• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மேகம் 23

STN-116

Member
MTN 23

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அந்த ஆடம்பர விடுதி அறையின் பெல்கனியில் நின்றிருந்தாள் மேகலா.

நகரின் இரவு நேர வண்ண விளக்குகளோ, கண்களைப் பறிக்கும் அழகோ அவளது கவனத்தை ஈர்க்கவில்லை. அங்கிருந்த இதமான குளுமை கூட, மேகலாவின் உள்ளத்தில் எரிந்து கொண்டிருந்த வெம்மையைத் தணிக்கத் தவறியது. அவளது எண்ணம் முழுவதும் தரிந்து மட்டுமே வியாபித்திருந்தான்.

அன்று அவன் அவள் வீட்டிற்கு வந்துவிட்டுச் சென்றதற்குப் பின்னால், அந்த வீடே ஒரு பெரும் புயல் அடித்து ஓய்ந்தது போலக் காணப்பட்டது. ஆனால், மேகலாவின் மனதிலோ சூறாவளி ஓய்ந்தபாடில்லை. தரிந்து சென்ற அந்த நாள் முழுவதும் அவள் அறையை விட்டு வெளியே வரவேயில்லை. கண்ணீரும் கவலையுமாக இருந்தவளுக்கு, மகேஸ்வரி உணவைக் கொண்டு வந்து அதட்டி உருட்டி ஊட்டவும், வேண்டா வெறுப்பாக இரண்டு கவளங்கள் மட்டும் உண்டாள்.

அன்றிரவு உணவின் போது, அரவிந்தன் அவளை அழைத்தார். வாடிய பயிரைப் போல வதங்கிய முகத்துடன் வந்து அமர்ந்தவளைச் சுற்றிலும், ஒரு கனத்த அமைதி நிலவியது. அனைவரின் முகத்திலும் ஏமாற்றமும் இருளும் அப்பியிருக்க, அரவிந்தன் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்.

"எப்ப திரும்பவும் வேலைக்குப் போகோணும்...?" என்று அவர் கேட்க,

மேகலா மெல்லத் தலை நிமிர்ந்து தன் தந்தையைப் பார்த்தாள்.

"அதெல்லாம் இனி அவ போக தேவேல்ல..." என்று முரளி இடைமறிக்க,

"தம்பி..." என்று அதிகாரக் குரலில் அவனை அடக்கினார் அரவிந்தன்.

பின் மேகலாவின் பக்கம் திரும்பி,

"ம்ம்... சொல்லுங்கோ பிள்ளை..."
என்றார்.

"இன்னும் ஐந்து நாட்களில் போக வேணுமப்பா..."
என்று தொண்டையைச் சரிசெய்தபடி மெல்லிய குரலில் பதிலளித்தாள்.

அரவிந்தன் ஒரு கணம் மௌனமாக இருந்தார். பின்,

"ம்ம்... என்ர மகள் ஒரு தரம் தான் சறுக்குவாள் எண்டு நம்புறன்... அப்பாவின்ர நம்பிக்கையை உடைச்சுப் போட மாட்டீங்க எண்டு நினைக்கிறன்... மனம் தளும்புற போதெல்லாம் அப்பாவின்ர காலும் அண்ணாவின்ர முகமும் நினைவுக்கு வரும் எண்டு நம்புறன்... "
என்று கூறிவிட்டு, அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக உண்ணத் தொடங்கினார்.

அவரது அந்த வார்த்தைகள், மேகலாவின் நெஞ்சில் யாரோ ஆணியை இறக்கியது போன்ற வலியைத் தந்தன. அவர் கோபமாகச் சண்டையிடவில்லை, ஆக்ரோஷமாகக் கத்தவில்லை. ஆனால், சொல்ல வேண்டியதை ரத்தமும் சதையுமாக அவளது ஆத்மாவில் அழுத்தமாகப் பதித்துவிட்டார்.

அதன்பிறகு அங்கே நிசப்தமே நிலவியது. ஐந்து நாட்களுக்குப் பிறகு மேகலா கனத்த இதயத்துடன் முரளியுடன் கொழும்பு நோக்கிப் புறப்பட்டாள்.

செல்லும் வழியில் அவளுக்குப் புதிய அலைபேசியும், சிம் கார்டும் வாங்கிக் கொடுத்தான் முரளி.

