• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 20

Vishakini

Moderator
Staff member
புனர் ஜென்மம் 20

“வாட்?? நான் பழைய ராஜ் இல்ல. என்னை பார்த்து நீ பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களை கத்துக் கொடுக்கும். நானும் நிறைய கத்துக்கிட்டேன், அதிலிருந்து மீண்டு வந்திருக்கேன். உன்னோட தயக்கம் எனக்கு புரியுது. என்கிட்ட உன்னோட சந்தேகங்களை கேக்குறதுக்கு உனக்கு நேரம் வேணும்னா சொல்லு??” என்றான் ராஜ்.

“இல்ல, எனக்கு உங்களுடைய கடந்த காலத்தை பத்தின எந்த கேள்வியும் இல்லை. அதெல்லாம் எனக்கே தெரியும். உங்களைப் போல நானும் அதை பத்தி பேச விரும்பல. ஆனா என் மனசுல சில விஷயங்கள் இருக்கு. அதை என்னால உங்ககிட்ட உடனே சொல்ல முடியல. எனக்கு அதை சொல்றதுக்கு தான் நேரம் வேணும்” என்றாள்.

அவளுக்கு தயக்கமாக இருந்த போதும், அவன் சொன்ன ஒரே காரணத்திற்காக அவன் விழிகளை பார்த்துக் கொண்டுதான் பேசினாள்.

அந்த விழிகளின் பதட்டமும் படபடப்பும் அவனுக்கு புரிந்தது. ‘என்னவாக இருக்கும்??’ என்ற குழப்பம் மிகுந்தது. அவள் நேரம் கேட்கிறாள், ஆனால் அவனுக்கு அதை இப்போதே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் எழுந்தது.

எதையும் மூடி மறைத்து, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் ரகம் இல்லை அவன். வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசும் ரகம். ஆனால் அவளையும் அதே போல எதிர்பார்க்க முடியாது. இதுவரை தன்னை எதிர்நோக்கி பேசாதவள், தான் சொன்ன ஒரே காரணத்திற்காக தன்னை நிமிர்ந்து பார்த்து பேசுகிறாள் என்பது அவனுக்கும் புரிந்தது.

அவளைப் பற்றியும் அவனுக்கு சிறிதே தெரியும். அவள் குணாதிசயங்கள், படபடப்பு, பயம் என்று எல்லாவற்றையும் அவனும் அறிந்திருக்கிறான். கடந்த இந்த வருடங்களில், அவளுக்குள் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். தனக்குள் நிகழ்ந்தது போல?? ஆனால் அது எந்த அளவிற்கு என்று தெரியாமல், அவனால் அவளை வற்புறுத்த முடியாது. அவனுக்குத் தெரிந்த லீலா இவ்வளவு பேசியதே அதிகம் தான்.

“நேரம், உன் மனசுல இருக்குறத சொல்றதுக்கு மட்டும் தான் வேணுமா?? இல்ல வேற எதுக்கும் வேணுமா??” என்று கேட்டான்.

அவள் ஒவ்வொரு கேள்விக்கும் அவனைப் பார்த்து பதில் அளித்துவிட்டு, மீண்டும் தலையை குனிந்து கொள்வது அவனுக்கு சுவாரசியத்தை தான் கொடுத்திருந்தது.

அவன் எதைக் கேட்க வருகிறான் என்று புரியாத அளவிற்கு அவள் ஒன்றும் சிறு பிள்ளை இல்லை. ஆனால் அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. மனது முழுவதும் அவன் மீது காதல் இருக்கிறது, திருமணமும் செய்து கொண்டாகிவிட்டது. ஆனால் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டுமென்றால் அதற்கு அவள் தயாராக இருக்கிறாளா இல்லையா?? என்று அவளுக்கே தெரியாத நிலைதான்.

“இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?? நான் இதை எப்படி எடுத்துக்கிறது?” என்று கேட்டான் ராஜ்.

மெல்ல அவனை தலை நிமிர்ந்து பார்த்தவள், “எனக்கு இதுக்கு பதில் சொல்ல தெரியல? உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்யுங்க” என்றாள்.

‘என்ன பதில் இது?? எது வேண்டும் என்றாலும் செய்து கொள் என்கிறாளா? அவசரப்படாத ராஜ்?’ மனதிற்குள் நினைத்து தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டான்.
“என்னை உனக்கு பிடிச்சிருக்கா?” என்று கேட்டுவிட்டு அவளை ஆழமாக பார்த்தான்.

“இந்தக் கேள்வி அபத்தம் சீனியர். இதே கேள்வியை நான் கேட்க முடியாது” என்றாள்.

