இரவு நிருஷிகா வீட்டிற்கு சென்றதும் ராஜ் மற்றும் மைதிலியின் கேள்விக்கு தன் காதலன் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருப்பதாக சொல்லி காலம் கடத்தினாள். மாதங்கள் ஓடியதே தவிர ரிஷியிடமிருந்து எந்த தகவலும் இல்லை. எப்எம் அலுவலகத்திலும் அதே பதிலை தான் கூறினார்கள்.
கடைசிவரைக்கும் ரிஷி தன் காதலை உறுதி செய்யாமல் பேசியது நினைவிற்கு வந்து அவளை கலங்க செய்தது. ஒரு வேளை ரிஷி என்னை காதலிக்கலயா? அவள் தான் அவன் பின்னால் அலைந்து கொண்டிருந்தாளே, எத்தனையோ முறை புத்தி சொல்லி துரத்தி விட பார்த்தான். கேட்கவில்லை என்றதும் சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டானா?
ரிஷி அவளின் நெற்றியை விரல்களால் தீண்டி பின் இதழில் தன் இதழ்களை பதித்ததும், அவளை இழுத்து தனக்குள் சேர்த்து அணைத்ததும் நினைவிற்கு வந்து அவளை அலைகழித்தது. இல்ல! ரிஷி என்னை நிச்சயமா லவ் பண்றாரு, ஏதோ பிரச்சனை வந்திருக்கும், அதான் ரெண்டு பேரும் எங்கயாச்சும் கிளம்பி போயிருப்பாங்க. கண்டிப்பா போன் பண்ணுவாங்க என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டாள்.
மூன்று வருடங்களாக எந்த தகவலும் இல்லை. ஆரம்பத்தில் ரிஷியை தேடி பித்து பிடித்தவள் போல அலைந்து கொண்டிருந்தாள். அதற்குபின்னரான இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ சம்பவங்கள் நடந்தேறிவிட்டது. தன் காதலை பின்னுக்கு தள்ளி, குடும்பத்தினரின் மீது கவனம் திரும்பியது. இந்த மூன்று வருடங்களில் சந்தித்த பிரச்சனைகளும் சவால்களும் அவளை முதிர்ச்சியுள்ள பெண்ணாக மாற்றியிருந்தது. இல்லையென்றால் மூன்று வருடங்களுக்கு பிறகு தன் முன்னால் வந்து நின்ற ரிஷியை கண்டதும் துள்ளி குதித்து ஓடியிருக்கமாட்டாளா?
ஒரு காலத்தில் எதை முக்கியமாக கருதுகிறோமோ அது பிற்காலத்தில் இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. எதை உதாசீனப்படுத்தினோமோ அது அத்தியாவசியமாகிவிடுகிறது. ரிஷி அவளை மறுத்து காரணம் சொல்லி விட்டு சென்றிருந்தால் நிச்சயம் அவனை மீண்டும் தொல்லை செய்திருக்கமாட்டாள். ஆனால் தன் காதலை வெளிப்படுத்தி அவளுக்கு நம்பிக்கையை அளித்து பின் காணாமல் சென்று விட்டான். அதற்கான காரணம் எதுவாக இருந்தாலும் இப்போது அது அவசியமற்றது. இனி அவன் தன் கண்முன்னால் வந்து நின்றால் கூட அமைதியாக கடந்துவிட வேண்டும் என்று தான் மனதிற்குள் நினைத்திருந்தாள்.
ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது வேறு, எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ரிஷியை கண்டதும் அதிர்ச்சி, அவனுக்கு பார்வை நன்றாக தெரிகிறது என்றதும் ஆச்சர்யம், அவன் பச்சை நிற கண்களை கண்டதும் குழப்பம் என கலவையான உணர்ச்சிகளால் வெகுவாக தடுமாறிவிட்டாள்.
கோவையில் பெயரையும் குரலையும் மாற்றி வாழ தொடங்கியிருந்ததால் ரிஷியால் உடனடியாக அவளை அடையாளம் காண முடியவில்லை. ஆனால் அவளின் தடுமாற்றம் நிச்சயம் அவனுக்குள் சந்தேகத்தை வரவழைத்திருக்கும். தன்னை அவனிடம் வெளிப்படுத்திக் கொள்ளும் நிலையில் அவள் இல்லை. இனி இந்த இடத்தை விட்டு வேறு எங்காவது செல்ல வேண்டும்.
