• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நறுந்தண் சாரலே! - 1

ரோசி கஜன்

Administrator
Staff member

கற்பக விருட்சம் என்று அழைக்கப்படக்கூடிய தென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பலன் தருகிறது.

‘தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலான்.’ என ஒளவையார் நன்றிக்கு இலக்கணமாகத் தென்னையைக் குறிப்பிட்டு இருக்கிறார்.

வெப்ப நாடுகளில் அதிகமாகக் காணப்படும் தென்னை மரம், மரம் என்றாலும் அது புல் வகைக்கு அதிகம் சேர்ந்தது. மரபணு பரிசோதனைகளில் உலகம் முழுவதிலும் உள்ள தென்னை மரங்கள் இரண்டு இடத்திலிருந்து வந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர். ஒரு வகை இந்தியாவில் இருந்தும், மற்றொரு வகை பசிபிக் கடல் பகுதியில் இருந்தும் வந்துள்ளன.
-நறுமுகிலன்.

பெங்களூர்.

காலை நேரத்தில் அந்த அரங்கத்தில் வட்ட மேசைகளில் சுற்றி மக்கள் அமர்ந்திருந்தனர். மக்கள் என்றால் மக்கள் இல்லை. ஒவ்வொருவரும் தொழில் முனைவோர்கள், அரசாங்க அலுவலகர்கள் என அனைவரும் அமர்ந்திருந்தனர். மத்திய அரசின் “நேஷனல் ஸ்டார்ட் அப் அவார்ட்ஸ்” என்ற விருதுகள் வழங்கும் விழா அரங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேடையில் மத்திய அமைச்சர் அமர்ந்திருக்க, சில தொழிலதிபர்களும் அமர்ந்திருந்தனர்.

“தி பெஸ்ட் ஸ்டார்ட் அப் அவார்ட் கோஸ் டூ மிஸ்டர். நறுமுகிலன், ஃபிரம் கோகோ சஸ்டெயின்பிள் சொல்யூசன்ஸ், தமிழ்நாடு, ஐ ரெக்வெஸ்ட் அவர் ஹானர்பிள் மினிஸ்டர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் டூ பிரசண்ட் தி அவார்ட்.” எனத் தொகுப்பாளர் பெண் அழகாக ஆங்கிலத்தில் உரையாற்ற நறுமுகிலன் எழுந்து நின்று தன்னுடைய மேலாடையின் பட்டன்களைப் பூட்டினான். கறுப்பு கோட், கறுப்பு பேண்ட், வெள்ளை சட்டை மற்றும் கால்களில் விலை உயர்ந்த சப்பாத்துகள் அணிந்திருந்தவன் மஞ்சள் நிறமும், ஃபிரஞ்சு பியர்ட் தாடியுடன் ஆறடிக்கு ஒரு இன்ச் குறைவாக நல்ல வலிமையான உடற்கட்டுடன் இருந்தான். அவன் உடற்கட்டு தோட்டத்தில் வேலை செய்வதால் வந்ததாகினும், தற்போது உடற்பயிற்சியால் அப்படியே தக்க வைத்து இருக்கிறான்.

முகத்தில் புன்னகையுடன் மேடையேறியவன் அமைச்சருக்கு வணக்கம் வைக்க, அவரும் வணக்கம் வைத்து அவனுக்கு விருதினையும், பத்து லட்சம் மதிப்புள்ள தொகையினையும் கொடுத்து அவன் தோளில் கைப்போட்டபடி நின்றார். இருவரின் மீது புகைப்படக் கருவியின் ஒளி விழுந்தவண்ணம் இருக்க, ஊடகங்களும், செய்தித்தாள்களும் பதிவு செய்து கொண்டன. பல ஊடகங்களில் இது நேரலையாகவும் போய்க் கொண்டிருந்தது. அங்கிருந்தவர்கள் கைத்தட்டினாலும் ஒரு சிலருக்குப் பொறாமை எட்டி பார்த்தது என்பதோ உண்மை.

அந்த நிகழ்வு முடிய பன்னிரண்டு ஆகி இருக்க, “அண்ணா, சாப்பிட்டுக் கிளம்பலாமா?” என்றான் நறுமுகிலன் உதவியாளன்.

