• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரனின் மதிவதனியிவள் - 16

நிதனிபிரபு

Administrator
Staff member
மகேந்திரனின் மதிவதனியிவள் - 16


மதிவதனிக்கு அன்றைய நாள் அவ்வளவு உவப்பானதாகப் புலரவில்லை...



தன் மனதில் தீரன் முழுமையாக நுழைந்துவிட்டானோ என்ற தவிப்பில் ஏதோ தவறு செய்வதைப் போல் மனம் அடித்துக்கொண்டது..!



அவளின் பாதத்தில் கொலுசு அணிவித்தது, நேற்று முன்தினம் அவளைக் காப்பாற்றியது என்று நடந்த நிகழ்வுகள் வரிசையாக நினைவடுக்குகளில் தோன்றி அவளை தடுமாற வைத்தது...



ஆனால் தன்னைப் பற்றி தவறான அபிப்ராயம் வைத்திருந்த ஒருவனிடம் மனம் சாய, தந்தைக்கு துரோகம் இழைப்பதாக நினைத்து தன்னைத் தானே வருத்திக்கொண்டாள்...



இதில் என்ன முயன்றும் தீரனின் காதலை மட்டும் அவளால் உண்மையென நம்ப முடியவில்லை... தனக்கு முத்தம் கொடுத்தது, கொலுசு அணிவித்தது வரை எல்லாம் சரி..!



ஏதோ ஆதர்ஷ காதலனைப் போல தன்னிடம் அத்தனை நெருக்கமாக நடந்துவிட்டு மிஸஸ்.மகேந்திரன் ஆவதற்கு வாழ்த்துகள் கூறினால் என்ன அர்த்தம்?



எத்தனை தைரியம் இருந்தால் அப்படிக் கூறுவான் என்ற எரிச்சல் மட்டும் மறையாமல் அவளின் மனதை அரித்தது...



அவன் பெயரும் மகேந்திரன் தான் என்பது அவளுக்குத் தெரியாததால் அவனைத் தவறாக நினைத்தவள் அதே மனநிலையில் கிளம்பத் தொடங்கினாள்...



ஆனால் அத்தனை எரிச்சலிலும் மேஜையில் இருந்த இரண்டு புடவைகளில் தன்போக்கில் அவளவன் தேர்ந்தெடுத்த ஆரஞ்சு வண்ணப்பட்டை தான் அவளது கரங்கள் எடுத்திருந்தது...



அதற்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிசைனர் ப்ளவுசின் முதுகுப்புறத்தில் ராஜாவும் ராணியும் ஓர் பொற்றாமரைக் குளத்திற்கு முன்பாக அமர்ந்திருக்கும்படியும், கைப்பகுதியில் ஒரு ஜோடி கிளிகளும் ஆரி வொர்க் செய்யப்பட்டு அதற்கு கீழே எம்வி என்ற ஆங்கில எழுத்துக்கள் ஒரு இதயத்திற்குள் அழகிய மணிகளால் எழுதப்பட்டிருந்தது...



அதன் அழகை ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லாமல் போகவே ஏதோ ஒரு உடை என்ற அளவில் அதை உடுத்திக்கொண்டாள்...



கடமையாக தயாராகி நின்ற மகளின் எழில்மிகு தோற்றத்தைக் கண்ட அம்பிகா, "அழகா இருக்கடா மதி..! என் கண்ணே பட்டுடும் போல..." என்றபடி திருஷ்டி கழித்தவர் முகம் மலர கீழேயிறங்கிச் சென்றார்...



மாலை ஆறு மணிக்கு மேல் நிச்சயம் நடக்கவிருந்த மங்கள நிகழ்விற்கு இரு குடும்பத்திற்கும் நெருங்கிய உறவினர்களாக வெறும் இருநூறு நபர்களை மட்டும் அழைத்திருந்தாலும், வரும் விருந்தினர்களின் மனம் கோணாமல் கவனிப்பதற்காக தர்மராஜிற்கு சொந்தமான திருமண மண்டபத்தில் தான் நிச்சயதார்த்தத்தை ஏற்பாடு செய்திருந்தனர்...



