• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 20

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 20


டோர்ட்மண்ட் நகரின் சற்று உள்ளே கிராமமும் அல்லாத நகர்ப்புறத்தின் வாடை பெரிதாக வீசாத ஊர் அது. அங்கேதான் நாவினியின் வீடு இருந்தது. அதன் முன்னே காரைக் கொண்டுவந்து நிறுத்தினான் உதயன். முகம் நிறைந்த புன்னகையோடு வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வந்தார்கள் சிவதாசனும் மேனகாவும். கூடவே உதயனின் மகன் சாருகனும்.

அதுவே, இவர்கள் வரவை எதிர்பார்த்து வாசலையே பார்த்துக்கொண்டு நின்றிருந்திருக்கிறார்கள் என்று சொல்லிற்று. ஓட்டுனருக்குப் பக்கத்து இருக்கையிலிருந்து இறங்கிய கேசிகனை, “வாங்கோ தம்பி, பயணமெல்லாம் சுகமா இருந்ததா?” என்று சொந்த மருமகனை வரவேற்கும் வாஞ்சையோடு அணைத்து வரவேற்றார் சிவதாசன்.

“எங்க எங்கட பெரிய மனுசன், அவரையும் வரவேற்கோணும்தானே?” என்றுகொண்டு மேனகா பின் கதவைத் திறக்க, “ஓமோம், நானும் வந்திருக்கிறன்.” என்றுகொண்டு இறங்கினான் சஜிதன்.

“பயணம் சுகமா இருந்ததா சஜுக்குட்டிக்கு?” அவனை அள்ளித் தூக்கிக் குண்டுக் கன்னத்தில் முத்தமிட்டுக்கொண்டே வினவினார் மேனகா.

“ஓம் சுகமா இருந்தது. அப்பும்மா மட்டும் வரேல்ல. ஃபிளைட்ல இடம் இல்லையாம். எங்களை முதல் போகச் சொன்னவா. பிறகு அப்பும்மா வருவா.” செல்ல மொழியில் பெரிய பதில் சொன்னான் குழந்தை.

“ஓமய்யா. நானும் விசாரிச்சனான். ஆனா அடுத்த ஃபிளைட்ல கட்டாயம் பிள்ளையின்ர அப்பம்மாவை கூட்டிக்கொண்டு வருவம் என்ன.”

உதயனின் மகன் சாருகனை இலங்கை வந்தபோதே பழக்கம் என்பதில் மேனகாவிடமிருந்து நழுவி அவனிடம் ஓடினான் சின்னவன்.

கொண்டுவந்த பெட்டிகளைக் காரிலிருந்து இறக்கி, வீட்டினுள் வந்து, சிறிய வரவேற்பு போன்ற முன்பகுதியில் ஷூக்களைக் கழற்றினர். அது குளிர்காலம் என்பதில் எல்லோரும் அணிந்திருந்த மேலங்கிகளைக் கழற்றி அவற்றுக்கான தாங்கிகளில் கொழுவிவிட்டு, உள்ளே வந்து அந்த வீட்டின் சோஃபாவை நிறைத்தபோது நாவினியின் மனமும் நிறைந்துபோயிற்று.

இலேசாக அரும்பிய விழி நீருடன் அங்கே புகைப்படங்களாகத் தொங்கிக்கொண்டிருந்த பெற்றோரிடம் அவள் பார்வை சென்று நிலைத்தது.

“நவி, தண்ணி கொஞ்சம் தா!” என்று கேட்டு அவள் மோனத்தைக் கலைத்தான் கேசிகன்.

விரைந்து சென்று நீண்ட கண்ணாடிக் குவளையில் கொண்டுவந்து கொடுத்தாள் அவள். வாங்கிப் பருகிவிட்டு வெறும் குவளையை அவளிடமே நீட்டினான் கேசிகன்.

