• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 1

Vishakini

Moderator
Staff member
மன்னிப்பாயா காதலே - நிதனிபிரபு


அத்தியாயம் 1


ஜெர்மனியின் டுசல்டோர்ஃப் விமான நிலையம் என்றும்போல் அன்றும் மிகுந்த பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. இலங்கை செல்வதற்காக அங்கு வந்திறங்கிய நாவினியைப் பழைய நினைவுகள் சுழற்றி அடித்தன. நெஞ்சுக்குள் எதுவோ அடைத்துக்கொண்டு வர, விழிகள் தானாகக் கலங்கின.

விமானப் பயணங்கள் அனைத்தும் அவளுக்கு மனத்தில் கனமோடே நிகழ்ந்திருக்கின்றன. என்ன, ஒவ்வொரு முறையும் பக்கத்தில் துனையாக அவள் குடும்பத்தில் யாரோ ஒருவர் இருந்தார். இந்தமுறை தனியாக. இனிக் காலம் முழுக்க அவள் தனிதான் என்கிற வலிமிகுந்த நிதர்சனத்தோடு பயணிக்கிறாள்.

சிவதாசன் அவளின் லக்கேஜை தள்ளிக்கொண்டு முன்னே நடக்க, அவரின் பின்னால் கூட்டத்தில் தொலைந்துபோன குழந்தையின் மனநிலையுடன் மேனகாவோடு சேர்ந்து நடந்தாள் நாவினி.

“அக்கா! எவ்வளவு பெரிய எயாபோர்ட் எண்டு பாத்தீங்களா?” என்ற சின்ன தம்பியின் குரலும், “செல்லக்குஞ்சு, அப்பா எங்க நிக்கிறார் எண்டு பாரன. எந்தப் பக்கம் பாத்தாலும் பளபளவெண்டு மின்னுறதில ஒண்டும் தெரியுதில்ல.” என்ற அன்னையின் கனிந்த குரலும் காதினுள் ஒலித்தன. பொது இடம் என்பதையும் மறந்து வெடித்து அழுதுவிடுவோமோ என்று பயந்துபோனாள் நாவினி.

ஒன்றுக்கு நான்கு உயிர்கள்! கொத்தாகப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறாள். ஐயோ ஐயோ என்று உள்ளம் இப்போதும் அலறித் துடித்தது. ஆற்றுவாரும் தேற்றுவாரும் இல்லாமல் இப்படித் தனியாக நிற்க வைத்துவிட்டுப் போவதற்குத்தான் மொத்த அன்பையும் அள்ளிக்கொட்டி வளர்த்தார்கள் போலும்.

அதிர்ந்து பேசவோ அதட்டிப் பேசவோ தெரியாதவள் நாவினி. அமைதிதான் அவள் சுபாவம். அவளின் அந்த மென்மையான குணமே அவளிடம் யாரையும் இலேசில் கோபப்பட விடாது. அப்படியானவளின் விழிகளின் ஓரத்தில் மரணவலி நிரந்தரமாகப் பதிந்தே போயிற்று.

அவளோடு நடந்து வந்துகொண்டிருந்த மேனாகாவிற்குள்ளும் பெரும் பரிதவிப்பு. எதையும் பேசி அவளை இன்னும் அழவைக்க வேண்டாம் என்று தன்னை அடக்கிக்கொண்டிருந்தார்.

ஆனாலும் மனம் கேளாமல், “ஒண்டுக்கும் யோசிக்கக் கூடாதம்மா. எங்கட நாவினிக்கு நாங்க இருக்கிறோம். அங்க நீங்க கொழும்பில போய் இறங்கினதும், உங்களக் கூட்டிக்கொண்டு போறதுக்கு அண்ணா வந்து நிப்பார். நீங்க பயப்பிடவே தேவையில்ல, சரியா?” என்றார் கனிவுடன்.

அந்தக் கனிவு கூட அவளை உடைத்தது. கண்ணீர் மல்கச் சரி என்று தலையை அசைத்தாள்.

