• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 16

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 16


மேனகாவின் மொத்தக் குடும்பத்துடனும் நாவினி ஏழாலைக்கு வந்து சேர்ந்தாள். இரண்டாம் நாளே அவர்கள் ஊர்ப் பிள்ளையார் கோவிலில் வைத்துத் தாலி கட்டி, அவளைத் தன் மனைவியாக்கிக்கொண்டான் கேசிகன்.

இருவர் மனத்திலும் பெரும் போராட்டம். அவன் மனத்தில் மொழியும், அவளோடான திருமண நாளும் நின்று ஆட்டின என்றால், அவள் மனத்தில் இந்த உலகத்தை விட்டே போய்விட்ட அவள் குடும்பத்தினர் நிறைந்திருந்தனர்.

ஒரு காலத்தில் இருவரும் கண்ட கனவு இது. இந்த நாளை எப்படி உருவாக்கிக்கொள்ளப்போகிறோம் என்று ஏங்கியிருக்கிறார்கள். ஆனால் இன்று, அந்தத் திருமணத்தை இறுக்கம் படர்ந்த மனநிலையுடனேயே கடந்தனர்.

மனைவி பிள்ளைகளோடு வந்திருந்தான் மயூரன். திருமண வேலைகள் அனைத்தையும் முகிலனையும் துணைக்கு வைத்துக்கொண்டு இழுத்துப்போட்டுச் செய்தான். நாவினி அவனை இயல்பாக எதிர்கொண்டாள் என்றால், கேசிகன் அவன் முகம் பார்த்துப் பேசவே மறுத்தான்.

பரமேஸ்வரனுக்கு நேரிலேயே சென்று அழைத்தார்கள். அவர் முகத்துக்கு நேராகவே மிக மோசமாகத் திட்டி அனுப்பியிருந்தார். கூடவே தன் மகள் மருமகனையும் போகக் கூடாது என்று தடுத்துவிட்டார். அதனால் கேசிகனின் மாமாவும் அத்தையும் வரவில்லை. ஆனால், அவன் அம்மம்மா யாரையும் பொருட்படுத்தவில்லை. பேரனின் திருமணத்திற்கு வந்திருந்தார்.

மேனகாவின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர். என்னவோ தான் பெற்ற பெண்ணுக்கே ஒரு நல்லது நடந்தது போன்ற மனநிலையில் இருந்தார். சிவதாசனுமே நெகிழ்ந்துபோன மனநிலையில் அவள் தலையை வருடிவிட்டார். அவர்கள் மகன் உதயன், அவன் மனைவி பிரியதர்சினி, ஐந்து வயது மகன் சாருகன் எல்லோருமே வந்திருந்தார்கள்.

இந்தச் சில நாள்களாக வீட்டில் நடந்த தடல்புடல்களுக்கான காரணம் சஜிதனுக்குப் புரியவில்லை. அவன் விசாரித்தபோது, “நவி அன்ட்ரிய உங்களுக்குப் பிடிக்குமா?” என்று கேட்டிருந்தார் பிரேமா.

“பிடிக்குமே.”

“அப்ப அவாவக் கூட்டிக்கொண்டு வந்து எங்களோடயே வச்சிருப்பமா? தம்பிக்குட்டியோட விளையாடி, படிப்புச் சொல்லித் தந்து, உங்களோடயே இருந்து, உங்களோடயே அன்ட்ரி படுக்கிற மாதிரி இருக்கச் செய்வமா?”

“அப்ப அப்பா?” கெட்டிக்காரக் குழந்தை உடனேயே வினவினான்.

“அப்பாவும்தான். அப்பா, சஜுக்குட்டி, நவி அன்ட்ரி எல்லாரும் ஒண்டா இருக்கலாம்.”

“அப்ப அப்பும்மா?”

நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது பிரேமாவுக்கு. அவன் உலகத்தில் அவரும் முக்கியமானவராக இருக்கிறார் என்கிற புளகாங்கிதத்தில் அரும்பிவிட்ட கண்ணீருடன் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு சிரித்தார்.

“நானும்தான். என்ர பேரக்குஞ்சனை விட்டுட்டு நான் எங்க போகப் போறன்?”

“அப்ப கூப்பிடுவம்.” உடனேயே சம்மதம் தந்தான் அவன்.

