• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிலவின் அக ஒலி - 8

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 8

நிலாயினிக்கு பூ வைத்து முடிக்கவும், "நீங்களும் தென்காசிக்கு ஒருநாள் வாங்க. நல்ல நாள் பாத்துட்டு நானே கூட கால் பண்றேன், மாப்ள வீடு பாக்க வாங்க, அன்னக்கே கூட நம்ம கடையிலக் கல்யாணத்துக்கு ட்ரெஸ் எல்லாம் எடுத்துடுவோம், ரெண்டு அலைச்சல் வேணாம். அப்றம் கல்யாணம் எங்க செலவு தான், நீங்க ரிசப்ஷன் வேணா வச்சுக்கோங்க. முதல்ல மண்டபம் பார்த்ததும் பத்திரிகை அடிக்கைல யார் பேரெல்லாம் சேக்கணும்னு சொல்லுங்க சேத்தே அடிச்சுடலாம், உங்களுக்குப் பத்திரிக்கை எவ்வளவு தேவைப்படும்னு கலந்துப் பேசிட்டு சொல்லுங்க. முந்தின நாள் நிச்சயம் பண்ணிப் பொண்ண அழைச்சுட்டுப் போய் காலைல முகூர்த்தத்துல கல்யாணம். சரி தானே? நாள் கம்மியா இருக்குல்ல அதான் எல்லாத்தையும் ஒரேயடியா சொல்லிட்டேன்" என தங்கமாடத்தி படபடவென்று அடுக்க, மலைத்துப் பார்த்தனர் நிலாயினி வீட்டினர்.

"என்ன எல்லாரும் அமைதியாவே இருக்கீங்க? உங்க மருமகன் பேசுறப் பேச்சுக்கு நீங்க இப்படி அமைதியா இருந்தா, தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டுப் போயிருவானே?" என்றார் ஆரனின் சித்தி.

"அதென்னவோ உண்மை" என முனங்கினாள் நிலாயினி.

"திடீர்னு வந்து நின்னுட்டு என்னலாமோ பேசுறாங்களேன்னு நினைக்கிறீங்களா? இல்ல அவன் போலீஸ்காரனாச்சேன்னு பயப்படுறீங்களா?" என்றார் இளங்கோவன்,

"அத்தான நாங்க ரெண்டு மாசமா பாக்றோம். அவர் இங்க வந்தப்றம் இந்த ஏரியாவே சைலன்ட் ஆகிடுச்சு. பயம் இல்லாம போய்ட்டு வர முடியுது. அண்ட் எல்லார்ட்டையும் நல்லா பேசுவாங்க. இங்க அவங்களுக்கு நல்ல நேம் இருக்கு. அதனாலயே எங்க அக்காக்கு ஏசிபி சார் டபுள் ஓகே. இன்னைக்கு அதும் இப்ப ஒரு மணிநேரத்துக்கு முன்ன தான் நீங்க வரப்போறதாவே சொன்னாங்க. இங்க அந்த டென்ஷன் தான் எல்லாருக்கும்" என்றாள் சந்திரா.

"அப்ப எல்லாருக்கும் சந்தோஷம் தானே?" என மாடத்தி மறுபடியும் கேட்க,

"நீயே சொல்லும்மா!" என வினோதினியிடம் தீக்ஷி சொல்ல,

"முதல்லயே சொல்லாத பதட்டம் தானுங்க. இவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகி நேத்து தான் டிஸ்ஜார்ஜ் பண்ணிக் கூட்டிட்டு வந்தேன். இன்னைக்கு காலைலயே இப்படின்னதும் ஒன்னும் ஓடல எங்களுக்கு. ரொம்ப ரொம்ப சந்தோஷங்க" என்றார் வினோ பதட்டமாகவே.

"அச்சோ அப்படியா? அவன் உடம்பு சரியில்லன்னு மட்டுந்தான் சொன்னான். அதான் தலைல பேண்டேஜ் போட்ருக்கீங்களா? இப்படி சூழ்நிலைன்னு தெரியாது, அவனும் சொல்லல. பெருசா எதும் இல்ல தானே? இன்னும் வலி எங்கையும் இருக்குதா? தலைலனா ரொம்ப கவனம் எல்லாம் செக் பண்ணிட்டீங்க தானே?" என வந்த எல்லாருமே மாற்றி மாற்றிக் கேட்க,

செல்வகுமார், "அதெல்லாம் ஒன்னுமில்ல, கார் கண்ணாடில மண்டை முட்டிருச்சு, அதனால தலைல தான் லேசா அடி. ஸ்கேன்லாம் எடுத்து பாத்துட்டோம் எல்லாம் நார்மலா இருக்குன்னு சொல்லிட்டாங்க. இன்னையோட பத்து நாளாகிடுச்சு"

"கல்யாண வேலைலாம் பாக்க முடியுமா? இல்ல இன்னொரு மாசம் போட்டுமா? இதோட எப்படி அலைவீங்க?" என்றார் இளங்கோவன். உண்மையில் பார்ப்பதற்கு எங்கும் கட்டோட, நடக்க முடியாமலோ எதுவும் இல்லை. தலையில் அதுவும் ஒரு பக்கத்தில் தையல் போட்டிருக்கும் இடம் மட்டுமே முடியில்லாமல் வெறிச்சென்று தெரிந்தது, அதனாலேயே ஆரன் குடும்பத்தினரால் கண்டுகொள்ள முடியவில்லை.

"எங்க சைட் பெருசா சொந்தங்கள் யாரும் இல்ல அங்கிள். எட்டு வருஷம் முன்ன வந்த சின்ன சண்டைல எல்லாம் கோச்சுட்டுப் போய்ட்டாங்க. நாங்களும் அப்படியே விட்டுட்டோம். அதனால பெருசா யாரையும் இன்வைட் பண்ற வேலைலாம் எங்க பக்கம் கிடையாது" என்றாள் நிலாயினி. அவ்வளவு நேரத்திற்கு பிறகு அப்போது தான் பேசியிருந்தாள்.

"பரவால்ல லஷ்மி. நீ வா நமக்கு அங்க ஆளுங்க அதிகம். நாங்க பெருசா தான் பண்ணனும், ஒரே மகன் கல்யாணம், எங்க வளசலும் பெருசு, ஒருத்தர விட்டு ஒருத்தர கூப்பிட்டுன்னு முடியாது, எங்களுக்கு வேலை ஜாஸ்தி தான் இருக்கும்மா. நீங்க உங்களுக்கு அலைய முடியுமான்னு பாருங்க, இல்லனா அதையும் சொல்லுங்க நாங்களே சேர்த்து அழைப்பு வச்சுடுறோம்" என்றனர் ஆரனின் பெற்றவர்கள்.

"கண்டிப்பா சொல்றோம்மா. நீங்க கேட்டதே பெரிய விஷயமா தான் இருக்கு எங்களுக்கு" என்றார் வினோதினி.

"அப்ப வரட்டுமா? போய்ட்டு கால் பண்றேன் நான்" என விடைபெற்றுக் கிளம்பினர்.

