• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மரகத மாமன் - 8

நிதனிபிரபு

Administrator
Staff member
மரகத மாமன் 8

மூன்று மாதங்களுக்குப் பிறகு...

கோலாலம்பூரின் சைபர்ஜெயா நகரத்தில் இருந்த காண்டோமினியத்தின் (அடுக்குமாடிக் குடியிருப்பின்) சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தான் கதிர்மாறன்.

"ப்பாஆ செம்ம டேஸ்டு! நீ வேற லெவல் சமையல்காரன்டா" என்று தன்னைத் தானே தோளில் தட்டியவனாய் பாராட்டிய கதிர்மாறன், தான் சமைத்த உணவையும் குழம்பையும் ஒன்றாகக் கிளறி இரண்டு டப்பாக்களில் எடுத்து வைத்தான்.

பாத்திரங்களைக் கழுவுமிடத்தில் போட்டு விட்டு, தனது உடைக்கு மேலாகக் கட்டியிருந்த ஏப்ரானை கழட்டியவாறு முகப்பறைக்குச் சென்று நேரத்தைப் பார்த்தான்.

காலை ஏழே முக்கால் மணியென நேரம் காண்பிக்கவும், "அய்யோ டைம் ஆகிடுச்சே" என்று அவசரமாக மரகதத்தின் படுக்கையறைக்குள் சென்றவன், "அடியேய் அப்பு எழுந்திரிடி" என்று அவளை உலுக்கினான்.

"ம்ப்ச் போடா என்னைத் தூங்க விடுடா" என்றவளாய் தலையணையை மேலும் அணைத்தவாறு அவள் உறங்க முனைய, "உன்னுடைய ஆபிஸ் மீட்டிங்-க்கு டைம் ஆகிடுச்சு அப்பு" என்று அவன் கூறிய மறுநொடி பட்டென எழுந்து அமர்ந்தவள், "என்னடா டைமு" எனக் கேட்டாள்.

"எட்டு மணி ஆகுது" என்றவன் சொன்னதும், "அய்யோ நான் ஒன்பதரை மணிக்கு அங்கே இருக்கனுமே" என்று பரபரப்புடன் கட்டிலில் இருந்து இறங்கியவளாய், "என்னைச் சீக்கிரம் எழுப்பிருக்க வேண்டியது தானே எருமை" என்று கூறியவாறு குளியலறைக்குள் புகுந்தாள்.

"ஆமா நான் எழுப்பினதும் நீ எழுந்திரிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்ப பாரு" என்று கதவினருகே நின்று சத்தமாய்க் கத்தியவன்,

'ஆபிஸ் மீட்டிங்க்னு சொன்னா மயக்கத்துல இருந்தாலும் சரி, தூக்கத்துல இருந்தாலும் சரி பட்டுனு எழுந்திரிச்சிடுறா! அப்படி என்ன தான் அந்த ஆபிஸ் மீட்டிங்க்ல இருக்கோ' என்று தனக்குத் தானே புலம்பியவனாய் தனது படுக்கையறைக்குள் சென்றான்.

குளித்து முடித்துக் கிளம்பியவன் காலை உணவை உண்டுவிட்டு அவளுக்கான காலை உணவையும் எடுத்து வைத்து விட்டு பால்கனியில் நின்றவனாய் வெளியே ரம்மியமான காலைப் பொழுதை ரசித்துப் பார்த்திருந்த போது, எதிரே இருந்த வீட்டின் கதவு திறந்தது.

அங்கு வசிப்பவர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே செல்வதைப் பார்த்தவன், 'இந்தாளு ஏன் எப்பவும் பொண்ணுங்க மூஞ்சுல துப்பட்டாவைச் சுத்திக்கிற மாதிரி மூஞ்சை முழுசா மூடிட்டு போறாரு. அவர் இந்த வீட்டுக்கு வந்து ஒரு மாசம்கிட்ட ஆகுது ஆனா இன்னும் மூஞ்சை பார்க்கவே இல்ல' என்று தனக்குள்ளாகப் பேசிக் கொண்டான்.

ஃபார்மல் பேண்ட், டக் இன் செய்த சட்டை அணிந்தவளாய் கதிர்மாறன் முன்பு வந்து நின்ற மரகதம், "பால்கனில நின்னு யாரைடா சைட் அடிச்சிட்டு இருக்க?" எனக் கேட்டாள்.