“அவாவக் கூப்பிடுறதுக்குத்தான் இந்த வேலை எல்லாம் நடக்குது. நவி அன்ட்ரி ஜெர்மன்ல இருக்கிறா எல்லா. அவா வந்ததும் பிள்ளையாரப்பட்டக் கூட்டிக்கொண்டு போய், அவருக்கு முன்னால பூசை செய்து, அப்பா அம்மாவக் கலியாணம் முடிச்ச பிறகு, நவி அன்ட்ரிய நாங்க எங்கட வீட்டுக்கே கூட்டிக்கொண்டு வருவம் என்ன.”

“ஓகே!” என்றான் தலையையும் சேர்த்து ஆட்டி.

அதன் படியே குழந்தை அந்தத் திருமணத்தையும் ஏற்றுக்கொண்டான். கோயிலில் வைத்தே பகல் உணவும் முடிய, நாவினி வீட்டுக்குத்தான் வந்தார்கள். மேனகாவும் சிவதாசனும்தான் அன்னை தந்தையாக நின்று அவளைத் தாரை வார்த்துக் கொடுத்தவர்கள். வீட்டுக்கு வந்த மணமக்களை ஆலம் சுற்றி வரவேற்றதும் அவர்கள்தான். அதற்குமேல் முடியாமல் மேனகாவைக் கட்டிக்கொண்டு அழுகையில் குலுங்கினாள் நாவினி.

மேனகாவுக்குமே கண்கள் கலங்கிப்போயிற்று. ஆனாலும் அங்கே ஒரு பெரிய மனிதன் நடப்பவற்றை எல்லாம் தன் உருண்டைக் கண்களால் அளவெடுத்தபடி இருந்ததில் எல்லோரும் எல்லாவற்றையும் முடிந்தவரையில் சாதாரணமாகவே கடந்தார்கள்.

போன முறை வந்தபோது மயான அமைதியில் திளைத்திருந்த வீடு, இன்று இத்தனை ஆள்களோடு கலகலப்பாக இருப்பதைக் கண்டு, தன் குடும்பம் இன்று இருந்திருக்கக் கூடாதா என்று நினைத்து நினைத்தே மருகினாள் நாவினி.

அவள் திருமணத்தை எப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று பலமுறை அபிராமி நாகரத்தினத்திடம் சொல்வதை இவளே கேட்டிருக்கிறாள். அவர்களின் சேமிப்பில் ஒரு பகுதி இவள் திருமணத்திற்காக என்று ஒதுங்கும்.

அப்படி, எத்தனையோ வருடங்களுக்கு முதலே இந்த ஒரு நாளுக்காகத் திட்டம் போட்டு அனைத்தையும் செய்தவர்கள் இன்று இல்லை. சட்டென்று நிறைந்துவிட்ட விழிகளைச் சஜிதன் பார்க்க முதல் கையில் இருந்த டிஷ்யூவினால் துடைத்துக்கொண்டாள்.

கேசிகன் அவளைக் கவனிக்காமல் இல்லை. எதையெல்லாம் எண்ணித் தனக்குள் மருகுகிறாள் என்றும் தெரியும். எழுந்துபோய் அவளுக்குத் தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தான்.

திகைப்புடன் நிமிர்ந்தவளிடம், “குடி!” என்றான்.

அவள் வாங்கிப் பருகியதும் அந்தக் கப்பைக் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்து மீண்டும் அவளருகில் அமர்ந்துகொண்டான்.

பாராதது போன்று பார்த்திருந்த எல்லோர் மனங்களும் மகிழ்ந்துபோயின.

யாருமே அவளுக்கு ஆறுதல் சொல்லப் போகவில்லை. அப்படி ஆறுதல் சொல்கிறோம் என்று எதைக் கதைத்தாலும் அது அவளை அழ வைக்கும் என்பதில் சஜிதனை அவளிடம் தள்ளிவிட்டனர்.

கோயில் என்றாலே அவன் நெற்றிப் பட்டைக்குக் குறைவிருக்காது. திருமணம் என்கையில் கேட்கவா வேண்டும்? தகப்பனைப் போலவே பட்டு வேட்டி சட்டை அணிந்து, கூடவே பட்டுச் சால்வையையும் தோளில் போட்டிருந்தான். நெற்றி நிறையத் திருநீறு. எப்போதும்போல் புருவங்கள் இரண்டையும் தொடும் அளவில் பெரிய சந்தனப்பொட்டு, காதில் பூ என்று திரிந்தவனைக் கண்டு எல்லோருக்குமே சிரிப்பு.

