• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சோரம் துஞ்சும் நினைவுகளே - 7 (இறுதி அத்தியாயம் )

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 7


மிக மிகக் கூர்மையாய்
என்னை ரசித்தது உன் கண்கள்தான்
மிருதுவாய்ப் பேசியே என்னுள் வசித்தது
உன் வார்த்தைதான்

என்றொலித்த அவள் கைப்பேசியின் சத்தத்தில் நினைவுகள் கலைந்தாள் வாணி. குணவதி அழைத்துக்கொண்டிருந்தார்.

“ஹலோ அம்மா!”

“கவனமா போயிட்டீங்களா பிள்ள?”

“ஓமம்மா. ஒரு பிரச்சினையும் இல்லாம வந்திட்டன்.”

அவ்வளவு நேரமாகப் பயந்துகொண்டிருந்த குணவதிக்கு மகளின் செயலில் கோபம் உண்டாயிற்று.

“அத ஒரு வார்த்த எடுத்துச் சொல்ல மாட்டீங்களா? இஞ்ச அம்மாவும் அப்பாவும் உயிரைக் கையில பிடிச்சுக்கொண்டு இருக்கிறம். மிளிரையும் எல்லா கூட்டிக்கொண்டு போனனீங்க.” என்று அதட்டினார்.

தன் தவறு அவளுக்கும் புரிந்தது. ஆனால், எதையும் சிந்தித்து நடக்கும் மனநிலையில் அவள் இப்போது வரை இல்லையே.
அதில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

“எங்க மிளிர்?”

“அவவின்ர அப்பாவோட போயிட்டா.” அதைச் சொல்லும்போதே அவள் குரல் அடைத்து, உள்ளே போயிற்று.

“அவன் எல்லாம் ஒரு அப்பன். நன்றி கெட்ட நாய்! கனநேரம் அவனோட விட வேண்டாம். அதுகளின்ர கள்ளக்குணம் எங்கட குழந்தைக்கும் வந்திடும். சும்மா பாத்தா காணும். அவன் எல்லாம் ஒரு ஆள் எண்டு…” அவர் பொரிந்துகொண்டு போக அவளுக்கு வலித்தது.

அவன் குணம் எப்படி என்று அவளைத் தவிர்த்து இன்னொருவரால் சொல்லிவிட இயலுமா என்ன? அவன் குணம் தங்கம். என்ன, அதைக் காலத்துக்கும் அனுபவித்து வாழும் கொடுப்பினை அவளுக்குத்தான் இல்லாமல் போயிற்று.

“சரியம்மா. அவே வருகினம். நான் வைக்கிறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

திரும்பவும் நெஞ்சையும் தொண்டையையும் அடைத்துக்கொண்டு வந்தது. இதயத்தினுள் ஹோ என்று பெரும் இரைச்சல். ஐயோ ஐயோ என்று ஒரு பரிதவிப்பு. அவனைப் பாராமலேயே இருந்திருக்கலாம் போல. இனி இப்படிப் பரிதவிக்கும் மனத்தை அடங்குவதற்குள் அவள் பாதியாகிப் போவாள்.

ஆனால், அவள் வீட்டினருக்கு மட்டும் இன்னுமே அவர்கள் பெண் எதை இழந்துவிட்டு நிற்கிறாள் என்று விளங்கவேயில்லை. வீட்டுப் பிள்ளையைப் போல் பார்த்தவன் துரோகம் செய்துவிட்டான், நன்றி கெட்டவன், அவனால் அவர்களின் மானம் மரியாதை எல்லாமே போய்விட்டது என்பதிலேயே நிற்கிறார்கள். கசப்பான முறுவல் ஒன்று கண்ணீருடன் வந்து போயிற்று.

அன்று நடந்தது அவனுக்கு மானப் பிரச்சினையாயிற்று. அவர்களுக்குக் கௌரவப் பிரச்சினை.

அதன் பிறகு அவனைப் பார்க்க அவளுக்குக் கிடைக்கவேயில்லை. அவள் இளம் பெண்ணாக இருந்த காலத்திலேயே தனியாக வெளியில் விட்டதில்லை. கைக்குழந்தையோடு இருக்கிறவளையா விடுவார்கள்?

