• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மை டியர் ராவணா - 2

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 2


யார் என்ன சொன்ன போதும் கேட்காமல் அடங்காமல் திரிந்து கொண்டிருந்தவன்.. சீதாவின் பட்டு மேனி அவனை தீண்டியதும் அப்படியே பூனை குட்டி போல அவளிடம் அடங்கி போனான் அந்த ஆறடி ஆண்மகன்..!!


பளிங்கு சிலை போல் நின்று கொண்டிருந்தவளை வைத்து கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..


ஆஹா.. என்ன ஒரு பேரழகு?? வெண்ணையில் கடைந்தெடுத்து செய்த சிலை போலிருக்கிறது இவளின் மேனி என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் அவன்.. நினைத்தது மட்டுமில்லாமல் அவனுடைய கண்கள் அவள் மேனி முழுவதும் பிரயாணம் செய்தது..


" நல்லவேளை தாயே வந்து காப்பாத்துனீங்க.. இந்தாளுக்கு மரம் கழண்டுருச்சு போலருக்கு என்னுடைய தொப்பியை கழட்டிட்டு போக பாக்கிறான்.. இது இல்லன்னா எனக்கு வேலையே போயிடும்... காலங்காத்தால எங்கிருந்து கிளம்பி வராங்கன்னு தெரியல.. தயவு செஞ்சு இவனை இங்கிருந்து கூட்டிட்டு போயிடுமா.. இவனைப் பார்த்துட்டு நின்னுட்டிருந்தா அப்புறம் என் பொழப்பு கெட்டுடும்.. ஏதாவது நல்ல பைத்தியக்கார ஆஸ்பத்திரியா பார்த்து சேர்த்து விடு..", என்று கூறி அவன் கையிலிருந்த தொப்பியை பிடுங்கிக் கொண்டார் அவர்.


உடனே திமிறிக்கொண்டு அவரை அடிக்கப் போனான் அவன்.


" இப்படி எல்லாம் பொது இடத்தில் வைத்து அநாகரிகமா நடந்துக்க கூடாது.. யார் நீங்க ?? என்ன பிரச்சனை உங்களுக்கு?? ", அவனுடைய பிரச்சினையை தெரிந்து கொண்ட பிறகு சற்று அமைதியாக பேச தொடங்கினாள் சீதா.


காதில் தேன் பாய்ந்தது போலிருக்கிறதே இவளுடைய குரல்.. என்று மனதிற்குள் வியந்தவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பதில் கூறாமல்..


" ஹலோ உங்களத்தான்.. பதில் சொல்லுங்க உங்க பேர் என்ன??", என்று கேட்டாள் விடாப்படியாக அவனுடைய கையை இன்னமும் விடாமல்.


"ஆ.. என்ன.. என்.. என்ன கேட்டீர்கள்??"


" உங்க பேரு என்னனு கேட்டேன்"


" என்னுடைய பெயர் என்னவென்று கேட்கிறாயா??"


ஆம் என்பது போல் தலையாட்டினாள்.


" என் பெயர் இந்திர ராவணன்.. மங்களாபுரத்து மன்னன் நான்.. நேற்றிரவு கண் மூடும் வேளையில் நான் மங்களாபுரத்தில் தான் இருந்தேன்.. ஆனால் காலையில் கண் விழிக்கும்போது இந்த விசித்திர லோகத்தில் இருக்கிறேன் அதுதான் எனக்கு ஒன்றும் புரியவில்லை.. இன்னமும் இது கனவா நிஜமா என்று எனக்கு தெரியவில்லை", என்று பிதற்றினான்.


சரியான அரை கிறுக்கனா இருப்பான் போலருக்கு பேரை கேட்டால் இந்திர ராவணன்னு சொல்றான்.. இவன் பைத்தியம்னு உறுதியாகிவிட்டது இல்லன்னா அந்த டிராஃபிக் போலீஸ் கிட்ட போய் இப்படி வம்புக்கு போவானா?? என்று மனதிற்குள் நினைத்தபடி அவனை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தாள்..