முழுநிலவாக தயாராகி நின்ற மதிவதனிக்கு மாலை நான்கரை மணிக்கு முன்னரே மண்டபத்தை அடைந்ததால் அறையில் அமர்ந்திருப்பது கடுப்பாக இருக்கவே, மாடியறைக்கு வெளியில் இருந்த வராண்டாவில் வந்து நின்றாள்...



"ஹாய் வது பேபி..!" என்று பின்னால் கேட்ட குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவள் அங்கு சிரித்த முகத்துடன் நின்றிருந்த தீரனைக் கண்டு அதிர,



"என்னடா ஷாக்காகிட்டியா?" என்றவன் வினவியதில் நாலாபுறமும் தலையாட்டி வைத்தாள்...



தன்‌ வதனியின் முகத்தில் தெரிந்த பதட்டமும் குழப்பமும் ஏனென்று புரிந்திருந்தும் அதைத் தீர்க்க மறுத்து விழிகளால் அவளை களவாடியபடியே, "இந்த சேரில அப்படியே தேவதை மாதிரி அழகா இருக்க பேபி.." என்று அவள் காதருகில் கிசுகிசுக்க, தாய்மொழி மறந்தவளாய் மலங்க மலங்க விழித்தபடி அவனுக்கு பதிலளிக்க முடியாமல் நின்றாள்...



ஆனால் மதிவதனியின் நீண்ட விழிகள் இரண்டும் வெண்பட்டு வேஷ்டியில் கம்பீரம் நிறைந்த ஆணழகனாய் நின்றவனை தன்னை மறந்து ரசித்ததில், அத்தனை நேரமிருந்த கொஞ்சநஞ்ச மனஅமைதியும் கெட்டுவிட்டது அவளுக்கு..!



ஒருவேளை இவனின் அழகு தன்னை ஈர்க்கிறதோ என்று அவளின் மனம் நினைக்க, இல்லை இவனைவிட மகேன் தான் அழகென்று எடுத்துக்கூறியது அவளின் மதி...



மன்னவனிடம் தென்பட்ட ஏதோ ஒன்று அவளை காந்தமாய் ஈர்த்து அவளின் இளம் மனதை புரட்டிப்போட்டது... இப்படி ஒரு தடுமாற்றத்தை அவள் யாரிடமும் அவள் உணர்ந்ததில்லையே..!



கண்ட முதல் பார்வையிலேயே அவள் மனதில் சலனத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அவனிடம் என்ன இருக்கிறதென்று மேலும் கீழுமாக அவனை ரசனையாக ஆராய்ந்த பெண்ணவள், தாங்கள் இருவரும் மாடி வராண்டாவில் நிற்பதை உணராமல் போனதோடு, கீழ் தளத்தில் நின்று தங்களை வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டிருந்த தந்தையையும் தமையனையும் கவனிக்க மறந்தாள்...



இவள் நிலையே இப்படியென்றால் மன்னவனின் நிலையைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?



கண்களால் தன்னை களவாடியவளை பதிலுக்கு காதல்பார்வைப் பார்த்தவனும் சுற்றம் மறந்து நிற்க, மகன் கணவனிடம் மாட்டிக்கொள்வானோ என அஞ்சிய கோகிலா அவனுக்கு அழைப்பு விடுத்தார்...



அதில் சுயம் திரும்பியவன், "ஸீ யூ சூன் வதும்மா..!" அவளைப் பார்த்துக் குறும்பாக கண்சிமிட்டிவிட்டு விலகி நடந்தான்...



அப்போதும் அவளின் பார்வையில் எவ்வித மாற்றமும் இல்லை..!



தனக்கு இன்னும் சற்று நேரத்தில் வேறொருவனோடு நிச்சயம் நடக்கப்போவதைக் கூட மறந்த தியான நிலையில் உறைந்து நின்றாள்...



பாவம் அவள்..! தான் இப்படி நிற்பது தன் தந்தையின் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தியதை அறியவில்லை..!



சற்று நேரத்தில் மகேன் தன் குடும்பத்தினருடன் வந்து சேர்ந்ததும் நேரம் விரைவாகக் கடக்க நிச்சயதார்த்த மூகூர்த்தம் நெருங்கியது...



