• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 10

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 10


அந்த வீடு முதல் இரண்டு நாள்களும் நாவினியின் கண்ணீர்ச் சுரப்பிகளை உசுப்பிவிட்டுக்கொண்டே இருந்தது. அதன் பிறகு தன் குடும்பத்தினரோடான ஏதோ ஒரு சம்பவமோ, பேச்சோ நினைவில் வந்து சுகமான சோகமாக அவளைத் தாலாட்டியது.

ஏதோ ஒரு மூலையில் தரையில் அமர்ந்து, அந்த வீட்டையே பார்த்துக்கொண்டிருப்பாள். இலேசான கண்ணீரும் மெல்லிய புன்னகையும் முகத்தில் படர்ந்திருக்கும். சிந்தை மட்டும் என்றோ ஒரு நாள் நடந்த நிகழ்வில் தொலைந்துபோயிருக்கும். அப்படியான பொழுதுகளில் வைதேகி கூட அவளைத் தொந்தரவு செய்வதில்லை.

இந்த இழப்பையெல்லாம் கடந்து வரவே முடியாது. அவற்றிலிருந்து வெளியே வரவும் முடியாது. அந்த இழப்போடு வாழப் பழகுதல் மட்டுமே இதற்கான தீர்வு. அதை உணர்ந்திருந்த பெண்மணி, அவளறியாமல் அவளுக்கு இதமாக இருந்துகொள்வார்.

இப்போதெல்லாம் கொஞ்சமே கொஞ்சம் தெளிந்திருந்தாள் நாவினி. அன்னை போய்வந்த கோயில்களுக்குப் போய் வந்தாள். அவரின் ஊருக்குச் சென்று அவர்களின் சொந்தங்களைப் பார்த்துப் பேசி நலன் விசாரித்துக்கொண்டு வந்தாள். அப்படியே நாகரத்தினத்தின் உறவினர்களையும் பார்த்து வந்தாள்.

பரிமளா வீட்டு உறவுகள் பக்கம் மட்டும் போகவில்லை. போகக் கூடாது என்கிற எண்ணமெல்லாம் இல்லை. அவர்கள் வீசுகிற மோசமான வார்த்தைகளைத் தாங்குற சக்தி இல்லை. அதில் அவர்களை மட்டும் தவிர்த்தாள்.

மாதவனின் உதவியோடு ஒரு குடும்பத்தை அவள் வீட்டில் வாடகைக்கு இருப்பதற்குப் பேசி முடித்தாள். முறைப்படி வழக்கறிஞரை வைத்து எழுதி, அவர்களுக்குக் கீழ்ப் பகுதியை வசதி செய்து கொடுத்தாள். மாடியைத் தனக்கு என்று வைத்துக்கொண்டாள்.

அவள் போன பிறகு மாடியை வாரம் ஒரு முறை துப்பரவு செய்வதுபோல் ஒருவரை நியமித்தாள். வீடு, காணி எங்கும் கமரா பூட்டி, தன் கைப்பேசியில் பார்ப்பதுபோல் செய்தாள்.

வங்கிக் கணக்கு ஒன்றினைத் திறந்து, அதை அவள் அங்கிருந்தே கவனிப்பதுபோல் மாற்றி, வாடகைப் பணத்தைப் போடச் சொன்னாள்.

இதெல்லாம் கேசிகனின் காதுக்கு வந்துகொண்டுதான் இருந்தது. அன்று தந்தையோடு அவன் மாமா வீட்டுக்கு வந்து உதவி கேட்டவள், இன்று அவன் ஒருவனும் அதே ஊரில்தான் இருக்கிறான் என்கிற நினைப்பே இல்லாமல் அத்தனை வேலைகளையும் தானே பார்த்தாள்.

ஒருமுறை எதேற்சையாக அவளை வீதியில் வைத்துக் கண்டபோது, என்ன உதவி என்றாலும் தயங்காது கேட்கச் சொன்னான். சிறு முறுவலோடு சரி என்பதுபோல் தலையசைத்தாளே தவிர்த்து அவனிடம் ஒன்றுக்கும் வரவில்லை.

