• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தேன் நாட்டு பைங்கிளி - 4

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்: 4

அதி காலைப் பொழுது...

புதிய தொடக்கம். புதிய கனவுகளுடன் பிறக்கும் புதிய நாள்.

அதை, நாம் நினைக்கும் மாத்திரத்தில், நம் மனம் விரும்பும் நொடியில் ஆரம்பிக்க வேண்டும் என்பதே பலரின் ஆசை.

நம் நாயகனுக்கும் அதே ஆசை தான் போலும்...

ஆதலால் தான், மணி எட்டு நாற்பதைத் தாண்டியும், சயனத்தில் கிடக்கிறான். கண்ணாடி தடுப்புகளை மூடியிருந்த திரையையும் ஊடுறுவி வந்த இளம் சூரியனின் வெளிச்சம், முகத்தை அறைந்தும், எழ மனமில்லாது துயில் கொள்கிறான்.

Pain!
You made me a, you made me a believer, believer
Pain!
You break me down and build me up, believer, believer

ஆங்கில பாடல் அறைக்குள் அலறியது...

அது அவனின் அலைபேசி ரிங் டோன்...

பாடலின் பொருளைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் வலிகள் தான் வாழ்க்கைக்கான மூலாதாரம். அது நம்மை வீழ்ந்த நினைக்கும் பலவீனம் அல்ல. நம்மைச் செதுக்கும் உளி. ஆதலால் உடைந்து விடாது உன்னை உருவாக்கு என்று ஆங்கிலத்தில் பாடிக் கொண்டிருந்தது அது.

தன்னம்பிக்கை தரும் தத்துவப்பாடல் தான்போலும்.

அது அந்த 28 வயது இளம் காளைக்கு மிகவும் பிடித்தமான வரிகள். பொருத்தமானதும் கூட.

அப்படி என்ன வலி இவனுக்கு?

அது... என்னவென்றால்...

மீண்டும் அலறியது ஆங்கிலப் பாடல்...

இத்தோடு அது அடித்து ஓய்வது பத்தாவது முறையாகும். பாவம் வலி பற்றிப் பாடிக் கொண்டிருந்த அதற்கே வலி வந்துவிடும் என்கின்ற பரிதாப நிலையில் இசைத்துக் கொண்டிருந்தது.

முதல் முறை இசைக்கத் தொடங்கியதும், எடுத்து யார் எனப் பார்த்தான் தான். ஆனால் அட்டன் செய்து காதில் வைக்கும் எண்ணம் வரவில்லை. குப்புறப் படுத்துக் கொண்டு தலையணையைத் தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்து,

'விட்டு விட்டு சென்று விடுவேன்.' என்று மிரட்டிய நித்திரா தேவியின், 'நீயும் எனை விட்டு விட்டு சென்று விடாதே. இன்றைய உலகில் எனை அணைத்துக் கொள்ள உனை அன்றி யாரும் இல்லை.' கரம்பற்றிக் கண்களுக்குள் ஒற்றிக் கொண்டான் அருள்மொழிவர்மன்.

இந்தக் கதையின் நாயகன்.

காதலிலே தோல்வியுற்றவன் என்று கண்டவர்கள் உடனே கண்டுகொள்ளும் வண்ணம் அடந்த தாடியைத் தாடையின் மேல் வளர்த்து வைத்திருந்தான். அடர்ந்திருந்தாலும் புல் தரையைச் சீராக வெட்டி வைத்தது போல் இருந்தது அது. தலையில் முடியை வெட்டுவது இல்லை போலும்... அலை அலையாய்ச் சுருண்டு சுருண்டு நீளமாக வளர்ந்திருந்தது. தோள்பட்டையைத் தொடும் அளவிற்கு இல்லை. பிடரியைத் தொடும் சிறிய பங்க்.

போர்வை மூடி குப்புறக் கிடந்ததால் வேறு எதுவும் வர்ணிப்பதற்கு ஏதுவாக இல்லை.