இப்படிக் கண்ணீரைக் கண்களுக்குள் தேக்கியபடி இருப்பவளைக் கண்டு மேனகாவுக்கும் மேலே என்ன பேசுவது என்று தெரியவில்லை. எதையும் மனம் திறந்து பேசுகிற பெண்ணும் இல்லை. அதுவும் இப்போதெல்லாம் நத்தை ஓட்டுக்குள் சுருங்கிக்கொள்வதுபோல் இன்னுமே சுருங்கிக்கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்துக்கு மேல் கலங்கிக் கிடந்த அவள் முகத்தைப் பார்க்க முடியாமல், “என்னம்மா இது? அழக் கூடாது. எதையும் யோசிக்கவும் கூடாது. காரணமில்லாம கடவுள் ஒண்டையும் செய்றேல்லையாம். தைரியமா இருக்கோணும் குஞ்சு.” என்று, அவளை அரவணைத்து முதுகில் தட்டிக்கொடுத்துச் சொன்னார்.

அப்படி, அவளின் மொத்தக் குடும்பத்தையும் பறித்ததற்கு என்ன காரணம் சொல்வாராம் கடவுள்? அப்படியே ஏதாவது சொன்னாலும் அது அவள் வலிக்கு ஈடாகுமா என்ன? மனம் குமுறினாலும், “ஓம் அன்ட்ரி. சொறி!” என்றபடி ஜீன்ஸ் பொக்கெட்டில் இருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்துக் கண்களை ஒற்றிக்கொண்டாள். ஆனாலும், துடைக்க துடைக்க கண்ணீர் பெருகி வழிந்தது.

“தைரியம் சொல்லுறன் எண்டு நீங்களே அழவைக்கிறேல்ல மேனகா. நேரமாகுது வாங்கோ.” என்று பெண்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு சென்று, முதல் வேலையாக அவளுடைய லக்கேஜை போட்டார் சிவதாசன்.

அவள் கடவைக்குள் செல்வதற்கு முதல் உணவகத்துக்கு அழைத்து வந்தார். உணவுக்குச் சொல்லிவிட்டு வட்ட மேசையைச் சுற்றி மூவரும் அமர்ந்துகொண்டனர்.

மேனகாவிற்கு அவளைத் தனியாக அனுப்ப மனமேயில்லை. சம்மர் காலத்தில் ஆறு கிழமை விடுமுறை எடுத்திருந்த காரணத்தினால் அவரால் இந்தமுறை வேலையில் விடுமுறை எடுக்க முடியவில்லை. நாவினியின் இந்தப் பயணமும் தள்ளிப்போடும் நிலையில் இல்லை. அதனால் மட்டுமே அவளைத் தனியாக அனுப்பச் சம்மதித்தார்.

எல்லாம் சரிதான். கண்ணீரைக் கண்களுக்குள்ளேயே அடக்கிக்கொண்டு, அவர்களுக்காகச் சாப்பிடுகிறேன் என்று காட்டிக்கொண்டிருந்தவளைப் பார்க்கையில் அவர் உள்ளமும் பெரும் இரைச்சலுடன் ஓலமிட்டது.

“காணி உறுதி எல்லாம் கொண்டுபோறீங்கதானே? தனியா போய் என்ன செய்யப்போறன், எனக்கு ஆர் இருக்கினம் எண்டெல்லாம் நினைக்கக் கூடாது. மாதவனிட்ட எல்லாம் சொல்லியிருக்கிறன். இப்பவே பாதி வேலைய அவர் முடிச்சிட்டார். மிச்சத்தையும் அவரே பாப்பார். ஆர் என்ன சொன்னாலும், என்ன வெருட்டினாலும் மாதவனிட்டச் சொல்லுங்கோ. ஒண்டுக்கும் யோசிக்கக் கூடாது.” கனிவையும் கண்டிப்பையும் சரி விகிதத்தில் கலந்து அவளுக்குத் தெம்பூட்டும் விதமாகப் பேசினார் சிவதாசன்.