பாகுபலி படத்தின் கதாநாயகன் போல கம்பீரமான லுக்கில் தான் ஐயா இருக்கிறான் ஆனால் மரம் தான் கொஞ்சம் கழண்டு விட்டது போல என நினைத்தவள் அவன் கையை பற்றி இழுத்துக் கொண்டு சென்றாள்.


" என்ன இது பெண்ணே?? ஒரு ஆண்மகனை அதுவும் ஒரு மன்னனை இப்படித்தான் இழுத்துச் சொல்வதா ?? உனக்கு எத்தனை தைரியம் இருக்க வேண்டும்??"


" தைரியம் தானே?? அதெல்லாம் இரண்டு கிலோ அதிகமாவே இருக்கு கொஞ்சம் என் கூட வரீங்களா??", என்றவள் அவனை நேராக அவள் வந்த ஸ்கூட்டியின் அருகே இழுத்துச் சென்றாள்..


ஹெல்மட்டை எடுத்து மாட்டி கொண்டு உடனே வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு அவனை அமர சொன்னாள்..


" வண்டியில ஏறுங்க"


" வண்டியா?? இது குதிரை வண்டி போல இல்லையே.. ஏதோ விசித்திர தேர் போலிருக்கிறது.. இதை எங்கிருந்து திருடி கொண்டு வந்தாய்??"


" எது திருடிட்டு வந்தேனா?? கொய்யால.. சொந்த காசுல முதல் சம்பளத்தில் வாங்கின வண்டி இது இதை பார்த்து திருடிட்டு வந்தியான்னு கேக்குறியே?? ஒழுங்கா இப்போ என் வண்டியில் ஏறுறியா இல்லையா ??"


" என்ன இருந்தாலும் ஒரு மன்னனை இப்படி அவமதித்து பேசக்கூடாது.. போங்கள் வாங்கள் என்று தான் அழைக்க வேண்டும் மரியாதையாக"


" அது சரி மரியாதை மகுடம் மாலை எல்லாம் அப்புறம் பண்ணிக்கலாம்.. முதலில் வண்டில ஏறு சாமி", என்று அவள் கூறவும் அடுத்த நிமிடம் வண்டியில் ஏறி அமர போனான்.


அவள் தோள் மீது கை வைத்து வண்டியில் அவனுடைய ஒற்றை காலை பலம் கொண்ட மட்டும் ஊன்றி பயத்துடன் ஏறித்தான் அந்த வண்டியில் அமர போனான்..


அவனுடைய மொத்த எடையையும் அவனுடைய உள்ளங்கையில் தேக்கி அவளின் தோளை அழுத்தவும் பதறிப் போய்விட்டாள் சீதா..


" யோவ் யோவ்.. என்னய்யா பண்ணிட்டிருக்க?? வண்டியில ஏறி உட்கார சொன்னா மொத்தமா வண்டியை சாய்ச்சி விட்டுடுவ போல"


" அது இல்லை பெண்ணே.. இந்த விசித்திர தேரில் எப்படி ஏறி அமர்வது என்று எனக்கு தெரியவில்லையே.."


அவன் இப்படி கூறவும் அதை பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் அவனுக்கு வண்டியில் எப்படி ஏறி அமர வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடத்திற்கு பாடம் எடுத்தாள்..


அதன் பிறகு அடித்து பிடித்து எப்படியோ ஒருவாறு இரு பக்கமும் கால்களை போட்டு அமர்ந்து கொண்டவன்..


" ஆமாம் இந்த விசித்திர விலங்கிற்கு கால்கள் எதுவும் இல்லையா?? அப்படியே போகிறது வேகமாக.. இது போன்ற தேர்கள் அங்கே எங்கள் மங்களாபுரத்தில் இல்லை.."