அலைபேசி ஓய்ந்து அடுத்த முறை அலறியும் அட்டன் செய்யாது இருக்க,

"டேய் வர்மா..." என்ற கூவலுடன் அறைக்குள் நுழைந்தான் ஆகாஷ். அவனின் நண்பன். இருவரும் ஒன்றாக வீடு எடுத்து தங்கத் தொடங்கி மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன.

"வர்மா, அம்மாட்ட இருந்து கால் வருது டா..." என்று நண்பனை உசுப்பி விட்டான். ஆனால் அவனோ,

'எங்கிட்ட ஏன் சொல்ற?' என்பது போல் தலை தூக்காது இருக்க,

"கால் பண்றது என்னோட அம்மா இல்ல. உன்னோட அம்மாடா..." என்றபோதும் அவனிடம் அசைவில்லை. வர்மாவின் அலைபேசியை எடுத்துப்பார்த்தவன்,

"பதினஞ்சி முறை கால் பண்ணிருக்காங்க. எதாவது எமர்ஜென்சியா இருக்கப் போதுடா. என்னென்னு கேளு." என்று அழைப்பு ஓயும் முன் அட்டன் செய்து வர்மாவின் காதில் வைத்தான். காதில் விழுந்த அன்னையின் குரலுக்கும் அசையாது அவன் கிடக்க,

"ஹலோ அம்மா... " என்றான் ஆகாஷ். அந்தப் பக்கம் இருந்து வேகமாக கேள்விக் கணைகள் வந்திருக்கவேண்டும்,

"ஐயோ! அப்படிலாம் இல்லம்மா... வர்மா ஃபோன சைலண்ட்ல போட்டுட்டு தூக்கிட்டு இருக்கான் ம்மா. நேத்து, மும்பைல இருந்து வர்றதுக்கே நைட் பத்து மணி ஆச்சிம்மா. ஒரு வாரம் அங்க பயங்கர வேலை ம்மா. சரியாக் கூட தூங்கிருக்க மாட்டான்." என்றவன், எழுந்து குளியலறைக்குள் சென்ற நண்பனைக் காட்டிக்கொடுக்காது பேச,

"..."

"ஐய்யோ... ட்ரிங்க்ஸ்லாம் எடுக்கலம்மா... அதெல்லாத்தையும் வர்மா தொட்டு பல வர்ஷமாச்சிம்மா... மும்பைக்குப் போனது வேலை சம்மந்தமாம்மா. நம்புங்க..." என்று வர்மாவின் அன்னை வெண்மதியைச் சமாதானம் செய்ய, மீண்டும் ஆங்கிலத்தில் அலறியது வர்மாவின் அலைபேசி.

"ஐயோ!! சைலண்ட் மோடுல வச்சிட்டு தூங்குறன்னு சொல்லி வச்சிருக்கேன். இது வேற இப்படி அலறுது! எங்க அந்த ஃபோனு?” என வர்மாவின் அலைபேசியைத் தேட, குளியலறையில் இருந்து வந்தவன் அட்டன் செய்து காதில் வைத்து பேசத்தொடங்கினான். அதுவும் சத்தமாக.

'பெத்த தாய் இத்தனவாட்டிக் கூப்பிட்டும் எடுக்காதவெ! எவனோ ஒருத்தன் ஒருக்கக் கூப்பிட்டான்னதும் கக்கூஸ்ல இருந்து ஓடியாரான் பாரு. இது மட்டும் தெரிஞ்சா அம்மா மனசு சங்கட்டப்படாது!' என்று யோசிக்கும் போதே,

"சைலண்ட் மோடு போட்டுட்டு தூக்குறான்!!” என்றார் நக்கலாக.

“ம்மா… அது…”

“பொய் தான சொன்ன?"

"இல்லம்மா… இவ்ளோ நேரம் தூங்கிட்டு தான் இருந்தான்.”

"சமாளிக்காத ஆகாஷ். அதான் அலறுச்சே இங்கிலீஷ் பாட்டு. அது அவனோட ரிங் டோன் தான?" என்றார் காட்டமாக.