மாலையானதும் கோழிகளை அதன் கூட்டினுள் அடைப்பதுபோல்தான் அவளுக்குப் பகல்களும் இரவுகளும் கழிந்தன.

ஒரு காலம் சொர்க்கமாக இருந்த வாழ்க்கை நரகமாகத் தெரியத் தொடங்கிய காலமது.

அன்று தென்னையில் மோதியதில் மண்டை பிளந்து, ஒரு வாரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் கிடந்தான் பவன். அந்த நாள்களில் கணவனைப் பார்க்கப் போகட்டுமா என்று கேட்பதற்கே தைரியம் வராமல் அழுது கரைந்தாள் அவள்.

கைப்பேசியிலாவது அவனோடு பேசுவோம் என்று அழைக்க அழைக்க அவன் அழைப்பை ஏற்கவேயில்லை. அவள் அனுப்பிய குறுந்தகவல்களுக்கும் பதில் இல்லை.

அடுத்து வந்த நாள்களில் அவள் வீட்டினர் அவளுக்குத் தெரியாமலேயே அவனைப் பழி வாங்க ஆரம்பித்தனர்.

வீட்டில் நகைகளைக் காணவில்லை, கடையில் பணத்தைக் காணவில்லை என்று காவல் நிலையத்திற்குப் புகார் போனது. அதன் அடிப்படையில் இளங்கோ கைது செய்யப்பட்டான். அவன்தான் களவெடுத்தான் என்பதற்கு ஆதாரமாகக் கடையில் வேலை செய்த யாரோ ஒருவர் சாட்சி சொன்னார். அடி, உதை என்று உணவு, தண்ணீர் இல்லாமல் பெரும் கொடுமைக்கு ஆளானான் இளங்கோ.

நான்தான் களவெடுத்தேன் என்று அவன் ஒப்புக்கொள்ளச் சொல்லி அவனுக்கு நடந்ததெல்லாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத சித்திரவதைகள். நகக் கண்களைக் கூடப் பிடுங்க ஆரம்பிக்கவும் அதற்குமேல் அவனால் வலிதாங்க முடியவில்லை. ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போட்டான்.

கடைசியில் காணாமல் போன நகைகள், கடையில் காணாமல் போன பணம் அனைத்திற்கும் ஈடாகப் பல இலட்சங்களைக் கொடுக்கச் சொன்னார்கள். கடன் பட்டு, இந்துவின் நகைகளை எல்லாம் விற்று, அவள் கணவனிடமும் இரவல் வாங்கி அதைக் கொடுத்த பிறகே அவனை வெளியில் விட்டனர்.

வந்தவன் உடலில் உயிரை மட்டுமே சுமந்து வந்தான். பார்த்த மங்கை தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு அழுதார். இனிமேல் வாணியோடு அவனுக்கு வாழ்க்கை இல்லை என்று நின்றார்.

அந்தளவில் பவன் அவர்களை விரட்டி விரட்டி அடித்தான். கதிர்வேலன் பார்த்த வேலை பறிபோய், வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாமல், பட்ட கடனைக் கட்ட வழியும் இல்லாமல் நின்றனர்.

இளங்கோவின் பெயர் டவுனுக்குள் கள்ளனாக முத்திரை குத்தப்பட்டிருந்தது. அதுவும் ஆரம்ப காலம் தொட்டே அவன் கடையில் களவெடுத்திருக்கிறான் என்றும், நம்பிக்கையில் இவர்கள் கவனிக்காமல் இருந்து ஏமாந்து போனார்களாம் என்றும் பேச்சு.

வெளியில் தலைகாட்டவே முடியவில்லை. உயிரைத் துறந்துவிடலாமா என்று அவன் யோசித்த காலகட்டம் அது. ஆனால், கூடப்பிறந்தவளின் மொத்த நகைகளையும் வாங்கி, அவள் கணவனிடம் கடன்பட்டு, ஊருக்குள் வட்டிக்கு வாங்கி என்று அத்தனையையும் அவனுக்காகச் செய்த அவள் குடும்பத்தினர் அவன் இல்லாமல் என்னாவார்கள்?

