• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பூவிழி வாசம் - 29

Vishakini

Moderator
Staff member
பாகம் 29
காலைச்சூரியன் தகதகத்தபடி கீழ்வானிலிருந்து புறப்பட்டு வந்திருந்தான்..அவனுடைய வெண்கதிர்கள் மானுட சமூகத்தை தொட்டு உய்வித்துக்கொண்டிருந்தது.
காலைகள் எப்போதும் பரபரப்பானவை, அந்தப் பொழுதுக்கே உரிய சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது அந்தக் கல்விச்சாலை வளாகம் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.
பேருந்திலிருந்து இறங்கிய மாணவர்களும் மாணவிகளுமாக வரிசை கட்டி வாயிலைத்தாண்டி விரைந்துகொண்டிருந்தனர்.
போட்டி ஒன்றுக்காக, மாணவர்கள் சிலர் மைதானத்தில் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.
தோழியின் கரம் பற்றி சிரித்துப்பேசியபடி மைதானத்தைக் கடந்து நடந்துகொண்டிருந்த வண்ணமதி, சடாரென்று வந்து தலையில் பட்ட பந்தின் வேகத்தில் 'அம்மா ......' என்றபடி சுருண்டு விழுந்தாள். சற்றுத்தூரத்தில் நின்றுகொண்டிருந்த வானகனின் பார்வையில் இந்தக்காட்சி தென்பட்டுவிட அவசரமாய் ஓடிவந்தான்.
அதற்குள் தோழிகள் சூழ்ந்து விட்டதால், அந்த இடமே களேபரம் ஆகியது, எல்லோரையும் விலக்கியபடி நுழைந்தவன், மளமளவென்று அலைபேசியில்; அம்புலன்ஸ் வண்டியை அழைத்துவிட்டு, அதே வேகத்தில் பூவிழிக்கும் தகவல் தெரிவித்தான். அம்புலன்ஸ் வந்த வேகத்தில், தோழிகளைக் கொண்டே வண்ணமதியைத் தூக்கி ஏற்றச்செய்தவன், அவர்களை அனுப்பிவிட்டு அண்ணனுக்கும் அண்ணிக்கும் அலைபேசியில் தகவல் சொல்லிவிட்டு, தானும் பின்னாலேயே தனது ஈருளியில் விரைந்து சென்றான். பந்து விளையாடிய மாணவர் குழாமும் உடன் சென்றது.
வைத்தியசாலைக் சிற்றுண்டிச்சாலையில் அமர்ந்து பரிதியுடன் தேநீர் அருந்திக்கொண்டிருந்த பூவிழி வானகனின் அழைப்பில் அலைபேசியைக் காதுக்கு கொடுக்க, அவசரமான அவனது வார்த்தைகளைக் கேட்டவள், ஒரு நிமிடம் உறைந்து போனவளாய் அமர்ந்திருந்தாள்,

~பூவிழி....பூவிழி...என்னாச்சு..என்ன..? பரிதி உலுக்கி விட்டதும் சட்டென எழுந்தபடியே, பில்லை குடுத்திடு பரிதி, வண்ணமதிக்கு தலையில பந்து பட்டுவிட்டதாம், மயக்கத்திலயே இருக்கிறாளாம்,...இஞ்சைதான் வந்துகொண்டிருக்கினமாம், நான் போறன்...நீ வா....என்றுவிட்டு விரைந்து நடக்க, பின்னாலேயே வந்த பரிதி, " பதற்றப்படாதை பூவிழி, வண்ணமதிக்கு அப்பிடி ஒண்டு பாரதூரமா அடிபட்டிருக்காது, சின்ன அடியாத்தான் இருக்கும், நீ மனசைப்போட்டு குழப்பாமல் நட" என்றதும்
"எனக்கு பயமாக்கிடக்கு பரிதி ....." என்றாள்.
~எல்லாத்தையும் தைரியமா எதிர்கொள்ளுற நீயே இப்பிடி உடைஞ்சு போனா....வா ...போய் என்ன எண்டு பாப்பம்.....|
தோழியின் வார்த்தைகளில் ஓரளவு சமாதானம் அடைந்த பூவிழி மெல்ல நடக்கத் தொடங்கினாள்.
அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட வண்ணமதி இன்னும் மயக்கம் தெளியாமலே படுத்திருந்தாள். வெளியில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தனர் பூவிழியும் வானகனும்.
