• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 9

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 9


மயூரனுக்கு நாவினி மீதான கேசிகனின் ஆர்வமும், அந்த ஆர்வம் ஆசையாக மாறி நேசமானதும் தெரியும். அந்த நாள்களில் அவள் சின்ன பெண் என்று அவளிடம் எதையும் வெளிப்படுத்த முடியாமல் இவனிடம்தான் வந்திருந்து தன் அவஸ்தைகளைச் சொல்வான்.

அதன் பிறகும் இவன் மூலம் அவர்கள் இருவரும் கடிதங்கள் பரிமாறிக்கொண்டது என்று எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தன, அவன் வீட்டில் மொழிக்குக் கேசிகனைக் கேட்கலாமா என்கிற பேச்சு எழுகிற வரை.

அப்போது இவன்தான் முதல் ஆளாக நின்று மறுத்தான். வீட்டினர் காரணம் கேட்டபோது உண்மையைச் சொல்ல முடியவில்லை. அதனாலேயே இவன் மறுப்பு அங்குப் பெரிதாக எடுபடவில்லை.

ஆனால், கேசிகனின் நல்ல குணங்கள் பற்றியும், அவன் ஆரம்பித்திருந்த மினி மார்க்கெட் பற்றியும் எடுத்துச் சொல்லி, இந்தத் திருமணம் நடந்து, அவன் தங்கையின் கணவனானால் அவள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று வீட்டினர் சொல்ல சொல்ல மயூரனின் மனம் தடுமாற ஆரம்பித்தது.

யோசிக்க யோசிக்க நண்பன் தங்கைக்கு நல்ல துணையாகத் தெரிந்தான். அந்தளவில் நாவினி வீட்டினர் தன்னை வேண்டாம் என்று சொல்லிவிடக் கூடாது என்று அயராது உழைக்க ஆரம்பித்திருந்தான் கேசிகன். பக்கத்திலிருந்து பார்க்க பார்க்க இன்னும் பத்து வருடங்களில் அவன் உயரம் வேறாக இருக்கும் என்று அவனுக்கே நன்கு தெரிந்தது.

எல்லாவற்றையும் விட, “ஏன் அண்ணா அவரை வேண்டாம் எண்டு சொல்லுறீங்க? அவர் நல்லவர்தானே. என்னை நல்லா வச்சிருக்க மாட்டாரா?” என்று கண்களில் ஆசையையும் ஏக்கத்தையும் தேக்கி வைத்துக்கொண்டு, நிறைமொழி அவனைத் தேடி வந்து கேட்டபோது, அவன் மனம் தங்கை புறம் முற்றிலுமாகச் சாய்ந்திருந்தது.

இது நடக்க வேண்டுமானால் கேசிகன் நாவினி கடிதத் தொடர்பு நிற்க வேண்டும். மனத்தில் பயம் இல்லாமல் இல்லை. நண்பனுக்குத் துரோகம் இழைக்கிறோமே என்கிற உறுத்தல் வராமல் இல்லை.

ஆனாலும் தங்கையின் நல்வாழ்க்கை என்கிற ஆசை அவனை அனைத்தையும் செய்ய வைத்தது. நாவினி வெளிநாட்டில் நல்ல வாழ்க்கை வாழ்கிறாள்தானே என்று தன்னைத் தானே சமாதானமும் செய்துகொண்டான். அதன் பிறகு அவள் கடிதங்கள் அனைத்தையும் கிழித்து எறிந்தான். கேசிகனாகக் கொண்டுபோய் அனுப்புகிறவற்றை இவனால் ஒன்றும் செய்ய முடியாது போனாலும் இவனிடம் தருகிறவற்றை அனுப்பவில்லை.

ஒரு முறை கேசிகனின் மினி மார்கெட்டுக்குச் சென்றுவிட்டு வருகையில் அவன் கைப்பேசியை அவனுக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டு வந்துவிட்டான்.

கடைசியில் கேசிகன் இங்கே மொழியுடனான திருமணத்திற்குச் சம்மதம் சொன்னதும், ‘அங்கே உன் வாழ்க்கையைப் பார்’ என்று அவளுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தான்.

