மையல் 17
அழைப்பு மணியின் ஒலியில் கதவைத் திறந்தாள் தாரிகா.
வாயிலில், "ஸாரி.." என உரைத்தபடி தேநீர் கோப்பையை நீட்டிய தோழியைக் கண்டதும், பார்த்தும் பார்க்காதது போல் மீண்டும் உள்ளே சென்றாள்.
கதவு திறந்தே இருக்க, மேகவி அப்படியே அவளை பின் தொடர்ந்தாள்.
"ஹேய் ஸ்டார். இப்படி எல்லாம் செய்யாதடி! உனக்காக அவனைக் காஃபிப் போடச் சொல்லி கொண்டு வந்தேன் தெரியுமா?"
"எதுக்கு மேடம்?"
"பெட்ல, நீதான் வின் பண்ணியாம்!"
"நான் ஒரு ஆணியும் புடுங்கல. அதுனால இடத்தை காலி பண்ணு!"
"அப்ப, நிஜமாவே காஃபி வேணாமா?"
"அதை வச்சிட்டு, நீ மட்டும் போ!"
கோப்பையை அங்கிருந்த மேஜையில் வைத்தவள், "ஸ்டார்.." என்றபடி தோழியின் அருகே செல்ல, "ஹேய்! டோண்ட் டச்!" என மேகவியை நெருங்க விடாது தள்ளி நிறுத்தினாள்.
"என்னடி? இப்பதான் காஃபிக்கு ஓகே சொன்ன?"
"ஹான்.. அது ப்ரோ எனக்காக போட்டுத் தந்தது. எப்படி வேஸ்ட் பண்ண முடியும்?"
"நான் இல்லாம, அந்த ப்ரோ மட்டும் எங்க இருந்து வந்தான்?"
"ம்ம்.. யோசிக்க வேண்டிய விஷயம் தான்!" என அவள் தாடையில் கைவைத்து சிந்திக்க, பின்னிருந்து தோழியை அணைத்துக் கொண்டாள் மேகவி.
சற்றே நிதானத்திற்கு வந்திருந்த தாரிகாவும், "இன்னைக்கு என்ன ஆச்சு உனக்கு?"
"ஸ்கூல் டேஸ்ல நடந்த ஒரு கசப்பான சம்பவம். நீங்க ரெண்டு பேரும் என்னை வச்சு பெட் கட்டுனது தெரிஞ்சதும், சட்டுனு அது ஞாபகம் வந்திடுச்சு."
"ஹேய்.. நாங்க உன்னை வச்சு பெட் கட்டல. எங்களை வச்சுதான் பேசுனோம்."
"கீர்த்தியும் சொன்னான்! ஸாரிடி.."
"சரி விடு! பரவாயில்ல."
"உனக்கு அவன்கூட நல்லா டைம் பாஸ் ஆகுது போலயே?"
"அப்படி எல்லாம் இல்ல. காலையில நீ ஆஃபிஸுக்குக் கிளம்பின கொஞ்ச நேரத்திலயே ப்ரோவும் கிளம்பிட்டாரு. மதியத்துக்கு மேலதான் வந்தாரு. லஞ்ச், ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டோம். அவங்கவங்க ஃபேமிலியைப் பத்திக் கொஞ்சம் ஷேர் பண்ணிக்கிட்டோம். உண்ட மயக்கத்துக்கு நல்லா தூங்கி எழுந்திரிச்சிட்டு, என்ன செய்யிறாருனு ஈவ்னிங் பார்க்கப் போனேன்.
அவரோட திங்க்ஸ் எல்லாம் அரேஞ்ச் பண்ணிக்கிட்டு இருந்தாரு. நானும் கொஞ்சம் ஹெல்ப் செஞ்சேன். அப்படியே பேசிக்கிட்டே செஸ் விளையாட ஆரம்பிச்சோம். அப்புறம் தான் நீ வந்துட்டியே..?"
