• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரனின் மதிவதனியிவள் - 13

நிதனிபிரபு

Administrator
Staff member
மகேந்திரனின் மதிவதனியிவள் - 13


மகேந்திர ராஜன் தம் அத்தை மகளைக் காண்பதற்காக மலர்வனத்திற்கு வருகைப் புரிந்திருந்தான்...



தாம் வந்த வேளையில் அங்கு அவளைக் காணாது வான்மதியிடம் விசாரிக்க, அவள் கூறிய தகவல்களை வைத்து கானகத்திற்குத் தேடி வந்தவனின் விழிகளில் விழுந்த அக்காட்சியே அவனைத் திகைப்பில் ஆழ்த்தியது...



அவன் காதலுக்கு எதிரி அல்ல..! எனினும் எதிரிநாட்டு இளவரசன் மீது விருப்பம் கொள்வது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என அறியாமல் தம் அத்தை மகள் விரும்புவதாக எண்ணியவன் மதிவதனி விலகிச் சென்றதும் தீரனை நெருங்கினான்...



"எதிரி நாட்டின் மீது போர்த்தொடுத்து வீழ்த்துவதைக் காட்டிலும் காதல் போர் நடத்தி ராஜ்ஜியத்தை களவாடும் எண்ணமா தீரா?" என்றவன் சினத்துடன் வினவ,



அவனின் குற்றச்சாட்டுப் புரியாமல் அவனை தம் கூர்விழிகளால் அளந்துவிட்டு, "என்ன உளறல் இது மூடனே?" என்றான் இளந்தீரன்...



"இதில் உளறல் ஏதுமில்லை..! நீ மதிவதனியை விரும்புகிறாய் தானே?.."



"ஆம்..! நிச்சயமாக... அதில் என்ன தவறு கண்டாய்?"



"நீ விரும்புவதே பெருந்தவறு என்கிறேன்..."



"இனியொரு வார்த்தை உதிர்த்தால் தோழன் என்றும் பாராமல் உம் சிரத்தை கொய்து விடுவேன் மகேந்திரா..!" என்று சீறியதில் அவனை எள்ளலாக நோக்கியவன்,



"ஹாஹா..! அதையும் ஒருகைப் பார்த்துவிடலாம் தீரனே..! எனினும் தாம் எதிரி நாட்டு இளவரசியை விரும்புவது ஏனோ?"



"எதிரிநாட்டு இளவரசியா?.."



"ஆம் தீரனே..! நீ விரும்பும் மதிவதனி எம் அத்தையின் புதல்வி..! இராஜசிங்காபுரி நாட்டு இளவரசி..!" என்றதில் 'எம் வதனி எதிரிநாட்டு இளவரசியா?' ஒரு நொடி திகைத்தவன்,



"அவள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்..! இப்பொழுது அவள் எம்முடைய வதனி..!" என்று இறுமாப்புடன் உரைக்க,



"எம்மால் உம்மை நம்ப இயலவில்லை தீரனே..! நீ அவளுக்கு துரோகம் இழைத்துவிட்டாள் என்ன செய்வது?"



"ஏய்..! உம் நோக்கத்திற்கு சொற்களை வாரி இறைக்காதே... எம்மை கண்டால் பெண்களை வஞ்சிப்பவன் போலவா தெரிகின்றது? நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் அறியாமல் எங்கள் மனதில் எழுந்த காதல் இது..! எப்பிறவியிலும் மாறாது..! இங்கு கவனி, எம்மைப் பற்றி அவசியமின்றி அவளிடம் எதையும் கூறிவிடாதே... அவளாக ஓர் நாள் அறியும்பொழுது அவளின் மனதை யான் அறிய வேண்டும்..!" என்று எச்சரிக்கை விடுக்க,



"அப்படியானால் நான் விடுக்கும் சவாலை ஏற்றுக்கொள்கிறாயா?"



"இல்லையெனில்?.."



"மதிவதனியிடம் உம்மைப் பற்றிய உண்மையை உரைத்து அவளின் மனதில் குழப்பம் விளைவிப்பேன் தீரனே..."



"மகேந்திரா..!" என்றவன் கர்ஜிக்க,



"ஹாஹா..! உண்மைக் காதலோ?" என்று நகைத்தான் மகேந்திரராஜன்...



