அத்தியாயம்: 20
பொங்கி வந்த பாலின் தலையில் ஒரு தேக்கரண்டி காபி பொடியைப்போட்டு, அளவான சர்க்கரைத் தூவி, டம்ளரில் ஊற்றி, ஆனந்தமாக ஆற்றிக்கொண்டே சமையலறையை விட்டுவந்தார் ஆண்டாள்.
அவரின் மகிழ்ச்சிக்குக் காரணம் தன் ஒரே நாத்தனார் தேடிவந்து, நடு வீட்டில் அமர்ந்திருப்பது.
ப்ளாஸ்டிக் நாற்காலிகள் இருந்த போதும், வெண்மதி தரையில் அமர்ந்து வாகாக சுவரில் சாய்ந்துகொண்டு, "அந்தப் பொண்ணுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? வீட்டுக்கு ஆகாதுன்னு துரத்தி விட்டதுக்கு அப்றம் உதவி பண்றேன்னு பிரச்சினை இழுத்திட்டு வரப்பாக்குது." என்க,
"ஆமாம் மதனி... நானும் நேத்து சாயங்காலம் பாத்தேன். மனசே சரியில்லை. மறுபடியும் பிரச்சனைய இழுத்திட்டு வரப்போது." என ஆரம்பித்தவர், கொண்டுவந்த காபியை நாத்தனாருக்கு கொடுத்துவிட்டு, தனக்கென ஒன்றை கையில் வைத்துக்கொண்டு, நேற்றைய சீரியல் கதைகளைப் பேசத் தொடங்கினார்.
வெண்மதி மகனுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றும் வேலையில் மறுநாளே இறங்கியிருந்தார். அதன் முதல் படியாக, வெள்ளிக்கிழமைத் தவறாது கோயிலுக்குவரும் தன் அண்ணனை எதேச்சையாக சந்திப்பதுபோல் சந்தித்து அந்துபோன உறவை முடிச்சிட்டு வைத்தான்.
பல ஆண்டுகளாக ஒட்டுதல் இல்லாததால் சட்டென பழகவும், வானதியைப் பெண் கேக்கவும் தயக்கமாக இருந்தது. மெல்ல மெல்ல ஊடுருவி, பின் நினைத்ததைச் சாதிக்கலாம் என்று கணக்குப் போட்டு வீடுவரை வந்து, ஆண்டாள், பார்த்திபன் என மூவரையும் கரெக்ட் செய்துவிட்டார்.
முதல் நாள், ஒரு வித அசௌகரியத்துடன் வீட்டைச் சுற்றிப்பார்த்த வெண்மதியின் முகத்தைப் பார்க்கையில் பாவமாகத்தான் இருந்தது.
"எங்க வீட்டு கார் செட்டே இதைவிட பெருசா இருக்கும்!" என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை அவரால். ஆனாலும் மகனின் விருப்பத்திற்காக என்று அட்ஜஸ்ட் செய்துகொண்டு வாரத்தின் மூன்று நாள்களை அங்கேயே செலவிட, பிடித்துவிட்டது அவருக்கு.
வீட்டை அல்ல. அங்கிருக்கும் மனிதர்களை. வயது முதிர்ந்திருந்தாலும் ஆண்டாளின் பிள்ளை மனத்தைக் காண்கையில் ‘இவரையா ஒதுக்கி வைத்தோம்!’ என்று சாட்டையால் அடித்ததுபோல் வலித்தது மனம்.
முதல்நாள் வந்தபோது கரிகாலன் மற்றும் வானதியின் ஏளனம் கலந்த விசித்திர பார்வை சற்று கடுப்பாகத்தான் இருந்தது. ஆனாலும் இருவரும் குடும்பத்தாரின் மீது வைத்திருக்கும் பாசம் அவரை நெகிழ வைத்தது.
