• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகுடம் சூட்டும் காதல் - 14(முடிவு)

அத்தியாயம் - 14



அர்ஜுன் தன் மேஜை மீது இருந்த சில ஆய்வகக் குறிப்புகளைப் பார்த்துக் கொண்டு, லேப் ரிப்போர்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

அவனது நெஞ்சுக்குள் சுபத்ரா தன்னிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்ற அந்த மௌனத்தின் ரணம் குடைந்து கொண்டிருந்தது.

சட்டென, அந்த ஆய்வகத்தின் கனமான கதவைத் திறந்து கொண்டு கம்பீரமாக உள்ளே நுழைந்தான் கர்ணன்.

அவனது கைகளில் ஒரு பெரிய கறுப்பு நிறத் தடிமனான கோப்பு இருந்தது. அவனது அண்ணன் விஸ்வநாதன் மீது இருந்த அந்த கண்மூடித்தனமான விசுவாசத்தை அவன் முற்றிலும் கழற்றி எறிந்துவிட்டு, ஒரு புதிய மனிதனாக அங்கே வந்து நின்றான்.

அர்ஜுன் அதிர்ச்சியுடன் நாற்காலியை விட்டு எழுந்து நின்றான். "கர்ணா நீங்க என்ன இங்க.?" என்று வியப்போடு கேட்டான்.

கர்ணன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல், நேராக அர்ஜுனின் மேஜை முன்னால் வந்து, தன் கைகளில் இருந்த அந்த இரகசியக் கோப்பை ஓங்கி மேஜை மீது வைத்தான்.

"அர்ஜுன்.. அன்னைக்கு நீ சொன்னதை கேட்டே நான் எவ்ளோ தப்பு பண்ணிருக்கேனு புரிஞ்சுருச்சு.. என் அண்ணன் விஸ்வநாதன் எனக்குத் தெய்வம்னு நினைச்சேன்.. ஆனா, அவரோட அந்தப் புது கெமிக்கல் ஃபேக்டரி இந்த நெல்வயல் கிராமத்து ஜனங்களோட வாரிசுகளையே அழிச்சு, அவங்களுக்குத் தீவிரமான மலட்டுத்தன்மை பாதிப்பை ஏற்படுத்துதுன்ற அந்தப் பாவத்தை என் மனசாட்சியால சகிச்சுக்கவே முடியல..

என் குழந்தையையே அது என் குழந்தை இல்லைனு சொன்னா நானு அதுக்கு பிரயசித்தமா இதைய பண்றேன்.." என்றான்.

அர்ஜுன் அந்த கோப்பைத் திறந்து பார்த்தான். அவனது விழிகள் ஆச்சரியத்தில் அகல விரிந்தன..

"கர்ணா இது... இது ஃபேக்டரியோட அசல் டாக்குமெண்ட்ஸ்.." என்று அர்ஜுன் வியந்து கத்தினான்.

"ஆமா அர்ஜுன்.. வெறும் தண்ணி, மண் சாம்பிளை வச்சு மட்டும் விஸ்வநாதனைச் சட்டத்தின் முன்னாடி முடக்க முடியாதுனு எனக்குத் தெரியும்.. அதனால தான், விஸ்வநாதனுக்கே தெரியாம அவனோட ரகசிய லாக்கரை உடைச்சு, அந்த ஆலைல நடக்கற தவறுக்கான அத்தனை ஒரிஜினல் ஆதாரங்களையும் உன்கிட்ட கொண்டு வந்து கொடுத்துருக்கேன்..

இந்தக் கோப்புல... அவங்க எந்தெந்த ஆபத்தான ரசாயனங்களை பூமிக்குள்ள இறக்குறாங்கன்ற கவர்ன்மெண்ட் தடை செஞ்ச கெமிக்கல் விபரங்களும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அவங்க கொடுத்த போலி லஞ்சப் பணப் பரிவர்த்தனைப் பட்டியலும் அப்பட்டமாக இருக்கு..

கோர்ட்லயோ இல்ல மக்கள் முன்னாடியோ இந்த ஒரு கோப்பைக் காட்டினா... விஸ்வநாதனோட அந்தப் பாவத் தொழிற்சாலையை அடுத்த நிமிஷமே சீல் வச்சு மூடலாம்.. அவருக்கு ஆயுள் தண்டனை நிச்சயம்.." என்று கர்ணன் தெளிவாக கூறினான்.

