• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நயவனின் நயவள் இவளோ - 1

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் 1

திரும்பி பார்த்துக் கொண்டே வேகவேகமாக நடந்தாள் அனன்யா.‌ இப்படி நேரம் காலம் பார்க்காமல் தன் சிந்தனையில் மூழ்கி இருந்த தன்னை தானே நொந்துக் கொண்டு வேகமாக தான் தங்கியிருந்த காட்டேஜ் நோக்கி சென்றாள். அந்த இடத்தை நெருங்கியதும் இவளிடம் பெரும் மூச்சு வெளிவந்தது. அந்தோ பரிதாபம் இனி நிகழ போவதை அறியாமல் வேகமாக தான் தங்கியிருந்த அறைக்குள் சென்றுக் கதவை சாற்றினாள்.

மணி இரவு 12.30 , தன்னை சுத்தம் செய்து வந்து படுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை. வர்கலா நார்த் விங் கில் இருந்து இந்த காட்டேஜ் கொஞ்சம் தொலைவில் தான் இருந்தது. என்ன தான் இங்கு இரவு மக்கள் நடமாட்பாதுகாப்புக்குடம் அதிகமாக இருப்பதால் கவலை இல்லை என்றாலும் அங்கிருந்து காட்டேஜிற்கு இரவு நேரத்தில் நடந்து வரும் போது அவளை மூவர் பின் தொடர, ஆபத்தை உணர்ந்து வேகமாக அறைக்கு வந்தவளுக்கு இன்னும் பதட்டம் குறைந்தபாடில்லை.

ஒரு மணி போல் அவளின் அறை கதவு தட்டப்பட்டது. இவள் யார் என்று கதவின் லென்ஸ் வழியாக பார்க்க. அங்கு அவள் தங்கியிருந்த ஹோட்டல் ரிசப்ஷனில் இருந்தவரும் அவரோடு மூன்று பேர், முன்பு இவளை துரத்தியவர்களும் போதையில் நின்றிருந்தனர்.

அப்போது தான் அவளுக்கு காலையில் அவரோடு நிகழ்ந்த உரையாடல் நினைவுக்கு வந்தது.

“ மேடம் உங்க கூட எத்தனை பேர் தங்குறாங்க?”

“நான் மட்டும் தான் சார்”

“மேடம் நீங்க தனியா வந்திருக்கீங்களா?”

“எஸ்”

“பெண்கள் எல்லோரும் உங்களை போல் தைரியமாக தனியாக டூரிஸ்ட் பிளேஸ்க்கு இப்படிதான் வர வேண்டும் மேடம்.”

அப்போது சாதாரண பேச்சாக இருந்தது இப்போது தான், தான் சொல்லிய தகவலின் வீரியத்தை உணர்ந்தாள் அனன்யா.

கதவை திறக்காமல்,” யாருங்க?” என்றாள் அனன்யா.

“மேடம் தண்ணீர் லீக்காகுது உங்க ரூமில் சரி செய்யணும்.”

“நான் எந்த கம்பிளைன்ட்டும் செய்யலையே?”

“மேடம் கீழே உள்ள ரூம்ல பிரச்சினை.அங்க இருக்கிறவங்க கம்ப்ளைன்ட் பண்ணாங்க.”

“சார் எதுவாக இருந்தாலும் காலையில் பார்த்துக்கோங்க. என்னால் இப்போ கதவை திறக்க முடியாது” என்றவள் அங்க இருந்த சோபாவை கதவின் முன் நகர்த்தி வைத்தாள்.

அவர்கள் விடாமல் வேகமாக தட்டிக் கொண்டிருந்தனர்.

டேபிள் மேல் இருந்த அன்னையின் படத்தை எடுத்து பார்த்தாள். இவ்வளவு நேரம் இருந்த பயம் மாயமாக மறைந்தது. ஆனால், கண்ணில் நீர் நிற்க, “ஏன் மா இப்டி என்ன தனியா விட்டுட்டு போன?” என்றவள் கொஞ்சம் கண்ணீர் தீரும் வரை அழுதுவிட்டு பின் உரையாடலை தொடர்ந்தாள்.

