தேன் நாட்டு பைங்கிளி - 21

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,453
113
Germany
அத்தியாயம்: 21

பட்டுடலில் நிற்காது பட்டென சரிந்து சரிந்து விழுந்தது அந்தப் புடவையின் முந்தானை.

"இப்புடி வளுவளுத்தா நான் எப்புடி பிடிச்சி வைக்கிற? விசரா கிடக்கு எனக்கு." என்று முணுங்கியபடியே புடவைக்கு மடிப்பு வைத்து குத்தூசியால் கட்டிவைத்தாள்.

"உஃப்... முடிச்சிட்டன்." என ஆசுவாச மூச்சு விடும் சமயம், "வானுக்கா ரெடியா?" என்றபடி உள்ளே வந்தான் பார்த்திபன்.

"ஓம்... ஓம்... நான் ரெடி." என்றவளின் கையில் சிறிய டப்பாவை வைத்து,

"அம்மா இதைப் போட்டுக்கச் சொன்னாங்க." என்றுவிட்டு ஓடிவிட, திறந்து பார்த்தவளுக்குக் கோபமும், சிரிப்பும் ஒருங்கே வந்தது.

அது ஆண்டாள் தந்தது அல்ல வர்மா கொடுத்தனுப்பியது. வர்மா வானதியின் மனத்தில் இடம் பிடித்தானோ இல்லயோ பார்த்திபனைக் கவிழ்த்தி விட்டான். பார்த்திபன் கரிகாலனுக்கு நிகரான வாஞ்சையுடன் வர்மாவிடம் பழகினான்.

பார்த்திபன் பொய் சொல்லிச் செல்வது புரிந்துபோக, வேகமாக பெட்டிக்குள் இருக்கும் குடை ஜிமிக்கியை வெளியே எடுத்தாள்.

இந்த ஜிமிக்கியும் அவளை விடாது கருப்பாய்ப் பின் தொடருகிறது. இவளும் விடாது அவனிடம் திருப்பிக்கொடுத்துக் கொண்டே இருக்கிறாள்.

"ஒரு தடவை போட்டு காட்டீட்டு, திரும்பி குடுத்திடு நதி." என்று கெஞ்சியும், அந்தத் தங்க தோடு பந்தாய் மாறி உருட்டி விளையாடப்பட்டது.

"ஒரு தடவை தான். பிறகு தந்துருவன். வாங்க மாட்டன் எண்டு அடம் பிடிக்க கூடாது." என்று தன் முன் இல்லாத வர்மாவிற்கு எச்சரிக்கை கொடுத்துவிட்டு, காதில் கிடந்த கடுகளவு தோடைக் கலட்டிவிட்டு, குடை ஜிமிக்கியை அணிந்துகொண்டாள்.

"ம்... வடிவாத்தான் இருக்கு. இப்ப இதை அந்தக் காட்டான் மட்டும் கண்டால் என்ன செய்வான்?" என்று தொங்கிய தொங்கட்டானைச் சுண்டிவிட்டு, ரகசியமாகச் சிரித்தவள், தன் அலங்காரத்தைக் கண்ணாடியில் காண்கையில் வர்மா தான் தெரிந்தான்.

குறுஞ்சிரிப்புடன் 'சூப்பர்...' என விரல் மடக்கி, புருவம் உயர்த்திக் காட்டிய மாயபிம்பம், 'எம்முன்னாடி வந்து நின்னா! என்ன செய்வேன்னு தெரிஞ்சிடும். வாயேன்.' என்க, கன்னங்கள் மட்டுமல்ல மொத்த தேகமும் சிவந்து போனது. கட்டுக்கடங்காது அவனிடம் செல்லத் துடிக்கும் மனத்தை மிரட்டி வைத்தவள், கிளர்ந்துகிடக்கும் தன் உணர்வுகளை அடக்கி, தலையை உலுக்கிக்கொண்டு வெளியே வந்தாள்.