கேசிகன் நிறைமொழி திருமணம் நல்லபடியாக நடந்து, அவன் தங்கை அவன் கண் முன்னேயே மிக நன்றாக வாழ்ந்தாள். அனைத்தும் நினைத்தபடி நடந்த மகிழ்வில் இருந்தவனை மொத்தமாக அடித்துச் சாய்த்திருந்தது மொழியின் மறைவு.

சிறு சந்தேகமும் இல்லாது தன்னை முற்று முழுதாக நம்பிய நண்பனுக்குச் செய்த பாவத்திற்குத்தான் நிறைமொழி பாதியில் போனாளோ என்று அன்றிலிருந்து அவனுக்குள் பெரும் உறுத்தல். செய்த பாவத்திற்கு பரிகாரம் தேட முடியாதா என்று ஒரு பரிதவிப்பு.

அதே நேரத்தில் இதையெல்லாம் கேசிகனிடம் சொல்லும் துணிச்சலும் இல்லை. ஆனால், நாவினி மொத்தமாகத் தன் குடும்பத்தை இழந்துவிட்டு அனாதையாக நிற்கிறாள் என்று அறிந்ததிலிருந்து அவன் நிம்மதியும் தொலைந்துபோயிற்று.

அவர்கள் காதலை உடைக்காமல் இருந்திருந்தால் எல்லோரும் உயிருடன் இருந்திருப்பார்களோ என்று ஓடும் யோசனையை அவனால் தவிர்க்கவே முடியாமல் போயிற்று.

அவன் கெட்டவனோ, கேசிகன் நன்றாக வாழ்ந்துவிடக் கூடாது என்று நினைத்தவனோ இல்லை. தங்கை என்று வருகையில் அவன் உள்ளம் தடுமாறிப்போயிற்று. ஆனால் இன்று…

இனியாவது அவர்கள் இருவரையும் சேர்த்துவிட முடிந்தால்? எப்படி என்றுதான் புரியமாட்டேன் என்றது. இத்தனை சிந்தனைகளோடும் வீடு வந்தவனை சாரதா பார்த்த பார்வை வேறு தலையை நிமிர்த்த முடியாமல் செய்தது.

“அம்மா ப்ளீஸ், வேணுமெண்டு நான் எதையும் செய்யேல்ல!” என்றான் அந்தக் குற்றம் சாட்டும் பார்வையை எதிர்கொள்ள இயலாமல்.

சாராதாவுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. போனமுறை நாவினி இங்கே வரும்வரையில் அவருக்கு ஒன்றும் தெரியாது. கேசிகன் நல்ல பிள்ளை. அவனுக்கு மகளைக் கொடுத்து, அவள் நிறைவாக வாழ்கிறாள் என்கிற மகிழ்வில் இருந்தார். அதன் பிறகுதான் அனைத்தும் தெரிய வந்திருந்தன.

அதிர்ந்துபோனார். தன் மகன் இப்படி ஒரு காரியம் செய்தானா என்று கோபமும் ஆத்திரமும். ஆனால், மகள் கேசிகனை நேசித்திருக்கிறாள், அது தெரிந்துதான் மகன் அப்படி நடந்தான் என்று அறிந்தபோது அவராலும் ஒன்றும் செய்ய இயலாமல் போயிற்று.

அதன்பிறகு இதெல்லாம் கேசிகனுக்குத் தெரிய வந்து, மகள் வாழ்க்கையில் எதுவும் நடந்துவிடுமோ என்கிற பயமும் பதற்றமும் அவருக்குள் இருந்துகொண்டேதான் இருந்தன. அதற்குள் அந்த மகளே போய்ச் சேர்ந்திருந்தாள்.

அப்போதிருந்தே செய்த பாவம்தான் எங்களைப் போட்டுச் சுழற்றி அடிக்கிறதோ என்கிற எண்ணம் அவருக்குள்ளும் வந்திருந்தது. என்ன, ஒரு மகளைப் பறிகொடுத்தவர் மகனிடம் கோபப்படப் பயந்தார்.