பெற்றவர்களைப் பார்த்துக் கலங்கி நின்ற நாவினியை மேனகாவும் கவனித்தார்தான். அவர் அவளைத் திசைதிருப்ப முதல், இயல்பாக அவளைக் கையாண்டிருந்தான் கேசிகன். அதன் மூலம் அவர் உள்ளத்தின் நன்மதிப்பையும் நொடியில் பெற்றுக்கொண்டிருந்தான்.

அர்த்தமாகக் கணவரைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “அம்மாவோட எடுத்துக் கதைச்சனீங்களா கேசிகன்?” என்று விசாரித்தார்.

“ஓம் அன்ட்ரி. இஞ்ச வந்து இறங்கினதும் கதைச்சனான். அவா இன்னும் அங்க அழுதுகொண்டுதான் இருக்கிறா. எங்கட பெரிய மனுசனுக்கும் கொஞ்சம் மனம் சரியில்ல.” சாருகனின் கார்கள் சிலது எப்போதுமே இங்கே நாவினியின் வீட்டு விறாந்தையின் சுவரோரமாகப் பார்க் பண்ணபட்டிருக்கும். அவற்றை வைத்துச் சாருகனோடு சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்த மகனைக் காட்டிச் சொன்னான்.

“பாவம்தான். வேற பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ இருந்தா கூடச் சமாளிக்கலாம். இது சின்னவரைக் கைக்கையே வச்சு வளத்ததும் அவா எல்லோ. அவருக்குப் பின்னாலயேதானே திரிவா. கவலைதான். ஆனா அவசரமா செய்றதுக்கும் ஒண்டும் இல்லையே.” ஒரு பெருமூச்சுடன் உணர்ந்து சொன்னார் மேனகா.

கேசிகனுக்கும் அன்னையின் பேச்சு வந்ததும் உள்ளம் பாரமாயிற்று. வயதுபோன காலத்தில் துணைக்கு ஒருவரும் இல்லாமல், அயலட்டை மனிதர்களை மாத்திரமே நம்பி வாழ்வது எவ்வளவு கொடுமை? முதுமை என்பதே கொடுமை. அதனோடு தனிமையும் சேர்ந்தால்?

அவன் மனவோட்டத்தைக் கணித்த சிவதாசன், “தம்பிய மேல கூட்டிக்கொண்டு போங்கோமா. குளிச்சுக்கிளிச்சு வரட்டும். சாப்பிடலாம்.” என்று சொன்னார்.

அவ்வளவு நேரமும் அவர்களைப் பேச விட்டுவிட்டுப் பதுமையாக நின்றிருந்தவள் வருகிறாயா என்பதுபோல் கேசிகனைப் பார்த்தாள். அவனும் எழுந்துகொண்டான். அவள் பெட்டி ஒன்றைத் தூக்கப்போக, “நீ விடு!” என்றுவிட்டு இரண்டு பெட்டிகளையும் கைக்கு ஒன்றாகத் தூக்கிக்கொண்டு மாடியேறினான்.

“சஜுக்குட்டியும் வாங்கோ. உடுப்பு மாத்திக்கொண்டு வருவம்.” என்று அவனைத் தூக்கிக்கொண்டு கேசிகனின் பின்னால் சென்றாள் நாவினி.

அப்படி மூவரும் ஒரு குடும்பமாக மேலே சென்ற காட்சி மிகுந்த நிறைவாக இருந்தது. “ஒரு பிள்ளை இருக்கே எண்டு யோசிச்சன். இப்ப பாத்தா நவிய மாத்துறதுக்கு எண்டே அந்தக் குழந்தை வந்த மாதிரி இருக்கு.” என்று தமக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னார் மேனகா.

“ஷ் மேனகா!” மேலே அவர்களுக்குக் கேட்டுவிட்டாலும் என்று எண்ணி மனைவியை அடக்கினார் சிவதாசன்.

“கேக்காது மாமா. ஆனா, அவர்தான் இவேய சேத்து வைக்கப்போற ஆள்.” பார்வை ஒரு முறை மேலே சென்றுவர ரகசியமாகச் சொன்னாள் பிரியா.