அர்ஜுன் உணர்ச்சிவசப்பட்டு கர்ணனின் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

"கர்ணா இப்போ நீங்க நிஜமான மகாபாரதக் கர்ணனை விட ஒரு படி மேல தர்மத்தின் சிங்கமா வந்து நிக்கிறீங்க.. இந்த ஆதாரங்கள் நம்ம நெல்வயல் மண்ணையும், என் அக்கா விருசாலியோட கௌரவத்தையும் காப்பாத்திடுச்சு.."என்று நெஞ்சாரக் கூறினான்.

அப்போது ஆய்வகத்தின் வாயிலில் வந்து நின்ற சுபத்ராவின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. இந்த ஊர் ஜனங்களின் நீதிக்காகத் திரட்டிய இந்த அசைக்க முடியாத ஆதாரங்களைக் கண்டபோது.அவளது அத்தனை மௌனமும் உடைந்து சிதறியது.

ஆய்வகத்தின் மேஜை மீது கர்ணன் கொண்டு வந்து வைத்த அந்த அசைக்க முடியாத ஆதாரக் கோப்புகள் விஸ்வநாதனின் வீழ்ச்சியை அப்பட்டமாக உறுதி செய்திருந்தன.

கர்ணனும் அர்ஜுனும் ஒருவரையொருவர் பார்த்துத் தங்களின் தார்மீக வெற்றியைப் புன்னகையோடு பகிர்ந்து கொள்ள, கர்ணன் மெதுவாக அங்கிருந்து வெளியேறித் தன் அடுத்த சட்ட நகர்வுகளுக்காகப் புறப்பட்டான்.

இப்போது அந்த அறிவியல் ஆய்வகத்திற்குள் அர்ஜுனும், வாயிலில் கண்ணீரோடு நின்று கொண்டிருந்த சுபத்ராவும் மட்டும்தான் தனியாக நின்றிருந்தனர்.

ஜன்னல் வழியே நுழைந்த மாலை நேரத்து இளஞ்சூட்டுக் கதிர்கள், அங்கிருந்த கண்ணாடிப் புட்டிகளின் மீது பட்டுப் பளபளத்தன.

சுபத்ரா இன்னும் தன் கையில் இருந்த ஆங்கிலப் புத்தகங்களை நெஞ்சோடு அணைத்தபடி, காலையில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும், அதற்கு அர்ஜுன் ஒரு அரணாக நின்றதையும் நினைத்து மௌனமாக அழுது கொண்டிருந்தாள்.

அவளது அந்தப் பாராமுகமும், கசப்பான மௌனமும் அர்ஜுனின் நெஞ்சைத் துளைத்தது.

அர்ஜுன் மெதுவாக அவளருகே நடந்து வந்தான். அவளது கண்களை நேராக நோக்கினான்.

"சுபா... இன்னும் எத்தனை நாளைக்கு என்கிட்ட பேசாம முகத்தைத் திருப்பிக்கிட்டுப் போகப் போறீங்க.?" என்று அர்ஜுன் கேட்டான்.

"காலையில ஊர் ஜனங்க தப்பா பேசினாங்கனு நீங்க இன்னும் உடைஞ்சு போய் நிக்கிறீங்களா.? இந்த உலகம் எப்பவுமே அப்படித்தான் சுபா..

நாம செய்யாத தப்புக்கு அது பழியைக் கொடுக்கும்.. ஆனா அதுக்காக நாம தர்மத்தை விட்டுட முடியுமா.?"

சுபத்ரா கண்ணீரின் ஊடே அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஆனாலும் அவளது உதடுகள் இன்னும் மௌனமாகவே இருந்தன.

அர்ஜுன் லேசாகப் புன்னகைத்து, ஆய்வக மேஜையின் மீது சாய்ந்து கொண்டு, சுபத்ராவிடம் "சுபா நீங்க ஒரு ஆங்கில ஆசிரியை.. உங்களுக்கு மகாபாரதம் பத்தி எந்த அளவுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியல.. ஆனா, அந்தப் புராணக் கதையில என்னோட பேருக்கு ஒரு பெரிய அர்த்தம் இருக்கு சுபா.." என்றான் அர்ஜுன் தன் குரலில் ஒரு புதிய நெருக்கத்தைக் கூட்டி.

"அன்னைக்கு மகாபாரதத்துல வாழ்ந்தானே அர்ஜுனன்...அவன் உலகத்திலேயே ஆகச் சிறந்த வில்வித்தைக்காரன்.. அவனோட அம்பு எப்பவுமே இலக்கைத் தவறாது.. அப்படிப்பட்ட அந்த மாவீரன் அர்ஜுனன்... தன் வாழ்க்கையில காதலிச்சு, கரம் பிடிச்ச அவனோட மனசுக்கு பிடிச்ச மனைவியோட பேர் என்ன தெரியுமா.? அவங்க பேர் தான் சுபத்ரா.." என்று அர்ஜுன் பெயர் பொருத்தத்தை கூறினான்.