“சாப்பிட்டு சீக்கிரம் கிளம்பணும்.” என அவனும் பதில் அளித்தான். அவர்கள் இருவரும் சாப்பிட்டபடி மற்ற தொழில் முனைவோரிடம் பேசிவிட்டு செல்லும்போது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகி இருந்தது.

“ப்பூ…” எனக் காற்றை ஊதியபடி தன்னுடைய மகிழுந்தின் பின் பக்கத்தில் ஏறி அமர்ந்தான்.

“என்ன அண்ணா தப்பிச்சோம் பிழைச்சோம்னு வர மாதிரி இருக்கு?”

மகிழுந்தின் முன் பக்கத்தில் ஓட்டுநரின் இருக்கைக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தான் நறுமுகிலனின் உதவியாளன் சஞ்சய். ஆறடிக்கு இரண்டு இன்ச் குறைவாகப் பார்க்கவும் அழகாக இருப்பான். நறுமுகிலனுக்கு இருப்பதைப் போல் தனி விசிறி வட்டம் இவனுக்கு உண்டு.

“சில ஃபேக் பீபுள் உண்டுதானே. அதிலும் பிஸினஸ் வோர்ல்டில் இரட்டை வேஷம் போடறவங்க அதிகம்.”

“கரெக்ட்தான். அதோட உங்களோட யூ டியூஃப் ஃபேமும் இருக்கே! அதுவும் எல்லாருக்கும் சுலபமாகக் கிடைச்சிடுமா!”

“சும்மா இரு ஆளு.”

நறுமுகிலன் தமிழக வலையொளிப் பதிவர்களில் முதல் பத்து இடங்களில் ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கிறான். விவசாயம், தாவரங்கள் பற்றியும் போடுவான். பொது அறிவு சார்ந்த விஷயங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். இவன் அறிவுக்கும், அழகுக்கும் பெண் ரசிகைகள் தாரளமாய் அமைந்திருந்தனர். அதில் சில பெண் வலையொளிப் பதிவர்களும் அவனுடன் வாழ்வில் இணைந்து கொள்ள முயன்றாலும் நறுமுகிலனுக்கு அவர்கள்மீது விருப்பம் இருந்தது இல்லை. பணம், புகழ், அழகு என அனைத்தும் ஒருங்கே பெற்றவன்.

இப்போது நடக்கும் ‘யூ டியூப் கிரியேட்டர் சமிட்’க்காகச் சென்னை சென்று கொண்டிருக்கிறான்.

“அண்ணா அந்தப் பேர் சொல்லிக் கூப்பிடாதீங்க.” எனச் சஞ்சய் சலித்துக் கொள்ள,

“உண்மையான பேரை விட்டுட்டு சஞ்சய்னு பேர் மாத்தி சொல்லிச் சுத்திட்டு இருக்க நீ” எனக் கேலி செய்தான்.

ஆளவந்தான் என்பது உண்மையான பெயர் என்றாலும் சஞ்சய் என நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டான் அவன். நறுமுகிலன் கல்லூரியில் ஜூனியர் மற்றும் பக்கத்து ஊர்க்காரன். அவன் குடும்ப கஷ்டத்திற்காக நறுமுகிலனிடம் வேலைக்குச் சேர்ந்திருக்க, அவன் உதவியாளனாக வைத்துக் கொண்டான். இருவருக்கும் கல்லூரியில் இருந்தே இருந்த பரிச்சயம் இப்போது நல்ல நட்பாக மாறிவிட்டது.

இருவரும் பேசியபடியே சில மணி நேரங்கள் பயணம் செய்து சென்னையை அடைந்து அங்கு எடுத்திருந்த விடுதியில் தங்கிக் கொண்டனர். மாலை நேரமானதும் இருவரும் குளித்துத் தயாராக ஆரம்பித்தனர்.

குளித்துவிட்டு தலையைத் துவட்டியபடி வெளியே வந்த சஞ்சய் கண்ணாடியைப் பார்த்துத் தலை சீவிக் கொண்டிருந்த நறுமுகிலனைப் பார்த்தான்.

“வாவ் ப்ரோ. வேட்டியில் நீங்கக் கெத்துதான். அப்படியே மாப்பிள்ளை மாதிரி இருக்கீங்க.” என்றான்.