வீட்டுக்கு வந்த பிறகு கையோடு கொண்டுவந்திருந்த உடையை மாற்றச் சொன்னார் பிரேமா. அவன் மறுத்துவிட்டான். அதைவிடத் தகப்பன் ஒரு முறை ஏதோ வேலை செய்வதற்காக வேட்டியை மடித்துக் கட்டியதைக் கவனித்துவிட்டான். தனக்கும் அப்படிக் கட்டிவிடச் சொன்னவன், அது அவிழ்ந்த பொழுதுகளில் எல்லாம் ஓடிவந்து தகப்பனைக் கட்டிவிடச் சொன்னான்.

“தம்புடு! அப்பா இப்ப இறக்கிவிட்டுட்டன். நீங்களும் இறக்கி விடுங்கோ.” என்று கேசிகன் சொன்னதற்கு, “அப்பா, உங்களுக்கு வேலை இல்லை. எனக்கு நிறைய வேலை இருக்கு. கட்டி விடுங்கோ.” என்றான் அவன்.

“அப்பாவ விட மகன்தான் மாப்பிள்ளைக் கோலத்தில அசத்தல்.” என்று தெரியாமல் சொல்லிவிட்டார் சாரதா.

“ஓமா?” என்றவன் ஓடி வந்து, “நவி அன்ட்ரி, மாப்பிள்ளைக் கோலத்தில் நான் வடிவா, அப்பா வடிவா?” என்று கேட்டான்.

“என்ன கேள்வி இது? நீங்கதான் வடிவு.”

“அப்ப அப்பா வடிவில்லையா?”

பக்கத்தில் இவர்களைக் கவனித்துக்கொண்டு அந்த அப்பா இருக்கிறானே.

“அவரும்தான் வடிவு.”

“அப்ப ஆர் கூட வடிவு?”

“நீங்கதான்.”

“அப்ப அப்பா?”

“ரெண்டு பேரும் வடிவுதான்.”

அவனைச் சமாளிப்பதற்குள் அவளுக்குப் போதும் போதும் என்றாயிற்று. அவர்களுக்கான இரவுத் தங்கல், மேலே அவள் அறையில்தான் ஏற்பாடானது.

உதயன் குடும்பம் இங்கே இன்னொரு அறையில் தாங்கிக்கொள்ள, பிரேமா அவர்கள் வீட்டில் தனியாக இருக்க வேண்டாம் என்று மேனகாவும் சிவதாசனும் அவருடன் சென்றனர்.

அந்த நொடியில் அன்னையை எண்ணிக் கேசிகனின் உள்ளம் கனத்துப் போயிற்று. நேர் வீதி. நினைத்ததும் ஓடிப்போகும் தூரம். அதற்கே அவர் புறப்படுகையில் மனத்தைப் போட்டுப் பிசைந்தது. மொத்தமாக அவன் ஜெர்மன் புறப்படுகையில்?

யோசிக்கக் கூட முடியாமல் மகனையும் தூக்கிக்கொண்டு அவர்களோடு தானும் போனான். இனி இதுதான், நான் தனிதான் என்று எண்ணி அவர் வருந்திவிடக் கூடாது என்பது அவனுக்கு.

ஆனால், அவனை வீட்டுக்குள் பிரேமா விடவில்லை. “நாளைக்குக் குடும்பமா சேந்து வாய்யா. அம்மாக்கு ஒரு கவலையும் இல்ல. என்ர மகன் என்னைத் தனியா விடமாட்டான் எண்டு தெரியுமப்பு. நீங்க போங்கோ.” என்று அவன், பேரன் இருவர் முகங்களையும் வாஞ்சையோடு தடவிச் சொல்லி அனுப்பிவைத்தார்.

பேரன் வேறு, “அப்பும்மா, பயப்பிடக் கூடாது. பாம்பு, பூச்சி வந்தா அப்பான்ர ஃபோனுக்கு எடுத்து எனக்குச் சொல்லுங்கோ. பெரிய தடி எடுத்துக்கொண்டு வருவன்.” என்று சொன்னான்.

வேறு என்ன வேண்டும் அவருக்கு? சந்தோசமாகவே மேனகாவையும் சிவதாசனையும் கவனித்துவிட்டுப் படுக்கைக்குச் சென்றார்.