நேரம் கடந்துகொண்டிருந்தது. தகவல் தெரிந்து, பணியிடத்தில் இருந்து விரைந்து வந்து சேர்ந்தான் இளஞ்செழியன். வண்ணமதிக்கு ஒன்றென்றால் அவனுக்கு தாங்கமுடியாது, எப்போதும் நாய்கடி, பூனைகடியாக இருந்தாலும் இருவருமே ஒன்றாக வளர்ந்ததினால் பாசம் அதிகமோ, என்னவோ....
அண்ணன் சிறு வயது முதலே, தள்ளி நின்றவன், படித்தது விடுதியில், பின்னர் வெளியூரில் பணி, அடுத்து வெளிநாட்டில் வாழ்க்கை.....வண்ணமதியும் அவனும் அப்படி இல்லையே....ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போல.....
மனமெல்லாம் பாரமாய் கனத்தது இளஞ்செழியனுக்கு, பூவிழியின் குரலில் தெரிந்த பதற்றம், நிச்சயமாக சாதாரணமானது அல்ல, அப்படியென்றால் வண்ணமதிக்கு பாரதூரமான நிலைதான்,
'கடவுளே.....எங்கள் வீட்டு தேவதை அவள், எங்கள் எல்லோரினதும் சின்ன இளவரசி, அவளுக்கு மட்டும் ஏதும் நடந்துவிடக்கூடாது, விரைவில் அவள் குணமடையவேண்டும்' பிரார்த்தனைகளோடுதான் வைத்தியசாலையை வந்தடைந்தான்.
இவனைக் கண்டதும் பரபரப்புடன் அருகில் வந்த பூவிழி, 'இளா, அப்பாட்ட சொன்னியா?' என்றாள்.
'இல்லை...நான் சொல்லேல்ல, இஞ்ச வந்து பாத்திட்டுச் சொல்லுவம்எண்டு வந்திட்டன், உங்களைக் கேட்டிட்டு சொல்லுவம் எண்டு ஓடிவந்திட்டன்' என்றான்.
அப்போதுதான், வானகனைப் பார்த்த இளஞ்செழியன், 'வானகன், நீங்கள்.....நீங்களா கொண்டு வந்தனீங்கள்?' என்றான்.
"இல்லை....அம்புலன்ஸில வண்ணமதியின்ர நண்பிகள் வந்தவை, நான் பின்னால வந்தன்."
சோர்ந்து போய் இருந்த அவனது முகத்தை ஆழமாய் பார்க்கும் நிலையில் அங்கு யாரும் இல்லாததால் வண்ணமதி மீதான அவனது காதல் யார் பார்வைக்கும் தெரியாமல் போனது. தவிர அந்த நேரத்தில் வண்ணமதியின் தோழிகளுமே பதற்றத்தில்தான் நின்றனர். பந்து விளையாடிய மாணவர் கூட்டம், பயத்தில் நின்றுகொண்டிருந்தது.
மணித்துளிகள் கடந்தது, வைத்தியர் வெளிப்பட்டார், அவசரமாய் அருகில் விரைந்தனர் பூவிழியும், வானகனும் இளஞ்செழியனும். "பூவிழி, இனி ஒண்டும் பயமில்லை, கொஞ்சம் பலமான அடிதான், ஆனா, உடனடியா கொண்டு வந்ததது நல்லது, ஆள் பயந்திட்டா.. சிகிச்சை செய்தாச்சு, இப்ப லேசான மயக்கம், கொஞ்சநேரம் கழிச்சு பாக்கலாம்' என்றதும் ஆழந்த மூச்சொன்றை எடுத்து தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டனர் எல்லோரும்.
அதன் பிறகுதான் பூவிழி மெல்ல பரமானந்தத்தாருக்கு தகவல் சொல்ல, அவசரமாய் அவரும் வந்து சேர்ந்தார். பூவிழி வண்ணமதியோடு உள்ளே சென்றுவிட வண்ணமதியின் தோழிகள் மாலையில் வருவதாக கூறிச்சென்றுவிட்டனர். பந்து அடித்த மாணவர்கள் இளஞ்செழியனின் அருகில் வந்து
~அண்ணா..தெரியாமல்தான்....| என்று தொடங்கவும்
~விடுங்கோடா..தெரிஞ்சு யாராவது இப்பிடிச் செய்யிறதே...சரிசரி..அதுதான் ஒண்டும் பிரச்சினை இல்லை எண்டு தெரிஞ்சிட்டுதே...விடுங்கோ| என்றான்.
