• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தேன் நாட்டு பைங்கிளி - 2

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்: 2

தென்னாட்டுடைய சிவனே போற்றி…
என்னாட்டவருக்கும் இறைவா.... போற்றி…

என்று தொலைக்காட்சிப் பெட்டி சத்தம் கொடுக்க, வென் பஞ்சு பாதங்களைத் தடுக்கி விடாதபடி அணிந்திருக்கும் நீளப் பாவாடையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு பூஜை அறைக்குள் ஓடினாள் வானதி.

வேகவேகமாகத் தீப்பெட்டியைக் கையில் எடுத்தவள், அகல் விளக்குகளை எண்ணெய்யால் நிரப்பி, நூல் திரியிட்டாள்.

நேரம் ஆறைத் தொட இருப்பதாய்க் கடிகாரம் சொல்ல, எட்டி டிவியைப் பார்த்தாள். அதில் செய்தி வாசிப்பாளர் திருவண்ணா மலையின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டிருக்க, பின்னால் உடுக்கையின் நாதம் நம்மை பரவச நிலைக்குக் கொண்டு செல்லும் அளவிற்கு ஒளித்தது. திடீரென சங்கு முழங்கும் ஓசை கேட்டது…

ஓம் நமச்சிவாய….

ஓம் நமச்சிவாய…

என்ற கோசங்கள் கேட்க, கன்னத்தில் போட்டுக் கொண்டு இமை சிமிட்டாது பார்த்தபடி அமர்ந்திருந்த ஆண்டாள், "மகா தீபம் ஏத்தப் போறாங்க வானும்மா... வந்து பாரு..." என்று குரல் கொடுத்தார்.

தொலைக்காட்சியில், திருவண்ணாமலையின் மலை உச்சியில் நெயிட்ட கொப்பரைக் கொளுத்தப்பட்டதும்… ஆண்டாள், ‘அரோகரா… அரோகரா…’ என்று உணர்ச்சிவசத்துடன் பக்தியில் திளைக்க, வானதி பூஜை அறை விளக்கை ஏற்றி சாமி கும்பிடத் தொடங்கினாள்.

“பார்த்திபா… இதுகள கோலத்திட வைக்க வேணும். சிவப்பு கலர் குடுத்திருப்பன். அதுல ஒண்டு ஒண்டா வை.” என்று ஒளியில் மின்னிய விளக்குத் தட்டைத் தம்பியிடம் கொடுத்தாள்.

“வானுக்கா… இந்த விளக்குக்கு எண்ணெய் விடாம ஒரமா வச்சிக்க?” என்று கேட்டு ஒரு நெகிழி பையைத் தூக்கிக் காட்டினான்.

“அது வீட்டுக்கு இல்லை. நம்மட கடைக்கு.”

“கடைக்கா!! அங்க இன்னேரம் கரிகாலன் விளக்கு ஏத்திருப்பான்." என்று ஆண்டாள் சொல்லும் போதே, வேகமாகத் தன் சைக்கிளை எடுத்தாள்.

“வானும்மா… பாத்துப் போம்மா…” என்ற அக்கறையான ஆண்டாளின் குரல், தூர சென்ற பின்னரே காதில் விழுந்தது அவளுக்கு.

'ஆண்டாள் ஸ்டோர்' என்ற பலசரக்குக் கடை முன் சைக்கிளை அவசர அவசரமாக நிறுத்தினாள்.

அங்கு கரிகாலன் தீக்குச்சியைத் தீப்பெட்டியில் உரச முயன்றபடி நிற்க, அவனைத் தள்ளிவிட்டு விட்டு, தீப்பெட்டியை அபகரித்தாள்.

“நான் வருவன் எண்டு சொன்னன் தானே… பிறகு என்ன அவரசம்?" என்றபடி விளக்கை ஏற்றி விட்டு, தான் வாங்கி வந்த பிங்கான் விளக்குகளையும் ஏற்றி வாசலில் வைத்து, விட்டு நிமிரும் போது கரிகாலனின் பார்வை அவளைச் சுட்டது.