அது ஒரு வீடு... இல்லை திருமணம் மண்டபம்... இல்லை விடுதி... யாருக்கு என்ன விதத்தில் வேண்டுமோ! அப்படியே எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் அங்கு நடப்பது destination wedding. செந்தூர் தனது மகளுக்காக ஊட்டியில் ஒரு ரிசிட்டை புக் செய்து, குடும்பத்தினர் அனைவரையும் அங்கு அழைத்து வந்துள்ளார்.

Family vacation+wedding.

எங்கு திரும்பினாலும் பச்சை நிறத்திற்கும் மலைப் பாறைக்கும், ஆழமான பள்ளத்தாக்கிற்கும், பறவை இரைச்சலுக்கும் பஞ்சம் இல்லாத குளுகுளு இடம். அதுவும் அருவிக்குப் பக்கத்தில்.

அனைத்தும் கான்ட்ராக்டர் வசம் ஒப்படைக்கப்பட்டதால் பெரிதாக எந்த வேலைகளும் இல்லை. பொறுமையாக, நிதானமாக, மகள் மணக்கோலத்தில் நிற்கும் அழகை அவதானிக்கலாம். மணமக்களில் சின்னச் சின்ன பாவனைகளையும் ருசித்து, நடுநாயகமான மணமக்களுக்கு ஆசிகளை அள்ளி வழங்கினால் மட்டும் போதும்.

சங்கீத் என்ற பெயரில் ஆட்டமும் பாட்டமுமாக இருக்க, வெண்மதி தன் சின்ன அண்ணன் குடும்பத்தைவிட்டு நகரவே இல்லை. பார்த்தபனுடன் கலகலத்தபடி தேங்கிவிட்டார். இல்லையேல் கொத்தித் தின்ன காத்திருக்கும் ஈஸ்வரி சகோதரிகளிடம் மாட்டியிருப்பார்.

இந்தத் திடீர் அண்ணன் பாசத்திற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள ஈஸ்வரி சகோதரிகள், வெண்மதி தனியாக சிக்கும் சமயத்திற்காகக் காத்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

கரிகாலனுக்கு அன்றைய தினம் ஒரு முக்கியமான போட்டி இருந்ததால், காலை நடக்கவிருக்கும் திருமணத்தில் பங்கேற்பதாகச் சொல்லிச் சென்றான்.

புடவையின் முந்தானையைச் சரி செய்துகொண்டு வந்த வானதியின் விழிகள் கூட்டத்தில் வர்மாவைத்தான் தேடின.

வெளியே, புல் தரையில், ஓரமாக இருந்த கல் மேடையின் நுனியில் அமர்ந்து ஃபோனை நோண்டிக்கொண்டிருந்தான். அவனுக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. அதிலும் பந்தா காட்டும் ஈஸ்வரி சகோதரிகளைப் பார்க்கவே முடியவில்லை. வானதிக்காகத்தான் வந்திருக்கிறான். ஆனால் அவளின் பாரா முகம், கனத்தது இதயத்தை.

இதுவரை தன் காதலை அவள் ஏற்கவில்லை. இனியும் ஏற்பாள் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல குறையத் தொடங்கியிருந்தது. என்ன பிழை செய்தான் என்று தெரிந்தால் தானே அதைச்‌‌ சரி செய்வான். எதைக் கூறாது, விலக்கி வைப்பது அவனைச் சோர்வடையச் செய்திருந்தது.

ஆனால், வானதி உற்சாகமாக இருந்தாள். வழக்கத்தைவிட பெருமகிழ்ச்சி கூத்தாடியது அவளின் வதனத்தில்.

