• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மேகம் 29 - இறுதி அத்தியாயம்

STN-116

Member
MTN 29 (இறுதி அத்தியாயம்)

அன்று காலைதான், முரளிக்கும் அனுஷ்காவிற்கும் திருமணம் மிக விமரிசையாக நடந்தேறியது. தரிந்து மற்றும் மேகலாவுடையதைப் போலவே, அனைத்துச் சம்பிரதாயங்களுடனும் தனது தேவசேனாவை கரம் பிடித்திருந்தான் முரளி.

கழுத்தில் பொன்தாலி மின்ன, வகிட்டில் குங்குமம் துலங்க, மென்பட்டுச் சேலையின் மடிப்புகள் அவளது அழகிற்கு மேலும் மெருகூட்ட, கால்களில் அணிந்திருந்த கொலுசுகள் சிணுங்க, மெட்டிகள் அவள் முரளியின் இல்லாள் என்பதை பறைசாற்ற, ஓர் அசல் தமிழ்ப் பெண்ணாகவே உருமாறியிருந்தாள் அனுஷ்கா.

அவளது அந்தத் தேவலோகத் தோற்றத்தை, மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் முரளி. இத்தனைப் பேரழகிற்கும் உரிமையாளன் தான் மட்டுமே என்கிற எண்ணம், அவனது நரம்புகளில் ஒரு புதுவிதமான மின்சாரத்தைப் பாய்ச்சியது. அவள் அங்கும் இங்கும் அசைந்து நடக்கும் போதெல்லாம், அவனது விழிகள் அவளைத் தாபத்துடன் பின்தொடர்ந்தன. அந்தப் பார்வையின் வீச்சையும், அதில் தெரிந்த தாபத்தையும் தாங்க முடியாமல், அவள் வெட்கத்தால் சிவந்து போனாள்.

அனுஷ்கா அறைக்குள் தனியாக இருந்த அந்தத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவன் போல, சட்டென்று உள்ளே நுழைந்தான் முரளி. அவளது மெல்லிய இடையைப் பற்றி, அவளைச் சுவரோரம் சாய்த்து, தன் இரு கைகளாலும் சிறைப்பிடித்தான்.

அவனது இந்தத் திடீர் ஆக்கிரமிப்பில் திகைத்தவள்,
"அச்சோ... என்ன செய்யிறனீங்க...? விடுங்கோ என்ன... ஆராவது பார்த்தா என்ன நினைப்பினம்...?"
என்று படபடத்தபடி அவனது பிடியிலிருந்து நழுவ முயன்றாள்.

"ம்ம்... அங்கயும் இஞ்சயுமா நடந்து ஷோ காட்டி, மனுசன ஏத்திப்போட்டு, இப்ப ஒண்டுமே தெரியாத மாதிரி விடவா சொல்லுற...? முப்பத்தஞ்சு வருசமா பிரம்மச்சர்யம் காத்து வந்த என்னை, இப்படி ஒத்த சாரியில வந்து மடக்கிப் போட்டுட்டியேடி..."
என்று மோகம் கொப்பளிக்க அவளிடம் சரசமாடினான்.

அவனது பார்வையில் செங்கொழுந்தாய் சிவந்தவள்,
"இந்த ஒரு மாசமும் சாமியார் மாதிரி இருந்துப்போட்டு... இப்ப என்ன இப்படி வெறிச்சுப் பார்க்குறனீங்க...?"
என்று உள்ளொடுங்கியக் குரலில் ரகசியமாகக் கேட்டாள்.

"அப்ப லைசென்ஸ் இருக்கேல்ல... இப்ப தான் எல்லாம் இருக்குதே... அண்டைக்கு நீங்க எல்லாம் ஒரு மனுசனா எண்டு கேட்டனீ தானே...? ஓம்... நான் மனுசன் தான்... உன்ர மனுசன்..."
என்று குறும்பாகக் கூறியபடி, அவளது இதழ்களுக்கு மிக நெருக்கமாகக் குனிந்தான் அந்த காதல் நிபுணன்.

சிறிது நேரத்திற்குப் பின், கசங்கிய புடவையைச் சரிசெய்தபடி, சிவந்த கன்னங்களுடன் ஒருவிதப் பிரமிப்பில் வெளியே வந்தாள் அனுஷ்கா. அவளுக்குச் சற்றுப் பின்னால், தனது கலைந்த தலைமுடியைச் சரிசெய்துகொண்டே, முகத்தில் ஒரு வெற்றிக் குறும்பின் சிரிப்போடு முரளியும் வெளியேறினான்.