“என்னவோ சந்தோசமா இருந்திடோணும். ‘என்ர பிள்ளையை விட்டுடாதீங்கோ மேனகா’ எண்டு அபி கடைசியா என்ர கையப் பிடிச்சுக்கொண்டு சொன்னதுதான் கண்ணுக்கையே நிக்குது.” என்று கண் கலங்கினார் மேனகா.

“அம்மா! அதுதான் நீங்க ஆசைப்பட்ட மாதிரி நவி கட்டி, அவரும் வந்திட்டார் எல்லா. சும்மா சும்மா அதையே கதைக்கிறேல்ல.” என்று அதட்டி அடக்கினான் உதயன்.

அங்கே மேலே சென்றதும் எந்த அறை என்பதாக அவளைப் பார்த்து நின்றான் கேசிகன். மூன்று அறைகளும், சகல வசதிகளுடனும் கூடிய பெரிய குளியலறையும் மேலே இருந்தன.

“அது பாத்ரூம். இது என்ர அறை. இது அம்மா அப்பா இருந்தது. இது தம்பியாக்களின்ர. இதத்தான் உங்கள் ரெண்டு பேருக்கும் ரெடி பண்ணினனான்.” என்றபடி அந்த அறையின் கதவைத் திறந்து காட்டினாள் அவள்.

பொருள் விளங்காப் பார்வை ஒன்றை அவள் புறமாக வீசியபடி அந்த அறைக்குள் உள்ளிட்டான் கேசிகன். விசாலமான அறைதான். நடுவில் பெரிய கட்டில் ஒன்று. அதன் எதிர்ப்புறத்தில் சுவரோடு பெரிய அலமாரி.

“நவி அன்ட்ரி, இனி நாங்க எல்லாரும் இஞ்சயா படுக்கப்போறம்.” அந்தக் கட்டிலில் ஏறி அமர்ந்தபடி வினவினான் குட்டிக் கண்ணன்.

கேசிகனின் பார்வையும் இவளில் படிய, பதிலுக்காகத் திணறினாள் நாவினி. சின்னவனுக்கு அது தேவை இல்லை போலும். மற்ற அறைகள் எப்படி இருக்கின்றன என்று பார்க்க ஓடினான்.

நாவினியும் அங்கிருந்து நழுவி அவன் பின்னால் போக முயன்றாள். அதற்கு விடாமல் அவள் கரம் பற்றிக் கொண்டுவந்து தன் முன்னே நிறுத்தினான் கேசிகன்.

அவளிடத்தில் ஒரு பதற்றம். விமான நிலையத்தில் வைத்து அவன் இலேசாக என்றாலும் அணைத்து விடுவித்ததிலேயே அவளுக்கு உதறல் எடுத்திருந்தது. மனத்தின் படபடப்பு முகத்திலும் தெரிய நின்றவளின் கன்னத்தை ஒற்றை விரலால் அவன் வருட அவள் விழிகள் இரண்டும் விரிந்துபோயின.

அவன் உதட்டில் சின்ன முறுவல். அவள் பார்வையும் விழிகளை விரித்த அழகும் ஈர்க்க அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்டிவிட்டு, “எப்பிடி இருக்கிறாய்?” என்றான் தன் ஆழ்ந்த குரலில்.

அவளுக்குத் தொண்டையெல்லாம் உலர்ந்துபோயிற்று. தலையை இருபுறமுமாக ஆட்டி நன்றாக இருப்பதாகச் சொன்னாள்.

சஜிதனைப் போலவே இருந்த அவள் செய்கையில் அவன் உதட்டில் சன்னமான முறுவல்.

“அதென்ன பொக்கே?”

“அது… பிரியா அக்காதான்…” அவன் பார்வையைத் தவிர்த்தபடி சொன்னாள் அவள்.

அவள் தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்து, “அப்ப நீயா தரேல்ல?” என்றான் அவன்.

“இல்ல… அது…” பேசமுடியாமல் அவள் இதழ்களை ஈரப்படுத்த அவன் பார்வை அவற்றில் படிந்தது.