வில்லன் என்று சொல்லி அன்று தந்துவிட்டுச் சென்ற முத்தம் மட்டுமல்ல, அன்றைய நாளுக்குப்பின் அவனிடம் காணப்பட்ட அநேக மாற்றங்களும் வானதிக்குத் தித்திக்கத்தான் செய்தது. தினமும் வீட்டிற்கு வந்தான். பார்த்திபன் வானதியின் சண்டையில் பார்த்திபனின் பக்கம் நின்று வானதியைக் கடுப்பேற்றினான். கரிகாலனுடன் மல்லுக்கு நின்றான். ஆண்டாளைச் பனிக்கட்டி, அவன் தான் அவளை பைக்கில் அழைத்து செல்வான் அலுவலகத்திற்கு.

"ஏன் சிங்கிள் சைடா உக்காருறா நதி? டபுள் சைடும் கால் போட்டு உக்காரு. சுடிதார் தான போட்டிருக்க!" என்று தினமும் சொல்வான். ஆனாலும் அந்த நெஞ்சழுத்தக்காரி,

"கட்டிக் கொண்டு வாரதுக்கு அது தான் வசதியோ! ஒண்டு வேணாம்." என்றுவிட்டு ஒற்றைப் பக்கமே அமர்ந்துகொள்வாள்.

தோளில் கிடக்கும் அவளின் கையை எடுத்து இடையைச் சுற்றி கொள்பவன், வளைத்து வளைத்து அவளுக்குப் பயம் காட்டி ஓட்டி, முதுகில் அடிகளையும் வாங்கிக் கொள்வான்.

அலுவலகத்தில் அவ்வபோது அனுமதியற்று அவன் தரும் முத்தத்தின் கிறக்கத்துடனும், யாருமறியாது அவன் கண் சிமிட்டுவதால் உண்டாகும் கன்னச் சிவப்புடணும் உற்சாகமாக வளம் வந்தாள்.

அவள் பார்த்து ரசித்து காதல் செய்த வர்மா துறுதுறுவென இருப்பான். எவரின் பேச்சிற்கும் காது கொடுக்காத அலட்சியவாதி. அழுத்தமான குரல், மிரட்டும் போது உயர்ந்து போகும். கோபம் அதிகமாவே வரும். இப்பொழுது பழைய வர்மாவாக அவளின் கண்களுக்குத் தெரிந்தான். அது அவளுள் இருந்த காதலுக்கு உயிர் கொடுத்தது.

ஆனாலும் ‘எனக்கு உன்னில ஒரு ஃபீலிஸ்ஸும் இல்ல.’ என்று பிடிவாதமாய், ஜிமிக்கியை அணிந்து காட்டமாட்டேன் என்றதில் அவளுடன் பேசாது கோபமாகிப் போனான் வர்மா.

"பாவம் அந்தக் காட்டான். பல காலமா மூஞ்சூறாட்டம் முகத்தைக் காட்டிக்கொண்டு திரியுறான். கேட்டால், வில்லனாக்கி விட்டதே நீ தான் எண்டு குறையா கதைப்பான்." என ஒரு மனம் அவனைப்‌ பரிகாசம் செய்து சிரிக்க,

"நீ அவனைப் படுத்திய பாட்டுக்குச் சிரிப்பு ஒண்டு மட்டும்தான் குறைச்சல். இரக்கமே கிடையாதா வானு? நல்ல வளந்த ஆண் பிள்ளையிடம் சிடுசிடுப்பைக் காட்டுறாய், அவன்ட கெஞ்சலைக் கேட்டு ரசிக்காய். அவன்ட காதல உன்ர விளையாட்டு சாமானாய் போட்டு உதைக்காய். இதையெல்லாம் செய்யும் உன்ர மனசு பாறை தான். ஈரமற்ற கருங்கல்." என்று மற்றொரு மனம் அவளைச் சாடி அவனின் சிரித்த முகத்தைப் பார்க்கச்சொல்லி தூண்டியது.