வேலை தவறாது ஃபோன் அடித்து தாயிடம் பேசும் பிள்ளைகளை வாஞ்சையுடன் அவதானித்தார். வானதி ஆண்டாளை எந்த வேலையும் செய்யவிட்டதில்லை. பார்த்திபன், ஆண்டாளிடம் தோழமையோடு அனைத்தையும் பகிர்ந்தான். கரிகாலன் தந்தைக்குத் தோள் கொடுக்க, எப்பேர்ப்பட்ட பிள்ளைகள் என்று வியக்கத் தோன்றியது.
எதையாவது வாங்கிவரும் கரிகாலனும், அவனுடன் சண்டையிடும் வானதியும், சமாதானம் செய்கிறேன் என்று மொத்தத்தையும் களவாடும் பார்த்திபனும் சேர்ந்தால் வீட்டின் கலகலப்புக்குப் பஞ்சம் இராது.
முதல்முறை ஒரு பெண் பிள்ளைத் தனக்கு இல்லையே என்ற ஏக்கத்தை உண்டாக்கியிருந்தது அந்தக்குடும்பம் வெண்மதிக்கு. அந்தக் கூட்டை வேடிக்கை பார்க்க வேண்டியே தன் பேத்தியை அழைத்துக் கொண்டு வரத்தொடங்கியிருந்தார்.
"நம்ம வானதிக்கு ஏதாவது வரன் பாத்திருக்கீங்களா மதினி?" என்றுவந்த காரியத்தில் கண்ணாய்க் கேட்க,
"அதை ஏன் மதினி கேக்குறீங்க! நிறைய நிறைய நல்ல வரன்லாம் வருது. ஆனா வானு போட்ட கண்டிசன கேட்டுட்டு தட்டிப் போய்டுது. அந்த கண்டிசன சொல்லாம பையன்களா பாருடான்னு சொன்னா!! இந்தப் பையன் தங்கச்சிக்கு ரொம்பத்தான் இடம் குடுத்து வச்சிருக்கான். கண்டிசனுக்குச் சரி சொல்லலன்னு துரத்தி விட்டுடுறான். என்ன பண்றது! எல்லாம் நேரம். சீக்கிரம் அவளுக்குக் கல்யாணத்த பண்ணிடணும்னுதான் இவரு கோயில் கோயிலா அழையுறாரு." என்று வருந்துச்சொல்ல,
"அப்படி என்ன மதினி கண்டிஷன் போட்டா உங்க பொண்ணு?"
"வீட்டோட மாப்பிள்ளையா வந்தாத்தான் கல்யாணம் பண்ணிப்பாளாம்." என்றபோது இருண்டுவிட்டது வெண்மதியின் முகம்.
"இவளுக்கு ஏத்த மாதிரி ஒன்னே ஒன்னு வந்தது. நம்ம அருள் தம்பி கூட வேலை பாக்குற பையன்தான். ஒரே ஆஃபிஸ். விரும்பி கேட்டுவந்தான். ஆனா ஜாதகம் பொருந்தல. பொருந்திருந்தா இன்னோரம் நாள் குறிச்சிருப்போம். இது இருந்தா அது இல்லை. அது இருந்தா இது இல்லை. என்னைக்கி ரெண்டும் ஒன்னா வருமோ..." என்று தன்பாட்டிற்குப் புலம்ப, வெண்மதி சிலையாகிவிட்டார்.
"என்ன! வீட்டோட மாப்பிள்ளையா? எம்பையன் எப்படி இங்க வந்து இருப்பான்?" என்று நினைத்தவர் இருந்த ஒற்றை அறையைப் பரிதாபத்தோடு பார்த்தார்.
வந்து மகனிடம் புலம்பித் தள்ளிவிட்டார்.