“அம்மா… ரூம் ரேண்ட் கம்மியா இருக்கேன்னு ஊருக்கு வெளியே இருக்க ஹோட்டல்ல ரூம் புக் பண்ணி நா பெரிய தப்பு பண்ணிட்டேன். நாளைக்கு காலையில் எப்படியாவது இங்கிருந்து நல்லபடியா கிளம்பி வெளியே போய் நல்ல இடமா பார்த்து தங்கணும்.”

கொஞ்ச நேரத்தில் கதவு தட்டும் சத்தமும் நின்று போனது. அனன்யாவும் தன் அன்னையின் துணை எப்போதும் தனக்கு இருக்கும் என்ற நம்பிக்கையோடு தூங்கினாள்.

அனன்யாவிற்கு தெரியவில்லை அவளுக்கான துணையிடமே அவளை பாதுகாப்பாக விட்டுவிட்டே இந்த உலகை விட்டு சென்றிருந்தார் அவரின் அன்னை கவியரசி. அந்த துணையும் அவளை நிழல் போல் பாதுகாத்துக் கொண்டிருந்தது.

சரியான தூக்கம் இல்லாததும்,பயம்,அழுகை எல்லாமுமாக சேர்ந்து காலையில் எழுந்தவளுக்கு தலைவலி தந்திருந்தது. இருந்தும் வேகமாக தயாராகி, தன் உடமைகளை எடுத்துக் கொண்டு கதவில் கை வைத்தவளுக்குள் சிறு நடுக்கம் நல்லபடியாக வெளியே சென்றுவிட வேண்டும். இங்கே மாட்டிக் கொண்டால், தனக்கு ஏதேனும் நேர்ந்தால்கூட, தன்னை காணவில்லை என்று தேடக்கூட தனக்கென்று யாரும் இல்லை என்று. பெரும் மூச்சை வெளியிட்டவள், அறையை விட்டு வெளியே வந்து படி வழியாக ரிசப்ஷனை சென்று அடைந்தாள்.


ரிசப்ஷனில் இருந்தவன் கண்டு அதிர்ந்தவள், இவளை பார்த்ததும் அவனோ மரியாதையாக, “ ஹலோ மேம், ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ? என்றான்.

எதுவும் நடாவாது போல் பேசுபவனை, கோபமாக பார்த்தவள், “ ரூம் வெகேட் பண்ணனும் மிஸ்டர்”

வேறு எந்த கேள்வியும் கேட்காது அவள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை தந்தான். இவள் அதை எதிர்ப்பார்க்கவில்லை, பணமும் கிடைக்காது, இங்கு தங்கவும் முடியாது என்று நினைத்தவளுக்கு பணம் கிடைத்தது நினைத்து மகிழ்ச்சியாக இருந்தாலும் அவனை சந்தேகமாக பார்த்துக் கொண்டே வெளியே சென்றாள்.

பொதுவாக நியாயமான காரணம் இருந்தாலும் இது போன்று இடங்களில் பணத்தை திருப்பி தரமாட்டார்கள். இவனை போல் கீழ்தரமான எண்ணம் கொண்டவனிடம் அதிகாரம் இருக்கும் போது பணம் கிடைக்கவே வாய்ப்பில்லை என்பதே அனன்யாவின் எண்ணம்.

அவள் வெளியே செல்ல, தன் சிங்க மூக காப்பை சரி செய்த படியே ரிசப்ஷன் டேபிள் மேல் ஒருத்தன் கை வைத்தான்.

“சாரே நீங்க சொன்ன படி செய்துட்டேன். என்ன விட்டுடுங்க. நைட் வாங்கன அடியே இன்னும் வலிக்குது.” என்றான்.

“ உங்கள மாதிரி ஆண்களால் தான்டா எல்லா ஆண்களுக்கும் கெட்டப் பேரு. சுய ஒழுக்கம் னா என்னேன்னு தெரியுமாடா? உங்க ஊரச் சுத்தி பார்க்க வர பொண்ணுங்ககிட்ட இப்படி தான் நடந்துப்பிங்களாடா? இனிமே இதுமாதிரி எந்த பொண்ணு கிட்டையும் நடந்துக்க கூடாது. மீறி நடந்துக்கிட்ட உன் உடம்புல உசிரு இருக்காது.என்ன புரியுதா?”