“நன்றி அங்கிள். நீங்க எல்லாரும் இல்லாட்டி…” என்றவளால் மேலே பேச முடியவில்லை. இதழ்கள் நடுங்கக் கண்ணீர் கன்னத்தைத் தொட்டிருந்தன.

நாவினி வசிக்கும் அதே ஊரில், அதே தெருவில் நான்கு வீடுகள் தள்ளி இருக்கிறார்கள் சிவதாசன் குடும்பத்தினர். நெருங்கிய நண்பர்கள். ஆனால் இன்று, அவளைச் சொந்தப் பெண்போல் கவனித்துக்கொள்பவர்கள்.

“உனக்கு என்ன விசாராம்மா? நீ எங்கட பிள்ளையாச்சி. சும்மா நன்றி அது இதெல்லாம் சொல்லி எங்களைத் தள்ளி வைக்கிறேல்ல!” அதட்டியபடி எழுந்துவந்து அவளைத் தன் வயிற்றுடன் சேர்த்து அணைத்துக்கொண்டார் மேனகா.

அந்தச் செய்கை அன்னையை நினைவூட்டிவிட, அவர் இடுப்பைக் கட்டிக்கொண்டு சத்தமே இல்லாமல் கண்ணீர் உகுத்தாள் நாவினி.

அம்மா, அப்பா, இரண்டு தம்பிகள் என்று தேன்கூடு போன்று அழகான குடும்பம் அவளது. ஒரு தடவை அந்த முழு வாரமும் மொத்தக் குடும்பத்துக்கும் விடுமுறையாக அமைந்து வந்தது. இப்படி விடுமுறை கிடைத்தால் அதை அவர்கள் சும்மா விடுவதே இல்லை. அந்த முறையும் ஜெர்மனியின் தலைநகரம் பெர்லினைச் சென்று பார்த்துவரலாம் என்று புறப்பட்டிருந்தார்கள்.

நாவினிதான் காரை எடுத்தாள். அவளருகில் தந்தை நாகரத்தினம். பின்னால் அன்னையை ஒரு பக்கமாக விட்டுவிட்டுத் தம்பிகள் இருவரும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் இருவரும் எப்போதும் அப்படித்தான். எவ்வளவுதான் சண்டை பிடித்தாலும் சேர்ந்துதான் இருப்பார்கள்.

பாட்டும் கும்மாளமும் என்று உற்சாகமாகப் போய்க்கொண்டிருந்தது பயணம். ஒரு பெரிய சந்தியின் சிக்கனலில் நிறுத்தியிருந்தாள். இவளுக்குப் பச்சை விழுகையில் வலப்பக்கமாகத் திரும்ப வேண்டும். அதேபோல் பச்சையும் விழுந்தது.

இவள் வலப்பக்கமாகத் திருப்பிய வேளையில், நேரெதிரில் வந்த பார ஊர்தி ஒன்று, தன் கட்டுப்பாட்டை இழந்து, சிவப்பு விளக்கு எரிந்தும் நிறுத்த முடியாமல் வந்து, இவர்கள் காரின் பக்கவாட்டில் மோதியது. அதன் பிறகும் அதனால் நிறுத்த முடியாமல் போனதில், இடித்துத் தள்ளிச் சென்ற அந்தப் பார ஊர்தியினுள் கிட்டத்தட்ட இவர்களின் கார் அகப்பட்டு நசியுண்டு போயிற்று.

அந்தப் பக்கமாக இருந்த அப்பாவும் இரண்டு தம்பிகளும் அந்த இடத்திலேயே, அதுவும் பார ஊர்திக்குள் நசியுண்டு இறந்துபோயினர். அவளும் அன்னையும் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்கள்.

ஒரு வாரம் கழிந்த நிலையில் அவள் அன்னையும் அவளை விட்டுப் போயிருந்தார். இதெல்லாம் நடந்து ஒன்றரை வருடங்களாயிற்று. இன்னுமே அவளால் அதிலிருந்து கொஞ்சமும் வெளிவர முடியவில்லை.