உறவினர்கள் கூடியிருந்த சபையில் புரோகிதர் நிச்சய பத்திரிகையை வாசிப்பதற்கு இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், மதிவதனியின் விழிகள் ஒரு நொடி தீரனிடம் சென்று வர, சுற்றி நின்றவர்களை நினைத்து தன் கண்ணீரை அடக்கியதில் அவளின் மதி வதனம் கன்றிச் சிவந்தது..!



அவளின் கெட்ட நேரமோ என்னவோ அதையும் சக்திவடிவேலன் கண்டுவிட்டு பல்லைக்கடித்தார்...



அப்போதே மகளால் ஏதோ அவமானம் நிகழப்போவதாக மனம் பதற, இந்த நிச்சயதார்த்த நிகழ்வை நல்லபடியாக நடத்திக்கொடுக்கும்படி இஷ்ட தெய்வத்தை வேண்டியவரின் பார்வையில் மகேனும் அவன் தாயும் பேசிக்கொண்ட சைகை மொழி‌ படாமல் போனது...



உறவினர்கள் புடைசூழ நின்றிருந்த தர்மராஜ்ம், ராமச்சந்திரனும் நெகிழ்வாக சிரித்துக் கொண்டிருந்தனர்..!



தனக்கு மருமகளாக வர வேண்டிய மதிவதனி, நண்பனுக்கு மருமகளாக செல்லப்போவதை எண்ணி சற்று வருத்தமும் எழுந்தது ராமச்சந்திரனுக்கு...



அவர்களின் அத்தனை நிமிட உற்சாகத்தைக் கெடுக்கும் முடிவில் இருந்த சத்யபாமா, தன் இளைய மகனை அனுப்பி மதி அறியாமல் அவளின் குடும்பத்தினரை மட்டும் அருகிலிருந்த மணப்பெண்ணின் அறைக்கு அழைத்து வரும்படி கூற, சத்தத்தில் சரியாக கேட்காததால் அவர்களோடு சேர்த்து தீரன் குடும்பத்தையும், தர்மராஜின் தங்கை குடும்பத்தையும் அழைத்து வந்திருந்தான் அவன்...



மதிவதனி உள்ளே நுழைந்ததைக் கண்டு திகைத்தவருக்கு அவளுக்கு பின்னால் வந்தவர்களைக் கண்டு மயக்கம் வரும் போலானது...



இதற்கு மேல் அவர்களின் திட்டத்தை செயலாற்ற முடியாதே..!



கணவருக்கு முன்பாக மகனை திட்ட முடியாமல் வேறு வழியின்றி சக்தி வடிவேலனை நெருங்கியவர், "இ..இந்த நிச்சயம் நடக்காதுண்ணா.. இப்போவே நிறுத்திடலாம்.." என பட்டென்று சொல்லிவிட்டு தன் அலைபேசியில் இருந்த காணொளியை இயக்க,



அதில் அதிர்ந்த தர்மராஜ், "பாமா..! எங்க வச்சு என்ன பேசிட்டு இருக்க" மனைவியிடம் கர்ஜிக்க, பயத்தில் அவர் பக்கமே திரும்பாத சத்யபாமா இதயம் படபடக்க,



"இ..இதுல இருக்க வீடியோவ நீங்களே பாருங்கண்ணே... இதுக்கு மேலயும் உங்க பொண்ண என் மருமகளா ஏத்துக்குற அளவுக்கு நான் நல்லவ இல்லண்ணே.." என்றபடி தன் அலைபேசியை அவரிடம் கொடுத்தார்...



கணவர் தன்னை நம்பமாட்டார் என்பதோடு அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தங்களின் திருட்டுவேலையைக் கண்டுவிட்டால் போட்டு வைத்த திட்டம் பாழாகிவிடுமே..!



அதை கரம் நடுங்க இயக்கிய சக்திவடிவேலிற்கு அதை முழுமையாகக் காணும் தைரியம் இல்லை...



ஏனெனில் அதில் அவர் ஆசையாய் வளர்த்த செல்ல மகள் தீரனின் மடியில் படுத்திருக்க அவன் குனிந்து அவள் இதழில் உறவாடிக் கொண்டிருந்தான்...



ஏற்கனவே சற்று முன்னர் மாடியில் இருவரும் ஒருவரையொருவர் கண்களால் களவாடிக் கொண்டதைப் பார்த்திருந்ததால் அந்த காணொளியின்‌ நம்பகத்தன்மையைப் பற்றிய சந்தேகம் கூட அவர் மனதில் எழவில்லை...