மேகலாவைத் தேவையற்ற சிந்தனைகளுக்குள் ஆழ்த்தாமல் இருக்க, அவளது அடுத்தடுத்த விமானப் பணி அட்டவணைகளும் வரிசைகட்டி நின்றன. நடமாடும் இயந்திரம் போலவே அவளது நாட்கள் கழிந்தன.

ஆஸ்திரேலியாவிற்குப் புறப்படும் முன், சுபாவின் கைபேசி வழியாகத் தரிந்துவைத் தொடர்புகொண்டாள். அவனது எந்த முகமன்களுக்கும், நலம்விசாரிப்புகளுக்கும் பதிலளிக்காமல், தன் விமானப் பயணம் முடிந்தவுடன் அவனைச் சந்திக்க வேண்டும் என்று மட்டும் மிகக் சுருக்கமாகக் கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

நண்பர்கள் எவ்வளவோ கேட்டும் அவள் எதையும் சொல்லவில்லை. அவளது புதிய அலைபேசி எண்ணைச் சுபாவைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்கவும் இல்லை.

இதோ, நாளை காலை அவள் இலங்கை திரும்புகிறாள். அவனுடன் பேச வேண்டும்... அதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். அவனோடு பேசத் தொடங்கினால், எங்கே மீண்டும் அவனிடமே தஞ்சம் புகுந்துவிடுவோமோ என்ற பயத்தில்தான், அவனது எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் மனதைக் கல்லாக்கிக் கொண்டு விஷயத்தை மட்டும் கூறிவிட்டு வைத்தாள்.

ஆனால், நாளை தன் தந்தைக்காகவும், தன் குடும்பத்தின் கௌரவத்திற்காகவும் அவனிடம் பேசியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அவள் இருந்தாள்.

*********************************
கொழும்பின் அந்த மாலைப் பொழுது, ஒரு தீராத பெருவலியின் சாட்சியாகத் தன்னை மாற்றிக்கொண்டிருந்தது. வானம் ஆக்ரோஷமான கருமேகங்களால் போர்த்தப்பட்டு, தன் எரிச்சலை மழையாகப் பூமியின் மீது கொட்டிக்கொண்டிருந்தது. மழைத்துளிகள் வானைத் துளைத்துக் கொண்டு கீழே இறங்கின.

விமான நிலையத்தின் அந்த வாகன நிறுத்துமிடம்... கார்களின் இரைச்சல், முகப்பு விளக்குகளின் ஒளிக்கீற்றுகள், ஹோர்ன் சத்தங்கள் மற்றும் உலோகக் கூரைகளின் மீது மழை மோதும் சத்தம் என அந்தப் பரப்பே அமளியாக இருந்தது. ஆனால், அந்த ஒரு காரின் உள்ளே மட்டும் மரண அமைதி குடிகொண்டிருந்தது.

அன்று போலவே இன்றும், தரிந்து அவளுக்காகக் காத்திருந்து தன் காருக்குள் அழைத்து வந்திருந்தான். ஆனால் இன்று, அந்த மௌனத்தில் ஒருவித நடுக்கம் இருந்தது. இருவரும் எதையும் பேசிக் கொள்ளவில்லை. ஒருவரையொருவர் தவிப்புடன் பார்த்துக் கொண்டனர். அந்தச் சிறிய இடைவெளிக்குள் இரு இதயங்களும் ரத்தக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தன.

தரிந்துவால் தன் கண்களை ஓரிடத்தில் நிலைநிறுத்த முடியவில்லை. அவனது சுவாசம் சீரற்று வேகமெடுத்தது. உள்ளுக்குள் ஏதோ ஒரு நரம்பு அறுந்து போவதைப் போன்ற வலி.

மறுபுறம், வெளியே பெய்யும் மழையைப் போலவே மேகலா உள்ளுக்குள் உடைந்து சிதறிக்கொண்டிருந்தாள். அவள் தலையைத் தாழ்த்தி அமர்ந்திருக்க, அவளது கண்ணீர் சாலைகளில் விழும் மழைத்துளிகளைப் போலத் தாரை தாரையாக வழிந்தோடி மறைந்தது.