எப்படிச் சமாளிப்பது என்று புரியாது அவன் முழிக்க,

"வாய்ல இருந்து வர்றது அத்தனையும் பொய். இதுவரை உண்மையச் சொல்லாம விட்டு, நடந்தது போதலயா! இன்னும் ஏன் எங்கிட்ட எல்லாத்தையும் மறைச்சிட்டே இருக்கீங்க? நாளைக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சின்னா நட்டம் அவனைப் பெத்த எனக்கு தான்." என்றவருக்குக் கோபம் வந்து விட்டது போலும். சூடாக நாலு வார்த்தைக் கேட்ட பின்னரே அமைதியானார்.

கடந்த மூன்றரை வருடங்களாகவே தன்னிடம் பேசாது தன்னைப் புறக்கணிக்கும் மகனை எண்ணி கண்ணில் நீர் சுரந்தது. தாயை மட்டுமல்ல அவனுக்கு என இருக்கும் முழு குடும்பத்தையும் ஒதுக்கி விட்டல்லவா வாழ்கிறான். அதற்கானக் காரணம் தெரிய வந்தபோது அவருமே உடைந்துவிட்டார். மகன், காதல் செய்திருப்பான் என்பதையே அறியாதவர், அவன் தற்கொலை வரை செல்வான் என்று கனவிலும் எண்ணவில்லை.

சில காலம் மறுவாழ்வு மையத்திற்கு சென்ற மகனின் வாழ்க்கையும், வீட்டிற்கே வராது பிடிவாதம் பிடிக்கும் மகனின் குணமும் அவருக்குக் கவலைகளைத் தந்திருந்தது. அவனின் எதிர்காலத்தை எண்ணி தன் நலத்தை நலிவடையச் செய்து கொண்டிருக்கிறார்.

"இன்னைக்கி சஷ்டி ஆகாஷ். நான் கோயிலுக்குப் போகணும். அவனால வந்து கூட்டீட்டு போக முடியுமான்னு கேளேன்." என்றவருக்கு மகன் வரமாட்டான் என்று தெரியும். ஆனாலும் தினமும், 'வீட்டிற்கு வரச் சொல்.' என்பதை வாடிக்கையாக்கி வைத்திருந்தார்.

இம்முறை உண்மையைச் சொல்லிவிடும் உத்வேகத்தில்,

"அம்மா... அது..." என ஆகாஷ் சங்கட்டத்துடன் நெளிய,

"எனக்கு அருள பாக்கணும் போல இருக்கு ஆகாஷ். நான் வேணும்னா அங்க வரட்டுமா?" என்றார் இறைஞ்சிதலுடன்.

"ம்மா... என்னம்மா இது. இது உங்க வீடும்மா. நீங்க வர யாருக்கிட்ட அனுமதி கேக்கணும். உடனே புறப்பட்டு வாங்க. இல்ல... ரெடியா இருங்க. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்." என்க, ஃபோனில் பேசி முடித்துவிட்டு வந்த வர்மாவின் காதில் அது கேட்டுவிட்டது.

'அவர்கள் இங்கு வந்தால் இனி நான் இங்கு இருக்கமாட்டேன்.' என்பது போல் சைகை செய்து மிரட்டினான். அது ஆகாஷிற்குப்‌ புரிந்ததோ இல்லயோ வெண்மதிக்குப் புரிந்தது.

"இருக்கட்டும் ப்பா. அவனுக்கு நான் வர்றது பிடிக்காதுன்னு தெரியும். அவனா என்னைப் பாக்க இந்த வீட்டுக்கு ஒரு நாள் வருவாங்கிற நம்பிக்கை இருக்கு." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தார் வருத்தத்துடன்.

"என்ன! வழக்கமான பல்லவியா!." என நக்கலாகக் கேட்க,

அவனிடம் வெண்மதி கூறியதைச் சொல்லி, "ரொம்ப வருத்தப்பட்டாங்க மச்சான். உன்னை வீட்டுக்கு வரச் சொன்னாங்க. இன்னைக்கி கோயிலுக்குப் போகணும்னு..." எனும் போதே, தலைக்கு மேல் கையை உயர்த்திக் கும்பிட்டு, 'என்னால் எங்கும் செல்ல முடியாது.' என்பது போல் செய்ய,