"சைட்டா.. நோ.. நான் என் மரகதத்துக்குத் துரோகம் பண்ண மாட்டேன்ப்பா" என்று தீவிரப் பாவனையில் அவன் கூறியதைக் கேட்டு, "ஆனாலும் இது உலக மகா நடிப்புடா சாமி!" என்று கேலிச் செய்தாள்.

அவளின் கேலியில் சிரித்தவனாய் அவளது உடையைப் பார்த்து, "ஃபார்மல் பேண்ட் ஷர்ட்ல கியூட் குட்டி.." என்று அவன் முடிப்பதற்குள்,

"குட்டிப் பொண்ணு மாதிரி இருக்கேனா?" என்று அவளே ஆர்வமாய் கேட்க,

"ச்சே ச்சே இல்ல இல்ல அதுக்கும் மேல.. குட்டி பையன் மாதிரி இருக்கனு சொல்ல வந்தேன்" என்றவன் கூறிய நொடி அவன் முதுகில் படபடவென அடித்திருந்தாள்.

இம்முறை காபி நிறத்தில் ஹேர் கலரிங் செய்திருந்தாள். முன் நெற்றி முடியை கோணலாய் வாரி விட்டிருந்தாள். நெற்றியில் பொட்டு இல்லை. காதில் மெல்லியதாய் பொட்டு அளவில் வைரக் கம்மல் போட்டிருந்தாள். சட்டென்று பார்ப்பவர்கள் அவளை ஆண் என்றே நினைத்துக் கொள்வர். அந்தளவிற்கு ஒல்லியாக இருந்தாள்.

அவனை அடித்து ஓய்ந்தவள், "உன்னுடைய ஒத்த ரோசாவ பார்த்தா மட்டும் தான் உனக்குப் பொண்ணா தெரியுமோ" என்று உதட்டைச் சுழித்தவாறு கேட்டாள்.

அவள் அடித்த இடத்தைத் தேய்த்தவனாய், "ஒத்த ரோசாவா.. யாரது?" புருவம் நெரிய புரியாத பாவனையில் கேட்டான்.

"அதான்டா உன்னோட தாவணி போட்ட தீபாவளி" என்றாள்.

"அடிப்பாவி அந்தப் பொண்ணுக்கு மரகதம்னு எவ்ளோ அழகான பேரு வச்சிருக்காங்க" என்றவன் கூறவும்,

"ஓஹோ மரகதம் அழகான பேருனு இப்ப தான் தெரிஞ்சிதா ப்ரோ உனக்கு. இனி உன் பொண்டாட்டிய ஒத்த ரோசானு தான் கூப்பிடுவேன்" என்று அவனை வெறுப்பேற்றியவள்,

"அய்யய்யோ டைம் ஆகிடுச்சு! வா ஆபிஸூக்குப் போவோம்" என்றவாறு மடிக்கணிணிப் பையை எடுத்துக் கொண்டு ஷூவை அவள் மாட்டப் போக,

"சாப்பாடு எடுத்து வச்சிருந்தேனே, சாப்பிட்டியா நீ" எனக் கேட்டவாறே உள்ளே வரவேற்பறைக்குச் சென்றவன், அவளுக்கு வைத்த உணவு அப்படியே இருப்பதைப் பார்த்து அதை எடுத்து அவளின் கையில் திணித்தான்.

"காலைல எழுந்து மாங்கு மாங்குனு நான் சமைச்சு வச்சா, வேஸ்ட் பண்ற நீ! எல்லாத்தையும் சாப்பிட்டு முடிச்சா தான் உன்னை மீட்டிங்கு முன்னாடி ஆபிஸூக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பேன்" என்றவனாய் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தான்.

"அடப்பாவி அப்ப நான் சாப்பிடலைனு உனக்குக் கவலை இல்ல. நீ சமைச்சது வேஸ்ட் ஆகுதுனு தான் உனக்குக் கவலை இல்ல" என்று முறைத்தாள் மரகதம்.