கண்களில் கனல் பறக்க மதிவதனியை நெருங்கி, "என்னம்மா செஞ்சு வச்சுருக்க? அதுவும் உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னவனோட" என்றபடி அவளுக்கு முன்பாக அதைக் காட்ட,



அதில் ஓடிய காட்சியில் விழிகள் விரிய ஒரு நொடி திகைத்து நின்றுவிட்டு, "ப்பா.. இது?.." என்றவள் திக்க,



"என்ன இது பொய்னு சொல்லப்போறியா?"



"இ..இல்லப்பா இ..இது உண்மை தான்..! ஆ..ஆனா நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லப்பா..." என்றாள் கண்ணீர் வழிந்தோட..



இப்படி தெரிந்தவர்கள் கூடி நின்று வேடிக்கைப்பார்க்க தன் மீது சுமத்தப்பட்ட கலங்கத்தை நினைத்து கூனிக்குறுகி நின்றவளின் முகத்தில் இதை யார் எடுத்தது என்ற அப்பட்டமான அதிர்ச்சி..!



அன்று காலையில் நடந்தது ஒரு முதலுதவி சிகிச்சை அல்லவா..! அதை இத்தனை ஆபாசமாக சித்தரித்து தன் பெயருக்கு குந்தகம் விளைவித்தது யாரென்ற சந்தேகம் எழ நிமிர்ந்து தீரனின் கூர்விழிகளை சந்திக்க, அவன் மறுப்பாக தலையசைத்தான்...



அதில் தெரிந்த உண்மையில் குழம்பியவளுக்கு அவனின் தீட்சண்யம் நிறைந்த விழிகள் பொய்யுரைப்பதாகத் தெரியவில்லை...



அதெப்படி தெரியும்? அன்று மின்சாரம் தாக்கி மயங்கியவளைக் காப்பதற்காக முதலுதவி செய்ததோடு அவனின் பங்கு முடிந்துவிட்டதே..! அதற்கு பின்னர் நடந்த அனைத்தும் மகேனின் திருவிளையாடல் அன்றோ..!



தீரனைப் பார்த்ததற்கு பதிலாக அவனைப் பார்த்திருந்தால் உண்மையை அறிந்திருப்பாள்...



கண்ணீர் வழிய நின்றிருந்த மகளை வெறுப்பாக முறைத்துவிட்டு, "உன்னோட விளக்கம் போதும்... நான் தான் என் ரெண்டு கண்ணால பார்த்தேனே... ஒரே பொண்ணுனு உன்ன செல்லமா வளர்த்ததுக்கு நல்ல கைம்மாறு செஞ்சுட்டம்மா.." மனதில் பாரமேறியதில் அவர் தடுமாற, "அப்பா..!" என்றபடி அவரை நெருங்க முயன்றவளை தன் பக்கம் திருப்பிய அம்பிகா,



"ச்சீ ச்சீ..! நீ என் வயித்துல தான்‌ பொறந்தியா டி..! இதுக்கு பேசாம எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைனு முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல.." மகள் மறுத்து பேச வருவதைப் பொருட்படுத்தாமல் அவளின் மென்மையான கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்...



வாழ்கையில் கிடைத்த முதல் அடியில் விக்கித்து நின்றவள், பச்சிளம் குழந்தையாய் விழித்துக் கொண்டிருந்தாள்..!



அப்படியென்றால் தன் குடும்பத்தினர் ஒருவருக்கு கூட தன் மீது நம்பிக்கையில்லையா? இந்த நினைப்பே அவளை வெட்டி வீழ்த்த போதுமாய் இருந்தது..!



கடைசியாக முயன்று‌ பார்ப்போம் என்ற முடிவில் அவர் அறைந்த கன்னம் தீயாய் எரிந்தாலும், "அம்மா..!" என்று கேவியபடி அவரிடமே அடைக்கலம் தேட விரைந்தாள்...