நேரமாகிவிட்டதில் கண்ணீரும் அணைப்புமாக அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டாள் நாவினி. தைரியமான வார்த்தைகள் பல சொல்லி அவளை அனுப்பிவைத்தாலும் தானும் கூடப் போயிருக்கலாமோ என்று அந்தரித்துப்போனார் மேனகா.

இந்தளவில் மேனகா கலங்கும் அளவிற்கு அவள் சிறு பெண் அல்லள். பக்குவமற்ற நடத்தைகள் கொண்டவளும் அல்லள். இருபத்தி ஏழு வயது நிரம்பியவள். பொறுப்பானவள். பதினேழு வயதில் ஜெர்மனிக்கு வந்தாலும் மிக நன்றாகவே மொழியைப் படித்து, கல்வியும் கற்று, ஜெர்மனியின் வங்கி ஒன்றில் வாங்கிக்கடன்கள் பெற்றுக்கொடுக்கும் பகுதிக்கு வங்கி மேலாளராக இருக்கிறாள்.

அவள் அங்கே அனைத்து செக்கிங்குகளும் முடித்து, விமானம் ஏறுவதற்குக் காத்திருக்கும் பகுதிக்குள் சென்றுவிட்டாளாம் என்று அழைத்துச் சொன்ன பிறகே, கணவன் மனைவி இருவரும் புறப்பட்டனர்.

“இந்தப் பயணத்த முடிச்சுக்கொண்டு வரட்டும். எப்பிடியாவது ஒரு கலியாணத்தக் கட்டி வச்சிடோணும்.” விமானநிலையத்தின் வாகன நெரிசல்களுக்குள் இருந்து சிவதாசன் காரை வெளியில் எடுத்து, அதிவேக வீதியில் இணைத்துக்கொள்ளும் வரை பொறுத்திருந்துவிட்டுச் சொன்னார் மேனகா.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
சிவதாசனுக்கும் அதில் உடன்பாடுதான். ஏற்கனவே ஒரு பெடியனைப் பார்த்து வைத்திருக்கிறார்கள். முதற்கட்டப் பேச்சு வார்த்தையில் இரு தரப்புக்கும் மிகுந்த திருப்தி. நாவினி இன்னுமே பிடிகொடுக்காமல் இருப்பதில் அடுத்த கட்டத்துக்கு அந்தப் பேச்சு நகராமல் நிற்கிறது.

நாவினிக்கும் இதைச் சொல்லித்தான் அனுப்பியிருந்தார்கள். அப்படிப் புதிதாக ஒரு வாழ்க்கைக்குள் நுழையும் மனநிலையில் அவள் இல்லவே இல்லை. அது அவளுக்கு மட்டுமில்லை இவர்களுக்கும் தெரியும். ஆனாலும் இப்படியே எத்தனை நாள்களுக்குத்தான் அவளைத் தனியாகவே விடுவது?

அங்கே விமானத்தில் ஏறி, தனக்கான இருக்கையைக் கண்டடைந்து அமர்ந்துகொண்டவளுக்கு நெஞ்சடைக்கும் அந்த உணர்வு மட்டும் அகலுவதாக இல்லை.

ஆரம்ப கட்டப் பரபரப்புகள் எல்லாம் அடங்கி விமானம் புறப்படத் தயாரானது.

ஜன்னலோர இருக்கைதான் அவளுக்கு அமைந்திருந்தது. முதல் விமானப் பயணத்தின்போது அந்த இருக்கைக்காகத் தம்பிகளுடன் பிடித்த சண்டை பசுமையாக அவள் கண்முன்னே மின்னிற்று. துளிர்த்துவிட்ட கண்ணீரைக் கண்களுக்குள் அடக்க முடியாமல் தோற்று, அதைச் சுண்டி எறிந்தாள்.