"அந்த வீட்டுல எப்படிடா! ஐய்யோ எனக்கு அந்த வீட்டப் பார்க்கவே சங்கட்டமா இருக்கு. அட்லீஸ்ட் மாடில ஒரு ரூம் எடுத்தா கூடச் சரின்னு சமாதானம் ஆகலாம். ஆனா இப்ப இருக்குற சூழ்நிலைல அது முடியாதுன்னு ஆண்டாள் சொல்றா. அங்க எப்படி உன்னை அனுப்பி வைக்கிறது." என்க,
"ஏன்? அனுப்பி வச்சா என்ன! கல்யாணமான பொண்ணுங்க தான் வீட்டத் துறந்து பையன் வீட்டுக்கு வரணுமா! பையனுங்க போகக்கூடாதா?."
"அதுக்கில்லடா! என்ன இருந்தாலும் நீ ஆம்பளப் பையன். அந்த வீட்டுக்கு போனா! இங்க?"
"உங்களுக்குத்தான் உங்க மூத்த மகன் இருக்கான்ல! இளைய மகன் வெளிநாட்டுல இருக்கான்னு நினைச்சுக்க." என்று விளையாட்டாகச் சொன்னவன், அவரின் முகம் தெளியாததைக்கண்டு,
"எது எப்படி இருந்தாலும் எனக்கு வானதி தான். ஒரு மாசம், ரெண்டு மாசம், ஆறு மாசம்னு போன மனசு மாறி நீங்க காட்டுற பொண்ணுக்கு சரிசொல்லி மணமேடைக்கு வருவேன்னு எந்தக் காலத்துக்கும் கனவு காணாதிங்க. நான் உறுதியா இருக்கேன். I am love with Vanathi." என்று முகத்தில் கடுமையான ரேகைகளைக் கொண்டுவர, வெண்மதி தான் பணிய வேண்டியிருந்தது.
"வினிம்மா... அந்த ரூம்க்குள்ள போகாதீங்க. அது சித்தி ரூம். இந்தப் பக்கம் வாங்க. ஐயம்மா உங்களுக்குப் பந்து எடுத்து தர்றேன். நாம மாடில போய் விளையாடலாம்." என்று வானதியின் அறைக்குள் செல்லவிருந்த வாண்டுவைத் தூக்கிக்கொண்டு ஆண்டாள் படி ஏற,
"ஏன் போகக்கூடாது?” என்று புருவம் சுருக்கிய வெண்மதியிடம்,
"அதெல்லாம் ஒன்னுமில்ல மதினி. வானு வரையிற சாமான்கள வச்சிருப்பா. ஒன்னு கலைஞ்சாக் கூடக் கோபம் வரும் அவளுக்கு. திட்டுவா. அதான்." என்றவர் வானதியை அறையைச் சுற்றிக் காட்டினார்.
ஆர்வமில்லாது நுழைந்த வெண்மதியும் வானதி வரைந்து சுவரில் ஒட்டி வைத்திருந்த படங்களைக் கண்டு வியந்துபோனார்.
"திறமக்கார பொண்ணால இருக்கா!!. எப்படித் தத்ரூபமா வரைஞ்சிருக்கா!." என்று மனத்திற்குள் பாராட்டிக் கொண்டவர், ஒரு நோட்டை எடுத்து பார்க்க, அதில் வர்மா ஓவியமாக வரையப்பட்டிருந்தான்.
மகனைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து போனவர், அதைப் புலனத்தில் புகைப்படமாக மகனுக்கு அனுப்பி வைத்தார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே வர்மா, வெண்மதிக்கு அழைத்துவிட்டான்,
"இது வானதி வரைஞ்சதா?" என்று கேட்டபடி.
"பின்ன! யாரால உன்னை இவ்ளோ அழகா ரசிச்சு வரைய முடியும்? சும்மா சொல்லக் கூடாது அருளு, நீ கபடி விளையாடுற மாதிரி அவ்ளோ அழகா வரைஞ்சிருக்கா. உம்பேல ஆசை இல்லாமல இப்படி தத்ரூபமா வரைவா! இன்னும் நிறைய வரைஞ்சு வச்சிருக்கா." என்று மருமகளுக்குப் பாராட்டு பத்திரம் வாசித்தார்.