போனமுறை தந்தை உதவிக்காக ஒவ்வொருவரையும் அணுகியதையும், அவர்கள் எல்லோரும் நாசுக்காக மறுத்ததையும் பக்கத்தில் நின்றே பார்த்தவளாயிற்றே.

இங்கிருக்கிற யாரிடமும் உதவி என்று சென்று நின்றுவிடக் கூடாது என்று முன்கூட்டியே யோசித்து, அங்கிருந்து வரும்போதே அத்தனை ஆயத்தங்களோடுதான் வந்தாள்.

அவளைப் பிள்ளையாகத் தாங்கும் குடும்பம் அத்தனைக்கும் ஏற்பாடு செய்துகொடுக்க, அனைத்தையும் கச்சிதமாகச் செய்து முடித்திருந்தாள். இனி அவள் புறப்பட வேண்டும். இங்குச் செய்ய வேண்டிய அனைத்து அலுவல்களும் முடிந்திருந்தன.

கூட ஒரு குடும்பம் அவளுக்குத் துணையாக இருப்பதில் மாதவனும் வைதேகியும் பருத்தித்துறைக்குப் புறப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு இவளை விட்டுவிட்டுப் போக மனமில்லை. இவள்தான் இனிப் பயமில்லை என்று சொல்லி அனுப்பியிருந்தாள். அவர்கள் அவளுக்குச் செய்தவை மிகப்பெரிய உதவிகள். அப்படியிருக்க இன்னுமின்னும் சிரமம் கொடுப்பது அழகில்லையே.

பிரேமா அடிக்கடி அவளுக்கு எதையாவது செய்து, கொண்டு சென்று கொடுப்பதைக் கேசிகன் அறிவான். எத்தனையோ முறை வீட்டுக்கு வரும்படி அழைத்து அவள் வரவில்லையாம் என்று அவர் குறை படுவதும் தெரியும்.

அவனுக்குத்தான் அவளோடு பேசவோ அவளைப் பார்க்கவோ எந்தக் காரணங்களும் இல்லை. அதுகூட விசித்திரமாக இருந்தது. ஒரு காலத்தில் அத்தனைக்கும் அவனிடமே ஓடிவந்த பெண், இன்று அவனை எதற்கும் தேடவில்லை.

இன்னும் இரண்டு நாள்களில் நாவினி புறப்பட வேண்டும். என்னவோ மனம் அன்னையோடு அடிக்கடி செல்லும் ஊர்ப் பிள்ளையாரைத் தேடியது. நடந்தே சென்றாள். கால்களைக் கழுவிக்கொண்டு அவள் உள்ளிட முதலே, “நவி அன்ட்ரி!” என்று கூவிக்கொண்டு கோயிலுக்குள்ளிருந்து ஓடி வந்தான் சஜிதன்.

பார்த்தவள் முகத்தில் பெரிய புன்னகை. அந்தப் பெரிய மனிதன் வேட்டி சட்டை அணிந்திருந்தான். எப்போதும்போல் மூன்று விரல்களினால் தீட்டியிருந்த திருநீற்றுப் பட்டை நெற்றி முழுவதையும் நிறைத்திருந்தது. இரண்டு புருவங்களிலும் முட்டுவது போன்ற பெரிய வட்டத்தில் சந்தனப்பொட்டு. இன்றைக்கு இரண்டு சாமந்திகளைக் காதில் செருகியிருந்தான்.

பக்திப் பழம்தான்.

“சஜூ பிள்ளையார் கும்பிட்டவன். அன்னதானம் சாப்பிட்டவன். நீங்களும் பிள்ளையார் கும்பிடப்போறீங்களா? அன்னதானம் இன்னும் இருக்கு. ஆனா கோயில் அன்னதானத்தில இறைச்சி கேக்கக் கூடாது. அப்புச்சாமிக்குப் பிடிக்காது, சரியா?” என்று அவள் எந்தக் கேள்விகளும் கேட்கும் அவசியமே இல்லாது அனைத்தையும் சொன்னான் அவன்.

“நல்ல காலம் சஜூ முதலே சொல்லிட்டார். இல்லையோ ஐயாட்ட போய் இறைச்சி கேட்டிருப்பன் நான்.” என்றபடி அவனை அள்ளித் தூக்கிக்கொண்டு அவள் நிமிர்ந்தபோது அங்கே கேசிகனும் பிரேமாவும் வந்துகொண்டிருந்தனர்.