"தேங்காய் விளக்காம் காலாண்ணா... நேற்று ஆஃபிஸ் முடிச்சு வீட்டுக்கு வரேக்க ரோட்டோரத்துல கண்டன்.” என்று ஜொலித்துக் கொண்டிருந்த விளக்கை ரசித்துவிட்டு, ஏதும் நடவாதது போல் கல்லாவில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

"இந்த விளக்க நாங்க ஏத்தி வைக்க மாட்டோமாக்கும்! இதுக்காக சைக்கிள மிதிச்சி பறந்து வரணுமா?" எனச் சடைப்பாகக் கேட்க, அவனுக்குப் பதில் சொல்ல வாயைத் திறக்கும் முன் கடைக்குள் வந்தார் சகாயம்.

"பெரிப்பா... நல்ல மனசுக்காரங்களட கைல பொட்டியக் கொடுத்து தீபம் ஏற்றச் சொல்லுங்க. அப்பத்தான் சுபிட்சம் வளரும். அண்ணாவட கையில குடுக்கதீங்க." என்று உறக்கச் சொன்னவள் குனிந்து அவரின் காதில்,

"அவங்களிட மனசு மொத்தமும் கருகியது தான்.” என்று கரிகாலனின் சிடுசிடுத்த முகத்தைப் பார்த்தபடி சொல்ல, அவளின் தலையில் வலிக்காது கொட்டினான்.

"வாலு... வாலு... உன்னை யாரு கடைக்கு வரச் சொன்னது? சாயங்காலம் இங்க டிராபக் அதிகமா இருக்கும். இத்தன காரு ஆட்டோக்கு மத்தியில சைக்கிள எடுத்திட்டு வரணுமா?"

"என்ர கடைக்கு நான் வாராமல் வேறு ஆர் வருவாங்க? சொல்லுங்க பெரியப்பா இவருக்கு. இது என்ர கடை, இங்க நான் எந்த நேரமும் வரலாம் எண்டு."

"ஏன்டா நல்ல நாள் அதுவுமா பிள்ளைக்கிட்ட வம்பு பண்ணீட்டு இருக்க!" என்றவர்,

"இது உன் கடை தாம்மா... உன்னை யாரும் வரக் கூடாதுன்னு சொல்லவே முடியாது. எப்ப வேணும்னாலும் வா. ஆனா கவனமா மட்டும் வா. ஆறு மணிங்கிறதெல்லாம் பீக் ஹவர்ஸ். போக்குவரத்து அதிகமா இருக்கும். நீ கவனமா வந்தாலும் எதிர்ல வர்றவனும் கவனமா வரணுல!" என்று கரிகாலனின் வார்த்தைகளில் மென்மை கலந்து சொன்னவருக்குத் தலை அசைப்பைப் புன்னகையுடன் தந்தாள்.

"இந்தாம்மா பிரசாதம்..." என்று திருநீற்றை நீட்ட, பவ்யமாக எழுந்து நின்று பயபக்தியுடன் நெற்றியில் இட்டுக் கொண்டவள், விறைப்பாய் நின்றிருந்த கரிகாலனின் உயரத்திற்கும் எக்கி பூசி விட்டாள்.

"இனியாது வார்த்தைக்கு வலிக்காம பெரியப்பா மாதிரி கதைச்சுப் பழகுங்க. இல்லையெண்டால் கலியாணயம் குழந்தை எண்டு வரும் காலம், பிரச்சனைகளும் ஜோடி போட்டுக் கொண்டு வரும்."

"வந்தா நீ மத்தியஸ்தம் பண்ணி வை."

"எனக்கு வேறெந்த வேலையும் இருக்காது எண்டு நினைச்சீங்களா?" என்று இதழ் சுழித்து சொல்ல, தங்கையின் தலையில் கை வைத்து ஆட்டியவன் கடைக்குள் சென்றான்.

தந்தை, மகன் என இருவரும் உள்ளுக்குள் வேலையாக இருக்க, வானதி எழுது பொருள்கள் இருக்குமிடத்திற்குச் சென்று பெரிய ஸ்கெட்ச் பாக்ஸ், ப்ரெஸ் பென், ஜெல் பென், ப்ளாக் மார்க்கர் போன்ற இத்தியாதிகளை எடுத்து தன் பைக்குள் வைத்துக் கொண்டாள்.