அவர்கள் அந்தப்பக்கம் கிளம்பியதுமே, "என்ட்ட சொல்லணும்னு கூட தோணலையாடி உங்களுக்கு? அப்படியா நா ஒரே நாள்ல வேண்டாதவளாகிட்டேன்?" என ஆரம்பித்தார் வினோதினி.

"நீ மட்டும் சொல்லிட்டா இவர இங்க கூட்டிட்டு வந்த? அப்ப எங்கள நீயும் வேண்டாம்னு தான் நினச்சியா?" என்றாள் நிலாயினி.

"நானு உங்கூட வந்துடுறேன். தனியா விட்டுப் போயிடாதன்னு கெஞ்சுறவர என்ன செய்ய சொல்ற? இந்த மனுஷன் இங்க இருந்த வர, எங்கிட்ட எதுக்காகவும் கெஞ்சி நின்னதில்ல. எதுக்காகவுமே! நீ இல்லனா என்னால செய்ய முடியாதா என்னன்னு அகம்பாவமா நடந்துப்பார். எல்லாம் அவர் வச்சதுதான் இந்த வீட்ல. அப்படிபட்டவர் இன்னைக்கு என் கையப் பிடிச்சுட்டுக் கெஞ்சுறாரு. அவர மாதிரி உதறிட்டு வர தெரியல எனக்கு. இவர காரணம் காட்டி தான உன் கல்யாணம் தள்ளிட்டுப் போகுது, அடுத்து வேற ரெண்டு பொண்ணுங்க இருக்காங்களேன் பயம் எனக்கு. நீங்க உங்கள பாத்துப்பீங்கனாலும், அப்பான்னு அவர் இருந்தும், அவர் இல்லாம ஏன் உங்களுக்கு நல்லது பண்ணனும்னு தான் வரட்டும்னு விட்டேன். அவர்கூட சோடிபோட்டுட்டுப் போற ஆசைல எதையும் செய்யல நான். உங்க மூணுப் பேருக்காக மட்டுந்தான் கூட்டிட்டு வந்தேன்" என அவர் கண்ணீரைத் துடைக்க,

"போம்மா நீயும் உன் விளக்கமும்" என சென்றுவிட்டாள் நிலாயினி.

"அடுத்த வாரம் எக்ஸாம் இருக்கு எனக்கு. கல்யாணத்துக்கு எதுவும் ப்ளான் பண்றதா இருந்தா, சண்டே பண்ணக் கூடாது. லஷ்மி மாமியார் பேசினாங்கனா சொல்லும்மா" என சொல்லிச் சென்றாள் சந்திரா.

கண் முன், தான் இழந்ததைக் கண்டு மறுகி நின்றார் செல்வகுமார். என்ன செய்தும் செய்ததை சரிசெய்து அவரை உத்தமனாக மீட்க முடியாதே! ஆணவத்தையும் ஆசையையும் கட்டுப்படுத்தாமல் விட்டதன் விளைவு இன்று உயிருக்குப் பயந்து ஓடிவரவேண்டிய நிலையில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. எதற்காக அந்த விபத்து என்று அவருக்கு தெரிந்திருந்தும் வாயைத் திறக்கவில்லை அவர். ஒரு ஏசிபியுடன் கல்யாணம் என்பது அவர் மகள் லஷ்மி நிலாயினிக்கும் பாதுகாப்பு அவர் குடும்பத்திற்கும் பாதுகாப்பு, திருமணம் நல்லபடியாக நடந்துவிட வேண்டும் என தான் வேண்டிக்கொண்டே இருந்தார். தன் தவறு எவ்வகையிலும் பெண் பிள்ளைகளைப் பாதித்துவிடக் கூடாது, இப்போதும் அதை தான் எண்ணி எண்ணி வருந்தினார்.

உள்ளே வந்த நிலாயினி, ஆரன் கேட்டுகிட்டது போல, ஒரு செல்ஃபியை எடுத்து அவனுக்கு அனுப்பி வைக்க, ஒரு மணி நேரம் கழித்து அதைப் பார்த்தவன், முத்த ஸ்மைலியை அனுப்பிவிட, பதிலுக்கு வக்கனம் காட்டும் ஸ்மைலியை அனுப்பி வைத்தாள் நிலா.

அடுத்து வந்த நாட்கள், நிலாயினி வங்கிக்கு செல்ல மட்டுமே அறையிலிருந்து கிளம்பி வெளியே வருவாள், எதையாவது எளிமையாக செய்து உண்டுவிட்டு அதையே மதியத்துக்கும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவாள். இரவு எட்டு மணி வரை அங்கேயே இருந்துவிட்டு வருபவள், அறைக்குள் முடங்கிவிடுவாள்.

"சோறு தான் பொங்கிட்டேன்ல அத எடுத்துட்டு போயேன்டி. ஏன் இப்படி பண்ற லஷ்மி?" என வினோதினி பேசினாலும் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவாள்.

சந்திரா முழுமூச்சாக படிப்பில் இறங்கியிருக்க, அவளுக்கு உதவி செய்யவும் தவறவில்லை நிலா. இரவுகளில் பெண்கள் மூவரும் ஒரே அறையில் தான் முடங்கிக் கொள்வர். அங்கு சந்திராவோடு அமர்ந்து அவள் படிக்க உதவுவதை வாடிக்கையாகக் கொண்டாள் நிலாயினி.

"நைட்டெல்லாம் ஒழுங்கா படிச்சியா? மதியம் வந்து பரீட்சை வைப்பேன், ஒழுங்கா பாஸாகணும் சொல்லிட்டேன்" என காலையில் வம்பிழுக்கும் தீக்ஷி தலையில் கொட்டிவிட்டு தான் கோச்சிங் வகுப்பு செல்வாள் சந்திரா.

முதலில் சந்திரா, தீக்ஷி இருவரும் வினோதினி சமைத்துத் தருவதை எடுத்துக் கொள்வர். நிலாவையும் அப்படித்தான் எடுத்துச் செல்கிறாள் என நினைத்திருந்தனர்.

"நிலாக்கு நீயாவாது காலைல எழுந்து செஞ்சு குடுடி, இட்லியையும் தோசையையும், ரெண்டு நாளா மதியத்துக்கும் கொண்டுப் போறா" என வினோதினி சொன்ன பிறகே, நிலா மொத்தமாக விலகி நிற்பது இளையவர்களுக்குப் புரிந்தது. அதன்பின், நிலாவின் உணவு தீக்ஷி கையாலானது.

"ஒரு செஃப்ப வீட்ல வச்சுட்டு நீ இப்படி ல்ஞ்சுக்குத் தோசைய கொண்டு சாப்பிடுறது என்னைய அவமான படுத்துறதுக்கு சமம்னு தோணலையாக்கா?" என்றாள் வினோதினி சொன்ன அன்று இரவு.

"உன் சாப்பாட சாப்புடறதுக்கு அந்த காஞ்ச தோசையே மேல்னு அக்காக்கு தெரியாதுன்னா நினைச்ச?"