நீண்ட நேர மௌனப் போராட்டத்திற்குப் பிறகு, அவள் பேச முயன்றாள். ஆனால் வார்த்தைகள் தொண்டையிலேயே சிக்கிக் கொண்டன. உலர்ந்திருந்த அவளது வாயிலிருந்து சொற்கள் வெளிவர மறுத்தன.

தரிந்து மெதுவாக, தழுதழுத்த குரலில் அவளை அழைத்தான்...

"சுது வலாகுழு..."

அந்த அழைப்பில் இருந்த பாசம் அவளைத் தாக்கியது. மேகலா தன் கைகளால் வாயை இறுகப் பொத்திக்கொண்டு விம்மி அழுதாள். சில நிமிடங்கள் அந்த மழையின் சத்தம் மட்டுமே அங்கே எஞ்சியிருந்தது.

பின்னர், எங்கிருந்தோ வந்த துணிச்சலைத் திரட்டி அவள் நிமிர்ந்து பார்த்தாள். அவளது கண்களில் பயம், பச்சாத்தாபம் மற்றும் தியாகம் ஆகிய மூன்றும் ஒரு சேரத் தெரிந்தன.

அவள் முழுக்க உடைந்து போய்க் கூறினாள்,
“நாங்க பிரிஞ்சிடலாம் தரிந்து...”

அந்த வார்த்தைகள் தரிந்துவின் காதுகளில் இடி விழுந்ததைப் போல அதிர்வைத் தந்தன. அவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். யாரோ தன் கழுத்தை நெரிப்பதைப் போன்ற ஒரு உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.

"ஏன்...?"

என்று மட்டும் அவனால் கேட்க முடிந்தது.

மேகலா தன் உதடுகளைக் கடித்துக்கொண்டு, தோள்கள் குலுங்கத் விம்மினாள்.
"அப்பா... அவரைத் தாண்டி என்னால எதுவுமே செய்யேலாது தரிந்து... என்ர குடும்பத்துக்காக என்ர காதலை நான் அடமானம் வைக்கிறன்..."

அந்தச் சொற்கள் தரிந்துவின் இதயத்தில் ஊசியால் குத்துவது போல இருந்தன.

"அப்படி எண்டா... நீ எனக்கு இல்லையா...?"
என்று அவன் கேட்டபோது, அவனது குரல் தேய்ந்து போயிருந்தது.

மேகலா தலையசைத்தாள். அவளது குரலில் ஒரு கசப்பான உண்மை ஒளிந்திருந்தது.
"ஐ ஸ்டில் லவ் யூ தரிந்து... இப்போதும் உங்கள நேசிக்கிறன்... ஆனால் நாங்க சேரேலாது... உங்களின்ர மனசை நான் சுக்குநூறாக உடைக்கிறன் எண்டு எனக்குத் தெரியும்..."

"அப்படியெண்டா சேர்ந்து போராடுவோமே மேகலா...? நான் உனக்காகக் காத்திருக்கிறன்... உன்ர அப்பாவின்ர மனசு மாறுற வரைக்கும் நான் இருப்பன்..." என்று தரிந்து அவநம்பிக்கையுடன் ஒரு கடைசி முயற்சியைச் செய்தான்.

"இல்லை தரிந்து... அது எண்டைக்குமே மாறாது.... இதுக்கெல்லாம் பயந்துதான் உங்கள விட்டு ஒதுங்கி ஒதுங்கிப் போனனான்.... அண்டைக்கு நீங்க என்னட்ட காதலைச் சொன்ன போதே நான் வேணாம் எண்டு சொல்லியிருக்கோணும்..."
என்று கதறி அழுதாள் மேகலா.

மழை இன்னும் உக்கிரமாகத் தொடங்கியது. காரின் ஜன்னல்கள் அந்த வேகத்தில் அதிரத் தொடங்கின. அவள் தன் கண்ணீரைத் துடைக்கவில்லை.

தனது விரலில் இருந்த, அவர்களது காதலின் முதல் அடையாளமான அந்த மோதிரத்தை மெதுவாகக் கழற்றினாள். தன் உயிரையே உடலிலிருந்து உருவுவதைப் போன்ற ஒரு வலியுடன் அதை அங்கே வைத்தாள். அவள் 'பிரிவு' என்ற சொல்லைச் சொன்னபோதே அவன் உள்ளுக்குள் மரித்துப் போயிருந்தான். இப்போது அவள் மோதிரத்தை கழற்றியது, அவனது இதயத்தை வாளால் அறுப்பதைப் போல இருந்தது. அந்த அமைதி இருவரின் ஆன்மாவையும் கிழித்துப் போட்டது.