சுபத்ராவின் இதயம் அந்த ஒரு நொடியில் பலமாகத் துடித்தது. அவளது அழுகை நின்று, கண்கள் ஆச்சரியத்தில் அர்ஜுனையே உற்று நோக்கின.

"அன்னைக்கு மகாபாரத அர்ஜுனன்... கிருஷ்ணரோட ஆசியோட, அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டித் தன் சுபத்ராவைத் தேடிப் போய்க் கரம் பிடிச்சான்..

இன்னைக்கு அதே மகாபாரதக் காவியம் இந்த நெல்வயல் மண்ணுலயும் நடக்குது சுபத்ரா...இந்த விஸ்வநாதனோட அக்கிரமத்தை ஒழிக்க வந்த இந்த நவீன அர்ஜுனனுக்கு... அவனோட இலக்கைக் காட்டினதே உங்களோட இந்த எளிய, தூய்மையான அன்பு தான்..

இந்த ஊர் ஜனங்க நம்மள தப்பா பேசினா எனக்குக் கவலையே இல்லை.. ஏன்னா... இந்த அர்ஜுனோட இதயம் அன்னைக்கே உங்ககிட்ட தோத்துப் போச்சு.. இந்த உலகமே நமக்கு எதிரா நின்னாலும் உங்களுக்கு அரணா நான் எப்பவும் நிற்பேன்..

என் அக்கா விருசாலியோட ஆசியோட, உங்க அப்பாவோட சம்மதம் வாங்கி உங்களைய என் மனைவியா இந்தக் கிராமத்து ஜனங்களுக்கு முன்னாடி கம்பீரமாக் கரம் பிடிக்க நான் தயாரா இருக்கேன்.. இப்போ சொல்லுங்க... இந்த அர்ஜுனனை நீங்க ஏத்துக்குவீங்களா.?" என்று நெஞ்சாரத் தன் காதலைச் சொன்னான்.

அர்ஜுன் சொன்ன அந்த மகாபாரதக் காதல் பொருத்தமும், அவனது கண்களில் தெரிந்த அந்த உண்மையான பாசமும் சுபத்ராவின் நெஞ்சுக்குள் இருந்த அத்தனை மௌனச் சுவர்களையும் ஒரு நொடியில் அடியோடு சுக்குநூறாக உடைத்துப் போட்டது.

அவளது அவமானத்தின் ரணங்கள் எல்லாம் மறைந்து, அவளது முகம் முழுவதும் ஒரு அசாத்தியமான வெட்கப் புன்னகை அரும்பியது.

அவள் தன் கையில் இருந்த புத்தகங்களை மேஜை மீது வைத்துவிட்டு, தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, வெட்கத்துடன் தரையைப் பார்த்தாள்.

"போங்க அர்ஜூன்.." என்று அவனிடம் கூறி விட்டு சென்றவளின் முகத்தில் அத்தனை வெக்கம் குடி கொண்டிருந்தது.

நெல்வயல் கிராமத்தின் ஆலைக்கழிவு ரகசியங்கள் மற்றும் மருத்துவ ஆதாரங்கள் அனைத்தும் அர்ஜுனின் தீவிர முயற்சியால் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியிருந்தன.

தன் நச்சுத் தொழிற்சாலையின் கொடூரமான உண்மைகள் அம்பலமாகிவிட்டதை உணர்ந்த விஸ்வநாதன், பதற்றத்தின் உச்சத்துக்கே சென்றார்.

அவரது முதலமைச்சர் நாற்காலி கனவும், ஒட்டுமொத்த அரசியல் கௌரவமும் ஒரு நொடியில் சுக்குநூறாகப் போகிறது என்பதை அவர் உணர்ந்தார்.

நெல்வயல் கிராமத்து பங்களாவின் தனி அறையில் கர்ணன் ஜன்னல் வழியே வெளியே தெரிந்த வயல்வெளிகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவனது மனதுக்குள் அர்ஜுன் பொறுமையாகச் சொன்ன அந்த மலட்டுத்தன்மை பாதிப்புகள் குறித்த உண்மைகள் ரணமாகக் கசிந்து கொண்டிருந்தன.