"ம்ம்.." என அவள் தலை அசைக்க, "ஆஃபிஸ் எப்படிப் போச்சு க்ளௌட்?"
"என்னோட மேரேஜ் விஷயம் தான் இன்னைக்கு ஹாட் டாப்பிக். ரிசப்ஷன் மாதிரி வைக்கலாமேனு கேட்டு இருக்காங்க!"
"அட! இந்த ஐடியா எனக்குத் தோணல, பாரேன். நானும் உன்னோட மேரேஜை பார்க்கல இல்ல.? ரிசப்ஷன் மாதிரி எல்லாம் வேணாம். அதுக்கு எல்லாம் ஹால் புக் பண்ணி, ஃபுட் அது இதுனு செலவு அதிகம் ஆகிடும். வீட்டுல கெட் டூகெதர் மாதிரி பண்ணலாம். சாப்பாடு மட்டும் அளவா ஆர்டர் செஞ்சுக்கலாம். இங்க இருக்கிற யாரும் வாழை இலையை விரிச்சு, கலர் கலரா ஐட்டம்ஸ் பரிமாறி வயிறு முட்ட சாப்பிடுற ஆட்கள் இல்ல. எல்லாரும் சும்மா பேருக்குனு டேஸ்ட் பண்ணுற கூட்டம். அதுனால வீட்டுல அரேஞ்ச் பண்ணாலே போதும்!"
"ம்ம்.. நான் கீர்த்திக்கிட்ட பேசிட்டு சொல்லுறேன்."
"ஓகே, நீ சொல்லு. நானே எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸும் செஞ்சிடுறேன்!"
"சரி ஸ்டார், நான் கிளம்புறேன்!" என விடைபெற, சரியாய் தாரிகாவின் கணவன் ஆகாஷ் வீட்டிற்குள் நுழைந்தான்.
தனது இயற்கையான குணத்தால் தோழியின் கணவனைப் பார்ப்பதையும் பேசுவதையும் பெரும்பாலும் தவிர்த்து விடுவாள் மேகவி. அவன் இருக்கும் தருணங்களில் வீட்டிற்குள் வரவும் மாட்டாள். பாவையின் இடம்.. தவிர்க்க இயலாத தருணங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் எல்லாம் அந்த இல்லத்தின் வாயில் தான், முதல் நாள் அவசர கதியில் தேநீர் அருந்திவிட்டு சென்றதைப் போல்.
எதார்த்தமாய் சந்திக்க நேர்ந்தால், ஒரு சில வார்த்தைகளிலும் சம்பிரதாயமான நலம் விசாரிப்புகளிலுமே முடிந்து போகும் அவர்களின் உரையாடல்.
தோழியின் கணவன் என்று மட்டும் இல்லை, எந்த ஆணாக இருந்தாலும் அவளது எதிர்வினை இதுவே!
இன்று அவன் வீட்டில் இல்லாததாலும் அத்தோடு தோழியை சமாதானம் செய்ய வேண்டிய காரணத்தாலும் உள்ளே வந்திருந்தாள்.
ஆகாஷைப் பார்த்ததும் தவிர்த்து செல்ல மனம் இல்லாது, "ஹலோ சார்.." என்று மரியாதை நிமித்தமாய் புன்னகைக்க, "ஹலோ.. உட்காருங்க!" என உபசரித்தான் அவனும்.
இருக்கையில் அமர்ந்தவள், "தாரிகா நடந்ததைச் சொன்னா. இப்ப உங்களோட ஹெல்த் எப்படி இருக்கு சார்?"
"மச் பெட்டர். உங்க மேரேஜைப் பத்தியும் சொன்னா, கங்கிராட்ஸ்."
"தேங்க்யூ.."
"எங்க உங்க ஹஸ்பெண்ட்? ரொம்ப பிஸி போல ரெண்டு பேரும்! சென்னைக்கு வந்து ரெண்டு நாள் ஆச்சு, கண்ணுலயே பட மாட்டிறீங்க?"