'என் ஓவியப்பாவைத் தீட்டிய ஓவியம்.' என்று மனத்திற்குள் கவி வடித்தவன்,
"நதி வீட்டுல இருக்காளா?"
"அந்தக் குட்டிச் சாத்தான் இருந்திருந்தா நான் எப்படி அதோட ரூம்க்குள்ள போக முடியும். ஃபோட்டோ எடுக்க முடியும். வெளில போயிருக்காளாம். வர நேரமாகும்னு ஆண்டாள் சொன்னா." என்றதும் அடுத்த சில நிமிடங்களில் ஆண்டாள் வீட்டு வாயிலில் பைக்கை நிறுத்தினான்.
உள்ளே வந்தவனுக்கு ஆண்டாள் ஜூஸ் கொடுக்க, "நம்பிக் குடிக்கலாம். இது ஆண்டாள் போட்டது தான். நானே எங்கண்ணால பாத்தேன்." என்று உறுதியாக வெண்மதி சொன்ன பின்னரே பருகினான்.
ஏன் இந்த பயம் வானதி மீது இருவருக்கும்?
அண்ணன் வீடு என்று வெண்மதியும், அன்னைக்காக வந்தேன் என்று வர்மாவும் அடிக்கடி சகாயத்தின் இல்லம் வர, வானதி ஜூஸ் கொடுத்து வரவேற்று உபசரித்தாள். அது தான் பயத்திற்குக் காரணம்.
"நான் ஒண்டும் செய்ய இல்லை. சீனி இல்லாம ஜூஸ் கலந்து கொடுத்தன். அவ்வளவு தான்."
“அப்படிச் சர்க்கரை இல்லாது என்ன ஜூஸ் கொடுத்தாய்?”
"லெமன் ஜூஸ்... வித் அவுட் சுகர். அது அவனுக்காக ஸ்பெஷலா செய்தது. மாமிக்கு தரமான காபி."
‘!!’
பாவம் இனிப்பே இல்லாத எலுமிச்சை சாறும், சர்க்கரையே பார்க்காத கடுங்காப்பியும் கொடுத்து, அம்மா மகன் என இருவரையும் பயமுறுத்தி இருக்கிறாள்.
"மாமிக்கு ரத்தத்துல சீனி அளவு கூடிடக்கூடாது எண்ட நல்ல எண்ணம்." என்று விசமம் கலந்த அக்கறை தான் இருந்தது.
‘பின்னென்ன! எல்லா நேரத்திலயும் அவங்க தான் உயர்ந்த மாதிரியும் நாங்க எல்லாம் தரையில் முளைச்ச பச்சப் புல் மாதிரியும் கதைச்சுக் கொண்டே போனா என்ன செய்றது? அதான் இனி கதைக்க ஏலாத அளவுக்கு வாயைப் பூட்ட வச்சன்.’ என்பவள் பழி வாங்கினாள் இருவரையும்.
அன்று அவள் தந்த புளிப்பு ஜூஸ்ஸிற்குப் பின், வாசலில் நின்ற படியே தாயை அழைத்துக்கொண்டு சென்றுவிடுவான்.
"உள்ளுக்கு வந்து ஜூஸ் குடிச்சிட்டு போலாம் தானே!" என்று பாசமாக உபசரிப்பாள்.
வெண்மதியே அவள் இருக்கும் நேரத்தில், “எதுவும் வேண்டாம்.” என்று அலறியவார்.
‘குட்டிச் சாத்தான்… காபிங்கிற பேர்ல கசாயத்தை நீட்டுவா. குடிக்கலன்னா கொலக் குத்தம் மாதிரி பேசுவா!’ என்று முணுமுணுப்பார்.
டம்ளரை ஆண்டாளிடம் நீட்டியவன், வானதியின் அறைக்குள் சென்றான். வெண்மதி ஆண்டாளை பிஸியாக வைத்திருந்தது அவனுக்கு எல்லா விதத்திலும் வசதியாய்ப் போனது. புகுந்து விட்டான்.