அதுவும் மகனைப் போலவே வேட்டி சட்டை அணிந்து, நெற்றியில் ஒற்றைக் கீற்றாகத் திருநீறு, சந்தனம், குங்குமம் தீட்டி, கையில் அர்ச்சனைத் தட்டுடன் வந்தவனைக் கண்டு ஒரு நொடி அவள் உள்ளம் தடுமாறிப்போயிற்று.

சிறு வயது முதலே அவள் சிந்தையை எங்குமே திரும்ப விடாது சிறைப்பிடித்து வைத்த ஆண்மகன். அவளின் காதல் கனவுகள் தொடங்கி, கலியாண ஆசைகள் வரை அத்தனையிலும் நீக்கமற நிறைந்திருந்தவன். இன்றைக்கு யாரோதான். அவன் உள்ளத்தில் இன்னொருத்தி இருக்கிறாள்தான்.

ஆனால், அவள் உள்ளம் இன்னும் வெறுமையாகத்தானே இருக்கிறது. அதனாலாக்கும் வேட்டி சட்டையில், நெஞ்சை நிறைக்கும் தோற்றத்தில் அவனைப் பார்த்ததும் ஒரு கணம் அசையமுடியாமல் நின்றுவிட்டாள். அதைச் சமாளிக்கிறவளாகச் சஜிதன் புறம் திரும்பிப் பேச்சுக்கொடுக்க முயன்றாள்.

“கொஞ்சம் முதல் வந்திருக்கலாமேம்மா. இண்டைக்கு எங்கட பூசை. அன்னதானமும் குடுத்தனாங்க.” என்று சொன்னபடி கையில் இருந்த அர்ச்சனைத் தட்டில் தேடி எடுத்து, அவள் நெற்றியில் திருநீற்றினைப் பிரேமா பூசிவிட்டார்.

சட்டென்று நிலைகுலைந்துபோனாள் நாவினி. முதன் முதலில் அவள் நெற்றியில் அவன் திருநீற்றினைத் தீற்றிவிட்ட தருணத்தில் இருந்துதான் அத்தனையும் மாற ஆரம்பித்தது. அன்றைக்குப் பிறகு அவள் கண்ட கனவுகளும், அதில் மகிழ்ந்திருந்த தருணங்களும்தான் எத்தனை?

அத்தனையும் மண்ணோடு மண்ணாயிற்று. அவனிடம் பாயப்பார்த்த விழிகளை அடக்கிக்கொண்டாலும் விழிகள் சட்டென்று கலங்கிவிட்டிருந்தன.

“உங்களுக்கு நேரமாகியிருக்கும். நீங்க போங்கோ அன்ட்ரி. நான் கும்பிட்டுட்டு வாறன்” என்று சின்னவனையும் இறக்கி விட்டுவிட்டு, விறு விறுவென்று கோயிலுக்குள் நுழைந்தாள். அதன் பிறகுமே கொஞ்ச நேரத்திற்கு அவளால் சமாளித்துக்கொள்ளவே முடியாது போயிற்று.

தம்மைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி அவள் ஓடியதும், அதன் காரணமும் கேசிகனுக்கு ஏன் என்று புரிந்தது. அவனுக்கும் அனைத்தும் நினைவில் வராமல் இல்லை. ஆனால் என்ன செய்ய?

இன்றைய நாள் முழுக்க அந்தத் தெய்வத்திடம் அவன் வைத்த வேண்டுதல்கள் எல்லாமே அவளுக்கானதாகத்தான் இருந்தன. அவள் உள்ளத்தில் அமைதியைக் கொடுத்து, அவளுக்கு நல்ல வாழ்க்கை ஒன்றை அமைத்துக்கொடு இறைவா என்றுதான் வேண்டினான்.

“ஏனப்பு திடீர் எண்டு முகம் கலங்கிப்போயிற்று அவாக்கு?” என்று விசாரித்தார் பிரேமா.