"ஆம்..! அதிலென்ன சந்தேகம் உமக்கு? அவள் சிறுபெண்ணாக இருப்பதால் தான் இப்பொழுது மணம் முடிக்க எமக்கு தயக்கமாக இருக்கிறது... அப்படியிருக்க நீ அவளைக் குழப்புவது சற்றும் நியாயமில்லை..!"



"அகவை பதினெட்டில் இருப்பவள் உமக்கு சிறுபெண்ணா?.."



"குருவிடம் பாடம் கற்றுக்கொள்ள வந்தவளை இடையூறு செய்ய எமக்கு விருப்பமில்லை..! ஓராண்டு முடிந்ததும் இராஜசிங்காபுரி மன்னரிடம் எங்களின் மணம் பற்றி உரையாட வேண்டும்.." என்றதில்,



"அது சாத்தியமற்றது தீரனே..! அவளுக்கு அகவை இருபத்தி ஒன்று தொடங்கிய பின்பே மணம் செய்ய வேண்டுமென்று அரண்மனை ஜோசியர் வலியுறுத்தியுள்ளார்... அதற்கு நீ மேலும் இரு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்..." என்றபடி தோழனின் வதனத்தைக் கூர்ந்தான்...



"இரு ஆண்டுகள் தானே..! எங்கள் காதலுக்காக இரு ஆண்டுகள் என்ன, இருநூறு ஆண்டுகள் என்றாலும் எம்மால் காத்திருக்க இயலும்..."



"மிக்க மகிழ்ச்சி தீரனே..! எனினும் எம் சவாலை நீ இன்னும் ஏற்கவில்லை.." என்று நினைவுப்படுத்த,



"எம் வதனியைப் பிரிவதைத் தவிர்த்து எதைக் கூறினாலும் யான் ஏற்றுக்கொள்கிறேன்..." என்றவனின் விழிகளில் வழிந்த நேசத்தில் ஒரு வினாடி மெய்மறந்து நின்ற மகேந்திரராஜன்,



"உம் ராஜ்ஜியத்தைத் துறந்து இராஜசிங்காபுரியின் படைத்தளபதியாக பணி ஏற்க வேண்டும்... அவ்வாறே மன்னரின் நன்மதிப்பைப் பெற்று மதிவதனியை மணக்க வேண்டும்... இயலுமா உம்மால்?.."



இருவரும் சிறுவயதில் ஒன்றாக கல்விக் கற்றதனால் தீரனைப் பற்றி நன்கறிந்தவன் அவன்..! ஆதலால் இத்தகைய சவாலை அவன் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று உறுதியாக நம்பினான்..!



எனினும் அவனைத் திகைப்பில் ஆழ்த்துபவனாக, "ஏன் இயலாது..! எம் ராணியை அடைவதற்காக எந்த எல்லைக்கும் செல்வேனடா..." என்ற தீரனின் விழிகளில் காதலை அடைந்தே தீர்வேன் எனும் தீர்க்கம் இருந்தது...



தம் நாட்டுப் படைவீரர்களைக் கொண்டு போர்த் தொடுத்தால் அவர்கள் நாட்டை வீழ்த்தி எளிதாக அவளை மணக்க முடியும்..!



இல்லையேல் இருநாட்டிற்கும் பொதுவான சிற்றரசர்களை வைத்து நினைத்ததை அடைந்திருக்க முடியும்..!



மேற்கூறிய இரு வழிகளிலும் சிந்தை கலைந்தால் உயிர்ச்சேதம் நிகழ நிறைய சாத்தியமுள்ளது... அது தம் தேவியை பாதிக்கும் என்பதால் சுவாரசியமாகத் தெரிந்த மகேந்திரராஜனின் சவாலை ஏற்றுக்கொண்டான்...



அதன் பின்னர் அங்கிருந்து நகர முயன்ற தோழனைத் தடுத்து, "எனினும் எம்மை எவ்வாறு படைத்தளபதியாக ஏற்பார்கள்?" என்று வினா எழுப்ப,



"அது எம் பொறுப்பு தீரனே..! பிறகு இந்த சவால் நமக்குள் ரகசியமாக இருக்க வேண்டும்... மதிவதனியாக கண்டுபிடிக்கும் வரையில் நீயாக அவளிடம் வெளிப்படுத்தக்கூடாது... சம்மதமா?.."



"நிச்சயமாக..! நீயும் எமக்கு அளித்த வாக்கைக் காப்பாய் என்று நம்புகிறேன்..." என்றதோடு விலகி நடந்தான் மகேந்திரன் இளந்தீரன்...