அவர்கள் அறையை விட்டு ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருவதைப் பார்த்த தரிந்து, மேகலாவிடம் கண்ஜாடைக் காட்டி,

"நாங்க தானே காதலிச்சு, கஷ்டப்பட்டுக் காத்திருந்து கல்யாணம் கட்டினம்... ஆனால் உன்ர அண்ணன் என்னையே ஓவர் டேக் பண்ணிடுவார் போலவே..."
என்று குறும்பாகக் கேட்டான்.

"இவர் இப்படி மாறுவார் எண்டு நான் கனவில கூட நினைக்கேல்ல தரிந்து... எப்படி திரிஞ்ச மனுசன்..."
என்று மேகலாவும் வியப்புடன் ஆமோதித்தாள்.

அருகில் இருந்த சுபா,
"அடி மேகி... இஞ்ச முறுக்கிக்கொண்டு விறைப்பா இருந்த மனுசன பார்த்தியா டி..." என்று சத்தமாகக் கூற, அனு வெட்கத்துடன் மறுபக்கம் ஓடப் பார்த்தாள். ஆனால், முரளி அவளை விடாமல் கையோடு அழைத்து வந்து சோபாவில் அமர வைத்துவிட்டு, சுபாவின் தலையில் செல்லமாக ஒரு கொட்டு வைத்தான்.

"மேகி... என்ர வாக்கு பலிச்சிட்டு டி... அண்ணாக்கு சிங்கள பெட்டை தான் மனுசியா வரோணும் எண்டு சாபம் விட்டனானெல்லா..." என்று குதூகலித்தாள்.

"அடிப்பாவி... இதெல்லாம் வேற சொன்னனீயா...?"
என்று கேட்ட முரளி,
"எப்படியடா நீ இவளைச் சமாளிக்கிறாய்...?" என்று சரவணனைப் பார்த்து கேட்டான்.

சரவணன் பதிலளிக்காமல் சுபாவை ஒருமார்க்கமாக பார்க்க,
'வெக்கங்கெட்ட மனுசன்...' என்று முறைத்தாள்.

"அது எப்படி சொல்லி வச்ச மாதிரியே அய்யேக்கும் நங்கிக்கும் (அண்ணனுக்கும் தங்கைக்கும்) எங்களப் பார்த்தவுடனே காதல் வந்தது...? அவ்வளவு வடிவா இருக்கிறமா நாங்க...?" என்று தரிந்துவையும், அனுவையும் பார்த்தவாறு கேட்டான் முரளி.

அதற்குப் பதிலாகத் தரிந்து மேகலாவை மையலாகப் பார்த்துப் புன்னகைத்தான்.

"அண்ணி வடிவு தான்... நீங்க வடிவெண்டு ஆர் சொன்னது...? வயசாகிக்கொண்டே போகுதே... ஒரு பெட்டையும் கிடைக்க மாட்டேங்குதே எண்டு பாவப்பட்டு வாழ்க்கை குடுத்தனாக்கும்..."
என்று வழக்கமான துறுதுறுப்பிற்கு மாறினாள் அனுஷ்கா.

"அடியேய்...!"
என்று முரளி அதட்ட,

"சோ ஸ்வீட் அண்ணி... உங்கள மாதிரி ஒருத்தர்தான் இந்த ஹிட்லருக்கு வேணும்..." என்ற சுபாவும், அனுஷ்காவும் கைதட்டிச் சிரித்தார்கள்.

"என்ர பாடு பரவாயில்ல போலவே..." என்று முரளியின் காதுக்குள் ரகசியமாகக் கிசுகிசுத்தான் சரவணன்.

அப்போதுதான் ஞாபகம் வந்தவளாக,
"உங்க எல்லார்கிட்டயும் ஒரு விசயம் சொல்ல மறந்துட்டன்... போன கிழம கொழும்பு ஆஸ்பத்திரியில, நிம்மி காஞ்சனாவைக் கண்டவளாம்... எக்சிடென்டில ரெண்டு காலும் செயலிழந்து போய்ட்டுதாம்... வீல்செயாரில தான் செக்கப்புக்கு வந்தவளாம்... நிம்மியை அடையாளம் கண்டுட்டு மறுபக்கம் திரும்பி போயிட்டாளாம்..."
என்று சுபா கூற, அந்த இடமே ஒரு கணம் அமைதியானது.

