நான் அறிய நீ - 06

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany
இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க, பிரார்த்தனாவின் கையில் இருந்த துண்டு விழுந்தது.

அதை குனிந்து எடுத்துக் கொடுத்தவன் "குட் மோர்னிங்!" என்றான்.

பதில் "குட் மோர்னிங்!" இயல்பை தொலைத்திருந்தது.

முதல் நாள் அவள் விழிகளை சந்திக்க அவன் தடுமாறினான். உங்க பேண்ட் கிழிஞ்சிருக்கு என்ற பெண்ணிடம் ஆணுக்கு உருவாகிய இயல்பான வெட்கத்துடன்.

இன்று அவன் கண்கள் காண பிரார்த்தனா சங்கடம் கொள்கிறாள்.

என்ன நடந்தது, அம்மாவுக்கு? இரத்தம் வரும் அளவில் யார் தாக்கினார்கள்? ஹொஸ்பிடல் கூட்டி போகும் ஆபத்தில் துணைக்கு அழைக்கக் கூட ஒருவரும் இல்லையா உனக்கு?

இந்த கேள்விகள் அவனுக்கு தோன்றி இருக்கும் அல்லவா..

என்ன நினைத்திருப்பான் அவள் குடும்பத்தைப் பற்றி!

ரமணி தவிர்த்து அவளுடைய கிழிசல்கள் எவருக்கும் தெரியாது இங்கே..

மூன்றாவதாக ஒருவன், அதிலும் நேற்று வந்தவன்..

"அம்மாக்கு எப்டி இருக்கு?"

"இப்ப நல்லம்"

"டிஸ்சார்ஜா?"

"ஓம், போன வெள்ளிக்கிழமை வீட்ட வந்துட்டம்.."

"நான் ரமணி மிஸ்ஸுட்ட கேட்டன்.. உங்கட நம்பர் தந்தாங்க.."

இதை ரமணி கூறியதில் இருந்து ஒவ்வொரு தடவையும் அலைபேசி ரிங் ஆகும் போது ரகசியமாக பரபரத்தாள்.

"சொரி, உங்களுக்கு ஒரு தாங்க்ஸ் கூட சொல்ல இல்ல அண்டைக்கு.."

வரோதயன் கரு மீசை ஓரம் புன்னகைத்தான்.

"அந்த டைம் ஃபோர்மாலிட்டிக்கு இடம் இருக்கா.. நானும் அதுக்கு பிறகு உங்கள தொடர்பு கொள்ள இல்ல.. என்ன எண்டு கேட்டுக் கொள்ளல்ல.. ஹாஸ்பிடல் வந்து பாக்குறது சரியா வருமா எண்டு தெரியாது.." சரளமாக பேசியது பிரார்த்தனாவின் இறுக்கத்தைத் தளர்த்த,

படிகளில் அவளுக்கு வழி விட்டு, அவளுடன் இறங்கியபடி "கேக்க நினைச்சன், என்ன நடந்த அம்மாக்கு?" என்றான்.

உதட்டை ஈரம் செய்தவள், பிறருக்கு கூறிய பொய்யை அவனிடமும் பேணி இருக்கலாம்.

"அம்மாக்கு அப்பாவோட எப்பவும் வாய் தர்க்கம் நடக்கும்.. அப்பாக்கு ட்ரிங் பண்ற பழக்கம் இருக்கு.. அண்டைக்கு கோபத்தில நிதானம் இல்லாம அடிச்சிருக்கார்.."

அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது வரோதயன் கண்ணில்.

அடுத்து கேட்பதற்குள் அட்மின் ப்ராஞ்சில் இருந்தனர். அவர் அவர் மேசைக்குச் சென்றனர்.

வாயை மூடி விட்டானே... என்ன குடும்பமடா இவளுடையது என்று நினைத்து இருப்பானோ..

நினைக்கட்டும்.

