தேன் நாட்டு பைங்கிளி - 9

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,450
113
Germany
அத்தியாயம்: 9


குளியலறையில் தண்ணீர் கொட்டும் சத்தம் நின்று போனது. துண்டால் தன் ஈரக் கேசத்தைத் துவட்டியபடியே வந்தவன், தனக்கான உடையைத் தேர்வு செய்து அணியத்தொடங்கினான்.

ஆலிவ் க்ரின் நிறத்தில் வேலைப்பாடுகள் ஏதுமில்லாத சட்டை. அதற்குப்‌ பொருத்தமான பீஜ் நிறத்தில் கால்சட்டை. டக்கின் செய்துகொண்டே கண்ணாடி முன் நின்றவன் தன் அடர்ந்த சிகையைக் கோதிவிட்டு, அலுவலகத்திற்கானக் கோப்புகள் மற்றும் மடிக்கணினியை எடுத்துவைத்தான்.

அப்பொழுது அவனின் பார்வை மேஜையில் இருந்த மாதாந்திர நாள்காட்டியின் மீது விழுந்தது.

"இன்னைக்கு வெனஸ்டேவா!" என்றபோது அவனின் இதழ்களில் பூத்த புன்னகை அழகாக இருந்தது. மனத்தின் பூரிப்பு புன்னகையாக வெளி வந்துவிட்டது.

"எப்படி மறந்தேன்!" என்று தனக்குத் தானே பேசியபடி, வேகமாக ஹாலிற்கு வந்தான். பையை சோஃபாவில் கிடத்திவிட்டு, "இன்னைக்கி புதன்கிழமை ஆகாஷ்." என்று சந்தோஷமாக சொல்லியவன், மேடாவில் இருந்த காகிதக் குவியலில் எதையோ தேடினான்.

"ஆமாம். புதன்கிழமை தான். அதுக்கு என்ன?" என்ற ஆகாஷ் உணவு மேஜையில் பாத்திரங்களைப் பரத்திக்கொண்டிருந்தான்.

வெண்மதி மகனுக்குப் பிடித்த ரவா இட்லியை நான்கு வகை சட்னிகளுடன் சேர்த்து கொடுத்துவிட்டிருந்தார்.

"ம்... வாசமே பிச்சு உதறுது." என்றபடி ஆகாஷ் தட்டில் எடுத்து வைத்து உண்ணத்தொடங்கினான்.

"டேய்... ஆகாஷ்... காணும் டா அத." என்ற வர்மா ஹாலையே இரண்டாக்கித் தேடுதலை விடாதிருக்க,

"என்ன டா காணும்?" என்ற ஆகாஷின் தெளிவற்றக் குரல், வாயில் ரவா இட்டிலியைச் சொருகியதால் வந்தது.

"இன்னைக்கி புதன் கிழமை." என்றான் வர்மா அழுத்தமாக.

"அதுக்கு!! பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு பழமொழி சொல்லணுமா?. சாரி எனக்கு அதெல்லாம் தேவையில்லாதது. ஏன்னா எனக்கு பொண்ணு கிடைச்சிருச்சி. உனக்குத்தான் கிடைக்கல. பாக்குற பொம்பளப் பிள்ளைங்கல பச்சை மிளகாயா நினைச்சி லுக்கு விடுறத நிப்பாட்டு. உடனே செட்டாகிடும்." என்றவனின் முதுகில் தட்டி, எங்கே என்று மல்லுக்கு நின்றான் வர்மா.

அவனோ, "எனக்குத் தெரியாது டா." என்றுவிட, தங்கள் குடியிருப்பின் காவலாளிக்கு அழைத்தான்.

அவன் தேடிய ஒன்றை அவன் வீட்டில் சேர்த்துவிட்டதாக சொல்ல,

"ஆகாஷ், விளையாடாத... செக்யூரிட்டி உங்கிட்டதான் குடுத்ததா சொல்றாரு. எங்க அது?" என்று கோபமாக நண்பனின் முன்வந்து நின்றான்.

"முதல்ல நீ சாப்பிடு. ஆறிடும்... அப்றமா..." எனும் போது வர்மா அவனின் கழுத்தை நெறித்திருந்தான்.