தன்னவள் படும்பாட்டை வெறித்த தீரனுக்கு அடக்கப்பட்ட சினத்தில் விழிகள் சிவக்க, அனலாய் கொதித்த மனதுடன் நண்பனை முறைத்தபடி அவளருகில் செல்ல, அதற்கு முன்பாகவே தங்கையின் கரம் பிடித்து அழுத்திய அதியன்,



"ப்பா..! பாப்பா என்ன சொல்ல வரான்னு கொஞ்சம் கேட்டுட்டு பேசலாம்ல... அவசரப்பட்டு இப்படி பேசாதீங்கப்பா.. உங்களையும் தான்ம்மா..! எதுக்கு இப்போ அடிச்சீங்க..." என்று நியாயம் பேசியதில் மிரண்டுபோன மகேன்,



'ஆத்தாடி நான் கஷ்டப்பட்டுப் போட்டு வச்ச ப்ளான அம்மா சொதப்புனது பத்தாதுனு இந்த பாசமலர் சிவாஜியும் சேர்ந்து கெடுத்து விட்ருவான் போலயே... ஏற்கனவே அவன் பொண்டாட்டிய அவமானப்படுத்திட்டேன்னு என் மேல இருக்க கோபத்துல அங்க ஒருத்தன் எரிமலையா நின்னுட்டு இருக்கான்... இதுல இவன் வேற..' மனதில் புலம்பிக்கொண்டே தந்தையின் கண்களில் சிக்காமல் தாயின் கரத்தை வேகமாக அழுத்திவிட்டான்...



அதில் அத்தனை நேரம் தான் குழப்பி விட்டதை நினைத்து கையைப் பிசைந்தபடி நின்றிருந்த பாமா தன்னை சுதாரித்து, "ஒரு நிமிஷம் தம்பி..! இதெல்லாம் உங்க குடும்ப விஷயம், நீங்க தனியா பேசிக்கங்க... இப்போ இந்த நிச்சயம் நடக்காது நாங்க கிளம்புறோம்.." என்றதில் மீண்டும் அதிர்ந்தவன்,



"அம்மா ஸ்கிரிப்ட்ட மாத்தி மாத்தி பேசாதீங்க... அப்புறம் உங்க அண்ணன் பொண்ணு மருமகளா வர்றத மறந்துட வேண்டியது தான்..." என்றான் அவருக்கு மட்டும் கேட்கும்படி...



மகன் சொன்னபடி நடந்தால் கடைசி வரையில் தன் பிறந்தவீட்டு சொந்தங்களோடு இணைய முடியாமல் போய்விடுமோ என்ற பதற்றத்தில் கணவர் மீதிருந்த பயத்தை மீறி மதிவதனியை வார்த்தைகளால் தாக்கியிருந்தார்...



அவரிடம் ஏதோ சொல்லவந்த அதியனைத் தடுத்து, "நீ எதுவும் பேச வேணாம் தம்பி..! நான் கூட என்னமோ பெருமையா நினைச்சேன்... ஆனா கண்டபடி கூத்தடிக்கிறதுக்கு ஒருத்தன், நிச்சயம் பண்றதுக்கு ஒருத்தன்னு ரொம்ப அருமையா புள்ள வளர்த்துருக்கீங்கப்பா... இந்த மாதிரி பொண்ண என்னால மருமகளா ஏத்துக்க முடியாது..!" நாக்கில் நரம்பில்லாமல் பேச, அங்கு கூடியிருந்த உறவினர்களோடு சேர்ந்து மகேனும் அதிர்ந்து நின்றான்...



அவருக்கிருந்த பதற்றத்தில் மகன் சொல்லி தந்தது எதுவுமே நினைவில் இல்லை...



'அய்யோ போச்சு கடவுளே..! இ..இது இந்த டயலாக்? ஓ காட்..! நேத்து அம்மா பார்த்த சீரியல்ல வந்த டயலாக்காச்சே..! நான் எழுதிக் கொடுத்த சாதாரண டயலாக்க மறந்துட்டு இத சொல்லிடுச்சே இந்த தாய்க்குலம்.. இவன் வேற பெரியம்மானு பார்க்காம அடிக்கப் போறானே' மனதில் பரிதவித்தவாறு தீரனை ஏறிட, அவன் முகம் கல்லாய் இறுகியிருந்தது...



தன் மனம் நிறைந்தவளை இப்படி ஒரு அவமானத்தில் நிற்க வைத்து திருமணம் செய்வதை அவனால் ஏற்க முடியவில்லை... அவளை அடைய நினைத்தால் அவனிடம் வேறு வழிகளா இல்லை..!