உள்ளதைச் சொல்ல முடியாமல், “அபி அன்ட்ரின்ர நினைவு வந்திருக்கும் அம்மா. என்ன ஏது எண்டு கேக்காதீங்க.” என்று சொன்னான்.

“இருக்குமப்பு. அபியும் இப்பிடித்தான். கோயில் குளம் எண்டு இருந்தவாதானே. என்ன கறுமப் பிறப்போ தெரியேல்ல. விவரம் அறியா வயசில பெத்த தாயைப் பறிகுடுத்தது காணாது எண்டு, வாழ வேண்டிய வயசில மொத்தக் குடும்பத்தையும் இழந்துபோட்டு நிக்கிறா.”

நேசித்தவனையும் சேர்த்து இழந்திருக்கிறாள். இதை அன்னையிடம் சொல்ல முடியாமல், “நில்லுங்கம்மா வாறன்.” என்று சொல்லிவிட்டு விலகி நடந்தான். அவனுக்குத் தன்னைச் சமாளித்துக்கொள்ள வேண்டியிருந்தது.

அப்பம்மாவோடு நிற்காமல் அவளைத் தேடிக்கொண்டு கோயிலுக்குள் ஓடி வந்தான் சஜிதன். அதுவும் பெரிய மனிதனைப் போன்று விநாயகரைப் பார்த்து மூன்று முறை தலையில் குட்டிக் கும்பிட்டான்.

அவள் அழைத்துச் செல்லும் அவசியமே இல்லை. வலப்பக்கத்திலிருந்து இடமாகப் பிள்ளையார் சந்நிதியை அவளுக்கு முந்திக்கொண்டு சுற்றி வந்து, கடைசியாகச் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியவனைக் கண்டு, நாவினியின் துன்பங்கள் எல்லாம் அகன்றே போயின.
அவ்வளவு நேரமாக யாரிடமும் பகிர முடியா வலியில் துடித்துக்கொண்டிருந்த அவள் இதயம் இலேசாகிப் போயிற்று.

உண்மையில் அவன் ஒரு தெய்வக் குழந்தையாகத்தான் தெரிந்தான். அவன் உயரத்துக்கு அமர்ந்து, “பிள்ளையாரப்பாட்ட என்ன கேட்டனீங்க?” என்று கனிவுடன் கேட்டவளுக்கு ஏனோ விழிகள் கலங்கும் நிலை.

“இரவுக்கு அப்பும்மா மீன் பொரிக்கோணும் எண்டு கேட்டனான்.” என்றதும் தன்னை மீறிச் சிரித்திருந்தாள்.

அந்த முகத்தோடு கோயிலை விட்டு வெளியே வந்தவளைக் கண்ட பிறகே கேசிகனின் உள்ளம் அமைதியாயிற்று. இதற்குள் அவளுக்கும் அன்னதானச் சாப்பாடு கட்டி எடுத்துக்கொண்டு வந்திருந்தார் பிரேமா.
 

Vishakini

Moderator
Staff member
அதை அவள் கையில் கொடுத்துவிட்டு எல்லோருமாகச் சேர்ந்து வெளியே வந்தார்கள்.

கேசிகன் போய் பைக்கை எடுத்துக்கொண்டு வந்தான். சஜிதன் முன்னால் ஏறிக்கொண்டான். மகன் பின்னால் ஏறுவதற்கு முதல், “நீங்க எப்பிடியாச்சி போவீங்க?” என்று கேட்டார் பிரேமா.

“உங்களுக்குத்தான் கொஞ்சம் தூரம். எனக்கு நடந்துபோற தூரம்தானே அன்ட்ரி. நான் போவன், நீங்க போயிற்று வாங்க.”

அது உண்மை என்பதில் அவளிடம் சொல்லிக்கொண்டு கேசிகனின் பின்னால் ஏறி அமர்ந்தார் பிரேமா.

“ஓட்டோ கூப்பிடவா.” என்றான் அவன் பைக்கை எடுக்காமல்.

“இந்த நாலடி தூரத்துக்கா?” என்று கேட்டுச் சிறு புன்னகை சிந்தினாள் அவள்.