"கொஞ்சம் திங்க்ஸ் அரேஞ்ச் பண்ண வேண்டிய வொர்க் இருந்தது. அதான் வெளிய வரல. அவன் வீட்டுல தான் இருக்கான்."
"சரி வாங்க. அப்படியே சாரைப் பார்த்துப் பேசிடுறேன்!" என்றவன் கடினப்பட்டு எழ, "ஹெல்த் இஷ்யூ இருக்கும் போது, வீணா ஸ்ட்ரைன் பண்ணாதீங்க சார். நீங்க உட்காருங்க, நான் என் ஹஸ்பெண்டை வரச் சொல்லுறேன்!" என உரைத்து சத்திக்குக் கைப்பேசியில் இருந்து அழைப்பு விடுத்தாள் மேகவி.
"இது, அவ்வளவு நல்லா இருக்காதே? மேரேஜ் ஆனவங்களை நாங்க தான வந்து பார்த்து விஷ் பண்ணணும்?"
"இங்க யாருக்கும் என்னோட கல்யாண விஷயம் தெரியாது. சோ அதுக்காக சீக்கிரமே ஃபங்ஷன் ஒன்னு வைக்கலாம்னு இருக்கேன். அப்ப என் ஃப்ரெண்டோட சேர்ந்து வந்து விஷ் பண்ணுங்க!" என்றிட, சரி என்பதாய் தலை அசைத்துப் புன்னகைத்தான் அவன்.
இவர்களது பேச்சிற்கு இடையில் தாரிகா கணவனிற்குத் தேநீர் தயாரித்துக் கொண்டு வந்து தர, வாங்கி அருந்தத் துவங்கினான். இரண்டு நொடிகளின் இடைவெளியில் சத்தியும் அங்கு வந்து சேர, ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொண்டனர்.
அவர்களின் இல்லத்திற்கு அவனது முதல் வருகை இது. ஆகையால் தேநீருடன் சில இனிப்பு கார வகைகளையும் பரிமாறினர்.
ஆண்களிற்குப் பேசிடவா காரணம் வேண்டும்? ஒத்த வயதுடையவர்கள் இணைந்து விட்டால், பல கதைகள் வரிசை கட்டும். அப்படித்தான் ஆகிப் போயினர் தோழியர் இருவரின் கணவன் மார்களும்.
ஆகாஷின் உடல் முழுமையாய் குணம் அடையாததால், அவனது சௌகர்யத்தைக் கவனிக்க வேண்டியது தாரிகாவின் பணியானது. இவர்களிற்கு இடையே மேகவி தான், தனித்து விடப்பட்டது போல் ஆனாள். சட்டென்று எழுந்து செல்லவும் இயலாது, வெறும் பார்வையாளினியாய் தவித்தாள்.
ஆகாஷ் அமர்ந்த இடத்தை விட்டு நகரவில்லை. கழட்டி வைத்த கைக்கடிகாரத்தை அதற்கான இடத்தில் வைப்பதில் தொடங்கி, கைப்பேசிக்கு சார்ஜ் போடுவது வரை, அனைத்தையும் செய்தது துணைவி தான்.
தோழியைக் கவனித்த மேகவி.. அவளின் கைப்பற்றி இழுத்துக் கொண்டு சமையல் அறை நோக்கி நகர்ந்தாள்.
"ஏய் க்ளௌட்.. எதுக்கு இப்படி என்னை இழுத்துட்டு வர்ற?"
"கொஞ்ச நேரம், சும்மா தான் உட்காரேன்? எதுக்கு அங்கேயும் இங்கேயும் போய் வந்துக்கிட்டே இருக்க?" என்றிட, "சும்மா உட்காரவா? அப்புறம் இந்த வேலை எல்லாம் யார் செய்யிவா?"
"ஏன், உன்னோட ஹஸ்பெண்ட் பண்ண மாட்டாரா?"
