• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 11

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 11


பெரிய சமையலறை. அதில் கிட்சன் செட் பூட்டியிருந்தார்கள். அங்கே பிரேமா முருங்கை இலைகளை ஆய ஆரம்பித்திருந்தார். சஜிதனைத் தூக்கிச் சமையல் மேடையில் இருத்திவிட்டு, “தாங்க அன்ட்ரி, நான் செய்றன்.” என்று முருங்கை இலைகள் இருந்த சுளகைத் தன் புறம் திருப்பிக்கொண்டாள் நாவினி. சஜிதனும் அவளுக்கு உதவி செய்தான்.

“என்ன அன்ட்ரி, இண்டைக்கு மரக்கறிச் சமையலோ?” சஜிதனை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கேட்டாள் நாவினி.

“இல்லையே. இண்டைக்கு விடியவே என்ர அப்பா எங்கட கோழி ஒண்ட அறுத்தவரே. இண்டைக்குக் கோழிக் கறியெல்லா அப்பும்மா. முட்டையும் அவிச்சனீங்க எல்லா?” என்று எல்லோரையும் முந்திக்கொண்டு அன்றைய சமையல் மெனுவைச் சொன்னான் சின்னவன்.

எல்லோர் முகத்திலும் விரிந்த முறுவல். அதுவும் நாவினியால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. வாய் விட்டுச் சிரித்தபடி சின்னவனை அணைத்து முத்தமிட்டாள். அவள் முகம் பார்த்த கேசிகன் விழிகளில் கோடாகக் கண்ணீர் படர்ந்துபோயிற்று.

பிரேமாவுக்கும் புன்னகையில் மலர்ந்திருந்த அவள் முகம் பார்க்கையில் மிகுந்த நெகிழ்ச்சி. “இந்தப் பெரிய மனுசனுக்கு மூண்டு நேரமும் மச்சம் குடுத்தாலும் காணாது.” என்று பேரனைச் செல்லமாகத் திட்டிக்கொண்டார்.

அன்று காலையே பகல் சாப்பாட்டுக்கு இங்கே வந்துவிடும்படி தன் அன்னைக்கு அழைத்துச் சொல்லியிருந்தார் பிரேமா. அவரும் வந்துவிட உணவு வேளையும் நன்றாகவே கழிந்தது. மகனுக்கும் கொடுத்துத் தானும் சாப்பிட்ட கேசிகன் அவளை மிகவுமே பாதித்தான்.

உலகத்தின் துன்பம் எதுவும் அண்டா வயதில், என்ன வடிவம் என்றே தெரியாமல், வெறும் மாவில் அவன் சுட்டுத் தந்த ரொட்டிகளை இருவரும் சாப்பிட்டிருக்கிறார்கள். எத்தனையோ மழை நாள்களில் இருவருமாக விறகடுப்பை எரித்து, தேநீர் ஊற்றிக் குடித்திருக்கிறார்கள். சின்னவர்களாகவே இருந்திருக்கலாம். ஓயாத இந்த அலைப்புறுதலும், உயிர் கொள்ளும் இந்த வேதனைகளும் அவர்களை அண்டாமல் இருந்திருக்கும்.

“ஒரு கலியாணத்தக் கட்டுங்கோ குஞ்சு. உங்களுக்கும் வயசு போகுதெல்லோ.” என்றார் பிரேமா பேச்சோடு பேச்சாக.

ஒன்றும் சொல்லாமல் மெல்லிய புன்னகையோடு அவரைப் பார்த்தாள் அவள்.

“என்னம்மா, இப்பிடிப் பாத்தா என்ன அர்த்தம்? இல்ல இஞ்ச ஆரையும் பாக்கிறதோ? ஊரோடயே வந்து இருக்கப்போறீங்களா?” அன்னை இல்லாத பெண். தன் ஆசைகளைச் சொல்ல ஆள் இல்லாமல் நிற்கிறாளோ என்றெண்ணி வினவினார் பிரேமா.