சிறிய அறை அவளின் திறமைகளைக் காட்டிக் கொடுக்க, அவனின் கவனத்தில் வந்து விழுந்தது, அலமாரியின் மேல் அடுக்கில் சுருட்டி வைக்கப்பட்ட ஒரு காகிதக்கொத்து.
பல மடிப்புகளாக மடித்து வைக்கப்பட்டிருந்த அதன் மடிப்பைப் பிரித்துப் பார்க்கையில் வர்மாவின் தேகம் சிலிர்த்து நின்றது.
பத்தொன்பது வயது தொடங்கி இருபத்தி நான்கு வயது வரையிலாக அவனின் தோற்றம் ஒவ்வொரு மடிப்பிலும் வரையப்பட்டிருந்தது. அரும்பிய மீசையுடன், ஃப்ரெஞ்ச் தாடியுடன், கல்லூரி நிகழ்ச்சியில் நடனமாடியது, பைக்கில் பறந்து செல்வது என அனைத்தும் இருந்தது. அது அவள் கொண்டிருந்த காதலின் ஆயுள் காலம் ஐந்து என்றது.
"என்னை இந்த அளவுக்கு காதலிச்சிருக்க… என்னோட காதலையும் ஏத்துக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்க. ஏன் டி?" என அவளிடம் கேட்க வேண்டியதை அவனுக்கு அவனே கேட்டபடி திரும்பியவன், அவளின் மேஜையை நோட்டமிட்டான்.
இந்த நீல நிறத்திலும் கருப்பு வண்ணத்திலும் ஸ்கெட்ச் புக்ஸ் இருந்தது. கருப்பு வண்ணத்தை மைதானத்திற்கு கொண்டுவந்து வரைவாள் என்று மனம் சொல்ல, அதை எடுத்துப் புரட்டியபடி கட்டிலில் அமர்ந்தான்.
அதில் இருந்தவர்கள் அனைவரும் அகாடமியில் விளையாட வரும் கபடிவீரர் மற்றும் வீராங்கனைகள். தாவிக்குதிப்பது, தொடுவது விடுபடுவது போன்ற பல கோணங்களில் வீரர்களை வரைந்து வைத்திருந்தாள். அதில் தன்னுடைய வரைபடம் எங்கே உள்ளது என்று தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கும் சமயம், வானதி அறைக்குள் புயலென புகுந்திருந்தாள்.
"என்னதுக்கு இதையெல்லாம் எடுக்குறிங்க? இது என்ர ரூம். ஆரக் கேட்டு இங்கெல்லாம் வந்தீங்க. வெளில போங்க." என்று கத்தியபடி அவனின் கையிலிருந்த நோட்டுகளைப் பிடுங்க,
"நீ மிகப்பெரிய ஆர்டிஸ்ட்டாமே! உன் மாமியார் சர்டிபிகேட் குடுத்தாங்க. அதான் உண்மையா பொய்யான்னு செக் பண்ணலாம்னு வந்தேன்." என்றவன், தரமாட்டேன் என்பதுபோல் இறுக்கிப்பிடிக்க, கொத்தாக சில காகிதங்கள் தரையில் விழுந்தன. அதை அவன் எடுக்க குனிய, நீல நிற நோட்டை மேஜைக்குள் ஒழித்து வைத்துவிட்டு அவனை முறைத்தபடி நின்றாள்.
"உன் மாமியார் சொன்னது உண்மைதான் போல... நல்லாவே வரைஞ்சிருக்க. உன்னோட கதாநாயகனக் கூட வரைஞ்சி வச்சிருக்க! பட் நான் கவுண்ட் பண்ணேன். என்னோட ட்ராயிங் தான் ஜாஸ்தியா இருந்தது. எம்மேல நீ வச்ச லவ் மாதிரி." என்று பெருமைப்பட்டுக் கொண்டவன், கரத்தை கட்டிலில் ஊன்றி கால்களை ஆட்டியபடி அவளைச் சுவாரஸ்யமாக ஏறிட்டான்.