அதன் பின்னர் வந்த காலங்களில் சற்று தொலைவில் அமைந்திருந்த மலைக்குகையில் சந்தித்து இருவரும் தங்கள் காதலை வளர்பிறையாய் வளர்த்தாலும் வரம்பு மீறாமல் தொடர்ந்தனர்..!



மதிவதனியின் பயிற்சி காலம் முடிவுறும் தறுவாயில் தம் மன்னவனைப் பற்றிய உண்மைகளை அவளாகவே அறிந்துக்கொண்டாள்..!



தம் கரத்தில் வீற்றிருந்த ஓவியத்தை நன்றாக உற்று நோக்கிவிட்டு, "இது சத்தியமா தமையனே?" என்க,



"ஆம் தங்கையே..! இந்த ஓவியத்தில் இருப்பவர் இந்திரபுரியின் முடி இளவரசர் மகேந்திரன் இளந்தீரன்..!" என்று அழுத்திக் கூறினான் அவன்...



அதை செவிமடுத்தவளின் வதனத்தில் தான் எத்தனை உணர்வுகள்..!



"தமையனே..! இதை யான் வைத்துக்கொள்ளலாமா?" என்று அவள் அனுமதி வேண்டியதில் மகிழ்ச்சியாக புன்னகைத்த அவ்வோவியன், "தாராளமாக வைத்துக்கொள்ளம்மா..!" என்றான்...



அவள் தோழி ஒருத்தியின் தமையனான அவன், ஒரு நாடோடி ஓவியன்..!



அன்று சந்தியா வேளையில் வழக்கம் போல தம்மைச் சந்திக்க வந்தவனிடம், "வாருங்கள் இளவரசே..! தங்கள் ராஜ்ஜியத்தில் அனைவரும் நலமா?" என்று நலம் விசாரிக்க,



ஒரு வினாடி திகைத்து விழித்தவன் தம்மைப் பற்றிய உண்மைகள் அவளுக்குத் தெரியவந்ததை ஊகித்து, "நம் ராஜ்ஜியத்தில் அனைவரும் நலம் தேவி..! உம்மையும் சேர்த்து..!" என்றவனை வெட்டும் விழிகளால் அளந்தவள்,



"உண்மையை எம்மிடம் மறைத்தது தங்களுக்குத் தவறாகத் தெரியவில்லையா அரசே?.." என்று வினவியதில்,



"அரசு இல்லை வதும்மா..! உமக்கு என்றுமே தீரன் தான்..! எதையும் மறைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை தங்கமே..! என்ன நேர்ந்தாலும் உம்மை விலகும் எண்ணம் எமக்கு எல்லளவும் இல்லை..! எம் மீது நம்பிக்கை இருக்கின்றது அல்லவா?" பதிலுக்கு தம் ராணியிடம் வினவியவன் அவளின் முகம் காட்டிய பாவனைகளைக் கூர்ந்தான்...



கிட்டத்தட்ட பன்னிரண்டு திங்களாக அவனின் காதலில் திளைத்தவளுக்கு அதில் கபடம் இருப்பதாகத் தோன்றவில்லை...



"நிச்சயமாக தீரனே..! எமக்கு நம்பிக்கை இருக்கிறது..! எனினும் நூற்றில் ஓர் வாய்ப்பாக தாங்கள் எம்மை ஏய்த்தால்?" என்று நிறுத்த,



"ம்ம் ஏய்த்தால்?"



"தங்களைக் கொன்றுவிட்டு எம்மையும் அழித்துக் கொள்வேன் தீரனே..!" என்றவளை நெருங்கியவன்,



"ஹாஹா..! இத்தகைய வீரத்தைத்தான் எம் வதனியிடம் எதிர்ப்பார்த்தேன்..! ஆனால் ஒன்றைக் கேளடி..! நீயில்லாத இப்புவியில் யான் ஓர் நொடியும் வாழமாட்டேன்..!" என்றபடி அவளை அணைத்துக்கொண்டான்...



மன்னவனின் மார்பிலிருந்து அவனை ஏறிட்டவள், "எம் மீது கோபம் இல்லையே?.."