“இஞ்ச கட்டி நான் என்ன செய்ய அன்ட்ரி? அங்கதான்… மேனகா அன்ட்ரியும் சொல்லித்தான் அனுப்பினவா. ஆரையோ பாத்திருக்கிறன் எண்டும் சொன்னவா. அங்க போய்த்தான் யோசிக்கோணும்.” என்று சொன்னாள் அவள்.

இந்தப் பேச்சுக்குள் கேசிகன் வரவில்லை. ஆனால், கைப்பேசியைப் பார்ப்பதுபோல் அமர்ந்திருந்தாலும் கவனம் முழுக்க இங்கேதான் இருந்தது. அவள் திருமணத்திற்கு ஏதோ ஒரு வகையில் தயாராகிறாள் என்கிற விடயம் பெரும் ஆசுவாசத்தை உண்டாக்கிற்று.

பிரேமாவின் அன்னை பேரனை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டுத் தன் மடியில் இருந்த சஜிதனைக் காட்டி, “இவனுக்கும் ஒரு அம்மா வேணும். சுத்தி ஆயிரம்பேர் இருந்தாலும் அம்மா எண்டு ஒருத்தி இருக்கிற மாதிரி வருமா சொல்லம்மா? எங்க, இவன்ர தகப்பன் கேக்கோணுமே. அவள் பேத்தி இருக்கிற வரைக்கும் சந்தோசமா இருந்தானம்மா. ஆரின்ர கண் பட்டுதோ… வாழ வேண்டிய வயசில போய்ட்டாள்.” என்று கண்களைத் துடைத்தார்.

“அம்மம்மா!” என்று அதட்டினான் கேசிகன். அவன் பார்வை எச்சரிக்கும் விதமாக மகனைத் தொட்டு மீண்டது.

அவருக்கும் தன் தவறு புரிந்தது. பூட்டக் குழந்தையை அள்ளிக் கொஞ்சினார். ஆனாலும் விடாமல், “இந்தளவு மகனில அக்கறையும் பாசமும் இருக்கிறவன் அவனுக்குத் தேவையானதையும் செய்யோணும் அப்பு.” என்று வற்புறுத்தினர்.

அவர் சொல்வது அவளுக்கும் சரியாகப் பட்டதில் அவனைக் கேள்வியாக ஏறிட்டாள் நாவினி.

அதைக் கண்டுவிட்டு, “இப்பிடியே இருந்து என்ன செய்யப் போறானாம் எண்டு கேளம்மா. என்னத்த மனதுக்க வச்சிருக்கிறானோ. மாட்டனே மாட்டன் எண்டு நிக்கிறான்.” என்றார் அந்த வயதான பெண்மணி.

பிரேமாவுக்கும் தன் அன்னையின் பேச்சில் உடன்பாடு என்பதில், “அம்மா சொல்லுறதையும் யோசிங்கோவன் தம்பி.” என்றார் அவரும்.

“பேசாம இருங்கம்மா!” என்று அதட்டிவிட்டு எழுந்துபோனான் அவன்.

அவனுக்குக் கோபம் என்று புரிந்தது. அவனையும் அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.

அவனோடு அவளைப் பிணைத்தவை வெறும் ஒரு சில நொடித் தருணங்கள் மாத்திரமே. அவைதான் அவன் நினைப்பைக் கடலில் போட்ட நங்கூரமாக அவளுள் பதிய வைத்தவை.

அவையே அவளை இத்தனை ஆழத்திற்குப் போட்டு ஆட்டுகையில், அவன் ஊனும் உயிருமாக வாழ்ந்திருக்கிறான். அதன் சாட்சியாக மகனையும் கையில் வைத்திருக்கிறான். அந்த நினைவுகள் என்னவெல்லாமோ செய்யுமே. நெடிய மூச்சு ஒன்று அவளிடத்திலிருந்து தானாக வெளியேறிற்று.