தரிந்து மற்றும் மேகலாவின் வாழ்க்கையில் அவள் ஏற்படுத்திய வடுக்களுக்கு இறைவனே தண்டனை கொடுத்துவிட்டான் என்ற ஒரு சிறு ஆசுவாசம் அனைவர் மனதிலும் எழுந்தது.

அந்த இறுக்கம் மெல்ல மறைய, இனிய உரையாடல்களும் கலகலப்பான சிரிப்புகளுமாய் நேரம் கரைந்தது. இரவு வெகுநேரம் சென்ற பின்னரே, மனநிறைவோடு சரவணனும் சுபாவும் புறப்பட்டுச் சென்றனர்.

அடுத்த நாள் காலையில், உணவருந்தும் மேசையில் அனைவரும் ஒரு குடும்பமாக அமர்ந்திருக்க, கழுத்தைச் சுற்றி ஒரு சால்வையைப் போர்த்தியபடி, பாவாடை சட்டையில் வந்து அமர்ந்தாள் அனுஷ்கா.

"இந்த வெயிலுக்க என்னத்துக்கு மகள் இப்படிப் போர்த்திக்கொண்டு இருக்கிறனீங்க...?"
என்று கனிவோடு கேட்டார் மகேஸ்வரி.

"அது... அது வந்து மாமி..."
என்று இழுத்தவளின் கன்னங்களில் சட்டென்று செம்மை பூச, வார்த்தைகள் வராமல் தடுமாறினாள்.

தன் சுட்டு விரலால் வாயை மறைத்தபடி, அவளது சங்கடத்தை ரசித்தவாறு ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தான் முரளி.

அவனை உக்கிரமாக முறைத்த அனுஷ்கா,
"அது... அது ஸ்டைல் மாமி..." என்று தட்டுத்தடுமாறிச் சமாளித்துவிட்டு அமர்ந்தாள்.

அருகிலிருந்த மேகலா,
"இந்த புதிய தும்புத்தடிங்கன்ர தொல்லை தாங்க ஏலேல்லப்பா..." என்று கிண்டலாக உச்சுக்கொட்டினாள்.

"நீங்க என்ன அரதப் பழசோ... கலியாணம் கட்டி ரெண்டு மாசம் தானே ஆகுது..."

என்று பதிலுக்கு கலாய்த்துவிட்டு, அதற்கு மேல் அங்கே இருந்தால் இன்னும் மாட்டிக்கொள்வோம் என்று உணர்ந்த அனுஷ்கா, பதற்றத்தில் உணவை வேகவேகமாக உண்டு முடித்துவிட்டு, ஒரே ஓட்டமாக அறைக்குள் தஞ்சம் புகுந்தாள்.

மறுநாள் தரிந்துவின் பிறந்தநாள். திருமணத்திற்குப் பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் அவனது முதல் பிறந்தநாள் என்பதனால், அந்த நள்ளிரவு தருணத்திற்காக முழுக் குடும்பமும் மிகுந்த ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருந்தது.

பன்னிரண்டு மணியளவில், மேகலா தரிந்துவை வரவேற்பறைக்கு வரவழைத்தபோது, அங்கே மின்விளக்குகள் அணைக்கப்பட்டு மெழுகுவர்த்திகளின் மெல்லிய ஒளியில் அறை ஜொலித்தது. மேசையின் மீது ஒரு விசித்திரமான அதேசமயம் அழகான கேக் வைக்கப்பட்டிருந்தது.

அருகே வந்த தரிந்து, முதலில் அது என்னவென்று புரியாமல் ஒரு கணம் குழம்பினான். ஆனால், கேக்கில் இருந்த விவரங்களைக் கவனித்த அடுத்த நொடியே அவன் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து போனான்.

அது ஒரு பிரெக்னன்ஸி கிட் வடிவிலான கேக். அதில் இரண்டு சிவப்புக் கோடுகள் தத்ரூபமாக வரையப்பட்டிருந்ததுடன், அதன் கீழே 'ஹேப்பி பேர்த் டே தாத்தே (அப்பா)..' என்று அழகாக எழுதப்பட்டிருந்தது. அந்த வாசகத்தைக் கண்டதும் அவனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது.

"சுது வலாகுழு... இது... இது உண்மையா..?" என்று தழுதழுத்த குரலில் தரிந்து கேட்க, மேகலா கண்களில் நீர் மின்னப் புன்னகையோடு மெல்லத் தலையசைத்தாள்.