கதிர்வேலனுக்குமே இனி மகனுக்கு அந்த வீட்டோடு வாழ்க்கை பொருந்திப் போகாது என்றுதான் தோன்ற ஆரம்பித்திருந்தது. அவர்தான் உள்ளூரில் வேலை கிடைக்காமல் கண்டியில் போயிருந்தது கூலி வேலை செய்து அவனையும் சேர்த்துப் பார்த்துக்கொண்டார்.

இப்படி இருக்கையில்தான் விவாகரத்துக் கேட்டு நோட்டீஸ் வந்தது. மங்கைக்கு மகிழ்ச்சி. கொடுத்துவிடச் சொன்னார். அவர் சொல்வதைக் கேளாமல் அவன் அவள்தான் வேண்டும் என்று போனால் மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு, என்னை நானே கொளுத்திக்கொள்வேன் என்று மிரட்டினார்.

இத்தனை நாள்களாக இல்லாமல் வாணிக்கு அழைத்தான் இளங்கோ.

“இளங்கோ!” அவன் பெயரே அவளுக்கு அழுகையாகத்தான் வந்தது.

“என்னட்ட இருந்து விவாகரத்து வேணுமா உனக்கு?” ஒட்டாத குரலில் யாரோவாக நின்று கேட்டான் அவன்.

“என்ன சொல்லுறீங்க இளங்கோ? என்ன விவாகரத்து?” அவள் தலையில் இடி விழுந்தது.

“இது உனக்குத் தெரியுமா தெரியாதா?”

“எனக்கு எதுவுமே தெரியா இளங்கோ. வீட்டில ஒருத்தரும் ஒண்டும் என்னட்டச் சொல்லுறேல்ல.” என்று அழுதாள் அவள்.

“என்னட்ட வாறியா?”

“இளங்கோ!”

“பிள்ளையையும் தூக்கிக்கொண்டு வா.”

“நீங்க வந்து கூட்டிக்கொண்டு போங்கோ இளங்கோ!”

“நான் வேணுமெண்டா வெளிக்கிட்டு எங்கட வீட்டுக்கு வா சத்யா.”

“இளங்கோ ப்ளீஸ். நீங்க வந்து கதைக்கிறீங்களா?”

“ஏன் உனக்கு வாயில்லையா? உனக்கு என்ன வேணும் எண்டு நீதான் முடிவு எடுக்கோணும் சத்யா.” அவள் விழிகளில் கலக்கத்தைக் கண்டாலே முதல் வேலையாக அதை அகற்றுகிற அவள் கணவன் இன்று, அவள் கண்ணீர் விட்டும் இறங்கிவர மறுத்தான்.

“இளங்கோ ப்ளீஸ்.”

“உன்ர வீட்டு ஆக்கள் எனக்குச் செய்த எல்லாத்துக்கும் உன்ன விட்டுட்டு நான்தான் ஓடி இருக்கோணும் சத்யா. ஆனா இப்பவும், இந்தளவு தூரம் அவமானப்பட்டு, கேவலப்பட்டு, சந்தி சிரிச்ச பிறகும் என்ர குடும்பம் எனக்கு வேணும் எண்டு நினைக்கிறன். இனி நீதான் முடிவு எடுக்கோணும். சரியா 10 நாள். இந்தப் பத்து நாளுக்க நீ வராட்டி நானும் ஓம் எண்டு சொல்லி டிவோர்ஸுக்கு குடுத்திடுவன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான்.

அவனின் காயப்பட்ட மனத்துக்கு அவர்களை மீறி அவள் வந்து ஆறுதல் தர வேண்டும் என்று அவன் நினைத்தான். ஆனால், அவள் வாயிருந்தும் ஊமை என்று உணராமல் போனான்.

அவள் அழைத்து, குறுஞ்செய்தி அனுப்பி என்று எதற்கும் பிரயோசனம் இல்லை. இரண்டு நாள் கழித்துப் பயந்து பயந்து குணவதியிடம் சொன்னாள்.

“எனக்கு அவரிட்டப் போகோணும் அம்மா. மிளிரும் அப்பாவைப் பாக்காம அழுறா.”