அதில் அதைப் பற்றி ஒன்றும் கதைக்காமல், “நேற்று பிரேமா அக்கா சாப்பாடு குடுத்துவிட்டிருக்கிறா. இண்டைக்கு நாங்க குடுப்பம். சாவு நடந்து ஒண்டரை வருசத்துக்குப் பிறகு இப்பிடிச் சாப்பாடு குடுக்கோணும் எண்டு இல்லைதான். எண்டாலும் நாங்க பாக்க வளந்த பிள்ளை வந்திருக்கேக்க சும்மா இருக்கேலாது. சமையல் முடிஞ்சுது. சாப்பாட்டைக் கொண்டுபோய்க் குடுத்திட்டு அப்பிடியே ரெண்டு வார்த்த கதைச்சிப்போட்டு வா.” என்று உணவைக் கொடுத்துவிட்டார்.

அங்கே அவள் இவனைக் கண்டுவிட்டு எந்த வித்தியாசமும் காட்டவில்லை. “வாங்க அண்ணா!” என்று மென் சோகப் புன்னகையோடு வரவேற்றாள்.

அவன் தந்த உணவை வாங்கிக்கொண்டே, “அன்ட்ரிக்கு வீண் சிரமம் அண்ணா.” என்றும் சொன்னாள்.

“அதுதானப்பு. இவர் அங்க பருத்தித்துறைக்கு அலுவலா போய்ட்டார். இருக்கிறது நாங்க ரெண்டு பேரும்தான். விடிய வெள்ளனவே உங்கட அம்மா ஃபோன் பண்ணிச் சொன்னவா. வேண்டாம் எண்டு எவ்வளவு சொல்லியும் கேக்கேல்லை.” அவனுக்கு அருந்தக் கொடுத்தபடி சொன்னார் வைதேகி.

“இதுல என்ன இருக்கு அன்ட்ரி. அம்மாக்கு ஒரு சிரமமும் இல்ல.”

“தம்பி என்ன செய்றீங்க?” என்று வைதேகி பேச்சைப் பொதுவாக நகர்த்தியது அவனுக்கும் பேச இலகுவாக இருந்தது: பொதுவாகவே பேச்சை நகர்த்தினான்.

ஆனால், அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. “கதைச்சுக்கொண்டு இருங்கோ.” என்றுவிட்டு எழுந்துபோனார்.

“வைஃப், பிள்ளைகள் எல்லாரும் எப்பிடி இருக்கினம் அண்ணா?” அப்போதும் எதைப் பற்றியும் கேளாமல் அவன் குடும்பத்தைப் பற்றி விசாரித்தாள் நாவினி.

“நல்லாருக்கினம். நீர்?”

“எனக்கு என்ன? நானும் நல்லா இருக்கிறன்.” என்று முறுவல் செய்தாள் அவள்.

அவள் திருமணத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்று வந்தவனுக்கு அதற்கான தைரியம் வரமாட்டேன் என்றது. அந்தளவில் உருக்குலைந்து, பொலிவிழந்து, உயிர்ப்பற்ற விழிகளுடன் தூசு படிந்த சித்திரமாக இருந்தவளைக் காண காணக் குன்றிப்போனான்.

“மனுசின்ர ஊர் கொக்குவில். இப்ப இருக்கிறது அங்கதான். அம்மாக்களைப் பாத்துக்கொண்டு போவம் எண்டு வந்த இடத்திலதான் நீர் வந்தது தெரியும்.” என்று அவன் சொன்னதைச் சின்ன புன்னகையோடு கேட்டுக்கொண்டாள் அவள்.

அந்தப் புன்னகை அவனை வெட்டிக் கூறு போடுவது போலிருக்க, “சொறி!” என்றான் கொஞ்சம் திணறி. “இப்பிடி எல்லாம் நடக்கும் எண்டு எதிர்பாக்கேல்ல.”