“புரியுது சாரே”

கால் போன போக்கில் நடந்துக் கொண்டிருந்தாள் அனன்யா. கடலின் அழகை ரசிக்கும் படி அமைந்த கஃபே ஒன்று அவள் கண்ணில் பட. அங்கு சென்று அமர்ந்து தனக்கு வேண்டிய காஃபியை ஆர்டர் செய்து அமைதியாக கடலை ரசித்தவளின் எண்ணம் ரிசப்ஷனிஸ்டிடம் சென்றது.

தனியாக ஸோலோ ட்ரிப் வந்திருக்கும் பெண்ணாக இருந்துக்கொண்டு புது ஊரில் அவனை அடிக்கவோ, அவனை பற்றி போலீசில் கம்ப்ளைன்ட் செய்வதோ சரியான யோசனையாக அவளுக்கு தோன்றவில்லை. அவனை அப்படியே விடவும் அவளுக்கு மனம் இல்லை. ஆனால், காலையில் அவனை பார்த்தவளுக்கு ஆச்சரியம் தான். அவள் நினைத்தது போல் அவனை யாரோ நன்றாக அடித்திருந்தார்கள், குறிப்பாக அவன் மூக்கில் குத்தியிருக்க வேண்டும், அதன்மீது பிளாஸ்டர் ஒட்டியிருந்தான். இதுவே அவளுள் சிறு அமைதியை தந்திருந்தது.

காஃபியை குடித்த பின் தான் அவள் சுற்றுப்புறம் உணர்ந்தாள். முதலில் தன் ஃபோனை எடுத்தவள் நேற்றைய நிகழ்வை குறித்த தன் அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்தாள். அதை சோசியல் மீடியா தளங்களில் பதிவேற்றினாள்.

அமைதியான காலை பொழுதில் திடீரென்று அருகில் சத்தம் கேட்க, தன் கவனத்தை அதில் திருப்பினாள். அங்கோ இளம் காதல் ஜோடி ஓன்று தங்கள் காதலை இதழ் ஒற்றலும், அணைப்புமாக கொண்டாடிக் கொண்டிருந்தது.

எவ்வளவு தடுத்தும் மனம் ராஜேஷை நோக்கி சென்றது. ‘உன்னை எவ்வளவு நம்பினேன் ராஜ். ஆனா உன்னால் எப்படி இப்படி செய்ய முடிந்தது?’ என்று மனதோடு பேசியவளின் கண்கள் கலங்க தயாராக.

சரியாக அந்த நேரத்தில் அவளின் ஃபோன் அழைத்தது.

“ஹலோ அண்ணா” என்றாள். அந்த பக்கம் பதில் இல்லை.

லேசாக தலையில் தட்டிக் கொண்டவள், “ சொல்லுங்க கவின் எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? உனக்கு வர்கலா போனதும் என்னை பத்தின ஞாபகம் எதுவும் வரல போல. ஆனா நான் உனக்கு ஞாபகம் படுத்துறேன் எனக்கு நீ என்னை அண்ணான்னு சொன்னா பிடிக்காது.” என்றான்.

“சாரி…சாரி…”

“சரி விடு. நீ எப்படி இருக்க?”

“ஏன் டா உயிரோடு இருக்கும்னு தோணுது கவின்” என்றாள்.

“இப்போ என்ன நடந்தது?” என்றான் கவின். நடந்த அனைத்தையும் அவனிடம் சொன்னாள் அனன்யா.

“இதுக்கு தான் இவ்வளவு கவலையா. இது எல்லாமே அனுபவம் தான். இனி இந்த மாதிரி தப்பை செய்யாதே.ஒரு பொண்ணா தனியா வெளியூருக்கு போகும் போது, தங்கும் இடத்தை கவனமா முடிவு பண்ணணும். இப்போ டோம் ஸ்டே (dome stay) , ஹாஸ்டல் எல்லாம் எல்லா டூரிஸ்ட் பிளேஸ்லயும் இருக்கு. அங்கு சமைக்கவும் இடம் இருக்கும், வாஷிங் மெஷின் சர்வீஸும் இருக்கும், பட்ஜெட்டும் நமக்கு ஏற்றது போல் இருக்கும். எனக்கு தெரிந்த இரண்டு மூன்று இடம் இருக்கு, சொல்லுறேன் நீ போய் பார்க்குறீயா?” என்றான்.

“ லொகேஷன் அனுப்பு கவின், நான் போய் பார்க்கிறேன்.”

“ஓகே பாய் அனன்யா”

அவனிடம் இருந்து மெசேஜ் வந்ததும் , தன் உடைமைகளோடு அந்த இடத்தை நோக்கி சென்றாள்.

