• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மரகத மாமன் - 7

நிதனிபிரபு

Administrator
Staff member
மரகதம் மாமன் 7

"அந்தம் பையனை யாராவது கட்டிக்க வருவாங்களா மாறா! இந்த வயசுல தொப்பையும் தொந்தியுமா லேசா சொட்டை வேற! அப்படி இருந்தும் நான் கட்டிக்கிறேன்னு சொல்லியும் அவங்க பையனுக்காகக் கூடப் பொண்ணைக் கட்டிக் கொடுக்க மனசு வரலைப் பாரேன் அவங்களுக்கு" என்று மனக் கொதிப்புடன் கூறினாள் மரகதம்.

"அப்பு அவரு சொன்னதை சரியா கவனிக்கலையா நீ? இரண்டாவது கல்யாணம் செய்றதையே ஒழுக்கங்கெட்ட செயல்னு சொல்றாரு. அந்தாளு சாதி வெறி புடிச்சவரா இருப்பாரு போல. ஆணவக் கொலை செய்ற அளவுக்கு மோசமானவரா கூட இருக்கலாம்" என்றான்.

அவனின் கூற்றில் பயந்தவளாய், "அய்யோ என்னடா சொல்ற! அப்புறம் ஏன்டா அவர்கிட்ட போய் வீராவேசமா சபதம் போட்ட? மொதல்ல நாம இந்த ஊரை விட்டு கிளம்பனும் மாறா. நமக்கு இந்தப் பொண்ணும் வேணாம் ஊரும் வேணாம்" என்று படபடத்தாள் மரகதம்.

"பெரிசா சபதம்லாம் போட்டுட்டு வந்திருக்கேன். ஊரை விட்டு போய்டலாம்னு சொல்ற, அந்தப் பொண்ணு நிலைமைய யோசிச்சு பார்த்தியா நீ?" எனக் கேட்டான் கதிர்மாறன்.

"அடேய் வீணா போனவனே, என் நிலைமையை யோசிச்சு பார்த்தியாடா நீ? என்னமோ உன்னை உருகி உருகி காதலிச்ச பொண்ணைக் கழட்டி விட்டுட்டு வரச் சொல்ற மாதிரி பேசுற! அந்தப் பொண்ணுக்கு உன்னை யாருனு கூடத் தெரியாது" என்று அவள் கடுப்புடன் புலம்பியிருந்த நேரம், திடீரெனத் தடையணையை அழுத்திப் பிடித்து மகிழுந்தை நிறுத்தினான் கதிர்மாறன்.

அவனின் இருந்த திடீர் செயலில் மகிழுந்தின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவளின் மண்டை முன்னே இருந்த கண்ணாடியில் இடித்திருக்க, "ஆஆஆ" என்று தலையைத் தேய்த்தவளாய், "எதுக்குடா எருமை இப்ப சடன் பிரேக் போட்ட?" என்று மேலும் கடுப்புடன் கேட்டாள்.

"அங்க பாரு அப்பு?" என்று ஓரிடத்தை நோக்கி கையை நீட்டினான் கதிர்மாறன்.

'என்னத்த பார்த்து இவன் வண்டிய நிறுத்தினான்' என்று நினைத்தவாறு முகத்தைத் திருப்பியவள், அங்குக் கண்ணாடிக் கதவு போடப்பட்டிருந்த கடையினுள் முதலாளி போன்று பெரிய நாற்காலியில் அந்த மரகதப் பெண் அமர்ந்திருக்க, அவளின் எதிரே அமர்ந்திருந்தான் மணிவாசகம்.

மணிவாசகம் தீவிரமான முகப் பாவனையில் ஏதோ கூறிக் கொண்டிருக்க, சோகம் கலந்த அமைதியான முகத்துடன் அதனைக் கேட்டிருந்தாள் மரகதம்.

"ப்ரோ இந்தாளு இங்க என்ன செய்றாரு? அப்ப மொத்த குடும்பத்தைப் பத்தியும் தெரிஞ்சு வச்சிக்கிட்டு தான் நாம அசிங்கப்படனும்னு அனுப்பி வச்சிருக்காரு போல! இரு நான் போய் அவரை நாக்கைப் புடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டுட்டு வரேன். அப்ப தான் என் மனசு ஆறும்" என்று இவள் இறங்கப் போக,

"இரு நானும் வரேன்! வண்டியை ஓரமா விட்டுட்டுப் போகலாம்" என்று அவர்களைப் பார்த்து முறைத்தவாறு தீர்க்கமான குரலில் உரைத்தவனாய் மகிழுந்தை ஓரங்கட்டினான் கதிர்மாறன்.