"அல்ல தேவி..! அது உமது அதீத அன்பின் வெளிப்பாடு என்பதை அறிவேன்..." என்று உறுதியாக உரைத்தவனை தானும் இறுக்கி அணைத்த‌ மதிவதனி சில கணங்கள் மௌனியாக நின்றுவிட்டு,



"இனி நாம் எவ்வாறு சந்திப்பது தீரனே?" என்றதில், அவளின் மாம்பழ கன்னங்களை தன்‌ வனப்புமிகும் கரங்களால் தாங்கியவன், "இதோ பயிற்றுவிக்கப்பட்ட இந்த ஜோடிப்புறாக்களை உம்முடன் எடுத்துச்செல் வதும்மா..! நீ எம்மைக் காண விரும்பும் வேளைகளில் இதனிடம் தகவல் அனுப்பு... நாம் வழக்கமாக சந்திக்கும் குகையில் உம்மை சந்திக்க வருகிறேன்... சரி தானா?.." என்றபடி அவற்றை தம் ராணியிடம் வழங்கினான்...



விழிகளில் ஈரம் துளிர்க்க, "நான் சென்று வருகிறேன் தீரனே..!" விடைபெறும் நோக்கில் தம்மை ஏறிட்டவளின் கரம் பற்றி அழுத்திவிட்டு, "கவனம் வதும்மா..! நம் காதல் முறையாக இணையும் வரையில் வெளியே கசிய விடாமல் பாதுகாக்க வேண்டும்..!" என்றதற்கு ஆமோதிப்பாக தலையசைத்து,



"விரைவாக வருவீர்களா?" என்க,



"நிச்சயமாக தேவி..! வெகு நாட்கள் உம்மைப் பிரிந்து எம்மாலும் சுவாசிக்க இயலாது..!" என்றபடி மீண்டும் ஒருமுறை அணைத்து விடைக்கொடுத்தான்...



மகேந்திரராஜன் வாக்களித்ததைப் போல மகேந்திரன் இளந்தீரனை இராஜசிங்காபுரியின் படைத்தளபதியாக நியமிக்க எடுத்துக்கொண்ட பதினைந்து திங்களும் அவர்களின் காதல் அந்த மலைக்குகையில் கண்ணியமாக தொடர்ந்தது..!



அவ்வாறு சந்திக்கும் வேளையில் அந்த வான்நிலவின் சாட்சியாக தம்முடைய நிலாப்பெண்ணின் நெற்றியில் இதழொற்றுவதோடு வேறெந்த அத்துமீறலும் புரியாமல் அணைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருப்பான்...



தம் தோழிகளின் சில காதல் கதைகளை அறிந்திருந்த மதிவதனி தம் மன்னவனை வியப்புடன் நோக்கினாலும் அவனின் கைச்சிறைக்குள் விரும்பியே சரண்புகுவாள்...



ஓர் நாள் அவளது வதனத்தில் தோன்றிய உணர்வைக் கண்டு நகைத்தவன், "காதலித்தால் களவியலும் இயல்பு தான் தேவி..! எனினும் யான் உம்மை நம் இந்திரபுரியின் மகாராணியாகக் காண்கிறேன் வதனி..! அந்தப்புரக் காதலியாக அல்ல..!" என்றதில் மனம் நெகிழ அவனது திண்ணிய மார்பில் சாய்ந்துகொண்டாள்...



அந்தப்புரத்தில் எண்ணிலடங்கா அழகிகளை சேர்த்துக்கொள்ளும் மன்னர்களுக்கு மத்தியில், காதலியான தம்மை அணைத்து இதழொற்றுவதோடு மட்டும் நிறுத்திக்கொண்ட மன்னவனின் கண்ணியம் இரும்பை ஈர்க்கும் காந்தமாய் அவளை ஈர்க்க மீண்டும் மீண்டும் அவன் மீது காதலில் விழுந்தாள் மங்கையவள்..!



உயிர்க்காதலில் திளைத்து வதனம் மின்ன நடமாடியவளின் தலையில் ஓர் தினம் இடியாய் வந்திறங்கியது அவளின் தீரன் தங்கள் நாட்டின் படைத்தளபதியாக பணிசெய்வது..! அதிலும் அவன் இங்கு வந்து மூன்று திங்கள் ஆனதாம்..!