*****

கோயில்களுக்குப் பஞ்சமேயில்லாத யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஏழாலைதான் நாவினியின் சொந்த ஊர். ஏழாலைக்குமே தனிச்சிறப்பு உண்டு. ஆரம்பத்தில் ஏழு ஆலயங்களைக் கொண்ட ஊர் என்பதில் ஏழாலயம் என்கிற பெயர் கொண்டு, அதுவே பின்னாளில் மருவி ஏழாலை என்று மாறியிருந்தது. இன்றைக்கு ஏழு அல்ல இன்னும் அதிகமான கோயில்களைக் கொண்ட ஊர் ஏழாலை.

ஏழாலையர் கிணறு காவியர் என்று கூடப் பகடி செய்வதுண்டு. ஒருமுறை நண்பிகள் கேலி செய்ததில், “நாங்க எல்லாம் கிணறுகளக் காவிக்கொண்டு திரியிற ஆக்களாப்பா?” என்று, விவரமில்லா சிறு வயதில் இவளே உதடு பிதுக்கியபடி கேட்டிருக்கிறாள்.

அதற்கு வாய்விட்டுச் சிரித்துவிட்டு, “ஏழாலைல கிணறுகள ஆழமா வெட்டிக்கொண்டு போகேக்க, காவி வரும் அம்மாச்சி. அப்பிடி எங்கட பக்கக் கிணறுகளில காவி படிஞ்சிருக்கிறதால கிணறு காவி எண்டு சொல்லுறது. அது மருவி ஏழாலையார் கிணறு காவியார் எண்டு ஆயிட்டுது.” என்று அவள் தந்தை நாகரத்தினம் விளக்கம் தந்திருக்கிறார்.

நாகரத்தினம் பரிமளாவின் ஒற்றைப் பெண் அவள். பரிமளா இல்லத்தரசியாக இருக்க, அவரை மணந்து வந்த நாகரத்தினம் ரயில்வே மாஸ்டராகப் பணிபுரிந்தார்.

அவர் வகித்த அந்த அரசாங்க உத்தியோகத்திற்குப் பெறுமதியாக அந்தக் காலத்திலேயே பெரிய காணியில் மாடி வீடும், செழிக்க செழிக்க நகைகளையும் சீதனமாகக் கொடுத்துப் பரிமளாவைக் கட்டிக் கொடுத்திருந்தார்கள் பரிமளாவின் பெற்றோர்.

சிறப்பான வாழ்க்கைதான். நாவினிக்குப் பிறகு அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. அப்போது நாவினிக்கு ஏழு வயது. அன்று பரிமளாவுக்குப் பிறந்தநாள். கணவர் வேலைக்குச் சென்றுவிட்டதில் மகளோடு கோயிலுக்குச் சென்றுவிட்டு அன்னை வீட்டுக்கு வந்திருந்தார்.

தந்தை தோட்டத்தில் இருக்கிறார் என்று அறிந்து, மகளை அன்னையிடம் விட்டுவிட்டு, அன்னை கொடுத்துவிட்ட தந்தைக்கான பகல் உணவையும் எடுத்துக்கொண்டு அவர்களின் தோட்டக் காணிக்குச் சென்ற பரிமளா, திரும்பி வரவேயில்லை.

முதலில் அப்பாவும் மகளும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் போலும் என்றுதான் எண்ணினார் பரிமளாவின் அன்னை. அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் மட்டுமே என்பதில், அவர்கள் இருவருக்குமே மகள் மீது அளப்பரிய பாசம் உண்டு.

ஆனால், நேரமாக நேரமாக நாவினி அன்னையைக் கேட்டுச் சிணுங்க ஆரம்பித்தாள். இன்னுமே கைப்பேசிகளில் பெரிய பரிச்சயங்கள் இல்லாத இராசம்மாள், அவளையும் அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு நடந்தார்.

அங்கே மனைவியைக் கண்டதும் வடிவேலருக்குக் கோபம். “இப்ப என்னப்பா நேரம்? ஒரு மனுசன் எவ்வளவு நேரம்தான் பசிக்களையோட வேல செய்றது?” என்று ஏறிப்பாய்ந்தார்.

இராசம்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. “என்னப்பா சொல்லுறீங்கள். பிள்ளை எப்பவோ உங்களுக்குச் சாப்பாடு கொண்டு வந்தவாவே.” என்றார் குழப்பத்தோடு.