மகிழுந்தில் இருந்து இறங்கியவர்களாய் இருவரும் கடையின் வாசலில் சென்று நிற்க, இவர்களைப் பார்த்ததும் மரகதப் பெண்ணிற்குத் தூக்கி வாரிப் போட்டது.

'இவிய என்னதுக்கு இங்கன வந்திருக்காவ?' என்று மனத்திற்குள் நினைத்தவளாய் அதிர்ந்த பார்வையுடன் அவர்களை அவள் பார்த்திருக்க, இயல்பாய் அவர்களைப் பார்த்திருந்த மணிவாசகம், "உள்ளாற வாரும்" என்று அவர்களை அழைத்தான்.

"ஏன் மணி சார் இப்படிச் செஞ்சீங்க?" உள்ளே நுழைந்த நொடி கோபத்துடன் கேட்டாள் மரகதம்.

"என்ன அவிய வூட்டுக்குப் போயி பொண்ணு கேட்டியலோ?" என்று சிரிப்புடன் கேட்டான் மணிவாசகம்.

"எங்களை அசிங்கப்படுத்தனும்னு வேணும்னே தானே இப்படிச் செஞ்சீங்க?" என்று மேகி என்கிற மரகதம் கோபத்துடன் கேட்டாள்.

"நான் என்னத்த செஞ்சேனாக்கும்?" இதழுக்குள் புதைந்திருந்த புன்னகையுடன் கேட்டான்.

அவனின் சிரிப்பு அவளை மேலும் கடுப்பேற்ற, "என்ன நக்கலா? எங்களைப் பார்த்தா எப்படித் தெரியுது உங்களுக்கு?
எங்களை அசிங்கப்படுத்தனும்னு தானே ரெண்டு நேரமும் அந்த வீட்டுக்கு எங்களை அனுப்பி வச்சீங்க. அப்படி என்ன கோபம் உங்களுக்கு எங்க மேல?" எனக் கேட்டாள்.

"நீங்க அந்த வூட்டுக்குப் போனதால தான் அங்கன இருக்கக் கோளாறுலாம் உமக்கு அகப்பட்டுச்சு. உம்ம கண்ணால அதலாம் காண்கனும்னு தான் அனுப்பி வச்சேனாக்கும். இல்லாட்டி அவியக நல்லவிய மாதிரியே நடிச்சி ஏமாத்தி வுட்டுருபாவ" என்றான் மணிவாசகம்.

மணிவாசகம் அவ்வாறு கூறியதும், 'அதுவும் சரி தான்' என்று எண்ணியவர்களாய் மேகியும் கதிரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

மணிவாசகம் அவளின் குடும்பத்தை அவ்வாறு கூறியும் அந்த மரகதப் பெண் குற்றவுணர்வுடன் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்த கதிர்மாறன்,

"ஆமா உங்களுக்கும் இந்த மரகதத்துக்கும் என்ன சம்பந்தம்?" கூரிய பார்வையுடன் வினவினான்.

"கேட்குறாவலா சொல்லு தாயி" மீசையைத் திருகியவனாய் கறாரான குரலில் உரைத்தான் மணிவாசகம்.

அவனின் தாயி என்ற விளிப்பில் விலுக்கென நிமிர்ந்த மேகி, 'எல்லாரையும் தாயினு தான் கூப்பிடுவாரா?' அதெப்படி எல்லாரையும் அவரு அப்படிக் கூப்பிடலாம் என்பது போல் ஏனோ மனத்தில் லேசாய் பொறாமை உணர்வு எட்டிப் பார்த்தது அவளுக்கு.

"என்னோட தாய்மாமா இவரு" என்றாள் மரகதம்.

"வாட்?" என்று அதிர்ந்த பாவனையுடன் கத்தியிருந்தாள் மேகி என்கிற மரகதம்.

"என்னது அந்தம்மா உங்க அக்காவா? இவ்ளோ வயசு வித்தியாசத்துல தம்பியா?" என்று மேகி கேட்டிருந்த நேரம்,

"அப்ப நீங்க காதலிச்ச பொண்ணு இந்த மரகதம் தானா?" எனக் கேட்டான் கதிர்மாறன்.

'என்னது மாமா காதலிச்சாரா?' சட்டென மரகதப் பெண்ணின் முகத்தில் வியப்பும் கேள்வியும் வந்து போக,

கதிர்மாறனைத் திரும்பிப் பார்த்த மேகி, "ப்ரோ உனக்கு உன் பிரச்சனை?" என்று சிரித்தாள்.