மணி பத்தை நெருங்கியதும், கடையின் சட்டரை இழுத்து மூடினர்.

அதுவும் பார்த்திபன், "அம்மா கடையப் பூட்டீட்டு வீட்டுக்கு வரச் சொன்னாங்க." என்று வந்ததால்.

"அதைச் சொல்லத்தான் இவ்வளவு தூரம் வந்தியா. கோல் எடுத்திருக்கலாம் தானே." என்றாள் வானதி.

"ஃபோன பிடிங்கி வச்சிட்டாங்க வானுக்கா.”

"பொய்யா கதைக்க வேணாம் பார்த்திபா... நீயும் அவங்களட சேந்து, பாக்க வேண்டிய சீரியல் மொத்தத்தையும் பாத்து, கண்ணீர் வடிச்சுப் போட்டு... இங்கால வந்து பெரியம்மாவை சீரியல் விசர் எண்டு கதைக்கிறாய்." என்று வானதி சரியாய்க் கணித்துச் சொல்ல,

"ண்ணா, நான் அம்மாவ அப்படிச் சொல்லல. வானுக்கா கோர்த்து விடுறா?"

“எனக்குத் தெரியும் டா உன்னைப் பத்தி. இன்னிக்கு *** சீரியல்ல என்ன நடந்துச்சி?” என்று அவனும் பார்த்திபனைக் கேலி செய்யத் தொடங்கினான்.

பிள்ளைகள் மூவரின் கலகலப்பில் அகம் மகிழ்ந்து போனவர் கடையை மூடிவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டார்.

பார்த்திபன், சகாயத்தின் பைக்கில் ஏறிக் கொள்ள,

"நீயும் வண்டில ஏறிக்க. நான் சைக்கிள எடுத்திட்டு வர்றேன்."

"உங்கள நம்பி என்ர சைக்கிளல ஒப்படைக்க மாட்டன் நான்." என்றதால் கரிகாலன் சைக்கிளை ஓட்ட, அவனுக்குப் பின்னால் ஏறிக் கொண்டாள். இது கல்லடியில் இருந்த அவளின் மிதிவண்டி தான். இறக்குமதி செய்திருந்தான் கரிகாலன்.

மற்றவர்களிடம் எப்படியோ... கரிகாலனிடம் மட்டும் அவளுக்கு அன்பாகப் பேசத் தோன்றவில்லை. வம்பு தான் செய்வாள். ஆனால் அவன் அதை அவமதிப்பாக கருதுவதில்லை.

ஆரம்பத்தில் முட்டிக் கொண்டாலும், பின் நாள்களில் இருவருக்கும் இடையே இருந்த இணக்கம் இனிமையானதாய் மாறியது.

BBA படித்து விட்டு, இந்தியாவில் பல கிளைகளைக் கொண்ட Asco shipping agency என்ற ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சி நிலையில் பணி செய்து கொண்டிருக்கிறாள்.

அன்றைய நாளில் நடந்ததைக் கதையாகச் சொல்லிக் கொண்டே வர, சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த சைக்கிளின் வேகம் குறைவதைக் கண்ட வானதி, கரிகாலனின் முதுகை எக்கிப் பார்த்தாள். பார்வை S.S Mart என்ற பல் பொருள் அங்காடியின் மீது விழுந்தது.

அதன் கல்லாவில் ஒரு மனிதர், கடையில் உள்ள சீசிடிவி காட்சிகளைத் திரையில் பார்த்தபடி அமர்ந்திருக்க, உள்ளம் கொதித்தது இருவருக்குமே.

அதன் முதலாளியாய், இருந்திருக்க வேண்டியவர் சகாயம். அவரைத் துரத்தி விட்டு, யாரோ அந்த இடத்தை நிரப்புவதைக் கண்டு ஆத்திரம் மூண்டது.