நாவினி இலேசாக முறுவலிக்க முயன்றாள். அதை மீறிக்கொண்டு கண்களில் கண்ணீர் தளும்பிற்று. அது அவன் நெஞ்சையே அறுத்தது. “எதையும் வேணுமெண்டு செய்யேல்ல நாவினி.” என்றான் அதற்குமேல் முடியாதவனாக.

தன் உலகம் என்று நம்பிய எல்லோரையும் ஏதோ ஒரு வகையில் மொத்தமாக இழந்துவிட்டு நிற்பவள் அவள். இந்த மன்னிப்பு இழந்த எந்த உறவை மீட்டுத் தரும்? “பரவாயில்லை அண்ணா.” என்று மட்டும் சொன்னாள்.

“உண்மையா சொறியம்மா!”

சரக்கென்று வழிந்துவிட்ட கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “அண்ணா ப்ளீஸ். அதெல்லாம் எப்பவோ நடந்ததுகள். அதுக்காக இன்னும் எத்தின தரம் மன்னிப்புக் கேப்பீங்க? விடுங்க.” என்று புன்னகைத்தாள்.

புறப்படுகையில், “நீரும் ஒரு கலியாணத்தக் கட்டும் நாவினி. மனுசன், பிள்ளைகள் எண்டு நீர் குடும்பமா வாழுறத நாங்க பாக்கோணும்.” என்று மெய்யான அன்போடும் அக்கறையோடும் சொன்னான்.

மெல்லிய முறுவல் ஒன்றுடன் அவனை வழியனுப்பி வைத்தாள் நாவினி.

தன் அறைக்குள் வந்தவளின் விழிகளிலிருந்து மௌனமாகக் கண்ணீர் உருள ஆரம்பித்தது.

போனமுறை இங்கே வந்துவிட்டுப் புறப்படுகையில் அவன் வரைந்த வீட்டின் ஃபிரேமை திருப்பிக் கொண்டுபோகவோ, குப்பையில் வீசிவிட்டுப் போகவோ அவளுக்குத் தைரியம் இருக்கவில்லை. அதில் அதை எடுத்துக்கொண்டு மயூரனின் வீட்டுக்குச் சென்றிருந்தாள்.

சாரதாதான் வீட்டில் இருந்தார். அவரின் மகளுக்கும் மருமகனுக்குமான சின்ன திருமணப் பரிசு என்று சொல்லி அந்த ஃபிரேமை அவரிடம் கொடுத்தாள். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவளுக்குத் தேநீர் தந்து உபசரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, “மயூரன் அண்ணா டுபாயில இருந்து இன்னும் திரும்பேல்லயா அன்ட்ரி?” என்று எதேற்சையாகத்தான் விசாரித்திருந்தாள்.
 

Vishakini

Moderator
Staff member
நடந்த எதுவும் அறியாத அவர் குழம்பிப்போனார். “டுபாயோ? அவன் அப்பிடி ஒரு இடமும் போகேல்லையே பிள்ளை. உங்களுக்கு ஆரோ மாறிச் சொல்லிட்டினம் போல.”

இப்போது குழம்பும் முறை அவளது ஆயிற்று. “இல்லையே அன்ட்ரி. மயூரன் அண்ணாதான்…” என்று அவள் சொல்லி முடிக்க முதலே, “அவேன்ர தகப்பனார் மகனை அப்பிடி அவ்வளவு தூரத்துக்கு வெளில விடமாட்டாரம்மா. அதவிட அவன் எங்கட மருமகனோட சேந்து அவரின்ர கடையத்தான் பாத்துக்கொண்டு இருக்கிறான். பாத்துக்கொண்டிருந்த வேலையையும் விட்டுட்டான்.” என்று சொன்னார்.

கொஞ்ச நேரத்திற்கு அவளால் சிந்திக்கவே இயலாமல் போயிற்று. அதுவரையில் அவன் டுபாய் சென்றதால்தான் அவனைக் காணக்கிடைக்கவில்லை என்று நினைத்திருந்தாள்.