“பரவாயில்லையே? காலேஜ்ல பார்த்த லீலாவுக்கும் இப்ப பார்க்குற லீலாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. ஒரு அரை மணி நேரம் முன்னாடி வரைக்கும், அப்படி எந்த வித்தியாசமும் இல்லன்னு நினைச்சேன். ஆனா இப்ப இருக்கும்னு தோணுது. பட் எனக்கு அது பிடிச்சிருக்கு” என்றான்.

அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் தைரியமாக பதில் சொல்லிக் கொண்டிருப்பதை தான், அவன் கூறிக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்கும் புரிந்தது.

“நீங்க நினைக்கிற அளவுக்கு என்கிட்ட எந்த மாற்றமும் வரல சீனியர். இப்பவும் நான் அதே ஸ்ரீ லீலா தான். ஆனா உங்களுக்கு பிடிக்காததை செய்ய எனக்கு விருப்பமில்லை. நீங்க கேட்கிற கேள்விகளுக்கு உங்க முகத்தை பார்த்து பதில் சொல்லணும்னு சொல்லி இருக்கீங்க. எனக்கு அது அவ்வளவு பதட்டத்தை கொடுக்குது. ஆனாலும் உங்க மனசை வருத்தப்பட வைக்க கூடாதுன்னு அதை கஷ்டப்பட்டு செய்யுறேன். நீங்க கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்றேன். திருமணம் முடிஞ்ச பிறகு இந்தக் கேள்வி அபத்தம்னு தான் எனக்கு தோணுது” என்றாள்.

“நேரடியா பதில் சொல்லாம மறைமுகமா பதில் சொல்ற. நான் தான் போக போக இதை புரிஞ்சுக்கணும் போல? என்கிட்ட உனக்கு ஏதாவது எதிர்பார்ப்பு இருக்கா?? ஐ மீன் நான் என்ன பண்ணனும், எப்படி நடந்துக்கணும்னு?? நான் இந்த திருமணத்தை எக்ஸ்பெக்ட் பண்ணல, பட் நடந்துருச்சு. அதுவும் மணப்பெண்ணா நான் உன்னை எதிர்பார்க்கல. உன்னுடைய எதிர்பார்ப்புகளை சொன்னா, என்னால முழுசா மாத்திக்க முடியும்னு நான் சொல்ல மாட்டேன். ஆனா முடிஞ்சதை மாத்திக்க முயற்சி பண்ணுவேன்” என்றபடி அவள் அருகில் அமர்ந்தான்.

“எனக்கு உங்க அன்பு மட்டும் போதும்” என்றாள்.

அவளுடைய பதிலில் அவன் திகைத்து விட்டான்.

“இல்ல, என்னை பத்தி உனக்கு எந்த அளவுக்கு தெரியும்னு தெரியல?? எனக்கு ரொம்ப கோவம் வரும். பொண்ணுங்க கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாது. கொஞ்சம் ஃபிரஸ்ட்ரேஷன்ல அக்கா கிட்ட இருந்து கூட ஒதுங்கி இருந்துட்டேன். சோ எனக்கும் பெண்களுக்குமான உறவுன்றது அதிகம் இல்லை. எனக்கும் அம்மாவுக்கானது மட்டும்தான். உரிமையா அவங்க கிட்ட கோபப்படுவேன், எரிச்சலா பேசுவேன், திட்டுவேன். இன்னும் என்னெல்லாம் பண்றேன்னு அவங்க கிட்ட கேட்டா தான் தெரியும்” அவன் மிக சாதாரணமாக பேசினான்.

“நீங்க எப்படி இருக்கீங்களோ, அப்படியே இருங்க சீனியர். அது தான் உங்களுக்கு அழகு. எனக்காக இல்ல யாருக்காகவும் நீங்க எதையும் மாத்திக்க வேண்டாம். உரிமையான இடத்தில்தான் கோபம் வரும். உங்களோட கோபத்தை உள்வாங்கிக்க நான் தயாரா இருக்கேன்” என்றாள்.

பிரமித்துப் போய் விட்டான். எப்படிப்பட்ட வார்த்தைகள் இவை?? அவளிடமிருந்து இது போல வார்த்தைகளை அவன் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. பக்குவம் நிறைந்த வார்த்தைகள். ஏன் அந்தப் பக்குவம் அவனுக்கே கூட இல்லை என்று சொல்லலாம்.

இருந்திருந்தால் எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்திருக்க மாட்டான். இத்தனை வருட காத்திருப்புக்கு கிடைத்த பலன் போல, அவனுக்கு கிடைத்த பொக்கிஷம் போல தான் தோன்றினாள் அவள். அந்த வார்த்தையில் அவனுக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது.

‘நீ எப்படி இருக்கிறாய், உன்னை நான் அப்படியே உள்வாங்கிக் கொள்கிறேன்’ என்கிறாள்.