நாங்கள் போய்விட்டு பிறகு வாறம் அண்ணா| என்றுவிட்டு வானகனிடமும் சொல்லிக்கொண்டு சென்றுவிட்டனர்.
வானகன் மட்டும் நின்றுகொண்டிருந்தான்.
"வானகன்....உங்களுக்கு நேரம் போகுது என்றால் நீங்கள்.. ஆனா..." இளஞ்செழியன் சொல்லி முடிப்பதற்குள்
"இல்ல..பரவாயில்ல...நான் லீவு சொல்லிட்டன்....பாத்திட்டே போறன்" என்றான்.
தலையை ஆட்டிவிட்டு அருகிலிருந்த கதிரையில் அமருமாறு காட்டிவிட்டு தானும் அமர்ந்துகொண்டான். பிரச்சினை இல்லை என்று சொல்லிவிட்டாலும் ஏனோ வானகனுக்கு பதற்றம் குறையவில்லை, பந்து கொஞ்சம் வேகமாகத்தான் பட்டுவிட்டது, அவன்தான் பார்த்தானே,
அவள் சுரண்டு விழுந்த கோலம்தான் அவனுக்கு கண்ணுக்கு முன்னால் வந்துகொண்டே இருந்தது.
அவர்களை அதிக நேரம் காக்கவைக்காது வண்ணமதியைப் பார்க்க வருமாறு வைத்தியர் உள்ளே அழைத்துவிட,
விழி தட்டி பூவிழியைப் பார்த்த வண்ணமதியின் விழிகள் அங்கும் இங்கும் தேடித் துழாவியது, எல்லோரையும் கடந்து கடைசியாக நின்ற வானகனின் விழிகளில் தேங்கி நின்றது அவளது பார்வை. ஒரு நொடி விம்மித்தணிந்தது அவனது விழிகள். அவளுக்குத் தெரியும், அவள் அடிபட்ட அந்தக்கணத்தில், அவன் உயிர் துடிக்க, வலியோடு ஓடி வந்ததை அவள் பார்க்கத்தானே செய்தாள். சட்டென்று தன்னை சுதாகரித்துக் கொண்டவள், தந்தையின் கரம் பற்றிக் கொண்டாள்.
மகளின் தலையை ஆசுவாசமாய் தடவியவர், "பயப்பிடாதை....கண்ணம்மா..ஒண்டும் இல்லையடா....." என்றார்.
பூவிழி சற்று ஒதுங்கிவிட மறு கரத்தைப் தன் இரு கைகளாலும் பற்றிக்கொண்ட இளஞ்செழியன், "ஒருநிமிசம் ஆடிப்போயிட்டன் தெரியுமாடி?" என்றான்.
'நல்லவேளையா, வானகனும் உன்ரநண்பிகளும்; உடனடியா கொண்டு வந்திட்டினம்,' என்றபடி பூவிழி வானகனைப் பார்க்க, அவசரமாய் மீண்டும் வானகனிடம் சென்று மீண்டது வண்ணமதியின் பார்வை.
மௌனத்தில் ஒரு காதல் உருகிக்கொண்டிருப்பது புரியாமல் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர் மற்றவர்கள்.
~ஓமோம்;..பூவிழியும் பயந்திட்டாள்...| என்ற பருதி வண்ணமதியைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
நல்லவேளையாக ஆபத்து எதுவும் இல்லாமல் வண்ணமதி விழித்துவிட்டதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி என்றால் வானகன் பெரிய மூச்சுகளை எடுத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.
இனியும் நின்றுகொண்டிருந்தால் மற்றவர்களுக்குச் சந்தேகம் வந்துவிடும் என்பதை உணர்ந்தவன்,
~சரி..நான் போயிற்றுவாறன்...| என்று புறப்பட்ட வானகனை ஏக்கமாகவே பார்த்தாள் வண்ணமதி.
அவனும் சிறுதலை அசைப்புடன் வெளியே வந்தான். தலையைக்கோதி நீண்ட பெருமூச்சை வெளிவிட்டவன், சற்றுத் தள்ளி நின்றிருந்த தனது ஈருருளியை எடுத்துக்கொண்டு வெளியே வரவும் அண்ணன் அழைக்கவும் சரியாக இருந்தது.