நாவினிக்கு அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. இதற்குள், “அப்பா! அந்த அறைக்க டிவி இருக்கு.” என்றபடி ஓடிவந்த சின்னவனால் வேகமாக இரண்டடி விலகி நின்றாள்.

கேலி இழையோடும் பார்வையால் அவளை ஒருமுறை உரசிவிட்டு மகனிடம் திரும்பினான் அவன். அவனுக்கு அங்கிருக்கும் எல்லாமே ஆச்சரியத்தை மூட்டின. அதுவும் இவள் பெற்றோரின் அறையில் இருந்த மசாஜ் செய்யும் இருக்கையை விட்டு அவன் அசைவதாகவே இல்லை. பெரும் சிரமப்பட்டுத்தான் அதிலிருந்து அவனைக் கிளப்பினார்கள்.

“குளிக்கோணும் நவி.” பெரிய பெட்டியைத் தூக்கிக் கட்டிலில் வைத்துத் திறந்தபடி சொன்னான் கேசிகன்.

“சஜுக்குட்டிய நான் குளிக்க வாக்கவா?”

“இல்ல இல்ல! சஜுக்குட்டி பெரிய மனுசன். அப்பாவோடதான் குளிப்பான்.” கட்டிலில் ஏறி அமர்ந்து, பிரித்த பெட்டியிலிருந்து தானும் பொருள்களை வெளியே எடுத்துவைக்க உதவியபடி சொன்னான் சின்னவன்.

“எல்லாத்தையும் இப்பவே எடுக்க வேணாம் தம்புடு.” என்று அவனைத் தடுத்துவிட்டு, ஒரு பார்சலை எடுத்து அவளிடம் நீட்டினான் கேசிகன்.

“உனக்காம் எண்டு அம்மா தந்துவிட்டவா.”

அவளுக்கு மாசிச் சம்பல் விருப்பம் என்று செய்து கொடுத்துவிடுவதாகச் சொல்லியிருந்தார் பிரேமா. அவரின் அன்பில் நெகிழ்ந்தபடி வாங்கிக்கொண்டாள். அவர்களுக்கான மாற்றுடைகளை எடுத்துவிட்டுப் பெட்டியை மூடி வைத்தான் அவன்.

அதற்குள் ஓடிப்போய்த் துவாய் எடுத்து வந்து கொடுத்தாள் நாவினி. அப்படியே குளிர் நீர், வெந்நீர்க் குழாய்களை அவர்களின் தேவைக்கு ஏற்ப எப்படிப் பயன்படுத்துவது என்று காட்டிக்கொடுத்தாள்.

“பெரிய மனுசன் கெதியா(விரைவா) குளிச்சிட்டு வாங்கோ சாப்பிடுவம்.” சின்ன சிரிப்புடன் சொன்னாள் நாவினி.

“கோழி இறைச்சிதானே? இண்டைக்கு வெள்ளிக்கிழமை இல்லை.” என்றான் அவன் அதற்கும்.

நாவினியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “கோழி இறைச்சிதான். பிள்ளைக்கு விருப்பமான றால் பொரியலும் இருக்கு.” அந்தச் சிரிப்பினூடே சொல்லிவிட்டு இறங்கினாள்.

எல்லோருக்கும் சேர்த்துச் சமைக்கிறேன் என்று மேனகா சொன்னபோது இவற்றைச் செய்து தரச்சொல்லிச் சொல்லியிருந்தாள் நாவினி.

சிரித்த முகமாகவே இறங்கி வந்தவளைக் கண்டு, “என்னம்மா?” என்றார் மேனகா தன்னை மீறிய ஆவலோடு.

“குளிச்சிட்டு வாங்கோ சாப்பிடலாம் எண்டு சொல்ல, கோழி இறைச்சியா எண்டு உடனே கேக்கிறார் அன்ட்ரி. இதுல அவர் பெரிய மனுசனாம், அப்பாவோடதான் குளிப்பாராம்.” என்று சொல்லி இப்போதும் சிரித்தாள் அவள்.