அப்படி இல்லை. அவள் கண்ணில் படாமல் ஓடி ஒளிந்திருக்கிறான். யோசிக்க யோசிக்க நெற்றிப் பொட்டில் அறைவதுபோல் பல விடயங்கள் புலனாகின.

அந்த நாள்களில் மயூரனுக்கே பல கடிதங்கள் அனுப்பியிருக்கிறாள். ஒன்றுக்கு கூடப் பதில் போடாதவன், அவள் கேட்ட கேசிகன் பற்றிய சிறு தகவல் கூடத் தராதவன், கடைசியில், ‘உன் எதிர்காலத்தை அங்கே பார்’ என்று மட்டும் சொல்லி ஒரு கடிதம் அனுப்பியிருந்தான். நிறைமொழி அவன் தங்கை.

இரண்டும் இரண்டும் நான்கு என்று இலகுவாக விடை காண்பது போன்று, மயூரனால் தனக்குப் பெரும் அநியாயம் இழைக்கப்பட்டிருப்பதை ஊகிப்பதற்கு நிறைய நேரம் அவளுக்குப் பிடிக்கவில்லை.

நெஞ்சு அடைத்துக்கொண்டு வந்திருந்தது அவளுக்கு. அவரிடம் எப்படிச் சமாளித்தாள், எப்படி அங்கிருந்து புறப்பட்டு வந்தாள் என்றெல்லாம் தெரியாது.

அன்று அவர்கள் ஊர்ப் பிள்ளையார் கோவிலில் வைத்து யாருக்கும் தெரியாமல் அவள் அழுத அழுகை சொல்லி மாளாதது.

ஜெர்மன் வந்து சேர்ந்த பிறகும் நடந்த துரோகத்தையும் இழந்துவிட்ட தன் வாழ்க்கையையும் ஜீரணித்து ஏற்றுக்கொள்வதற்கு நிறைய நாள்கள் எடுத்தன.

கேசிகனைப் பற்றிச் சின்ன விசாரணை கூட இல்லாது அவளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்ட அபிராமி அதற்குப் பெரும் காரணமாக இருந்தார். அவனுக்குத் திருமணமானதெல்லாம் அவருக்குத் தெரியாதா என்கிற கேள்வி அவளுக்கு வராமலில்லை. ஆனால், அதையறிந்து என்ன செய்யப்போகிறாள் என்று அன்று பேசாமல் இருந்துவிட்டாள்.

ஆனால், அது மட்டுமில்லை நிறைய விடயங்கள் அவருக்கு முதலே தெரிந்திருக்கிறது என்று பிறகு ஒரு நாளில் அவளுக்குத் தெரிய வந்திருந்தது.

அந்தக் கார் விபத்து நடந்த பிறகு அபிராமி ஒரு வாரம் உயிருடன் இருந்துதான் இறந்திருந்தார். அந்த நேரம், தான் இனி இருக்க மாட்டோம் என்று அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

அவளைத் தன்னிடம் வரவழைத்து, “கேசிகன் நாலஞ்சு கடிதங்கள் போட்டவனம்மா. நான்தான் கிழிச்சு எறிஞ்சனான். ஃபோனும் எடுத்தவன். நான்தான் கதைக்கேல்ல. அந்த நேரம் உன்ர வாழ்க்கை அங்க அமையிறதுல எனக்கு விருப்பம் இருக்கேல்ல குஞ்சு. பரமேஸ்வரன்ர மகள் இருக்கிற வீட்டில நீங்க நிம்மதியான வாழ்க்கை வாழமாட்டீங்க எண்டு நினைச்சன். நாங்க எல்லாரும் இஞ்ச இருக்க உங்களை அங்க காட்டிக்குடுக்க விருப்பமும் இல்ல. ஆனா இப்பிடி எல்லாரும் மொத்தமா உன்ன விட்டுப்போட்டுப் போவம் எண்டு தெரிஞ்சிருந்தா உனக்கு அவனையே கட்டி வச்சிருப்பன். அம்மாவை மன்னிச்சுக்கொள்ளு செல்லம்.” என்று கண்ணீருடன் அவள் கன்னம் வருடிச் சொல்லிவிட்டு உயிரை விட்டிருந்தார்.