அண்ணாவுக்கும் அண்ணிக்குமாக பிரச்சினை எதுவும் இல்லை என்பதைச் சொல்லிவிட்டு புறப்பட்டான்.
காற்றைக் கிழித்தபடி அவனுடைய ஈருருளி சென்றுகொண்டிருந்தது.
நகர வீதியை நிறைத்து வாகனங்கள் வரிசை கட்டிச் சென்றுகொண்டிருந்தன. மாலை நேரம் என்பதால் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்வபர்கள் விரைந்துகொண்டிருந்தனர்.
அன்று மதியத்திலிருந்த அவனுக்குள் இருந்த பதற்றம் இப்போதுதான் முழுதாக மட்டுப்பட்டிருந்தது. வண்ணமதி மீது பந்து பட்ட கணத்தில் இருந்து அவன் பட்டபாடு அப்பப்பா...
அவள் மீது தனக்கு இவ்வளவு அன்பு இருக்கிறது என்பதே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது, துடித்துச் சுருண்ட அவளைக்கண்டதும் அவனுக்கு ஒருகணம் உயிரே போய்விட்டது போல ஆகிவிட்டதே.
சும்மா விளையாட்டாக அவள் மீது அன்பு உள்ளதென நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு இன்றைய சம்பவம் உச்சந்தலையில் அறைந்து சொல்லியிருந்தது அவள் மீதான நேசத்தை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------



அன்று இரவு வீடு, அமளிப்பட்டது.
நேரம் முன்னிரவு, மணி பதினொன்று அப்படி இருக்கும், பரமானந்தர் நடு இரவில் எழுந்து, பூவிழிக்கு அழைப்பு எடுக்க,
இவள், பதறிஅடித்து, அலைபேசியை எடுத்து,
~அப்பா...| என்றாள்.
~பூவிழி, நெஞ்சுக்குள்ள என்னவோ செய்யுதம்மா...ஒருக்கா வாறியே?| என்றார்.
பூவிழி பதற்றத்துடன், ஓடிச்சென்று, பரமானந்தரின் அறைக்குள் நுழைந்தாள்.
அவர் நெஞ்சு வலியில் துடித்துக்கொண்டிருந்தார்..
~அப்பா..கொஞ்சம் பொறுங்கோ..| என்றுவிட்டு, வெளியே செல்ல எத்தனிக்க, இவளது அவசர நடையில் விழித்துவிட்ட, இசைநிலா, பின்னாலேயே ஓடிவர,
ஓடிப்போய் இளஞ்செழியனை எழுப்புமாறு கூறினாள்.
அவனுடைய அறைக்கு ஓடிச்சென்ற இசைநிலா, ஒருமுறை கதவைத்தட்டவே ~என்ன ...| என்றபடி எழுந்து வந்தான், சைகை மொழியில்
~அப்பாவுக்கு ...,| எனக் கை அசைவுகளால் காட்டிவிட்டு,
சுடுநீர் எடுப்பதற்காக, சமையலறைக்கு விரைந்தாள்.
இவளது காலடிசச்த்தத்தில் விழித்துவிட்ட, பத்மினியம்மாவிடம் விசயத்தைச் சொல்லிவிட்டு, நீரைக் கொதிக்கவைத்து, அளவாக ஆற்றிக்கொண்டு ஓடிவர, பின்னாலேயே பத்மினியம்மாவும் விரைந்து நடந்துவந்தார்.
அதற்குள், நெஞ்சை நீவியபடி இருந்த பூவிழி,
~இளா, சுடுதண்ணியைக் குடுத்த பிறகு, வைத்தியசாலைக்கு கொண்டுபோவம்...| எனவும் அவனும் ஓடிச்சென்று உடைமாற்றி காரை ஆயத்தம் செய்தான்.
வண்ணமதியை அவசரமாக எழுப்பக்கூடாது என்பதால் விட்டுவிட்டு வந்த பூவிழி,
மெதுவாக வண்ணமதிக்கு விசயத்தைச்சொல்லுமாறு பத்மினியம்மாவிடம் சொல்ல, எதையும் உணரும் நிலையில் இல்லாதவராக, அதிர்ச்சியில் நின்றிருந்தார் அவர்.
கதவோடு ஒட்டியபடி ஒரு சிலையைப் போல நின்றுகொண்டிருந்தார் அவர்.
இசைநிலாதான்..