"பின்னே காலைல எழுந்திரிச்சு சமைச்சு பாரு. அப்ப என் கஷ்டம் உனக்குப் புரியும்" என்றவன் சொன்னதை எல்லாம் காதில் வாங்காமல், அவன் வைத்திருந்த பிரட் ஆம்லெட்டையும் பாலையும் அவசர அவசரமாய்ச் சாப்பிட்டு முடித்தவள், "எழுந்திரிடா போகலாம்" என்று அவனின் கைப்பற்றி இழுத்தாள்.

"இதை எல்லாம் யாரு கிச்சன்ல கொண்டு போய்ப் போடுவா? இதுக்காக நம்ம அப்பா வானத்துல இருந்து குதிப்பாரா" எனக் கடுப்புடன் கேட்டவாறு அவள் உண்டு வைத்த பாத்திரங்களை அவன் சமையலறைக்குள் எடுத்துச் செல்ல, "அதான் நீ இருக்கியே" என்று சிரித்தாள் அவள்.

"எப்படித் தான் நீ சிங்கப்பூர்ல தனியா இருந்து வேலைப் பார்த்தியோ? அங்க யாரு உனக்கு இப்படி எடுபிடி வேலைலாம் செஞ்சிட்டு இருந்தா?" எனக் கேட்டதும்,

'ஆமால யாரு செஞ்சிருப்பா' அவள் தீவிர சிந்தனையுடன் அப்படியே நின்றிருப்பதைப் பார்த்து, "ரொம்ப யோசிக்காத! வா போவோம். டைம் ஆகுது" அவளின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு சென்றான்.

தனது மகிழுந்தை இயக்கியவனாய் சைபர்ஜெயா பகுதியில் இருந்து கோலாலம்பூர் நகரத்துக்குள் சென்ற போது, எக்ஸ்பிரஸ் ஹைவே ஏற்கனவே வாகனங்களால் நிரம்பியிருந்தது.

ஹே எத்தனை சந்தோஷம் கொட்டுது
தினமும் கொட்டுது உன் மேல

மகிழுந்தினுள் அனிருத்தின் இசை அலறிக் கொண்டிருக்க, அதெல்லாம் காதினுள் விழாதவாறு வெளியே சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்திருந்தாள் மரகதம்.

சாலையின் இருபுறமும் பெட்ரோனஸ் டிவின் டவர்ஸ் தொலைவில் மின்னியது. ஃபேமிலி மார்ட், 7-லெவன் போன்ற கடைகள் சாலையோரத்தில் திறந்திருக்க, காலை உணவுக்காக மக்கள் வரிசையாக நின்றிருந்தனர். சிலர் ஈருருளியில் தலைகவசம் அணிந்தவர்களாய் வேகமாய்ப் பாய்ந்து செல்ல, சிலர் கிராப் டாக்ஸியில் வேலைக்குச் சென்றிருந்தனர்.

அப்போது தங்களது மகிழுந்தைக் கடந்து சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டியிருந்த முகமூடி ஆசாமியைப் பார்த்த மரகதம், "மாறா இந்தாளு நம்ம எதிர்வீட்டுல இருக்கிறவரு தானே. வீட்டை விட்டு வெளில வந்தாலே மூஞ்சை மூடிட்டு தான்டா வர்றாரு இவரு" என்றாள்.

"ஆமாடி நானும் நினைச்சேன். உடம்பும் ஃபுல் கவர்டு. அவருக்கும் எதுவும் நோய் இருக்குமோ இல்லனா இந்த ஊரு கிளைமேட் செட் ஆகலையோ என்னவோ" என்றான்.

"ஹ்ம்ம் இருக்கலாம்" என்றவளின் எண்ணங்கள் எங்கெங்கோ சுற்ற, "மாமாவை மரகதம் வீட்டுல கல்யாணத்துக்குப் பேசச் சொன்னியே என்னாச்சு ப்ரோ?" எனக் கேட்டாள்.

"ஹ்ம்ம் நேத்து நைட் வித்யா மாமா, மணி மாமா ரெண்டு பேரும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தாங்க" என்றான்.