இனியாவது இந்த முகத்தில் அந்தச் சிரிப்பு நிலைத்துவிட வேண்டும் என்கிற வேண்டுதலுடன், “நல்ல வடிவா இருக்கிறீங்கம்மா.” என்று எழுந்து வந்து, அவள் கன்னம் வழித்துச் சொன்னார் அவர்.

அவரை இதமாக அணைத்து, “எல்லாத்துக்கும் தேங்க்ஸ் அன்ட்ரி. அங்கிள் உங்களுக்கும்தான்.” என்று கண் கலங்கினாள் அவள்.

“அப்ப எங்களுக்கு?”

“உங்களுக்கும்தான் அக்கா.”

“அடிதான் வாங்கப்போறாய்.” என்று செல்லமாக அதட்டிவிட்டு, “வா, சாப்பாட்டை எடுத்துச் சூடாக்குவம்.” என்று அவளையும் அழைத்துக்கொண்டு சமையலறைக்கு நடந்தாள் பிரியா.
 

Vishakini

Moderator
Staff member
“உன்ர அறைல தம்பிக்கும் ஒரு கட்டில் வாங்கிப் போட்டா நல்லம் என்ன?” அவர்கள் வீட்டிலும் அப்படிச் செய்திருப்பதால் இயல்பாக வினவியபடி, மேனகா என்ன சமைத்து எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார் என்று மூடிகளைத் திறந்து பார்த்தாள் பிரியா.

“அக்கா, அது தம்பியாக்களின்ர ரூமை அவேக்குக் குடுத்தனான்.” என்றதும் வேகமாகத் திரும்பி அவளைப் பார்த்தாள் பிரியா. அவள் முகத்தில் இவள் செயல் பிடிக்காத பாவனை.

“அக்கா…”

“இஞ்ச நீயும் அவரும் மட்டும் இல்ல நவி. சஜுக்குட்டியும் இருக்கிறார். அவருக்கு வித்தியாசம் தெரியிற மாதிரி நீங்க ரெண்டு பேரும் நடக்கக் கூடாது. அதைவிட மனுசன் மனுசிக்கு என்னத்துக்குத் தனி தனி ரூம்?” என்றாள் கண்டிப்பு நிறைந்த குரலில்.

“எனக்கும் இவருக்கும் சண்டை வந்து, லேசா நாங்க ஆளுக்கொரு பக்கமா இருந்தாலே சாரு எத்தின கேள்வி கேக்கிறவர் எண்டு உனக்கே தெரியும். அப்பிடியிருக்க இப்பிடி நீ ஒரு அறைல அவே ஒரு அறைல இருக்கிறது என்ன எண்டு சொல்லு? அதைவிட அப்பிடி இருக்கிறத சின்னவர் பழகிட்டாரோ பிறகு உங்களுக்குத்தான் சிரமமா போயிடும்.” என்று கண்டித்ததோடு விடாமல் எச்சரிக்கவும் செய்தாள்.

அப்போதுதான் அவளுக்கும் தன் தவறு புரிந்தது. ஆனால் வேண்டுமென்றோ, அவனைத் தள்ளி நிறுத்த வேண்டும் என்று எண்ணியோ செய்யவில்லை. தன் அறைக்கு அழைத்துச் செல்ல, அவன் தன்னை ஏதும் நினைப்பானோ என்று ஒரு தயக்கம். அதுதான் தனியறையைக் காட்டினாள்.

இப்போதுதான் அதன் இன்னொரு பக்கம் புரிந்தது. அதுதான் அவனும் ஒரு மாதிரியாகப் பார்த்தானா? இனி என்ன செய்வது என்று யோசித்தாள்.

பிரியாவின் குரல் கண்டிப்புடன் ஒலிப்பதைக் கேட்டுவிட்டு, “என்னம்மா?” என்று வந்து விசாரித்தார் மேனகா.

இவளை முறைத்துக்கொண்டே நடந்ததைச் சொன்னாள் பிரியா. மேனகா இவளைப் பார்க்க, “நான் வேணுமெண்டு செய்யேல்ல அன்ட்ரி.” என்றாள் கலங்கிப்போய்.