அன்றிரவு தம்மை சந்திக்க வந்தவனிடம், "என்ன ஒரு திண்ணக்கம்..! எம்மிடம் ஏன் மறைத்தீர்கள் தீரனே? தங்களுக்கு என்ன தலைவிதி இது?" சினத்தில் கொந்தளிக்க,



"வதும்மா..! இத்தனை கோபம் கொள்ள வேண்டாம்..! உம்முடைய தீரன் பாவம்..! கத்தியின்றி ரத்தமின்றி நாம் இணைவதற்கு இதைவிட சிறந்த வழி வேறில்லை தேவி..! உம் தந்தையின் நன்மதிப்பைப் பெற்றதும் நாம் மணம் புரிந்து கொள்வதற்கு இதைக்காட்டிலும் சிறந்த வழி கிட்டவில்லை..!" என்று மகேந்திரராஜனைக் காட்டிக்கொடுக்காமல் சமாதானம் செய்திருந்தான்...



அவன் எத்தனை காரணங்களை அடுக்குனாலும் அவளால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை..! இதைவிட பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியத்தை தன்னகத்தே வைத்திருப்பன் தமக்காக இங்கே வந்து பலரிடம் பணிந்துபோவதை நேரில் கண்டபொழுது அவளின் மனம் ஊமையாய் கண்ணீர் வடித்தது..!



இந்நிலையில் மன்னர் அருமன் நெடுமாறன் தம் புதல்வி மதிவதனிக்கு அருகிலுள்ள ஓர் ராஜ்ஜியத்தின் மன்னனை மணம் பேசி முடிக்கப்போவதாகக் கிடைத்த தகவலில் கொதித்தெழுந்தவன் அன்று அந்திப்பொழுதில் தம்மைக் காண வந்தவளிடம், "நாம் முதலில் கந்தர்வ மணம் செய்து கொள்ளலாம் தேவி..!" என்றிருந்தான்...



அவளது தந்தையின் செயல்பாடுகளை அவளும் அறிந்திருக்கவே மறுமொழி கூறாமல் சம்மதித்தவள் தம் மன்னவன் அணிவித்துவிட்ட கணையாழியை ரசித்துக் கொண்டிருக்க, அவளின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தவன் அவளுக்காக பிரத்யேகமாக வடிவமைத்த பொன்னாலான காற்சலங்கைகளையும் அணிவித்தான்...



"தீரனே..! என்ன செய்கிறீர்கள்? தாங்கள் எமது பாதம் பற்றுவதா?.." என்று அவள் மறுதலிக்க,



"ஏன் தேவி... எம் ராணியின் பாதம் தொடுவதால் எமது உயரம் ஏதும் குறையப்போகின்றதா என்ன?" என்று அதன் முத்துக்களை சுண்டிவிட, அவை எழுப்பிய ஒலியை ரசனையாகக் கேட்டபடி அவளின் கன்னக்கதுப்புகளில் அழுத்தமாக ஈரமுத்தம் பதித்தான்...



இயற்கையின் சாட்சியாக அவர்களின் கந்தர்வ மணம் நடந்து முடிய, காதல்கொண்ட இருவரின் உள்ளமும் விவரிக்க இயலா மகிழ்வில் நிறைந்திருந்தது..!



சில கணங்கள் அமைதியாக அவனின் பரந்தமார்பில் சாய்ந்திருந்த மதிவதனி, "இன்றைய தினம் சற்று விரைவாகத் திரும்ப வேண்டும் தீரனே..! நாம் கிளம்பலாமா?.." என்று வினவ,



"அல்ல தேவி..! அங்குத் திரும்பிச் செல்வதைக் காட்டிலும் நமக்கு மிக முக்கியமான வேலை ஒன்று உள்ளது.." என்று அவளின் செவிக்குள் காதலாக உரைத்தான்...



மன்னவனைப் புரியாமல் ஏறிட்டவள் அவனின் மோகம் சிந்தும் பார்வையில் அந்திவானமாய் சிவந்த வதனத்தை அவனுக்குள் மறைத்தபடி, "நிச்சயமாக இங்கு நாம் தங்க வேண்டுமா?" என்க,



"ஹாஹா..! சர்வ நிச்சயமாக..! இதற்கு மேலும் காத்திருக்க உமது தீரனிடம் பொறுமையில்லை தேவி..!" என்று குறும்பாக புன்னகைக்க, அதற்கு மேல் தவிர்க்க முடியாத பெண்மை அவனது பேராண்மையின் வசமானது..!



அவளின்‌ பிறை நெற்றியில் மென்மையான இதழொற்றலுடன் தொடங்கிய அவனின் ஆலிங்கனம், தம் வேகம் தாங்காமல் தடுமாறியவளின் பொன்மேனியை தமக்கு ஏற்றவாறு வளைத்து, தம்மை ராணியாய் ஆளப்போகும் பூந்தென்றலை தம் ஆட்சிக்குள் கொண்டு வந்து வெற்றிவாகை சூடியதில் நிறைவுப்பெற்றது..!