~தான் மெதுவாகச் சொல்லுவதாக| சைகையில் கூறிவிட்டு, அறைக்கு ஓடினாள்.
சிறிது நேரத்தில்..
~அப்பா..அப்பா....என்ன செய்யிது...அப்பா..| என்றபடி ஓடிவந்த சின்னமகளை வாஞ்சையுடன் பார்த்தவர்,
~ஒண்டும் இல்லை..நீ பயப்பிடாதையம்மா ..|என்றார்.
காரை எடுத்து ஆயத்தமாக விட்ட, இளஞ்செழியன் அண்ணனுக்கு அழைத்து விபரத்தைச் செல்லிவிட்டான்.
பதற்றமடைந்த பொற்செழியன், ~இளா, நான் உடனே வெளிக்கிடுற அலுவல் பாக்கிறன், ஏற்கனவே ஒரு கிழமையிலை வாறதுக்குத்தான் இருந்தனான், நீயும் பூவிழியுமா அப்பாவை வைத்தியசாலைக்கு கொண்டுபோங்கோ, ஒண்டும் பயப்பிடாதை, வண்ணமதியையும் கவனமாகப் பாத்துக்கொள், சின்னப்பிள்ளை, பயந்திடுவாள்...| என்ற அண்ணனிடம்,
~சரி..அண்ணா..நீங்கள் வாங்கோ..நான் மற்ற அலுவல்களைப் பாக்கிறன்...|என்றபடி அழைப்பைத் துண்டித்தான்.
வண்ணமதிக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தை சொல்லிவிட்டு, நிமிர்ந்த பரமானந்தர், சிலையென நின்ற பத்மினியம்மாவைப் பார்த்து, ஒருகணம் உடைந்து போனார். மற்றவர்கள் அறியாத வண்ணம் தலையை ஆட்டி சமாதானப்படுத்தினார்.
முதல் நாள், ~தான் சொன்ன வார்த்தைகள் தான், அவருக்கு உலையாகிவிட்டதோ| என்கிற தவிப்பில் நின்றுகொண்டிருந்தவருக்கு, பரமானந்தரின் தலை அசைப்பு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.
பூவிழியும் இதைக் கவனிக்கத் தவறவில்லை.
வயது கடந்தால் என்ன,....அன்பு என்பது குறைந்துபோகிற ஒன்றா...என எண்ணியபடி, கொண்டு செல்ல வேண்டிய மருத்துவ குறிப்புகளை எடுத்துவைத்தாள்.
வண்ணமதியும் இசைநிலாவுமாக ஏனைய பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தனர். அறை வாசலில் நின்றுகொண்டிருந்த பத்மினியம்மா அவரையே பார்த்தபடி நின்றுகொண்டிருக்க, விரைந்து நடந்துவந்த இளஞ்செழியன்,
~பத்மினியம்மா...விலத்துங்கோ..ஏன் அப்பிடியே நின்னிறியள்?| என்றபடி உள்ளே வந்து, தகப்பனாரை தன் இரு கைகளாலும் பற்றித் தூக்கினான்.
~பூவிழி, நீங்கள் வாங்கோ...| என்றவன், திரும்பிப் பார்த்தான். இசைநிலாவும் வண்ணமதியும் அருகருகே நின்றுகொண்டிருந்தனர். தங்கையிடம் ~ஒண்டும் இல்லை..இப்ப வந்திடுவம்...பத்மினியம்மாவோடை கவனமாக இருங்கோ| என்றான் பொதுவாக.
தானும் செல்லவேண்டும் என்ற பதற்றத்தில் நின்றுகொண்டிருந்த பத்மினியம்மாவால் எதுவும் சொல்லமுடியவில்லை, மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் நிற்பது போல இருந்தது அவரது நிலை. கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. தன் இயலாமையை நொந்தபடி நின்றவரைக், கண்ட பூவிழிக்கு மனதில் சுரீலென்று ஒரு துயரம் உண்டானது,
உடனே இளஞ்செழியனிடம், ~இளா, பத்மினியம்மாவும் கூட வரட்டும், உனக்கு கூடமாட உதவியாக இருக்கும்,| என்றாள்.
~மதிக்குட்டியும் இசைசநிலாவின் பக்கமாக கையைச் சுட்டிக்காட்டி, இவங்களும் தனிய ...| என்றான்.
~அதுதான்...தோட்டக்கார அண்ணாவுக்குச் சொன்னால் அவவைக் கூட்டிவந்து விடுவார்,| என்றாள்.