“டாக்டர் நிகாவுக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சுனு நினைக்கிறேன். ஏதோ முனகிட்டே இருக்கா” என்ற அஞ்சலியின் குரலில் முகம் சுருக்கி மெல்ல கண்களை திறந்து சுற்றிலும் பார்த்தாள். தான் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தாள்.
அவளருகே வந்த மருத்துவர், “மிஸ்.நிகா ஆர் யூ ஓகே? அப்படியென்ன அதிர்ச்சியான விஷயம் பாத்தீங்க? நேரத்துக்கு சரியா சாப்பிடறதில்லயா?” என்றபடி அவளை பரிசோதித்தார்.
அதிர்ச்சியான விஷயம் என்றதும் ரிஷியும் அவன் கண்களும் நினைவிற்கு வர பெருமூச்சுடன் அஞ்சலியை பார்த்தாள். அவளருகே கைகளை கட்டிக்கொண்டு ரிஷிவர்மன் அவளையே கூர்ந்து நோக்கிகொண்டிருந்தான்.
நிருஷிகாவின் கண்கள் ரிஷியின் மீது நிலைகுத்தி நின்றுவிட, அவனும் அவளையே பார்த்தபடி, “டாக்டர், நிகா ஹெல்த் ஓகேனா நான் அவங்க கிட்ட தனியா பேசலாமா?”
நிருஷிகா கலவரத்துடன் அஞ்சலியை பார்க்க, அவள் பார்வையை புரிந்து கொண்ட அஞ்சலி, “சார் நீங்க வந்தததுல இருந்து தான் நிகா பொசுக்கு பொசுக்குனு மயங்கி விழுந்துட்டு இருக்கா. இதுல தனியா வேற பேச போறீங்களா?” என்றாள்.
“எக்ஸாட்லி, உங்களுக்கு தோணின மாதிரி தான் எனக்கும் தோணுச்சு. என்னை பாத்து ஏன் மயங்கி விழுந்தாங்கனு நான் தெரிஞ்சுக்கணும்”
“அத நானே சொல்றேன், உங்க கண்ண பாத்தா எனக்கே பயமா இருக்கு. அவ ஏற்கனவே பரமசாதுவான பொண்ணு. உங்கள பார்த்து பயந்து மயங்கிட்டா. முதல்ல கூலிங்கிளாஸ் இருந்தா போட்டுக்கோங்க சார்”
“அப்படியா நிகா? என் கண்ணு உங்கள டிஸ்டர்ப் பண்ணுதா?” என்றான் ரிஷி நிருஷிகாவை நேரடியாக பார்த்து. அவளோ பதில் சொல்லாமல் அவனை கண்களால் நிறைத்து கொண்டிருந்தாள். அவளிருக்கும் சூழ்நிலையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. அப்படியே சொன்னாலும் அவனுடைய எதிர்வினை எப்படியிருக்கும் என்று தெரியாது. அவள் வேண்டாம் என்று சென்றவன் தானே?
ரிஷியும் அவளையே கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்தான். ‘நிகா என்னும் இவள் ஏன் என்னை கண்டு தடுமாறுகிறாள்? அவ கண்ணு ஏன் என்கிட்ட எதையோ மறைக்கற போல தோணுது? ஒருவேள இவள் நிருஷிகாவா இருப்பாளோ? எனக்கு அவளை அடையாளம் தெரியலனாலும் அவளுக்கு என்னை அடையாளம் தெரியும் தானே? இப்படி பயந்து மயங்கி விழறவ நிச்சயமா என் நிருஷிகாவா இருக்கமாட்டா. அவளா இருந்திருந்தா இந்நேரம் என் சட்டையை பிடித்து ஏன் அவளை விட்டுட்டு ஓடிப்போனேனு கேள்வி கேட்டு உலுக்கியிருப்பாளே. சென்னைல தி கிரேட் தேவ்ராஜ் இன்டஸ்ட்ரீஸோட வாரிசு, ருஷி இன்டஸ்டஸ்ட்ரீஸ் ஓனரா இருக்கறவ, கோவைல ஏதோ ஒரு மூலைல இருக்கற இந்த சின்ன ஆபிஸ்ல வாய்ஸ் ரெக்கார்டிங்க்கு வேலைக்கு வருவாளா? இவளோட குரல் நிருவோடது மாதிரி இல்லயே, ஒரு வேள குரல மாத்தி பேசறாளா?’