நாவினி தன் அறைக்கு வந்து, மூவருக்கும் ஏற்ற வகையில் தலையணை போர்வைகள் எடுத்துப்போட்டாள். அவளுக்கு ஏற்றாற்போல் சின்ன கட்டில்தான் முதலில் இருந்தது. மேனகாதான் அங்கிருக்கும் போதே அதையெல்லாம் விசாரித்து, கேசிகனைக் கொண்டு அனைத்தையும் மாற்றியிருந்தார். அணிந்திருந்த சேலை மாற்றி, சின்னதாக ஒரு குளியல் போடுவதற்குச் சென்றாள்.

மகனோடு மேலே வந்த கேசிகன், அவள் அறையின் கதவு சாற்றியிருக்கவும் உள்ளே செல்லவில்லை. அங்கிருந்த பால்கனியில் சென்று நின்றுகொண்டான். அவர்கள் வீட்டில் இப்படி மாடியோ, பால்கனியோ இல்லை என்பதில் சஜிதனுக்கு இது ஆச்சர்யமான ஒன்றாயிற்று. அங்கேயே அவன் விளையாட ஆரம்பித்துவிட்டான். அங்கிருந்த நாற்காலி ஒன்றில் தன்னைப் புதைத்துக்கொண்டு மகனில் கவனமாக இருந்த கேசிகனின் சிந்தனை, தன் முதல் திருமண வாழ்க்கையில் தேங்கி நின்றது.

அன்று, இனி மொழிதான் தன் வாழ்க்கை என்று முடிவு செய்து திருமணத்தினுள் நுழைந்தாலும் நாவினியின் நினைவுகள் போட்டு அலைக்கழித்தன. இன்று, இனி நாவினிதான் என் வாழ்க்கை என்று முடிவு செய்து நுழைந்தாலும் மொழியின் நினைவுகள் போட்டு வாட்டின.

அவன் அன்னை என்னதான் வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் என்ன பாடுபடுவர் என்று தெரியும். கடைகளை இனி என்ன செய்வது என்று தெரியாது.

இப்படி இன்னது என்றில்லாத விடயங்களை எல்லாம் யோசித்துக்கொண்டிருந்தவன் அவள் அறையின் கதவு திறந்த சத்தம் கேட்டாலும் அங்கே செல்வதற்கு அவசரம் காட்டவில்லை.

சஜிதனின் சத்தம் கேட்டு அவள் வெளியில் வந்து பார்க்கவும்தான் மகனோடு அறைக்குள் வந்தான்.
 

Vishakini

Moderator
Staff member
அங்கே அவள் ஒரு பைஜாமா செட்டில் இருந்தாள். குளித்திருந்தாலும் காலையில் நடந்த திருமணத்தின் பொலிவு அவள் முகத்தில் அப்படியே இருந்தது. “அன்ட்ரி தந்துவிட்ட பாக் அங்க இருக்கு. “என்று ஒரு பையினை அவனுக்குக் காட்டினாள்.

“மாமி எண்டு சொல்லு.”

அழுத்தம் கொடுத்து அவன் சொல்லிய விதத்தில் இலேசாகத் திடுக்குற்றுப்போனாள். ஆனால், அப்படித்தானே இனி அழைக்க வேண்டும். அதில் சரி என்பதுபோல் தலையாட்டினாள். இவனுக்கு இப்படி எல்லாம் பேசத் தெரியுமா என்றும் உள்ளே ஓடியது.

அவர்கள் காதலித்தவர்கள். ஆனால், அந்தக் காதலைச் சொல்லிக்கொண்டதில்லை. காதலர்களாக ஒரு நாள் கூட வாழ்ந்தவர்களும் இல்லை. அவன் எதற்குக் கோபப்படுவான், எப்போது எப்படி இருப்பான் என்று அவளுக்குத் தெரியாது. அதே போல் அவளைப் பற்றி அவனுக்கும் பெரிதாகத் தெரியாது. அப்படியான அவர்கள் இன்றைக்குக் கணவன் மனைவி.

அங்கே அவன் மகனுக்கான மாற்றுடைகளை எடுப்பது தெரிந்தது. “சஜுக்குட்டிக்கு நான் மாத்திவிடட்டா?” என்று கேட்டாள்.

சரி என்று அவன் அவளிடம் கொடுத்தான். ஆனால், “நானே மாத்துவன். நான் பெரிய மனுசன்.” என்றான் அந்தப் பெரிய மனிதன்.

அவர்களைச் சூழ்ந்திருந்த இறுக்கம் இலேசாக விலக, பெரியவர்கள் இருவர் முகத்திலும் முறுவல்.