அவள் பின்னே எழுந்தவனின் ஃபோன் இசைத்தது, இவன் எடுத்து காதில் வைக்க. மறுமுனையில், “நீ சொன்ன படி சொல்லிட்டேன்.”

“ஓகே கவின். இனி நான் பார்த்துக்குறேன்.” என்றான்.

அனன்யாவிற்கு கவின் அனுப்பிய முதல் இடமே பிடித்து போனது. மிகவும் பாதுகாப்பான பெண்கள் மட்டும் தங்கும் இடம். எல்லா வசதிகளும் இருந்தது. அங்கே அவளுக்கு தேவையான ஸ்கூட்டியும் வாடகைக்கு கிடைத்தது.

அன்று மாலையே வண்டியை எடுத்துக் கொண்டு வர்கலாவின் சவுத் விங் சென்றாள். மிகவும் அழகான, அமைதியான கடலை காஃபியோடு ருசித்தாள். காலையில் இருந்ததற்கு முற்றிலும் மாறிய மனநிலையில் இப்போது அவள் இருந்தாள்.

நார்த் விங் போல் இல்லாமல் அமைதியான, மக்கள் நடமாட்டம் குறைவான சவுத் விங்கை அவளுக்கு அதிகம் பிடித்து போனது. அவளின் மனநிலைக்கும் இந்த இடம் பொருந்திப் போனது.

காலையில் அவள் பதிவு செய்த வீடியோக்கு அதிக வியூஸ் வந்திருந்தது. அது அவளுக்கு இன்னும் மகிழ்ச்சியை தந்தது.

அவளின் மலர்ந்த முகத்தை பார்த்து பின்தொடர்ந்தவனின் மனம் அமைதியானது.

அங்கிருந்த உள்ளூர் மக்களிடம் எந்த எந்த இடங்கள் இங்கு பார்க்க வேண்டும் என்று கேட்டு தெரிந்துக் கொண்டாள். என்ன தான் டெக்னாலஜி AI அளவிற்கு வளர்ந்திருந்தாலும். அவளுள் இருப்பது உணர்வு பூர்வமான தேடல். அதை இங்கு வாழும் மக்களின் மூலமாக தெரிந்துக் கொண்டாள்.

நாளை தான் செல்ல வேண்டிய இடங்களை முடிவு செய்து. அதன் தூரம்,பார்க்க சரியான நேரம், செல்லும் வழி போன்ற தகவல்களை AI மூலம் குறித்துக் கொண்டிருந்தாள் அனன்யா.

வேலையை முடித்தவள் தன் ஹாஸ்டல் நோக்கி சென்றாள். அன்றைய நிகழ்வுக்கு பின் எந்த பயமும் இல்லாமல் தினமும் ஒன்று அல்லது இரண்டு இடங்களுக்கு சென்று, அந்த இடங்களின் அழகை ரசித்து, புது அனுபவங்களை பெற்று, வீடியோ எடுத்து என்று அவளின் நாட்கள் வண்ணமையமாக சென்றுக் கொண்டிருந்தது.

அனன்யாவே எதிர்பார்க்காத அளவிற்கு அவளின் வீடியோக்கள் டிரெண்ட்டானது. அதனால் அவளிடம் நிறைய பேர் வர்கலா டூர் ஆர்கனைஸ் செய்து தருமாறு கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த இரண்டு மாதத்தில் வர்கலா முழுவதும் சுற்றி திரிந்தவளுக்கு அது மிகவும் எளிமையான விஷயம் தான். ஆனால், அவளின் நோக்கம் புதுப் புது இடங்கள் சென்று புது அனுபவங்களை பெற வேண்டும் என்பதே. வர்கலாவை விட்டு செல்லும் முன் ஒருமுறை டூர் ஆர்கனைஸ் செய்து பார்க்க சொல்லி அவளின் மனம் ஆர்ப்பரித்தது. கவினும் அவளின் எண்ணம் சரியானது என்று சொல்ல. அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தாள்.


தான் எடுத்த முடிவால் பின்னாளில் தான் அடைய போகும்துன்பம் பற்றி முன்பே தெரிந்திருந்தால் இந்த முடிவை அவள் கண்டிப்பாக எடுத்திருக்க மாட்டாள்.
 
Top Bottom