ஆதலால், மெல்ல சிரிப்புடன் மேடையின் மற்றொரு நுனியில் அமர்ந்தாள். சில நொடிகள் சென்றிருக்கும். அவன் ஏறெடுக்கவில்லை என்றதும்,

"ம்க்கூம்..." எனத் தொண்டையைச் சொரும, விரல்கள் ஒரு நொடி நின்றன. பின் அதன் வேலையைச் செய்ய,

"காட்டானுக்கு... கோபமா?" என்றபடி இடைவெளியைக் குறைத்துக் கொண்டே நெருங்கி வந்தாள்.

“கோபம் குறைய என்ன செய்யணும்?” என்று அவனின் தோளை இடிக்க, அவளின் வாசம் நாசியை நிறைத்தது. தன்னைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டி, ஃபோனை அணைத்து வைத்துவிட்டு, எழுந்து நின்றான் வானத்தை வெறித்தபடி.

"நான் வச்ச பெயருக்கு ஏத்தா மாதிரித்தான் இப்ப உங்கட மூஞ்சு இருக்கு. மூஞ்சூறு காட்டான்." என்றதும், தன் உணர்வுகளுடன் விளையாடும் அவளின்‌ மீது கோபம் வரப்பெற்றவன், சண்டை போடும் உத்வேகத்துடன் வேகமாகத் திரும்ப, அவள் சற்று நேரத்திற்கு முன் காலி செய்திருந்த இடத்தை அடைந்து, அடங்க மறுத்து பறந்து கொண்டிருக்கும் முடிக் கற்றைகளை, காது மடலில் சொருகி வைத்து, தொங்கட்டானை அவனுக்குத் தெளிவாகக்காட்டினாள்.

உறைந்து போய் நின்றான் அருள்மொழிவர்மன். காதில் மாட்டியிருந்த ஜிமிக்கியின் ஆட்டத்தால் மட்டுமல்ல அவளின் பக்கவாட்டுத் தோற்றத்திலும் சொக்கித் தான் போனான். முழுதாக மறைக்க முடியாத இளமையின் வனப்பும், புடவைக்கும் கச்சைக்கும் இடையே கீற்றலாய், பிறை நிலவை நகல் எடுத்து ஒட்டி வைத்தார் போலிருக்கும் இடையும், மடியில் கரம் கோர்த்து முதுகுத் தண்டு விடைக்க அமர்ந்திருந்த விதமும், கருந்திராட்சை விழிகளை ஓட விட்டு அவனை ஏறிட்ட விதமும், தூரத்தே தெரிந்த மின் விளக்குகளின் மங்கிய வெளிச்சத்தில் தெளிவுற தெரிந்தது. அது மங்கையைத் தேவலோகத்து அப்சரஸ்ஸாகக் காட்டியது.

போதை கொள்ள வைக்கும் அழகுடன் இருந்தவள், மோகனப் புன்னகை வீசியபடி, விழிகளால் அவனைக்‌ கள்ளப்பார்வை பார்த்துக் கொண்டிருக்க, தள்ளாடியபடியே அவளின் முன்வந்து நின்றான். பெண்ணுடலைத் தீண்டாது இரு காதிலும் தொங்கிக் கொண்டிருக்கும் கம்மல்களைக் கரத்தில் ஏந்தினான். அத்தனை அழகாக இருப்பதுபோல் தெரிந்தது. எல்லாம் அவளின் காதில் இருப்பதால்.

"வடிவா இருக்கா?" என்று கேட்டவளின் கந்தரத்தில் கரம் பதித்து, தாடையை உயர்த்தியவன், காது மடல்கள் இரண்டிலும் இதழொற்றி எடுத்தான். அகன்ற நெற்றியில் விளையாடிக் கொண்டிருந்த சிறு‌சிறு கற்றைகளை ஊதி ஓரம் போகச்செய்து, தன் உதடுகளை மெல்லியதாக பொருத்தி எடுத்து, மூக்கின் நுனியால் அவளின் நாசியை இடைவெட்டி பதில் தந்தான். சின்னதாய் அதற்கும் ஒரு முத்தமிட்டான். தேன் வடியின் இதழ்களுக்குத் தான் ஆழ்ந்த முத்தம் சொந்தமென்பது போல் ஆவலுடன் நெருங்க, அவனைத் தள்ளிவிட்டு விட்டு, எழுந்துசென்றாள்.