"டேய்... அது உன் அம்மாடா... யாருக்காக இல்லைன்னாலும் அவங்களுக்காகவாது நடந்ததெல்லாத்தையும் மறந்திட்டு அந்த வீட்டுக்குப் போயேன். உம்மேல உயிரையே வச்சிருக்கங்க டா அவங்க... உன்னை வர வைக்கிறேன்னு என்னத்தையாவது செஞ்சுக்கிட்டா என்ன டா பண்ணுவ... பாவம் டா." என்று வெண்மதிக்காகப் பேச,

"யாரு பாவம்? அவங்களா! ஹிம்..." என்று இகழ்ச்சியாகப் புன்னகைத்தான். முகத்தைத் துவலையில் துடைத்துவிட்டு, சமையலறை சென்று டீப் பாத்திரத்தில் நீர் ஊற்றி, அடுப்பில் ஏற்றி வைத்தான்.

"என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது வர்மா. ஆனா நீ பண்றது தப்பு. கோபமும் ஆத்திரமும் யார் மேல இருக்கோ அவங்க கிட்ட காட்டு. அம்மா என்னடா பண்ணாங்க.?"

"பண்ணல தான்... எதுவுமே பண்ணல தான்." என்றவன் எதுவும் சொல்லாது பால்கனிக்குச் சென்றான்.

அவனைச் சில நொடிகள் ஊன்றிக் கவனித்தான் ஆகாஷ். வீட்டை விட்டு வெளியேறியதற்கும், குடும்பத்தாரை ஒதுக்குவதற்கும் என்ன காரணம் என்று மூன்று வருடமாகக் கேட்கிறான். ஆனால் பதில் கிடைத்தது இல்லை.

காதல் தோல்வி என்று மட்டும் தெரியும். அது போன்ற சமயத்தில் அதைக் கடந்து வர வீட்டாரின் ஆதரவு அவசியம் தேவை.

வர்மாவிற்கு வெண்மதியின் அன்பு கிடைத்தும், அதை ஏற்காது, அழுத்தமாகத் தன் மனத்தைப் பூட்டிக் கொண்டவனிடம் எதுவும் சொல்ல முடியாது என்று உணர்ந்து குளியலறைக்குள் புகுந்துகொண்டான்.

இரு சாலைகளுக்கு அந்தப் பக்கம் கடல். இவர்கள் இருப்பதோ நான்கு அடுக்குகளைக் கொண்ட குடியிருப்பின் மூன்றாவது தளம். எட்டிப் பார்த்தால் கடற்கரை.

அதை ரசித்தபடி, சுவற்றில் சாய்ந்துகொண்டு டீயை உறிஞ்சத் தொடங்கிவன், 'இந்த டீத் தண்ணீர் போல் தன் மனமும் ஒரு நாள் தன் கொதிப்பை நிறுத்திவிட்டு அடங்கும். அன்று அன்னையின் அன்பில் மூழ்கி முத்தெடுக்கலாம். அதற்கு முன் அவர்களைத் தன் வார்த்தைகளாலும் செயல்களாலும் சுட்டு விடுவேன்.' என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டு வேடிக்கைப்பார்க்கலானான்.

ரவிகிருஷ்ணமூர்த்தி - வெண்மதி தம்பதியினரின் இரண்டாவது மகன் தான் அருள்மொழிவர்மன். மூத்தவன் மணிமாறன்.

ரவிகிருஷ்ணமூர்த்தி, பைனான்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கு எல்லாமே பணம் தான். பிள்ளைகள் தன் பேச்சிற்கு தலையைத் ஆட்ட வேண்டும் என்று எதிர் பார்ப்பவர்.

வெண்மதியும் மாறனும் அவரின் விரும்பப்படி தலை ஆட்டி வைக்க, வர்மா அப்படிச் செய்யவில்லை.

என்னேரமும் தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு நிகழ்ந்துகொண்டே இருக்கும். ஆதலால் வர்மா, தவசிராஜன் வீட்டில் தன் தாய் மாமன்களுடன் தான் வளர்ந்தான். அங்கு அவனுக்கு ராஜ உபசரிப்பு.