அந்தப் பல்பொருள் அங்காடியைத் தவசிராஜன் தான் ஆரம்பித்தார். அவருக்குச் சிவதாண்டவம்,‌ சகாயம், செந்தூர் என மூன்று ஆண் பிள்ளைகளும், வெண்மதி என்ற பொண்ணும் உண்டு.

அங்காடியை, முழுமையாகப் பொறுப்பெடுத்து வந்தது சகாயம் தான்.

கரிகாலனுடன் வேண்டா வெறுப்பாக சென்னை வந்த வானதியை விரும்பி வரவேற்றது ஆண்டாள் மட்டும் தான். மற்றவர்கள் அவளை வேற்றுகிரகவாசியைப் போல் பார்த்தனர்.

“ஓசிச் சோறு திண்ணுட்டு உடம்ப வளக்காம, வீட்டுல கூட மாட வேலை செய்யச் சொல்லு.” என்று மாமியார் சொல்ல, தலையை மட்டும் தான் அசைக்க முடிந்தது ஆண்டாளால். வானதியும், சின்னச் சின்ன வேலைகளை, அவருக்கு உதவியாக செய்து வந்தாள்.

அதையே சாக்காக வைத்து வீட்டு வேலைகளை வானதியின் தலையில் கட்டி வேலைக்காரியாக மாற்றும் முயற்சியில் மற்ற இரு மருமகள்களும் இறங்க, வானதியிடம் அது எடுபடவில்லை.

“நாங்கள் ஒண்டும் கஞ்சி கேட்டு இங்காள வர இல்ல. எங்களுக்கும் காணியும் அப்பா அம்மாட சேமிப்பும் இருக்கு. யாருட உதவி இல்லாமையும் பிழைக்கும் தைரியத்தை எங்கட அப்பா அம்மா எங்களுக்கு ஊட்டி விட்டுடு தான் போயிருக்காங்க. நாங்க இடைஞ்சலா ஒண்டும் உங்களட வீட்டுல உக்காரல. உங்களட வீட்டாக்கள் தான் நாங்கள் வேண்டாம் வேண்டாம் எண்டு கதைச்சும் வலுக்காட்டாயமாகக் கூட்டிக் கொண்டு வந்த. உங்களுக்கு ஊழியம் செய்து போடத்தான் எங்கள இழுத்துக் கொண்டு வர்ற விவரம் தெரிஞ்சிருந்தா நாங்கள் வந்திருக்கவே மாட்டம்.” என்றவளுக்குக் கோபம் முழுவதும் கரிகாலனின் மீது தான். அவன் தானே அழைத்து வந்தது.

மற்றவர்களின் ஜாடை பேச்சைக் கடந்து செல்ல முடியாது, வாக்குவாதம் செய்தாள் வானதி. ஒரு முறை சிவதாண்டவத்தின் மகள் சுஜித்ரா, எதோ ஒரு விழாவில் வைத்து பார்த்திபனை அனைவர் முன்னிலையிலும் அகதி என்றும் அநாதை என்றும் பேசி காயப்படுத்த,

‘சுஜித்ரா தாக்கப்பட்டாரா! எங்கே? எப்படி?’ என்று தலைப்புச் செய்தியில் போடும் வண்ணம் மண்டையை உடைத்து விட்டாள் வானதி.

“எங்களுக்கு அகதியா உங்கட வீட்டுல வாழ விருப்பமில்லை. அநாதையா எண்டாலும் எங்கட நாட்டில் பிழைத்துச் கொள்ளுவம்.” என்று கரிகாலனிடம் கண்ணீருடன் கூறி விட்டு, வீட்டை விட்டே சென்றாள்.

ஆண்டாள் தான் துடித்து போனார். அதுவரை, ‘நல்ல படிப்பும், தங்க வீடும் கொடுத்திருக்கோம். இது போதாதா இவர்களுக்கு!’ என்று அவர்களைக் கண்டுகொள்ளாது இருந்த சகாயத்தையும், ஆண்டாளின் குமுறல்கள் உளுக்கியது.

“வானதியயும் பார்த்திபனையும் நாம தத்தெடுத்துக்கலாம் ப்பா. யாரும் அவங்கள அநாதன்னு சொல்லக் கூடாது.” என்றவன் அதற்கான முழு முயற்சியிலும் இறங்கினான்.