"என்னால வீட்டு வேலை பார்க்க முடியலனு சொன்னேன். ஆள் போட்டுட்டாரு. அப்ப, இந்த சின்ன சின்ன வொர்க்கையாவது நான் செய்யணும்ல? என் புருஷனுக்கு இன்னொருத்தரையா வேலை பார்க்க விட முடியும்.?" என்றுவிட்டு நகர, பின்னோடு நடந்தாள் அவளும்.
"ஸ்டார்.."
"ம்ம்.?"
"நான் என்ன கேட்டேன்? நீ என்ன பதில் சொல்லுற?"
"என்ன கேட்ட? நான் எதை மாத்தி சொன்னேன்?"
"மிஸ்டர் ஆகாஷ், அவரோட வேலையை பார்த்துக்க மாட்டாரா?"
"ம்ம்.. பார்த்துப்பாரு தான், ஃப்ரீயா இருக்கிற டைம்ல. ஆனா அவருக்கு ஃப்ரீ டைம் கிடைக்கிறதே கஷ்டமாகிடுச்சு. உனக்குத்தான் தெரியுமே ஐடி ஜாப் எவ்வளவு ஸ்ட்ரெஸ் ஆனதுனு. அதான் அவரோட தேவை எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன். அதோட எங்க லைஃப்ல எந்த முடிவுனாலும் அதை நான்தான் எடுப்பேன். சம்பாதிக்கிறது மட்டும் தான் அவரு. மத்த எல்லாம் என் கையில தான்."
"ஓ.. எல்லார் வீட்டுலயும் இப்படித்தானா?"
மறுத்துத் தலை அசைத்த தாரிகா, "ஒரு வீட்டோட சந்தோஷமும் அழகும், அதுல இருக்கிற மனுசங்களோட மனசைப் பொறுத்து தான் அமையிது. என்னோட மாமியாருக்குக் கடைசி வரை தன்னோட ஹஸ்பெண்டோட சேலரி எவ்வளவுனே தெரியாது. அந்த அளவுக்குத்தான் பொண்டாட்டியை வச்சிருந்தாரு.
எங்கப்பா அதுக்கும் மேல. அப்ப எல்லாம் நாலு ஆசை சாக்லெட், ஒரு ரூபாய்னு விற்குமே? எங்களுக்கு அதை வாங்கிக் கொடுத்தாக்கூட.. யாரு எத்தனை சாப்பிட்டா? எவ்வளவு செலவு ஆச்சுனு எழுதி வச்சுக் கணக்கு சொல்லணும் அவர்கிட்ட.
அவங்களைக் கம்பேர் பண்ணுறப்ப, இவரு ரொம்ப பெட்டர்னு சொல்லுவேன். எனக்கு இந்த லைஃப் போதும். நான் ஹேப்பியா தான் இருக்கேன்." என்றாள்.
இதுவரை இப்படி வீட்டிற்குள் வந்து பார்த்திராததால், தோழிக்கும் அவளது கணவனிற்கும் இடையேயான உறவானது மேகவியின் கவனத்திற்கு வந்ததே இல்லை. அதைப் பற்றி அவளிற்குச் சிந்திக்கத் தோன்றியதும் இல்லை. தாரிகா என்ன உரைக்கிறாளோ, அதை மட்டுமே அறிந்து இருந்தாள்.
தோழியைப் பற்றி மட்டும் அல்ல, தனது தாய் தந்தையர், மாமனார் மாமியார் என்று திருமணமான தம்பதிகளுக்கு இடையேயான உறவைப் பற்றி எதுவுமே அறியவில்லை.