“உனக்கு என்ன விசரா? அதுகள் கள்ளர் கூட்டம். நாளைக்கு காசு பணத்துக்காக உங்களைக் கொலை செய்யக் கூட யோசிக்காதுகள்.”

“அவர் அப்பிடி இல்ல அம்மா. இளங்கோவை உங்களுக்குத் தெரியாதா?” அவன் பற்றிய பிழையான ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் உள்ளத்தைத் துண்டாடின.

“உனக்கு ஒண்டும் தெரியாது. பேசாம போ பிள்ளை!”

“அம்மா ப்ளீஸ். அவர் செய்தது பிழையா இருந்தாலும் ஜெயிலுக்க போட்டு, அடிச்சு, லட்சக் கணக்கில காசும் வாங்கிட்டீங்க தானே? பிறகும் ஏனம்மா இவ்வளவு கோவம்? எனக்கு அவரிட்டப் போகோணும் அம்மா.” என்றதும் குணவதிக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று.

“கேடு கெட்ட நாய் உன்ர மனதையும் குழப்பிப்போட்டான் என்ன? அதுசரி! திரும்ப இந்த வீட்டுக்குப் பூறுறதுக்கு அவனுக்கு இருக்கிற ஒரே வழி நீதானே.” என்று கத்தினார்.

“இல்லை அம்மா. அவராத் தேடி எடுக்கேல்ல. அண்ணா அவருக்கு விவாகரத்துக் கேட்டு அனுப்பி இருக்கிறாராம். எனக்குத் தெரியாம ஏன் அம்மா விவாகரத்துக்குப் போட்டனீங்க? இதுக்கு நான் ஓம் எண்டு சொல்லவே மாட்டன்!” என்றவளுக்கு குணவதி விட்டார் ஒரு அறை.

“ஓம் எண்டு சொல்லாம என்ன செய்யப் போறாய்? அவனோட போயிருந்தது பிச்சை எடுக்கப் போறியா?”

குணவதிக்கு அகங்காரம். அவர்கள் கேட்ட விவாகரத்தைத் தருவதை விட்டுவிட்டு மகள் மூலம் காரியம் சாதிக்கப் பார்க்கிறான் என்கிற கோபத்தில் கணவரிடம் விடயத்தைக் கொண்டுபோனார்.

சிவமூர்த்தியுமே டவுனுக்குள் கடை திறப்பதற்கு அவன் பார்த்துக்கொண்டு திரிகிறான் என்று அறிந்து வெகுண்டுபோயிருந்தார். அவனைக் காலூன்ற விட்டுவிட்டால் தன்னைத் தாண்டி வந்து நிற்பான் என்று நிச்சயமாகத் தெரியும்.

அதற்கு அவனை விடக் கூடாது. மகன் மீதே கை வைத்தவனோடு மகளை இனியும் வாழ விடுவதில் அவருக்கு உடன்பாடும் இல்லை. இது எல்லாவற்றுக்கும் தீர்வு அவர்களின் பிரிவு ஒன்றே என்று முடிவு செய்தார்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அன்று மகன் சொன்னதைக் கேட்டிருக்க வேண்டும் என்கிற நினைப்பு வேறு. பழையபடி அவனுக்குத் தொந்தரவு கொடுத்து, விரட்டி விரட்டி அடிக்க ஆரம்பித்தனர். இங்கே வாணியின் கைப்பேசி குணவதியால் கைப்பற்றப்பட்டது.

சிறகொடிந்த பறவையானாள் வாணி. எதுவும் அவள் கையில் இல்லை. எப்போதும் அவள் மனமறிந்து நடக்கிற கணவனும் பக்கத்தில் இல்லை. அவர்கள் இழுக்கிற இழுவைக்கு இழுப்பட்டாள். அவர்களைத் தாண்டி, திமிறி, எனக்கு இதுதான் வேண்டும் என்று முடிவெடுக்கும் வலிமை அவளிடம் இல்லை. அதற்கு அவள் பழக்கப்பட்டவளும் இல்லை.