மாலையானது. புறப்பட ஆயத்தமானாள். இனி அவளைப் பார்க்க முடியாது. நாளைக்குப் புறப்பட்டுவிடுவாள் என்பதில், “இனி எப்பயம்மா வருவீங்க?” என்றார் பிரேமாவின் அன்னை.

“தெரியா பாட்டி. ரெண்டு வருசக் கென்ட்ராக்ட் போட்டுத்தான் வீடு வாடகைக்குக் குடுத்திருக்கிறன். அதையெல்லாம் மாதவன் அங்கிள் பாப்பார். அதால இனி எனக்கு இஞ்ச எந்த அலுவலும் இல்லை. அதவிடச் சும்மா வந்து இஞ்ச நான் என்ன செய்ய?” என்று கேட்டாள்.

“ஏன் நாங்க இல்லையோ? அடிக்கடி வந்திட்டுப் போங்கோம்மா.” பரிவும் வாஞ்சையுமாகச் சொன்னார் அவர்.

போனமுறை வந்தபோது இதே நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்று கேட்க நினைத்தாலும் கேட்கவில்லை அவள். அவரைப் பார்த்து இலேசாக முறுவலித்தாள்.

அப்படி, அமைதியாக அவள் சிந்தும் முறுவல்களின் பின்னே பேச விரும்பாத பல விடயங்கள் புதைந்திருக்கின்றன என்று எண்ணினான் கேசிகன்.

சஜிதனை ஆசையாகத் தூக்கி வைத்துக்கொண்டு, “சஜுக்குட்டி கவனமா இருக்கோணும். வடிவா படிக்கோணும். அடுத்த முறை நான் பாக்கேக்க எங்கட சஜுக்குட்டி பெரிய மனுசனா இருப்பார் எண்டு நினைக்கிறன்.” என்றவளை முடிக்க விடாமல், “இப்பவும் நான் பெரிய மனுசன்தான். அப்பும்மா அப்பிடித்தான் கூப்பிடுறவா.” என்று சொன்னான் அவன்.

எல்லோர் முகத்திலும் விரிந்த முறுவல். “அது உண்மைதான். எண்டாலும் உங்கட அப்பா மாதிரி இன்னும் பெரிய மனுசனா வளரோணும்தானே.” என்றதற்கும், “அதுக்குத்தான் ஒவ்வொரு நாளும் இறைச்சி சாப்பிடுறனான்.” என்று சொன்னான் அவன்.

நாவினிக்கு ஏனோ சிரிப்போடு சேர்த்துக் கண்ணீரும் வந்தது. அவனை இறுக்கி அணைத்துக் கொஞ்சிவிட்டு இறக்கிவிட்டாள்.

மொத்தமாகப் புறப்படுகிறாள் என்று சஜிதனுக்குத் தெரியாது. அவள் தன் வீட்டுக்குத்தான் போகிறாள் என்று எண்ணிக்கொண்டு, “நாளைக்கு அப்புச்சாமிக்கு வாழை இலை அறுக்க நானும் அப்பாவும் பெரிய கத்தி கொண்டு வருவம் அன்ட்ரி.” என்று சொன்னான்.

“சரி சரி வாங்கோ. எப்ப வேணுமெண்டாலும் வந்து அறுத்துக்கொண்டு போங்கோ என்ன.” என்றவள் இலேசாகப் படர்ந்திருந்த கண்ணீருடனேயே எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டாள்.

அவன் அனுமதியே இல்லாமல் அவளின் முதல் ஜெர்மன் பயணமும், அன்று பேச முடியாமல் கண்ணீர் வழிய அவனையே பார்த்தபடி அவள் நின்றதும், அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு நம்பிக்கை வாக்குறுதி கொடுத்ததும் நினைவில் மின்னி மறைய, அப்படியே நின்றுவிட்டான் கேசிகன்.

என்னவோ அவன் உள்ளத்தின் ஒரு பகுதியையே பிய்த்துக்கொண்டு போவதுபோல் ஒரு வாதை. வாயைக் குவித்துக் காற்றை ஊதி நெஞ்சின் அடைப்பை நேராக்க முயன்று தோற்றான்.