அந்த நொடி தரிந்துவின் உலகமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றது போன்றிருந்தது.

"நான்... நான் அப்பாவாகப் போறனா…?"
என்று கேட்டபடி, மேகலாவை இறுக அணைத்து அவள் நெற்றியில் ஆழமாக முத்தம் பதித்தான்.

அந்த அணைப்பிலும் முத்தத்திலும் அளவில்லா மகிழ்ச்சி, நெகிழ்ச்சி மற்றும் சொல்லொண்ணா நன்றியுணர்வு என அத்தனை உணர்வுகளும் ஒன்றரக் கலந்திருந்தன.

அப்போது திடீரென்று மின்விளக்குகள் அனைத்தும் பிரகாசமாய் ஒளிர, அதுவரை மறைந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், "சேர்ப்ரைஸ்...!" என்று கத்தியபடி உற்சாகத்துடன் வெளியே வந்தனர்.

"வாழ்த்துகள் அண்ணா... அண்ணி..."
என்று மகிழ்ச்சியில் கூச்சலிட்டபடி ஓடிவந்து, தரிந்துவையும் மேகலாவையும் ஒருசேரக் கட்டிக்கொண்டாள் அனுஷ்கா.

"பெஸ்ட் பேர்த்டே கிப்ட் எவர்..."
என்று முரளி, தரிந்துவை ஆரத்தழுவி மனதார வாழ்த்தினான்.

"மிச்சம் சந்தோசம்மா..."
என்று அரவிந்தன், இருவரின் தலையில் கைவைத்து உச்சி முகர்ந்து தனது ஆசிகளை வழங்கினார்.

மகேஸ்வரி தன் மகளையும் மருமகனையும் நெகிழ்ச்சியுடன் ஆசீர்வதித்தார்.

"எங்கட வீட்டுக்கு ஒரு குட்டித் தேவதை வரப்போகுது..."
என்று அவர் சொல்லும்போதே, அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீரில் நனைந்திருந்தன.

அந்த நள்ளிரவுப் பொழுது, அனைவரின் வாழ்த்தொலிகளுக்கும் கலகலப்பான சிரிப்புச் சத்தங்களுக்கும் இடையே, வெறும் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் தாண்டி, ஒரு புதிய உயிரின் வருகைக்கான உன்னதமான கொண்டாட்டமாக மாறியது.

******************************
மூன்று வருடங்களுக்குப் பிறகு...

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம். இரவு வானத்தின் மேகமூட்டங்களுக்குப் பின்னால் பௌர்ணமி நிலவு நாணத்துடன் ஒளிந்து கொண்டிருந்தது.

இலங்கையிலிருந்து சிங்கப்பூரை நோக்கிப் பாயத் தயாராக இருந்தது அதே 'UL 308' ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்.

விமானத்தின் வணிக வகுப்பில் கம்பீரமான வான்படை சீருடையில் அமர்ந்திருந்தான் ‘எயார் வைஸ் மார்ஷல்' தரிந்து சேனநாயக்க. அவனது அருகில், அம்மாவின் நிறத்தையும் அப்பாவின் சாயலையும் அப்படியே உரித்து வைத்திருந்தாள் இரண்டரை வயது தேவதை, நிலா சேனநாயக்க. வசீகரிக்கும் கண்கள், கோலிக்குண்டு கன்னங்கள் என அவள் ஒரு குட்டி நிலவாகவே அங்கே ஜொலித்தாள்.

அவர்களுக்கு அடுத்த வரிசையில், அதே வான்படை சீருடையில், இலேசாக மேடிட்ட வயிறுடன் பேரழகியாய் அமர்ந்திருந்தாள் 'விங் கொமாண்டர்' அனுஷ்கா முரளி. அவளுக்கு அருகே, தன் இரண்டு வயது மகனுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தான் அவளது பாகுபலி. அம்மாவின் சேட்டையையும் அப்பாவின் சாயலையும் ஒருசேரக் கொண்டிருந்தான் அவர்களது செல்ல மகன் கோகுலன்.

அவர்களுக்கு முன் இருக்கைகளில் சரவணனும் அகல்யாவும் தங்கள் குழந்தைகளுடன் அமர்ந்திருந்தனர்.