"ம்ப்ச் அப்பு வாயை மூடு! கேலி பேசுற நேரம் இல்ல இது! இப்ப எனக்குத் தெரிஞ்சாகனும். சொல்லுங்க மணி மாமா, நீங்க காதலிச்ச பொண்ணு இந்த மரகதம் தானா?" அத்தனை கோபமும் ஆதங்கமுமாய்க் கேட்டிருந்தான் கதிர்மாறன்.

"எங்க குடும்பத்துல உடன்பிறந்தா மவளையும் உடன்பிறப்பா தான் பார்ப்போம் தம்பி. ஒரே வயத்து பிள்ளைய கட்டிக்கிடுற பழக்கம் எங்களுக்கு இல்ல" கறாரான குரலில் உரைத்தான்.

கதிர்மாறனின் உள்ளம் அடைந்த ஆசுவாசத்திற்கு அளவேயில்லை. அந்த நிமிடத்தில் தான், தான் இந்த மரகதத்தின் மீது எத்தனையாய் காதல் கொண்டிருக்கிறோம் என்று அவனே உணர்ந்தான்.

மனத்தின் ஆசுவாசம் முகத்தில் மகிழ்வை உண்டாக்க, குமிழ்ச் சிரிப்புடன் இதைப் பார்த்திருந்த மேகி, "இப்ப உன் லைன் கிளியர். சந்தோஷம் தானே" என்று கேலிச் செய்தாள்.

"அப்பூஊஊஊ" என்று அதட்டல் குரலில் அவளை அடக்கிய கதிர்மாறன், நேராக அந்த மரகதப் பெண்ணின் முன்பு சென்று நின்றவனாய், "உங்களோட முன்னாடி வாழ்க்கைல என்ன நடந்துச்சுனு நான் தெரிஞ்சிக்க விரும்பலைங்க. இப்ப நீங்க வாழுற வாழ்க்கைல நானும் பங்கெடுத்துக்க விரும்புகிறேன். என்னைக் கட்டிக்கிறீங்களா?" எனக் கேட்டிருந்தான்.

'அடப்பாவி' என்பது போன்ற பாவனையுடன் அவனின் இந்த அதிரடிப் பேச்சில் மேகியே அசந்து போய் நிற்க, மரகதப் பெண்ணின் உள்ளமோ நடுங்கியது. அவளின் முகத்தில் அப்பட்டமாய்ப் பயம் தெரிந்தது.

சட்டென உதவிக்குத் தாய்மாமனைப் பார்த்தாள் அவள்.

"என்ன தாயி பார்கிறவிய! புடிச்சிருக்குனா சொல்லும். எம்பூட்டுத் தடை வந்தாலும் இந்த மாமன் முன்ன நின்னு கட்டி வைக்குதேன்" என்று அவளுக்கு ஊக்கம் கொடுத்தான்.

"அய்யோ அப்பா கொன்னேபுடும் மாமா" என்று தன்னை மீறிக் கூறியிருந்தாள் அவள்.

"உங்க அப்பா அம்மா சொந்த பந்தம்னு யாருக்காகவும் பயப்படாதீங்க மரகதம். என்னைக் கட்டிக்கச் சம்மதம்னு மட்டும் சொல்லுங்க மத்ததை நான் பார்த்துக்கிறேன்" காதலான குரலில் அவளின் பார்வையோடு ஊடுருவியவனாய் உரைத்தான் கதிர்மாறன்.

அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் பார்வையைத் தாழ்த்திக் கொண்டவளாய், "அவிங்க கொலைக்காரங்க. உம்ம உசுரோட விட மாட்டாவ. இந்த எண்ணத்தை இங்கனயே புதைச்சுட்டு உங்க ஊருக்குப் போய்ச் சேருங்க" எரிச்சல் குரலில் உரைத்தவள், "மாமா இவிங்கள இங்கன இருந்து போவ சொல்லுங்க" என்றவாறு அங்கிருந்து வெளியே செல்லப் போக,

அவளை மறித்தவாறு அவளின் முன்னே வந்து நின்ற மேகி, "என்னங்க உங்க குடும்பத்துல யாருக்கும் மரியாதைனா என்னனே தெரியாதா? வீட்டுக்குப் போனாலும் வெளிய போனு துரத்தி விடுறீங்க. உங்க கடைக்கு வந்தாலும் வெளிய போனு துரத்தி விடுறீங்க" என்று கேட்டாள்.