கண்ணீர் விட மட்டுமே முடிந்தது. அதன் பிறகு நீதிமன்றில் வைத்துத்தான் பார்த்தாள். தாயைக் கண்ட கன்றாக அவனிடம் ஓடிவிடத் துடித்தவளை இங்கே இவர்கள் விடவில்லை என்றால், இவள் ஒருத்தி அங்கே நிற்கிறாள் என்று நிமிர்ந்து கூடப் பாராதவனின் நடத்தை அவளை மொத்தமாகச் சிதைத்தே போட்டது.

இளங்கோ இளங்கோ இளங்கோ என்று அவள் உள்ளம் அந்த நீதிமன்ற வாசலில் கிடந்து கதறியது அவன் காதில் விழாமலேயே போயிற்று.

விவாகரத்துத்தான் வேண்டும் என்று அவள் முன்னாலேயே அவன் சொன்ன பிறகு அவள் எதையும் மறுக்கவில்லை. கண்ணீர் வழிந்த விழிகளால் இமைக்காது சில கணங்களுக்குக் கணவனையே பார்த்தாள். அவளின் உயிர் அவளின் கூட்டை விட்டு வெளியேறுவதை அவளே கண்டாள். அவ்வளவுதான். அதன் பிறகு அவர்கள் சொன்ன இடத்திலெல்லாம் கையெழுத்தைக் கண்ணீருடன் சேர்த்துப் போட்டுவிட்டு உயிருள்ள பிணமாக வீடு திரும்பினாள்.

நகைக்காகவும் காசுக்காகவும் மரியாதைக்காகவும் மூச்சு விடாமல் சண்டை பிடித்தவர்கள் அவள் வாழ்க்கை தொலைந்தபோது அமைதியாகிவிட்டார்கள். வாழ்க்கையை விட நகை நட்டுப் பெரிது போலும்.

அப்பாவிற்குத் தான் உருவாக்கியவன் தனக்கு எதிராகவே கடை திறந்து நிற்பானா என்கிற கோபம்.

அம்மாவிற்குத் தான் போட்ட சாப்பாட்டில் உடம்பை வளர்த்தவனுக்கு இவ்வளவு திமிரா என்கிற ஆத்திரம்.

அண்ணாவிற்கு என் கடையில் வேலைக்கு நின்ற உன்னை மச்சானாக்கியதே பெரிது. இதில் நீ எங்களிடமே திமிறுவாயா என்கிற அகங்காரம்.

அனைவரும் அவன் மீதான கோபத்தைத் தீர்க்க எடுத்துக்கொண்ட ஆயுதம் அவள் வாழ்க்கை. அவர்கள் வென்றுவிட்டார்கள். அவள் தோற்று நிற்கிறாள்.

இனி வடிப்பதற்கு எதுவுமே இல்லை என்றாக்கும் கண்ணீர் கூட வற்றிப் போயிற்று. அந்தப் பூங்காவின் ஒரு ஓரமாகச் சென்று தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவினாள். மிச்சமாக இருந்ததை வாய்க்குள்ளும் அவள் சரித்து முடித்தபோது அப்பாவும் மகளும் வந்துகொண்டிருந்தார்கள்.

இப்போது தகப்பனின் கரத்தைப் பற்றிக்கொண்டு துள்ளல் நடையில் வந்துகொண்டிருந்தாள் மிளிர். அவன் முகம் பார்த்து, கண்களை விரித்து அவள் ஏதோ கதை சொல்வதும், அவன் மகள் முகம் பார்த்துக் கனிவுடன் முறுவலிப்பதும் அவள் நெஞ்சில் அழகான சித்திரமாகப் பதிந்துபோனது.

அவ்வளவு நேரமாக மலர்ந்து விகசித்திருந்த அவன் முகம் அவளைக் கண்டதும் இலேசாக மாறிற்று. அதை உணர்ந்து சிறிதாக முறுவலித்துக்கொண்டாள் வாணி. வலிகளை ஒற்றைப் புன்னகையில் கடக்கும் முயற்சி அது!

“இப்பவே போகோணுமா?”

“இல்ல, எனக்குப் பிரச்சினை இல்ல. நீங்க வேற எங்கயும் போறது எண்டாலும் போயிற்று வாங்க.”

“ஒரு கோப்பிதான். குடிச்சிட்டுப் போவமா?”