"என்னவாம்?" அவள் கேட்க,

"அந்தக் குடும்பமே இந்தப் பொண்ணோட சம்பாத்தியத்துல தான் வாழுதாம் அப்பு. இரண்டு அக்காவும் ஒரு தம்பியும் கூடப் பிறந்தவங்களாம் இந்தப் பொண்ணுக்கு. விவசாயத்துல வந்த கொஞ்ச நஞ்ச காசை வச்சி கடன் வாங்கி இந்தப் பொண்ணையும் அவ தம்பியையும் டிகிரி வரை படிக்க வச்சிருக்காரு அவங்க அப்பா. இவங்க தலை எடுத்த பிறகு சுத்தமா அவர்க்கிட்ட காசு புழக்கம் இல்லையாம். அந்த வீட்டைத் தவிரச் சொத்து நிலம் புலம்னு ஒன்னும் அவங்களுக்குக் கிடையாதாம். இந்தப் பொண்ணும் அந்தத் தம்பியும் சேர்ந்து சம்பாதிச்சுக் கடன்லாம் வாங்கித் தான் இரண்டு அக்காக்கும் நகை எல்லாம் போட்டுக் கட்டிக் கொடுத்திருக்காங்க. பொண்ணும் பையனும் சம்பாதிக்கிற காசு எல்லாத்தையும் இந்தக் கடன் எல்லாம் அடைக்கவும் சொத்துச் சேர்க்கவும் செஞ்சிருக்காங்க அவங்க அப்பா அம்மா. அதனால இந்தப் பொண்ணைக் கட்டிக் கொடுக்கிற எண்ணமே அந்தக் குடும்பத்துல யாருக்குமே இல்லாம போச்சாம். சம்பாதிச்சு போடுற எந்திரமா அந்தப் பொண்ணைத் தன்னோட வீட்டோட வச்சிருக்கலாம்னு பிளான்ல இருந்திருக்காங்க" என்றிவன் சொன்னதும்,

"அடப்பாவிங்களா, இப்படியும் அப்பா அம்மா இருப்பாங்களா மாறா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் மரகதம்.

"ஹ்ம்ம் எனக்கும் அதே ஆச்சரியம் தான் அப்பு" என்றான்.

"அப்புறம் எப்படி அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் நடந்துச்சாம்?" எனக் கேட்டாள் மரகதம்.

"மணி மாமா தான், மரகதத்தோட அம்மா அப்பாக்கிட்ட சண்டை போட்டு மரகதத்துக்காக மாப்பிள்ளைப் பார்த்துக் கல்யாணம் செஞ்சி வச்சிருக்காரு. அந்த நேரத்துல தான் நமக்கு மரகதத்தோட போட்டோ கிடைச்சிருக்கு" என்றான்.

"ஓ அப்புறம் ஏன் டிவோர்ஸ் செஞ்சிட்டாங்க" எனக் கேட்டாள்.

"அதை மரகதத்தைக் கல்யாணம் செஞ்ச பிறகு நீயே அவக்கிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கோனு சொல்லிட்டாரு மணி மாமா" என்றான்.

"ஓ எதுவும் சென்சிடிவ் மேட்டரா இருக்குமோ" என்றவள் கேட்க,

"இருக்கலாம்" என்றவன்,

"வித்யா மாமா போய்ப் பேசி பார்த்தாராம்‌. ரெண்டாம் தாரமா கட்டிக் கொடுக்கிறதே பாவம்ங்கிற ரேஞ்ச்ல அடுத்தக் குடும்பத்துல பேசுறாங்கனு சொன்னாரு. வித்யா மாமாவும் எப்படியாவது நமக்குக் கல்யாணம் செஞ்சி வச்சா அவருக்குச் சொத்து கிடைச்சிடும்னு அல்லாடுறாரு. ஒன்னும் நடக்க மாட்டேங்குது" என்று விரக்தியுடன் புன்னகைத்தான் கதிர் மாறன்.

தமையனின் கவலையைப் பொறுக்க மாட்டாமல், "நீ ஒன்னும் கவலைப்படாத ப்ரோ! மரகதத்தை மலேசியாவுக்குக் கடத்திட்டு வந்துடலாம். இந்த அப்பு இருக்கப் பயமேன்" என்று கண் சிமிட்டினாள்.

"ஆமா அப்படியே நீ கூப்பிட்ட உடனே அந்தப் பொண்ணு வந்திடும் பாரு" என்றான் கதிர்மாறன்.