அவளின் இந்தத் தயக்கங்களை, தடுமாற்றங்களை அவரால் உணர முடிந்தது. வழிகாட்டவோ, எடுத்துச் சொல்லவோ, நீ இப்படித்தான் இனி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தோ பக்கத்தில் யாரும் இல்லை. இதுவே அபிராமி இருந்திருக்க அனைத்தையும் அவரே முன்னின்று கவனித்திருப்பார். இனி அது உன் குடும்பம், ஒரே அறையில்தான் தங்க வேண்டும் என்று அடுத்த பேச்சுக்கே இடமில்லாமல் முடித்திருப்பார்.

மேனகாவும் புத்திகள் சொல்லிக்கொடுப்பார்தான். ஆயிரம்தான் இருந்தாலும் அன்னைக்கு ஒப்பாக யாரும் வரப்போவதில்லையே.

இதையெல்லாம் சொல்லி இழப்பின் அளவை இன்னொரு முறை அவளுக்கு உணர்த்த விரும்பாமல், “ஆரம்பத்துக்குச் சில விசயங்கள் கொஞ்சம் தடுமாற்றமாத்தான் நவி இருக்கும். ஆனா அதையெல்லாம் கடந்து போகேக்கதான் சந்தோசமான வாழ்க்கை கிடைக்கும். யோசிச்சு நடக்கோணும் சரியா?” என்று புத்தி சொன்னார்.

சரி என்று தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள் நாவினி.

“அவரும் வயதான அம்மாவைத் தனியா விட்டுப்போட்டு ஏன் இஞ்ச வந்திருக்கிறார்? உங்களோட சந்தோசமா வாழத்தானே? இப்பிடித் தனித்தனி அறைல இருக்கவா? நீங்க, கேசிகன், சஜுக்குட்டி மூண்டு பேரும் ஒரு குடும்பம். அத எண்டைக்கும் மறக்கக் கூடாது, என்னம்மா?” என்று அவர் இதமாகவும், அதே நேரத்தில் உடைத்துப் பேசவும் அவளுக்கே தன் செய்கை அசட்டுத்தனமாகத் தோன்றிற்று.

அதன் பிறகு அதைக் குறித்துப் பேசவில்லை மேனகா. குடும்ப வாழ்வு ஒன்றினுள் சாதாரணமாக நுழைகிறவர்களுக்கே ஆரம்ப கட்டத் தடுமாற்றம் என்பது தாராளமாக இருக்கும். இங்கே பழையதும் புதியதுமாகப் பல குழப்பங்களோடும் காயங்களோடும் நுழைந்திருக்கிறார்கள். அப்படி இருக்க இப்படித் தப்பும் தவறுமாக ஆரம்பித்துத்தான் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொள்வார்கள் என்று அவரின் அனுபவம் சொல்லிற்று.

உணவை எல்லாம் சூடாக்கி, அந்தப் பெரிய விறாந்தையிலேயே ஒரு பக்கமாகப் போடப்பட்டிருந்த சாப்பாட்டு மேசைக்கு மாற்றினர். எல்லோருக்குமான உணவுத் தட்டுகள், தண்ணீர்க் கோப்பைகள் எல்லாம் வைத்து முடித்தபோது அப்பாவும் மகனுமாக இறங்கி வந்தார்கள்.

அதுவும் என்னவோ அந்த வீட்டில் இந்தக் காட்சி தினம் தினம் நடப்பது போன்ற இயல்புடன், குளிர் காரணமாக முழுக்கை கொண்ட ஸ்வெட் பாண்ட்ஸ்(sweatpants) டீஷர்ட் அணிந்து, அளவாக நறுக்கிவிடப்பட்ட மீசையோடு சேவ் செய்த கன்னங்கள் பளபளக்க, அடர்ந்த கேசத்தில் இன்னுமே இருந்த ஈரத்தை இலேசாகக் கையால் தட்டிவிட்டபடி வந்த கேசிகன், அவளுள் பெரிதாய் ஒரு தாக்கத்தை உண்டாக்கினான்.