ஆத்மார்த்தமான காதலின் வெளிப்பாடு இது. அன்னியோன்யமான தம்பதியினரின் புரிதல் இது. இது இல்லாமல் எத்தனை பேர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்?? எத்தனை பேர் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள், எத்தனை பேர் பிரிந்து வாழ்கிறார்கள்?? இப்படி சொல்லிக் கொண்டே போகலாமே??

தனக்கு சில எதிர்பார்ப்புகள் இருப்பதை அவளிடம் கூற நினைத்தான். அதனால்தான் அவளிடம் முதலில் கேட்டான். ஆனால் இப்பொழுது கூறுவது அவசியமற்றது என்று நினைத்தான். அவள் இயல்பை மாற்றிக் கொண்டு தனக்காக தன் பதட்டத்தை குறைத்துக் கொண்டு பேச விளைகிறாள். தன் இயல்பை மாற்றாமல் வாழச் சொல்கிறாள். தான் சொல்லாமல் தனக்காகவே அவளை மாற்றிக் கொள்கிறாள். அப்படி இருக்கும்போது அவளிடம் இதை செய், செய்யாதே என்று எப்படி அவனால் கேட்க முடியும்??

“எங்க அம்மாவுக்காக தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். அதுவும் அவங்களோட வற்புறுத்தலுக்காக. உன்னோட போட்டோவை கூட நான் ஒரு வாரம் முன்னாடி தான் பார்த்தேன். ஆனா பார்த்ததும் அதிர்ச்சியாயிடுச்சு. உலகத்திலேயே எங்க அம்மாவுக்கு இந்த பொண்ணு தான் கிடைக்கணுமானு செம கடுப்பா இருந்துச்சு. ஆனா, இப்ப இந்த நொடி, நல்லவேளை உன்னை மிஸ் பண்ணலன்னு தோணுது. ஒருவேளை முன்னாடியே??” என்றவன் கூற நினைத்த வார்த்தைகளை தன் தொண்டைக்குள் அழுத்தி அடக்கினான்.

அவன் கூற வந்த வார்த்தைகள் அவளுக்கு புரிந்து தொலைத்தது. அவன் மனதில் இருப்பதை மறைக்காமல் கூறுகிறான். அது அவனுடைய இயல்பு.

“இந்த இடம், சூழல், இந்த தனிமை எல்லாமே எனக்கு ரொம்ப புதுசாயிருக்கு. உன்னோட வாசம், அதை என்னால நல்லா ஃபீல் பண்ண முடியுது. ஸ்கூல், காலேஜ்ல எல்லாம் கெத்தா திரிஞ்சிட்டேன். ஒரே ஒரு சறுக்கல், பெண்ணோட நெருக்கம் ஏற்பட்டுடுச்சு, ஆனா எல்லை மீறி போனதில்லை. உனக்கு விஷயம் தெரியும்னாலும், என்னோட பர்சனல் தெரியாதில்லையா?? இதுபோல தனி அறையில ஒரு பெண்ணோட நெருக்கமா இருக்கிறேன்னா அது உன்னோட மட்டும்தான். அஃப்கோர்ஸ் எங்க அம்மா கூட இருந்திருக்கேன், ஆனா அதுவும் ஒரு வயசோட நின்னுடுச்சு. உனக்கு குறையாத பதட்டம் எனக்கும் இருக்கு. ஆனா ஆம்பளன்னு மீசையை முறுக்கிக்கிட்டு நிமிர்வா உட்கார்ந்திருக்கேன். உன்னை ஃபேஸ் பண்றதுக்கு பயந்தேன்னு கூட சொல்லலாம்” அவன் எந்த தயக்கமும் இல்லாமல் மனதில் இருப்பதை மிக கேஷுவலாக அவளிடம் உரைத்துக் கொண்டிருந்தான்.

வாயைப் பிளந்து அவனைப் பார்த்தாள்.
அவனைப் பார்க்க, ரசிக்க அவளுக்கு சலிக்கவில்லை, அந்த உரிமையை அவனே கொடுத்திருக்கும் போது. தயக்கங்களை ஒதுக்கி விட்டு தான் அவனைப் பார்க்க ஆரம்பித்தாள். தன்னிடம் சத்தமாக பேசுபவன் அவன் தானா என்று பிரமிப்பாக பார்த்தாள் அவனை.

அவள் பார்வையை உணர்ந்து கொண்டவன், “என்ன?” என்று புருவங்களை உயர்த்தி கேட்டான்.

“உங்களுக்கு இப்படி எல்லாம் பேச வருமா சீனியர்?” என்று கேட்டாள்.

“கொழுப்பு தான் உனக்கு?? உன்னை முதல் முதல்ல பார்த்தது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. பேந்த பேந்த விழிச்சிட்டு நின்னியே, ஐ திங்க் அப்பயும் யெல்லோ கலர் சுடிதார். கரெக்டா??” என்று ஆர்வம் மின்ன கேட்டான்.