“ஓட்டோ பிடிச்சு விட்டுட்டு வாறனம்மா.” என்று அன்னையிடம் சொல்லிவிட்டு அவளிடம் விரைந்து வந்தான்.

“நவி நில்லு! ஓட்டோ கூப்பிடுறன்.”

“இல்ல வேண்டாம். வெய்யிலும் நல்லா குறஞ்சிட்டுது. நான் நடந்தே போறன்.” என்றுவிட்டுத் திரும்பவும் நடக்க ஆரம்பித்தாள் அவள்.

போகிறவளையே ஒரு கணம் பார்த்துவிட்டு, “நில்லு, நானும் வாறன்!” என்று ஓடி வந்தவனைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்து நின்றுவிட்டாள்.

முன்னரும் இப்படித்தான். இலேசாக இருள் படிந்துவிட்டாலும் அவளோடு வந்து, அவளை விட்டுவிட்டுத்தான் திரும்புவான். அப்போது இருவர் வீடுகளுக்கு இடையிலான தூரம் என்னவோ நான்கே நான்கு வீடுகள்தான். இப்போது அவர்களுக்குள் இருப்பது இருவரும் சேர்ந்து கடக்கவே முடியாத அளவிலான தூரம். அப்படியிருக்க இவன் எதுவரை வரப்போகிறானாம்?

“அது நானே போவன்.” என்றாள் திணறி.

அவளையே பார்த்தான் அவன்.

“இல்ல, இன்னும் இருட்டேல்லையே. அதான்.”

“பரவாயில்ல, நட!”

வேறு வழியற்று அவனுடன் சேர்ந்து நடந்தாள் நாவினி.

“இஞ்ச இருந்து எப்ப வெளிக்கிடுறாய்?”

“நாளைக்கு விடிய வெள்ளனவே.”

“ஓ! ஆனா நாளைக்கு இரவுதானே ஃபிளைட்.”

“ஓம், ஆனா பருத்தித்துறை போயிட்டுத்தான் கொழும்பு போகோணும்.”

“எயாபோர்ட் எப்பிடிப் போறாய்?”

“மாதவன் அங்கிள் கூட்டிக்கொண்டு போய் விடுவார்.”

“வேற ஏதும் ஹெல்ப் வேணுமெண்டா கேளு. யோசிக்காத.”

ஒட்டவைத்த முறுவல் ஒன்றுடன் சரி என்று தலையசைத்தாள்.

அதற்குமேல் அவர்களுக்குள் பேச்சுத் தடைப்பட்டுப் போயிற்று. உள்ளங்கள் மட்டும் பெரும் சத்தமாக இரைச்சலிட்டன.

தன் முடிவுகளில் ஏதும் தவறு இருக்கிறதா என்று கேட்க வேண்டும் போலவே இருந்தது. அதே நேரத்தில் அதைக் கேட்க மிகவுமே பயந்தான். பிரயோசனம் இல்லாத கேள்வி. அது அவளுக்கு எந்த நன்மையையும் பயக்கப்போவதில்லை. ஆனால், அதற்கான பதில்
இல்லாமல் இனியும் அவன் நாள்கள் நிம்மதியாகக் கழியும் என்கிற நம்பிக்கை அவனுக்கு முற்றிலுமாகப் போயிருந்தது.
 

Vishakini

Moderator
Staff member
அவளாவது எதையாவது கேட்பாளா என்று பார்த்தான். அவர்களுக்குள் அப்படி எதுவும் நடக்கவே இல்லை என்பதுபோல் இருந்தது அவளின் அடர்ந்த அமைதி.

திரும்பி அவள் முகம் பார்த்தான். அந்த நாள்களில் இருந்த குறும்புத்தனம், துள்ளல், துடிப்பு எதுவுமே இல்லை. பக்குவப்பட்ட பெண்ணாக என்பதை விடவும் காயத்துக்கு மேல் காயம் பட்டு, வாயிருந்தும் ஊமையாகிப்போன அடர்ந்த அமைதி அவள் முகமெங்கும் வியாபித்திருந்தது.