"ரெசா மிர்பாகேரியா தெரியுமா?"
"ம்... ஈரானிய ப்ளேயர். PKL ல விளையாடி பாத்திருக்கேன்.”
"அவர் தான் என்ர ஃபேவரைட். அவர்ட படம்தான் நிறைய இருக்கு. உங்களிடத விட. அப்ப அவர்லயும் எனக்கு காதலா!" என்றாள், 'பெருமைப்பட்டுக் கொள்ள ஒன்றுமில்லை.' என்பதுபோல்.
"அப்படிலாம் இருக்காது. காட்டு... நான் மறுபடியும் கவுண்ட் பண்றேன்." என்றபடி எழுந்து மேஜையை நெருங்க, தடுக்க முயன்றாள் வானதி. ஆனால் அது முடியாது போனது. அவளைக் கட்டிலில் தள்ளியவன், எதைப் பார்க்ககூடாது என்று ரகசியமாக மறைத்து வைத்தாளோ அதைக் கையில் எடுத்தபடி நின்றான்.
அதில் அவனுக்கு இதுவரை அனுப்பிய quote மற்றும் இந்த வாரம் அனுப்ப வேண்டிய quote எழுதியிருந்தது. கூடவே சில எழுத்துக்கள் வெட்டிப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
"You do not find a happy life. You make it."
"உன் வாழ்க்கையின் சந்தோஷங்களைத் தேடாதே... நீயே அதை அமைத்துக் கொள்." என்று சத்தமாக வாசித்தவன், அவளைத் திரும்பிப் பார்க்க, அவள் எங்கோ வெறித்தபடி இருந்தாள்.
அவளின் முன் மண்டியிட்டு, தன் கரங்களைக் கட்டிலில் ஊன்றி, அதற்குள் அவளைச் சிறை வைத்து அவனைப் பார்க்கச் செய்தவன்,
"சோ... நீ தான் அது..." என்று குறும்பு மின்னும் குரலில் கேட்டான்.
“என்னோட சந்தோஷத்துக்கிட்ட நான் சரியா வந்து சேந்திட்டேன்.” என்று சொல்ல, அந்தக் குரல் அவளின் இதயத்துடிப்பை ஏற்றியது.
அவனின் முகம் பார்க்க முடியாது விழிகளை ஓட விட, அவளின் கன்னம் பற்றியவன், "நான் இன்னும் உன்னோட மனசுல தான் இருக்கேன் நதி. அதுக்கு சாட்சி இது தான். என்னை hate பண்றேன்னு பொய் சொல்லாத." என்க, அவனின் கரத்தைத் தட்டிவிட்டவள்,
"நான் பொய் சொல்ல இல்ல. ஒரு காலத்தில நான் காதலிச்சது உண்மைதான். அவன் புத்தி போதழிச்சு, சித்தம் கலங்கி விட்டத்தை வெறிச்சபடி குந்திக் கொண்டிருப்பதைக் காண சகிக்காது செய்தன். இதெல்லாம் அக்கறை தான். என்னர காதலன் மீது நான் கொண்ட அக்கறை. காதல் மீது அல்ல. அது எண்டைக்கோ காணாம போயிட்டு." என்று அவனுக்கு முதுகு காட்டி, இருகரங்களையும் கட்டிக்கொண்டு செல்ல, அவளின் சிற்றிடை அவனின் ஒற்றைக் கரத்தால் வளைக்கப்பட்டதில் பெண்ணவளின் முதுகு அவன் மார்போடு ஒட்டிக்கொண்டது.
ஒன்றைக் கரத்தைப் பெண்ணவளின் மணிவயிற்றோடு பிணைத்திருந்தவன், மற்றொரு கரத்தால் அவளின் கூந்தலை ஒதுக்கி விட்டு, அழுத்தமாக தன் இதழ் பதித்தெடுத்தான் அது படந்திருந்த இடத்தில்.
