள்.

அதுவே, அவனிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதைப் புரியவைத்தது. அந்த எதையுமில் அவனின் காதலும் அடக்கம்.

ஆகாஷ் மமதி என இருவரின் பெயர்களையும் அச்சிட்டு கம்பில்ஸ் பிரேஸ்லெட்டை வாங்கிக்கொண்டு அவள் சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே மின்சார ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்துவிட்டான்.

ரயிலுக்காக காத்திருந்த சில நொடிகளில், ஒரு சிறிய டப்பாவை அவனிடம் நீட்டினாள் வானதி.

"என்னதிது?" என்று புருவம் சுருக்கியவனின் கையில் ஒப்படைத்து,

"ஓப்பன் செய்ங்க." என்றாள் கட்டளையாக. நகைக்கடையின் பெயரை அந்த டப்பாவில் பார்த்ததும்,

"எனக்கா?" என்ற கேள்வியுடன் அவளை ஏறிட,

"ஓம்... இவ்வளவு காலமா நான் சென்னைல இருந்திருக்கன். ஆனால் ஊரைச் சுற்றி பார்க்குற ஆசை வந்ததில்லை. உங்கட தயவால் ஊரைப் பவணி வந்திட்டன். அதுக்கானப் பரிசு."

"ஓ.... இந்தப்‌ பல்லக்கு மகாராணியெல்லாம் பல்லக்குத் தூக்குறவனுக்குத் தருவாங்களே! சன்மானம்... அது மாதிரியா!" என்று கேலியாக அவளிடம் கூறினாலும் கைகள் தன்னால் அந்த டப்பாவைத் திறந்தன.

அதில் வெள்ளியில் ஒரு சங்கிலி இருந்தது.

"வாவ்... சென்னைய சுத்திக் காட்டுனதுக்கே இந்தப் பரிசுன்னா! ஒட்டு மொத்த உலகத்தையும் சுத்திக் காட்டினா மகாராணி என்ன தருவீங்க!" என்று குறும்புடன் கேட்க,

"உங்கட வைஃப்ப கூட்டிக் கொண்டு போங்க. அவங்க தருவாங்க... உங்களுக்கு வேண்டியதை." என்று திரும்பியவளின் கரம்பற்றி நிறுத்தியவன்,

"வைஃப் கிட்டத் தான் கேக்குறேன். என்ன தருவ நதி?" என்று ஆசையாகக் கேட்க,

"திரும்பவும் ஆரம்பிக்க வேணாம்." என்றவள், அவனின் கையில் உள்ளதை வாங்கி அவனின் கழுத்தில் அணிவித்தாள்.

மார்பில் தலைசாய்ந்தால், ஆடவனின் இதயத்துடிப்பைச் செவிகள் உள்வாங்கிக் கொள்ளும் அளவிற்கு பெண்ணவளின் உயரம் இருந்தமையால், வர்மாவின் கழுத்தில் அணிவிக்க அவள் சிரமப்படவில்லை.

ஆனால் கொக்கி கலண்டு விடாது இருக்க, டைட்டாக மாட்டுகிறேன் என்று எக்கி, பற்களால் கடிக்க முயல, நிலை தடுமாறி அவனின் நெஞ்சில் சாய்ந்து நின்றாள்.

பஞ்சென மோதிய அங்கங்களின் மென்மையை இன்னும் உணரவேண்டி, இடையை இறுக்கிப் பிடித்தவன், பெண்ணவளின் வாசம்பிடித்து அணைப்பை முழுமையாக உணர்ந்து, அவளைத் தழுவி எடுத்து, தன்னுள் புதைத்துக் கொள்ள முடியாதவாறு பொது வெளியில் இருந்ததால் கண்களை மூடித் திறந்து தன்னுள் எழுந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

அவனின் நிலை புரியாது, "சாரி… ஸ்லிப் ஆகிட்டன். இதக் கலட்ட வேணாம்." என்று இடையில் இருந்த அவனின் கரத்தை விலக்கிவிட்டு ரயில் ஏறிச்சென்றவளைப் பார்த்தபடி பிரம்மை பிடித்தார் போல் சில நொடிகள் நின்றவன், மீண்டும் அதே நகைக் கடைக்குச் சென்றான் அந்தக் குடை ஜிமிக்கியை வாங்கிக்கொண்டான்.

அவளுக்காகவென வாங்கி விட்டான். ஆனால் அதை அவளிடம் சேர்த்தானா? ம்… சேர்த்தான் தான்.

ஆனால் அவளோ, “எனக்கு இதெல்லாம் வாங்கித் தர உங்களுக்கு உரிமையும் இல்ல. உறவும் இல்லை.” என்று அவனிடம் திரும்பித் தந்துவிட்டாள்.