பக்கத்து மேசைகளில் ஒவ்வொருவரும் வர ஆரம்பிக்க, தாயை பற்றி நலம் விசாரித்தனர் பிரார்த்தனாவிடம்.

"வரோதயன்! குட் மோர்னிங், நான் வந்தது கூட தெரியாம என்ன யோசனை?" வரோதயனுடன் வந்த புதிய நியமனம் கெனீஷா கேட்டாள். ஒரு வாரத்தில் இருவருக்குள் நல்ல நட்பு வளர்ந்துள்ளது.

கவனம் அதுவரை பிராத்தனாவில் வைத்திருந்தவன் "நமக்கு இண்டக்ஷன் ட்ரெயினிங் நடக்க இருக்காம். தெரியுமா?"

"எப்ப?"

"இந்தக் கிழமை.."

"இங்க இன்னும் வேலை ஒண்டும் பிரிச்சி தரல்லயே.."

"ட்ரெயினிங் முடிய தருவாங்க.."

"என்ன அவசரம் என? வந்து வன் வீக் தானே.." என்றவள் ஃபோன் திரையில் முகம் பார்த்து முடி ஒதுக்க, வரோதயன் பிரார்த்தனாவை பார்த்தான்.

"ட்ரெயினிங் எத்தின நாள்?" கேட்டவள் கண்ணில் அது பட, கூட்டம் குழுமி விசாரித்த பெண்ணை பார்த்தாள் கெனீஷா.

பிராரத்தனா யாரோ ஒருத்தி! சம்பந்தம் இல்லாத அவள் மீது அசூசை உணர்வு எழுவது என்ன வகையான இயற்கை?

அட்மின் ப்ராஞ்ச் வேலை பளுவுள்ள பிரிவு. அரச அலுவலகங்கள் அப்படித் தானே என்றால் இந்த கல்வித் திணைக்களம் தங்களுக்கு வரும் கடிதங்களுக்கு மூன்று நாளுக்குள் நடவடிக்கை எடுக்கும் கொள்கை கொண்டு வேகமாக இயங்கும் அலுவலகம்.

இதில் பணிகள் குறித்து ஒதுக்கப்படாத புதியவர்களான இருவரும் போன வாரம் முழுவதும் அரட்டையில் பொழுதைப் போக்கி இருக்க, இன்று வரோதயனின் கவனச் சிதறல் கெனீஷாவை பாதித்தது.

இது எவ்வகையில் என சிலதை பகுப்பாய்வு செய்வது கூடாது. இயற்கை கோளாறு.

நிர்வாக உத்தியோகத்தர் அறை சென்ற கெனீஷா "எங்களுக்கு அலுப்பா இருக்கு சேர், நாங்க வந்த ஃபர்ஸ்ட் வீக் சும்மா இருந்து ஓடிட்டு. இந்த வீக்காவது எதாவது செய்யத் தாங்க.." என பொரிய, அடடா உன்னைப் போன்றோர் தான் இந்த திணைக்களத்திற்கு தேவை என பூரித்த AO, லோகநாதனை அழைத்து "நீங்க மெயில் எழுத கஷ்டமா இருக்கு எண்டிங்க தானே.. கெனீஷாக்கு குடுங்க. அவ ரெஜிஸ்டர்ல எழுதுவா.. நீங்க டிஸ்ரிபியூஷன பாருங்க" என,

மகிழ்ச்சியாக ஒத்துக் கொண்ட லோகநாதன், கெனீஷாவை அழைத்துப் போய் உள் வரும் கடிதங்களை பதியும் பணியை அவளிடம் சுமத்தி விட்டார்.

அறுபதை நெருங்கும் லோகநாதன் வரும் வருடம் ஓய்வுக்கு போகிறார். உட்கார்ந்து இடுப்பொடிய தினம் தினம் கிலோ கணக்கில் வரும் கடிதங்களை பதிவதை சீனியாரான அவர் வெறுக்கின்றார்.

"சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்த மாதிரி இந்த கிழவருட எழுத்து வேலைய என்ர தலையில கட்டிட்டாங்களே" எனப் புலம்ப, அடுத்து நடந்தது கெனீஷாவை வயிறு எரிய வைத்தது.

பிரார்த்தனா ஆஸ்பத்திரியில் இருந்த மூன்று நாள் விடுமுறையில் கடிதங்கள் குவிந்து விட்டன. தலை நிமிர்த்த முடிமாதளவு இருக்க, அவளை அழைத்த AO சம்பிரதாயமாக அம்மாவின் நலம் பற்றி கேட்டு விட்டு "பெண்டிங் க்ளீயர் பண்ணுங்க பிரார்த்தனா.. இண்டைக்கே முடியுங்க சனி ஞாயிறு வந்து செய்விங்க எண்டு நினச்சன்.." என்றதும் அதெப்படி என்று கேட்க தொண்டை வரை வந்து விட்டது.

"புதுசா வந்திருக்கிற ரெண்டு பேர ஹெல்புக்கு கேளுங்க.." என்றதும்

"அவங்களுக்கு பழக்கி சொல்லிக் குடுக்கிற நேரம் நான் அர்ஜன்ட் எல்லாம் முடிகிறன் சேர்" என்றாள்.

"முடிஞ்சா கனேந்திரன் அண்ணாட வெஹிகிள் சப்ஜெக்ட மாத்தி விடுங்க. அவர் மெடிக்கல் லீவ் முடிஞ்சு வரும் வரை ட்ரைவர்ஸ் என்னத் தொந்தரவு செய்யாட்டி நான் என்ர பெண்டிங்க க்ளியர் பண்ணிடுவன்.." என்றாள்.

மணி பொத்தானை அழுத்திய AO வரோதயனை வரவழைத்து "இவருக்கு மாத்தி விடுங்க வெஹிகிள் சப்ஜெக்ட. கனேந்திரன் வரும் வரை நீங்க ஹெல்ப் பண்ணுங்க" என்றார்.

*

வீட்டுப் படியில் உட்கார்ந்து ஃபோன் பார்த்துக் கொண்டிருந்த வரோதயனை உணவு உண்ண அழைத்தார் காமாட்சி.

"ஒன்பது ஆகுது நேரம். சாப்பிட்டு படுக்கிறல்லயா.. நாளைக்கு ஒபிஸ்ஸே"

"எடுங்க வாரன்.."

இரவில் சுடு சோறும் குழம்பும் பொரியலும் வழக்கம். கனயான் கருவாடு குழம்பும் பலாக்கொட்டைப் பொரியலும் ஆக்கி இருந்தார் இன்று.

"காமாச்சி அத்தட கருவாட்டுக் குழம்பு மூப்பன்ர கடை சந்தி வரை மணக்குதுடா.." சொல்லி வைத்தது போல் பஞ்சலிங்கமும் ராசுவும் வந்தனர்.

"உனக்கு இருக்க மோப்ப சக்திக்கு பொலிஸ்ல சேர்ந்து நாயா உழைக்கலாம். நல்ல வருமானம் வரும்"

"நான் நாய் என்றியா, இவனுக்கு வயிறு சரியில்லயாம் அத்த. வீட்ட போறானாம். எனக்கு மட்டும் எடு சோத்த.." வரோதயன் அருகில் பஞ்சு உட்கார,

"என்ர வயித்துல ஏன் அடிக்கிறாய்.. தள்ளி இரு..." என ராசுவும் அமர்ந்தான்.

இருவருக்கும் தட்டு வைத்து உணவு பரிமாறினார் காமாட்சி.

"வீட்ட குமிட்டி கடையல் எண்டு புலம்பிக் கொண்டு வந்தான்.. அதிர்ஷ்டக்காரன்டா நீ.."

"அங்க மட்டும், அஞ்சி பேருக்கு ரெண்டு முட்டைய உடைச்சி வறுத்து வச்சிருக்காம் உன்ர தங்கச்சி.."