"நதி... நீ எவ்ளோ அழகா இருக்கன்னு சொல்லிட்டு இருக்கேன். பாதிலயே எழுந்து போற." என்க,

"மீதி தேவையில்ல. உங்களுட்ட போய் நான் கேட்டன் பாருங்க. என்னை அடிக்கோணும்." என்றுவிட்டு வேகமாக உள்ளே சென்றாள்.

அவனும் அவளைத் துரத்திப்பிடித்து, இடையோடு கைக் கொடுத்து இழுத்துச் சென்றான்.

“என்ன செய்றீங்க நீங்க?” என்றாள் மெல்லிய கோபத்துடன்.

“என் கோபம் குறைய என்ன செய்யணும்னு கேட்டேல.”

“அதுக்கு?” என்றவளின் முகம் பார்த்து,

“எதுவும் பேசாம எங்கூட வா.” என்று தன் இதழில் விரல் வைத்தவன், நேராக அவளை அழைத்துச் சென்றது ஆண்டாளின் முன் தான்.

"அத்தை பக்கத்துல ஒரு ஃபால்ஸ் இருக்கு. நான் வானதிய கூட்டீட்டு போறேன்." என்க, ஆண்டாள் சற்று அதிர்ந்து விட்டார்.

"அது... அது..." என்று அவர் கணவனைப் பார்க்க, சகாயமும் இடையணைத்து நிற்கும் வர்மாவைத் தான் பார்த்தபடி இருந்தார். வானதி சங்கடத்துடன் கையை எடுக்கப் பார்க்க, அது முடியாது போனது. இருவரும் பேசாது இருக்க,

"லேட் பண்ணிடாத அருளு. சீக்கிரமா கூட்டீட்டு வந்திடு. நேரங்கெட்ட நேரத்துல குளிர்ல உலாத்த வேண்டாம்." என்று மகனிடம் சொல்லி அனுப்பி வைத்தார் வெண்மதி.

வானதி நகராது இருக்க, அவளைக் கிட்டத்தட்ட தூக்கிக்கொண்டு சென்றான். செல்லும் இருவரையும் பார்வை மாற்றாது தம்பதியினர் பார்க்க,

"பத்திரமா பாத்துப்பான் ண்ணா.” என்றார் வெண்மதி.

"இல்ல ம்மா... இது சரியா இருக்காது. ராத்தி நேரத்துல, ரெண்டு பேரும் ஒன்னா… அதுவும் தனியா... தப்பாகிடும்… வேண்டாம்... வானும்மா..." என்று சகாயம் உரக்க அழைக்கும் முன்,

"என்ன தப்பாகிடும். நாளைக்கு கட்டிக்கப் போறவளத் தான கூட்டீட்டு போறான். யாரு என்ன பேசிடுவா?" என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர்,

"உங்க பொண்ண எம்பையனுக்குத் தாங்கன்னு கேட்டா! கட்டித் தர மாட்டீங்களாண்ணே? ஜாதகமெல்லாம் பாத்திட்டேன். பொருத்தமெல்லாம் செஞ்சு வச்ச மாதிரி அம்சமா இருக்கு. ரெண்டு பேரும் அமோகமா ரொம்ப வர்ஷம் சந்தோஷமா வாழ்வாங்க." என்று வானதியைப் பெண் கேட்க, ஆண்டாளுக்கு இன்ப அதிர்ச்சி.

அவருக்கு வர்மாவைப் பிடித்திருந்தது. ஆனால் சகாயமோ யோசனையில் இருந்தார்.

"ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்புறாங்க அண்ணே. ஒரே ஆஃபிஸ்ல… அவங்களுக்குள்ள பிடிச்சிப்போச்சு. அவங்க விருப்பம் தெரிஞ்ச, நாம தான் மேக்கொண்டு ஆக வேண்டியத பாக்கணும்." என்க, வர்மாவின் அணைப்பில் எதுவும் சொல்லாது நின்ற வானதி கண்முன் வந்து சென்றாள் சகாயத்திற்கு.

‘தங்கை கூறியது நிஜமோ!’ என்ற யோசனையில் அவர் இருக்க,

"எனக்குத் தெரியும் ண்ணே, நீங்க பிள்ளைங்க சம்மதம் இல்லாம எதுவும் செய்ய மாட்டீங்கன்னு. காலைல கரிகாலன் வரட்டும் பேசிட்டு சொல்லுங்க." என்ற வெண்மதி எழுந்து சென்றுவிட்டார் கணவனைத்தேடி.

பேரிரைச்சலுடன் விழுந்த நீர்வீழ்ச்சியின் உச்சி அதிக உயரம் இல்லை. அதைச் சுட்டிக்காட்டி, பாதையற்ற பாறைகளுக்கு இடையே கவனமாக அவளை அழைத்து வந்தவன், அருவியின் மறுகரைக்குச் செல்ல வேண்டி, ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரில் இறங்கச் சொன்னான்.

சிறிய நடை மேடை போல் இருக்க, அதைத் தாண்டி குதித்து ஓடியது நீர்.

பாறைகளில் முட்டி மோதி செல்வதைக் கண்டவளுக்கு மெல்லிய பயம்.

“என்னவா இருந்தாலும் இங்காலவே கதையுங்க. அங்கால வேண்டாம். பயம்மா கிடைக்கு எனக்கு.” என்றவளுக்குப் பதில் சொல்லவில்லை அவன். மாறாக சிறு பேசிக் கொண்டே வரும் பிள்ளைக்குள் எச்சரிக்கை செய்வது போல் வாயில் விரல் வைத்து எச்சரிக்கை செய்தான். அவன் பிடிவாதம் அறிந்து அவனின் கைப் பற்றிக் கொண்டு, தண்ணீருக்குள் இறங்கினாள்.

"தண்ணிக்குள்ள விழுந்தா என்ன நடக்கும்?" என்ற கேள்வியை, அவனின் முழங்கையை நெஞ்சோடு கட்டிக்கொண்டு கேட்டாள்.

"உன்னை அடிச்சிட்டு போய்டும்." என்றவனின் புஜத்தில் கிள்ளி வைத்தாள்.

"பகிடி வேணாம். பயமாருக்கு. கட்டாயம் அங்கால போகத் தான் வேணுமா?" என்றவளுக்கு, இடறிவிட்டு விழுந்து விடுமோ என்ற ஐயத்துடன் சேர்ந்து இரவும் பயங்காட்டியது.

“ம்ச்… நான் இருக்கேன்‌ நதி வா…” என்றான்.

இரண்டடிகள் எடுத்துவைத்தவள், "டப் எண்டு தண்ணியிட அளவு கூடினா மாதிரி இருக்கு! கூடுது தானே? மொழி... என்னவும் சொல்லுங்க.‌ இப்படி மௌனச் சாமியார் மாதிரி வந்தா பயம் வருது." என்றவளைத் தன் கைக்குள் அள்ளிக் கொண்டான்.

அதிர்ச்சியில் வாய் திறக்க, "ஷூ... பேசக் கூடாது. நாம போய் சேருற இடம் வரைக்கும்." என்று மிரட்ட, அவனின் குரலில் மயங்கியவள், அவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனுக்கு மாலையாகிப் போனாள்.

அருவியைத் தண்டி, சில பாறைகளில் ஏறிச் சென்றால் அங்கு ஓர் ஏரி இருக்கும். அதில் மரக்கட்டைகளால் செய்யப்பட்ட மிதவை ஒன்று கயிற்றில் கட்டி வைக்கப்பட்டிருக்க, அதன் மேல் இறக்கி விட்டான் வானதியை.