"மரியாதையா எடுத்துக் குடுத்திடு."

"விடுடா கொலகாரப் பாவி. உன்னை நண்பனா நினைச்சு வீட்டுல தங்க விட்டதுக்கு நல்லா காட்டுற டா உன்னோட நன்றிய."

"எங்க?" என்றவன், பிடியை கூட்டிக்கொண்டே போனான்.

"விடு டா... கொஞ்ச நாள்ல எனக்குக் கல்யாணம்டா. அதுக்குள்ள என்னை டெத் பாடியாக்கிடாத."

"கல்யாணம் ஆகுறதும் கருமாரி ஆகுறதும் உங்கைல தான் இருக்கு." என்று விட்டு கையை எடுக்க, கழுத்தை நீவி விட்டபடி எழுந்துசென்றவன் ஒரு கவரை வர்மாவிடம் நீட்டினான்.

முகத்தில் அத்தனை நேரம் இருந்த களேபரம் மறைந்து, பிரகாசமான ஒளிபடர, கவரைத் திருப்பி திருப்பிப்பார்த்தான் வர்மா. கவரில் ஒரு பக்கம் சிறிய டப்பாக்கள் இரண்டு, டேப் கொண்டு ஒட்டி வைக்கப்பட்டிருந்தன. அதை எடுத்துக் குளுக்கினான். உள்ளிருந்து சத்தம் வந்தது. அதைத் தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் போட்டுக்கொண்டான்.

மற்றொரு பக்கத்திற்குத் திருப்ப, ஸ்மைலி பொம்மை வரையப்பட்டிருந்தது. அது ஒரு கண்ணைத் திறந்து வைத்தும், மற்றொரு கண்ணைச் சிமிட்டியும், U வடிவில் இதழை இழுத்துவைத்திருந்தது.

உருவமில்லா வரையோவியம் சிந்திய புன்னகைக்கு, பிரதி பலனாக அவனின் இதழ்களும் விரிந்தன ரகசியமாக. உரையைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அப்படியே சோபாவில் சரிந்தான்.

நிச்சயதார்த்த விழாவிற்கு சென்று வந்தபோது, பார்க்கக் கூடாத சிலரைப் பார்த்து விட்ட தவிப்பில், பழைய ரணங்களுடன் இருந்தவனுக்கு, நிவாரணி கிடைத்து விட்டதைப்போல் ஓர் உணர்வு.

ம்... நிவாரணி தான். காதல் என்ற மாயக் குழிக்குள் விழுந்து, பின் காப்பாற்றப்பட்டு மறுவாழ்வு மையத்தில் மருத்துவர்கள் பலரின் அறிவுரைகளுக்கு மத்தியில் நடைபிணமாக நடமாடியவனுக்கு ஜீவன் தந்தது இந்தக் கடிதம்தான்.

இது தான் இருள் மண்டிக்கிடந்த அவனின் கஷ்டகாலங்களில், வெளிச்சத்தைத் தந்து மனிதனாக நடமாட வைத்திருக்கிறது. வாரம் ஒரு கிழமை மட்டும், அவன் எங்கே இருந்தாலும் அவனின் இருப்பிடம் தேடிவந்து விடும்.

மையத்தில் இருந்த சமயம் முதல் சில நாள்கள் அவனின் கவனத்தை ஈர்க்காத அது, பின் நாள்களில் இதயத்திற்கு இதத்தைத் தந்திருந்தது. அதில் இருக்கும் வார்த்தைக்களின் பொருள் அவனை ஆழமான சிந்தனைக்கடலில் தள்ளியது. இழந்துவிட்டோம் சென்றவனுக்கு, எதிர் மறை எண்ணங்கள் முற்றிலும் மறைந்து, தன் மிச்ச வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கவேண்டும் என்ற நேர்மறையை விதைத்தது அந்தக் கடிதம்தான்.