மற்ற ஆண்கள் இருவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருப்பதைக் கண்டுவிட்டு, “சாப்பிடுவமா?” என்று கேட்டுக்கொண்டே ஒரு இருக்கையை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தவனையே தொடர்ந்தது அவள் பார்வை.

எல்லோருக்கும் பரிமாற வந்த பிரியாவிடம், “நீ சாருவ கவனியம்மா. இஞ்ச நான் பாக்கிறன்.” என்று மற்றவர் அறியாமல் கண்ணைக் காட்டினார் மேனகா.

அவளும் புரிந்துகொண்டு மகனோடு ஒதுங்கிக்கொண்டாள்.

“நவியம்மா, நீங்க தம்பியாக்களைப் பாருங்கோ. நான் உங்கட அங்கிளையும் அண்ணாவையும் பாக்கிறன்.” என்று அவர்களைக் கவனிக்கும் பொறுப்பை அவளிடம் தள்ளிவிட்டார்.

“ஓம்… ஓம் அன்ட்ரி.” என்று தடுமாறி, அவன் முன்னால் தட்டை வைக்கப் போனவளிடம், “முதல் தம்பிக்குப் போடு நவி.” என்றான் கேசிகன்.

இதற்குள் தகப்பன் அருகில் தானும் ஏறி அமர்ந்துகொண்ட பெரிய மனிதனும், “நவி அன்ட்ரி, எனக்கு றால் பசிக்குது. றால் பொரியல் கனக்க(நிறைய) வைங்கோ.” என்று உத்தரவிட்டான்.

அவள் முகத்தில் மட்டுமல்லாது அங்கிருந்த எல்லோர் முகத்திலும் விரிந்த முறுவல். நாவினியும் தன்னையறியாது இலகுவானாள். “தம்பிக்கு நான் குடுக்கிறன்.” அந்த முறுவலுடனேயே கேசிகன் முகம் பார்த்துச் சொல்லிவிட்டு, அவனுக்கு உணவைப் பரிமாறினாள்.

அவன் சாப்பிட ஆரம்பிக்கத் தண்ணீரும் வார்த்து வைத்தாள். சின்னவனுக்கு இன்னொரு தட்டில் அளவாகப் போட்டுக்கொண்டு அவன் அருகில் அமர்ந்து குழைத்து ஒவ்வொரு வாயாகக் கொடுத்தாள்.

“றால் பொரியல் நல்லாருக்கா சஜுக்குட்டி?” மேனகா தன் சமையலைப் பற்றி விசாரித்தார்.

“ம்ம் நல்லாருக்கு. அப்பும்மா இன்னும் டேஸ்ட்டா செய்வா.” வாய்க்குள் உணவிருக்க பதில் மொழிந்தான் அவன்.

“அப்பிடியா? அப்ப அடுத்த முறை உங்கட அப்பம்மாவைக் கேட்டுச் சமைச்சுத் தாறன் பிள்ளைக்கு. சரியா?”

சரி என்று பெரிதாகத் தலையாட்டிவிட்டு அடுத்த வாயை நாவினியிடம் வாங்கினான் அவன்.

தன் தட்டில் இருந்த இறால் பொரியல்களைப் பொறுக்கி மகன் தட்டில் போட முயன்றான் கேசிகன். அதற்கு விடாமல் தட்டைப் பின்னால் இழுத்துக்கொண்டு, “அங்க இன்னும் இருக்கு. நீங்க சாப்பிடுங்கோ!” என்றாள் நாவினி உடனேயே.

பார்வை ஒரு முறை அவளில் தங்கி மீள அவன் சாப்பிட்டான்.

எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் சாப்பாட்டு மேசையை ஒதுக்கி, எஞ்சிய உணவை எல்லாம் பக்குவமாக மூடி வைத்தனர். அதன் பிறகும் கொஞ்ச நேரம் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டுத்தான் சிவதாசன் குடும்பத்தினர் புறப்பட்டனர்.