கடவுளே.. என்னென்னவோ புலம்பிக்கிட்டே வரானே இவன்கிட்ட இருந்து தப்பிச்சா அதுவே போதும் முதல்ல கொண்டு போய் இவனை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் விட்டுட்டு தான் மறு வேலை பார்க்கணும்.. என்று மனதிற்குள் உறுதி செய்து கொண்டாள் அவள்.


போகும் வழியெங்கும் அவன் எல்லாவற்றையும் பார்த்து பிரமித்த வண்ணம் எதை எதையோ பேசி கொண்டு வந்தான் அவளிடம்.


ஸ்பீட் பிரேக்கரில் அவ்வப்பொழுது வண்டி ஏறி இறங்கும் பொழுதெல்லாம் அவனுடைய கைகள் தன்னிச்சையாக அவளுடைய இடையை பற்றி கொண்டது..


உடம்பை ஒட்டிய வண்ணம் ஜீன்ஸ் பேண்ட்டும் மெல்லிய டி-ஷர்ட்டும் அணிந்திருந்தாள் அவள்..


இதற்கிடையில் மின் வெட்டுவது போல லேசாக பளிச்சிட்டது அவளின் இடையும் அதன் வண்ணமும்..


என்னதான் அவளின் கண்களை நேருக்கு நேராக பார்த்து பேசினாலும் அவ்வப்போது அவனுடைய கண்கள் அவளின் வெண்ணிற இடையை ஆராய்ச்சி செய்து கொண்டே தான் இருந்தது அவனையும் அறியாமல்..!!


இப்பொழுது ஸ்பீட் பிரேக்கர் போடவும் பயத்தில் அவளுடைய இடையை இறுக பற்றி கொண்டான் ..💕💕


அவனுடைய வலிய கரங்கள் அழுத்தமாக அவள் இடையில் பதியவும் சிலிர்த்துப் போனாள் பெண்ணவள்..!!


இதற்கு முன் ஆண்களுடன் பழகியதே கிடையாது இதுதான் முதல் முறை என்றெல்லாம் கிடையாது தான்..


அவளுக்கு ஆண் நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள் தான்.. ஆனால் எல்லோரிடமும் அளவாக தான் பழகுவாள்.. நட்பு என்கிற எல்லைக்குள் தான் அனைவரையும் நிப்பாட்டி வைத்திருந்தாள்..


ஆனால் இவனுடைய தொடுகை அவளை என்னமோ செய்தது.. அடிவயிற்றிலிருந்து லேசான அதிர்வு ஏதோ ஒன்று புறப்பட்டு இதயத்தை தாக்கியது..💘💘


சங்கடமாக இருக்க போய் நெளிந்த வண்ணம் அவன் கையை விலக்கி விட்டாலும் மீண்டும் பயத்தில் முன்பை விட இறுக்கமாக அவளை பற்றி கொண்டான் அந்த ராவணன்..!!


கண்களை இறுக மூடிக்கொண்டு அந்த இன்ப அவஸ்தையை அனுபவித்த வண்ணம் வேகமாக வண்டியை ஓட்டி சென்றாள்..


பத்து நிமிட பயணத்திற்கு பிறகு அந்த மனநல மருத்துவமனைக்கு முன்பாக அவளின் வண்டி வந்து நின்றது..


" இடம் வந்தாச்சு இறங்கு.."


" இது என்ன இடம்??"


" சொல்றேன் முதல்ல இறங்கு.."


அவள் சொன்னதும் அடுத்த நிமிடம் மறுப்பு எதுவும் சொல்லாமல் வண்டியிலிருந்து இறங்கினான் இந்திர ராவணன்..


" உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் பெண்ணே", என்றான் அவளின் கண்களை ஊடுருவிக்கொண்டே..


என்ன என்பது போல ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவனை பார்த்தாள்..


இம்முறை அவளை தலை முதல் கால் வரை பார்வையால் அளந்தவன்..