“என்ன விசர்க் கதை கதைக்கிறாய்? விடிஞ்சதில இருந்து இஞ்சதான் நிக்கிறன். ஒருத்தரும் வரேல்ல.”

அந்த நொடியில் அவர்கள் இருவரையும் பதற்றம் தொற்றிக்கொண்டது. தோட்டம் முழுவதும் தேடினார்கள். அந்த வழியால் போய் வந்தவர்களையும் விசாரித்தார்கள். உருப்படியாக எந்தத் தகவலும் கிடைத்த பாடாய் இல்லை.

விடயம் அறிந்த அவர்களின் மூத்த மகன் பரமேஸ்வரனும் விழுந்தடித்துக்கொண்டு வந்து தேடினான். கடைசியில் அவர்களின் தோட்டக் காணியின் ஒரு பக்கத்தில், இடிந்த நிலையில் பாழடைந்து கிடந்த கிணற்றினுள் மிதந்தபடியிருந்த பரிமளாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனருகில் கட்டப்பட்டிருந்த மாட்டின் மீது தெறித்திருந்த சோற்றுப் பருக்கைகள், கீழே சிதறிக்கிடந்த உணவு, மூடி ஒரு பக்கம் சட்டி ஒரு பக்கம் என்று கிடந்த உணவுப் பாத்திரம், கால் சறுக்கிய அடையாளம் எல்லாவற்றையும் வைத்து, மாடு கட்டியிருந்த கயிற்றில் தடக்குப்பட்டு, பரிமளா கிணற்றினுள் விழுந்திருக்கலாம் என்று முடிவானது.

டவுனுக்குப் போய்விட்டு அன்று மாலை ஊர் திரும்பிய ஒருவர், தான் டவுனுக்குச் செல்கையில் அவர்களின் மாட்டை இழுத்துக்கொண்டு பரிமளா நடந்து போனதைக் கண்டதாகச் சொன்னதில் அவர்களின் ஊகம் உறுதியாயிற்று.

நம்பவே முடியாத கொடூரக் கனவொன்று நடந்தே போயிற்று. அங்கேயே அடித்துவைத்து ஒப்பாரி வைத்தார் இராசம்மாள். நாகரத்தினம் மனைவியை இழந்து நிற்க, நாவினி தாயில்லாப் பிள்ளையாக நின்றாள்.

அதன் பிறகு நாகரத்தினத்தின் வாழ்க்கை இருண்டு போயிற்று. நட்டாற்றில் அந்தரித்து நிற்பதுபோல் நின்றார். ஆனால், பரிமளாவின் குடும்பத்தினர் நாவினியைப் பார்த்துக்கொண்டனர்.

மனைவியை இழந்து அலமந்துபோய் நின்ற மனிதருக்கு அது பெரிய ஆறுதல். அம்மா இல்லாத மகள், அம்மம்மா வீட்டினரோடு இருக்கிறாள் என்று எண்ணி நிம்மதி கொண்டார்.

அந்த ஆறுதல் முதல் சில மாதங்களுக்குத்தான். நாளடைவில் அவருக்கும் மகளுக்குமான இடைவெளி பெரிதாகுவது போலொரு தோற்றம். அவளுக்கு அம்மம்மா வீட்டினர் இருக்கலாம். அவருக்கு அவள் ஒருத்திதானே ஆறுதல்.

நேரம் காலம் பாராமல் வேலை செய்துவிட்டு வருகிற பொழுதுகளில் பள்ளிக்கூடம், டியூஷன் என்று போயிருப்பாள். இல்லையா உறங்கியிருப்பாள். வாரத்தில் சில பொழுதுகள் மட்டுமே பார்க்கும் நிலை.

நாளாக நாளாகக் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு உறுத்தல் அவருக்குள். எல்லாமே சரியாக இருப்பது போலவும், எதுவுமே சரியாக இல்லை போலவும் ஒரு தோற்றம்.