எதற்கும் கண்டிப்பான குரல் காட்டாத குடும்பத்தாரால் வளர்க்கப்பட்டவன். ரவி, வாரி இறைக்கும் பணக்குவியலுக்கு மத்தியில் வளர்ந்தவன். எதைப் பற்றியும் கவலைப்பட்டதே இல்லை. அவன் நினைத்தது எல்லாம் உடனுக்குடனே அவனிடம் வந்து சேரும்.

ஆடம்பரமெல்லாம் அவனின் அத்தியாவசியத் தேவைகளாகிப்போனது.

மொத்தத்தில் பணக்கார வீட்டு கன்றுக் குட்டியாய் வெண்மதியின் அன்பில் வளர்ந்தவன் அவன்.

மணிமாறன் கல்லூரி முடித்த கையோடு ரவியுடன் தொழிலில் இறங்கினான். நான்கு ஆண்டுகளுக்கு முன் அவனுக்கு வெண்மதியின் அண்ணன் மகள் சுஜித்ராவுடன் திருமணமும் நடந்து, குழந்தை, குடும்பம், தொழில் எனச் சந்தோஷமாக உள்ளான்.

ஆனால் வர்மா...

கல்லூரி முடித்த கையோடு தந்தையின் அலுவலகம் சென்றான். அவனுக்கும் அவருக்கும் தான் ஆகாதே.

"என்னோட காசுல தான் நீ ஆடம்பரச் செலவு செஞ்சிட்டுத் திரியுற." என்று கடிந்ததும், ரோசம் வரப்பெற்றவன் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு தனக்கென ஒரு வேலையைத் தேடிக்கொண்டான்.

அது தான் தொடக்கம். இல்லை அவனின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு அஸ்தமனம்.

அது பலரின் உண்மை முகத்தை அவனுக்குக் காட்டிக் கொடுத்து அதிகமான வலியைத் தந்தது. அதில் கடுமையான வலி தந்த ஒரு முகம் தான் அவனின் காதலி.

பதின்ம வயதில் தொடங்கியது அவனின் காதல் காலம்.

வேறு வேலை தேடுகிறேன் என்று நேர்காணலுக்குச் செல்லத்தொடங்கினானோ! அன்று, “நமக்குள்ள சரிவராது. போதும் இத்தோட நாம நிறுத்திக்குவோம். லெட்ஸ் ப்ரேக்கப்.” என்றாள்.

காரணம் என்னவென்ற போது, “உன்னோட அப்பாவ உன்னோட லைஃப்ல இருந்து எடுத்திட்டா நீ வெறும் ஜீரோ… நான் உங்கூட இருக்கணும்னா உன்னோட அண்ணன மாதிரி குடும்பத் தொழில்ல கவனம் வை. ஆயிரம் ரெண்டாயிரம்னு வாங்குற கூலி வேலைக்கித்தான் போவேன்னா… என்னை விட்டுடு. என்னால உனக்குக் காதலியா மட்டுமில்ல ஃப்ரெண்டா கூட இருக்க முடியாது.” என்றுவிட்டு சென்றாள்.

அவளுக்கு வர்மாவின் பிடிவாதம் நன்கு தெரியும். எதையும் டேக் இட் ஈசியாக, அலட்சியமாக எடுத்துக்கொள்ளும் வர்மா, ஒரு விடயத்தில் தீவிரமாக முடிவெடுத்து விட்டான் என்றால் எளிதில் தன்னை மாற்றிக் கொள்ளமாட்டான் என்று. அதனால் உறவை முறித்துக்கொண்டு, அடுத்த சில நாட்களிலேயே திருமணம் செய்துகொண்டாள்.

அவளை மறக்கவும் முடியாது, அடுத்தவன் மனைவியாய்ப் பார்க்கவும் முடியாது தவித்தவன், மீட்டு வரப்பட்டு மூன்றாண்டுகள் ஆனாலும், அருள்மொழிவர்மன் பழைய அருள்மொழியாக இல்லை. சிரிக்கும் உதடுகளைத் தாடி மீசைக்குள் மறைத்துக்கொண்டு இறுக்கமாகவே வளம் வருகிறான்.
 
Last edited:
Top Bottom