"படிக்கும் போது இப்படி கதை பேச வராத. மூடிட்டு படி"

"உனக்கு தான் படிப்பு வரல படிக்குறவளனாலும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு தெரியல? பேசிக் சென்ஸில்ல? நீ மூடிட்டு போடி" என சந்திரா பேச, சண்டை பெருசாக போக,

"நீ போய் மூணு பேருக்கும் எதாவது செஞ்சு எடுத்துட்டு வா. கிளம்பு" என நிலாயினியே அனுப்பி வைத்துவிட, அப்படித்தான் நிலாயினி, சந்திரா, தீக்ஷி மூவரின் உணவும் தீக்ஷி கையால் என்றானது. நிலாயினியை தனித்து விடாமல் இளையவர்கள் இருவரும் கூடவே சேர்ந்து நின்றனர். அதில் வினோதினிக்கு திருப்தியே, அதனால் அமைதியாக வேடிக்கைப் பார்த்தபடி கடக்க ஆரம்பித்துவிட்டார்.

ஆரனும், மதுரனும் முகநூலில் பெண்கள் ஐடியில் சிக்கிய நான்கு பேரை, அவர்கள் ஐடி செயல்பாட்டில் இருக்கும் நேரத்தில் இடத்தைக் கண்டுபிடித்து அங்குள்ள போலீசை வைத்தே மடக்கிப் பிடித்தனர். நால்வருமே வெவ்வேறு இடத்தில் இருந்தனர், கடலூரில் ஒருவன், சென்னையில் ஒருவன், மதுரையில் ஒருவன், விழுப்புரத்தில் ஒருவன் என நால்வரையும் பிடித்து திருநெல்வேலி கொண்டு வர வைத்தனர்.

வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஆபாச வீடியோக்களை அனுப்பிக் கொண்டிருந்தவர்களுக்கு உயிர்பயம் என்றால் என்ன என உணர்ந்த தருணங்கள் அவை.

"உங்களால எட்டுப் பொண்ணுங்க சூசைட் பண்ணிகிட்டாங்க. எதுக்குடா அனுப்புனீங்க? அறிவில்ல? சோறு தான திங்கிறீங்க? அப்படி என்ன அத்துக்கிட்டுப் போறளவுக்கு?அசிங்கமா பேச அவங்களையும் கூப்பிடுவீங்ளோ? இப்ப கொலை கேஸ்ல உள்ள போ போறீங்களே, உள்ள போய் பேச ஆள் வேணும்ல என்ன செய்வீங்க? உங்களுக்குள்ளயே மாத்தி மாத்திப் பேசிக்கோங்க சரியா" என லத்தியால் வெளுத்துவிட்டான் ஆரன்.

"கொலையா? இல்ல சார் இல்ல சார் இனி அனுப்ப மாட்டேன் சார். தெரியாம பண்ணிட்டேன் சார்" என கதறியவர்களைக் கண்டு கொள்ளவில்லை அவன்.

"வெளிய விட்டாதானடா இன்னொருக்கா வேற அனுப்புவீங்க? சாணிய திங்க சொன்னா திண்பியா நீ? அறுவறுப்பா மூஞ்ச சுழிக்க மாட்ட? அந்தப் பிள்ளைங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் நீ அனுப்புற வீடியோ எல்லாம். கருமத்த நீ பாத்து சாவு, எதுக்கு அடுத்தவங்களுக்கு அனுப்பி சாகடிக்கிற? காயத்ரி, ப்ரியா, சூர்யா, செண்பகா, ரூபிணி, இந்த அஞ்சு பேரும் இப்ப உயிரோட இல்ல. பொம்பளைங்க நேம்ல ஐடி க்ரியேட் பண்ணி ஆறுதல் நொட்டுவீங்களோ நீங்க? இன்னும் யாருக்கெல்லாம் அனுப்பி எங்கெல்லாம் உங்களால பொண்ணுங்க பாதிக்கப் பட்ருக்காங்கன்னு செக் பண்ணி எடுத்துட்டு வந்து மறுபடியும் வெளுக்குறேன்டா உங்கள" என வெளியே வந்தான்.

அவர்களின் நான்கு மொபைல்களும் கண்காணிப்பில் இருந்தது, மதுரனும் சைபர் செல்லை சார்ந்த இருவரும் அவர்கள் மொபைலில் இருந்து தகவல்களை சேகரிப்பதில் இருந்தனர்.

"சார் பூராம் பிட் படமா வச்சுருக்காய்ங்க. வேற ஒன்னும் தேரல. வேலைப் பொழப்பு ஒன்னும் கிடையாது போல. நாலு அஞ்சுன்னு ஃபேஸ்புக் ஐடி வச்சுருக்கானுங்க, அதுல ஒன்னு மட்டுந்தான் அவனவன் பேர்ல இருக்கு. மத்த எல்லாம் பொம்பள பிள்ளைங்க பேர்ல இருக்கு. ஆம்பளையும் ஆம்பளையுமே பொம்பளைங்க ஐடில இருந்து ஆம்பளன்னு தெரியாம பேசிருக்காய்ங்க. ச்சை கன்றாவி" என மதுரன் முகத்தைச் சுளிக்க, சிரித்தான் ஆரன் விஷ்வேஷ்வரன்.

"இவனுங்க லோக்கல் இல்லன்னு தெரியவுமே இவனுங்கட்ட ஒன்னும் தேறாதுன்னு தெரியும் மதுரா. இருந்தாலும் பயம் காட்டினாலாவது திருந்துவானுங்களான்னு பாக்க தான் கொண்டு வர வச்சது. சுய ஒழுக்கம் வேணும். கைல இருக்க மொபைல்ல நம்ம செய்றது எவனுக்குத் தெரியபோவுதுன்னு தான இஷ்டம்போல செய்றானுங்க. ஆனா உண்மை? நாம பாக்றதெல்லாம் ஏதோ ஒரு இடத்துல ரெக்கார்ட் ஆகிட்ருக்கு, வாட்ச் பண்ண ஆளு இருக்குன்னு தெரிஞ்சா பயம் வரும்ல? நீ என்னத்தையும் பார்த்து நாசமா போ, அத அடுத்த பொண்ணுட்ட தீர்த்துக்க ட்ரை பண்ணாத, அது அசிங்கம்னு புரியணும்ல" என்க,

"இவனுங்களாம் திருந்த மாட்டானுங்க சார்"

"பத்து நாள் உள்ள வச்சே அனுப்புவோம். விஷயத்த ப்ரஸுக்கு சொல்லிடு, நல்லா வைரல் ஆகணும்" என்றுவிட்டான்.

இதற்குள் தங்கமாடத்தியிடமிருந்து பதினைந்து அழைப்புகள் வந்துவிட்டிருந்தது. பெண் பார்த்துவிட்டு சென்று ஒரு வாரம் ஓடியிருந்தது.

"என்னம்மா?" என வெளியே வந்து, எதிர்க்கடை பையனிடம் கைக்காட்ட, அவன் டீயுடன் ஓடிவந்துவிட்டான்.

"ஃபோன் பண்ணா எடுக்க இவ்ளோ நேரமா?"

"நா சும்மாவா உட்கார்ந்துருக்கேன்?"