மறுப்போமா என்றுதான் நினைத்தாள். ஆனாலும் சரி என்பதுபோல் தலையை அசைத்தாள்.

நடந்து செல்லும் தூரத்தில் இருந்த ஒரு கடையினுள் உள்ளிட்டு, இடம் தேடி அமர்ந்துகொண்டனர். மிளிரைக் கேட்டு அவளுக்குப் பிடித்ததாகச் சொன்னான்.

அப்படியே இவளுக்கும் நெஸ்ட்டர்மோல்ட்டுக்கு அவன் சொல்ல, “இல்ல, எனக்கு பிளாக் கோப்பி.” என்றாள் அவள் இதையிட்டு.

அவன் விழிகள் தெறித்துவிடும்போல் அவளைப் பார்த்தான்.

கோப்பியே குடிக்கமாட்டாள். இதில் கறுப்புக் கோப்பியா என்று அவன் பார்ப்பது தெரிந்தது. வாழ்க்கையின் கசப்பின் முன் நாக்கின் கசப்பு அவளுக்குத் தெரிவதேயில்லை என்று அவனிடம் எப்படிச் சொல்ல?

மூவரின் பானங்களும் வந்து சேர்ந்தன. சின்னவள் ஆசையாசையாகப் பருகினாள்.

அவன் பாராதபோது அவளும் அவள் பாராதபோது அவனும் ஒருவரை மற்றவர் பார்த்து, எப்படி இருக்கிறார்கள் என்று கவனித்தனர்.

“எப்பிடி இருக்கிறீங்க?”

“நல்லாருக்கிறன்.”

“மகன்… மகன்தானே? எப்பிடி இருக்கிறார்?”

“ம்! இப்ப வைஃப் மூண்டு மாதம்.” சொன்ன பிறகுதான் சொல்லியிருக்க வேண்டாம் என்று நினைத்தான்.

அவள் சோகமாய் முறுவலித்தாள். அவள் கண்களில் தெரிந்த கண்ணீரின் பளபளப்பு அவனை என்னவோ செய்தது.

தவறு செய்துவிட்டோமோ என்கிற இந்தப் பரிதவிப்பை என்ன செய்ய என்று அவனுக்குத் தெரியவில்லை.

“நீ?”

“எனக்கு என்ன? இனி இஞ்சதான். அது இஞ்ச மீன்ஸ் ஒரு கஃபே கடை திறக்கப்போறன்.” அவன் எதைக் குறித்துக் கேட்டான் என்று தெரிந்தும் இதைச் சொன்னாள்.

“இன்னொரு கலியாணம்?” அவன் அவளுக்கு யாரோவாக மட்டுமன்று, இன்னொருத்தியின் கணவனாக மாறிவிட்ட பின்னும் அந்தக் கேள்வியை அவனால் இலகுவாகக் கேட்க இயலவில்லை.

அவனை ஒருமுறை பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் பார்வையை அகற்றினாள் அவள். அந்த விழிகளில் இன்னுமே கண்ணீர் திரண்டு சேர்ந்தன.

“நான் ஏதாவது பிழை செய்திட்டன் எண்டு நினைக்கிறியா?” அதற்குமேலும் அவனால் அவன் உள்ளத்தின் உறுத்தலைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

“சேச்சே!” என்றபடி கண்ணீரைச் சுண்டி எறிந்தாள் வாணி.

பிறகு ஏன் இந்தக் கண்ணீர் என்று கேட்க முடியாமல் நின்றான் இளங்கோ. உன்னைப் பிரிந்து வாழமுடியவில்லை என்று அவள் சொல்லிவிட்டால்?

“ப்ளீஸ் இன்னொரு கலியாணம் கட்டு. எனக்காக…” என்றான் கெஞ்சலாக.

“அப்பிடி இன்னொருத்தருக்காகக் கட்டி நான் பட்ட பாடு போதும்.”

சுருக்கென்று தைத்தது அவனுக்கு. “உண்மைதான். அந்தக் கலியாணம் நடக்காம இருந்திருக்கலாம்.” என்றான் விரக்தியோடு.

“இல்ல. அப்பிடி நான் நினைக்கேல்ல. அது நடந்ததாலதான் எனக்கு மிளிர் கிடச்சவா.”