கவரைப் பிரித்து மனத்திற்குள் வாசிக்கத் தொடங்கியனிடம், "அது ஒன்னும் காதல் கடிதம் கிடையாது, உனக்குள்ளயே படிச்சு ரசிச்சுக்க. சத்தமாவே படிக்கலாம். நானும் கேட்டுப்பேன். எனக்கும் நம்பிக்கை ஊற்று வேணும்." என்று குரல் கொடுத்தபடி சாப்பாட்டைக் முடித்திருந்தான் ஆகாஷ்.

"Life is ours as long as we have faith in ourselves." என்றான் வர்மா உரக்க,

"அப்படின்னா?"

"நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை நம்வாழ்க்கை நம்வசம். நம்மோட உள்ள உணர்வு நம்மல சரியா வழிகாட்டுங்கிற நம்பிக்கையோட இருக்கணும்."

"தத்துவம்... அதுவும் கைப்பட எழுதாத தத்துவமும் அதன் விளக்கமும்." என்ற ஆகாஷ் வர்மாவிடமிருந்து அந்தக் காகிதத்தை வாங்கி திருப்பி திருப்பிப்பார்த்தான். எல்லாம் துண்டுக் காகிதம். கைப்பட சில எமோஜிக்களும், டிசைன்களும் வரையப்பட்டிருந்தன.

"எதெதையோ வெட்டி ஒட்டி அனுப்பிருக்காங்க. ஆமா!! இந்த Quotes எங்க இருந்து ஆட்டையப் போடதுன்னு தெரியுமா?" என்றவனை வர்மா முறைத்தான்.

"எங்க ஆட்டையப் போட்டா என்ன! நல்லா இருக்குல. அது போதும். யாரு சுட்ட வடையா இருந்தாலும் தின்னா... பசி அடங்கணும்... அது தான் மேட்டரு." என்று பம்மத் தொடங்கினான்.

அதைத் தன் ஃபோனில் புகைப்படம் எடுத்துவிட்டு, தனதறைக்குள் சென்றவன் ஒரு பைலோடு வந்தான்.

அது முழுவதும் அவனுக்காக வந்த இதுபோன்ற கடிதம் தான்.

'ஏங்க அதக் கடிதம்னு சொல்றீங்கங்க! அது வாழ்த்து அட்டை. பிரியமுடன்னு ஆரம்பிச்சி, முழு பக்கமும் எழுதி, நலம் விசாரிச்சாத்தான் அது கடிதம் கேட்டகிரி வரும். ரெண்டே வரில, ஒரு வாக்கியத்த ஒட்டி, மிட்டாய் வச்சி அனுப்புனா அது வாழ்த்து அட்டை. எங்கூர்ல கல்யாண வீடுகள்ல மணமக்கள் பேர் போட்டு குடுப்பாங்க. அதெல்லாம் அந்தக் காலம்.' ஆகாஷின் மைண்ட் வாய்ஸ்.

ஆகாஷின் முரட்டு கரங்களால் வாழ்த்து அட்டை சற்று கசங்கி போயிருந்தது. அதை கையால் இஸ்திரி செய்து, உள்ளே வைத்து மூடி வைத்தான்.

"வேற வேலை வெட்டியே இல்லாம மூணு வர்ஷமா! வாரா வாரம் இப்படி எதையாவது கிறுக்கி அனுப்பி வச்சிட்டே இருக்காங்களே... யாரு அதுன்னு தெரியுமா மச்சான் உனக்கு?"

"இல்ல..." என்றவன் தன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு புறப்படத்தயாரானான்.

"ஆணா... பொண்ணா... வயசான கிழவனா கிழவியான்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணலாம்ல."

"தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் இல்லை. அனுப்புனது யாரா இருந்தாலும் அவங்களுக்கு ப்யூர் ஹாட். நான் நல்லா இருக்கணுங்கிறது மட்டும் தான் அவங்களோட குறிக்கோள். சோ... அனுப்புறது யாரா இருந்தாலும் எனக்குக் கவலையில்ல. ஐ ஆம் ஹப்பி நௌ." என்றவன் வெளியேறி விட்டான்.