"நாங்க மட்டும் உனக்கு கால் பண்ணிட்டே இருக்க சும்மாவா உட்கார்ந்துருக்கோம்?" என்றார் அவரும்.

"சரி சொல்லு"

"சொல்லவா? உனக்கு கல்யாணம் பண்ணணுமா வேணாமா?"

"பண்ணி வைப்பியா மாட்டியா நீ?"

"இந்தாங்க நீங்களே பேசுங்க இவன்ட்ட. வாய மட்டும் எங்கிருந்து வாடகைக்கு பிடிச்சுட்டு வந்தாம்னே தெரியல, மனுஷி பேசுவாளா இவன்ட்ட" என திட்டியபடி குடுப்பது கேட்க, குபீர் சிரிப்பு தான் ஆரனுக்கு.

"விஷ்வா! பத்திரிகை வந்துருச்சு. கோவில்ல வச்சு கும்பிட நீ வரணும். பொங்கல் வச்சு உன் பேருக்கும் பொண்ணு பேருக்கும் அர்ச்சனை பண்ணனும்" என இளங்கோவன் சொல்ல,

"சரி நாளைக்கு காலைல வந்துடுறேன்" என உடனே சொல்லிவிட்டான், அடுத்து அவரே செல்வகுமாருக்கு அழைத்து நிலாயினி வீட்டினரையும் அழைத்துவிட்டு வைத்தார்.

செல்வகுமார் இன்னும் வேலைக்கு செல்லவில்லை, ஒரு மாத மருத்துவ விடுப்பில் இருந்தார்.

"நீயும் நானும் போய்ட்டு வருவோமா வினோ?" என மெதுவாக கேட்க,

"ம்ம் பொண்ணு கல்யாணம் அதுக்காக போணும்ல. ஆனா லஷ்மி என்ன சொல்லுவான்னு தெரியாது கேட்டுப் பாப்போம்" என்றிருந்தார்.

அன்று தான் சந்திராவிற்கும் பரீட்சை. அவள் ஒருத்தி எழுத மூவரும் கிளம்பி சென்றிருந்தனர். அவளை தேர்வு மையத்திற்குள் அனுப்பிவிட்டு, இவர்கள் இருவரும் அருகிலிருந்த தியேட்டரில் சென்று அமர்ந்தனர்.

மூன்று மணிநேரத்தைப் போக்கிவிட்டு வர, சந்திராவும் பரீட்சையை முடித்து வெளியே வந்திருந்தாள்.

"பல்லெல்லாம் தெரியிறத பார்த்தா பாஸ் பண்ணிடுவியோ?" என தீக்ஷி கேட்க,

"ஹன்ட்ரட் பெர்சன்ட். எக்ஸாம் பேப்பர் நல்ல ஈசி தான்" என்க,

நிலாயினியும் கேள்வித்தாளை வாங்கிப் பார்த்தாள். க்ரூப் டூ வினாத்தாள் அது. அவளுக்கு அதில் அப்டியூட்டும், கரெண்ட் அஃபையர்ஸும் மட்டுமே தெரியும் என்பதால் அதுப் சம்பந்தமான கேள்விகளைத் தனித்து பார்த்தாள். சந்திராவிடம், 'இதுக்கு என்ன ஆன்சர் பண்ண? அதுக்கு என்ன பண்ண?' என கேட்டு, சரியும் பார்த்துக்கொண்டாள், அவள் கூறிய பதிலில் நிலாயினிக்கும் திருப்தியே, தேர்ச்சிப் பெற்றுவிடுவாள் என்ற நம்பிக்கை வர, "சூப்பர்டி!" என அணைத்துக்கொண்டாள்.

"அப்ப இன்னைக்கு நைட் டின்னர் என் ட்ரீட். ஸ்பெஷலா செய்றோம்" என தீக்ஷி குதூகலிக்க,

"லஷ்மிக்கு கல்யாணம், இனி அந்த அலைச்சல் இருக்கும் நமக்கு, போற இடத்துலலாம் வயித்த புடிச்சுட்டு பாத்ரூம்ல போய் உட்கார முடியாது. இனிதான் நாம கவனமா இருக்கணும் லஷ்மி" என சந்திரா சொல்ல, அவள் முதுகில் அடித்தாள் தீக்ஷி.

"அதெல்லாம் தீக்ஷி சூப்பரா சமைச்சு தர்றா"

"அப்படி சொல்லுக்கா. இன்னைக்கு நாம கேன்டில் லைட் டின்னர் சாப்பிடுவோம். அக்காவோட பேச்சிலர் பார்ட்டி, உன்னோட எக்ஸாம் பார்ட்டி, ரெண்டுக்கும் சேர்த்து என் ட்ரீட்" என்றவள் கையோடு, பொருட்கள் வாங்க நாலைந்து கடைகளுக்கு இழுத்துச் சென்றாள். அதிலேயே மாலை வரை சென்றுவிட்டது அவர்களுக்கு.

"நைட்டு இவ செஞ்சு தரப்போற ஊத்தாப்பத்துக்கு மதியத்துல இருந்து விரதமிருக்க வச்சுட்டா" என புலம்பியபடி தான் வீடு வந்திறங்கினர்.

"நீங்க ரெண்டு பேரும் போய் ரெடியாகுங்க, நா முடிச்சு ப்ளேட்டிங் பண்ணிட்டுக் கூப்பிடுறேன்" என தீக்ஷி சமையலறை செல்ல,

"கிச்சன் கதறப்போகுது" என்ற சந்திரா, "லஷ்மி நாம மொட்டமாடில டைனிங் செட் பண்ணுவோமா? அவளோட டின்னருக்கு நம்ம காம்பிளிமெண்ட்" என்க, தலையசைத்தாள் நிலாயினி.

இருவரும் மாடியேறி, பிறந்தநாட்களுக்காக வாங்கிய, பலூன் கம்பி செட்டப்புகளை பலூன் வைக்காமல் சுற்றி நிற்க வைத்து ஸ்க்ரு செய்தனர், அதில் ஸ்கிரின் துணியை கூடாரம் போல செட் செய்தனர். நடுவில் குட்டி மேசை போட்டு, சுற்றி தரையில் அமர்ந்து சாப்பிடுவது போல, குட்டிக் குட்டியாக மூன்று பாய் போட்டனர். அங்கங்கு வாசனை மெழுகுவர்த்தியை வைத்தனர். எளிமையாக அழகாகவே இருந்தது.

"சாப்பிட உட்காரும் போது, கேன்டில் ஏத்தி வச்சுப்போம்" என முடித்து நிமிர, எதிரில் மாடிவீட்டின் வாசலில் குறுகுறுவென இவர்கள் இருவரையும் பார்த்தபடி, ஆரனும் மதுரனும் நின்றனர்.
 

Vishakini

Moderator
Staff member
"என்ன பண்றீங்க?" என்றான் ஆரன்.

"கேன்டில் லைட் சிப்ளிங்க்ஸ் டின்னர்" என நிலா சொல்ல,

"பார்ரா! எங்களுக்குலாம் இன்வைட் இல்லையா?"