பார்வை ஒரு கணம் அந்தப் புன்னகையில் படிந்து மீள, “சரி, கவனமா போ!” என்றுவிட்டு அவன் பைக்கை உதைத்துக் கிளப்பினான். இதற்குள் பிரேமாவின் காதோரமாக வந்து, “அன்ட்ரி, இண்டைக்கு மீன் பொரியல் வேணுமாம் எண்டு ஆள் பிள்ளையாரக் கேட்டவராம். செய்து குடுங்கோ.” என்றாள் நாவினி குரலைத் தணித்து.

அவ்வளவு நேரமாக முன்னால் அமர்ந்திருந்து, வாயால் தகப்பனின் பைக்கை மிக வேகமாகச் செலுத்திக்கொண்டிருந்த அந்தக் கள்ளச் சாமியாரின் பாம்புச் செவிகளில் அவள் சொன்னது விழுந்திருந்தது. தகப்பனின் தோள்களைப் பற்றிக்கொண்டு பைக்கின் மீதே எழுந்து நின்று, “நவி அன்ட்ரி, சஜூக்கு எல்லாம் கேட்டுட்டுது. நீங்க சொல்லாட்டியும் அப்பும்மா செய்து தருவா. ஏன் எண்டால் பிள்ளையார் வந்து அப்பும்மாட்டச் சொல்லுவார்.” என்றான் அவன்.

மகனின் குறும்பில் முகம் மலர நகைத்தான் கேசிகன். “அடேய் பெரிய மனுசா! போதும் இரடா!” என்று நகை முகம் மாறாமலேயே அவனைத் திருப்பி மறுபடியும் அமரவைத்துக்கொண்டான்.

பிரேமாவுக்கும் பேரனின் குறும்புகளில் உள்ளம் பாகாகக் கரைந்தே போயிற்று. “வீடு முழுக்கக் கழுவித் துடைச்சுப்போட்டு வந்தனான். வீட்டுக்குப் பின்னால இருக்கிற வெளி அடுப்பிலதான் செய்துகுடுக்கோணும்.” என்று எட்டிப் பேரன் தலையைக் கலைத்துவிட்டார்.

அவர்கள் புறப்பட்டதும் தானும் நடக்க ஆரம்பித்தாள் நாவினி. ஒற்றையாக நடந்து வந்துகொண்டிருந்தவளைத் திரும்பிப் பார்த்த பிரேமாவின் மனத்தில் பெரும் பாரம்.

“இனி அங்க போயும் இப்பிடித்தான் எல்லாத்தையும் தனியா பாத்துக்கொண்டு, அவாக்கு அவாவே சமைச்சு, தனியாவே இருந்து சாப்பிட்டு, தனியாவே இருந்து எண்டு என்னவோ போ தம்பி. தெய்வம் தெய்வம் எண்டு அந்தத் தெய்வத்தையே நம்பி வாழுறோம். ஆனா எங்களுக்குத்தான் எல்லா துன்பமும்.” என்று புலம்பினார்.

கண்ணாடி வழியே அவளைப் பார்த்தவனின் நெஞ்சிலும் ஒரு வலி ஊடுருவிற்று. மொழி இறந்த நேரம் சுற்ற வர அத்தனை பேர் இருந்தும், மகன் கைக்குள் இருந்தும் அவன் பட்ட பாடுகள் என்ன என்று அவனுக்குத் தெரியும்.

இன்றும் சில நேரங்களில் அவள் இழப்பு பெரிதாகத் தாக்குகையில் அப்படியே இருந்துவிடுவான். அதிலிருந்து மீள நிறைய நேரம் எடுக்கும்.

அத்தனை நாள்களும் போக்குக் காட்டிக்கொண்டிருந்த நாவினியை அடுத்த நாள் விடவில்லை பிரேமா. தானே வந்து கையோடு அவளைக் கூட்டிக்கொண்டு போனார்.

அவன் எப்படி எல்லாம் அவளுக்கு வரைந்து காட்டினானோ அப்படியே இருந்தது அந்த வீடு. வீட்டின் உள் அலங்காரமும் அழகாய், மனத்துக்கு இதம் சேர்க்கும் வகையில் நேர்த்தியாய் இருந்தது. வாங்கிப் போடப்பட்டிருந்த பொருள்கள் அனைத்தும் இன்றைய அவனின் செல்வச் செழிப்பைச் சொல்லின. நன்றாக இருக்கிறான். மகிழ்வோடு உணர்ந்த மனம் ஊமையாய் அழாமல் இல்லை.