‘நீ எந்த உரிமையில் எனக்குப் பரிசு தந்தாய்?’ என்றதற்கு,

“பெட்ரோலுக்கு செலவு செஞ்சத திரும்பித் தாராதா நினைச்சு.” என்றுவிட்டு செல்ல, அவனுக்குத் தான் மனப் புளுக்கம் உண்டானது.

எந்த உறவும் இல்லையா!! அதை ஏற்படுத்த நான் தயாராக இருக்கும் பொழுது ஏற்கும் நிலையில் இல்லை என்று வெட்டி விடுபவளாள் ஆத்திரம் உண்டானது.

______

கிட்டத்தட்ட சூரியன் உச்சி வானை அடையும் தூரத்தில் பாதியைக் கடந்திருந்தது, அவன் மைதானத்தை அடைந்த போது. அங்கு சிறுவர்கள் பலருக்கு பல்டி அடித்து பயிற்சிகொடுத்துக் கொண்டிருந்தான் கரிகாலன்.

கரிகாலனின் அகாடமியில் வர்மாவா?

ஆம்...

வார இறுதி நாள்களில் பயிற்சி கொடுக்கவும், விளையாடவும் வருகிறான்.

வானதி மயங்கி விழுந்தாளே… அன்றே, ஆகாஷ் கரிகாலனைத் தேடிவந்தான், வானதிக்கு ஏற்பட்ட விபத்தைச் சொல்ல. கூடவே தன் திருமணத்திற்கு அழைக்க, அழைப்பிதழைத் தூக்கிக் கொண்டு வர்மாவையும் இழுத்துக்கொண்டு வந்திருந்தான்.

அங்கு மண் தரையில், வண்ணவண்ண நிறங்களில் பிளாஸ்டிக் முக்கோணங்கள் வைக்கப்பட்டிருந்தன. குறுக்கும் நெடுக்குமாய் சில கோடுகளும் எண்களும் வரையப்பட்டிருக்க, சிறுவர் பலர் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தனர்.

ஒன்றாம் எண் வட்டத்தில் இருந்து இரண்டாம் எண் வட்டத்திற்கு இடக்காலை வைத்து, மூன்றாம் எண்ணுக்குச் செல்வது எனத் துடிப்புடன் அவர்கள் இயங்க, வர்மாவிற்குத் தன் கல்லூரி காலங்கள் நினைவு வந்தது.

வர்மா சிறந்த டிபன்டர். களத்தில் அவன் இருந்தால், யாராலும் புள்ளிகளுடன் திரும்பமுடியாது. அவனின் பிடியில் வலு இருக்கும். தன்னைவிட பலமானவரையும் சாய்க்கும் லாவகம் இருக்கும். உடும்பிடம் இருந்து விடுபதற்கு சமம்.

ஆனால் அவன் விளையாடுவதை விட்டு ஆறேழு ஆண்டுகளாகிறது‌. அவனின் முன்னாள் காதலியுடன் ஊர் சுற்றநேரம் கிடைப்பதில்லை என்பதால் நிறுத்தியிருந்தான்.

அப்பொழுது மைதானத்தைப் பார்த்தும் உடல் முறுக்கேறியது. கால்கள் பரபரத்தன. மனம் அவர்களுடன் சேர்ந்து களத்தில் இறங்கச்சொல்லி உந்தியது.

அதற்கு ஏற்றார்போல், ஒரு போட்டி நடந்துகொண்டிருந்தது. கரிகாலன் நடுவில் நின்றுகொண்டிருந்தான்.

ஓர் அணியில் ஐந்து பேர் இருக்க, எதிரில் மூன்று பேர்தான் இருந்தனர். அந்த மூவரும் சிறுவர்கள் போன்ற மெல்லிய உடல்வாகுடன் இருக்க, ஆஜானுபாகுவான எதிர் அணியிலிருந்து ஒருவன் ரைடுக்காக வந்து, ஒருவரை ஆட்டமிழக்கச் செய்துவிட்டு சென்றான்.

"காலப் பிடிக்கும்போது கணுக்காலத் தான் பிடிக்கணும். இல்லன்னா இப்படித்தான் ஈசியா உருகிட்டுப் போய்டுவான். டாக்கில் பண்ணும் போது பிடி ஸ்டாங்க இருக்கணும்." எனக் கரிகாலன் கத்த,

"டிபன்ஸ் பத்தி உனக்கு என்ன தெரியும்னு நீ இவங்களுக்குச் சொல்லிக் குடுத்திட்டு இருக்க?" என நக்கலாக கேட்டபடி கரிகாலனை எதிர்கொண்டான் வர்மா.