“தேங்க் யூ டா ஆளு.” என நறுமுகிலன் புன்னகைத்து கண்ணாடியில் ஒருமுறை தன்னைப் பார்த்துக் கொண்டான். ஒரு கருப்பு சட்டை மற்றும் வெள்ளை நிற வேட்டி, கழுத்தில் தங்கச் சங்கிலி கையில் வெள்ளி நிற கடிகாரத்தில் நறுமுகிலன் அட்டகாசமாக இருந்தான்.

“ப்ரோ, அங்க வரப் பொண்ணுங்க மனசை உடைக்காமல் இப்பவாது ஒரு பொண்ணை செலக்ட் பண்ணுங்க. உங்க மம்மி டெய்லியும் என் காதில் புகை வர அளவுக்குப் பேசறாங்க. அந்தக் குயின் பியூட்டி பொண்ணு எப்ப பார்த்தாலும் உங்களைத் தேடியே வருமே, அவங்களையாவது ஓகே பண்ணுங்க. நான் கொஞ்சம் தப்பிப்பேன்.”

“ஆளு, எனக்கு அந்தப் பொண்ணு செட்டாகாது.”

“எனக்குக் கல்யாணத்தில் இன்ட்ரெஸ்ட் இல்ல ஆளு. எனக்கு அது செட் ஆகாது.”

“இப்படி சொல்றவங்கதான் முதலில் கல்யாணம் பண்ணிப்பாங்கன்னு சொல்லலாம். ஆனால் அது உங்க விஷயத்தில் நடக்கலை. இன்னும் கொஞ்ச நாளில் நீங்க இருபத்தி ஒன்பதை தொட்டு…”

“ஆளுக்கு மட்டும் வயசு குறையுதோ?”

“எனக்கு ட்வென்ட்டி செவன் ப்ரோ. சூப்பர் பொண்ணாகப் பார்த்துக் கட்டிட்டு நான் வாழ்க்கையை எஞ்சாய் என்சாமி பண்ணுவேன். நீங்கச் சாமியாரா சுத்துவீங்க.”

“போடா.” என நறுமுகிலன் சிரித்தான்.

“பொண்ணு கிடைக்குறது எல்லாம் ஈசி இல்ல மேன். போய்ப் பாரு மேட்ரிமோனியல் சைட்டில். பொண்ணுங்க போடற கண்டிஷன்ஸ் அதிகம். அதோட இப்ப பொண்ணுங்களுக்கு மேரேஜில் இன்ட்ரெஸ்ட் இல்லை. நான் எதுக்கு அத்தனை வேலை செய்யணும்னு கேட்கறாங்க.”

“இருக்கலாம் பாஸ். என் பொண்டாட்டி என்ன கேட்கறாங்களோ அதை நான் செஞ்சு குடுத்திடுவேன். காய்கறி நறுக்கணுமா… பாத்திரம் கழுவணுமா எல்லாமே பண்ணிடுவேன்.”

நறுமுகிலன் நக்கலாகச் சிரித்தான்.

“அடேய் ஆளு! உன் ஆளு கேட்காமலேயே வேலை செய்யணும். சொல்லிச் சொல்லிச் செய்ய அவங்க என்ன உன்னோட புராஜக்ட் மேனேஜரா?”

சஞ்சய் யோசித்தான்.

“கரெக்ட் பாஸ். எப்படி இப்படி எல்லாம் பேசறீங்க?”

“எல்லாம் என் அக்கா பெத்த முத்தைப் பார்த்துதான். இன்ஸ்டாகிராமில் பார்த்துட்டு வந்து கேள்வி கேட்குது. நானும் யோசிச்சேன். எல்லாரும் சேர்ந்து வேலை செஞ்சாதானே வீடு. ஒருத்தர் மட்டும் மேனேஜ் பண்ணறதுக்கு எதுக்கு வீடு? என் அப்பாவே இப்ப கிட்சனில் பேத்திக்காக நின்னுட்டு இருக்கார்.”

“யோசிக்க வேண்டிய விஷயம் பாஸ்.”

“செய்ய வேண்டிய விஷயம்டா ஆளு. கல்யாணம் ஆச்சுனா இப்படி செய்.”

தலைமுடியை சீவிவிட்டு நெற்றியில் திருநீற்றை இட்டான்.

“சரிடா ஆளு. நீ போய்ச் சுத்திப் பாரு. நான் கிளம்புறேன்.”