"இது ஒன்னும் எங்க கடை கிடையாது. நான் இங்கன வேலையாளா தான் இருக்கேன். அதனால மருவாதையா வெளியே போறீயளா?" சற்றுக் காட்டமான குரலில் மரகதம் உரைக்கவும், மேகியின் முகம் சுருங்கிப் போக, இதைப் பார்த்த மணிவாசகத்திற்குச் சுள்ளெனக் கோபம் வந்தது.

"மரகதம்" என்று கோபத்துடன் மிகச் சத்தமாய் அதட்டல் இட்டான்.

திடீரெனக் கேட்ட அவனின் குரலில் இரண்டு மரகதமும் உடல் குலுங்க அவனைத் திரும்பிப் பார்த்தனர்.

மேகியின் அருகே வந்து நின்ற மணிவாசகம், "இவியல இங்கன வரக் கூடாதுனு சொன்னியல்னா எனக்கும் இங்கன வாரதுக்கு உரிமையில்லனு அர்த்தம் தாயி. இவியலை மருவாதை இல்லாம பேசுறத இத்தோட நிறுத்திக்க" என்று புருவம் இடுங்க கோபமாய் உரைத்தவன், "வாங்க தாயி நமக்கு இந்தக் குடும்பத்தோட ஒட்டு ஒறவே வேணாம்" என்றவனாய் மேகியின் கரத்தைப் பற்றிக் கொண்டு கடையை விட்டு வெளியே சென்றான்.

'என்னடா நடக்குது இங்க?' என்பது போல் கதிர்மாறன் அவர்களைப் பார்த்திருக்க, மணிவாசகத்தின் இழுப்புக்கு அவனுடன் சென்றிருந்த மேகி கடைக்கு வெளியே சென்றதும் தனது கரத்தை அவனது கரத்தினில் இருந்து பிரித்துக் கொண்டாள்.

இவர்களின் பின்னேயே வந்திருந்த மரகதம், "என்ன மாமா இப்பிடி யாரோ போல என்கிட்ட பேசுதிய? உம்ம விட்டா எனக்கு யாரு இருக்கா? இப்ப வரைக்கும் நீங்க சொல்லுறதை தானே நான் செஞ்சிட்டுக் கிடக்கேன்" என்று கண்களில் நீருடன் கூறினாள்.

'ஓ மணி சாரை இந்தப் பொண்ணுக்கு அவ்ளோ பிடிக்குமா?' என்று மனத்தோடு எண்ணிக் கொண்டாள் மேகி.

"என்ன தாயி இதுக்குப் போயி கண்ணைக் கசக்கிட்டு. உம்ம நான் விட்டுக்கொடுப்பேனா" என்று மரகதத்தின் தோளில தட்டிக் கொடுத்தவன்,

"எனக்குக் கொடுக்கிற அதே மருவாதையை இவியளுக்கு இவிய அண்ணனுக்கும் நீ கொடுக்கனும் தாயி. இல்லன்னா நான் நம்ம குடும்பத்தை விட்டு ஒதுங்கி இருக்க மாதிரி உம்ம விட்டும் ஒதுங்கிப்புடுவேன் சொல்லிப்புட்டேன்" என்றான்.

"ஓ அந்தளவுக்கு என்னை விட இவிங்க குடும்பம் உங்களுக்கு உசத்தியா போச்சா மாமா" கண்களில் கண்ணீருடன் தேம்பல் குரலில் கேட்டாள் மரகதம்.

அவளின் கண்களைத் துடைத்தவனாய், "எனக்கு நீயும் முக்கியம் இவியளும் முக்கியம். புரிஞ்சிக்கத் தாயி" என்று சமாதானம் செய்தான்.

இவர்களின் அருகே வந்த கதிர்மாறன், "நாங்க நாளைக்குச் சென்னைக்குப் போறோம். அங்கிருந்து ரெண்டு நாள்ல சிங்கப்பூருக்குப் போய்டுவோம். எப்ப உங்க மனசு மாறினாலும் எனக்குப் போன் செய்யுங்க. உங்களுக்காக நான் காத்திருப்பேன். மணி மாமா! என்னோட போன் நம்பரை இவங்களுக்குக் கொடுங்க" என்றவனாய் அப்புவின் கரத்தைப் பற்றிக் கொண்டு அங்கிருந்து அகன்றான்.

செல்லும் அவனையே குழப்ப விழிகளுடன் மரகதம் பார்த்திருக்க, காதல் விழிகளுடன் மேகியைப் பார்த்திருந்தான் மணிவாசகம்.
 
Top Bottom