காலத்திற்கும் தன் நெஞ்சிலும் கையிலும் தாங்க ஆசைப்பட்ட பெண். ஆனால் இன்று… “சொறி!” என்றான் தன்னை மீறி.

காரணம் புரியாமல் திரும்பி அவன் முகம் பார்த்தாள் அவள்.

அவள் பார்வையைச் சந்திக்க முடியாமல் நேரே பார்த்து நடந்தபடி, “கிட்டத்தட்ட ரெண்டு வருசம். உன்னட்ட இருந்து எந்தச் சத்தமும் இல்ல. உன்ர அம்மாவோட கதைச்சனான். இனி உன்ர எதிர்காலம் அங்கதான் எண்டுற மாதிரிச் சொன்னா. அதவிட ஏதோ ஒரு வகைல நான் எடுத்தது அவாக்குப் பிடிக்கேல்ல எண்டு தெரிஞ்சது. வச்சிட்டன்.” என்றவன் அனறைய நாளுக்கே போகிறவன் போன்று சில நொடிகள் மௌனம் காத்தான்.

“ஆனா நீ என்னோட கதைக்க நினைச்சிருந்தா கதைச்சிருக்கலாம். அதே ஊர், அதே வீடு எண்டு நான் எங்கேயும் மாறேல்ல. என்ர ஃபோன் இடைல துலஞ்சிட்டுதுதான். புது ஃபோன் வாங்கிப்போட்டு, உடனேயே உனக்கும் அந்த நம்பர எழுதி அனுப்பினனான். உன்ர அம்மாக்கும் மெசேஜ் போட்டனான். உனக்கு அனுப்பின எல்லா கடிதத்திலயும் கட்டாயமா என்ர புது நம்பர், கடை நம்பர், மயூரன்ர நம்பர் எண்டு எல்லா நம்பரும் இருக்கும்.” என்றான் ஒருவிதமான கசப்புடன்.

அந்த நாள்களில் எல்லாம் அவன் தவித்த தவிப்புகள் யாரும் அறியாதவை. ஒருமுறையாவது தொடர்புகொண்டுவிட மாட்டாளா என்று ஒவ்வொரு முறை கடிதம் எழுதுகையிலும் அவன் மனம் ஏங்கியிருக்கிறது. எப்படியடி உன்னால் என்னை மறக்க முடிந்தது என்று தனக்குள் அவன் போராடிய போராட்டம் மிகப் பெரியது.

அவனாக ஆசைப்பட்டு அவளைத் தாண்டிப் போகவில்லை என்று நாவினிக்கு எப்போதோ தெரியும்தான். என்றாலும் இன்று அவன் வாயாலேயே அவளுக்காக அவன் எடுத்த முயற்சிகளையும் பட்ட பாடுகளையும் அறிந்துகொண்டபோது வெடிக்கப் பார்த்த விம்மலை அடக்குவதே அவளுக்குப் பெரும் பாடாயிற்று.

“மொழியை எனக்குப் பேசின நேரம் நானும் முடிஞ்சவரைக்கும் தள்ளிப்போட்டுக்கொண்டுதான் வந்தனான். ஒரே ஊர்ல இருந்துகொண்டு ஒரு அளவுக்கு மேல மறுக்க ஏலாம போச்சு. உனக்கும் கடிதம் எழுதி எழுதிக் களைச்சுப்போனன். கடைசியா எண்டு நினைச்சு உன்ர அம்மாக்கு எடுத்தனான். ஒருக்கா இல்ல, நிறையத்தரம். நான் அனுப்பின மெசேஜுகளுக்கும் பதில் இல்ல. அதுக்குப் பிறகுதான்… எப்பிடியும் இப்பிடியே இருக்க ஏலாது எண்டுதான் மொழியைக் கட்டுறதுக்கு ஓம் எண்டு சொன்னனான்.”