அவரும் ஏழாலைதான். ஆனாலும் கூட அவரின் பெற்றவர்கள் வீட்டுக்கு அவளை அனுப்புவதற்குக் கூடப் பரிமளா வீட்டினர் பிரியப்படவில்லை. முதலில் மகளை இழந்தவர்கள், அந்த மகள் பெற்ற மகளைப் பார்த்து ஆறுதல் கொள்கிறார்கள் என்றெண்ணி அவர் அதைப் பெரிதாக எடுக்கவில்லை.

ஆனால், இவர் வீட்டுப்பக்கம் ஏதாவது விசேசங்கள் என்றாலும் அவளை விடாமல் மறித்ததிலும், அவரிடமே கூட அவர்கள் பேச்சைச் சுருக்கிக்கொள்ள ஆரம்பித்ததிலும், மகளின் ஒரு சில பேச்சுகளில் இருந்தும் அவருக்கு வித்தியாசங்கள் தெரிய ஆரம்பித்தன.

“நீங்க எங்களுக்கு ஒரேயொரு பிள்ளையப்பு. உங்களுக்கும் ஒரேயொரு மகள். அப்பிடியிருக்க, ஏனய்யா பேத்தியை எங்கட கண்ணில காட்டுறீங்களே இல்ல?” என்று அவர் அன்னை ஒருமுறை கண்ணீருடன் கேட்டபோதுதான் அதைப் பற்றி இன்னுமே ஆழமாக யோசிக்க ஆரம்பித்தார்.

அந்த நேரத்தில்தான் அவர் தகப்பன் காலமானார். அதற்குப் பேத்தியைக் கூட்டிக்கொண்டு வந்தாலும் கையோடு கூட்டிக்கொண்டே போயிருந்தனர். அதைவிடவும் அதிர்ச்சி இவர் பக்கத்து ஆட்களோடு அவளே ஒட்ட மறுத்தாள்.

அது நாகரத்தினத்தின் அன்னைக்கு மிகுந்த பயத்தைக் கொடுத்தது. தானும் இல்லாது போகையில் மகனை யார் கவனிப்பார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தார். தம்மிடமிருந்து பேத்தியைப் பிரித்தவர்கள் மகனிடமிருந்தும் அவன் மகளைப் பிரித்துவிட்டால்? அந்தப் பயத்தில் அபிராமியைப் பேசி முடித்தார்.

நாகரத்தினத்துக்கும் துணை தேவைப்பட்டது. காலப்போக்கில் அதை உணர ஆரம்பித்திருந்தார். மனைவி மீது பிரியமும், அவளை இழந்த வருத்தமும் இருந்தாலும் நாளாந்த வாழ்க்கை மிகுந்த கசப்பாகவும் சிரமமாகவும் போய்க்கொண்டிருந்தது. துணை என்று ஒருவர் இருந்தால் மகளையும் கூடவே வைத்துக்கொள்ளலாம் என்பதும் சேர, முழு மனத்துடனேயே அபிராமியை மணந்துகொண்டார்.

அதன் பிறகுதான் பரிமளா வீட்டினரின் இன்னொரு முகத்தைப் பார்க்க ஆரம்பித்தார்.
 
நாவினி சிறு வயதில் அன்னையை இழந்து, பருவ வயதில் தந்தையும், அன்னையாக தன்னை அரவணைத்து வளர்த்த சிற்றன்னையையும் , சகோதரர்களையும் இழந்து தனித்து நிற்ப்பது கொடுமை.

விபத்தில் இறந்த தன் குடும்பத்தோடு தானும் இறந்து இருக்கலாமே என தினமும் மனதை அரிக்கும் கேள்வியோடும், தன்னை மட்டும் ஏன் இந்த கடவுள் விட்டு வைத்திருக்கிறார் என்ற ஆதக்கத்தோடும் நகரும் ஒவ்வொரு நாளும் மரண வேதனையே......

இந்த நிலையில் நாங்கள் இருக்கிறோம் உனக்கு என்று நிற்க்கும் மனிதர்கள் வரமே.....
 
Top Bottom