"கண்டு பிடிக்கிறேன் நதி. உன்னோட தொலைந்த காதல் உனக்குள்ள எங்க இருக்குன்னு என்னால கண்டுபிடிக்க முடியும். என் மேல் நீ வச்ச காதல இத்தனை வர்ஷமா காப்பாத்திட்டு வர்றதே உன்னோட அக்கறை தான். அது எந்த நேரமும் தன் நிலைக்கு மாறும். I truly believe my love can transform you.” என்றவன் வார்த்தைகளுக்கு இடையிடையே முத்தங்களை அவளின் பொன்மேனியில் முத்திரையாகப் பதியவைத்தபடியே கூறினான்.
அவனின் அந்த ஊர்வலம் காது மடலைச் சூழ்கொண்டு நிற்க, பெண்ணவளுக்குள் உண்டாக அதிர்வுகளைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. முற்றிலும் தன்னிலை இழுந்து அவன் வசம் சென்று கொண்டிருந்தது, உடல் மட்டுமல்ல உள்ளமும் தான்.
மடலில் தன் மீசை கொண்டு கவி எழுதியவனால் தாபப்பிடிக்குள் சிக்குண்டவள், இதழ்களை மெல்ல அசைத்தாள், "மொழி... ப்ளீஸ்..." என்று.
காற்றுக்கு மட்டுமே கேட்கும் சத்தத்தில் அவள் பேசியிருக்க, அது ஆடவனின் செவிகளுக்குள் விழுந்திருக்கவேண்டும்.
பட்டென அவளைத் திரும்பியவன், கன்னங்களைக் கைகளில் ஏந்தி, "come again..." என்றான் வேகமாக. முத்தமிட்டு கிறங்கச் செய்து மாயவலைக்குள் தள்ளியவனே, அதை அறுத்தான் தன் கேள்விகளால். அவள் திருதிருவென விழித்தபடி இருக்க,
"இப்ப சொன்னியே… அதை நீ திரும்ப சொல்லு..." என்று கன்னம் குளுக்கியவன்,
"நதி ப்ளீஸ்... திரும்பச் சொல்லு." என்று கெஞ்சலோடு, கொஞ்சலாக கேட்க, அவளுக்குத் தான் வார்த்தைகள் வரவில்லை. பலமான மூச்சுக் காற்றுகளை இழுத்து விட்டவளின் ஏறி இறங்கிய மார்பும், அவளின் வெட்க கலந்த மிரட்சிப் பார்வையும் அவனுள் மென்நகையைத் தர, அவளை அதிகம் வதைக்காது முன் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு வெளியே செல்ல ஏதானித்தான்.
கதவைத் திறந்தவன், “நீ எனக்கு ஒரு சர்டிபிகேட் தந்தியே! நியாபகம் இருக்கா?” என்று கேட்டபடி திரும்பிப்பார்த்தான்.
“என்ன தந்தன்?” என்றவள் சுதாரிக்கும் முன் நெருங்கி வந்தவன்,
“அதான் வில்லன்னு சர்டிபிகேட் தந்துட்டியே… இனியும் எல்லைக்குள்ள நிக்கணுமா என்ன!” என்றவன் கூறிய வார்த்தையின் பொருளை அவதானிக்கும் முன், பெண்ணவளின் வென்கழுத்தில் படர்ந்த கரம், வேகமாக அவளை தன்னோட இழுத்தணைத்து இதழ் முத்தத்தைத் தந்திருந்தது.
ஆழமான, நீண்ட முத்தத்தின் மூலம், அந்தத் தென்னாட்டுச் சூரியன் இந்தத் தேன் நாட்டுத் தாரகையை மொத்தமாக கிரகிக்கத் தொடங்கியிருந்தான்.
Last edited:
Author: நிதனிபிரபு
Article Title: தேன் நாட்டு பைங்கிளி - 20
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தேன் நாட்டு பைங்கிளி - 20
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.