அது ஃபோட்டோ சூட்டிங்காக விடுதி நிர்வாகத்தால் வடிவமைக்கப்பட்ட இடம்.

நிலையில்லாது இருந்த மிதவையால் தள்ளாடியவளை அமர வைத்து,

“ட்வென்டி மினிட்ஸ்.” என்று சொல்லி, அவளின் மடியில் தலை சாய்த்துக் கொண்டான். அவளின் கரத்தைக் கழுத்திற்குள் சுற்றிக் கொண்டவன் என்ன பேசினான் என்று அவனுக்கும் தெரியாது. என்ன கேட்டாள் என்று அவளுக்கும் தெரியாது.‌ கிடைத்த அந்த நொடிகளை அனுபவித்தனர்.

நிலா வேறு முழு மதியாய்ப் பவணி வர, அதை மிதவையில் மிதந்தபடி பார்ப்பது ரம்மியமாக இருந்தது, இனிய இரவு. அதுவும் மனம் கவர்ந்தவள் பக்கத்தில் இருக்கும் இரவு. விளையாடியபடி கதை பேசத்தொடங்கினர். அவனின் மயக்கும் குரலில் அவனையே பார்த்தபடி இருந்தாள் வானதி.

அவன் பேசுகையில் ஏறி இறங்கிய தொண்டைக் குழியில் ரசனையான பார்வை சென்றதென்றால்,‌ அவளின் விரல்கள் அலையாய் அசைந்தாடிய ஆடவனின் கேசத்திற்குள் சிக்குண்டு கிடந்தன. அத்தனை நேரம் அமர்ந்திருந்தவள், மெல்ல மடக்கி வைத்திருந்த அவனின் முழங்காலில் தலைசாய்க்க, ஒருவர் மடியில் மற்றவர் என்று சுவாரஸ்யமாக காதல் செய்தனர்.

இருவரின் வெஜிட்டேரியன் காதலை, ரிசாட்டின் மாடியில் இருந்து பார்த்துவிட்ட சுஜித்ரா ஓடிச்சென்று தன் தாயை அழைத்து வந்துகாட்டினார்.

"*** நாய்... அவளோட புத்திய காட்டிட்டா." என்று கோபமாகச் சென்றவர், ஒவ்வொருவராகக் கூட்டுவந்து காட்டினார்.

ரவிகிருஷ்ணாவிடம், அவரின் ஸ்டேட்டஸ் பற்றியும் வானதியின் தகுதி பற்றியும் எடுத்துக்கூறி,

"இத்தன நாள் எங்கொளுந்தன் குடும்பத்த கெடுத்தது போதாதுன்னு, அந்த அநாத*** அடுத்து கெடுக்குறதுக்கு உங்க குடும்பத்த தான் தேர்ந்தெடுத்திருக்கா போல. தரித்திரம் பிடிச்சவ. காலடி எடுத்து வைக்கிறது இடமெல்லாம் சூனியம் பிடிச்சுக்கும்." என்று கொடூர வார்த்தைகளால் அர்ச்சிக்க,

"யாரு வீட்டுல சூனியம் பிடிச்சிருக்குன்னு எனக்கு நல்லாத் தெரியும் அண்ணி. இது எங்க குடும்பத்து சமாச்சாரம். இதுல நீங்க தலையீடாம ஒதுங்கி நிக்கிறது தான் உங்களுக்கு நல்லது. தேவையில்லாம் எம்மருமள பேசவேண்டாம்." என்றபடி வந்துசேர்ந்தார் வெண்மதி.

அவரின் மருமகள் என்ற வார்த்தையில் அவரின் உறுதி தெரிய, நாகேஸ்வரி விஷங்களைத் தொடர்ந்து கக்கினார். ஆனால் வெண்மதியிடம் ஆன்டி வெனம் டாக்சிக் இருந்திருக்க வேண்டும்.