நிருவும் வாய்ஸ் ரெக்கார்டிங் கத்துக்கறேன்னு வந்தாளே, ஆனா அவ ஒழுங்கா எதையும் கத்துக்கல. இந்த நிகா தான் நிருஷிகாவா இருப்பாளா? என்கிட்ட அவளை மறைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு? இருவரின் பார்வையும் ஒருவரை விட்டு வேறுபக்கம் விலகியிருக்கவில்லை. இருவருக்குள்ளும் பழைய நினைவுகளும் அதைபற்றிய கேள்விகளும் மாறி மாறி வந்தன.
‘ஒருவேளை இந்த அஞ்சலி சொன்ன மாதிரி என் கண்ணை பாத்து பயந்துட்டாளா? அவ்ளோ பயங்கரமாவா இருக்கு?’ யோசனையுடன் தன் கைப்பேசியை எடுத்து கேமராவில் தன் கண்களை பார்த்தான். வித்தியாசமா தெரிந்தாலும் பயந்து மயங்கி விழுமளவுக்கு கொடுரமாக இல்லையே!
இருவரின் மெளனத்தை அஞ்சலி கலைத்திருந்தாள். “சார் நீங்க கிளம்புங்க, டிரிப்ஸ் முடிஞ்சதும் நான் ஆட்டோவுல நிகாவ கூட்டிட்டு போய் அவளோட ஹாஸ்டல்ல டிராப் பண்ணிட்டு ஆபிஸ்க்கு வந்துடறேன்” என்றாள் ரிஷியிடம்
“நோ, என்னால மயங்கி விழுந்திருக்காங்க, நான் தானே கூட இருந்து ஹெல்ப் பண்ணனும். டிரிப்ஸ் முடிஞ்சதும் நானே அவங்கள ஹாஸ்டல்ல டிராப் பண்றேன்” என்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
நிருஷிகா கலக்கத்துடன் அஞ்சலியை பார்க்க, “டிராப் பண்ணிட்டு போகட்டும் நிகா. இங்கேயிருந்து ஆட்டோல போனா அதுக்கு நாம தான் பணம் கொடுக்கணும். நீ இருக்கற நிலையில பஸ்ல போகவும் முடியாது. எப்படியும் லேடிஸ் ஹாஸ்டல் உள்ளே யாரையும் விட மாட்டாங்க. வாசல்லயே அனுப்பி விட்டுடலாம்” என்றாள் அஞ்சலி மெல்லிய குரலில்
ரிஷி கேட்டும் கேட்காதது போல அமர்ந்து கொண்டு போனை எடுத்து அதை ஆராய்வது போல நிருஷிகாவின் முகத்தை படம் பிடிக்க முனைந்தான். அவளோ தன்னிச்சையாக முழங்கையால் முகத்தை மறைத்துக் கொண்டு தூங்குவது போல கண்களை மூடிக் கொண்டாள்.
டிரிப்ஸ் முடிந்ததும் அஞ்சலியின் உதவியோடு எழுந்து அமர்ந்தாள். மேனேஜர் இளங்கோ போன் செய்து விசாரித்தான். “நிகா ரெண்டு நாள் லீவு கூட எடுத்துக்கோங்க. நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வந்து வேலைய முடிச்சு கொடுங்க. நான் தான் ஹாஸ்பிடலுக்கு வரலாம்னு இருந்தேன். ரிஷி சார் அவரே பாத்துக்கறதா சொல்லி என்னை மத்த வேலைய கவனிக்க சொல்லிட்டாரு. நீங்க ஓகே தானே?”
“ஓகே சார்” என்று போனை வைத்தவள் முகம் கழுவி தன் மனதை சமன் செய்து கொண்டு வெளியே வந்தாள். ரிஷிவர்மன் முன்னால் நடக்க, அஞ்சலியின் உதவியோடு நிருஷிகாவும் பின்னால் சென்றாள்.
ரிஷி காரை எடுத்து வந்து மருத்துவமனையின் வாசலில் நிறுத்தி முன்பக்க கதவை திறந்து விட, அவளோ பின்பக்கம் ஏறி அமர்ந்து கொண்டாள், அஞ்சலியும் அவளுடன் அமர, தோளை குலுக்கி கொண்டு கதவை மூடி வண்டியை ஸ்டார்ட் செய்தான். ஒரு காலத்தில் ஸ்கூட்டியில் தன் பின்னால் அமர்ந்து தோள்களை பற்றி கொண்டு கதைகள் பேசியபடி பயணித்த ரிஷியை நினைத்து பார்த்தாள். அதே ரிஷியோடு அவன் ஓட்டும் காரில் பின்னால் அமர்ந்து செல்வோம் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
ரிஷி அடிக்கடி கண்ணாடி வழியே நிருஷிகாவை பார்த்தபடி காரை செலுத்தி கொண்டிருந்தான். என்ன நினைத்தானோ திடிரென்று “அலெக்சா ப்ளே இளையராஜா சாங்” என்றான்.
“ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்” என்ற பாடல் ஒலிக்க அவன் எதிர்பார்த்தது போல நிருஷிகா திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
இப்போது அவனுடைய சந்தேகம் வலுத்துவிட்டது, அவளை கூர்ந்து பார்த்தபடி காரை செலுத்தினான்.
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
என்ற வரிகளில் இருவருக்குமே அன்றை நாளும் அதன் தீண்டலும் நினைவிற்கு வர அவளை தீண்டினால் நூறு சதவீதம் அவளை உணர்ந்து கொள்ளலாம். ஆனால் புதிதாக சந்தித்த பெண்ணிடம் உரிமையோடு தொட்டு பார்க்க முடியுமா? யோசனையோடு அவன் காரை செலுத்த, நிருஷிகாவிற்கு உள்ளே மணி அடித்தது. ரிஷி தன்னை கண்டுக்கொள்ள முனைகிறான் என்று புரிந்து பார்வையை பக்கவாட்டு ஜன்னல் திரையில் செலுத்தினாள்.
“நிகா உங்களோட முழு பேரு நிருஷிகாவா?” என்றான்
“இல்ல, நிகா மட்டும் தான்” என்றாள் பட்டென்று, உள்ளே படபடக்கும் இதயத்தின் துடிப்பை வெளியே தெரியாமல் மறைக்க அஞ்சலியிடம் பேச்சு கொடுத்தாள்.
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை
என் ஆவி நீயே தேவி
ராஜ ராஜ சோழன் நான்..
பாடலோடு பாவையையும் ரசித்தபடி காரை செலுத்தினான். நிகாவாக அமர்ந்திருப்பவளின் கழுத்தை பார்த்தான். அங்கே தாலி இல்லை, நெற்றி வகிட்டில் குங்குமம் இல்லை. இவள் நிருஷிகாவாக இருந்தால் ஒரு முறை இழந்த சொர்க்கத்தை மீண்டும் அடைய வாய்ப்பிருக்கிறது. ஏதோ காரணத்திற்காக தன்னை மறைக்கிறாள். முகவடிவை விரல்களால் தொட்டு உணர்ந்து கொண்டால் நூறு சதவீதம் ஊர்ஜிதம் செய்து விடலாம்.
ரிஷியின் பார்வை தன் மேல்படிவதை உணர்ந்தவள் அரை பார்வையாக அவனை பார்க்க, “கள்ளூர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே, துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே” கள்ளுண்டவனின் கள்ளத்தனமான போதை தரும் பார்வையில் இமைகள் படபடத்தன.
ரிஷி அவளின் புருவங்களையும் இமைகளையும் பார்த்தபடி,
வில்லோடு அம்பு ரெண்டும், கொல்லாமல் கொல்லுதே!
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே! என்று மெல்லிய குரலில் தானும் சேர்ந்து பாடினான்.
நிருஷிகாவின் மனதில் பூட்டி வைத்திருந்த காதல் தன் தளைகளை உடைத்தெறிந்து கொள்ள பார்க்க, சட்டென தன் நிலையை உணர்ந்து, “சார் தலை வலிக்குது, கொஞ்சம் பாட்டை நிறுத்தறீங்களா ப்ளீஸ்” என்றாள்.
பாட்டை நிறுத்தியவன், காரையும் நிறுத்தயிருந்தான். கேள்வியாக பார்த்தவளிடம், “நீங்க சொன்ன ஹாஸ்டல் வந்தாச்சு நிரு” என்றான் அழுத்தி
“நிரு இல்ல நிகா” என்று திருத்தியவள் இறங்கி கொள்ள, அஞ்சலியும் அவளோடு இறங்கினாள்.
“I will catch you tomorrow” என்று இருபொருள்பட கூறிவிட்டு காரை திருப்பினான்.
அவன் பேச்சும் பார்வையும் திகிலை கொடுக்க, கார் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்திருந்தாள்.
(தொடரும்)