அவனை ஏற இறங்க பார்த்தவன், "இவனுக்கு எல்லாம் தெரியுமாக்கும்! ஃபீல்ட் அவுட் ஆகி பல வர்ஷமானவன்லாம் பேசவே கூடாது. பெஞ்சுல உக்காந்து வேடிக்க மட்டும் பாக்கணும்." என்று கரிகாலன் சத்தமாகவே முணுமுணுக்க, வர்மா மீதம் இருந்த இருவரை அழைத்தான்.

அவர்களின் காதில் எதுவோ சொல்லி, தோளில் தட்டிக்கொடுத்து அனுப்பியும் வைத்தான்.

இம்முறை ரைடுக்காக வந்த மலையைச் சாய்த்து வெற்றிப் புள்ளிகளைச் சிறுவர்கள் எடுக்க, கரிகாலனின் பார்வையில் மெஞ்சுதல் இருந்தது.

அதில் சிறுவர்கள் வெற்றி பெற்று ஆர்ப்பரிக்க, ஏனோ அது மனத்திற்கு இதமாய் இருந்தது. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அங்கு வரத்தொடங்கினான்.

இப்பொழுதும் அங்குதான் வந்துள்ளான்.

அரும்பிய வியர்வையைத் துணிகொண்டு துடைத்தபடி தண்ணீர் பாட்டிலைத் திறந்தவனின் பார்வை, அங்கு பார்வையாளர் அரங்கில் நோட்டும் பென்சிலுமாக அமர்ந்திருந்த வானதியின் மீது அழுத்தமாகப்பதிந்தது.

கம்மலைத் திருப்பித் தந்ததால் வர்மாவிற்கு வானதியின் மீது சிறு கனல் இருந்தது. அது அவனின் பார்வையில் வெளிப்பட,

அவனின் பார்வையை உணர்ந்து அவளும் அவனை நிமிர்ந்துபார்த்தாள். பின் அலட்சியமாய் இதழ் வளைத்துக் கொண்டு, வரைவதில் கவனமானாள். வழமைபோல் இவனைக் கண்டுகொள்ளவில்லை.

அது அவனுக்குள் கோபத்தை உண்டாக, வேகமாக அவளை நெருங்கியவன் வரைந்து வைத்திருந்த காகிதத்தைக் கசக்கி எறிந்தான்.

"என்னை நிம்மதி இல்லாம பண்ணிட்டு... நீ மட்டும் சந்தோஷமா வரைஞ்சு தள்ளிட்டா இருக்க!" என்று காட்டமாக கேட்க,

"நான் என்ன செய்தன்?" என்று பரிதாபமாகக் கேட்டாள்.

"தெரியாத மாதிரி நடிக்காத டி. நான் பேசாட்டிக்கு நான டி இருந்தேன். உத்து உத்து பாத்து, hate செய்றேன்னு சொல்லி, அப்றம் லவ் பண்ணேன் சொல்லி, எங்கூட பைக்ல வந்து, கைக் கோர்த்து நடந்துன்னு, என்னைப் பைத்தியக்காரனாக்கிட்டு இருக்குறது நீ தான்." என்றவன் சொன்னது என்னமோ முழுக்க முழுக்க உண்மை. அவன் உண்டு அவன் வேலையுண்டு என்று இருந்தவனின் சமநிலையை உடைத்துவிட்டு ‘என்ன செய்தேன்?’ என்று அவனையே கேள்வி கேட்பதில் என்ன நியாயம் உள்ளது.

இருவரைச் சுற்றியும் ஆள்கள் கூடி நிற்க, விழிகளை உருட்டி அவர்களைக் கண்டவள், வேகவேகமாக தன் உடமைகளை எடுத்துக் கொண்டு இடத்தைக் காலி செய்யமுயன்றாள்.

"எனக்கு பதில் சொல்லிட்டு போடி." என்றபடி பாதையை மறித்து கரம்பற்றி இழுக்க,

"எந்தங்கச்சிட்ட வம்பு பண்ணா பதில் நாந்தான் சொல்லவேண்டி இருக்கும்.” என்றபடி வந்த கரிகாலன்
வர்மாவிடம் சிக்கியிருந்த கரத்தை எடுத்துவிட்டு, தன்னுடனேயே அழைத்துச் சென்றான்.

‘உனக்கு ஒன்னும் கிடையாது போடா…’ என்பது போல் சென்ற, அந்த அண்ணன் தங்கை இருவரின் மீது பொங்கி வரும் ஆத்திரத்துடன் பார்த்தபடி நின்றான் வர்மா.
 
Last edited:

Author: நிதனிபிரபு
Article Title: தேன் நாட்டு பைங்கிளி - 18
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sathiyags

Well-known member
Apr 18, 2026
307
265
63
India
அவன் பேசாமல் இருந்தவனை தூண்டிவிட்டு இப்படி செய்யலாமா வானு இல்லை வாலு