அந்த நொடியில் அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. பிறகு பிறகு அதற்கும் சேர்த்துக் கண்ணீர் வடித்திருக்கிறாள். ஆனால் ஒன்று, இரு பக்கம் இருந்தும் அவர்களின் நேசம் அநியாயமாக நசுக்கப்பட்டதும், அவளின் அவனும் மிக இலகுவாகவே அதைக் கடந்து போய்விட்டதும் மிக நன்றாகவே புரிந்துபோயிற்று.

ஏனோ அவளுக்கு யார் மீதும் கோபம் இல்லை. இதெல்லாம் நடக்க வேண்டும் என்று அவளுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது போலும். அப்படியிருக்க யாரை நொந்து என்ன பயன்?

அதைத்தான் இன்று மயூரனிடமும் சொல்லி அனுப்பினாள்.

வீடு வந்தவனின் முகம் சரியில்லாமல் இருக்கவும், “என்ன தம்பி? அந்தப் பிள்ளை கோவமா ஏதும் சொன்னவாவோ?”
என்று விசாரித்தார் சாரதா.
“அப்பிடிச் சொல்லியிருந்தா கூடப் பரவாயில்லை அம்மா.” என்று நடந்ததைச் சொன்னான் மயூரன்.

அவருக்கும் கவலையாயிற்று. நாவினி வந்து பரிசைத் தந்துவிட்டுப் போன அன்று இரவு, வீடு வந்த மயூரனிடம், “நீ டுபாய்க்கு போனனீயாம் எண்டு ஆரோ நாவினிக்குச் சொல்லியிருக்கினம் தம்பி.” என்று சொன்னார் சாரதா.

அதிர்ந்துபோனான் மயூரன். “நீங்க என்னம்மா சொன்னனீங்க?” என்று அவசரமாக வினவினான்.

“நான் என்ன சொல்லக் கிடக்கு? உங்கட அப்பா அவ்வளவு தூரத்துக்கெல்லாம் விடமாட்டார், இஞ்ச எங்கட மருமகனோடதான் நிக்கிறார் எண்டு சொன்னனான்.”

அதைக் கேட்டுத் தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டான் மயூரன். தன் குட்டு வெளிப்பட்டுவிட்டது தெரிந்தது. இனி என்ன செய்வது என்று தெரியாது அமர்ந்திருந்தவனை விசாரித்தபோதுதான் சாரதாவுக்கு அனைத்தும் தெரியவந்திருந்தது.

ஒரு பெண் பிள்ளைக்கு என்ன வேலை பார்த்திருக்கிறாய் என்று கோபப்பட்டார்தான். ஆனால், அது பிரயோசனமற்ற கோபமாயிற்றே.

“அம்மா, நாவினி விடிய வெளிக்கிட்டுடுவா எண்டுதான் அறிஞ்சனான். தேடிப்போய் இதையெல்லாம் கேசிகனிட்டச் சொல்லி, சண்டை மூட்டி விடுற ஆள் இல்லை நாவினி. நீங்களும் அவா தந்த கிஃட்ட அவனிட்டக் குடுக்காதீங்க.” என்றுவிட்டு, அதைக் கையோடு வாங்கிக்கொண்டு போய் மறைவாக எடுத்து வைத்துவிட்டான்.

சாரதாவுக்கும் அதுதான் சரியாகப் பட்டது. பிழைதான். பெரும் துரோகம்தான். செய்திருக்கக் கூடாதுதான். அதைத் தடுத்து நிறுத்தும் காலம் கடந்துபோயிற்று என்பதில் மகளின் நல்வாழ்க்கையைக் கருதி மகனோடு சேர்ந்து அவரும் அனைத்தையும் அன்று மறைத்துவிட்டார்.

 

Kalai Karthi

Active member
மயூரன் அபிராமி அவங்க பக்கம் நியாயம் பிரிச்சுட்டாங்க. நாவினி பாவம்.
 
Top Bottom