"ஆளு யாருன்னு தெரிஞ்சுக்க முயற்சிக்காம இருக்குறது இவனுக்கு நல்லதோ இல்லயோ, எனக்கு நல்லது. ஏன்னா கண்டுபிடிக்கிறேங்கிற பேர்ல பைத்தியம் மாதிரி தெருத் தெருவா இவன் அழைஞ்சா. இவங்கூட நட்பு வச்ச பாவத்துக்கு நானும் அழையணும்.” எனப் புலம்பியபடி, பையை மாட்டிக்கொண்டு வாகனத் தரிப்பிடத்திற்குச்சென்றான்.

அங்கு பைக்கில் சாய்ந்து கொண்டு ஃபோனையே உற்றுப் பார்த்தபடி இருந்த வர்மாவின் முகத்தில் சிந்தனை ரேகைகளும் குழப்பமும் வந்து வந்துசென்றன.

"என்னாச்சு இவனுக்கு? உத்துப் பாத்தே யாரு அனுப்புனான்னு கண்டுபிடிச்சிட்டானா?" என நினைத்தபடி அவனின் அலைபேசியைப் பார்க்க, கடுப்பு வந்தது ஆகாஷிற்கு.

அவன் நினைத்ததைப் போல், சற்று முன் புகைப்படமெடுத்த அந்த வாழ்த்து அட்டையைத் தான் வெறித்தபடி இருந்தான்.

"நேரமாச்சி. கிளம்பு." என்றவனிடம் பைக் சாவியைக் கொடுத்தவன் பின்னால் ஏறிக்கொண்டான்.

வர்மாவுடையது டுகாட்டி ஸ்போர்ட்ஸ் பைக். சாம்பல் நிறத்தில் பார்க்க பயங்கரமாக இருக்கும் அது, அவனின் பாட்டியின் பரிசு என்பான். அதில் மற்றவர்களை ஏற்றுக்கொண்டு செல்வானே தவிர, இதுவரை ஓட்ட அனுமதித்தில்லை.

இன்று தந்ததும் ஏன் என்று யோசியாது, வேகமாக ஏறிஅமர்ந்தான் ஆகாஷ். பின்னால் வர்மா இன்னும் அந்த வாழ்த்து அட்டையிலேயே கண்ணாயிருந்தான்.

பாதி தூரம் சென்றிருப்பர். நடு சாலை...

முன் இருக்கையில் இருந்த ஆகாஷின் முகத்திற்கு முன்னால் தன் மொபைலை வைத்தவன், "உனக்கு தெரியுதா?" என்க, பைக் ஆட்டம் கண்டது.

ஏற்கனவே தலைக்கவசம் என்ற பெயரில் தலையில் பெரிய பானை கவிழ்த்தி வைக்கப்பட்டிருந்தது. கண்களுக்கு மட்டும் இடைவெளி கொடுக்கப்பட்டிருக்க, அதையும் மறைத்தால் எப்படி?

"வண்டி ஓட்டும் போது, மூஞ்சிக்கு முன்னாடி மொபைலக் காட்டுனா என்ன தான் டா தெரியும். ரோடு மறைக்கிது கைய இறக்கு." என்று திட்டியபடி பாதையில் கவனம் வைத்து ஓட்டினான் ஆகாஷ்.

'ஓட்டுன்னு பைக்க குடுத்திட்டு குடைச்சல் பண்றான் பாவி.' என உள்ளுக்குள் சொல்லிக் கொள்ள, சில நிமிடங்கள் மீண்டும், "உனக்கு எதுவுமே வித்தியாசமாத் தெரியலயா?" என்று முகத்திற்கு முன் அலைபேசியைக் காட்ட, அதைப் பிடுங்கி வைத்தான்.

லைசன்ஸ் எங்கே என்று நான்கு பேர் எதிரே, போக்குவரத்து காவலர் கேட்டதையே அவமானமாக உணர்ந்தவன், இன்று, "ஒழுங்கா ஓட்டு டா பரதேசி." எனப் பலர் திட்டிவிட்டுச் சென்றதைப் பொருட்படுத்தாமல் ஃபோனைத் தரச்சொல்லி நச்சரிக்க, வர்மா புதிதாகத் தெரிந்தான். கண்ணாடி வழியே அவனைப் பார்த்தான். அதில் இளைந்தாடிய உணர்வுகள் ஆகாஷையும் குழப்பியது.