அவர்கள் நடந்து புறப்படுவதைக் கண்டு புருவங்களைச் சுருக்கினான் கேசிகன். அவன் கேள்வியை உணர்ந்து, “பக்கத்திலதான் எங்கட வீடு. அது நாவினின்ர கார்.” என்று சொன்னான் உதயன்.

முதல் ஒரு வருடம் காரை அவள் தொடவே இல்லை. ஆரம்பத்தில் அவர்களின் காரில் ஏறுவது என்றாலே அவள் கைகால்கள் எல்லாம் நடுங்கும். கண்ணீர் தன் பாட்டுக்குக் கொட்டும். இயல்பாக காரினுள் அவளால் இருக்கவே முடியாது. நாலாபுறமும் ஏதாவது வாகனம் இடிக்க வருகிறதா என்று திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே இருப்பாள். எதிரில் ஒரு கார் கொஞ்சம் வேகமாக வந்தாலே ‘கவனம் கவனம்’ என்று பதறிவிடுவாள்.

கடைசியில் ஜெர்மன் காவல்துறையின் பரிந்துரையின் கீழ், மனநல வைத்தியர் ஒருவரைப் பார்த்து, அவரிடம் ஆறு மாதங்களுக்கு மேல் மனம் விட்டுப் பேசி, அழுது, அவர் சொன்ன மாத்திரைகளைத் தவறாமல் எடுத்து, பயிற்சிகளை மேற்கொண்ட பிறகுதான் மற்றவர் காரில் பயணிக்கும் அளவுக்கே முன்னேறினாள்.

அதன் பிறகு அவளே காரை எடுக்குமளவுக்கு மாற்றுவதற்கு இன்னும் நிறைய நாள்கள் எடுத்திருந்தன. இப்போதும் அதி வேக வீதிகளில் பயணிப்பதை முடிந்தவரை தவிர்த்துவிடுவாள். ஒரு பயம் பதற்றம் இல்லாமல் இல்லை. ஆனால், எல்லா நேரமும் அவளுடனேயே இருந்து அவளை அழைத்துச் செல்வதற்கு யார் இருக்கிறார்கள்? அப்படியே யாரும் இருந்தாலும் அது காலம் முழுக்கச் சாத்தியமும் இல்லையே.

கசப்பான அந்த உண்மைதான் இன்னுமே மனப்பயம் இருந்தாலும் அதைத் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு அவளை வாழ வைத்திருந்தது. இதை மெல்லிய குரலில் உதயன் கேசிகனிடம் பகிர்ந்துகொண்டபோது, நெஞ்சடைக்கும் துக்கத்துடன் அவளைத் திரும்பிப் பார்த்தான் அவன்.

அங்கே சாருகன் சஜிதனுடன் தானும் ஒரு குழந்தையாக விளையாடிக்கொண்டிருந்தாள் அவள். இப்படி எத்தனை பயங்களை, பாதுகாப்பற்ற மனநிலையைத் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டிருப்பாள்?

போக முதல் கேசிகனைத் தனியாக அழைத்த மேனகா, “ஐயா, தாய் தகப்பன் இல்லாத பிள்ளை அவா. என்னால முடிஞ்சதச் சொல்லிக்குடுப்பேன்தான். எண்டாலும் பக்கத்தில இருந்து கவனிக்க ஒருத்தரும் இல்லை. கொஞ்சம் முன்ன பின்ன நடந்தாலும் சமாளிச்சுப் போங்கோப்பு.” என்று தயவாய்ச் சொன்னார்.

அவரைக் கனிவுடன் நோக்கிப் புன்னகைத்து, “அவள் என்ர பொறுப்பு அன்ட்ரி. நீங்க கவலைப்படாம போயிற்று வாங்கோ.” என்று சொல்லி அனுப்பிவைத்தான் கேசிகன்.
 

Thevaky

New member
அடேய் கேசி, இப்பதான் உனக்கு தெரியுதோ அவள் உன் பொறுப்பெண்டு… மடையா
 

vidhya s

Member
இனிமேலாவது நவி யோட வாழ்க்கைல மனவேதனை இல்லாம இருக்கனும்
 
Top Bottom