தன்னை நியாயப்படுத்த முயன்றானா, இல்லை நான் உன்னை ஏமாற்றவில்லை என்று சொல்ல நினைத்தானா தெரியாது. கனத்த மனநிலையோடு அன்றைய தன் நிலைப்பாட்டினைச் சொன்னான்.

அப்போதும் தன் மௌனத்தைத் தொடர்ந்தபடி நடந்தாள் நாவினி.

“ஏன் அப்பிடிப் பதிலே போடாம விட்டனி நவி?”

இதயத்தையே வெட்டிக் கிழித்து அறுவைச் சிகிச்சையை முடித்துவிட்டு வந்து உனக்கு என்ன நோய் என்று விசாரிக்கிறவனிடம் என்ன சொல்வது? பார்வையைக் கண்ணீர் மறைத்தாலும் அவனைப் பார்த்து முறுவலிக்க முயன்றாள் நாவினி.

“அன்ட்ரி குடுக்க வேண்டாம் எண்டு சொன்னதால நீ உன்ர நம்பர தரேல்ல. அது எனக்கு விளங்குது. ஆனா ஒரு இக்கட்டான நிலைல ஒரு மெசேஜாவது எனக்கு நீ அனுப்பியிருக்கலாமே? அங்க என்ன நடக்குது, நீ எப்பிடி இருக்கிறாய், உன்ர மனநிலை என்ன எண்டு தெரியாம அந்த நேரம் பைத்தியம் பிடிக்காததுதான் குறை.”

ஒன்றுமே சொல்லாமல் இப்போதும் கண்ணீருடன் புன்னகைத்தாள் நாவினி. அந்தப் புன்னகை தரும் இனம்புரியா வலியைத் தாங்க முடியாமல், “என்ன நவி?” என்றான் அவன் தவிப்புடன்.

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “எனக்கும் உங்களுக்கும் இடையில ஏதோ ஒண்டு இருக்கு எண்டுதான் அவ்வளவு நாளும் இருந்தனான். அந்த நம்பிக்கைலதான் போன முறை உங்களைப் பாக்க இஞ்ச ஓடி வந்ததும். வந்து பாத்தா…” என்றவள் ஒருமுறை பார்வையை அவனிடமிருந்து அகற்றினாள்.

அவள் உள்ளம் தரையில் விழுந்த மீனாகத் துடித்தது. கண்கள் கலங்கின. இதயத்தின் துடிப்பு கூடிப்போயிற்று. வாயால் காற்றை ஊதி, கண்களைச் சிமிட்டித் தன்னைச் சமன் செய்துகொண்டு திரும்பவும் அவனைப் பார்த்துப் பேசினாள்.

“அதுக்குப் பிறகு யோசிக்கிற நேரமெல்லாம் எனக்குள்ள ஒரு குழப்பம். உண்மையாவே எங்களுக்க ஏதோ ஒண்டு இருந்ததுதானா, இல்லை நான்தான் சாதாரணமான பார்வைகளை, பேச்சை, செயலைப் பிழையா எடுத்து ஆசைய வளத்திட்டேனா எண்டு. இப்ப இத நீங்க சொல்லுற வரைக்கும் எனக்குள்ள அந்தக் குழப்பமும் கேள்வியும் இருந்துகொண்டேதான் இருந்தது. இப்பதான் அது தீந்திருக்கு. அப்ப நான் பிழையான எந்த ஆசையையும் வளக்கேல்ல என்ன?” என்று அவனிடமே கேட்டு முறுவலிக்கவும், சூட்டுக்கோலினால் அவன் இதயத்திலே யாரோ கீறியது போலிருந்தது அவனுக்கு.