அப்போது விஸ்வநாதன் அறையினுள் புயலென நுழைந்தார். அவரது முகம் பயத்திலும் ஆத்திரத்திலும் கறுத்துப் போயிருந்தது.

எப்போதும் இருக்கும் அந்தத் திமிரான தோரணை மறைந்து, ஒரு நரியின் வஞ்சகத்தோடு கர்ணனின் அருகே வந்து அவனது கைகளைப் பற்றிக் கொண்டான்.

"கர்ணா... நம்ம ஃபேக்டரி கழிவு நீர் ரகசியம் வெளிய தெரிஞ்சு போச்சுடா.. அந்தத் தலைவரோட மகன் அர்ஜுன் எல்லா ஆதாரத்தையும் திரட்டிட்டான்.. சட்டம் நம்ம கழுத்தை நெரிக்குதுடா. நம்ம குடும்பக் கௌரவமும், என் அரசியல் வாழ்க்கையும் இப்போ உன் கைல தான் இருக்கு" என்று விஸ்வநாதன் போலியாகக் கண்ணீர் வடித்தார்.

கர்ணன் எந்தவொரு சலனமும் இல்லாமல் அவரது முகத்தையே உற்றுப் பார்த்தான்.
விஸ்வநாதன் அவனது மௌனத்தைக் கண்டு அவசரமாகப் பேசினான்.

"கஞ்சா கேஸை உன் தலைமேல ஏத்திக்கிட்டு ஜாமீன்ல வந்த மாதிரி... இப்போ இந்த ஃபேக்டரி அக்கிரம வழக்குகளையும் நீயேதான் செஞ்சேனு போலீஸ்லயும் கோர்ட்லயும் ஒத்துக்கோடா கர்ணா..

விஸ்வநாதனுக்கு எதுவும் தெரியாது, மேலாளரா நான்தான் லாபத்துக்காகக் கழிவு நீரை பூமிக்குள்ள இறக்கினேனு நீ ஒரு வார்த்தை சொல்லிட்டா என் நாற்காலி தப்பிச்சிடும்டா.. உன்னைய எப்படியும் நான் பெரிய வக்கீலை வச்சு வெளிய கூட்டிட்டு வந்துடுறேன்டா..

எனக்காக இந்த ஒரு பலியை மட்டும் ஏத்துக்கோடா தம்பி!" என்று கெஞ்சினார்

கர்ணன் மெதுவாகத் தன் கைகளை விஸ்வநாதனின் பிடியிலிருந்து உதறினான். அவனது முகத்தில் இப்போ ஒரு அசாத்தியமான தீர்க்கம் இருந்தது.

இத்தனை காலம் அவனது கண்களை மறைத்திருந்த அந்த அதிபயங்கரமான கண்மூடித்தனமான விசுவாசம் இப்போது அவனது நெஞ்சில் இருந்து முற்றிலும் கழன்று கீழே விழுந்தது.

"முடியாது விஸ்வநாதன்.. இனிமேல் உன்னோட எந்தப் பாவத்துக்கும் இந்தக் கர்ணன் கவசமா வந்து நிக்க மாட்டான்..!" என்று கர்ணன் தன் கம்பீரமான குரலில் கர்ஜித்தான்.

முதன்முறையாக அவன் விஸ்வநாதனை 'அண்ணே' என்று அழைக்காமல் அவனது பெயரைச் சொல்லி விளித்தான்.

"என்னடா என்னைய எதிர்த்துப் பேசுறீயா? அநாதையா நின்ன உன்னைத் தூக்கி வளர்த்த நன்றிக் கடனை மறந்துட்டியாடா.?" என்று விஸ்வநாதன் ஆத்திரத்தில் தன் அசல் நரி முகத்தைக் காட்டித் திமிராகக் கத்தினான்.

கர்ணன் சத்தமாக, எள்ளலாகச் சிரித்து "நன்றிக்கடனா.? நீ என்னைய அனாதைப் பயலே... நன்றிக்கடனைத் தீர்க்கிறானு சொன்ன ஒவ்வொரு வக்கிரமான வார்த்தையையும் நான் என் சொந்தக் காதால கேட்டவன்..

என் உழைப்பையும் விசுவாசத்தையும் உன்னோட சுயநலத்துக்காக இத்தனை காலமாச் சுரண்டுனது பத்தாதுனு... இப்போ என் சொந்த ஊர் நெல்வயல் கிராமத்து ஜனங்களோட வாரிசுகளையே மலடாக்குற இந்த மகா பாவத்துக்கும் என்னை வக்காலத்து வாங்கச் சொல்றீயா.?"என்று விரல் நீட்டி எச்சரித்தான்.