சென்ற முறைபோல் இந்த முறையும் இவரின் பேச்சிற்கு காது கொடுத்து மௌனமாய் இருந்து மகனின் ஆசையைக் கெடுத்து விடக்கூடாது என்ற முடிவுடன் இருந்தவர், பதிலுக்குப் பதில் நன்கு கொடுத்தார்.

ஆனால் அவரோ, "எம்மக வாழ்ந்திட்டு இருக்குற இடத்துல இந்த *** வரவே கூடாது." என்று வாக்குவாதம் செய்யும் போதே, மணிமாறன் பேசினான் வர்மாவிற்கு ஆதரவாக.

"இது அவனோட லைஃப். அவனுக்குப் பிடிச்சவங்ககூட அமைஞ்சாத்தான் சந்தோஷம் இருக்கும்." என்றவன், ரவிகிருஷ்ணனின் காதில் எதுவோ சொல்ல, அவர் சிந்தனை‌ வயப்பட்டார்.

அவருக்கு மகன் கூலியாள் போல் வேறு ஒருவனிடம் வேலை செய்வது கௌரவக் குறைச்சலாக இருந்தது. இப்பொழுது கல்யாணத்தைப் பேரமாகப் பேசி, அவனைத் தொழிலில் இழுத்து விடலாம் என்று மாறன் திட்டம் தீட்டிக் கொடுக்க, “அந்தப் பொண்ண நம்ம வீட்டு மருமகளா வரணும்னா உம்மகெ எங்கூட நம்ம ஃபேமிலி பிஸ்னஸ்க்கு வரணும்.” என்று நிபந்தனை போட்டார்.

மகன் இதற்கு நிச்சயம் சம்மதிக்க மாட்டான் என்று தெரிந்தவர்,

‘மகனின் கல்யாணத்தை முதலில் முடிப்போம். பின்னர் வருவதை பின்னர் பார்க்கலாம்.’ என்று கணவனுக்கு எல்லாத் திசையிலும் தலையசைத்து வைத்தார்.

குடும்பத்தலைவரின் சம்மதம் கிடைத்தாயிற்று. பிறகு என்ன? பெண் பார்க்க, நிச்சயம் செய்ய, நாள் குறிக்க என அடுத்தடுத்த வேலைகள் தொடர்ச்சியாக ஆரம்பமானது.

குடும்பம் ஒன்று கூடிவிட்ட ஆத்திரத்தில் நாகேஸ்வரி அமைதியாகி விட்டார். சிவ தாண்டவமும் ரவியை எதிர்த்து எதுவும் பேசமாட்டார். சுஜித்ரா மட்டும்தான். ஆனால் அவளை ஒரு பொருட்டாகக் கூட யாரும் மதிக்கவில்லை. அவளின் கருத்து தேவையற்ற ஒன்றாகிப் போனது.

வெண்மதி, இத்தனை கஷ்டப்பட்டு கல்யாணம் என்று வரை கொண்டு வந்த நெய்த தாழி, வானதியால் உடைக்கப்பட்டது.

"உங்களுட்ட மன்னிப்பு கேக்குறன். எனக்கு இந்தக் கலியாணத்தில விருப்பம் இல்ல. நான் உங்கட மகன லவ் பண்றன் எண்டு ஒரு நாளும் சொன்னதில்ல.” என்ற வார்த்தைகளால்.
 

Author: நிதனிபிரபு
Article Title: தேன் நாட்டு பைங்கிளி - 21
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
379
83
Chennai
இவ என்ன தான் யோசிச்சி வெச்சி இருக்கா...
சும்மா இருந்தவனை இப்படி லவ் பண்ண செய்துட்டு....இப்ப என்ன வேணாம்னு சொல்றா?????
முடியல இவளோட.....