அப்படியானால் அவனுக்கு? அவன் இரத்தத்தில் உதித்த அவன் குழந்தையைப் பற்றி யோசிக்காமல் விட்டுவிட்டானே. நாள் தவறாது அவன் உயிரைத் தின்னும் கேள்வி இது. ஆனால் அன்று… யாரைக் குறித்தும் யோசிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை.

திடீரென்று அவன் கைப்பேசி அழைத்தது. எடுத்துப் பார்த்துவிட்டுக் காதுக்குக் கொடுத்தான்.

“வெளிக்கிட்டாச்சா? சரி சரி தம்பி கவனம். நீ சமைச்சுச் சிரமப்படாத. வெளில பாப்பம். இன்னும் ஒரு அரை மணித்தியாலத்தில வந்திடுவன்.” என்று சொல்லிவிட்டு வைத்தான் அவன்.

முன்னரும் அவன் இப்படித்தான். இலேசாக இவளுக்கு முகம் வாடியிருந்தாலும் ஒரு வேலை செய்ய விடமாட்டான். என்னவோ கிடைக்கவே கிடைக்காத பொக்கிசம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது போலல்லவா அவளைக் கொண்டாடுவான். ‘என்னை உங்களுக்கு முதலே பிடிக்குமா?’ என்று எத்தனை தடவைகள் கேட்டிருப்பாள்?

இன்று அதே இடத்தில் இன்னொருத்தி. அவளையும் இவளைக் கொண்டாடியது போலவே கொண்டாடி மகிழ்வானோ?

சே! இதென்ன நினைப்பு! அவன் மனைவி இப்போது இவள் அல்லள். அவள்! அப்படியானால் அப்படித்தானே கொண்டாடுவான். இன்னும் கொண்டாடுவானாய் இருக்கும்.

ஏற்கனவே கலியாணமாகி, மகள் இருக்கும் ஒருவனை மணந்து, அவனுக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கையைக் கொடுக்கும் ஒருத்தியைக் கொண்டாடாமல் விட்டால் அது நியாயம் இல்லையே!

மீண்டும் தான் நிலைகுலைந்துகொண்டிருக்கிறோம் என்று விளங்க, எழுந்து புறப்பட்டாள்.

“தனியா போயிடுவியா?” மெல்லிய தவிப்புடன் வினவினான்.

இந்த உலகத்தில் அவனால் தனித்து விடப்பட்டவள் அவள். தனியாகப் போகாமல்? விரக்தியாய் ஒரு முறுவலைச் சிந்திவிட்டுப் புறப்பட்டாள்.

அவள் புறப்பட்ட பிறகும் அவன் அங்கேயே அமர்ந்திருந்தான். விவாகரத்தாகி ஒரு மாதம் முடிந்த அடுத்த நாளே அவனுக்கு அடுத்த திருமணம் நடந்திருந்தது.

வேண்டவே வேண்டாம் என்று நின்றவனை மங்கை விடவில்லை. அதுவும் வக்கீல், விவாகரத்தானாலும் வாணி மேல்முறையீடு செய்தால் அந்த விவாகரத்தைத் தள்ளுபடி செய்வதற்குச் சாத்தியங்கள் உண்டு என்று சொல்லிவிட்டதில் அவன் திருமணத்தை முடித்துவிட்டுத்தான் ஓய்ந்தார் மங்கை.

அவனும் விட்டுவிட்டான். விவாகரத்தே ஆகிவிட்டது. திரும்பவும் அவளோடு சேரவா போகிறான்? இல்லையே?

நாளடைவில் அத்தனையிலிருந்தும் மீண்டுவிட்டான். பட்ட அவமானமும், மனத்தில் இருந்த வைராக்கியமும் எந்த டவுனுக்குள் அவனை அவர்கள் கள்ளர் என்று அடையாளம் காட்டினார்களோ அதே டவுனுக்குள் சின்ன கடையாக ஆரம்பித்து, இன்று பெரிய கடை ஒன்றையே திறந்திருந்தான்.

மனம் கேளாமல், “போயிட்டியா?” என்று கேட்டுக் குறுந்தகவல் அனுப்பிவிட்டான்.