“இனி உன்னோட அடையாளம் கரிகாலனோட தம்பி. சகாயத்தோட மகன். தைரியாமா எங்கனாலும் சொல்லணும் நான் அகதி இல்லன்னு.” என்று பார்த்திபனிடம் கூறிய கரிகாலனை முறைத்தவள்,

‘ஆமாம் இவரட தம்பி எண்டு சொன்னால் மட்டும் அகதி எண்டவள் அடுத்த வார்த்தை பேசாது ஒதுங்கிடுவாளாக்கும்! தம்பி எண்டு பதவி கொடுக்கிறார். யாருக்கு வேணும் அது.’ என இகழ்ச்சியாக இதழ் வளைத்தாள்.

“இது என்ன தர்ம சத்திரமா? கண்டது கடியதுக்களுக்குச் சோத்தாக்கிப் போட்டு, துணி மணி எடுத்துக் குடுத்து, படிக்க வைக்கிறது மட்டுமில்லாம தத்தெடுத்து, சொந்த பிள்ளைங்களாட்டம் சொத்துல பங்கு குடுக்கறதுக்கு.” என்று சிவதாண்டவம் பிரச்சனை செய்தார்.

சொத்துக்கள் பிரிக்கப்பட்டது. சகாயம் வஞ்சிக்கப்பட்டார், வானதியையும் பார்த்திபனையும் தத்தெடுத்தைக் காரணம் காட்டி.

இதெல்லாம் நடந்து முடிந்து ஐந்து ஆண்டுகள் இருக்கும். வானதியும், இலங்கையை விட்டு வந்து ஒன்பது ஆண்டுகள் முடிந்து விட்டன.

இறுகிய தேகத்துடன் மிதிவண்டியின் வேகத்தைக் கூட்டியவனின் முதுகில் தலை சாய்த்தாள் வானதி.

"நான் அப்பவே சொன்னேன் தானே. கஷ்ட காலங்களை யாரும் கடல் கடந்து கையைப் பிடிச்சி கொண்டு இழுத்து வரக் கூடாது எண்டு. கேட்டிருந்தால் இப்படித் தூர நிண்டு புதினம் பாக்காம‍, உள்ளுக்கு போய் முதலாளியா காலுக்கு மேல கால் போட்டு இருந்து இருக்கலாம். வசதியாய் வாழ்ந்திருக்கலாம்." என்று சின்னக் குரலில் சொல்ல,

"நானும் அப்பவே சொன்னேனே." என்று சைக்கிளை நிறுத்திய போது வீடு வந்திருந்தது.

“நீயும் இந்தக் குடும்பத்துல ஒருத்தி தான் வானதி. கஷ்டமோ சுகமோ நாம ஒன்னாத்தான் இருக்கணும். இங்க நானும். அங்க நீங்களும் தனித் தனியா அவதிப் படுறத விட, கஷ்ட காலங்கள சேந்தே கடக்குறது தான் ரொம்பச் சிறந்தது.” என்றவனை இமை சுருக்கிப் பார்க்க,

“உங்களை நான் இங்க கூட்டீட்டு வரலன்னாலும் இப்படி ஒரு நிலைமை என்னைக்காது ஒரு நாள் கட்டாயம் வந்திருக்கும். நீங்க வந்ததால அந்த நாள் சீக்கிரமா வந்திடுச்சி. அவ்ளோ தான். வேற எதையும் யோசிக்காத. வா…” என்று இழுத்துச் சென்றான் கரிகாலன்.

 
Last edited by a moderator:

Kalai Karthi

Active member
கரிகாலன் வானதி ஆண்டாள் சகாயம் பார்த்திபன் கியூட்.
 

Gowri Karthikeyan

Well-known member
பரவலா.....சகாயம் & ஆண்டாள் ஃபேமிலி அழகா அவங்களை உள்வாங்கிகிச்சி.....
செந்தூர் குடும்பம் இல்லையா?????
அவரும் ஒன்னும் சொல்லலையா
 
Top Bottom