“இப்ப ஆர் இல்லை எண்டது. நவி அன்ட்ரிக்கு சும்மா இருக்க போரடிக்குது. அதுதான் சஜுக்குட்டிக்கு ஹெல்ப் பண்ணுவம் எண்டு நினைச்சன்.”

“அப்ப நீங்க அப்பாக்கு மாத்திவிடுங்கோ.” சளைக்காமல் அவன் கொடுத்த பதிலில் பெரியவர்கள் இருவரும் அரண்டு போனார்கள்.

அதுவும் கேசிகன் பதறிப்போய் அவளைப் பார்த்த வேகத்தில், உண்மையிலேயே அவனுக்கு மாற்றிவிடுவதற்கு வந்துவிடுவாளோ என்று பயந்தது போலிருக்கவும் கிளுக்கென்று சிரித்திருந்தாள் நாவினி.

தன்னிச்சையாய் அந்தச் சிரிப்பு அவன் முகத்திலும் தொற்றிக்கொண்டாலும் கவலைகள் எதுவுமற்றுச் சிரிக்கும் அவள் முகத்தையே பார்த்திருந்தான்.

“நிமிசத்தில எனக்கு ஹார்ட் அட்டாக்கே வரவைக்கப் பாத்தான்.” என்றுவிட்டு மாற்றுடைகளோடு எழுந்து வெளியே போனான் அவன்.

இங்கே அந்தப் பெரிய மனிதன் பட்டுச் சட்டையைக் கழற்றிவிட்டு, ஒரு பெண் அங்கே இருக்கிறாள் என்றுகூடப் பாராமல் வேட்டியையும் அவிழ்த்துவிட்டு உள்ளாடையுடன் நின்றான். வெடித்துக்கொண்டு கிளம்பிய சிரிப்பை நாவினி வெளியே விடவில்லை.

ஒற்றைக் காலில் நின்று மற்றக் காலைக் காற்சட்டைக்குள் விட முடியாமல் தடுமாறியபோதும் கட்டிலைப் பற்றிக்கொண்டு போட்டானே தவிர்த்து அவளிடம் உதவிக்கு வரவில்லை.

உள்ளூர அவனை மெச்சியபடியே டீ சேர்ட்டை கொடுத்தாள் நாவினி. அதையும் பக்கங்களை மாற்றி என்றாலும் தானேதான் போட்டுக்கொண்டான். “கெட்டிக்காரன்!” என்று அவனைத் தூக்கிக் கொஞ்சியபடியே டி சேர்ட்டின் கைகளை மாத்திரம் கழற்றி, அப்படியே சுழற்றிச் சரியாக அணிவித்துவிட்டாள்.

கேசிகன் உடைகளை மாற்றிக்கொண்டு வந்தபோது சஜிதனை நடுவில் விட்டு ஒரு பக்கமாக அவள் சரிந்திருந்தாள்.

ஒருகணம் தேங்கி நின்ற கேசிகனுக்குள் திரும்பவும் ஒரு இறுக்கம் படரப்பார்த்தது. சமாளித்துக்கொண்டு வந்து தனக்கான இடத்தில் சரிந்தான். அவ்வளவு நேரமும் நாவினியோடு அணைந்திருந்த சின்னவன் ஓடி வந்து தகப்பனின் மார்பில் அடைக்கலமானான்.

அந்த ஒற்றைச் செய்கையில் கேசிகனின் மனம் வெகுவாகக் கனத்துப் போயிற்று. தானாக மனம் மொழியிடம் சென்று நின்றது. விழிகளை இறுக்கி மூடிக்கொண்டான். இப்படியான பொழுதுகளில் மகனைத் தன் மார்பில் தாங்கியபடி இவன் மார்பில் சரிந்திருப்பாள் அவள்.

அதையெல்லாம் நினையாதே என்று அறிவு அறிவுறுத்த, மகனை ஒற்றை கையால் அரவணைத்தபடி திரும்பி நாவினியைப் பார்த்தான். இரண்டு கைகளையும் ஒன்றாகக் கன்னத்துக்குக் கீழே கொடுத்து, இவர்கள் புறம் திரும்பிப் படுத்திருந்தவளும் இவர்களைத்தான் பார்த்திருந்தாள்.

மனம் கனிந்துபோனது அவனுக்கு. “என்ன?” என்றான் தன்னை மீறி.