"நோ. இது கேர்ள்ஸ் டின்னர்"

"வயிறு வலிக்கப் போகுது"

"பரவால்ல"

"போடி" என்றான் செல்லமாக முறைத்து, சிரித்தபடி கீழே சென்றுவிட்டாள் நிலாயினி.

"வாங்கத்தான் நீங்க" என சந்திரா அழைக்க,

"என்ஜாய்மா" என்றுவிட்டான்.

"என்னைய கூப்பிட சொல்லுங்க சார்" என மதுரன் ஆரன் கையை சுரண்ட,

"வீட்டு மாப்ள எனக்கே இல்லையாம். உனக்கு என்ன மேன்?"

"நா நாளைய மாப்ள சார்"

"அத நாளைக்கு பாப்போம். இப்ப வந்த வேலையப் பாப்போம் வா" என உள்ளே சென்றுவிட்டனர். மறுநாள் ஊருக்கு செல்வதால், சில குறிப்புகளை, மதுரனிடம் கொடுத்து அங்கெல்லாம் சென்று விசாரித்து வர சொல்லவே அழைத்து வந்திருந்தான்.

அங்கு தீக்ஷி,'சிக்கன் ப்ரியாணி, ஃவைட் சாஸ் பாஸ்தா, ஜீரா ரைஸ், சிக்கன் க்ரேவி, நாண் பன்னீர்' என செய்து அடுக்கிவிட, அத்தனையையும் மாடிக்குக் கொண்டு வந்தனர் மூவரும்.

"சூப்பர் செட்டப்" என குதூகளித்த தீக்ஷி, அனைத்தையும் இன்ஸ்டா போஸ்டாக்கினாள்.

இவர்கள் சாப்பிட உட்கார்ந்த நேரம், எதிர் வீட்டில் ஆரனும், மதுரனும் மறுபடியும் வெளியே செல்லக் கிளம்பி வர, "அத்தான்ஸ் ஒரு நிமிஷம்" என இங்கிருந்தே கத்தி அவர்களை நிப்பாட்டிய தீக்ஷி, இரு ப்ளேட்களில் வேகமாக அனைத்தையும் அடுக்கி, விறுவிறுவென இறங்கி ஆரன் வீட்டிற்கு மாடி ஏறி வந்துக் குடுக்க,

சிரித்த ஆரன், "உன் ப்ரிப்ரேஷனா?" என்றபடியே வாங்கினான்.

"ஆமா சாப்டிட்டு எப்படி இருக்குன்னு சொல்லணும்" என அங்கேயே நின்றாள்.

அதனால் ஆரனும் அங்கேயே சுவற்றில் சாய்ந்து நின்றவன், "சியர்ஸ் நிலா!" என ப்ளேட்டைத் தூக்கி அவளுக்குக் காண்பித்துவிட்டு உண்ணத் துவங்க,

"நீங்களும் சாப்பிடுங்கத்தான்" என்றாள் மதுரனிடம்.

"நீ தான் பாசமான மச்சினிச்சி தீக்ஷி" என்றுவிட்டே உண்டான்.

"சூப்பர் தீக்ஷி, எல்லாம் நல்லா டேஸ்டா வந்துருக்கு. ஹோட்டல் ஃபீல் இருக்கு. செஃப் கைபக்குவம் தான். கலக்கிட்ட போ" என பாராட்டவும் செய்தான் ஆரன். ஐந்து நிமிடத்தில் உண்டு முடித்து வீட்டினுள் சென்று, ப்ளேட்டைக் கழுவிக் கொண்டு கொடுத்துவிட்டான். மதுரனும் உண்டுவிட்டு, "செம பின்னிட்ட தீக்ஷி" என்க, அவளைக் கையில் பிடிக்க முடியவில்லை. "தேங்க்ஸ் அத்தான்ஸ்" என்று இறங்கி மறுபடியும் அங்கு அக்காக்களிடம் ஓடினாள். நிலாவும், சந்திராவும் சிரித்தபடி பார்த்திருந்தனர்.

மூவருக்கும், "பை,என்ஜாய்!" சொல்லியே ஆண்கள் இருவரும் கிளம்பினர். அடுத்து பெண்கள் மூவரும் அந்த நிமிடங்களை ரசித்து அனுபவித்து உண்டனர். மனதிற்கு அவ்வளவு லேசாக, சந்தோசமாக இருந்தது நிலாயினிக்கு. நிலாயினியின் அக ஒலி அவள் முகத்திலும் மின்னியது.

மூன்று பெண்களும் கீழே இறங்கி வர, வினோதினி மறுநாள் ஆரன் வீட்டினர் அழைத்திருப்பதைக் கூறிவிட்டு நிலாயினி முகம் பார்த்து நின்றார்.

"நா என்ன சொல்லணும்னு எதிர்பாக்றம்மா?" என்றாள் நிலா.

"நா செஞ்சு வச்சதயே சாப்பிட மாட்டேங்குற, நீயே உன்ன பொண்ணுப் பாக்க வர சொல்லிட்ட. இப்ப நாங்க போறதும் உனக்குப் புடிக்குமோ? புடிக்காதோ? நீ என்ன சொல்றியோ அத அப்படியே செய்றோம் லஷ்மி" என்றார் ஆதங்கமாக.

"சரி போவேணாம்" என முடித்துவிட்டாள்.

"அப்ப கல்யாணத்துக்கும் நா வர வேணாம் இல்லையா?"

"அது உன் இஷ்டம்மா"

"ஏன்டி இப்படி பேசுற. நீங்களே ஒதுக்கிட்டா நா எங்கடி போவேன்?"

"நாங்க உன்ன ஒதுக்கினோமா? நல்லா நடிக்கவும் கத்துகிட்டம்மா. ட்ரைனிங்கோ?" என்றாள் நக்கலாக.

"லஷ்மிமா!"

"இன்னும் மூணு வாரம், அப்றம் உன் கண்ணுக்கு இருந்து உறுத்தமாட்டேன்மா" என்க, முறைத்தார் வினோதினி. சண்டைபோட கூட ஜீவனில்லை அவரிடம். மகள் திருமணம் முடித்து செல்லவிருக்கிறாள், சந்தோசமாக செல்லவேண்டும் என்றே அவளிடம் சமரசமாகிவிட முனைகிறார், பிடிகொடுக்க மறுக்கிறாள் மகள்.

அவளிடம் அப்படி பேசினாலும், மறுநாள் காலையிலேயே, காரில் ஒரு ஓட்டுநரை நியமித்து கிளம்பிவிட்டனர். மறுபடியும் வண்டியை மோத எவனும் கிளம்பி வந்துவிட கூடாதே என்று கொஞ்சம் பயம் இருந்தது தான். ஆனாலும் வீட்டினுள்ளேயே இருந்துகொண்டா மகளுக்கு திருமணத்தை நடத்தி முடிக்க முடியும் என்ற யோசனையில் தான் செல்வகுமார் கிளம்பியிருந்தார்.