சென்னையில் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதி. மற்றவர்கள் வருவதற்கு முன்பே அவன் சென்று விட்டான்.

‘வணக்கம் சென்னை. கிரியேட்டர்ஸ் கலெக்டிவ்.’ என வரிசையாக அடுக்கப்பட்ட மஞ்சள், பச்சை கலந்த சட்டகங்களில் விழாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
உள்ளே சென்றதும் அங்கிருக்கும் பெண்களிடம் தன் தன்னுடைய ‘யூ டியூப் சேனல்’ பெயரைக் குறிப்பிட்டு பதிவு செய்து கொண்டவுடன் அவர்கள் கையில் ஒரு காகிதத்தால் ஆன வளையத்தைச் சுத்திவிட்டு, கருப்பு நிறத்தால் ஆன ஒரு பரிசுப் பையையும் கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான்.


ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க, இவனும் அவர்களுடன் பேச ஆரம்பித்தான். அப்போது வந்து சேர்ந்தாள் பியூட்டி குயின். அவள் நேராக வந்து நின்றது நறுமுகிலன் அருகில்தான். அவளைப் பார்த்ததும் நறுமுகிலன் மனதிற்குள் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

சஞ்சய் கூறும், “மீண்டும் மீண்டுமா?” என்ற சொல் அவன் இல்லாமலேயே காதில் கேட்பது போல் இருந்தது. பியூட்டி குயின் யூ டியூப் சேனல் சாராவை அவன் சில முறை சந்தித்து இருக்கிறான். அதோடு அவனுடைய சேனலைத் தொடர்ந்து ‘லைக்’ போடுபவள். மறைமுகமாகத் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறாள். ஆனால் நறுமுகிலன் கண்டு கொள்ளவில்லை. குறைவாகப் பேசியபடி நகர்ந்துவிடுவான். ஆனால் இன்று அவன் கெட்ட நேரமோ தெரியவில்லை. அங்குக் கேளிக்கையாக நடத்திய விளையாட்டுப் போட்டியில் அவனுடைய இணையாக அவள் பெயர் வந்திருந்தது.

அவள் போட்டியில் பங்குபெறுகிறோம் என்ற சாக்கில் அவன் கையையும், தோளையும் பிடித்து வைக்க நறுமுகிலனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அங்குள்ள அனைவருமே புகைப்படக் கருவியுடன் அந்த நிகழ்வைப் படமாக்கிக் கொண்டிருக்க, நறுமுகிலன் அமைதியாக இருக்க வேண்டிய சூழல்.

அடுத்த நாள் காலை, உறங்கிக் கொண்டிருந்த நறுமுகிலனை எழுப்பினான் சஞ்சய்.

“அண்ணா, இங்க பாருங்க. பியூட்டி குயின் சேனலில் வீடியோ வந்திருக்கு. பெஸ்ட் பார்ட்னர்ஸ்னு போட்டு. அதுக்கு கீழே கமெண்ட் செம ஜோடி, கெமிஸ்ட்ரி கமெண்ட் போட்டுட்டு இருக்காங்க.” என அந்தக் காணொளியைக் காட்டினான் சஞ்சய். கண்களைக் கசக்கிய நறுமுகிலன் அதை வாங்கிப் பார்த்தான்.

“விட்றா... இதை நான் எதிர்பார்த்தேன். அது வின் வேற பண்ணிட்டோம். அந்தப் பொண்ணு அளப்பறையைத் தாங்க முடியாது. ரெஸ்பான்ட் பண்ண வேண்டாம். விட்ரு. இதுக்கு இம்பார்ட்டென்ஸ் குடுத்தால் இன்னும் பெரிசாகும்.”

“உங்களுக்கு இந்தப் பொண்ணை நிஜமாவே பிடிக்கலையா?”

“நாட் மை டைப்டா. இந்தப் பொண்ணுக்கு தன்னோட அழகை வச்சு என்ன வேணாலும் சாதிக்கலாம்னு ஒரு ஆட்டியூட் இருக்கு. செட் ஆகாது. பொண்ணுக்கு அறிவு நிறைய வேணும்டா. யாரையும் டிபென்ட் பண்ணி இருக்கக் கூடாது.”

“அப்ப அழகு பாஸ்.”