“வாவ் சீனியர், நான் போட்டிருந்த டிரஸ் கலர் கூட கரெக்டா சொல்றீங்க?? நீங்க அந்த அளவுக்கு என்னை கவனிச்சிருப்பீங்கன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணல. இன்ஃபேக்ட் உங்க முன்னாடி நான் வந்தா என்னை நீங்க ஞாபகம் வச்சிருக்கவே மாட்டீங்கன்னு நினைச்சேன்” அவளும் இயல்பாக தடைகளைத் தகர்த்து விட்டு பேசினாள்.

“ஹலோ, உன்னை தவிர யாரும் அந்த கலர்ல சுடிதார் போட்டுட்டு வர மாட்டாங்க. அந்த கலரை வச்சு என் ஃப்ரெண்ட் கிண்டல் பண்ணான், அந்த பொண்ணு அம்மன் கோவிலுக்கு போயிட்டு ஸ்ட்ரெய்ட்டா வருதுன்னு. ஆனா உனக்கு அந்த கலர் நல்லா இருக்கும். உனக்கு அந்த கலர் ரொம்ப பிடிக்கும் போல?? அடிக்கடி அந்த கலர்ல பார்த்தேன்” என்றான் ராஜ்.

“ஆமா, எனக்கு அந்த கலர் ரொம்ப பிடிக்கும்” என்று புடவையை திருகிக் கொண்டே கூறினாள்.

“அப்ப ஏன் இப்ப அந்த கலர் கட்டிட்டு வரல?”.

“அது வந்து, இது ஏதோ ஃபார்மாலிட்டினு சொல்லி இந்த புடவையை எடுத்தாங்க” என்றாள்.

“ரிசப்ஷனுக்கும் வேற கலர் தானே கட்டின?”.

“அது உங்களோட டிரஸ்ஸுக்கு மேட்ச்சா இருக்கணும்னு எடுத்தது”.

“அப்ப கல்யாணத்துக்கு?” அவன் புருவங்களை ஏற்றி இறக்கினான்.

“அது எப்பயும் கூறைப் புடவை தானே சீனியர் கட்டுவாங்க?” என்றாள்.

“கூறைப் புடவை யெல்லோ கலர்ல இருக்காதா?”.

“இருக்கும்னு நினைக்கிறேன்?? ஆனா நம்ம ஊர்ல கட்ட மாட்டாங்க. திருப்பதியில தான் அந்த கலர் புடவையை கட்டி பார்த்திருக்கேன். ஐ திங்க் ஆந்திராவுல கூறைப் புடவை என்று நினைக்கிறேன், சரியா தெரியல?” என்றாள்.

“சோ யெல்லோ கலர் பிடிக்கும். வேற என்ன பிடிக்கும்?”.

‘உங்களை பிடிக்கும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், அவனை மையலாக பார்த்தாள்.

அந்தப் பார்வை எதையோ அவனிடம் சொல்ல விளைந்தது. அவனும் அவள் பார்வையை ஊடுருவி பார்த்தான். அவள் பார்வையில் கட்டுண்டு போனான்.

ஜன்னல் கதவின் சத்தத்தில் இருவருமே மீண்டுகொண்டார்கள்.

பிறகு இருவருக்கும் எது பிடிக்கும், பிடிக்காது என்று பேசினார்கள். அவன் கேட்கக் கேட்க, அவள் பதில் சொல்ல, உடனே அவனும் தனக்கு பிடித்ததை, பிடிக்காததை கூறினான்.

ஓரளவிற்கு அவள் கவனித்து யூகித்த விஷயங்கள் தான். ஆனால் அவன் மனதில் இருக்கும் சிலவற்றையும் அவன் பகிர்ந்து கொண்டான். இந்த அளவு அவன் பேசுவான், பகிர்ந்து கொள்வான் என்றெல்லாம் அவள் எதிர்பார்க்கவில்லை.

அதுவும் முதல் நாளிலேயே பேசியது அவளுக்கு மட்டுமல்ல, அவனுக்குமே மனதில் இதத்தை கொடுத்திருந்தது.

ஒரு விஷயத்தை தூரம் நின்று பார்க்கும்போது தான் அது பெரிதாக தெரியும். அதில் இறங்கிவிட்டால் அது ஒன்றும் இல்லாமல் கரைந்து போகும். அதுபோலத்தான் திருமண வாழ்க்கையை அவன் தூரம் நிறுத்திப் பார்த்தான், பெண்களை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தான். ஆனால் இப்பொழுது மிக அருகில், அவனுக்கு தூணாக, சரிபாதியாக நிற்கும்போது தயக்கங்கள், வெறுப்புகள் எல்லாம் ஒன்றுமில்லாமல் தான் கரைந்து போனது.









 
Top Bottom