வர்மா, யார் என்ன சொன்னால் எனக்கென்ன என்று அலட்சியமாக இருப்பதைக் கைவிட்டு வருடங்கள் கடந்திருந்தன.

இதற்கு முன்னிருந்த வர்மாவிற்கு, வானதி சொன்னதுபோல் யாரையும் மதித்து, அவர்களின் பேச்சைக் கேட்கும் பழக்கம் கிடையாது.

இப்பொழுது...

பொறுப்போடு நடந்து கொள்பவன்.

இன்று பழைய வர்மாவாக உருமாறி நிற்க,

"என்னாச்சி மச்சான் உனக்கு? ஏன் விசித்திரமான நடந்துக்கிற?" என்றபோது இருவரும் அலுவலகம் வந்துசேர்ந்திருந்தனர்.

எதுவும் சொல்லாது தன் ஃபோனை வாங்கிக்கொண்டு விறுவிறுவென நடந்தான் வர்மா.

உள்ளங்கையில் அலைபேசியை அறைந்த வண்ணம் மின் தூக்கிக்காகக் காத்திருக்க, ஆகாஷ் அதே கேள்வியுடன் வந்தான்.

"அப்படி என்ன வித்தியாசம் இருக்கு அதுல?" என்று வாங்கிப்பார்த்தவனுக்கு எதுவும் தெரியவில்லை. வழமையாகத்தான் இருந்தது.

"கையெழுத்துங்கிறது கிடையாது. Print எடுத்து வச்சா மாதிரி இருக்கு. இந்த மூணு வர்சத்துல, முன்னாடி வரையிற பொம்மையையும் மாத்தல, குடுத்து விடுற மிட்டாயையும் மாத்தல. வெட்டி ஒட்டுற படமும், உனக்கு அட்வைஸ் பண்ண அனுப்புற quotes தான் வாரத்துக்கு வாரம் மாறுது. இதுல என்னட வித்தியாசம்?."

"தெரியல... பட் தோணுது. ஏதோ வித்தியாசமாக இருக்குன்னு." என்றவன் இமை மூடி தன் உள்ளுணர்விற்குச் செவிகொடுத்து நிற்கும் போதே,

"குட் மொர்னிங்..." என்றது வானதியின் குரல்.

திரும்பிப் பார்த்த ஆகாஷ் சந்தோஷமாக காலை வணக்கம் வைக்க, அவளோ, வர்மாவிடம், "கூகுள் பண்ணீங்களா சாரே? பொருள் விளங்குச்சா?" என்க, அவன் விறுவிறுவென படிக்கட்டில் ஏறிச்சென்றான்.

"கூகுளா! பொருளா!" எனப் புருவம் சுருக்கிய ஆகாஷ், வர்மாவைத் தொடர்ந்து படிக்கட்டில் பாய்ந்தான்.

செல்லும் வர்மாவின் வேகமே வானதிக்குத் திருப்தியைத் தந்தது.

"இண்டைக்கான கோட்டாவ முடிச்சிட்டன். இனி கிடைச்சா! அது என்ர போனஸ்." என்று தினமும் அவனை வெறிப்பேற்றி பார்க்கும் அவளின் இன்றைக்கான இலக்கை அடைந்துவிட்ட மகிழ்ச்சியில் தன் வேலையைப் பார்க்கச்சென்றாள்.

அன்று காபி ஷாப்பில் இருந்து அரக்கப்பறக்க ஓடி வர இரு காரணங்கள் உள்ளன. ஒன்று பாஸ்வேர்டு.

'மூஞ்சூறு காட்டான்.' அதுதான் அவளின் கடவுச்சொல். அவன் கணினியை இயக்கியிருக்கிறான் என்றால் அவனுக்கு அது தெரிந்திருக்கிறது.‌

எப்படி?

மற்றொன்று அவனின் லைசன்ஸ் இன்னும் அவளது இழுவிசை மேசையில் அல்லவா உள்ளது!

முன்னதைக்கூட சமாளித்து விடலாம். ஆனால் பின்னதை...