"விசுவாசக் கவசத்தைப் போட்டுக்கிட்டு அநீதிக்குத் துணையா நின்ன மகாபாரதக் கர்ணன் அன்னைக்கே செத்துட்டான்டா.. இன்னைக்கு உன் முன்னாடி நிக்கிறது தர்மத்தோட சாட்சியா நிக்கிற புதிய கர்ணன்!

சென்னை மீடியாவுக்கு முன்னாடி நின்னு, 'விருசாலி வயித்துல வளர்றது என் குழந்தை இல்லைனு உன்னோட அந்த வஞ்சகப் பேச்சுக்காக என் சொந்த வாரிசையே நான் அசிங்கப்படுத்திட்டு நின்னேன்.. ஆனா அந்த நிலையிலயும் எனக்காகச் சட்டப்படியா போராடி என்னை ஜாமீன்ல எடுத்தா என் பொண்டாட்டி விருசாலி..

இனிமேல் உன்னோட இந்தத் துரோக நாற்காலிக்காக என் வாழ்க்கையை நான் பலி கொடுக்க மாட்டேன்.. இனிமேல் என் வாழ்க்கையை என் பொண்டாட்டி விருசாலிக்காகவும்.. அவ வயித்துல வளர்ற என் பிள்ளைக்காகவும் மட்டும்தான் வாழ போறேன்..

அவங்களோட கௌரவத்தைக் காப்பாத்துறதுதான் இப்போ இந்த கர்ணனோட ஒரே தர்மக் கடமை.." என்று பதிலடி கொடுத்தான்.

இத்தனையையும் கேட்டு அமைதியாக நின்றிருந்த விருசாலி கர்ணனிடம் "போலாமா கர்ணா.?" என்று கேட்டு கையை நீட்ட, அண்ணனை ஒருமுறை பார்த்தவன் பெண்ணவளின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டான்.

"விஸ்வநாதன் உன்னோட கதி இன்னையோட முடிய போகுது.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு.." என்று அவருக்கும் சவால் விட்டு அவளின் கணவருடன் கிளம்பினாள்.

அவளுக்கு கர்ணனின் மீது கோவமில்லை.. வருத்தம் மட்டும் தான் இருந்தது. அதுவும் ஆலையின் அனைத்து டாக்குமெண்ட்ஸையும் எடுத்து வந்தது கர்ணன் தான் என்பதை அறிந்து அவனின் மீதான வருத்தம் சற்று குறைந்திருந்தது.

இவள் எங்கு சென்றாலும் இவளுக்கு பாதுகாவலனாக வந்து நிற்கும் அவளவனின் செயலில் பெண்ணவளின் மனதும் சற்று இறங்கி இருந்தது.

இப்போது கூட நெல்வயல் கிராமம் பரப்புரைக்காக தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.

நெல்வயல் கிராமத்தின் அதே பெரிய அரசமரத்தடி மைதானம் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு மிகப்பெரிய அரசியல் மற்றும் தார்மீகப் போர்க்களமாக மாறியிருந்தது.

சென்னையில் விஸ்வநாதனுக்குப் பேரடி கொடுத்து, அவனைக் கட்சியை விட்டுத் தூக்கியடித்த புதிய மாநிலத் தலைவி விருசாலி தன் தம்பி அர்ஜுன் திரட்டிய ஆதாரங்களுடன் நேராக நெல்வயல் கிராமத்திற்கு வந்து இறங்கினாள்.

அவளுக்கு பின்னால் கர்ணனும் நின்றான். அர்ஜூன் தான் "நீங்க அக்காவிடம் போங்க.. அவ கண்டிப்பா உங்களைய ஏத்துப்பா.." என்று கூறி அனுப்பி விட்டிருநதான்.

அவன் கூறியது போலவே கர்ணனை போக எல்லாம் சொல்லவில்லை. அவன் இருந்தால் இருக்கட்டும் என்று விட்டு விட்டாள். அதன் பிறகு அவள் எங்கு சென்றாலும் இவனும் அவளின் பாதுகாவலனாக செல்கிறான்.

ஒட்டுமொத்த நெல்வயல் கிராமத்து மக்களும், ஆயிரக்கணக்கான ஜனங்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். மேடையின் மையப்பகுதியில் ஒரு பிரம்மாண்டமான எல்இடி திரை அமைக்கப்பட்டிருந்தது.