“அழகு ஆப்ஷனல்டா. என்ன என்னை மாதிரி ஒரு பிரபலம் இவங்க வச்சுருக்க பியூட்டி ஸ்டாண்டர்ட் இல்லாத பொண்ணாகக் கல்யாணம் பண்ணிட்டது தெரிஞ்சால் சில ஆளுங்க பயங்கரமாக நெகட்டிவ் கமண்ட்ஸ் போடுவாங்க. இயற்கையில் இதுதான் அழகுன்னு எதுவும் கிடையாது. எல்லாமே அழகுதான்.”

“கரெக்ட் பாஸ். இப்ப புரியுது. சினிமா நடிச்ச நடிகைகளுக்கே அதுதான் நிலை.”

“புரிஞ்சவன் பிஸ்தாடா. பேக் அப் பண்ணிட்டு கிளம்பலாம் ஆளு.”

‘நம்ம பாஸ் கொஞ்சம் மொக்கை போட்டாலும் சரியாத்தான் பேசறார்.’ இவர் தேடுற பொண்ணு சீக்கிரம் வரட்டும். அப்பத்தான் இவங்க மம்மி பேசறதைக் கேட்டு நான் மம்மி மாதிரி காதில் துணி சுத்தாமல் இருக்க முடியும்.’ என நினைத்துக் கொண்டவன் உடைமைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தான்.

***

அதிகாலை ஐந்தரை மணிக்கே நன்றாக விடிய ஆரம்பித்திருந்தது. இயற்கை சாரல் கொஞ்சும் தென்மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்தது அந்தப் பூக்கள் நிரம்பிய தோட்டம். அரை ஏக்கர் முழுவதும் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ண வெட்சி பூக்கள் என அழைக்கப்படும் துலுக்கு மல்லிகள் பூத்துக் குலுங்கின. மற்றொரு அரை ஏக்கரில் அரளிப் பூக்கள் நிறைந்திருக்க தோட்டம் முழுவதும் கம்பிவேலி இடப்பட்டிருந்தது.

பச்சை நிற சட்டை, கருப்பு நிறப் பாவடை அணிந்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நைலான் சாக்கில் ஒவ்வொரு பூக்களாகப் பறித்துக்கொண்டிருந்தாள் அவள். அவள் பறித்ததில் அடர்த்தியாகப் பின்னிய கூந்தல் முன்னால் வந்து விழ, அதைப் பின்னால் தூக்கிப்போட்டு மீண்டும் பறிக்க ஆரம்பிக்க, அவள் கையில் லாவகமாக வந்து சிக்கிய பூக்கள், சாக்கிற்கு இடம்பெயர்ந்தன.

அந்த மலை அடிவார கிராமத்தில் செண்டு மல்லிப் பூக்களின் நறுமணம் அந்தத் தோட்டத்தைத் தாண்டியும் பரவிக் கொண்டிருந்தது. நடுவில் இரண்டு அடிகள் இடைவெளிவிட்டு நடப்பட்டிருந்த தோட்டத்திற்குள் அமைதியாக நுழைந்தது அது. நீண்ட கருப்பு மூக்கு, நெடிய உடல்வாகுடன், அதன் வாலே அவ்வளவு நீளம் இருந்தது. முகத்தில் கண்களுக்கு மேலும், கீழும் பழுப்பு நிறம் படர்ந்திருக்க, கால்களிலும் பழுப்பு நிறம் படர்ந்து, உடல் முழுக்க கருமை படர்ந்திருந்தது.
மூச்சு வாங்கியபடியே ஓடி வந்து பூப்பறித்துக் கொண்டிருந்த பெண்ணின் கால்களில் மூக்கை வைத்துத் தேய்க்க, மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தவளின் முகமோ மலர்களைப் போல் மலர்ந்தது. காதில் சிறிய தங்கத் தோடுகள் இரண்டு இருக்க, முகமோ மாநிறத்தில் வட்டமாக அமைந்திருக்க, அதில் குட்டிப் பொட்டு ஒன்று வெளிச்சத்தால் தரிசனம் கொடுத்தது. இதுவரை குனிந்து பூக்களைப் பறித்துக் கொண்டிருந்ததால் தொங்கிய சங்கிலி இப்போது நிமிர அவள் கழுத்தில் அழகாக அமர்ந்தது.