எல்லாவற்றையும் விட, இந்த உலகத்திலேயே நிறைமொழி இல்லாது போனாலும் அந்த வீட்டில் இன்னும் முழுமையாக வாசம் செய்கிறாள் என்று சொல்லுமளவில் ஷோ கேஸ், டிவி ஸ்டாண்ட் என்று எங்குமே அவளின் புகைப்படங்கள். அருகில் சென்று ஒவ்வொன்றாகப் பார்த்தாள்.

திருமணத்திற்கு முதலாக இருக்க வேண்டும். கடற்கரையோரப் பின்னணியில் பனையோலைக் குடையின் கீழ் இருவரும் சிரித்த முகமாக அமர்ந்திருந்தனர். நடுவில் இருந்த மேசையில் ஐஸ் நிறைந்து தளும்பும் ஏதோ குளிர்பானங்கள்.

அவன் முகத்தையே பார்த்தாள். அங்கே அவளைத் தவற விட்டதற்கான எந்தச் சோகமோ, துக்கமோ, துயரமோ இல்லவே இல்லை.

நெஞ்சில் கூர் ஈட்டி ஒன்று பாய்ந்துபோயிற்று. கண்ணோரம் இலேசாகக் கரித்தது. அதை மறைக்கும் மெல்லிய புன்னகையோடு அடுத்த புகைப்படம் நோக்கி நகர்ந்தாள்.

அது திருமணமான புதிதில் எடுத்ததாக இருக்க வேண்டும். அவள் அழகான சுடிதார் அணிந்து, உச்சியிலும் நெற்றியிலும் திலகமிட்டு, கழுத்தைப் புதுத் தாலி அலங்கரிக்க, பூரிப்புடன் நின்றிருந்தாள். அவளை ஒற்றைக் கரத்தினால் இலேசாக அணைத்தபடி அவன் நின்றிருந்தான். இருவர் முகங்களிலும் மலர்ச்சிக்குக் குறைவேயில்லை.

இன்னொன்று கோயிலின் பின்னணியில் அவள் வயிறு நன்றாக மேடிட்டிருந்தது. அவன் வேட்டி சட்டையில் நின்றிருந்தான். அடுத்தது அவள் வைத்தியசாலைக் கட்டிலில் களைத்துச் சோர்ந்த முகத்துடன் படுத்திருந்து புன்னகைக்க, இவன் மகனைக் கையில் ஏந்தியபடி அவள் புறமாகத் தலையைச் சரித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

மகன் தவழ்கையில், விளையாடுகையில் என்று குட்டி குட்டி ஃபிரேம்களில் அங்கிருந்த புகைப்படங்கள் எல்லாமே வரிசையாக அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை அப்படியே சொல்லின.

சுவரில் சற்றுப் பெரிதாக இரண்டு புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. ஒரு பக்கம் அவனும் அவளும் திருமணக் கோலத்தில் நிற்கும் புகைப்படம் என்றால், இன்னொரு பக்கம் அவள் மகனை வைத்திருக்க அவன் அவர்கள் இருவரையும் அரவணைத்துப் பிடித்திருப்பது போன்ற புகைப்படம்.

இன்னுமே கொஞ்சம் கிட்டப்போய்ப் பார்த்தாள். குழந்தைச் சிரிப்பில் சின்னவன் மனத்தைக் கொள்ளை கொண்டான் என்றால், மலர்ந்து விகசித்திருந்த கணவன் மனைவி இருவர் முகங்களும் நெஞ்சைப் பிசைந்தது. தன் இழப்பின் அளவு இன்னுமே ஆழமாகப் புரிந்த அந்த நிலையிலும் மொழி இருந்திருக்கலாம் என்று தோன்றிற்று.

தன் கலக்கங்களைக் காட்டாமல் திரும்பி, “எல்லா ஃபோட்டோஸும் நல்ல வடிவா இருக்கு.” என்றாள் அவர்கள் இருவரிடமும் பொதுவாக.