அவள் இப்போதும் இதமாகப் புன்னகைத்தாள். “அதெல்லாம் எப்பவோ நடந்துகள். காலம் ஓடியே போச்சு. இண்டைக்குப் பிறகு இனி நானும் நீங்களும் சந்திப்பமா எண்டு கூடத் தெரியேல்ல. அதால இதப் பற்றியெல்லாம் யோசிக்காதீங்க. உண்மையா எனக்கு எந்தக் குறையும் இல்ல. அம்மா, அப்பா, தம்பியாக்கள் இல்லாத இந்த வாழ்க்கையக் கூட இஞ்ச வந்த பிறகு ஏதோ ஒரு வகைல என்ர மனம் ஏற்றுக்கொண்டுட்டுது. அதால இனி நானும் என்ர வாழ்க்கையைப் பாப்பன் எண்டு நினைக்கிறன். நீங்களும்…” என்று ஒரு கணம் நிறுத்திவிட்டு,

“உங்கட அம்மாவும் அம்மம்மாவும் கவலைப்படுறது பிழை இல்லையே. இண்டைக்கு சஜூ மாதிரி நானும் ஒரு காலம் தாயில்லா பிள்ளையா நிண்டிருக்கிறன். அந்த நேரம் என்னைச் சுத்தி அப்பா, அம்மம்மா, தாத்தா, மாமா, மாமி எண்டு எல்லாரும் இருந்தவேதான். அபி அம்மா எங்கட வீட்டை வந்த நேரம் எனக்கு அவாவை முதல் பிடிக்கேல்லதான். ஆனா பிறகு பிறகு…” என்றவளுக்கு பேச முடியாமல் போயிற்று.

திரும்பவும் இலேசாக வாயைத் திறந்து காற்றை ஊதித் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு திரும்பவும் பேசினாள்.

“அவா வந்த பிறகு என்னைப் பெத்த அம்மாவைப் பற்றி நான் யோசிச்சதே இல்ல. இப்பவும் அம்மா எண்டு நினைச்சா அபி அம்மாதான் நினைவுக்கு வருவா. ஒரு அம்மா இல்லாட்டி எப்பிடி இருக்கும், பிறகு ஒரு அம்மா வந்தா எப்பிடி இருக்கும் எண்டுற ரெண்டு வாழ்க்கையையும் நான் பாத்திருக்கிறன். ஆரம்பத்துக்கு சஜுக்குட்டிக்கு வித்தியாசமாத்தான் இருக்கும். ஆனா போக போகச் சரியாகிடுவார். அவர் என்னை விடவும் சின்ன பிள்ளை. அவருக்கு அது ஈசியாவும் இருக்கும். அதால சஜுக்குட்டிக்கு இன்னொரு அம்மாக்கு ஏற்பாடு செய்ங்கோ. உங்கட வாழ்க்கையும் கட்டாயம் சந்தோசமா இருக்கும்.” என்று மெலிதாக உடைந்து கரகரத்த குரலில் மென்மையாகச் சொல்லிவிட்டு அவள் நடக்க, அவனால் ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியவில்லை.

அவள் சற்றுத் தூரம் சென்றபிறகுதான் வேகமாகச் சென்று திரும்பவும் அவளோடு சேர்ந்துகொண்டான்.

இதற்குள் அவள் வீடு வந்திருந்தது. கேட்டை திறந்த நாவினி உள்ளே செல்ல முதல் திரும்பிப் பார்த்து, விடைகொடுக்கும் முகமாகத் தலையசைத்தாள்.

அவனால் அவ்வளவு இலகுவாக அதே போலொரு தலையசைப்பைக் கொடுக்க முடியவில்லை. “உன்ர ஃபோன் நம்பர் தாறியா?” என்றான் ஒரு எதிர்பார்ப்புடன்.

ஒரு கணம் தயங்கிவிட்டு, “வேண்டாமே. தொடர்பில்லாமப் போனவள் தொடர்பில்லாமப் போனவளாவே இருந்திட்டுப் போறனே.” என்றாள் மெல்லிய இறைஞ்சல் குரலில்.
 
மயூரன், அபிராமி இருவரின் எண்ணம் செயல்.. ஆனால் அதன் விளைவு நாவினிக்கு..
 
Top Bottom