பிள்ளைகள் மூவருக்கும் அவர்கள் அலுவல் எப்போதும் போல் தொடர்ந்தது. தேர்வு முடிவு வரும்வரை சந்திராவும் கோச்சிங் வகுப்பு செல்ல வேண்டி கிளம்பிவிட்டாள். நாட்கள் சத்தமில்லாமல் கடந்தது.

ஆரன் வீட்டின் குலதெய்வ வழிபாடு முடித்து பத்திரிகை வைக்க ஆரம்பித்தனர். செல்வகுமாரிடமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைப் பத்திரிகை கொடுத்தனுப்பிவிட்டனர்.

செல்வகுமாரால் அதை எடுத்துச்சென்று யாரையும் அழைக்க முடியவில்லை, மனைவி பிள்ளைகளைப் பிரிந்து சென்றபோது யார் பேச்சும் பாதிக்கவில்லை, ஆனால் இப்போது, யாரிடமும் சென்று நின்றால் எதுவும் பேசிவிடுவார்களோ என மிகவும் பயமாக இருந்தது அவருக்கு.

'உனக்கு இது தேவை தான்' என்ற பார்வைப் பார்த்துவிடுவார்களோ என அஞ்சினார்.

"யாருக்குலாம் வைக்க வினோ?" என வினோதினியிடமே கேட்க,

"என்னைய கேட்டா? அழைச்சாலும் சொந்தகாரங்க யாரும் நம்மள மதிச்சு வரமாட்டாங்க. பிள்ளைகளுக்கு தான் இப்ப வெளிப் பழக்கம். ஆனா அவங்களும் தென்காசி வர வருவாங்களான்னு தெரியாது"

"நம்ம அழைக்காம விட்டாலும் பேசுவாங்க தான?"

"அவங்க பேசுறதுக்குலாம் பயப்புடற ஆள் இல்லையே நீங்க? உங்களுக்கு தோணுறத செய்ங்க. பத்திரிகை வச்சு ஆளுங்கள அழைக்க ஏலும்னா அழைங்க. இல்லனா நாம மட்டும் போய் நின்னுட்டு வருவோம். உங்களக் கூட்டிட்டு வந்த பாவத்துக்கு என்னையவே என் மக அவ கல்யாணத்துக்கு வரவேணான்னுட்டா" என்க, அமைதியாகிவிட்டார் செல்வகுமார்.

மறுவாரத்தில் ஒருநாளை தேர்ந்தெடுத்து, புடவை எடுக்க வரச்சொல்லித் தங்கமாடத்தி அழைத்துவிட்டார். எல்லாம் அவர் ஏற்பாட்டில் தான் சென்றுகொண்டிருந்தது.

மூன்று பெண்களும் ஒரு காரில் கிளம்ப, வினோதினியும் செல்வகுமாரும் அவர் காரில் பின் தொடர்ந்தனர்.

கொஞ்சம் மெதுவாக ஆரன் கிளம்ப, மதுரன், "நானும் வந்தா உங்களுக்கு உதவியா இருப்பேன் சார்" என வந்து நின்றான்.

"என்ன உதவி?" என அவனை அப்படியே வெளியே தள்ளி தானும் வெளியே வந்தான் ஆரன்.

"சட்டை சூஸ் பண்ண ஹெல்ப் பண்றேன் சார்"

"நீ சூஸ் பண்றதப் போடுறதுக்கு தான் நா இப்ப அவசரமா கல்யாணம் பண்றேனா?" என்றவன் வீட்டைப் பூட்டி கீழே இறங்க,

"ஓகே சார் உங்களுக்கு ஃபிட்டா இருக்கான்னு பாத்து சொல்றேன் சார்" என பின்னையே வந்தான்.

"நீ பாக்றதுக்காடா நா மாப்ள ட்ரெஸ் போட போறேன்?"

"சும்மானாலும் வந்து நிக்றேனே சார்"

"சும்மா என்னதுக்கு உன்னைய இங்க இருந்து அங்க இழுத்துட்டுப் போணும் நான்?" என வண்டியில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்ய,

"ப்ளீஸ் சார்" என வண்டியின் மீதே ஏறிவிட்டான் மதுரன்.

"சகலையாகப் போறன்னு பொறுமையா இருக்கேன் மேன்" என்றவாறு தான் வண்டியை எடுத்தான். எப்போதும் போல் பைக்கிலேயே, இருவரும் அவன் அப்பா கடை சென்றிறங்கினர்.

நான்கு மாடி கட்டிடம், நிமிர்ந்து பார்த்த மதுரன், "நல்ல பெரிய கடை சார். ரிடைர்டுக்கு அப்புறம் ஜவுளிகடை ஓனராகிடுவீங்கள்ல?" என்றவனை,

"வாடா பேசாம" என உள்ளே இழுத்துச் செல்ல, வேடிக்கைப் பார்த்தவாறு பின் தொடர்ந்தான் மதுரன்.

இரண்டாம் மாடியில் தான் நின்றது பெண்கள் குழு, இவன் நுழையும்போது, புனிதா தாலியோடு கோர்த்த தங்கச் சங்கிலியைத் தூக்கிக் காண்பித்துக் கொண்டிருக்க, சுற்றி நின்று பெண்கள் அதைப் பார்த்திருந்தனர். அவர்கள் வழக்கம், தங்கச் சங்கிலியில் தாலி கோர்த்து அதை மாப்பிளைப் போட்டுவிடுவது தான் என விளக்கம் கூறியவாறு செயினைக் காண்பித்துக் கொண்டிருந்தாள் புனிதா.

வேக நடையில் அவர்களிடம் சென்றவன், "இப்படி பாத்தா எப்படி நல்லார்க்கான்னு தெரியும்? கழுத்துல போட்டே பாக்கலாம்ல?" என புனிதா கையிலிருந்ததை நொடியில் வாங்கி, நிலா கழுத்தில் போட கொண்டுச் சென்றிருக்க,

"அண்ணா, டேய், விஷ்வா" என வெவ்வேறு குரல்கள் அவனை அதிர்ந்து தடுக்க,

நிலாவின் அரண்ட முகத்தைக் கண்டுக் கண்ணைக் சிமிட்டினான் ஆரன் விஷ்வேஷ்வரன். அவன் கையில் அவள் முகத்தைச் சுற்றி அந்தரத்தில் தான் நின்றது தாலிக்கொடி. ஒருநொடியில் படபடத்துவிட்டது அவளுக்கு.

"வேணாம் இன்னும் ரெண்டு வாரம் தானே? அன்னைக்கே போடுறேன்" என மீண்டும் புனிதா கையிலேயே கொடுத்துவிட்டான், பட்டென்று அவன் முதுகில் ஒரு அடி வைத்தார் தங்கமாடத்தி.

"அம்மா அடிக்கிற, வருங்கால பொண்டாட்டி முறைக்குறா ஒருத்தருக்கும் என்மேல பயமில்லைல?" என மிரட்டினான் ஆரன்.

நிலாயினி அவன் செய்த வேலையிலிருந்து வெளிவரும் முன்னரே, கல்யாண புடவை, மற்ற சடங்குகளுக்கான புடவைகள் எல்லாம் எடுத்து முடித்திருந்தனர்.