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையசைத்தாள் அவள். அவன் அவளையே பார்த்திருந்தான். தானும் மகனும் பக்கத்தில் இருந்தும் ஒற்றையாகப் படுத்திருக்கும் அவள் கோலம் ஏதோ ஒரு வகையில் அவனைத் தாக்கிற்று.

“இவருக்கு எப்பவும் நீங்க வேணுமா?”

“தாய் இருந்தவரைக்கும்… சொறி மொழி இருந்த வரைக்கும்…”

“இப்பிடி யோசிச்சு எல்லாம் நீங்க கதைக்க வேண்டாம். இயல்பா இருங்க.” அவனைத் தடுத்துச் சொன்னாள் நாவினி.

“மொழி இருந்தவரைக்கும் ரெண்டு பேரோடயும் ஒட்டு எண்டாலும் நித்திரைக்கு அவள்தான் வேணும். திடீர் எண்டு அவள் இல்லை எண்டு ஆகவும் என்ர கைய விட்டு இறங்கவே மாட்டார். கொஞ்சக் காலம் இவரைக் கவனிக்கிறதே எனக்குப் பெரிய வேலையா இருந்தது. இப்ப எல்லாரோடயும் சேருவார்.” என்றான், மகன் கேசத்தை ஆதூரத்துடன் தடவிக்கொடுத்தபடி.

அந்தத் தகப்பனின் முகம், பிள்ளைப் பாசத்தில் கனிந்திருப்பதைப் பார்த்தபோது அவளால் அவனிடமிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை.

அந்த நாள்களில் அவளை ரசித்துப் பார்த்த இளம் வாலிபன் அல்லன் இவன். முழுமையான மனிதன். ஒரு குழந்தையின் தகப்பன். புது மனிதனாகத் தெரிந்தான்.

“கண்ணை மூடினாத்தான் நித்திரை வரும் நவி அன்ட்ரி.” உறக்கத்திற்காக அப்படியும் இப்படியுமாகத் தகப்பன் மார்பில் முகம் புரட்டிக்கொண்டிருந்தவன் சொன்னான்.

“பிறகு ஏன் நீங்க மூடேல்ல?” இலேசான குமிண் சிரிப்புடன் வினவினாள்.

“நீங்க மூடி இருக்கிறீங்களா எண்டு பாக்கத் திறந்தனான்.”

“சரி நீங்களும் மூடுங்கோ. நவி அன்ட்ரியும் மூடுறன்.” கொஞ்ச நேரம் மூடி இருந்துவிட்டு அவள் திறந்து பார்த்தாள். அவ்வளவு நேரமும் கொட்டைப்பாக்கு விழிகளைத் திறந்து வைத்திருந்தவன் சரக்கென்று கண்களை மூடிக்கொண்டு மறுபுறம் திரும்பிப் படுத்தான்.

“டேய் கள்ளா!”

“நான் நித்திரை!”

பெரியவர்கள் இருவர் முகங்களுமே சின்னவனின் செய்கையில் மலர்ந்து விகசித்தன. அந்த நாள் முழுக்க அழுத்திய அழுத்தங்கள் எல்லாம் நீங்கி இதமாக உணர்ந்தார்கள்.

கேசிகன் மகன் கேசத்தை வருடிவிட்டுக்கொண்டே இருந்தான். என்னவோ அவன் உலகத்திற்கு மகன் மட்டுமே போதும் போலொரு தோற்றம். அவர்களையே பார்த்தபடி கண்ணுறங்கிப்போனாள் நாவினி.

மகன் உறங்கியதும் திரும்பி நாவினியைப் பார்த்தான் கேசிகன். அவளும் நல்ல உறக்கத்தில் இருந்தாள். எட்டி அவள் கேசம் வருடினான். அவளோடான தன் வாழ்வாவது நன்றாக அமைந்துவிட வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டான்.

 

Chitra ganesan

Active member
கேசியும் நாவினியும் எப்படியோ போகட்டும்.. எனக்கு அவங்களை பிடிக்கல😒.
இனி நான் சஜூ குட்டிக்காக மட்டுமே படிப்பேன்.அவனை மட்டுமே ரசிப்பேன்😌
 

Renju

New member
உடனே அவனை ஏத்துக்குற போல தோணுது அவனும் என்னமோ பெரிய தியாகம் செஞ்சுட்டா மாதிரி நடக்குறான் என்னால ஏத்துக்க முடியல எப்படியோ போங்க
 
Top Bottom