அவள் மெதுவாகக் காரின் கதவைத் திறந்தாள். கடும் காற்றும், மழையும், இடிச் சத்தமும் காருக்குள் புகுந்து கொண்டன. அவள் மழையில் நனைந்தபடி வெளியே இறங்கிச் செல்லத் தொடங்கினாள். தரிந்துவால் எதுவும் பேச முடியவில்லை. அவன் செயலற்று அமர்ந்திருந்தான். மேகலா ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். அந்தக் கண்களில் எல்லை இல்லாத பாசமும், அதைத் தியாகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் விளைந்த தீராத வேதனையும் நிறைந்திருந்தன. அதுவே அவர்களது கடைசிப் பார்வை.

மழையில் நனைந்தபடி மேகலா மெல்ல மறைந்தாள். மின்னல் வெட்டிய அந்த ஒரு கணத்தில் மட்டும் அவளது வடிவம் கடைசியாகத் தெரிந்தது.

அதன் பிறகு... வெறும் இருட்டு மட்டுமே எஞ்சியது. தரிந்து இப்போது அந்தத் தனிமையில் அனாதையாக விடப்பட்டான். அவள் விட்டுச் சென்ற அந்த மோதிரத்தையே அவன் வெறித்துப் பார்த்தான். அவனது கண்ணீர் பெருகி அந்தக் காட்சியையே மறைக்கும் வரை அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

இறுதியில், ஸ்டீயரிங் வீலில் முகம் புதைத்து, தன் வெண்மேகத்தை இழந்த துக்கத்தில் கதறி அழுதான் அந்த வீரன்.

அதுதான் மேகலா தரிந்துவைப் பார்த்த கடைசித் தருணம். அதன் பிறகு, சிங்கப்பூர் நோக்கிய அந்த வான் பயணத்தில்தான் அவனை மீண்டும் சந்தித்தாள். ஆனால், அதற்கு இடைப்பட்ட காலத்தில் எத்தனை எத்தனையோ மாற்றங்கள்...

உலகத்தையே அசைத்துப் பார்த்த கொரோனா பெருந்தொற்று காலம், மேகலாவின் வாழ்க்கையையும் முடக்கிப்போட்டிருந்தது. விமானங்கள் சிறகுகளை முடக்கிக்கொள்ள, அவளும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள்.

காலத்தின் சுழற்சியில் நண்பர்களும் வெவ்வேறு திசைகளில் தத்தம் சிறகுகளை விரித்துப் பறக்கத் தொடங்கினர். மேகலாவின் நிழலாக இருந்த சுபா, இப்போது சரவணனின் இல்லத்தரசியாகி, ஒரு அழகான ஆண் குழந்தைக்குத் தாயாகி நீர்கொழும்பில் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டாள்.

மேகலா மட்டும் அவனைப் பிரிந்து வந்த அதே புள்ளியில் தேங்கி நின்றாள். அந்த நீண்ட நெடிய ஐந்து வருடங்கள் அவளது வயதை மாற்றியிருக்கலாம், ஆனால் நெஞ்சுக்குள் குடியிருக்கும் அந்த விமானப்படை வீரனின் நினைவுகளைச் சற்றும் மாற்றவில்லை. அது அவளது இதயத்தின் ஆழத்தில் புதைந்து கிடந்த ஒரு மௌனமான எரிமலை.

ஐந்து வருடங்களாக அடக்கி வைக்கப்பட்டிருந்த அந்த உணர்ச்சிக் குழம்பு, மீண்டும் தகித்துச் சுடத் தொடங்கியது.

அன்றைய நினைவுகளில் அமிழ்ந்திருந்த மேகலாவிற்கு, ஜன்னல் வழியே ஊடுருவி வந்த குளிர் காற்று ஊசியாய் குத்தவும் மெல்ல நனவுலகிற்குத் திரும்பினாள்.