விருசாலி மைக்ரோபோன் முன்னால் ஒரு பெண் சிங்கத்தைப் போலக் கம்பீரமாக வந்து நின்றாள். அவளது சாணக்கியக் கண்கள் கூட்டத்தில் இருந்த ஏழை எளிய மக்களை நோக்கின.

"என் அன்பு நெல்வயல் கிராமத்து ஜனங்களே..." என்று விருசாலி தன் குரலில் பேசத் தொடங்கினாள்.

"விஸ்வநாதன் இங்க ஒரு பெரிய கெமிக்கல் ஃபேக்டரி வச்சிருக்காரு.. அது ஆயிரக்கணக்கான பேருக்கு வாழ்வாதாரம் தருதுன்னு நீங்க எல்லாரும் நினைச்சுட்டு இருக்கீங்க.. ஆனா, அந்தச் சாத்தானோட அசல் கறுப்பு முகத்தை இப்போ இந்த மேடையில என் தம்பி அர்ஜுனும் நானும் உங்களுக்கு ஆதாரப்பூர்வமா நிரூபிக்கப் போறோம்.." என்றாள் தீர்க்கமாக.

அடுத்த நொடி அர்ஜுன் மேடைக்கு முன்னால் வந்து, லேப்டாப்பில் இருந்த கோப்புகளை எல்இடி திரையில் ஓட விட்டான்.

திரையில், அர்ஜுனும் சுபத்ராவும் நள்ளிரவில் ரவுடிகளிடம் மாட்டிக் கொண்டு அதிரடியாகத் தப்பியோடிய அந்த ஆபத்தான நள்ளிரவு வேட்டையின் போது எடுத்த வீடியோ காட்சிகள் அப்பட்டமாக ஓடின.

விஸ்வநாதனின் ஃபேக்டரி காம்பவுண்ட் சுவற்றுக்கு அப்பால், ஒரு பெரிய ரகசிய மதகின் வழியாக நச்சுக் கழிவு நீர் பூமிக்குள்ளே பீய்ச்சியடித்துப் பாயும் அந்த வீடியோ ஆதாரம் திரையில் தெரிந்ததும் ஒட்டுமொத்தக் கிராமமும் அதிர்ச்சியில் உறைந்து போனது.

"பாருங்க ஜனங்களே! இதோ உங்க கண் முன்னாடி தெரியுற இந்த ரகசிய ஆழ்குழாய் வழியாதான் அவங்க தங்களோட ஆபத்தான ரசாயனக் கழிவுகளை யாருக்கும் தெரியாம பூமிக்குள்ள ரகசியமா இறக்குறாங்க!" என்று அர்ஜுன் தன் கம்பீரமான குரலில்

மக்களுக்குப் பொறுமையாக விளக்கத் தொடங்கினான். "இந்த நச்சுத் தண்ணி உங்க நிலத்தடி நீர்லயும், கிணத்துத் தண்ணிலயும் முழுசா விஷமாகக் கலந்துடுச்சு. இந்தத் தண்ணியைக் குடிச்சுதான்... இந்த ஊர்ல இருக்குற எத்தனையோ புதுமணத் தம்பதிகளுக்கும், இளைஞர்களுக்கும் தீவிரமான மலட்டுத்தன்மை பாதிப்பு ஏற்படுது..

இங்க பல பேரோட குடும்பமும், இந்த ஊரோட விவசாய நிலமும் மலடாகப் போனதுக்கு இந்த விஸ்வநாதனோட பணவெறி தான் காரணம்!" என்று அர்ஜுன் உண்மையை உடைத்தான்.

கூட்டத்தின் நடுவே ஒரு பெரிய ஆவேசக் கூச்சல் எழுந்தது. "அடப்பாவி விஸ்வநாதன்! எங்க வாரிசுகளையே அழிக்கப் பார்த்துருக்கானே!" என்று பெண்கள் தலையில் அடித்துக் கொண்டு கதறினர்.

மறுபடியும் அர்ஜூனனே மேடைக்கு முன்னால் வந்து, விஸ்வநாதனின் லாக்கரை உடைத்துத் தான் எடுத்து வந்த அந்த ஒரிஜினல் ஆவணக் கோப்புகளை மக்களின் முன்னால் தூக்கிக் காட்டினான்.