நிலாயினிக்கு புடவைகள் எல்லாம் ஆரனும் சேர்ந்து தான் தேர்ந்தெடுத்துக் கொடுத்தான், தலையை மட்டுமே அசைத்து நின்றாள் நிலா, "நிலா பொண்ணு ரொம்ப பயந்துட்டாளோ? தாலி தானேம்மா கட்ட வந்தேன் என்ன பயம்?" என்றவனை, முறைத்தாளே தவிர பதிலுரைக்கவில்லை.

"செயின போட்டிருந்தா என்ன பண்ணிருப்ப?" என புருவம் உயர்த்த,

"தெரியல, ஆனா செமத்தியா வாங்கிருப்பீங்க என்ட்ட" என உண்மைக்கும் மிரட்டினாள். விளையாட்டாக போட்டிருந்தாலும், கழட்டித்தர தான் முடியுமா? இல்லை இருக்கட்டும் என விட முடியுமா? என அவளால் யோசிக்க முடியவில்லை. வெறும் செயின் தானே என நினைக்க தோன்றவில்லை அவளுக்கு.

"அடிப்பாவி அடிப்பியா நீ?" என்றான் அவள் தோளில் இடித்து,

"சொல்லாம செஞ்சா பின்ன கொஞ்சுவாங்களா?"

"ஆமா தாலி கட்டினா கொஞ்சணும் தானே?"

"ரொம்பத்தான், ஏசிபிய இடுப்புல தூக்கி வச்சுக் கொஞ்சுவாங்க" என முனங்க,

குனிந்து மெதுவாக அவள் காதில், "ரைட், உன் இடுப்பு தானே இந்த ஏசிபிய தாங்கியாகணும் நிலாம்மா?" என்றான் அவன்.

"ஙே!" என கண்ணை விரித்தவள், அடுத்து பேசவில்லை, அவன் மட்டுமே பேசியபடி, அவளை வம்புக்கிழுத்தபடி இருந்தான். வந்தது போலவே மீண்டும் கிளம்பி திருநெல்வேலி வந்திறங்கினர்.

நிலாயினி அவள் வங்கியில் எல்லோருக்கும் அழைப்பு கொடுத்தாள். அவள் வேலைபார்த்த முந்தைய அலுவலங்களிலும் தொடர்பில் இருப்பவர்களை ஃபோனில் அழைத்தாள்.

வினோதினி அக்கம்பக்கத்தினரை அழைக்கச் செல்ல, "ஏசிபி உங்க பொண்ணுக கிட்ட அடிக்கடி பேசும்போதே நினைச்சோம் இப்படி தான் வந்து நிக்கும்னு. என்னயிருந்தாலும் வேலைக்குன்னு இங்க வந்தவரு கவனமா விசாரிச்சு குடுங்க. லஷ்மி அப்பா விஷயம் தெரிஞ்சும் ஒத்துகிறாங்கனா பெரிய விஷயம் தான். லஷ்மி மரியாதையான வேலை பாக்றா அவளுக்காகத்தான் இந்த வரன் கூடி வந்துருக்கும். கல்யாணத்துக்காக லஷ்மி அப்பா திரும்ப வந்துட்டாரோ? எப்படி ஆக்ஸிடெண்ட் ஆச்சுதாம்? இனி உங்களோட தான் இருப்பாரா அங்கையும் போவாரா?" என கேள்விகளும், குழப்பங்களும், அறிவுரைகளும், ஆதரவு வார்த்தைகளும் என அந்த தெருவிலிருந்த இருபது வீட்டனரும் அவரை அலைகழித்துதான் விட்டனர்.

ஆனால், ஆரன் விஷ்வேஷ்வரனிடம், "வாழ்த்துக்கள் சார். எங்க தெரு பிள்ளையக் கட்டிக்கப் போறீங்க, இனி எங்க ஊர் மாப்பிளை நீங்க" என சிரிப்போடு முடித்துக்கொண்டனர். அவர்களுக்கு ஒரு தலையசைப்போடு தான் கடந்தான் ஆரன்.

ஆரன் விஷ்வேஷ்வரன், மதுரனோடு அன்று மதி மகப்பேறு மருத்துவமனை வந்திருந்தான். மருந்தகம் வெளியே இருக்க, உள்ளே மருத்துவமனை கட்டடம் ஒரே தளமாக நீண்டு இருந்தது. மருந்தகம் சென்று முதலில் விசாரித்தனர்.

பின் வரவேற்பறையில் இருந்த பெண்களிடம் வந்து, "இங்க எத்தனை டாக்டர்ஸ் வொர்க் பண்றாங்க?" என்றான் மதுரன்.

"நீங்க யார சார் பாக்கணும்?" என்றதும் அவன் திரும்பி ஆரனைப் பார்க்க,

"எங்களுக்கு எல்லாரையும் பாக்கணும். இங்க இருக்குற ஸ்டாஃப்ஸ் உட்பட எல்லாரையும்" என ஆரன் சொல்ல,

"சார்!" என்றவர்கள் புரியாது விழிக்க,

"நாங்க விசாரிக்க வந்துருக்கோம். இங்க ட்ரீட்மெண்ட் பாத்துட்டுப் போன எட்டு பேர் சூசைட் பண்ணிருக்காங்க. சோ டாக்டர்ஸ்ட்ட சில கொஸ்டீன்ஸ் கேட்க வந்துருக்கோம்" என்றான் தெளிவாக.

"ஓ ஓகே ஓகே சார். நாங்க டாக்டர்ஸ்க்கு இன்ஃபார்ம் பண்றோம்" என்றனர் வேகமாக.

"பண்ணுங்க. அதுக்கு முதல்ல நீங்க சொல்லுங்க, இங்க எத்தனை டாக்டர்ஸ் வொர்க் பண்றாங்க?"

"டாக்டர் மதி, கைனெக், டாக்டர் குரு சைல்ட் ஸ்பெஷலிஸ்ட், மெயின் இவங்க ரெண்டு பேர் தான். ட்யூட்டி டாக்டர்ஸ் ரெண்டு பேர், நைட் டைம்க்கு மட்டும் வருவாங்க"

"ஓகே இங்க வர்றவங்க எத்தனை சதவீதம் ப்ரெக்னென்ட் ஆகுறாங்க?" என்றான் ஆரன்.

"டாக்டர் மதி ரொம்ப கைராசி சொல்வாங்க சார். இங்க வேலை பாக்றதுனால சொல்லல, என் அக்காக்கு கூட டெலிவரி சுகப்பிரசவம் அவங்க தான் பாத்தாங்க. மதி ஹாஸ்பிடல் இருபது வருஷமா இருக்கு சார். அதோ செர்டிபிகேட்ஸ்" என காட்ட, அங்கு ஒரு கண்ணாடி செல்ஃப் முழுவதும், அங்கீகாரங்கள் பெற்ற சான்றிதழ்கள் நிறைந்திருந்தன. டாக்டர் மதியும் நிறைய விருதுகளை வாங்கிக் குவித்திருந்தார்.