" இந்த நாட்டை ஆளும் மன்னன் யாரோ?? பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது போலிருக்கிறதே இதோ உன்னுடைய உடைகள் எல்லாம் எப்படி கிழிந்து கிடக்கிறது?? அல்லது எதுவும் கொடிய மிருகம் உன்னை தாக்கி குதறி எடுத்து விட்டதா..??", என்று குழப்பமாக அவன் கேட்கவும் இவளும் குழப்பத்துடன் தன் ஜீன்சை பார்த்தாள்..


ஆங்காங்கே கிழிந்திருந்தது அது..


" சரியான மட சாம்பிராணியா இருக்க.. இது ஒன்னும் கிழிஞ்சு போகல இதுதான் ஸ்டைல்.."


" என்ன சொல்கிறாய் எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே.."


" உனக்கு ஒன்னும் விளங்க வேண்டாம் வா உள்ளே போலாம்", என்று கூறி அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்.


" சீஃப் டாக்டரை பார்க்கணும்"


" ஒரு நிமிஷம் மேடம்..", என்று கூறிய ரிசப்ஷனிஸ்ட் உடனே கால் செய்து பேசிவிட்டு பிறகு இவளை நிமிர்ந்து பார்த்தாள்.


" மேடம் ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க டாக்டரை பார்த்துடலாம்..", என்று அவள் கூறவும்..


பிறகு இருவரும் அங்கிருந்த ரிசப்ஷனில் அமர்ந்து கொண்டனர்..


" ஆம் பெண்ணே என்னை எங்கே அழைத்து வந்திருக்கிறாய்??"


பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்திருக்கேன்னு சொன்னா மட்டும் உனக்கு புரியவா போகுது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்..


" இதுவும் ஒரு வகையில் ராஜசபை தான் சற்று நேரம் அமைதியாக இருங்கள்", என்று அவன் பாணியிலேயே பேசி அவனை அமைதியாக்கினாள்..


" அப்படியா ஆனால் மந்திரிகள் எங்கே?? இவர்கள் எல்லோரும் பட்டத்து இளவரசிகளா??", என்று அங்கே நின்றுகொண்டிருந்த பெண்களை பார்த்து கேட்டான்.


"ஆமா ", என்றவள் சுவர் கடிகாரத்தை பார்த்தாள்..


அதற்குள் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த நர்சை நோக்கி வேகமாக ஓடிய ராவணன்..


" ஏய் பணிப்பெண்ணே.. என்ன ஆடை அணிந்திருக்கிறாய்?? அரசவையில் எனக்கு சாமரம் வீசுவது தானே உன்னுடைய தலையாய கடமை இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்??", என்று கூறி அந்த பெண்ணிடம் வம்பிழுக்க தொடங்கினான் அவன்.


அடக்கடவுளே..!!


மணி என்னாச்சுன்னு பார்த்துட்டு திரும்பி பாக்குறதுக்குள்ள மறுபடியும் வம்புக்கு போகிறானே என மனதிற்குள் அவனை கடிந்து கொண்டவள் வேகமாக அவனிருக்கும் இடத்தை நோக்கி ஓடினாள்..


" பனிப்பெண்ணே என்னுடைய கேள்விக்கு பதில் சொல்.. கையில் என்ன குடுவை இது?? அதிலென்ன தண்ணீரா??", என்று கேட்டு கையிலிருந்த குளுக்கோஸ் பாட்டிலை பிடுங்க போனான் அவன்..


" ஐயோ டாக்டர் யாராவது இங்க வாங்க ", என்று பயத்தில் அலற தொடங்கி விட்டாள் அந்த நர்ஸ்..!!


அந்த நேரம் பார்த்து..


"மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு...

இவர காப்பாதனும் காப்பாதனும் கத்தரு", என்ற பாடல் டிவியில் ஒலித்து கொண்டிருந்தது சூழ்நிலைக்கேற்ப..!!


- தொடரும்..
 
Last edited:
Top Bottom