உடனே வண்ணமதி, ~நாங்களும் வாறம் அண்ணா...| என்றாள்.
சரி என்றுவிட்டு, தோட்டம் பராமரிக்கிற அண்ணனிடம் விபரத்தைச் சொல்லி, வீட்டைப்பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, எல்லோருமாகப் புறப்பட்டனர்.
நெஞ்சுவலி சிறிது தணிந்திருந்ததில் பரமானந்தர் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்திருந்தார்.
அருகில் பூவிழியும் வண்ணமதியும் இருக்க, பின்னால் இருந்த இருக்கைகளில் பத்மினியம்மாவும் இசைநிலாவும் அமர்ந்திருந்தனர்.
பூவிழிக்கு பத்மினியம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் சங்கடமாக இருந்தது. பரமானந்தம் ஐயாவும் பத்மினியம்மாவும் எவ்வளவு அருகில் இருந்தும் கூட மனதால் இருவரும் எவ்வளவு தூரம் தள்ளி வாழ்கின்றனர்...
முதுமையின் தேவை என்ன...அருகமர்ந்து தருகின்ற அரவணைப்பும் ஆறுதலும் தானே...ஒருவரை ஒருவர் அக்கறையாக கவனித்துக்கொள்வது தானே...
அதை அவர்கள் பகிர்ந்து கொள்வதை ஏன் தடுக்க வேண்டும்...ஒருவருக்கு ஒருவர், ஆறுதலாக வாழட்டுமே...
ஏதேதோ எண்ணங்கள் மனதை அலைக்கழிக்க, யோசனையோடு அமர்ந்திருந்தவளைப் பார்த்த, வண்ணமதி,
பூவிழியம்மா....என்ன ஒரே யோசனையா இருக்கிறீங்கள்...அப்பாவுக்கு, ஏதாவது பிரச்சினையா...? என்று கேட்க,
~இல்லை....இல்லையடா...நான் சும்மாதான்....| என்றாள்.
கார் அளவான வேகத்தில் சென்றுகொண்டிருக்க, பரமானந்தரின் மனமோ, கடந்த சில நினைவுகளை அசைபோடத் தொடங்கியது.
படிப்பு, நல்ல எதிர்காலம், சிறந்த ஆசானாக அதிக மாணவர்களை உருவாக்கவேண்டும் என்கிற தாகங்களைக் கடந்து அவரது மனதில் மிக ஆழமாகப் பதிந்த விடயம் பத்மினியம்மாவின் மீதான காதல் தான்.
பூண்டுலோயா என்ற இடத்துக்கு அவர் அதிபராக நியமனம் பெற்றுச் சென்றபோது அந்த இடம் மிகப் பின்தங்கிய இடமாமாக இருந்தது. ஒரு தனி ஆணாக அரசாங்கம் தந்த விடுதியில் அவர் வாழ்ந்த போது, சமையல், சாப்பாடு என்பவை அவருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது.
இரண்டு மூன்று மாதங்களாக, ஏதோ தனக்குத் தெரிந்தவரையில் சமைத்து உண்டு வந்தார். ஆனால் உணவில் எந்தச் சுவையும் இருக்காது, அவர் எப்போதுதே சாப்பாட்டை பெரிய வசியமாக எதிர்பார்ப்பவரில்லை என்பதாலும் ஏதோ கிடைத்ததை சாப்பிடுகிற பழக்கம் உள்ளவர் என்பதாலும் அது பெரிய பிரச்சினையாகவும் அவருக்கு இருக்கவில்லை.
காரணம் அவர் அவரது பெற்றோருக்கு வளர்ப்பு மகன், அவரை வளர்த்தவர்களின் அன்பைக் குறைவாகவும் அதிகாரத்தை அதிகமாகவும் பார்த்து வளர்ந்தவர் அவர். அவர்களின் பேச்சுக்கு என்றுமே அவர் எதிர்ப்பேச்சு சொன்னது கிடையாது,
அநாதையான தன்னை அவர்கள் எடுத்து வளர்த்து, கல்வி அறிவு புகட்டி சமூகத்தில் உயரிய மதிப்புடன் வாழ ஆவன செய்ததே பெரிய விடயம் என நினைத்தார். அதற்காக அவர்களுக்காக, தான் எதுவும் செய்யலாம் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது.