அன்று போலவே இன்றும் வான்படை மாநாட்டுக்காக அதே சிங்கப்பூருக்கு அதே விமானத்தில் பறக்கிறார்கள். கூடவே இளவட்டங்களின் ஒரு மகிழ்ச்சியான குடும்பச் சுற்றுலாவாகவும்.

"அம்மா எங்கப்பா...?" என்று மழலைக் குரலில் நிலா கேட்க,

"இப்ப வருவாங்கோ செல்லம்..." என்று பதில் அளித்தபடி மகளின் உச்சந்தலையில் முத்தம் பதித்தான் தரிந்து.

விமானம் மேலெழுந்து மேகக்கூட்டங்களுக்கு இடையே நீந்தத் தொடங்கியபோது, திரைக்குப் பின்னாலிருந்து செம்மஞ்சள் நிறத்தில் நீல நிற மயில் தோகை பதித்த புடவையில் தேவதையாய் வெளிப்பட்டாள் 'கெபின் க்ரூ மெனேஜர்' மேகலா அரவிந்தன் சேனநாயக்க.

அவளுக்குப் பின்னால், அதே மயில் தோகை பதித்த கடும் நீல நிறப் புடவையில் 'சீனியர் கெபின் க்ரூ' சுபாஷினி சரவணனும், அடர் நீல நிறத்திலான கோட்சூட்டில் 'சீனியர் மெனேஜர்' சிவசங்கரனும் வந்தனர்.

"அம்மா...!!!"

என்று நிலா உற்சாகமாகக் குரல் கொடுக்க, புன்னகையுடன் அருகே வந்த மேகலா, மகளின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

பின் தரிந்துவைப் பார்த்து கண்களில் குறும்பு மின்ன,

"வட் வுட் யூ லைக் டு ஹேவ், சேர்...?" என்று வினவினாள்.

"ஐ வுட் லைக் ஹேவ் மை வைட் கிளவுட்…"
என்று விழிகளில் காதல் மின்ன மென்மையாகக் கூறிவிட்டு,

"ஒயா... மிஸ் நேத...?"
என்று அன்று கேட்ட அதே கேள்வியை இதழ்விரியாப் புன்னகையுடன் மீண்டும் கேட்டான்.

அதற்காகவே காத்திருந்தவள் போல, அவனது காதோரம் குனிந்து,

"சூன் டு பீ மம்மி ஒஃப் டூ..."
என்று கண்ணடித்துவிட்டு நகர்ந்தாள்.

அவள் சொன்னதன் பொருளை முழுமையாகக் கிரகிக்க தரிந்துவிற்கு இரண்டு நொடிகள் பிடித்தன. மீண்டும் ஒருமுறை அவள் கருவுற்றிருப்பதை எவ்வளவு விநோதமாகவும் அழகாகவும் அறிவித்துவிட்டாள்.

அன்று போல இன்றும் தன் காதலின் பரிசை அவள் வெளிப்படுத்திய விதம் அந்த வான்படை வீரனின் நெஞ்சத்தை நெகிழச் செய்தது. அங்கேயே எழுந்து தன் மனைவியை இறுகக் கட்டித்தழுவ வேண்டும் என்ற வேட்கை அவனுக்குள் எழுந்தாலும், சூழ்நிலை கருதி தன் விழிகளாலேயே அவளுக்குக் காதல் முத்தம் கொடுத்தான்.

அந்தத் தருணம்,
"வானம் தெளிவாக உள்ளது... நாம் மேகங்களுக்கு மேலால் பறந்து கொண்டிருக்கிறோம்... நற்பயணமாகட்டும்...!" என்ற விமானியின் அறிவிப்பு கம்பீரமாக ஒலித்தது.

அன்று நெஞ்சம் முழுக்க பாரத்துடன் பறந்த இரண்டு இதயங்கள், இன்று நெஞ்சம் முழுக்கப் பிரியத்துடன் அந்த நீல வானில் சிறகடித்தன.

~முற்றும்~
 

STN-116

Member
இலங்கை விமானப்பணிப்பெண் சீருடைகள்.

கெபின் க்ரூ மேனேஜர் - செம்மஞ்சள்
சீனியர் கெபின் க்ரூ - கருநீலம்
கெபின் க்ரூ - மரகதப் பச்சை

IMG_0659.jpegIMG_0657.jpegIMG_0655.jpeg
 

Thevaky

New member
வாழ்த்துக்கள்… கன்னி முயற்சி என்றே சொல்ல முடியாத எழுத்து.. மிக அருமை
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் 👏💐
 
Top Bottom