அருகில் சென்று பார்த்தான், டாக்டர் மதி, கிட்டத்தட்ட அறுபதைக் கடந்துவிட்ட பெண்மணி, பார்க்கவே சாந்தமானவராக தெரிந்தார். நல்ல சிரித்த முகமாக காட்சியளித்தார்.

"உள்ள போவமா சார்?" என மதுரன் வந்தழைக்கவும், மருத்துவர் அறைக்குள் இருவரும் சென்றனர்.

"வாங்க சார்" என சிரித்த முகமாகத்தான் அழைத்தார் மதி.

"குட் ஆஃப்டர் நூன் டாக்டர்" என அவர் முன் சென்று அமர்ந்தான் ஆரன், பின் சில ஃபைல்களை அவரிடம் நகர்த்த, எடுத்துப்பார்த்தார்.

சுருங்கிய புருவத்துடன் பார்த்திருந்தவருக்கு எட்டு பேரையுமே ஞாபகம் இருந்தது. மருத்துவரல்லவா அவர் ஞாபக சக்தியை பற்றி சொல்லவும் வேண்டுமா?

"சொல்லுங்க சார். எல்லாரும் என்ட்ட ஃபெர்டிலிட்டி ட்ரீட்மெண்ட்காக வந்தவங்க தான். நல்ல ஃபெமிலியரான ஃபேஸஸ் தான். இவங்களுக்கு என்ன?" என்றார்.

இதற்கு முன் எந்த காவல்துறையும் இவர்களிடம் வந்து விசாரிக்க வரவில்லை. தற்கொலை என கேஸை முடித்திருக்க, இவர்களிடம் விசாரிக்க வேண்டிய அவசியம் வரவில்லை. ஆரன் ஆறுவருட தற்கொலைகள் வரலாற்றை தோண்டி எடுத்ததால் தான் இங்கு வந்தமர்ந்திருக்கிறான்.

"இவங்க எட்டு பேரும் சூசைட் பண்ணிகிட்டாங்க. ரீசன் குழந்தை இல்லன்னு சொல்லி"

"ஓ காட். தொடர்ந்து வந்துருந்தாலே கன்சீவ் ஆகிருக்கலாமே? இப்ப உள்ள பிள்ளைங்களுக்கு பொறுமையும் இல்ல பொறுப்புமில்ல" என வெளிப்படையாகவே எரிச்சல் பட்டவர், "இதுல நா என்ன சார் பண்ணணும்?" என கேட்க,

"சூசைட் பண்ண நீங்க காரணம்னு உங்களுக்குத் தோணலையா மேடம்?"

"நோ சார் நாட் அட் ஆல். என்கிட்ட வர்றவங்களுக்கு அவங்கவங்க கர்ப்பப்பை எப்படி இருக்குன்னு பாத்து அதுக்கு தக்கன ட்ரீட்மெண்ட் குடுப்பேன். பை காட்ஸ் க்ரேஸ்ல குழந்தை தங்கணும், சிலருக்கு இரண்டு மாசத்துல கிடைச்சுடும் சிலருக்கு ஆறுமாசம், சிலருக்கு ஒரு வருஷம், சிலருக்கு மூணு நாலு வருஷம் கூட ஆகும். பத்து பனிரெண்டு வருஷம் வெயிட் பண்றவங்களாம் கூட இருக்காங்க. அப்டி என்கிட்ட ஆகலன்னா அவங்க வேற டாக்டர தான் பாத்துருக்கணும். சூசைட் இஸ் நாட் எ குட் டிஷிஷன். இதுல நா எப்படி காரணம்னு சொல்லுவீங்க நீங்க?"

"மன ரீதியா அவங்கள ஸ்டராங்காக்க வேண்டியதும் அவங்க டாக்டரா உங்க கடமை தானே?"

"ரொம்ப வீக்கா இருக்கவங்களுக்கு, அதாவது அவங்களால கன்சீவ்வே ஆக முடியாதுன்னு இருப்பாங்க அவங்களுக்கு குடுக்குறது ஓகே. கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் மூணு வருஷம் தான் ஆகிருக்கும், அவங்கள கவுன்சிலிங் வாங்கன்னு சொன்னா, எங்க ஹாஸ்பிடல்ல காசு பிடுங்க என்னல்லாம் பண்றாங்கன்னு தான் பேசுவாங்களே தவிர, நாங்க நல்லது செய்றோம்னு சொல்ல நம்மூர்ல ஆள் கிடையாது சார்" என்றார் தெளிவாக.

"ஓகே ரைட் மேடம். சைல்ட் ஷ்பெஷலிஸ்ட் அவரையும் விசாரிக்கணுமே?"

"என் சன் தான். இங்க பிறக்குற பிள்ளைங்கள்ல இருந்து அவன்ட்ட ஒருதடவ பேரண்ட்ஸே அவங்க பிள்ளைங்கள கூட்டிட்டு வந்துட்டாங்கனா தொடர்ந்து அவன்ட்ட தான் வருவாங்க. அப்படி பாத்துப்பான் அவன். அவன் படிப்ப முடிச்சு ஆறு வருஷமாச்சு, இப்ப வர ஹாஸ்பிடல்ல நல்ல நேம்மோட அவன்தான் பாத்துட்ருக்கான். அவனுக்கும் ஃபெர்டிலிட்டி ட்ரீட்மெண்ட் பாக்க வர்ற பொண்ணுங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. அப்படியும் தேவைனா விசாரிச்சுக்கோங்க" என்றவருக்கு இப்போது கோபமும். அவரை விசாரித்தபோது கூட பொறுமையாக பதில் கூறியவர், மகனை சொன்னதும் கொதித்தார்.

"இப்ப இருக்காங்களா?"

"ஒரு வாரம் மெடிக்கல் கேம்ப் போயிருக்கான். ரெண்டு நாள்ல வந்துருவான்"

"ஓகே ரெண்டு நாள் கழிச்சே வர்றோம் மேடம்" என கிளம்பிவிட்டனர்.

வெளியே வந்ததும், "என்ன சார் ஒன்னுமே கிடைக்க மாட்டேங்குது" என மதுரன் புலம்ப,

"வெயிட் பண்ணுவோம்" என கிளம்பி, கமிஷ்னர் அலுவலகம் வந்தனர்.

அங்கு, டிஜிட்டல் ஃபாரன்சீக் அதிகாரிகள் வந்து ஆரனுக்காக காத்திருந்தனர்.

"என்ன சக்தி, ஃபோன் டேட்டா எல்லாம் ரீட்டரைவ் பண்ண முடிஞ்சதா?"

"க்ளௌட் பேக்கப்ல இருந்து வீடியோஸ்லாம் எடுத்தாச்சு சார். நிறைய ஷாக்கிங் வீடியோஸ் இருக்கு சார். பாருங்க" என காட்ட,

சம்மந்தப்பட்ட எட்டு பேரின், உடை மாற்றும் படங்கள், அவர்களின் மகப்பேறு சிகிச்சை வீடியோ என இருந்ததைப் பார்த்ததும் புருவம் சுருக்கினான் ஆரன் விஷ்வேஷ்வரன்.
 
Top Bottom