அந்தப் படபடப்பில் ஓடிவந்தவள், "என்ர சிஸ்டத்தை என்ர அனுமதி இல்லாம யூஸ் செய்றதுல எனக்கு விருப்பம் இல்லை. என்ன வேண்டுமெண்டு கேளுங்க. செய்து தாரன். தேவையில்லாம என்ரதை தொடவேணாம்." எனக் காட்டமாகச் சொன்னபடி மமதியின் முன் நிற்க, வர்மா புன்னகைத்தான்.

லிஃப்டிற்கு முன் நின்று அன்று அவள் சொன்ன, 'மூஞ்சூறு காட்டான்.' அவனின் காதிலும் விழுந்திருந்தது. அதனால் தான் அவள் தரமாட்டேன் என்றதும் வில்லங்கமான பாஸ்வேர்டு போலும் என்றெண்ணியவன் அதை டயிப் செய்ய, பட்டென திறந்துகொண்டது.

தனக்கு வைத்த பெயராக இருக்கும் என்று அவன் யோசிக்கவில்லை‌.

அத்தோடு பட்டப் பெயர்கள் வைத்து பேசிக்கொள்வது அலுவலகத்தில் சகஜம் தான் என்பதால் குறுநகையுடன் தன் கேபினுக்குள் சென்றான்.

சற்று நேரத்தில் பிரிண்ட் செய்யப்பட்ட காகிதங்களுடன் அவனின் கேபினுக்குச் சென்றாள் வானதி.

ஆவணங்களை அவன் சரிபார்த்துக்கொண்டிருக்க, அவள் சிறு வியர்வை பூக்களுடன், கட்டை விரலை சுட்டு விரலால் தட்டிக்கொண்டு நின்றாள். அது அவளின் படபடப்பைச் சொல்ல,

"ஐ ப்ராமிஸ். நான் யார்க்கிட்டயும் சொல்ல மாட்டேன்." என்றான் வர்மா.

"ஹா... ஹாங்… என்ன சொன்னீங்க!" என்றபோது குரல் கம்மியது.

"உன்னோட பாஸ்வேர்ட்… அதை நான் யாருக்கும் சொல்லமாட்டேன். குறிப்பா மமதிட்ட." என்றதும், இழுத்து வைத்த மூச்சை நீளமாகவிட்டாள்.

அவனுக்கு லைசன்ஸ் விவகாரம் தெரியவில்லை என்ற நிம்மதியால் நீண்டு வந்தது அது.

"மூஞ்சூறு காட்டான் னா என்ன அர்த்தம்?" என்று வினவியபடி கையெழுத்திட்ட கோப்பைகளை அவளிடம் தர, அதை வாங்கிக்கொண்டவள் திருதிருவென முழித்தாள்.

"காட்டான்னா ஓரளவுக்கு தெரியும். பட் மூஞ்சூறு… அப்படின்னா!"

"ஒண்டுமில்லை. அது பகிடி." என்றபடி கதவை நோக்கிச்சென்றவள், என்ன நினைத்தாளோ!!

"மமதி மேம்ட்ட சொன்னாலும் வருத்தப்பட மாட்டன். ஏனென்டால் நான் அவளுக்கு வச்ச பட்டப்பேர் இல்ல அது." என்றாள்.

‘பின்னே யாருக்கு?’ என்பது போல் புருவம் சுருக்கியவனைத் திரும்பிப்‌பார்த்து,

"உங்களுக்கு வச்ச பேர் தான் அது. மூஞ்சூறு காட்டான். மீனிங் வேணும் எண்டா கூகுள் செய்து பாருங்க." என்று விட்டுச் செல்ல, அவன் அலைபேசியில் மூஞ்சூறு என்று டயிப் செய்தான்.

அது அவனுக்குக் காட்டியதைப் பார்த்தவன் முகம் கோபத்தில் சிவந்தது.
 
Last edited:

Author: நிதனிபிரபு
Article Title: தேன் நாட்டு பைங்கிளி - 9
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
379
83
Chennai
ஏன் மா இப்படி????? ஒரு நாள் அவன் உன்னை திட்டினதுக்கா இப்படி பண்ற????
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
300
265
63
India
உனக்கும் அவனுக்கும் பயங்கரமான கணக்கு இருக்கும் போலவே