"இதோ பாருங்க ஜனங்களே... வெறும் வீடியோ மட்டும் இல்லை! அவங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்குக் கொடுத்த போலி லஞ்சப் பணப் பரிவர்த்தனைப் பட்டியலும், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கெமிக்கல் விபரங்களும் அடங்கிய அசல் டாக்குமெண்ட்ஸ் இதோ என் கையில் இருக்கு! உங்களுக்காக விஸ்வநாதனோட அக்கிரமத்தை ஒழிக்க இந்த அர்ஜூன் இப்போ சாட்சியா நிக்கிறேன்.." என்று கூறினான்.

விஸ்வநாதனின் அத்தனை குற்றங்களும், அவனது கொடூரமான நரி முகமும் ஒட்டுமொத்த மக்கள் முன்னாடியும், ஊடகங்களுக்கு முன்னாடியும் அசைக்க முடியாத அறிவியல் ஆதாரங்களோடு விருசாலியும் அர்ஜுனும் பக்காவாக நிரூபித்துக் காட்டினர்.

அடுத்த சில நிமிடங்களில் சென்னை அதிரடிப் போலீஸ் படை, விஸ்வநாதனையும் அவனது மகன் ஆகாஷையும் கஞ்சா கேஸ் மற்றும் இந்தத் தேசவிரோத நச்சு நீர் ஆக்கிரமிப்பு வழக்குகளின் கீழ் அதிரடியாகக் கைது செய்து இழுத்துச் சென்றது.

விஸ்வநாதனின் ஒட்டுமொத்தப் பண பலமும், நாற்காலி வெறியும் மக்களின் தர்ம ஆவேசத்திற்கு முன்னால் சுக்குநூறாக உடைந்து சிதறி இருந்தது.

அதன் பிறகு விருசாலிக்கு பல கட்சிகள் நெருக்கடி குடுத்தாலும் பெண் சிங்கமாக தனித்து நின்று அனைவரையும் வேட்டையாடினாள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த நாடே ஆவலோடு காத்துக் கொண்டிருந்த வாக்கு எண்ணிக்கை நாள் அன்று விடிந்தது.

விஸ்வநாதனின் பண பலமும், அவனது நச்சுத் தொழிற்சாலையின் கொடூரமான உண்மைகளும் நீதிமன்றம் மற்றும் மக்கள் முன்னிலையில் அப்பட்டமாக அம்பலப்பட்டிருந்ததால், நெல்வயல் கிராமம் முதல் சென்னை வரை தர்மத்தின் அலை வீசியிருந்தது.

விஸ்வநாதனும் அவனது மகன் ஆகாஷும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் முடங்கியிருக்க, தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகத் தொடங்கின.

தொலைக்காட்சித் திரைகளில் பிரேக்கிங் நியூஸ் பிளாஷ் ஆகியது:

தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதிய தலைவி விருசாலியின் கட்சி பிரம்மாண்ட வெற்றி! வரலாறுகாணாத பேராதரவோடு புதிய ஆட்சியைப் பிடிக்கிறது தர்மத்தின் கூட்டணி!"

விருசாலி நடத்திய அந்த சாணக்கியத் தேர்தல் பரப்புரையும், அர்ஜுன், சுபத்ரா திரட்டிய அசைக்க முடியாத ஆதாரங்களும் மக்களின் பேராதரவாக மாறி, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிலும் அவர்களின் கட்சிக்கு ஒரு பிரம்மாண்டமான தேர்தல் வெற்றியை தேடித் தந்தது.

கட்சியின் தலைமை அலுவலகமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. லட்சக்கணக்கான தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

பிரம்மாண்டமான சட்டமன்றக் கூட்ட அரங்கில், புதிய அமைச்சரவையைத் தேர்ந்தெடுப்பதற்காக அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியின் தலைவரும் கூடியிருந்தனர்.

மேடையின் மையப்பகுதியில் இருந்த அந்தப் பெருமைமிகு முதலமைச்சர் நாற்காலியின் முன்னால் கம்பீரமாக வந்து நின்றாள் புதிய மாநிலத் தலைவி விருசாலி.

அவளது கறுப்பு நிறப் பட்டுப்புடவையும், நெற்றி வகுட்டு திலகமும், அவளது கருவறையில் வளர்ந்து கொண்டிருக்கும் புதிய உயிரின் சாட்சியும் அவளுக்கு ஒரு தனி தேவதையின் கம்பீரத்தைக் கொடுத்திருந்தது.

அனைவரும் விருசாலிதான் அந்த முதலமைச்சர் நாற்காலியில் அமரப் போகிறாள் என்று எதிர்பார்த்துப் பெருமையோடு கைதட்டினர்.

ஆனால், விருசாலி சாணக்கியத்தனமாகப் புன்னகைத்து, மைக்ரோபோன் முன்னால் வந்து நின்றாள்.