"நாளைக்கு
உனக்கும் அதான். பார்த்துக்கொள்ளு"

பஞ்சுவின் கடைசித் தங்கையை ராசு விரும்புகிறான். இரு வீட்டுக்கும் சம்மதம் அவர்கள் காதலில். கல்யாணம் செய்து வைக்க காலம் உள்ளது. பஞ்சுவின் தங்கை பள்ளிப் படிப்பை முடிக்கக் காத்திருக்கின்றனர்.

"நீ என்ன எண்ணத்தில இருக்கிறாய் பஞ்சு.. வயசு போகல்லயா?" காமாட்சி தம்பி மகனைக் கேட்க,

"கருவாட்டு குழும்ப எனக்கும் சேர்த்து வைக்க நோகுதா அத்தை உனக்கு.. உன்ர மகனுக்கு ஒரு வயசு தான் கூட எங்களுக்கு.. அவனுக்கு முதல் பொண் பாரு.."

காமாட்சி பேசாமல் கறி வைத்தார். அதை இதை பேசி உண்டு எழுந்தவர்கள் கொல்லை மாமரத்தடியில் கூடினர்.

தென்னை ஓலை ஈர்க்கு முறித்து பல்லில் சிக்கியதை எடுத்த பஞ்சு, "அத்தைக்கு ரெண்டாவது மருமகள காண ஆசை வந்துட்டு மச்சான்" என்றான்.

"வரோதயன்ர பிள்ள குட்டிய காண ஆசை வந்துட்டு என்றியா?"

"ரெண்டும் ஒண்டு தான்"

"ரெண்டும் ஒண்டா மச்சான்.. வித்தியாசம் இருக்கா?"

"எவன்டா இவன்.. கல்யாணம் பண்ண சொல்லுது அத்தை இவன.."

"காலையில நேரத்துக்கு எழும்பணும். போய் படுங்க" வரோதயன் கூட்டத்தை கதைக்க,

"அரசாங்க உத்தியோகம் எடுத்துட்டாராம்.. எங்களுக்கு செல்லிக் காட்றார்.. நாம மட்டும் வெட்டியா சுத்துறமா மச்சான்.. ஆளுக்கு ஒரு தொழில் செய்றம் தானே.. எடு போவம். வேளைக்கு படுத்து எழும்பி நேரத்துக்கு தோட்டத்துக்க போகோணும்.."

அவர்கள் பொய்யாக முறைத்துக் கொண்டு கலைய, படுக்கை வந்த வரோதயன் தலைக்கு கை வைத்துப் படுத்து ஃபோன் பார்த்தான்.

"தம்பி, அண்ணன்ர மாமனார்ட பக்கத்துல மாப்பிள்ளை இருக்காம். பஞ்சுட தங்கச்சிக்கு கேட்க சொல்லுவமா?"

"சொல்லுங்களன்.."

"ரெண்டு மூணு பிள்ளைகள் இருக்கு. சாதகம் பொருந்தினா முடிக்கலாம் எண்டான்.."

"தங்கச்சிக்களுக்கு செய்யாம அவன் முடிப்பானா?"

"யாரு?"

"பஞ்சு"

"நான் உனக்குச் சொல்றன் தம்பி.."

அலைபேசியை அலசியவன், போன வாரம் சேமித்தும் தொடர்பு கொள்ளாமல் வைத்திருந்த பிரார்த்தனாவின் இலக்கத்தைத் தொட்டான்.

ஒவ்வொரு எழுத்தாக டைப் செய்தான்.

பின்னணியில் காமாட்சி அவர் பாட்டுக்கு பேச, பெரும் யோசனையினை சில நொடிகளுக்கு செய்தவன் டைப் செய்ததை அனுப்பி விட்டான்.

*

நாளைய சமையலுக்கு காய் அரிந்தாள் பிரார்த்தனா. பயற்றங்காய் உடைத்து, தட்டை அவரைக்காய்க்கு நூல் எடுத்தாள்.