ஒரு நெடிய மூச்சுடன், “மொழிக்குத்தானம்மா இப்பிடி வீடு முழுக்கப் படம் வச்சிருக்கிறது பிடிக்கும். அவா போன பிறகும் நாங்க எடுக்கேல்ல. ஆருக்கு என்ன பாவம் செய்தமோ, அருமையான பிள்ளையைப் பறி குடுத்துப்போட்டு நிக்கிறம்.” என்றபடி கையில் இருந்த பொருள்களை உள்ளே வைக்க நடந்தார் பிரேமா.

“அவா இருந்திருக்கலாம். நீங்க ரெண்டு பேரும் அந்தளவுக்குக் கண்ணுக்கு நிறைவான ஜோடி.” என்று அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் நாவினி.

கேசிகன் இறுகிப்போய் நின்றிருந்தான். அவனால் அவள் முகம் பார்க்க முடியவில்லை. தவறிழைத்தவன் போன்ற அந்த உணர்வு இப்போதும் அவனை ஆட்டிப்படைத்தது. “இரு, வாறன்.” என்று அங்கிருந்த சோஃபாவை காட்டிச் சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்துகொண்டான்.

தன்னைச் சமாளித்துக்கொண்டு வெளியே வருகையில் வேறு உடைக்கு மாறியிருந்தான்.

பிரேமா தேநீர் கொண்டுவந்து தந்தார். அவர் பின்னால் கொக்கிஸ் பலகாரம் நிறைந்த தட்டை ஏந்திக்கொண்டு வந்தான் சஜிதன். அவளருகில் தானும் அமர்ந்து அவளுக்கும் கொடுத்துத் தானும் சாப்பிட்டான்.

“அது நவி அன்ட்ரிக்கு.”

“அன்ட்ரி இவ்வளவும் சாப்பிட மாட்டா அப்பும்மா. எண்ணெய்ச் சாப்பாடு கனக்கச் சாப்பிட்டா வயிறு சரியில்லாம போயிரும்.” அவர் அவனுக்குச் சொன்னதை அவருக்கே திருப்பிப் படித்தான் அவர் பேரன்.

“பாத்தியாம்மா கதைய. ஒரு சொல்லு விடாம எல்லாத்தையும் மண்டைக்க வச்சிருந்து எங்களுக்கே திருப்பிச் சொல்லுறது.” பெருமையோடு பேரனைப் பற்றிப் புகார் படித்தார் அவர்.

அவள் தேநீர் பருகி முடிக்கும் வரை அவளோடு பேசிக்கொண்டு இருந்துவிட்டுப் பகல் சமையலுக்கான வேலையை ஆரம்பித்தார் பிரேமா. “தம்பி! இந்தத் தேங்காயை ஒருக்கா திருவித் தாப்பு.”

“தாங்க அன்ட்ரி. நான் செய்றன்.” என்று வந்தாள் நாவினி.

“இல்ல இல்ல நவி அன்ட்ரி. திருவளை கைய வெட்டிப்போடும். சஜூக்கு வெட்டினது. அது அப்பா மட்டும்தான் திருவுவார்.” என்று நடுவில் வந்தான் சஜிதன்.

“அச்சோ! சஜிதனுக்கு வெட்டினதா? எங்க?”

“இந்தா இஞ்ச.” அடையாளமே இல்லாத அந்தப் பிஞ்சு உள்ளங்கையில் அடையாளம் காட்டினான் அவன்.

“ஓம் என்ன. பெருசாத்தான் வெட்டி இருக்கு. இனி நீங்க திருவாதீங்கோ.” என்று அவன் கையில் முத்தமிட்டுவிட்டு அவனையும் தூக்கிக்கொண்டு சமையல் கட்டுக்கு நடந்தாள் அவள்.
 

Kalai Karthi

Active member
நாவினி ஊருக்கு போவாள் தானே. கேசி நிறைவான வாழ்க்கை முடித்துவிட்டான். குழந்தை போதும் அவனுக்கு.
 

Chitra ganesan

Active member
ஒவ்வொரு பதிவு படிக்கும் போதும் கேசியை கட்டி வச்சி வெளுக்கனும்ன்னு ஆத்திரம் வருது.
 
Top Bottom