வெண்ணிறப் பற்கள் தெரியும்படி அவள் சிரித்து, “ரூபிச் செல்லம், வந்துட்டியா! அம்மா எங்கடா?” என அந்தக் கன்னி வகை நாயோ தலையைக் காட்ட அது பற்களைக் காட்ட பிறருக்கு கொடூரமாகத் தெரிந்தாலும், அது எதிரில் இருந்தவளுக்கு அழகாகவே தெரிந்தது.

“இண்டியன் சைட் ஹவுண்ட்.” என அழைக்கப்படும் இந்தக் கன்னி வகை நாய் தமிழகத்தின் நாட்டு வகைகளில் ஒன்றாகும். சமீபத்தில் வந்த லோகா படத்தில் நாயகியுடன் இந்த நாய் காட்டப்பட்டிருக்க, ஊரில் உள்ள இளைஞர்களுக்கு ரூபியின் மீது ஒரு மதிப்பு. அதனுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அவர்கள் செய்த முயற்சி எல்லாம் தோல்வி அடைந்தது. ‘ரூபி’ பெண் நாய் என்பதால் சுலபத்தில் அந்நிய ஆண்கள் யாரையும் நெருங்கவிடாது. பூப்பறித்துக் கொண்டிருப்பவள் அவளின் உற்ற துணையாகும்.

அவள் கேட்ட கேள்விக்குப் பதிலாகக் குரைத்தது.

“சரி சரி. போய்ப் படு. இப்பத்தான் அம்மா அவுத்துவிட்டாங்களா? இதைப் பறிச்சுட்டு வரேன்.” என நாயை விட்டுப் பூக்களைப் பறிக்க ரூபி அவளின் அருகிலேயே படுத்துக் கொண்டது. தன்னுடைய நாயைப் பாசத்துடன் பார்த்தவள் வேலையைத் தொடர்ந்தாள்.

திடீரென்று ரூபி குரைத்தபடி எழுந்து நின்றது.

“என்னாச்சுடா?” என அவள் திரும்பிக் கேட்கும் முன்னர் நாய் ஓட ஆரம்பித்தது.

“நில்லு ரூபி.” என அவள் கூறும் முன்பே தோட்டத்தின் கம்பிவேலி அருகே நின்றிருந்தது.

நாயின் வேகத்தில் ஈடு கொடுக்க முடியாமல் பின்னால் இவள் ஓட, அது வேலியின் நடுவில் மூக்கை நுழைத்துக் குரைத்துக் கொண்டிருந்தது.

எதிரில் மஞ்சள் வண்ணத்தில் கருப்பு கோடிட்ட டீசர்ட் பேண்டில் ஒரு பெண் குழந்தை கையில் முயலுடன் ரூபி குரைப்பதை பயத்துடன் பார்த்தபடி நின்றிருந்தது. வெள்ளை முயலோ சிறுவிழிகளில் அச்சத்துடன் எதிரில் இருந்த நாயைப் பார்த்துக் கொண்டிருந்தது.

“சும்மா இரு ரூபி.” என நாயின் கழுத்தில் கட்டியிருந்த கழுத்துப் பட்டையைப் பிடித்து இழுக்க அது வரவில்லை. அவள் நாயை நன்றாகப் பிடித்து இழுக்க,

“யாரும்மா நீ?” என்ற குரலில் அதிர்ந்தவள் தெரியாமல் சேற்றில் காலை வைக்க,

நாயும் திமிரக் கட்டுப்பாடற்று சேற்றில் வழுக்கி, “அம்மா...” என்று கத்தியபடி கீழே விழுந்தாள்.

உடனே நாய் முயலை விட்டுக் கீழே விழுந்தவளின் அருகே வந்தது. சேற்றில் வழுக்கியதில் கால் பிடித்திருக்க வலியுடன் அமர்ந்திருக்க, எதிரில் இருந்தவன் கம்பி வேலியில் அழகாகக் கால் பதித்து இந்தப் பக்கம் குதித்து அவள் அருகில் வந்தான்.

“ஆர் யூ ஓகே கேர்ள்?” என அவன் கேட்கும் போதே தூரத்தில்,
“மதிக்கண்ணு என்னாச்சு?” எனத் தூரத்தில் தண்மதியின் அன்னையின் குரல் கேட்டது.
 
Top Bottom