அப்படியே நகர்ந்த அவருடையள வாழ்வில், கீழ் லயத்தில் இருந்த பத்மினி தென்பட்டு, மனதில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டதை இப்போது நினைத்தாலும் அவரது மனதில் சிறு கிளர்ச்சி ஏற்படுவதுண்டு.
துறுதுறுவென்று, இறக்கை கட்டிய சக்கரம் போல, அவள் சுழன்றுகொண்டு வேலைகளைப் பார்ப்பதை இவர் காண்பதுண்டு.
சௌந்தர்ய தேவதை ஒன்று, ஏழ்மைக்கோலம் கொண்டுவிட்டது போல இருக்கும் அந்த தோற்றத்தில் அவர், சில நேரங்களில் கிறங்கிப்போய் நிற்பதும் உண்டு.
ஒருநாள், அவர், கடுமையான காய்ச்சலோடு பாடசாலைக்குச் சென்றுவிட்டு, இயலாத நிலையில் வீட்டுக்குத்திரும்பிக்கொண்டிருந்தார்.
வீட்டுக்கு அருகில், பத்மினி வீட்டுக்கு நேரே வந்த போது அவரையறியாமலே மயக்கம் போட்டு விழுந்துவிட,
வெளியே வந்து எட்டிப்பார்த்த, பத்மினியின் தகப்பனார், ஓடிவந்து தூக்கியதோடு, அருகில் இருந்த லயத்துக்காரரையும் கூப்பிட்டு, இருவருமாகத்தான், பரமானந்தரை அவரது வசிப்பிடத்தில் சேர்த்தனர்.
மளமளவென்று அவருக்கு தண்ணீரால் முகம் கழுவி, எழுந்து அமரவைத்துவிட்டு, மனைவியிடம் சொல்லி ஏதோ கசாயம் காய்ச்சி எடுத்து வந்து குடிக்க கொடுத்து, காய்ச்சிலைத் தணியச் செய்ததில் ஆரம்பித்த பழக்கம், பத்மினியின் அப்பா பழனியாண்டியை அப்பப்ப பரமானந்தர் வீட்டுக்கு வந்து கதைத்துக்கொண்டிருக்குமளவிற்கு நல்ல உறவாவைக் கொடுத்தது.
கதையோடு கதையாக சமையல் பற்றிய பேச்சும் வர, பரமானந்தர் தனது ஆதங்கத்தைச் சொல்லி, யாராவது ஒருவரை சமைத்து தருவதற்கு கேட்க, மகள் பத்மினி நன்றாகச் சமைப்பாள் எனவும் அவளை அனுப்பி வைப்பதாகவும் பத்மினியின் தகப்பனார் சொன்னதும் முதலில் பரமானந்தர் மறுத்துவிட்டார்.
ஆனால் மகள் சமைத்து தருவாள் என்றும், எங்கட பள்ளிக்கூடத்துக்கு வந்திருக்கிற சாமி நீங்கள், உங்களை நல்லா பாத்துக்க வெண்டிய பொறுப்பு இந்த இடத்து மக்களான எங்களுக்கு இருக்கு என்று கூறியதோடு நில்லாமல், நில பெற்றோரையும் உடன் அழைத்து வந்து கதைத்து அவரைச் சம்மதிக்கவைத்திருந்தனர்.
எந்த விதமான கபடமோ சூதுவாதோ தெரியாத வெள்ளந்தியான மனம் கொண்ட அந்த மக்களின் அன்பில் பரமானந்தர் நெகிழ்ந்து போனார்.
அதிகாலையில் தோட்டவேலைக்குப் போகமுன்னர் வந்து சமைத்துவைத்துவிட்டுச் செல்லும் பத்மினி, பிறகு மாலையில் வந்து இரவு உணவைச் சமைத்துவைப்பார்.
அருகில் அவரைப் பார்க்கப்பார்க்க, மனதில் பொத்திவைத்திருந்த காதல் இவருக்கு கிளைவிடத்தொடங்கியது, அது மெல்ல மெல்ல, நகர்ந்து பத்மினியின் மனதிலும் படந்து பற்றிக்கொள்ள, காலைகளையும் மாலைகளையும் மிக ஆவலாக எதிர்பார்க்கத்தொடங்கினர் இருவரும்.