வெளியே பலமான காற்று வீசத் தொடங்கியிருந்தது. மரங்கள் ஆக்ரோஷமாகத் தலைவிரித்தாடின. அவளது வீட்டிற்குள்ளே ஒரு மனப் புயல் வீசிக்கொண்டிருந்த அதே வேளையில், வெளியே இயற்கையும் ஒரு பெரும் சீற்றத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தது.

அதே சமயம், தரிந்து தன் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான். ஏழு வருடங்களுக்கு முன்னால் அவன் மேகலாவிற்கு அணிவித்த அதே மோதிரத்தை ஏந்தியபடி, அன்று இருவரும் அமர்ந்து காதல் புரிந்த அந்த ஊஞ்சலில் இன்று தனிமையில் அமர்ந்து பழைய ரணங்களை மீட்டுக் கொண்டிருந்தான்.

அவன் கடந்த ஐந்து வருடங்களாகத் தன் இதயத்திற்கு நெருக்கமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் அதே பாடல், பின்னணியில் எஸ்.பி.பியின் கணீர் குரலில் ஒலித்துக்கொண்டிருந்தது.

பெத்தவங்க ஒத்து கொண்டா நீயும் நானும் காதலிச்சோம்...
மத்தவங்க ஒப்புதல் தந்தா நீயும் நானும் சந்திச்சோம்...

ஜாதிமத மொழியை எல்லாம் கடந்தது தான் காதலடி...
சொந்தபந்த எதிர்ப்பை எல்லாம் மீறி நிற்பதே காதலடி...

பெண்கள் சமயத்தில் பெத்தவங்க ஆட்டி வைக்கும் பொம்மையடி...
காதலன் என்னை வெறுப்பதாய் நீ சொல்வதில் இல்லை உண்மையடி...

உதடு வேணா மாறி பேசும்...
உள்ளம் மட்டும் மாறாது...

காதல் உள்ளம் மட்டும் மாறாது...

அந்தப் பாடலின் வரிகள் அவன் இதயத்தின் துடிப்பைப் போலவே ஒலித்தன. அப்போது, அவனது கைபேசி திடீரென ஒலித்து அந்த நிசப்தத்தைக் கலைத்தது.

அது ஒரு அவசர அழைப்பு.

சற்றும் தாமதிக்காமல் எடுத்துப் பார்த்தவன், உடனே நிமிர்ந்து அமர்ந்து,

“எஸ்... விங் கொமாண்டர் தரிந்து சேனநாயக்க ஸ்பீக்கிங்...” என்றான் அதிகாரக் குரலில்.

மறுமுனையில்,
“சேர்... வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியிருக்கிறது. அது மிகத் தீவிரமான புயலாக மாறி, இலங்கையின் வட பகுதியைத் தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. வான்படை மீட்புக் குழு உடனடியாகத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ஹெட் குவார்ட்டர்ஸ்சிலிருந்து உத்தரவு வந்திருக்கிறது சேர்...”

தரிந்துவின் முகம் சட்டென்று மாறியது. அவனது கண்கள் கூர்மையடைந்தன.

“ஓகே... ஐ அம் கமிங்...”

என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

வெளியே வானம் இருண்டு கருக்கத் தொடங்கியிருந்தது. ஒரு பெரும் புயல் வரப்போவதற்கான அத்தனை அறிகுறிகளும் கண்டியிலேயே தென்பட்டன.

ஆனால், சீறி வரப்போகும் அந்தப் புயல், சிதைந்து போன தன் வாழ்க்கையையும் மேகலாவின் வாழ்க்கையையும் மீண்டும் ஒரு புள்ளியில் இணைக்கப் போகிறது என்பது அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

புயல் கரையை கடந்த நான்காவது நாள்...
காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்வையிட்டுவிட்டு, தரிந்துவும் அனுஷ்காவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து வெளியே வந்த சமயம்,
அங்கே... குற்றுயிரும் குலையுயிருமாக, மயங்கிய நிலையில் மேகலாவை ஒரு ஸ்ட்ரெச்சரில் கிடத்தி, கதறியபடி பதற்றத்தோடு ஓடி வந்து கொண்டிருந்தனர் அவளது குடும்பத்தினர்.

சில காதல்கள் தோல்வியடைவதில்லை.
அவை முடிக்கப்படாமல் விடப்படுகின்றன.





 
Top Bottom