தம் கட்டுடல் மேனியில் களைப்புடன் சயனித்து இருந்தவளை, "வதும்மா..!" என்று காற்றுக்கும் வலிக்காமல் அழைக்க,



"சில கணங்களாவது எம்மை உறங்கவிடுங்கள் மகி..!" சிணுங்கியபடி அவனின் மார்பில் அழுத்தமாக முகம் புதைத்து உறங்கியிருந்தாள்..!



அதுநாள் வரையில் மகேந்திரன் என்ற தம் பெயரைப் பெரிதாக விரும்பாதவனுக்கு, அவளின் "மகி" என்ற ஒற்றை அழைப்பு ஆயிரம் மலர்களால் தம்மை அர்ச்சித்ததைப் போலானது...



அதன்பின்னர் வந்த பொழுதுகளில் இருவரும் வெகு சொற்பமான முறைகளே சந்தித்துக்கொண்டனர்...



ஏனெனில் மன்னர் அருமன் நெடுமாறன் எதிர்பாராமல் இறந்தது, அந்த சோலைவனத்து இளவரசி காஞ்சனை செய்த கங்கண விவாஹம் என்று அவர்கள் இருவருக்கும் காலம் அத்தனை நன்றாகக் கனியவில்லை..!



தங்கள் காதலின் நினைவுகளை மீட்டெடுத்ததில் மதி வதனத்தில் புன்னகை நிறைய அமர்ந்திருந்த பெண்ணவள், தம் சங்குக்கழுத்தில் ஏதோ அழுத்துவதை உணர்ந்துக் குனிந்து நோக்கிவிட்டு, "இ..இது?" என்று விழிவிரிக்க,



"ஆம் வதும்மா..! நீ எம்மிடம் கேட்டது... அந்த ஆதினி களவாடி வைத்திருந்த உம் பாட்டியார் உமக்களித்த வைரங்கள்... உமக்கு விருப்பமான வடிவமைப்பில் சரியாக உள்ளதா?.." என்று வினவ,



"நிரம்ப..! எம் மனம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கிறது மகி..! எமக்காக எத்தனையோ செய்துள்ள தங்களுக்கு யான் என்ன கைம்மாறு செய்வேன்?" என்று குரல் தழுதழுத்தவளின் பின் கழுத்தில் முத்த ஊர்வலம் நடத்தியபடி,



"நீ இப்பொழுது எமக்கு எதை வழங்கினாலும் உம்முடன் வசிக்கும் தேவ கணங்களுக்கு அது ஒப்பாகாது வதனி... எனினும் நமக்கான காலம் நீண்டிருக்கிறது...! இப்பொழுது அதியனை மீட்பது மட்டுமே நம் முக்கியக்கடமை..! நம் நாட்டிற்குச் சென்றபிறகு எம் லீலைகளைத் தொடர்கிறேன்..! சரி தானே..!" காதலாக உரைத்த தீரன் வந்த பாதையில் பயணித்து தம் ராணியுடன் அரண்மனையை அடைந்திருந்தான்...



அடுத்த தினம் புலர்ந்தும் புலராத காலைப்பொழுதில் ஈசனின் முன்பாக அமர்ந்திருந்த தோழனை நெருங்கிய கவுதமன், "நம் அதியனை கண்டுவிட்டேன் மன்னா..! உடன் ஓர் இளம்பெண்ணும் இருக்கின்றாள்..." சுற்றிலும் கவனித்தபடி மெல்லிய குரலில் உரைத்தான்...



கவுதமன் கூறிய தகவல்களால் அங்கு அவன் மகிழ்ச்சி கலந்த திகைப்பில் உறைந்ததோடு, இங்கு அலைபேசியில் வைத்திருந்த அலாரம் ஒலித்து இவன் கனவைக் கலைத்திருக்க,



"ஓ ஷிட்..! இப்படி நடுநடுவுல கட் பண்ணி கனவுக்குத் தொடரும் போட்டா நான் எப்போ தான்டா என் பொண்டாட்டியோட சேர்றது?" என்ற புலம்பலுடன் எழுந்தமர்ந்தான் தீரன்அபர்ஜித்...




தொடரும்......
 
Top Bottom