ஒரு வயது இருக்கும் பொழுதே உயிரை விட்டுவிட்ட தந்தை. விபரம் அறிந்ததில் இருந்தே கைம்பெண்ணாய் இருக்கும் அன்னை. பெயரன் பெயர்த்தி வளர்ந்து வரும் முன்னரே இறைவனடியை அடைந்து விட்ட தந்தையை ஈன்றவர். அனைத்தையும் கணக்கிட்டு தனது கட்டுப்பாட்டிற்கு உள்ளேயே குடும்பத்தை வழிநடத்தி வந்த அப்பத்தா. மூத்தவர்களின் சொல் கேட்டு நடந்து கொள்ளும் தமையன்.. இவர்கள் தான் மேகவிக்குத் தெரிந்த உலகம்.
திருமணம் முடிந்து சென்ற புகுந்த வீட்டிலும், சில தினங்கள் மட்டுமே தங்கி இருந்தாள். இன்னுமே அவர்களது பழக்க வழக்கம் புரிபடவில்லை. அவள் அறிந்தது எல்லாம்.. உடல்நிலை பின் தங்கிய காரணத்தால் சத்தியின் அன்னை புஷ்பவதியே அங்கு முதன்மையாய் பார்க்கப் படுகிறார். அவரைச் சுற்றியே, மற்ற குடும்ப உறுப்பினர்களின் சிந்தனையும் சுழல்கிறது.
மருமகளிற்கு அங்கு எவ்வித பணியும் இல்லை. சென்னைக்கு வந்த பின்னரும் கூட, பாவையின் நிலையில் மாற்றம் என்று எதுவும் இல்லை.
தோழி தாரிகாவும் வீட்டுப் பணிகளைச் செய்வதில்லை தான். எனினும் கணவனிற்கானவை முழுமையும் அவளின் பொறுப்பு. ஆனால் தான்..?
அருந்தும் தேநீர் கோப்பையைக் கூட இதுவரை சுத்தம் செய்தது இல்லை. இந்த இரு தினங்களாய் அதைச் செய்வதும் சத்தியே!
எனில், 'தான் என்னதான் செய்து கொண்டு இருக்கிறோம்?' என வினா எழுந்தது. பாவையானவள் அவளையும் அறியாமல், திருமண வாழ்விற்கான தனது முன்னெடுப்புகளைச் சிந்திக்கத் துவங்கி இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
சிந்தையில் சத்தியின் எண்ணம் எழ, அனிச்சையாய் கண்கள் அவன் பக்கம் திரும்பியது. முந்தைய தினத்தின் இரவில் இருந்து நடந்த நிகழ்வுகள் யாவும், நினைவுகளில் சரம் கோர்த்தார் போல் அடுத்தடுத்து அரங்கேறின.
'வீடுனா இப்படித்தான் இருக்கணும். லைஃபை இப்படி லீட் பண்ணணும்!' என்று ஒவ்வொரு பணியையும் செய்யும் பொழுதும் அவளிற்குப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தான் ஆடவன்.
அப்பொழுதும் 'கற்றுக்கொள், அதனைச் செயல்படுத்து!' என வற்புறுத்தவில்லை.
'தெரிந்து கொள்!' என்ற ரீதியில் மட்டும் சொல்லிக் கொடுக்கிறான்.
'ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம். இவனும் ஒரு புது ரகம் போல! பரவாயில்ல இந்த மேரேஜ் லைஃப் அப்படி ஒன்னும் கஷ்டமா தெரியல. அவன் சொன்னது போல டிரை பண்ணிப் பார்க்கலாம் போலயே?' என்று தோன்றியது.
அடுத்த நொடியே பாவைக்குள் இருந்த எச்சரிக்கை உணர்வானது, 'ஆம்பளைங்களை நம்பக் கூடாதுனு முடிவெடுத்து இருந்தியே? அதுக்குள்ள என்ன ஆச்சு உனக்கு? வெறும் இருபத்தி நாலு மணி நேரத்துல கீர்த்தி உனக்குள்ள இருந்த எண்ணத்தை மாத்தீட்டானா?' என வினா எழுப்பிட, தனக்குள் உண்டாகி இருக்கும் மன மாற்றத்தை அறிந்து அதிர்ந்தாள் மேகவி.