பார்த்தவள் பதில் போடப் போகவில்லை. இந்தப் பரிவும் பாசமும் காலாவதியாகிப்போனவை. அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. பிறகு எதற்குப் பதில் போட்டு அவன் அக்கறைக்குத் தண்ணீர் ஊற்ற?

அன்று, தாய் முகம் பார்க்கும் குழந்தையாய் உன்னால் உன்னிடமிருந்து என்னை முற்றிலுமாக அறுத்து எறிந்துவிட முடிகிறதா என்று அவள் பார்த்த பார்வைகள் எதுவும் அவனைச் சேராத போது, அப்போது வராத பரிவும் பாசமும் இப்போது எதற்கு?

நான்தான் முதுகெலும்பு இல்லாதவளாய் நின்றேன். என்னை உனக்குத் தெரியும்தானே? நீயும் முதுகெலும்பு இல்லாதவனாக அன்று நின்றுவிட்டு இன்று என்ன ‘போயிட்டியா?’

ஒரு நெடிய மூச்சுடன் எழுந்து வீடு வந்தான் இளங்கோ. அவன் மனைவி, மகனோடு வெளியே செல்லத் தயாராகியிருந்தாள்.

அப்பா என்று ஓடி வந்த மகனை ஆசையாக அள்ளித் தூக்கியவனுக்கு மகளின் நினைவு. அவளை எண்ணி இவன் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டவன் பார்வையில் பட்டது அந்தச் செயின்.

ஒரு கணம் அவன் இதயம் தன் துடிப்பையே நிறுத்தியிருந்தது. அதை அவன் எடுத்துப் பார்க்க, “அது மாமி அங்க கட்டாரில சீட்டுப் போட்டுத் தம்பிக்கு எண்டு வாங்கினவாவாம் இளங்கோ. வடிவா இருக்கு எல்லா?” என்றுகொண்டு வந்தாள் அவன் மனைவி.

ஆம் என்று சொல்லக்கூட முடியாமல் நின்றான் இளங்கோ. அது பவன் மிளிருக்குப் போட்டுவிட்ட செயின். தலையைச் சுற்றிக்கொண்டு வருவது போலிருக்கவும் இடிந்துபோய் சோஃபாவில் விழுந்தான்.


முற்றும்.

 

soundarya

New member
My first post on your page. En ipdi achu, enavo ulla hurt agudhu enaku but solla therila. Yaara blame panradhunum therila. But unga writing ku na addict aagitu iruken.
 

manlmlm

New member
A selfish persons behavior just destroyed a women's life. Like she thought he doesn't deserve her tears . And his mom no words to say .
Literally I could feel some pain deeply . I thought they will be back together . His second marriage is a shock
 
பெயரில் மட்டுமே குணம் உடைய தாய்க்கு மகளாக பிறந்து, தன்னம்பிக்கை இல்லாமல் செல்லமாக வளர்ந்து பொறுப்பில்லாது நடந்து, இன்று வாழ்க்கையை பறிகொடுத்து நிற்கும் நிலைமைக்கு தாய்தந்தை மட்டுமல்ல வாணியும் பொறுப்பு. படித்த அறிவை பயன்படுத்தவும், துணிச்சலும் இல்லாததனால் ஒரு வாழ்வு போய்விட்டது. இளங்கோவும் மனைவியின் அன்பை உணர தவறி விட்டார்.படிப்பினை ஊட்டும் கதை.
 

Subamurugan

Well-known member
இளங்கோவுக்கு அவன் அன்னையை தெரியவில்லை. மகன் ஜெயிலுக்கு போகும் போது கூட மனம் சுடவில்லை?.. படித்து முடித்த பின் மனம் மிக வேதனையை உணர்கிறது.
 

lakki

New member
Hi ennoda first post..
Elango second mrg ,shock aguthu...,but..ipdi oru..mudivu..etihrparkala..🥹🥹👍🏻👍🏻
 

vidhya s

Member
இந்த கதைய படிக்க வேண்டாம்,சோகம் வேண்டாம்,அழ வேண்டாம் னு படிக்காம இருந்தேன்.மனச தேத்தி படிச்சா கடைசி எபில அழுதாச்சு
 
Top Bottom