சமையல் கட்டில் வேலை முடிந்ததும் அறைக்கு வர, போர்வை மூடிப்படுத்திருந்த தங்கையில் அசைவு தெரிந்தது. சின்னச் சிணுங்கலும் இச் சத்தங்களும் கேட்டதும் நாகரிகமாக வெளியேறி ஹாலில் அமர்ந்தாள்.

"தனா.. தனா..." கதவைத்தட்டி தள்ளாடி வந்தார் வருணன்.

மூக்கில் கை வைத்து எழுந்தவள் எடுத்து வைத்த சாப்பாட்டை கொடுக்க,

"சோறா.. யாருக்கு தேவை சோறு.. நான் என்ன சோத்துக்கு செத்தவனா.. இந்த உடம்பு ஒரு நாள் அழிஞ்சு போகும்.. இது பொய்யான மெய். இந்த வருணன்ர ஆன்மா அழியாது. அது மெய். ஆத்மா மெய். அந்த ஆன்மா இந்த குடும்பத்த ஆத்மார்த்தமா நேசிக்குது.. என்ர புள்ளைய நேசிக்குது.."

"ஓம் தனா.. உண்மையா இந்த அப்பா உன்னில பாசம் வச்சிருக்கன்.. உன்னில் மட்டும் தான் அன்பு வச்சிருக்கன்.."

சாராய வாடை குடலை பிரட்டியது.
நினைவு தெரிந்து அவள் காணும் தகப்பன் குடிகாரனே. இத்தனை ஆண்டுகளில் எதுவும் மாறவில்லை. சாராயத்திற்கு நாசி அருவருப்பதும் மாறவில்லை.

ஒற்றைப் படுக்கை அறையை காதலனுடன் ஃபோன் பேசும் தங்கை எடுத்துக் கொள்ள, ஹாலை குடித்து உளறும் தகப்பன் வரித்துக் கொள்ள, தடுப்புப் பக்கம் வந்து இராஜேஸ்வரியின் கட்டிலில் அமர்ந்தாள்.

'நான் வசந்தாட்ட போக போறன்' என்று தங்கையிடம் சென்றவர் மூன்று நாளாக அங்கே தான் வசிக்கிறார்.

கோபத்தில் தாயின் கட்டிலில் அமரக் கூட இஷ்டம் இல்லை.

வேறு வழி?

இந்தச் சூழல் எதுவும் நிலானியை பாதிக்கவில்லை!

பாதிக்க கூடாது என்று தான் ஒருவனைப் பிடித்துக் கொண்டாள் போல.

நல்ல லட்சணமான பிள்ளை தனா. குணமும் நல்லம்.. லவ் பண்ணல்லயா ஒருவரும்? - வேலைக்கு சேர்ந்த புதிதில் பாலா கேட்டதாக ரமணி ஒரு தடவை பேச்சு வாக்கில் சொல்ல,

எனக்கு இருக்கிற பிரச்சினைக்கு அது ஒண்டு தான் குறை அக்கா.. ஒரு ரெண்டு நிமிஷம் என்ர வீட்ட வந்து இருந்து பாருங்க.. சந்நியாசம் வாங்கிட்டு போயிருவிங்க.. என்றாள் இவள் பதிலாக.

குத்துக் காலிட்டு அமர்ந்து முகம் புதைத்தவள் ஃபோன் ஒலி கேட்டுக் கலைந்தாள்.

வரோயன் பெயரில் செய்தி வாட்சப்பில் வந்துள்ளது.

ஹாலில் உளறும் தகப்பனின் ஓயாத சத்தமும், சாராய வாடையும், தங்கையின் கூச்ச நாச்சமற்ற செயல் தந்த மண்டைக் குடைச்சலும் எங்கோ தொலை தூரம் போனது.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: நான் அறிய நீ - 06
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
"அவள் ஒரு தொடர்கதை" கவிதா போல தனாவும் இருக்கா.....

என்ன அதில் கவிதா ரொம்ப straight forward.....but தனா கொஞ்சம் soft hearted.....