"உன்னோட மணி மாமா எதுக்கு இருக்காரு. அந்தப் பொண்ணுக்கு மொத கல்யாணத்தையே அவர் தானே நடத்தி வச்சாரு. இதையும் நடத்தி வைக்கச் சொல்லுவோம்" என்றவள் சொன்னதும்,

"மணி மாமா ஒரு விஷயம் சொன்னாரு அப்பு. எனக்கு அதுல துளியும் விருப்பமில்ல. உன்கிட்ட சொல்லாம விட்டுடலாம்னு தான் நினைச்சேன். ஆனா நீயும் இதைத் தெரிஞ்சிருக்கனும்னு தோணுனதுனால சொல்றேன்" என்றான்.

"என்ன ஓவர் பில்டப் கொடுக்கிற? அப்படி என்ன விஷயம்?" எனக் கேட்டாள்.

"மணி மாமா உன்னைக் கட்டிக்க விருப்பப்படுறதா என்கிட்ட சொன்னாரு" என்றவன் சொன்னதும்,

"வாட்?" பேரதிர்ச்சியுடன் அவள் வினவிய போது இவர்களின் மகிழுந்து உயரமான கண்ணாடிக் கட்டிடத்தின் அருகே வந்து நின்றது.

உயரமான கண்ணாடிக் கட்டிடத்தின் முன்புறத்தில், அந்தக் கட்டிடத்தின் பெயரான சைபர் பார்க் என்ற லோகோ பிரகாசமாகத் தெரிய, தனது அணுகல் அட்டையைக் காட்டியவனாய் மகிழுந்தை உள்ளே ஓட்டிச் சென்று வாசலில் நிறுத்தியவன், "நான் அவர்கிட்ட இதெல்லாம் ஒத்து வராதுனு கேட்ட அன்னிக்கே சொல்லிட்டேன்டா அப்பு. அதனால நீ இதெல்லாம் மனசுல போட்டுக் குழப்பிக்காம ஒழுங்கா வேலையைப் பாரு" என்றான்.

"சரி ப்ரோ! ஹாவ் எக் குட் டே" என்று சிரித்த முகத்துடன் வாழ்த்தி விட்டு இறங்கியவள் தனது அலுவலகக் கட்டிடம் நோக்கி நடந்தாள்.

மகிழுந்தைத் தரிப்பிடத்தில் நிறுத்தியவன், அங்கேயே தான் வேலைச் செய்யும் வேறொரு நிறுவனத்தின் தளத்திற்குள் நுழைந்தான்.

அதன் பிறகு இருவரும் அவரவர் வேலையில் மூழ்கிப் போக, மதிய உணவு இடைவேளையில் இருவரும் அந்தக் கட்டிடத்தில் பொதுவாய் அமைந்த உணவுண்ணும் இடத்திற்கு வந்து ஒன்றாக அமர்ந்து உண்டு விட்டு சென்றனர்.

மூன்று மணியளவில் தன்னுடைய வேலைகளை முடித்து இளைப்பாறலாய் அமர்ந்தவளின் மூளைக்குள் கதிர்மாறன் மணிவாசகத்தைப் பற்றிக் கூறியது ஓடியது.

'நாம அவரைக் கட்டிக்கிட்டா நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும்?' என்று கண்களை மூடி சிந்தித்தவளின் கற்பனையில் புடவை அணிந்தவாறு மரகதமணீஸ்வரரின் கோவில் வாசலிலே இவளும் மணியும் பூக்கடையில் அமர்ந்து பூ கட்டுவது போன்ற காட்சி படமாய் விரிய பட்டென்று எழுந்து அமர்ந்து விட்டாள் மரகதம்.

"என்ன கண்றாவி கனவு இது?" என்று தனக்குள்ளே புலம்பியவளாய் அவள் வேலையைத் தொடர, அவளின் புலனத்தில் புதிய எண்ணிலிருந்து வாய்ஸ் மெசேஜ் வந்திருந்தது.

"யாரா இருக்கும்?" என்று எண்ணியவாறே அதை அவள் திறந்து பார்க்க,

"வணக்கம் தாயி. சொகமா இருக்கியலா? எவன்டா அவன் தெரியாத நம்பருலருந்து பேசுறதுனு நினைக்கியலா? நான் தான் மரகதத்தோட மாமன் பேசுதேன்" என்று கேட்டக் குரலில் திடுக்கிட்டு கைப்பேசியைக் கையிலிருந்து நழுவ விட்டிருந்தாள் மரகதம்.
 
Top Bottom