மனதில் தீர்க்கமாக ஒரு முடிவுக்கு வந்தவன் மேலும் மதிவதனியை நெருங்கி நின்றபடி, "இட்ஸ் இனாஃப்..! அங்க என்ன நடந்துச்சுனே தெரியாம யாரும் வதனிய அபாண்டமா பேச வேணாம்... நடந்தத நானே சொல்றேன்..." என்றான்...



சுமூகமாக முடிக்க வேண்டியதைக் குழப்பிவிட்ட தாயை எண்ணி கடுப்பில் நின்றிருந்த மகேனிற்கு நண்பனின் இறுகிய குரலை வைத்து அவன் நடந்த உண்மைகளை சொல்லும் முடிவிலிருப்பதுத் தெரிந்துபோனது..!



இன்று விட்டால் தந்தையை மீறி அவன் நினைத்தது என்றுமே நடக்காதே..!



அதில் தானும் பதறி வேகமாக தீரன் அருகில் விரைந்தவன், "என்ன தீரா..! நீ காதலிச்சு கழட்டிவிட்ட பொண்ணுக்கு நான் வாழ்க்கைக் கொடுக்கணுமா? அதான் உன்னோட ப்ளானா? வெர்ரி சாரிப்பா..! நான் அவ்ளோ நல்லவன் இல்ல..! உன் காதலிய நீயே கல்யாணம் பண்ணாலும் சரி, இல்ல வேற ஒரு தியாகிக்குக் கல்யாணம் பண்ணி வச்சாலும் சரி... என்னைய ஆள விடு தம்பி..!" என்றான் தன்னைத் தானே நொந்தபடி...



தவறே செய்யாத ஓர் அப்பாவிப்பெண்ணை இப்படிப் பேசும்படியான தன் நிலையை அறவே வெறுத்தான் அவன்...



"ஏய்..! என்னடா சொன்ன?" அவனின் சட்டைக்காலரைப் பற்றிய தீரனின் விழிகள் இரண்டும் நெருப்பை உமிழ, அடக்கப்பட்ட சினத்தில் அவனின் கழுத்து நரம்புகள் புடைத்துக் கிளம்பியதில் பார்ப்பதற்கே திகிலூட்டினான்...



"அடுத்த வார்த்த பேசுன உன்ன கொன்றுவேன் ராஸ்கல்..! நான் ஒருத்தன் இருக்கப்போ எந்த நாயும் என் வதனிக்கு வாழ்க்க தர வேணாம்.." என்று கர்ஜித்தவன் தன் கரத்தில் பற்றியிருந்த மகேனை பின்னால் தள்ளிவிட்டதோடு, மற்றவர்கள் என்ன நடக்கிறது என்பதை கிரகிப்பதற்கு முன்பே தன் சட்டைப்பையில் வைத்திருந்த பொன்னாலான மங்கள நாணை எடுத்து அவளின் சங்குக்கழுத்தில் அணிவித்திருந்தான்...



அங்கிருந்து வெளியேறி அய்யரின் அருகில் சென்று குங்குமச்சிமிழை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தவன், தன் மோதிர விரலில் குங்குமத்தை எடுத்து அதிர்ச்சி நீங்காமல் நின்ற மனைவியின் நெற்றியில் அழுத்தமாக இட்டதோடு தங்களின் திருமணத்தை நிறைவு செய்ய, அங்கு குழுமியிருந்தவர்களின் முகத்தில் ஈயாடவில்லை...



தன் கழுத்தில் தொங்கிய பொன் தாலியை கையிலெடுத்துப் பார்த்தவளுக்கு நீண்ட நேரம் நடந்த உணர்வுப்போராட்டத்தைத் தாங்க முடியாமல், அவளின் காலடியிலிருந்து பூமி நழுவியதை போல தட்டாமாலை சுற்றியது...



தரையில் கால்களை அழுத்தமாக ஊன்றித் தன்னை நிலைப்படுத்த முயன்றவள், அதில் தோல்வியுற்று தன் மகேந்திரனின் கரங்களில் வாடியக் கொடியென மயங்கி சரிந்தாள் அவனின் மதிவதனி..!



தொடரும்......
 
Top Bottom