அந்தக் காதல், அதன் நேசிப்பு, இருவருக்குள்ளும் நெருக்கத்தை அதிகரிக்க, பத்மினியின் பெற்றோரிடம் பரமானந்தரே விபரத்தைச் சொல்லிவிட, மகளை மாபெரும் அதிஷ்டக்காரியாக எண்ணியது அந்தக் குடும்பம், இருவருக்குமான காதல், ஒரு வீட்டினரின் சம்மதம், இவை அவர்களுக்கான தழைகளை அறுத்துவிட்டதால், மகிழ்ச்சியாக காதல் கடலில் மூழ்கியிருந்தனர் இருவரும். பரமானந்தர் இட்ட நெற்றித்திலகத்தையும், அவருடைய உழைப்பில் சிறுகச்சிறுக அவர் சேர்த்த காசில் வாங்கித்தந்த காதுத் தோட்டையுமே திருமண அத்தாட்சியாக ஏற்றுக்கொண்டு, பத்மினியும் கூடலுக்கும் களிப்புக்கும் இடம் தந்தார்.
கடிதப்போக்குவரத்து கூட மிகவும் கடினமாக இருந்த அக்காலத்தில் தன்னுடைய விருப்பம் பற்றிய விரிவான கடிதம் ஒன்றை அனுப்பிவிட்டு, தன்னுடைய பணிகளிலும் திருமணம் பற்றிய எதிர்பார்ப்பிலும் இருந்த பரமானந்தரை, வீட்டிலிருந்து திடீரென வந்த தந்தி, அரக்கப்பரக்க, சொந்த ஊருக்கு வரவைத்தது.
ஊரில், அவரை வளர்த்த தாயாரின் அண்ணன் மகளான, சூரியாதேவியை அவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.
தான் அங்கு ஒரு திருமண வாழ்க்கையை வாழ்ந்த கதையை எடுத்துக்கூறி, தன்னால் அவளை ஏமாற்ற முடியாது என்பதையும் கூறிவிட்டு, அவர்களின் பகையையும் ஏற்றுக்கொண்டு சென்றவரின் கண்ணில் பட்ட காட்சி, மண்சரிவில் தொலைந்து போன அந்த லயத்துக்குடியிருப்புத்தான்.
கைவிட்டுப்போன காதலும் ஓரிருநாள் இனிமை தந்த கூடலின் நினைவும் அவரை வெறும் கூடாக்கியிருந்தது. அழுதழுது கண்ணிர் வற்றிய கண்களுடன் அதே ஊரில் நிலைத்திருக்க விரும்பாமல், தவித்தவர், பாடசாலை மாற்றமும் வந்துவிட, மீண்டும் ஊருக்கே வந்தார். இரண்டு ஊர் தள்ளியிருந்த நகரப்பாடசாலை ஒன்றில் பண்யேற்றவர், அங்கேயே விடுதியில் தங்கிவிட, வேண்டாம் என்று சபித்த வளர்ப்புப் பெற்றோர், வீட்டுக்கு வாவென்று அழைக்க, முதுமையில் தளர்ந்திருந்தவர்களின் நிலையை எண்ணி, தன்னை வளர்த்த நன்றியை மனதில் நினைத்து கோபத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.
மெல்ல மெல்ல அவருடைய சம்மதமே இல்லாமல் அவருக்கான திருமணம் ஒப்பாகிவிட்டது. காலத்தின் கையில் விட்டுவிட்டு தன் கடமையே கண்ணாக அவரும் வாழத்தொடங்கிவிட்டார்.
மனநோயாளியான சூரியாதேவி, குழந்தை பெறுவதற்கான தகுதியும் அற்றவர் என்பதை தெரிந்துகொண்டேதான் திருமணமும் செய்திருந்தார்.
மனைவியாக வந்த அன்றே, அவருக்கு இருந்த மனநிலை பற்றி புரிந்துகொண்டுவிட்டதால், தன்னுடைய இல்லறவாழ்க்கை பற்றிய வெறுமையை ஒரு வகையில் மனத்திருப்தியோடு தான் ஏற்றுக்கொண்டார்.
பிடித்தமில்லாத மனைவியாக வந்து சேர்ந்த சூர்யாதேவி, அவரோடு இசைந்தோ இணைந்தோ வாழவில்லை என்பது பலருக்குத் தெரியாது.
பத்மினி மீதான காதலும் அவருடனான பந்தமும் அவர்கள் இருவரும் கூடிக்களித்த நினைவுகளுமே அவரது வாழ்நாட்களை நகர்த்தியது என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.


 
Top Bottom