அவளது தீர்க்கமான சிங்கக் கண்கள், கூட்டத்தின் பின்வரிசையில் அமைதியாக நின்று கொண்டிருந்த தன் கணவன் கர்ணனை நோக்கித் திரும்பின.

"என் அன்பிற்குரிய வாரிசுகளே, நிர்வாகிகளே..." என்று விருசாலி ஆரம்பித்து "இந்த முதலமைச்சர் நாற்காலிங்கிறது ஒரு அதிகாரப் பகட்டு கிடையாது.. அது ஏழை எளிய மக்களோட வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குற ஒரு தார்மீகக் கடமை! இந்த நாற்காலியில உட்கார... இந்த நெல்வயல் மண்ணோட நீதிக்காகத் தன் சொந்த அண்ணனின் அக்கிரமங்களையே நெஞ்சார எதிர்த்து நின்ன ஒரு நேர்மையான சிங்கம் தான் தகுதியானவர்.. இதோ... நம்ம தமிழ்நாட்டோட புதிய முதலமைச்சராக என் கணவர் கர்ணனை நான் முன்மொழியுறேன்.." என்று அதிரடியாகப் பிரகடனம் செய்தாள்.

அரங்கமே அதிரும் வகையில் தொண்டர்களின் ஆரவாரம் இடிமுழக்கமாக வானைப் பிளந்தது.

கர்ணன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான். அவனது கண்கள் நெகிழ்ச்சியில் கலங்கின. விருசாலி மெதுவாக நடந்து வந்து, கர்ணனின் கைகளைப் பற்றிக் கொண்டு, அவனைக் கூட்டிச் சென்று அந்தப் பெருமைமிகு முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தாள்.

அவனை நாற்காலியில் அமர.வைத்து அவனது தோள்களைப் பற்றிக்கொண்டு, அவனது காதருகே மிகவும் அழுத்தமாக, உரிமையோடு கூறினாள்:

"கர்ணா... உங்க கண்மூடித்தனமான விசுவாசத்தை உடைச்சு, இப்போ நீங்க தர்மத்தின் சிங்கமா வந்து நிக்கிறீங்க.. அன்னைக்கு உங்க அண்ணன் விசுவாசத்துக்காக நீங்க எத்தனையோ பழிகளை ஏத்துக்கிட்டீங்க. ஆனா இன்னைக்கு... என் வயித்துல வளர்ற உங்க பிள்ளைக்காகவும், உங்க பொண்டாட்டி விருசாலிக்காகவும், இந்தத் தமிழ்நாட்டோட லட்சக்கணக்கான ஏழை ஜனங்களுக்காகவும்... இனி இங்க இருந்து நீங்க நல்லது செய்யுங்க கர்ணா.. இந்த நாற்காலி உங்க நேர்மைக்குக் கிடைச்ச ஆகப் பெரும் அங்கீகாரம்.. இது உங்க மனைவியோட அன்பு கட்டளை.. எனக்காக இதைய நீங்க செய்வீங்களா.?" என்று கேட்டாள்.

"என் பின்னாடி நீ இருப்பேனா கண்டிப்பா செய்வேன்.." என்று கர்ணனும் உரைத்திட, "எப்பவும் உங்க பின்னாடி...உங்களுக்காக இந்த விருசாலி இருப்பா கர்ணா.." என்று அவளும் வாக்களித்தாள்.

அதன் பிறகு கர்ணன் அந்த நாற்காலியில் அமர்ந்து, தன் மனைவி விருசாலியின் கைகளைத் நெஞ்சார பற்றிக் கொண்டு, தர்மத்தின் புதிய விடியலாகத் தமிழ்நாட்டை வழிநடத்தச் சபதம் எடுத்தான்.

மறுபுறம், நெல்வயல் கிராமத்து அரசுப் பள்ளியின் வேப்பமரத்தடி நிழலில்... தங்களின் அத்தனை அவமானங்களையும் துடைத்தெறிந்து, தர்மத்தின்
சாட்சியாக, கைகளைக் கோர்த்தபடி நின்றிருந்த அர்ஜுன் மற்றும் சுபத்ராவின் எளிய காதல் திருமணம் தலைவரின் ஆசியோடு அங்கே இனிதே நிறைவடைந்தது.

பெண்ணவளின் காதல் அவளின் கணவனுக்குரிய மகுடத்தை அவனுக்கே சூட்டி விட்டது.



முற்றும்..
 
Last edited:
Top Bottom